Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Irulil Thedum Oliyaai Nee

Irulil Thedum Oliyaai Nee 33

ஒளி 33 ::-

 

யாரும் கேட்கா எது ஒன்றை !

நான் கேட்டேன் உன்னை!     



Advertisement

அதை தந்தால் நன்றி பிடிவாதம் இன்றி!   

நீ தந்தால் நன்றி துளி துளிரே!     

துளி காலம் கேட்டேன்! துளி காதல் கேட்டேன்!     

Advertisement

துளி காமம் கேட்டேன்! மறு உயிரே!    

Advertisement

மறுக்காதே நீ மறக்காதே நீ !

எந்தன் அழகியே!

 

Advertisement

எங்கோ ஒலிக்கும் போன் சத்தத்தில் ரதிக்கு தூக்கம் கலைந்து, போனை எடுக்க தூக்கத்திலே துழாவியவளின் கைகளில் சிக்கிய திண்ணிய தோளை உணர்ந்தாள். 

 

அதிர்ந்து எழ முயன்று முடியாமல் எதிலோ சிக்குண்டிருப்பதை அப்போதே அறிந்து, நிமிர்ந்து பார்த்தவளின் இதயம் தொண்டை வழியே வெளியே வரும் அளவிற்கு வேகமாக துடித்தது.  

 

“இது எப்போ நடந்துச்சு ? தூக்கத்திலே நம்மளே வந்து படுத்து இருப்போமா? அப்ப கூட எப்படி அவங்க மேல ஏறி படுத்திருப்போம்… அதுவும் இல்லாமல் இவர் வேற இவ்ளோ இறுக்கமாக பிடிச்சிருக்காரு? அப்ப நான் மேல படுத்திருக்கறது தெரிஞ்சு தான் பிடிச்சிருக்காரா?” என்று யோசனையில் இருந்தவளுக்கு “ஓய்” என்ற அழைப்பு கேட்டு அவனைப் பார்க்க, மூடியிருந்த அவன் விழிகளைக் கண்டு குழப்பமானாள்.

 

“இப்ப இவங்க என்னை கூப்பிட்டாங்களா இல்லையா?” என்று அடுத்த யோசனைக்கு தாவியவளை மறுபடியும் “ஓய்!” என்ற அழைப்பு கலைக்க இந்த முறை அவளை சிறையெடுத்த விழிகள் அவளையே புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தது.

 

அவன் உறங்கும் போது குதித்த இதயம் இப்போது அவன் விழிகளில் கட்டுண்டு இருந்தது. “ஓய் ! ஷாக்கை குறை! ஷாக்கை குறை! நீ நைட் கேட்டதை தான் செஞ்சு இருக்கேன்.. அப்புறம் என்ன? ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட… நைட் தூங்க நேரமாச்சுல்ல… இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு…” என்றபடி அவனோடு அவளை இன்னும் இறுக்கியவனைக் கண்டு அதிர்ந்தவள், 

 

“இல்லை! இல்லை! எனக்கு சீக்கிரம் எழுந்து பழக்கம் அதான் தூக்கம் கலைஞ்சு போச்சு… நீங்க வேணும்னா தூங்குங்களேன்…. நான் போய் குளிக்கிறேன்…” என்று அவனிடம் இருந்து விலக முயன்றவளின் பதட்டத்தை அறிந்தவன் சிறு சிரிப்போடு “சரி! நீ போ… நான் கொஞ்சம் நேரம் தூங்கணும்…” என்றபடி அவளை விடுதலை செய்தவனின் நினைவுகள் தன்னாலேயே பின்னோக்கி செல்ல மகிழ்ச்சியில் மலர்ந்த தன் முகத்தை அருகே இருந்த அவளின் தலையணையில் புதைத்தான்.    

இரவு தான் பேசியதற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் எழுந்து நின்றவளைப் பார்த்து வருந்தியவன் அப்படியே இருந்த இடத்திலே கண் மூடி படுத்துக் கொண்டவனின் தலையை திடீரென யாரோ தூக்குவது போலிருந்தது.

