Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ36_1 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  – 36_1

 

“வாசு.. அக்கா தான் உன்ன பேப்பர தூக்கி போடக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க இல்ல? இப்போ மட்டும் கோலம் அழிஞ்சிருந்துது… நாளைக்கு நீ தான் கோலம் போடுவ..”

 



Advertisement

தெரு முக்கு காந்தி அக்கா கடையிலிருந்து சாமான் வாங்கிக் கொண்டு வீட்டு வாசலுக்கு மூர்த்தி வரவும், செய்தித்தாள் போடும் வாசு அன்றைய நாளிதழை கேட்டிற்கு வெளியே நின்று விட்டெறியவும் சரியாக இருக்க, வாசு மாட்டிக்கொண்டான்.

 

இது அவ்வப்பொழுது நிகழுவது தான்.

Advertisement

 

Advertisement

“இல்ல சார்.. இன்னைக்கு சரியா திண்ணைல போட்டுடேன்..”

 

“அவளுக்கும் சலிக்கல… உனக்கும் மண்டையில ஏறல.. போ” என்று கேட்டை சாத்திவிட்டு உள்ளே வந்தவன் கண்கள், மனைவி நட்டிருந்த செடிகள் மேல். அவர்கள் வாழ்வு போலவே நந்தவனமாய் காட்சியளித்தது.

Advertisement

 

ஆறு மாதம் முன்பே, திருமணம் முடித்து ஊரிலிருந்து வரும் போது தோட்ட வீட்டைச் சுற்றி இருந்த செடிகளின், கிளை, இலை, விதை, என்று பலதை கொண்டுவந்து நட்டிருந்தாள்.

 

நட்ட பலதும் பூக்க ஆரம்பித்துவிட்டது. ஏன்.. கொண்டு வந்து நட்ட  ஒற்றை அடுக்கு ரோஜா கூட ஒரு மொட்டு விட்டுவிட்டதே. ஆனால் இரண்டரை வருடம் முன் நட்ட பன்னீர் ரோஜா மட்டும் பச்சை பசேல் என்று அவர்கள் திருமண வாழ்வு போலவே பூக்காமல் படர்ந்து அழகாக நின்றது.

 

இன்றோடு ஆறு மாதம் முடிந்திருக்க, திருமண அரையாண்டு தினத்தைக் கொண்டாட வாசலில் பெரிதாகச் சூரியகாந்தி வரைந்து, மஞ்சள் நிறம் தீட்டியிருந்தாள்.

 

சாத்தி வைத்திருந்த கதவைத் திறந்து உள்ளே சென்றான். நெய் மணம் நாசியைத் துளைத்தது. ஊஞ்சலில் அவன் துளசி, முட்டி மடித்துப் படுத்திருந்தாள். கையில் புத்தகம். பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தவள் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. வாத்தியார் மனைவி அரியர் வைக்க முடியாதே…! ஈரம் வாட விரித்து விட்டிருந்த முடியோடு புடவை முந்தியும் வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தது.

 

வீட்டில் நுழைந்தவனை பார்த்ததும் எழுந்து அவள் அமர,

 

“காபி போட்ட சொன்னேனே.. போட்டியா?” கேட்டுக்கொண்டே கையிலிருந்த கூடையை அவளிடம் நீட்டினான்.

 

“எல்லாம் ரெடி பண்ணிட்டு இப்போ தான் கைல புக்க எடுத்தேன். நீங்க பிஸ்கட் வாங்கினீங்களா இல்லியா? காலைல இருந்து அது தொண்டை கிழிய கத்துது..”

 

பேசிக்கொண்டே இருவரும் பின் வாசலுக்கு காபியோடே போக.. காகம் அருகில் வந்து அமர்ந்து கொண்டது. பல பழக்கங்கள் அப்படியே இருக்க.. காபியோடு பின் வாசல் திண்ணையில் காலை அரங்கேறும் அரட்டையும் அதில் அடக்கம்.

 

பொதுவாகத் தரையில் அமர்ந்து கொள்வாள். அவ்வப்போது மடியில் அமர்த்திக் கொள்வான். அவன் விருப்பமும் நெருக்கமும் அன்றிருந்த அதே அளவில் அப்படியே நின்றிருந்தது. அதற்கு மேல் அவன் ஆசையை வளர்த்து கொள்ளவில்லை.

