Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ31_3 Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  31_3

 

வீட்டிற்கு வெளியே சத்தம் நின்று போனது. உடலெல்லாம் வியர்வையில் குளித்திருக்க, தூக்கம் எங்கிருந்து வரும்? எழுந்து முற்றம் பெருக்கி… செடிகளுக்கு நீர் பாச்சி.. வீட்டைக் கூட்டி.. குளித்து என்று அவள் தினம் செய்யும் வேலைகளில் மூழ்கினாள்.

 



Advertisement

“இன்னைக்கு சீக்கிரம் எழும்பீட்டியா மா?” கேட்டுக்கொண்டே காபியோடு வீட்டிற்குள் நுழைந்தார் பானு.

 

“ஆமா அண்ணி” என்றாள் முகம் உயர்த்தாமலே.

Advertisement

 

Advertisement

காபியை அவளிடம் கொடுத்தவர், மரிச்சினி கிழங்கோடு அமர்ந்தார். ஒற்றை கிழங்கைக் கையில் எடுத்து, கத்தியால் நேர் கோடு  போட்டு… கத்தியை உள்ளே விட்டுத் திருப்ப.. தோல் அப்படியே பிளந்து கொண்டு வந்தது.

 

சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவள், பின் தோட்டத்தின் கடைசியிலிருந்த மரத்தடிக்கு சென்றாள். கீழே கிடந்த குட்டி குட்டி மலர்களை எல்லாம் எடுத்துத் தொடுத்தாள். மூச்சை உள்ளிழுக்க மணம் நாசி வழி சென்று மனதை நிரப்பியது. அந்த சிறு மலர்களுக்குத் தான் எத்தனை மணம்? அங்கேயே இருக்க வேண்டும் போல் தோன்ற… அமர இடம் தேட… கல்லும் புல்லுமாக இருந்தது.

Advertisement

 

மலரை கூந்தலில் சூடியவள் அந்த இடத்தை சுத்தப்படுத்த ஆரம்பித்தாள். மூன்று மணி நேர உழைப்பு… இடம் ஓரளவுக்குச் சுத்தமாகி இருக்க… அந்த ஆள் அரவமற்ற  இடத்தை பூந்தோட்டம் ஆக்கும் ஆவல். வீட்டைச் சுற்றி மலர்கள் இருந்தாலும் எதிலுமே மணமில்லை. பூ செடி நட்டவனுக்கு வேறு விதமான ரசனை. கண்ணுக்கு மட்டும் விருந்து போதும் என்று நினைத்திருப்பான் போலும்.

 

[the_ad id=”6605″]

 

 

இவளுடைய காகித பூ வாழ்க்கை முடியவிருப்பதால்… வாழ்வு போல் சூட்டும் மலரும் வாசம் தர வேண்டும் என்றதால் வந்த ஆசையோ இல்லை மூர்த்திக்கு மல்லி வாசம் பிடிக்கும் என்பதாலோ… ஏதோ ஒன்று.. அவளுக்கு வேடிக்கை பார்க்க மலர் வேண்டாம். சூட்டிக் கொள்ள வேண்டும். அதுவும் வாசமுள்ள மலர் வேண்டும்.

 

மெல்ல வயிறு, தான் இருப்பதை நினைவுபடுத்த ஆரம்பித்தது. வழக்கமாக எட்டு.. எட்டரை மணிக்கு உணவு வந்துவிடும். இன்னும் எட்டு ஆகவில்லையோ? சிந்தனையோடு கை கால் முகம் கழுவி வீட்டிற்குள் வந்துபார்த்தால், மணி ஒன்பது!

 

சுவாமியின் மகன், மனோகரன் தான் உணவை எடுத்து வந்தான். கூடவே தங்கம் வந்தாள். மூர்த்தி கூட்டி வரவில்லை. ஏனாம்? அவர் வரவில்லை என்றால் எப்படிப் பார்ப்பதாம்?