கண் விழித்து பார்க்க, ரதி தான் கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்து அவளின் மடியில் தன்னை படுக்க வைப்பதை உணர்ந்தவன் இன்பமாய் அதிர்ந்தாலும் அவளின் கால்களைப் பிடித்துக் கொண்டு வாகாக அவள் மடியில் படுத்துக் கொண்டான்.

 

எப்போதும் போல அவனின் உணர்வுகளை அவன் விழியில் படித்தவள், “நீங்க சொல்றதைக் கேட்க கேட்க எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல… என்னதான் நான் வெளியே தைரியமான பொண்ணா இருந்தாலும் அந்த தைரியத்துக்கு பின்னாடி இருந்தது எங்க அப்பா தான்… என்னை கைக்குள்ள பொத்தி வைச்சு வளர்க்கலைன்னாலும் தைரியத்தை கத்துக் கொடுத்து தான் வளர்த்தாங்க…”

 

[the_ad id=”6605″]

 

 

 

“எனக்கும் அப்பா கூட இருக்காருன்ற தைரியத்தை விட அவரை சார்ந்தே இருந்து பழகிட்டேன்… எங்க அப்பாவுக்கு அப்புறம் எனக்கு அந்த தைரியம் கொடுத்தது நீங்க தான்…ஆனால் எங்க அப்பா இல்லாத அப்பதான் என்னோட தைரியம் எந்த அளவிற்கு இருக்குன்னு தெரிஞ்சுது…அப்ப என்னால தனியா போராட முடியாம நான் தேடின சப்போர்ட் தான் நீங்க…

 

“நீங்க என்னை புரிஞ்சு வைச்சிகிட்டு இருக்க அளவுக்கு கூட உங்களை நான் தெரிஞ்சுக்கலை… உங்க பெயரைக் கூட பிரெண்ட்ஸ் கேட்கலைன்னா தெரிஞ்சுக்க பெருசா எந்த முயற்சியும் எடுத்திருக்கமாட்டேன்…இவ்வளவு ஏன் உங்களைப் பத்தியும் உங்க குடும்பத்தைப் பத்தியும் கூட இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன்…”

“என்னோட இந்த நாலு வருஷ வாழ்க்கையில உங்களை நான் தேடினது இந்த அளவுக்கு தான்….ஆனால் நீங்க உங்க வாழ்க்கையாவே என்னை நினைச்சிருக்கீங்க… உங்க எதிர்பார்ப்பை எல்லாம் எந்த அளவுக்கு நான் நிறைவேத்துவன்னு தெரியல ஆனால் ஒரு நாள் உங்க எல்லா ஏக்கத்தையும் நான் துடைச்சிருப்பேன்னு மட்டும் என்னால சொல்ல முடியும்…

“நீங்க எதுவானாலும் என்கிட்ட அப்ப அப்ப பேசிடுங்க… ஏன்னா நீங்க சொல்லாம புரிஞ்சுக்கற அளவுக்கு நான் இன்னும் உங்களைப் புரிஞ்சுக்கலை…” என்று கலங்கியவாறு பேசியவளின் பேச்சில் இத்தனை நேரம் குறுக்கிடாமல் இருந்தவன் நிமிர்ந்து அவளை அழைத்தான்.      

 

“ஓய்! நமக்கு இது பர்ஸ்ட் நைட்… நீ என்னடான்னா ஏதோ ஆபீஸ் மீட்டிங்ல பேசற மாதிரி உங்க குறைகளை நான் தீர்த்து வைக்கிறேன்னு சொல்லிக்கிட்டு இருக்க… நீ எதிர்பார்ப்பை நிறைவேத்தணும்னு நான் சொல்லல எனக்கு அதெல்லாம் வேணாம்… நீ என்கூட என் பக்கத்துல எனக்காக இருக்கிறதே போதும்… அப்புறம் பாரு நம்மோட அறுபதாம் கல்யாணத்துல நான் உங்களைப் புரிஞ்சிகிட்டா மாதிரி நீங்க என்னை புரிஞ்சுக்கலைன்னு என்கிட்ட சண்டை போடுவ…”  என்று அவளின் மனதை மாற்ற வம்பிழுத்தாலும் அவளின் முகம் இன்னும் தெளியாததை அறிந்து,

 

“என்ன? நீ இவ்வளவு பீல் பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா நான் சொல்லியிருக்க மாட்டேன்…” என்று வருந்தியவனின் பேச்சில் இடையிட்டாள். 