 

சில நேரம் கடிவாளம் போட முடியாமல் மனம் தவிக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் சின்ன அணைப்போடு நிறுத்தி கொள்வான். இன்று ஏனோ அவனுக்கு மனைவியின் ஸ்பரிசம் தேவைப் பட.. மடியில் இருத்திக் கொண்டான்.

 

“இந்தா அழகி.. சாப்பிடு. நீயும் இத சாப்பிட்டு உன் அண்ணன் மாதிரி புஷ்டியா வளரு..” ஒரு பிரிட்டானியா மில்க் பிஸ்கட்டை அதனிடம் நீட்டினாள். கவ்விக் கொண்டது.

 

[the_ad id=”6605″]

 

 

 

“நல்லா பழக்கி வச்சிருக்க காக்காவ. ஏன் அதுக்கு மத்த பிஸ்கட் எல்லாம் தொண்டைக்கு அடியில இறங்காதோ?”

 

மூர்த்தி கூறுவது போல், அப்படி தான் பழக்க படுத்தி வைத்திருந்தாள். காலை இவள் காபி அருந்த, அருகில் வந்து ஒரு பிஸ்கட்டை வாங்கி செல்லும். வேறு பிஸ்கட் கொடுத்தால் வாங்காது. சில நிமிடங்களில் மீண்டும் ஒன்றை வாங்கி செல்லும். அதன் பின் காகத்தின் காலை உணவு மாமி வீட்டில்.

 

மாதங்கள் சென்றிருந்தாலும் இருவரின் வழக்கங்கள் மாறியிருக்கவில்லை. சராசரி வீட்டைப் போலவே அனைத்தும் நடந்தது. இருவருக்குமே கனவு கை கூடிய வாழ்க்கை தான். உடலளவு நெருக்கம் இல்லை என்று கூறினால் மட்டும் தான் தெரியும்.. இருவருக்கும் அப்படி ஒரு புரிதல், காதல்!

 

ஒன்றாய் சமைத்து, உண்டு, உறங்கி, கல்லூரி சென்று.. என்று எதிலும் இருவரும் இணைந்தே இருந்தாலும், இருவரும் திகட்டாத காதல் வாழ்வை, ரசித்தே வாழ்ந்து வந்தனர். அருகாமை ஒரு வித அமைதியை கொடுத்திருக்க.. அதை மட்டுமே ரசித்தனர். தேவை இல்லாமல் அவள் ரணத்தைக் கீற அவன் முற்படவில்லை.

 

மாலை கல்லூரி முடிந்து அவள் பேக்கரி சென்றுவிடுவாள். அவன் வீட்டிற்கு வரும் வேளை, அவனே சென்று அழைத்துக் கொள்வான். வீட்டிற்கு வந்ததும் அருகிலிருக்கும் சிறுவர் சிலர் வந்து அவளிடம் பாடம் பயின்று செல்வார்கள். அதன் பின் சமையல்.. சாப்பாடு.. அரட்டை .. தூக்கம்! இது அவர்கள் வழமை.

 

காகம் இரண்டாம் பிஸ்கட் வாங்க வந்திருக்க.. அவள் அதோடு பேசிக்கொண்டிருக்க.. மடியில் அமரவைத்து மனைவி முதுகில் நெற்றி பதித்திருந்தவன் முகத்தில் ஏதோ யோசனை. அதனால் மனைவி கூச்சத்தில் நெளிவது அவனுக்கு உரைக்கவில்லை.

 

மூச்சுக் காற்று முதுகை வருடவுமே.. பெண்ணிற்கு ஏதோ செய்ய.. “மூர்த்தி சார்.. சாதம் வெந்திருக்கும்.. உள்ள போகணும்” என்று எழ முற்பட்டாள்.

 

இடையைச் சுற்றிப் பிடித்தவன், “இரு துளசி… பேசணும்” என்றான். வெற்றிடையில் பட்ட அவன் கை இன்று அதிகமாய் இம்சித்தது.

 

“ரெண்டு நிமிஷம் இருங்க.. அடுப்ப பார்த்துட்டு வந்திடுறேன்..” தப்பித்தோம் பிழைத்தோம் என்று உள்ளே ஓடினாள்.