 

வந்தவன் உடலில் ஒரு பரபரப்பு… இவளிடம் உணவை கொடுத்துவிட்டு பானுவை தேடிப் போனவன், கையோடு அவரை அழைத்துச் சென்றுவிட்டான்.

 

“சாப்பிட்டியா தங்கம்..” கேட்டுக் கொண்டே தேங்காய் பால் கொழுக்கட்டையைத் தென்னங்கீற்றிலிருந்து உடைத்தெடுத்த தென்னங்குச்சி கொண்ட்டு குத்தி அவளுக்கும் கொடுத்து இவளும் விழுங்க ஆரம்பித்தாள்.

 

நான்கு வாய் உள்ளே சென்றிருக்கும்… தங்கம் தன் பொன்னான வாயைத் திறந்தாள். “மாமி.. மாமாக்கு கோவம். குட்டி மாமாவ திட்ட போறாங்க. அக்கா சொன்னா. எனக்கு அழுகையா வந்துச்சா… மாமி கிட்ட போன்னு சொல்லி இங்க அனுப்பீட்டாங்க” மூர்த்தி இல்லாத நேரம் செல்வன் தானே அவளுக்கு மிட்டாய் வாங்கி தருவது. அவனைத் திட்டுவதா?

 

கொழுக்கட்டை.. கட்டை போல் தொண்டையில் மாட்டி நின்றது.

 

“யாருக்கு தங்கம் கோபம்? யாரு மேல?” மீண்டும் கேட்டுக் கொண்டாள்.

 

கைகால் வெலவெலத்துப் போனது. “ஏன் தங்கம் கோபம்?”

 

“தெரியலியே..” மூர்த்தியின் அருமை மகள் கைவிரித்தாள்.

 

“என்னை வீட்டுக்குச் சீக்கிரம் கூட்டிட்டு போறியா? ப்ளீஸ்? உடனே போகணும்” வந்து இத்தனை நாட்களில் இன்னும் வீட்டுப் பக்கம் சென்றதில்லை.

 

“குட்டி மாமாவ காப்பாத்த போறீங்களா? எனக்கு ஷார்ட் கட் தெரியும்… வாங்க..”

 

நேர் சாலை வழி செல்லாமல்..  வீடுகளும் மரிச்சினி செடிகள் நடுவிலுமாக கூட்டிச் சென்றாள். ஏற்ற இறக்கம் கொண்ட நிலப் பரப்பு. ஒரு நாளில் இன்னும் எத்தனை முறை இந்த கரடுமுரடான நிலத்தில் ஓட வேண்டும்? அங்கு அப்படி தான்… அவரவர் நிலப் பரப்பில் மரிச்சினி, தென்னை, பனை அதன் நடுவே அவர்கள் வீடு இருக்கும். ஆனால் இன்று, வேறொன்றும் கவனித்தாள். அவரவர் நிலத்தின் ஓரத்தில் கல்லறை இருந்தது. கல்லறையே தான். அதன் மேல் இருந்த சிலுவை ஊர்ஜித படுத்தியது. ஒரு நிலத்தில் இரு கல்லறை.. அம்மா பிள்ளை போலும். ஒன்று பெரிது.. ஒன்று சிறிது.  அதை சுற்றி வளைத்து சிறிய இரண்டடி சுவர். சுற்றி வண்ண மயமான க்ரோடன்ஸ். பார்த்தவள் மனம் பிசைந்தது.

 

ஐந்து நிமிடத்தில் வீடு கண் முன் நின்றது. கொட்டாரம் என்பர் ராஜ அரண்மனையை… அப்படி தான் தோன்றியது அவளுக்கு. பெரிய வராண்டா. இருபது தேக்கு தூண்கள் முன் வராண்டாவில்.

 

இரண்டு படி இறங்கினால், தோட்டத்து வீடு போலவே இங்கும் திண்ணை. அருகில் செல்ல தயக்கம். தள்ளி  வீட்டின் வலது புறமிருந்த மாமரத்தின் பின் நின்று கொண்டாள் ஒருவரின் கவனத்தையும் கவராத வண்ணம்.