 

“அப்படியெல்லாம் இல்லை…எனக்கு …. எனக்கு…” என்று இழுத்தவளின் பேச்சில் கலக்கம் நீங்கி தயக்கம் இருப்பதை அறிந்தவன் “ம்ம்ம் … உனக்கு…. என்ன ?” என்று கேட்டான்.  

 

தன் தயக்கத்தை துறந்து, “நீங்க உங்களை பத்தி சொல்ல சொல்ல எனக்கு அப்படியே உங்களை வாரி சுருட்டி எடுத்து என் கைக்குள்ள பொத்தி வைச்சுக்கணும் போல இருந்துச்சு… ஆனால் எப்படின்னு தெரியல… நீங்களே சொல்லுங்க…” என்றவளின் பதிலில் இன்பமாக அதிர்ந்தவன் உடனே சுதாரித்தான்.  

“ஹே! அதெல்லாம் எப்படி முடியும். நான் என்ன அவ்வளவு குட்டியவா   இருக்கேன்… இதே போதும்… ஏற்கனவே நேரமாச்சு தூங்கலாம் வா…” என்று அவன் அழைத்தாலும் அமர்ந்திருந்தவளின் பிடிவாதம் உணர்ந்து, 

 

அவள் மடியில் இருந்து நகர்ந்து அவளையும் படுக்க சொல்லி அவளருகே படுத்தவனை பலம் கொண்டு இழுத்து தன் மேல் படுக்குமாறு செய்தவளை,

 

“ஓய் ! என்ன பண்ற? உன்னால என் வெயிட் தாங்க முடியாது. உனக்கு மூச்சு முட்டும்… விடு …” என்று அவன் அதட்டியதும் பரிதாபமாக அவனைப் பார்த்தவளை தன்னோடு சேர்த்து இறுக்க அணைத்தவனை தன்னிரு கைகளால் எவ்வளவு பிணைக்க முடியுமோ அவ்வளவு இறுக்கமாக பிணைத்து, 

 

“நான் இருக்கும் போது நீங்க ஏன் பீல் பண்றீங்க, இனி எதுவானாலும் என்னைத் தாண்டி தான் உங்க கிட்ட வரும்… வரணும்…” என்றவளிடம் விரும்பியே சிறையானவன், அவள் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அவளின் காதோரம் இதழ்கள் உரச, 

 

“இதுவே சொல்லுது நீ எனக்காக என்ன வேணும்னாலும் செய்வன்னு… அதனால நீ எதைப்பத்தியும் கவலைப்படாத எனக்கு என்ன வேணும்னு நான் சொல்லாமலே ஒருநாள் நீ செய்வ… இப்ப அமைதியா தூங்கு..” என்று அவளுக்கு ஆறுதலித்து தன் அணைப்பை சற்று தளர்த்தியவவனுக்கு அப்போது தெரியவில்லை அவள் அவனுக்காக செய்ய போகும் செயலின் வீரியம் !

 

அவன் அணைப்பு தந்த கதகதப்பில் உறங்கியவளைப் பார்த்தவாறு, இத்தனை நேரம் அவள் பேச்சையும் செயலையும் அசைப்போட்டவன், “என்னைத் தூக்கற அளவுக்கு மேடம் அவ்வளவு ஸ்ட்ராங் ஆகிட்டாங்க போல, என்னை உன்கைக்குள்ள பொத்தி வைக்கற அளவுக்கு நீ இன்னும் வளரல அதனால நான் உன்னை என்கைக்குள்ள பொத்தி வைச்சுக்கிறேன்…” என்றபடியே அவளின் தூக்கம் கலையாதவாறு தன் மேல் போட்டுக் கொண்டு அப்படியே உறங்கிப் போனவன் போன் அடிக்கும் போதே எழுந்தாலும் அவளின் அருகாமையை இழக்க விரும்பாமல் அப்படியே படுத்திருந்தான்.