 

கொஞ்ச நாளாகவே இது ஒரு அவஸ்தை.. என்ன என்று புரியவில்லை. மூர்த்தி அருகில் வந்தாலே, அவன் மூச்சுக் காற்று பாட்டாலே உள்ளுக்குள் ஒரு படபடப்பு. ஏனாம்? இருவரும் ஈருடல் ஓர் உயிராய் சுற்றி கொண்டிருப்பதாலா?  கரைகாணா காதலோடு மூர்த்தி அவளைக் கொள்ளை அடித்ததாலா? கணவன் என்ற உரிமை எட்டிப் பார்த்ததாலா?  அவளுக்குத் தெரியவில்லை. அருகாமை பிடித்தது. அதை வெளியே காட்டக் கூச்சம். மூர்த்தி அருகில் வந்தால், மூர்த்தி மட்டும் தான் அவள் கவனத்தில். அவளின் படபடப்பு அவனின் கவனத்தை எட்டும் அளவிற்கு இன்னும் முற்றவில்லை. இருந்தும், இது ஒரு நல்ல அறிகுறி தான்! தூரத்திலிருந்த ஒளி மிக அருகில் பிரகாசித்தது.

 

இவர்களின் பிரகாசம் அருகில் தெரிய சின்ன அண்ணன் துரை வாழ்க்கை மூன்றாம் முறை பிரகாசித்தது. முல்லைக்கு இது எட்டாவது மாதம். அடுத்த அரையாண்டு விடுப்பு வரும் நேரம் நெருங்க… இருவருக்கும் உள்ளுக்குள் சின்ன நெருடல். ஊருக்குச் சென்றால், இங்குப் போல் இருக்காது. பார்ப்பவர் எல்லாம் கேட்கும் முதல் கேள்வியே ‘விசேஷம் உண்டோ?’ என்று தான். கேள்விக்குப் பயந்து ஊருக்குப் போகாமல் இருக்க முடியாதே.

 

ஊருக்கு போவதைப் பற்றி பேசத் தான் துளசியை இருக்கச் சொன்னதும். அவள் மாணவி என்பதால் விடுப்பு அதிகம். அவளுக்கு ஒன்றிலிருந்து பத்து வரை விடுப்பு என்றால், அவனுக்கு நான்கிலிருந்து ஏழு வரை இருக்கும்.

 

வீட்டில் தனித்திருக்க அவளுக்கு கடுப்பாக இருக்கும்… வீட்டை அடுக்குவதும், பெருக்குவதும் அழகுபடுத்துவதும் என்று முதல் ஒரு வாரம் எப்படியோ சென்றுவிட்டாலும் அதன் பின் அவளும் என்ன செய்வாள்? இது மூர்த்தியின் எண்ணம்.

 

“உனக்கு எக்ஸாம் முடிஞ்சதும் ஊர்ல கொண்டு விடவா துளசி?”

 

துளசிக்கு வெகுவாய் பழகியிருக்க, அவள் சென்றுவிட்டால் மூர்த்திக்கும் கடினம் தான்.

 

“நான் போய்டா நீங்களே தனியா சமைச்சு சாப்பிடுவீங்களா? யார் உங்களை பார்த்துக்கிறதாம்? எதுவும் வேண்டாம்! நான் உங்க கூட தான் இருப்பேன். கடைசி வரைக்கும் கூடவே இருப்பேன்னு சத்தியம் செஞ்சிருக்கேன். மீற முடியாது!”

 

ஆர்ப்பாட்டம் இல்லாமல் சிரித்தான். இன்னும் துளசி அவனின் அதே குட்டி பெண் தான். சந்தேகமில்லை. அவளை பார்த்துக்கொள்ளவே அவன் தான் வேண்டும்!

 

“கொஞ்ச நாள் தானே… மேனேஜ் பண்ணிடுவேன். நீ சொல்லு..” என்றான் அவள் தலை முடியைச் செல்லமாய் கலைத்து.

 

முடியை சரி செய்துகொண்டே யோசித்தவள், “இப்போ வேண்டாங்க. உங்களுக்கு லீவ் ஆரம்பிச்ச பிறகு ஒண்ணா போகலாம். நான் அங்க இருந்துக்கிறேன். நீங்க வந்திடுங்க. லீவ் முடியற நேரம் நானே வந்திடுறேன்.”