 

வராண்டாவில் நின்றிருந்த மூர்த்தி முகத்தில் அப்படி ஒரு கோபம். பானு ஏதோ கூறி சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் செல்ல முயன்று கொண்டிருந்தார். அவன் ஏனோ உள்ளே செல்லவில்லை.

 

‘ஏன்?’ என்று நினைத்து முடிக்கும் முன் தெரிந்தது ஏனென்று. செல்வன் அப்பொழுது தான் வீட்டிற்கு வந்தான். காலையில் காப்பி அருந்திவிட்டு ஆடுகளோடு வெளியே சென்றவன் மீண்டும் இப்பொழுது தான் வருகிறான்.

 

வாசலில் இருந்த பதட்டத்தைப் பார்த்தவன் முகத்தில் குழப்ப ரேகை. மணி  அங்கு இல்லை. ‘குழப்பம் ஏற்படுத்துபவன் இங்கு இல்லையே…. அதுவும் வீட்டுப் பிரச்சினை வாசல் தாண்டி வெளி வராதே..’

 

“செல்வன்..” மூர்த்தி தான் அழைத்தது. வராண்டாவிற்கு வெளியே இருந்த திண்ணையில் சிறிய அண்ணன் மூர்த்திக்கு முதுகைக் காட்டி அமர்ந்திருந்தார். பானு, மூர்த்தி அருகிலேயே இருந்தார், கையை பிசைந்து கொண்டு.

 

அம்மா… அண்ணிமார்கள் வாசக்கால் அருகே. அங்கும் இங்குமாக கல்லூரி செல்லும் பிள்ளைகள்.. பள்ளி செல்லும் ஒன்றும் அங்கு இல்லை.

 

“அண்ணா..?” என்று அருகே வந்தான். துளசிக்குப் படபடப்பு அதிகமானது.

 

“நைட் வீட்டுல இல்லியா நீ?” பதில் உரைக்கத் தயங்கினான். ஆனால் உண்மை உரைத்தான். விடியற் காலையில் மணி வந்துவிடவே வாசல் திறக்க வந்த முத்து, திறந்திருந்த கதவை வைத்து கண்டுகொண்டார்.

 

[the_ad id=”6605″]

 

 

“எப்போ வந்த?” என்றான். பதில் பிடிக்கவில்லை.

 

“யார் கூடப் போன?” பதில் இல்லை.

 

“யார் கூட?” கர்ஜனைக்கு.. பதில் வரவேயில்லை.

 

“அப்போ நான் கேள்விப் பட்டது உண்மையா?” தலை குனிந்து நின்றான். இவன் என்ன கேள்விப் பட்டான் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. அதைச் சபை முன் அறிவிக்க அவனுக்கு விருப்பமில்லை. தனியே அழைத்துக் கண்டிக்கும் நோக்கமில்லை. இன்று செல்வன் ஆரம்பித்ததை வீட்டில் இருக்கும் மற்ற பிள்ளைகள் செய்யக் கூடாது என்பது நோக்கம்.

 

“வயசு பொண்ணு கூட போனியா?” செல்வனுக்கு மட்டுமே கேட்க.. இன்னும் ஒருவருக்கும் விஷயம் தெரியவில்லை.

 

‘காலையில் பார்த்த பெரியவர் கொளுத்திப் போட்டிருப்பார் போலும். அவர் தான் துளசியை பார்க்கவில்லையே.. ஓடும் வேளை முதுகை பார்த்திருப்பாரோ?’

 

“என் ஃப்ரெண்ட் ண்ணா…” அவன் முடிக்கும் முன் மூர்த்தி அறைந்த அறையின் தூரப் போய் விழுந்தான்.

 

வீடே பதறியது. “மூர்த்தி..?” பானு இருவருக்கும் நடுவில் புக..