 

பத்து நாட்கள் விடுமுறை எப்படி சென்றது என்று யோசிக்க கூட கால அவகாசம் இல்லாமல் நொடியாக பறந்தது. அவனின் தேவைகள் எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன என்பதை அவளுக்கு உணர்த்தியதை விட அவன் வாழ்க்கைக்கு அவள் எந்த அளவிற்கு தேவை என்பதை அவனின் ஒவ்வொரு சிறு சிறு அசைவிலும் அவளுக்கு உணர்த்தினான்.

 

சென்னை கிளம்ப தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளின் வந்தவனிடம், ”உங்க துணி எல்லாம் எதுல வைக்க? உங்களுக்கு குடுத்த குவார்ட்டர்ஸ்ல தங்கிக்கலாமா இல்லை என்னோடதுலையா? இங்க இருந்தே நேரா பஸ்ல போயிக்கலாமா?” என்று வரிசையாக கேட்டவளுக்கு பதிலளிக்காமல் அவளின் கையை பற்றி கட்டிலில் தன்னருகே அமர்த்தி,

 

“நான் சென்னைக்கு வர முடியாது…” என்றவனின் பதிலில் அதிர்ந்து பார்த்தவளிடம்,

 

“நான் இங்க சென்னையில சேர்றதுக்கு முன்னாடி அப்பாவுக்காக வேலூர் தான் வேணும்னு கவுன்சிலிங்க்ல கேட்டேன், அப்ப வேலூர்ல வேகண்ட் இல்லைன்னு தான் தற்காலிகமா சென்னைக்கு வந்தேன். ஏன்னா இங்கிருந்து ஒரு அரை மணி நேரம் தான் வேலூர்..”

“இப்ப வேகண்ட் ஆகிடுச்சுன்னு என்னை வந்து இரண்டு நாளுல சேர சொல்லியிருக்காங்க… எனக்கு இது நம்ப கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்… அப்பவே சொல்லி உன்னை கவலைப்பட வைக்க வேணாம்னு தான் சொல்லல… இப்படி நடக்கும்னு நானும் எதிர்பார்க்கலை, இப்ப தான் பதவி உயர்வுல வந்ததால அடுத்த இரண்டு வருஷத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது.” என்றவனுக்கு அமைதியையே பதிலாக தந்தாள்.

 

அவளின் அந்த அமைதி அவனை ஏனோ கலங்க செய்ய, “சாரி ! குந்தவை !” என்றவனிடம்,  

 

“இதுக்கு எதுக்கு சாரி ! திடீர்னு சொல்லவும் ஒரு மாதிரி ஆகிடுச்சு… விடுங்க பார்த்துக்கலாம்… நம்ப எதிர்பார்க்காம தானே நடக்குது… நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க… நீங்க இங்க ஜாயின் பண்ணிடுங்க… நான் உங்ககூட இன்னும் ஒரு இரண்டு நாள் இருந்துட்டு சென்னை போறேன்..” என்றாள்.  

 

 

[the_ad id=”6605″]

 

 

 

“ம்ம்ம்ம் ! சனி ஞாயிறுல ஒரு வாரம் நான் அங்க வரேன் இன்னொரு வாரம் நீ இங்க வா…” என்றபடியே அமர்ந்திருந்தவளின் மடியில் படுத்துக் கொண்டு அவளின் கையை எடுத்து தன் தலை மீது வைக்க தன்னாலேயே அவனின் கேசத்தை கோதி விட்டாள்.  

 

அதன் பின் இருவரும் ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்து மூன்று மாதத்திற்கு மேல் ஆனது. அவன் இல்லாமல் தனிமையில் தான் தவிப்பதை விட, தான் இல்லாமல் அவன் தவிப்பான் என்பது மட்டும் ரதிக்கு எப்போதும் ஓடிக் கொண்டே இருந்தது. 