 

நாட்காட்டி அதி வேகமாகப் பயணப்பட.. இதோ என்பதற்குள் விடுப்பும் ஆரம்பித்தது. பால்காரரின் மனைவியைத் தான் ஏற்பாடு செய்திருந்தனர், முற்றம் பெருக்கி, செடியைப் பராமரிக்க.

 

[the_ad id=”6605″]

 

 

 

சொல்லி வைத்தார்போல் சுவாமி ரயில் நிலையத்தில் காத்திருந்தார். கூடவே செல்வனும், அவன் மைனியை பார்க்க. இல்லை என்றால் வீட்டில் சென்று ஆடி தீர்த்துவிடுவாள்.

 

சொந்த மண்ணில் கால் பதிப்பதே புத்துணர்ச்சி தான்!

 

பயந்தது போல் வீட்டில் ஒருவரும் ‘விசேஷமா’ என்ற கேள்வி கேட்கவில்லை. ஊரில் ஒரு சிலர் கேட்க, “படிக்கிற பொண்ணு வயிற தள்ளிட்டு காலேஜ் போக முடியுமா?” என்ற கேள்வியோடு அனைவர் வாயையும் அடைத்தார் முத்து.

 

அழகான நிம்மதியான அலட்டல் இல்லாத கிராம வாழ்க்கை.. சேவல் கூவலில் விடிந்தது. குளித்து அடுக்களையில் நின்றிருந்தவள் பேசிக்கொண்டே திரும்பவும் பின்னால் வந்து நின்ற முல்லையைக் கவனிக்கவில்லை. இடித்துவிட்டாள்.

 

அந்த முழு உருண்டை வயிற்றை மோதவும்..

 

“அச்சோ… அக்கா… இடிச்சுட்டேனே.. வலிக்குதா?” என்று  தன்னிச்சையாக வயிற்றை இருகரத்தாலும் பிடித்துக்கொண்டாள். பேஸ்கட் பால் போன்று உருண்டு திரண்டிருந்தது அந்த நிறை மாத கர்ப்பிணியின் வயிறு. பிடித்திருந்தவள் கைக்குள் ஏதோ பட்டுச் சென்றது.

 

பட்டென்று கையை எடுத்துவிட்டாள்.

 

“ஒன்னும் ஆகல துளசி.. எதுக்கு இப்படி பயப்படுற?”

 

உள்ளங்கை குறுகுறுக்க.. இதயம் அதிவேகமாக அடித்துக்கொள்ள.. மீண்டும் தொட ஆசை. ஏதோ அசைந்ததே…

 

அந்த ‘ஏதோ’.. குழந்தை என்று தெரியாத அளவு மக்கொன்றும் இல்லையே..

 

“அக்கா…” என்றாள் வாஞ்சையாய்..

 

“என்ன தொடணுமா?”

 

“ம்ம்…” கண்கள் மின்னியது

 

“இன்னும் ஆறு மாசம் தானே படிப்பு… இப்போவே ரெடி பண்ண ஆரம்பிங்க..” கூறிக்கொண்டே புடவையை விலக்கிக் காட்ட.. மெல்ல வருடினாள். இவ்வளவு பெரிய வயிறு கூட அழகாக இருக்க முடியுமா? இருந்தது. முகம் மலர்ந்து போனாள் துளசி. முல்லையின் மெலிதான தோலில் பிள்ளையின் தலை இருக்கும் இடம் எழும்பி நின்றது.

 

சின்ன நடுக்கம்.. அவள் தொடவும் குழந்தை நகரவும்… உடல் முழுவதும் ஒரு வித பரவசம் படர்ந்தது. முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

 

“பாப்பா தலையா..?”

 

“அக்கா… குட்டி காலு கா..”

 

“குட்டி செல்லம் நான்.. நான் உன் சித்தி”

 

குட்டி வயிற்றுக்குள் இருவரின் உயிரை கொண்டு குட்டி ஜீவன்.. கண் பனித்தது. காரணமே இல்லாமல் உதடு விரிந்தது. வயிற்றை பார்த்து நின்றவளுக்குள் ஏதோ செய்தது. என்ன ஒரு உணர்வு.. கையை விட்டுப் போக மறுத்த உணர்வு.