 

“தள்ளு நீ… ஒரு வீட்டுக்கு ஒரு தருதலை போதும். அவன் ஒருத்தன் கெட்டு சீரழிஞ்சு போகும் போது அவன கேக்க எனக்கு வயசில்ல. அப்படியே எல்லாரையும் விட்டுடுவேன்னு நினைக்காதீங்க.. தள்ளுங்க..” அப்படி ஒரு கத்து கத்தினான். ஒருவரும் அவனை நெருங்கவில்லை.

 

ஒரு இரவு நண்பனோடு வெளியே சென்றதற்கு ஏன் இப்படி என்பது தான் அனைவர் பார்வையிலும். மூர்த்திக்கு இப்படி கோபம் வருமா? மற்ற பிள்ளைகளோடு நந்தினியும் நடுங்கிப் போனாள்.

 

“எங்க டா போன?” வார்த்தையில் எரித்துவிடும் அனல்

 

“மலைக்கு ண்ணா..” சின்ன குரலில் பதில் வந்தது.

 

“வீட்டுல அடங்க மாட்டியா நீ… நைட் பூரா அங்க என்னடா வேலை உனக்கு..?” எழுந்து நின்றவனின் மறு கன்னமும் பழுத்தது.

 

இரவு நேரத்தில் ஒரு இளம் பெண்ணோடு அவன் தம்பி.. அந்த பெண் யார்? தெரியவில்லை. அந்த பெண்ணின் நிலை? அவன் தம்பியா அப்படி? மூர்த்தியால் தாள முடியவில்லை.

 

முத்து வந்தார், “மூர்த்தி.. கண்டிச்சு விடு. வயசு புள்ள மேல கை வைக்காத.”

 

“உங்களுக்கு உள்ள வேல இல்லியா? உள்ள போங்க நீங்க..” வைத்த சத்தத்தில் திண்ணை காலி ஆனது. சிட்டு குருவிகள் பறந்து போனது.. ஒருத்தியை தவிர!

 

கொத்தாய் சட்டையைப் பற்றியவன், “இன்னைக்கு  செல்லுவோட வெள்ளரி தோட்டத்துல வடநாட்டு பயலுவ இருந்தாங்களாம். ஊரு பயலுவ எல்லாம் சேர்ந்து  பிடிச்சு போலீஸ்ட்ட குடுக்க போகும் போது ஓடி போயிருக்கானுங்க. அவனுங்க இருந்த இடத்தில சாரய பாட்டில், கத்தி எல்லாம் இருந்திருக்கு. நீ ஒரு வயசு பொண்ணு கூட.. பக்கத்துல இருக்க மலைல இருந்தது அவனுங்களுக்கு தெரிஞ்சிருந்தா… உன் கழுத்த திருகி போட்டுட்டு அந்த பொண்ண என்ன பண்ணியிருப்பானுங்க தெரியுமா? அவள தூக்கிட்டு போயிருந்தா என்ன பண்ணியிருப்ப?” சத்தம் இல்லாத சீற்றம்.

 

மூர்த்தி கோபம் இன்னுமே மட்டு படவில்லை. பம்பாய் என்ற நகரத்தில் பார்க்கக் கூடாத அவலத்தை பார்க்காமல் போயிருந்தால்.. பெண்கள் சீரழிக்கப் படுவது எப்படி என்பது அவனுக்கு தெரியாமல் போயிருந்தால்… இன்று அங்கிருந்த தடியர்கள் அருகிலேயே தம்பி இருந்தான் என்பது அவன் மனதைப் பிசையாமலிருந்தால்.. கோபம் மட்டு பட்டிருக்குமோ…

 

“அண்ணா..?” கலங்கிப் போனான். அவர்களைப் பார்த்தார்களே… அண்ணனுக்கு நடந்தது தெரிந்தால்..? அதுவும் இவன் கூட இருந்தது துளசி என்று தெரிந்தால்…?

 

“யாரு டா அந்த பொண்ணு.. வாழ்கையில் ஒரு கட்டுப்பாடு இல்லியா உனக்கு? உனக்கு அசிங்கமா இல்ல?”

 

“யாரு அவ? என்ன பண்ணின அவள?”