 

இடையில் ரதி சென்றதை விட பார்த்திபன் அவளை சென்று பார்த்ததே அதிகம். ரதிக்கோ இந்த இரண்டு வாரம் அவனை பார்க்க முடியாத தவிப்பில், 

 

“நான் பாட்டுக்குன்னு சிவனேனு இருந்தேன், என்கிட்ட வந்து உன்னை விட்டுக் கொடுக்க முடியாது, நாலு வருஷத்துல உன்ன பார்க்காம தவிச்சு போயிட்டேன் அப்படி இப்படின்னு சொல்லிட்டு இப்ப நாலு மாசமா நான் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல…

 

“நான் உங்க கூட இருக்கறதை நீங்க பழகினீங்களோ இல்லையோ என்னை உங்களுக்கு நல்லா பழக்கப்படுத்தி வைச்சிருக்கீங்க… நான் தான் வேலை இருந்ததால இந்த வாரம் வர முடியல நீங்க வர வேண்டியது தானே.. அதை விட அப்படி என்ன வேலை உங்களுக்கு…” என்று அவன் பேச வாய்ப்பே தராமல் பொருமி தீர்த்தவள் அப்போதே அந்த பக்கம் இருந்த அமைதியை உணர்ந்து, “ஹலோ ! லைன்ல இருக்கீங்களா இல்லையா?” என்று கேட்க அந்த பக்கம் இருந்து வந்த “ஓய்!” என்ற ஒற்றை அழைப்பில் தன்னாலேயே அமைதியானாள்.  

 

“ஓய்!”

 

“சொல்லுங்க எல்லாம் கேட்குது…” என்று முறுக்கிக் கொண்டு சொன்னவளை, 

 

“எனக்கு உன் வாய்ஸ் கேட்காம கோபத்துல நீ புசுபுசுன்னு மூச்சு விடற சத்தம் தான் கேட்குது…” என்று அவளை வேண்டுமென்றே வம்பிழுக்க இப்போது உண்மையாகவே அவனுக்கு அந்த சத்தம் கேட்க சிரித்து விட்டான்.

“நான் தான் இரண்டு வாரமா உங்களைப் பார்க்கலையே, நீங்க எப்படி இருக்கீங்களோன்னு இங்க கவலைப்பட்டுகிட்டு இருக்கேன்…  உங்களுக்கு அந்த கவலை எல்லாம் இல்லை போல…” என்றவளின் பேச்சில் இடையிட்டவன், 

 

“ஓய் ! என்னடி?” 

 

“என்ன என்னடி? போங்க நான் உங்க மேல கோவமா இருக்கேன்…  உங்ககிட்ட பேச மாட்டேன்… நான் போன் வைக்கிறேன்…”  என்று வைத்து விட்டவளின் போனில் அடுத்த நிமிடமே மெசேஜ் வந்தது. பேசும் போது இருந்த கோபம் ஆதங்கம் எல்லாம் காற்றில் பறக்க வேகமா அதை திறந்து பார்த்தாள். 

 

“நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்றேன்னு இதைக் கேட்டு தெரிஞ்சுக்கோ…” என்று எப்போதும் போல அவன் பேச நினைத்ததை பாடலாக அவளுக்கு தூது அனுப்பியிருந்தான்.

 

அன்னமே அன்னமே நான் சொல்லி!
வந்ததா தென்றலும் நேற்று!
உன்னையே உன்னையே நான் எண்ணி!
வெந்ததைச் சொன்னதா பூங்காற்று!
உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்!
உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன்!
மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு!
உன்னில் என்னைக் கரைப்பேன்!

 

“லூசு ! லூசு ! இவர் பெரிய அப்பாடக்கர் அப்படியே பாட்டுலே தூது விடறதுக்கு… இரண்டு நாளைக்கு பேசக் கூடாது…” என்று தனக்குள்ளேயே பேசியவளின் முடிவெல்லாம் மறுநாள் காலையிலேயே காணாமல் போனது.