 

கனவில் மிதந்தாள். கால் தரையில் பதிந்ததா தெரியவில்லை. அறைக்குச் சென்று கதவை மூடியவள், நேரே நின்றது, மூன்றடி நீள கண்ணாடி முன்! இதயத் துடிப்பு அதிகரித்துக்கொண்டே போனது. புடவையை விலக்கி வயிற்றைப் பார்த்தாள். தட்டையாக உள்ளே அமுங்கிப் போயிருக்க.. தடவிப் பார்த்தாள் ஒன்றும் இல்லை. எப்படி திரும்பி பார்த்தாலும் குட்டி தொப்பை கூட இல்லை.

 

முகத்திலிருந்த சிரிப்பு மறைந்தது. காலியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன? நிரப்பிக் கொள்ள ஆசை வரவும்… கண்ணாடியில் மூர்த்தி தெரிந்தான். கம்பீர ஆண்மகன். மூர்த்தியைப் போல் குட்டி மூர்த்தி தன் வயிற்றில்.. முகம் குப்பென்று சிவத்தது. இருவர் ஜீவன் கொண்டு ஒற்றை ஜீவன்.. அவள் மூர்த்தி சாரின் வாரிசு! நினைக்கவே இனித்தது.

 

“என்ன துளசி மா? என்ன ஆச்சு? ஏன் வயிற பார்த்துட்டு இருக்க? வலிக்குதா?”

 

தேவலோகத்திலிருந்து பெண் கீழே விழுந்தாள். மூர்த்தி? மூர்த்தியே தான்!! கண்ணாடியில் தெரிந்தது..? நிஜமா? கனவில்லையா? நிஜம் பெண்ணே.. நிஜம்! பட்டென்று வயிற்றை மூடிக்கொண்டாள்.

 

‘ச்சு! மானம் போச்சு!’ முகம் மீண்டும் சிவந்தது. அவள் வெண் சருமத்திற்கு, முகம் நிஜமாகவே சிவந்தது.

 

முகத்தைப் பார்த்தவன் பயந்து போனான். அருகில் வந்தவன்.. “என்ன ஆச்சு..? வலிக்குதா?” தலையை வருடவும், விழித்தாள். அதை தவிர வேறு என்ன செய்யவென்று தெரியவில்லை.

 

கதவைப் பார்த்தாள். பூட்டி இருந்தது. இவர் எப்படி உள்ளே? எதிரில் நின்றவனைக் கேள்வியாய் பார்த்துக்கொண்டே மெல்ல அவனைக் கிள்ளி பார்த்தாள்.

 

“ஸ்ஸ்ஸ்… என்ன?”

 

“நீங்க நிஜமானு பார்த்தேன்..”

 

“நிஜம் தான்…” அவளை வித்தியாசமாக அவன் பார்க்க..

 

“நீங்க எப்படி மூடின கதவுக்குள்ள?”

 

“நீ மூடதுக்கு முன்னமே இங்க தான் இருக்கேன்..” சிரித்தான். சிரிப்பு சரி இல்லையே… ‘எதை  மூடியதைக் கூறுகிறார்?’ அவனை முறைத்தவளிடம்,

 

“சொல்லு.. காண்ணாடிய ஏன் பயமுறுத்திட்டு இருந்த?”

 

“என் வயற பார்த்து கண்ணாடி பயந்துச்சாமா?” அவள் இன்னும் அதிகமாய் முறைக்க…

 

அவனோ உள்ளுக்குள் எழுந்த குஷியை மறைத்து, “தெரியல… என் கிட்ட இன்னும் ஒரு தரம் காமி… பயப்படுறமாதிரி இருக்கான்னு பார்த்து சொல்றேன்…”  நமுட்டு சிரிப்பை உதிர்க்க..

 

“நல்லா தான் இருக்கு… நான் பார்த்தேன்..” சொல்லிக்கொண்டே வயிற்றைக் காட்டப் போனவளுக்கு, உரைக்க… அவன் முகம் பார்க்க.. அதில் அப்படி ஒரு உல்லாசம்.