 

“ஃப்ரெண்ட்” அதற்கு மேல் அவனுக்குப் பேச்சே வரவில்லை.

 

‘ஒரு இரவு முழுவதும் இவனோடு தங்கினால்.. வீட்டில் தேட மாட்டார்களா அவளை? தேடா மாட்டார்கள் என்றால் அவள் எப்படிப் பட்டவள்? எப்பேர்ப் பட்ட பெண்ணோடு இவன் நட்பை ஏற்படுத்தியுள்ளான்?’ மனம் குழம்பியது… நினைப்பே கசந்தது.

 

“ஃப்ரெண்ஷிப்ப அசிங்க படுத்தாத..”

 

அடுத்த அடி அடிக்க கை ஓங்கவும்.. “என்னங்க…” தூணுக்குப் பின்னால் இருந்து வந்த சத்தம் அவன் கையை இறக்க.. அவள் தான் நின்றிருந்தாள். முகத்தில் கலவரம். செல்வனின் கன்றிப் போன கன்னம் அவளைப் படுத்தியது. அதில் பங்கு அவளுக்கும் உள்ளதே..

 

“இங்க என்ன பண்ற துளசி?” புருவம் நெளிந்தது.

 

[the_ad id=”6605″]

 

 

‘ப்லீஸ் போய்டு… சொல்லாதா… என் மேல சத்தியம்… போ…. சொல்லாத’ செல்வன், மூர்த்தியின் தோள்பட்டைக்கு பின் வாய் அசைக்க, துளசியின் பார்வை செல்வன் மீதே. மூர்த்திக்கும் தலையைச் சுற்றி கண் இருக்கும் என்று செல்வனுக்கு தெரியவில்லை.

 

துளசிக்கு நண்பனைப் பார்க்கப் பார்க்க கண் ஈரம் அதிகமே ஆனது. எல்லாம் தன்னால் தான். ஆனால் வலி அவனுக்கு மட்டுமா? கூட பிறப்பு போல் தன் மேல் அவ்வளவு பாசம் காட்டுபவன் அடி படுவதா?

 

துளசியின் பனித்த கண்ணும்.. செல்வனின் கையசைவும்.. இருவரின் துடிப்பையும் பார்த்தவனுக்கு எல்லாம் புரிந்து போகவே.. மனமும் உடலும் தளர்ந்து போனது. “நீ போ துளசி” என்றான் ஜீவனே இல்லாமல்.

 

செல்வனிடம் ‘போக மாட்டேன்’ என்பது போல் தலை அசைத்தவள்.. “அவர் மேல தப்பில்ல…” என்று மூர்த்தியை பார்த்து ஆரம்பிக்க..

 

“வாய மூடிட்டு வீட்டுக்கு போ. இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க… உனக்கு ஒரு தரம் சொன்னா புரியாதா? பட்டாலும் புரியாதா? உனக்கு அறிவுன்னு ஒண்ணு இருக்க இல்லையா? என் முன்னாடி நிக்காத போ….” துளசியிடம் அவன் இப்படிப் பேசியதே இல்லையே.. பெண் பயந்து போனாள். கண் நீர் சொரிய.. விக்கித்து நின்றாள்.

 

“என்னங்க..?”

 

“போ-ன்னு சொன்னேன். வாழ்கையில் எப்பாவது ஒரு தரம், என்னை ஒரு மனுஷன்னு மதிக்க பாரு. சொன்னதை கேட்டுத் தொலை! இங்க இருந்து வாய மூடிட்டு போ. தயவு செஞ்சு போ. கண்ணுல தண்ணிய பார்த்தேன்.. அறைஞ்சிடுவேன்.. போ” அவள் வாய் திறந்தால் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுமே என்ற பயம் அவனுள். தம்பி ஒரு பெண்ணோடு சென்றான் என்பதையே கூற விருப்பப்படாதவன்.. அவன் மனைவியைச் சபையில் நிறுத்துவானா?