 

இரவு அவனைப் பற்றிய யோசனையிலேயே நள்ளிரவுக்கு மேலே உறங்கியவள் அவள் வீட்டின் அழைப்பு மணி சத்தத்தில் தான் விழித்தாள்.

 

தூக்க கலக்கத்திலேயே சென்று கதவை திறந்தவள் தன் எதிரில் புன்னகையோடு நின்றிருந்தவனைப் பார்த்ததும் தூக்கம் எங்கோ தூர போனது. அவளின் அதிர்ச்சியை கண்டு சிறு சிரிப்போடு அவளை அழைத்தான். 

 

“என்ன ? உள்ள வரவா இல்ல இப்படியே திரும்ப போகவா?” என்று கேலியோடு கேட்டவனை முறைத்து விட்டு உள்ளே செல்ல திரும்பியவளை நொடியில் தன் கையில் ஏந்தியிருந்தான்.

 

“ஓய் !என்ன? நேத்து ஏதோ என்னை பார்க்கலைன்னு நீ புலம்பின புலம்பலுக்கு இன்னைக்கு பார்த்ததும் ஓடி வந்து என்னை கட்டிப்பிடிப்பன்னு பார்த்தா இப்படி முறைக்குற… என்னைப் பார்க்கலைன்ற ஏக்கத்துல வெயிட் வேற குறைஞ்சு போயிருக்க போல…” என்று அவளை சீண்டியவாறு உள்ளே தூக்கி சென்று அங்கிருந்த படுக்கையில் அப்படியே அவளை தன் மேலே போட்டுக் கொண்டு படுத்தவனை பார்த்து முறைத்தவள்,

 

“எதுக்கு போன வாரம் வரல? என்னை பார்க்காம பத்து நாள் இருந்துட்டு இப்ப மட்டும் என்ன அக்கறை? போங்க போய் தனியாகவே இருந்துக்கோங்க…” என்று அவனை அடிக்க ஆரம்பித்தவளின் கைகளை தன் ஒற்றை கைக்குள் அடக்கியவன், தன் முகத்தில் படும் அவள் மூச்சுக் காற்றை சேர்ந்து சுவாசிப்பது போல அவளை இன்னும் தன்னோடு சேர்த்து இறுக்கியவனின் “ஓய்!” என்ற அழைப்பில் தன்னாலேயே அவனைப் பார்க்க அவனின் ஆளை உருக்கும் பார்வையில் தடுமாறினாள்.

 

அவன் அசந்த நேரமாக அவனிலிருந்து விலகியவளை அதே வேகத்துடன் இழுத்து தன் மேலே மறுபடியும் போட்டவன் அவளோடு சேர்த்து அவள் இதழ்களையும் சிறை செய்திருந்தான்.

 

அவன் முத்தத்தில் அதிர்ந்து விழித்து தன்னை சிறை செய்த விழிகள் சொன்ன செய்தியை காண முடியாமல் வெட்கத்தால் சிவந்தவள், அவன் அதிரடியில் விடுதலையாகிருந்த தன் கைகளை அவன் கழுத்தோடு சேர்த்து தன்னைக் கட்டிக் கொண்டாள்.

 

அவள் மூச்சுக்கு தவிக்கும் போதே அவள் இதழ்களுக்கு விடுதலை கொடுத்தாலும் அவளை மட்டும் விடுவிக்காமல் தன்னோடு அணைத்திருக்க, அவனை பார்க்க முடியாமல் வெட்கத்தால் தடுமாறியவள் அவன் கழுத்துக்கடியில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

ஓய் ! 

 

ஓய் !

 

என்ற அவன் ஒவ்வொரு அழைப்பிற்கும் அவனுள்ளே இறங்கியவளைக் கண்டவன், ஒரே தம்மில் எழுந்து உட்கார்ந்து தன்னிலிருந்து பிரித்து அவளைப் பார்க்க, அவள் முகமோ விகசிக்க விழிகளோ மூடியிருந்தது.