 

“மூஞ்சிய பாரு… ஃப்ராடு!” உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் மெத்தை மேலிருந்த தலையணையை விட்டெறிய அதை அவன் பிடிக்கவும்..

 

“போங்க நீங்க அந்தபக்கம்… பாக்கணுமாமே.. ஆள பாரு” சிணுங்கியவள் ஓடியே போனாள். அன்று முழுவதுமே அதே உல்லாச மனநிலை இருவருக்கும்.

 

ஏகாந்த உணர்வோடு அங்கிருந்த பெரிய கடவத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் சுள்ளி பொறுக்க. மரத்தடியில் கிடந்த சுள்ளியால் கடவம் நிரம்பவும், நின்று கொண்டிருந்த நந்தினியை கூப்பிட்டாள் உதவிக்கு. கனமில்லை என்றாலும் அதன் அகலத்திற்கு மறுபக்கம் பிடிக்க ஆள் தேவைப்படவே நந்தினியைக் கூப்பிட்டாள்.

 

இருவருமாகத் தூக்கிக் கொண்டு பாதி தூரம் வரவும் முற்றத்தில் நின்றிருந்த செல்வன் ஓடி வந்தான்.

 

“மைனி… விடுங்க..” என்று துளசியின் இடத்தை அவன் பிடித்துக்கொள்ள துளசி அங்கிருந்து நகர்ந்தாள்.

 

செல்வனைப் பார்த்ததும் சட்டென்று நந்தினியிடம் ஒரு வித்தியாசம், நடையிலும் முகத்திலும்! செல்வன் கண்ணும் நந்தினியை அளவிட… அவன் உதட்டோரம் சின்ன புன்முறுவல்.

 

துளசி கவனத்தில் இருவரும் விழ.. இருவரையும் கவனிக்க ஆரம்பித்தாள். அடுத்தடுத்து வந்த நாட்களில் எல்லாம் இதுவே தொடர் கதையாய் போனது. இருவரும் பேச முயற்சித்துக் கொள்ளவில்லை. நேரே முகங்களை சந்தித்துக் கொள்ளவில்லை. செல்வனைப் பார்த்தாலே நந்தினி பேசா மடந்தையாகிப் போனாள். செல்வனும் நந்தினியைப் பார்த்தால்.. பார்த்தே நின்றான்.

 

“பூனைக்கு யார் மணி கட்ட போறது செல்வா?”

 

மாறி மாறி பானுவும் நந்தினியுமாக புட்டுக்கு, உரலில் உலக்கை கொண்டு மாவு இடித்துக் கொண்டிருக்க.. தேங்காய் தொலிக்கும் போர்வையில், வைத்த கண் வாங்காமல் நந்தினியைப் பார்த்து கொண்டிருந்தவனிடம், துளசி கேட்டுக் கொண்டே போய் நிற்க.. அசடு வழிந்தான்.

 

“மைனி..?”

 

“மைனி தான். சொல்லு. என்ன நடக்குது இங்க?”

 

“ஒன்னும் இல்ல..” பல்லை காட்டினான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“அது தான் தெரியுதே ஒன்னும் இல்லன்னு! சொல்ல வேண்டியது தானே? எத்தன நாள் இப்படியே பார்த்துட்டு இருக்க போற?”

 

“அவளுக்குப் பிடிக்க வேண்டாமா? பார்த்தாலே நடுங்கறா! என்னன்னு சொல்ல?”

 

“அவ முகம் பார்த்து உனக்கு தெரியலியா? உன்ன யாருக்காது பிடிக்காம போகுமா? அவ சொல்லுவானு தோணல… நீ வாய திற. ஒன்னு அவட்ட. இல்ல உன் அக்காட்ட! இல்ல அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து அனுப்பிடுவாங்க!”

 

“கொஞ்ச நாள் போகட்டும் மைனி. என்ன அவசரம்? படிச்சு முடிக்கட்டும்”

 

“என்னவோ போ… குடும்பமே பொறுமையின் சிகரங்க தான்!” நீண்ட பெருமூச்சோடு உள்ளே சென்றுவிட்டாள்.