 

இவளை எப்படிப் பாதுகாப்பது என்றே அவனுக்குத் தெரியவில்லை. நெருப்பைத் தேடிப் போகும் ஈசலை என்ன செய்ய? இவள் ஈசல் இல்லையே போ என்று விட!

 

தேம்பிக்கொண்டே அவள் போக.. மூர்த்தி உடல் முழுவதும் ஒரு நடுக்கம். ‘ஏன் இப்படிச் செய்தாள்? ஏதாவது ஆகி இருந்தால்?’

 

“மாமா..” அவன் இடையைக் கட்டிக்கொண்டு தங்கம் அழ..

 

மகளை தூக்கிக் கொண்டவன் அப்படியே மாறிப் போனான். “ஒண்ணும் இல்லடா தங்கம். தப்பு செஞ்சா உங்க டீச்சர் திட்டுவாங்க இல்ல? அது மாதரி தான் இது. நீ அழதா” அவள் கண்ணீர் துடைத்து.. பயந்த மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தவன் பார்வை முழுவதுமே துளசி மேல் தான்.

 

கண்ணீர் முட்டிக் கொண்டு வர.. அவளுக்கு வழியும் தெரியவில்லை.. நடக்கவும் முடியவில்லை.

 

“நந்தினி… அவள வீட்டுக்கு கூட்டிட்டு போ..” அவன் சத்தம் போட.. எல்லாவற்றையும் மறைவிலிருந்து பார்த்து நின்றவளுக்குத் தலை சுற்றியது.

 

‘இந்தாளுக்கு கண்ணு என்ன பிடரியிலையா இருக்கு? நான் நிக்கிறது எப்படி தெரிஞ்சது? சரியான  முரடனா இருப்பார் போல. கிழவி இவரைத் தான் என் தலைல கட்ட ட்ரை பண்ணிச்சா? காலம் பூர இவர் கிட்ட அடியும் திட்டும் வாங்க இவ எங்க இருந்து வந்து மாட்டினான்னு தெரியலியே..’ முதல் முறை துளசிக்காக நந்தினி மனம் வருந்தியது.

 

தங்கத்தை தாங்குவது போல் மனைவியைத் தாங்குவான் என்று நினைத்தவளுக்குக் கண்ட காட்சி வேறு கூறியது. இவன் தங்கத்தை மட்டும் தான் தாங்குவான் போலும்.. என்ற எண்ணம் ஒட்டி கொண்டது. அவளுக்கு அன்றும் மூர்த்தியை தெரியவில்லை. இன்றும் மூர்த்தியை தெரியவில்லை.

 

உப்பு பெறாத விஷயத்திற்கு மாமா, செல்வன் மேல் கை நீட்டியது நந்தினிக்குப் பிடிக்கவில்லை. முரடனாய் தெரிந்தான். மூன்று தினங்களிள் மனைவியாகப் போகிற பெண்ணிடம் அன்பாய் பேசத் தெரியவில்லை.. அதுவும் நந்தினிக்குப் பிடிக்கவில்லை. தங்கத்திடம் மட்டும் உருகும் மூர்த்தி ஓரவஞ்சகனாக தெரிந்தான். ஆக மொத்தத்தில், திடகாத்திர ஆண் அழகனான தன் மாமன்.. காதல் மன்னன் அல்ல! மென்மையானவனும் அல்ல! காதலிக்கத் தெரியாத ஒரு முரடன்!

 

‘இவ ஒருத்தி நேரம் காலம் தெரியாம இந்த ஆளப் பாக்க வந்து வாங்கி கட்டிகிட்டா! பாவம் அந்த பொண்ணு முகம் எல்லாம் பயத்தில செவந்து போச்சு. லூசு மாமா.’ எண்ணிக் கொண்டே துளசி பின்னோடு ஓடினாள்.

 

ஒற்றை காற்றில் மலை உச்சிக்குச் சென்ற சறுகு.. அடுத்த காற்றிற்கு மலை இறங்கியது. நந்தினி மயங்கிய வேகத்தில் மயக்கம் தெளிந்தாள்.

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!