 

“ஓய் ! கண்ணைத் திற! இங்க என்னைப் பாரு!” என்றவனுக்கு எந்த பதிலும் அளிக்காமல் ஏதோ ஒரு மோன நிலையில் இருந்தவளைக் கண்டு மறுபடியும் கிறங்கினாலும் அவள் முகம் காட்டும் வண்ணங்களை அவள் விழிகளில் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் அவள் இடுப்பில் கிள்ள அது சரியாக வேலை செய்தது.  

 

“ஆஆ….!” என்று கத்தியவாறு அவன் மீதே அவள் துள்ள அவன் கண்கள் தான் வண்ணங்கள் காட்டியது. இதற்கு மேலே முடியாது என்று உணர்ந்தவன், அவளை அப்படியே கொண்டு போய் குளியறையில் விட்டுட்டு, “குளிச்சுட்டு வா ! எனக்கு பசிக்குது.. சாப்பிட எங்கும் வெளிய போகலாம்…” என்று அவளிடம் சொல்லி விட்டு ஹாலில் வந்து அமர்ந்தவன் அவளுடன் கனவுலகம் சென்றிருந்தான்.

 

அவனின் கனவு நாயகியே வந்து அவன் தவத்தை கலைக்க, அவன் முன்னே வந்து நின்றவளின் அழகு அவனை கொள்ளையடித்ததை விட மலர்ந்து விகசித்த அவள் விழிகளில் தொலைந்தவனை அழைத்தாள்.

 

“என்னங்க? என்னங்க? எவ்வளவு நேரம் கூப்பிடறேன்?” 

 

“ஹான் … சொல்லு… குந்தவை 

“வெளிய போக வேணாம்… நீங்க போய் குளிச்சுட்டு வாங்க… அதுக்குள்ள நான் டிபன் செய்யறேன்…” என்று அவனுடன் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்த அவள் சொன்னது அவனுக்கு வசதியாகி போனாலும் அதற்கான நேரம் இல்லை என்பதை உணர்ந்தவன்,

“இல்லை நான் மதியம் அங்க ஆபீஸ் போகணும்… வெளியே சாப்பிட்டு, நீ ஆபீஸ் கிளம்பும் போது அப்படியே உன்கூட சேர்ந்து கிளம்பலாம்னு இருந்தேன்…” என்றதும் “அவள் முகம் சோகத்தைக் காட்டினாலும் சரி நீங்க போய் ரெடியாகிட்டு வாங்க…” என்று அவனை அனுப்பி விட்டு சமயலறைக்குள் நுழைந்தவள் சிறிது நேரம் கழித்து தன் பின்னே சூடான மூச்சு காற்றை உணர்ந்து அது என்னவென்று அறிய தைரியம் இல்லாமல் அப்படியே நின்றிருந்தவளை பின்னிருந்து அணைத்திருந்தான்.

 

“ஓய்! ஏன் அதுக்குள்ள டல்லாகிட்ட?” என்று பார்த்திபன் கேட்க,

 

“சாப்பிட்டு பேசிக்கலாம் வாங்க…” என்றவளுடன் மறுக்காமல் சென்று சாப்பிட்டவன் அதன்பின் அவளுடன் பேச அமர்ந்தான்.        

 

“இப்படி வந்த உடனே போறதுக்கு எதுக்கு வந்தீங்க ?” என்று கேட்டவளை குறும்போடு பார்த்தவன், “நேத்து என் பொண்டாட்டி என்னை பார்க்கலைன்னு ஒரே புலம்பல், எனக்காக ஸ்டேட்டஸ் எல்லாம் வைச்சிருந்தா… அதான் வந்தேன்… அப்படி வந்ததால எனக்கு லாபம் தான்…” என்றவனின் பார்வை அவள் இதழ்களில் இருந்தது.  

 

“நான் ஒன்னும் உங்களுக்காக பாட்டு வைக்கல?” என்று முறைத்தவளை சிரிப்போடு பார்த்தவன், “அப்படியா இரு…” என்று அவள் நேற்று வைத்திருந்த பாடலை ஓட விட்டான்…

 

அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே!
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா!
கிளியே கிளியே போ தலைவனை தேடி போ!
முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ!
தனிமையில் கண்ணீரை கண்களில் ஏந்தி போ!
வா வா கண்ணா இன்றே கெஞ்சி கேட்க போபோ!
வாசல் பார்த்து வாடும் வாழ்வை சொல்ல போபோ!
காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ!