 

அடுத்து வந்த தினங்களில் மூர்த்தி வீட்டிலிருந்த நேரம் மிகக் குறைவு. அங்கு ஆரம்ப பள்ளி மட்டுமே இருக்க, பிள்ளைகள் சில பல காத தூரம் செல்லவேண்டும் நடுநிலைப் பள்ளிக்கும், மேல்நிலைப் பள்ளிக்கும். அதனால் பல பெண்பிள்ளைகள் ஆரம்ப படிப்போடே நின்று விட, அருகருகே இருக்கும் இரு கிராமங்களுக்கும் பொதுவாய், ஒன்றிலிருந்து பன்னிரண்டு வரை உள்ள பள்ளி கொண்டுவரும் வேலையை ஆரம்பித்திருந்தான்.

 

காலை அவளுக்கு முன்பே எழுந்துவிடுவான். காலை வேளைகளில் கணவனை பார்ப்பதே அரிதாகப் போக.. அன்று காலை எழுந்தவளுக்கு நல்ல தரிசனம் தந்தான் கணவன். எப்பொழுதும் கைவைத்த பனியனும் வேட்டியோடும் சுற்றுபவன்,  பனியன் இல்லாமல் முதுகின் பின் ஒரு கையை மடக்கி வைத்து, அடுத்த கையின் முஷ்டியில் ‘புஷ்-அப்ஸ்’ செய்துகொண்டிருக்க.. மெத்தையில் வசதியாய் படுத்துக்கொண்டு.. முதுகில் ஏறி இறங்கிக் கொண்டிருந்த தசையைப் பார்த்திருந்தவளுக்கு எதோ புது உணர்வு. ‘பெரிய ஆர்ம்ஸ் தான்.. அது தான் அசால்டா தூக்குறார்’. கூடவே அதைத் தொட்டுப் பார்க்க ஆசை.

 

என்றும் வீட்டு மாடியில் உடற்பயிற்சி செய்பவன், இங்கு வந்தால் வயல் வேலையே சரியாக இருக்கும் என்று செய்யாதவன்… இன்று அவன் அறையில் செய்யவும் இமைக்க மறந்து பார்த்தாள். எல்லாம் காலக் கொடுமை! திருமணம் முடிந்து ஏழு மாதம் முடிந்திருக்க… இன்று தான் இப்படி ஒரு தரிசனமும்.. ஜொள்ளும்!

 

அவன் முடிக்கவும் கள்ளத்தனம் வந்து ஒட்டிக்கொள்ள, கண்மூடிக்கொண்டாள். ஏன் திடீர் என்று இப்படி? பதில் இல்லை.

‘சட்டை இல்லாம ஆம்பளைங்கள பாத்ததே இல்லியா… ஏன் இப்படி துளசி?’ 

‘மத்தவன் எப்படி இருந்தா எனக்கு என்ன? இவர் என் புருஷன்.. நான் பாக்குறேன்.. ஜொள்ளு ஊத்தறேன்.’

‘நீ ஒரு பக்கி டீ!’ அவளையே அவள் கேலி பேசி சிரித்தாள்.

 

“என்ன துளசி… கனவுல என்ன கண்ட..?” மூர்த்தியே தான்!!

 

‘மனுஷன் கண்ணுல இருந்து எதுவுமே தப்பாதா? என்ன சொல்ல?’ உதட்டை இழுத்துப் பிடித்து, மெல்லக் கண் திறந்தாள். திரண்ட தோளும்.. திண்ணிய மார்பும்.. முறுக்கேறிய புஜமும்.. வேர்வை முத்துகளோடு நின்றிருந்த கணவனை வெட்கமே இல்லாமல் சைட் அடித்தாள்.

 

“ஓய்..? உன்ன தான்?”

 

பாடுபட்டு கண்ணை உயர்த்தி கணவன் முகம் பார்க்க.. அவன் முகத்தில் நமுட்டு சிரிப்பு.

 

“என்ன?” என்றான், மீசையை முறுக்கிக்கொண்டே..

 

‘இந்த மனுஷன்ட்ட மானத்தை அடமானம் வச்சுட்டியா துளசி?’

 

சமாளிக்கும் விதமாக, “ம்ம்… எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணினேன்..” என்றாள்.

 

புன்னகை விரிய, “ஓ.. எல்லாம் உனக்கு பிடிச்ச மாதிரி சரியா இருக்கா?” அவன் கேட்க..

 

கூச்சம் பிடுங்கித் தின்ன.. “ஏதோ.. சுமாரா..” அவளாலும் சிரிப்பை அடக்க முடியாமல் போக..

 

“நான் எப்போ செக் பண்றதாம்..?” கூறிக்கொண்டே அவன் அவளை நெருங்கவும்.. தலையணையை அவன் மேல் விட்டெறிந்தவள், போர்வையைத் தலை வர இழுத்து மூடிக் கொண்டாள்.

 

“போங்க போங்க… போய் பிழைப்ப பாருங்க..” உள்ளிருந்து சத்தம் மட்டும் வெளிவந்தது.

 

“இன்னும் கட்டினவளையே பாக்கல… பிழைப்ப பாக்கணுமாம்..” சத்தமாய் முணுமுணுத்துக் கொண்டே போர்வையை விலக்கி.. “போதும் தூங்கினது. எழுந்திரு. மைனிக்கு முடியல. அம்மாக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு பாரு..” எழுப்பிவிட்டுச் சென்றான்.

 

அன்றே முல்லைக்கு வலி எடுக்க.. அடுத்து வந்த மூன்று நாட்களும் வீடு பரபரப்பில். நான்காம் நாள் பட்டு குட்டியோடு முல்லை வீட்டிற்கு வரவும், துளசியால் குழந்தையிடமிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை.

 

சின்ன வாய் திறந்து அது விடும் கொட்டாவியும்.. குட்டி குட்டி விரல்களும்.. தலை நிறையக் கருப்பு முடியும்.. அவளை ஈர்த்தது என்றால்.. பசியில் அழும் குழந்தை தாயின் மார்பில் தஞ்சமடையவும், பார்த்துக் கொண்டிருந்தவளுக்குப் பகுத்தறிய முடியாத உணர்வு. வேண்டும்.. மூர்த்தி போல் ஒரு குட்டி பையன் அவளுக்கும் வேண்டும். அனைவர் கையிலும் அழும் பிள்ளை, ‘நீ தான் எல்லாம்’ என்று தன்னிடம் தஞ்சம் புகவேண்டும்.  ஏதேதோ ஆசை.

 

நான்கு நாளாய் முயன்றும் குட்டி பையனைத் தூக்கத் தைரியம் வரவில்லை. அத்தனை குட்டிக் குழந்தையை எப்படித் தூக்க என்று அவள் எண்ணியிருக்க… உள்ளே வந்த மூர்த்தி எந்த தயக்கமும் இல்லாமல் தூக்கியிருந்தான்.

 

அண்ணன் மகனை ஆசையோடு கொஞ்சும் கணவனை கண் எடுக்காமல் பார்த்தாள். மூர்த்தி அருகில் சென்று அமர்ந்து கொண்டாள். கணவன் மனைவியாகக் குழந்தையைக் கையில் ஏந்தி கொஞ்சும் சுகமே தனி தான் போலும்.  

 

குட்டியோடு மூர்த்தி கொஞ்சி கொஞ்சி பேச.. குழந்தையும் அவன் விரலை பிடித்துக்கொள்ள.. “பாப்பான்னா பிடிக்குமா?” வினவினாள்.

 

குழந்தையில் கவனமாக இருந்தவன் அவள் முகம் பார்த்திருந்தால் வேறு பதில் கொடுத்திருப்பானோ… “யாருக்குப் பிடிக்காது? குட்டி கண்ண உருட்டி பாக்கிறதும்… எச்சில் வழிய கன்னத்தில முத்தம் குடுக்கறதும்…. அது சிப்பி வாய் திறந்து அப்பான்னு குப்பிடுறதும்… அலாதி இன்பம் அது. எத்தன குழந்தைய கொஞ்சினாலும் நமக்குன்னு ஒண்ணு… நெஞ்சோட அணைச்சு பிடிக்கிறது எல்லாம் வரம்!”

 

‘நாமளும் பெத்துக்கலாமா?’ தொண்டை வரை வந்ததை விழுங்கினாள். குழந்தைக்காக மூர்த்தியைத் தேடுவது தவறாய் பட.. வாய் திறந்தாளில்லை. மூர்த்தியைத் தேடியதால் தான் குழந்தை ஆசை வந்தது என்று யார் அவளிடம் கூறுவது? 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!