 

பாடலைக் கேட்டு அமைதியானவளைப் பார்த்து, “உன்னைப் பார்த்துட்டு என்னால உன்னை தனியா விட்டுட்டு போக முடியல? நீ இல்லாம என்னால இருக்க முடியாம இங்கிருந்து உன்னைத் தூக்கிட்டு போகணும்னு தோணுது…”

 

“முன்னாடி மரியாதையா பார்த்த உன் கண்ணுல இப்பலாம் காதலைப் பார்க்கும் போது அதை கூட இருந்து அனுபவிக்க முடியாம கோபம் வருது… அதான் உன்னைப் பார்க்க வரல…” என்றவனின் பேச்சை விட விழிகள் காட்டிய வருத்தத்தை உணர்ந்தவள்,     

 

“இது உரிமையான மஞ்சள் கயிறு மேஜிக்கா இல்ல எனக்குள்ள மறைஞ்சிருந்த காதலை இந்த பிரிவுல நான் கண்டுக் கொண்டதாலா, எதுன்னு எனக்கு எனக்குத் தெரியல… ஆனால் ஒன்னு மட்டும் தெரியுது… உங்க கூட இருந்து ஒவ்வொரு நொடியும் உங்க பாசத்தை அனுபவிக்கனும்னு தோணுது… கிட்ட இருந்து சண்டை போடணும்னு தோணுது.. எல்லாம் விட இதுக்கு மேல நீங்க இல்லாம என்னால தனியா இருக்க முடியாதுன்னு தோணுது…” என்று அவன் உணர்ந்த காதலை அவள் வாய் வார்த்தையாக அவனுக்கு குறையாமல் சொன்னவளிடம்,

 

“இதுக்கு சீக்கிரமே ஏதாவது வழி செய்யறேன்… உன்னை என்னால இப்படி பார்க்க முடியல… எப்பவும் துறுதுறுன்னு என்னை முறைச்சிகிட்டு இருக்கற பார்வை தான் வேணும்… இப்ப ஆபீஸ் கிளம்பு… நான் இனி அடிக்கடி வரப் பார்க்கிறேன்…” என்றான்.

“ம்ம்ம் ! சரி வாங்க ! கிளம்பலாம்…” என்று அவள் சொன்னதும் முன்னே சென்றவனை பின்னிருந்து இறுக்கமாக அணைத்து அவன் முதுகில் தன் முகத்தை அழுந்த பதித்தவள், “என்னை சீக்கிரம் இங்கிருந்து கூட்டிட்டு போங்க… இல்லைன்னா நானே உங்ககிட்ட வந்துடுவேன்…” என்றவளை முன்னே இழுத்து அணைத்தவன் அப்போது உணரவில்லை அவள் சொன்னதை தான் செய்ய போகிறாள் என்று !

 

எந்தன் தனிமையை தகர்த்தெறிய வந்தவனே!!..

இன்று என்னை தனிமைப்படுத்துவது ஏனோ!!.. 

 

இந்த உலகின் எல்லா இன்பங்களும் கையில் தந்து…

எந்த நேரத்திலும் எல்லா நிலையிலும்…

எனக்கே எனக்காக அவன் இருப்பதாய் உணர்த்தியவனே…

இன்று அவன் இல்லா உலகத்தை எனக்கு தருவது ஏனோ!

 

அவன் அருகாமையில் உணராத என் காதலை! 

இந்த பிரிவில் நான் உணர்ந்தது ஏனோ!

 

என் தனிமையை போக்கி நான் யாசிக்கும் காதலையும் 

மீட்டு தர வருவானோ!

 

கண்கள் நாளும் கதை பேச !

என் கரங்களுடன் அவன் கரம் கோர்க்க !

நான் அவன் தோள் சாய காத்திருக்கிறேன் !

என் காதலும் காத்திருக்கிறது !

 

என்னவன் வருவானோ ! 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!