Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka 23

அத்தியாயம்….23

வீரேந்திரன் கோயம்பத்தூர் விமான நிலையத்தில்  இருந்து வெளி வரும் போதே அவன் தாத்தாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்க…

காரணம் இல்லாது அழைக்க மாட்டாரே என்று நினைத்து அவன் தன் வீட்டுக்கு செல்லாது நேராக அவன் தெய்வநாயகியின் வீட்டுக்கு சென்றான். ஆம் தெய்வநாயகி எப்போது அந்த வீட்டிற்க்கு திருமணம் முடிந்து கால் அடி எடுத்து வைத்தாரே, அன்றில் இருந்து அந்த இல்லம் தெய்வநாயகியின் இல்லம் என்று தான் எல்லோருமே  சொல்வர்.

கூடத்தில் வீட்டு ஆட்களோடு மூன்று  பேர் யாரோ இருப்பதை பார்த்து அவர்களை தான்டி கடந்து செல்ல பார்த்தவனை  அவன் தாத்தா சங்கரலிங்கம்… “வீரா வா…” என்று தன் பக்கத்தில் அமர சொன்னார்.



Advertisement

அப்போது தான் வந்து இருப்பவர்கள் யார் என்றே வீரேந்திரன் கவனித்து பார்த்தான். மற்ற இருவர் யார் என்று தெரியவில்லை என்றாலும் வந்திருப்பதில் ஒருவர் தங்கள் குடும்ப வக்கீல்… 

‘இப்போது இவர்களுக்கு இங்கு என்ன வேலை…?’  என்ற யோசனையோட   தன் தாத்தாவின் முகத்தை வீரேந்திரன் பார்த்தான். அதில் அவர் ஏதோ தீர்க்கமான முடிவு எடுத்து விட்டு தான் தன்னை அழைத்து இருக்கிறாரோ என்று எண்ணும் அளவுக்கு அவரின் முகம்  ஒரு தெளிவோடு இருந்தது.

வீரேந்திரன் சங்கரலிங்கத்திடம் … “ என்ன தாத்தா இது எல்லாம்…?” என்று அங்கு அமர்ந்து இருந்தவர்களை காட்டி  கேட்டதற்க்கு,…

Advertisement

“ஊரில் நான் பெரிய தல…யார் வீட்டில் என்ன பிரச்சனை என்றாலும், என் கிட்ட தான் பஞ்சாயத்துக்கு வருவாங்க…காரணம் என் மீது அவ்வளவு நம்பிக்கை. நான் சொல்லும் முடிவு ஒருவரை சார்ந்து இருக்காது. என் முடிவில் ஒரு  நியாயம் இருக்குமுன்னு…

Advertisement

ஆனா பாரு ஊரில் எல்லோரும் என்னை நம்ப. வீட்டில் நான் கட்டின என் பொஞ்சாதி என்னை நம்பல… அதோட ஊருக்கு கொடுத்த நியாயத்தை நான் என் வீட்டுக்கு கொடுக்கல…

 நானும் உணை தெரிஞ்சி கொஞ்சம் கலங்கி தான் போனேன். அதான் எல்லாம் தெரிஞ்சி பத்து வருடம் ஆகும் போகும் நிலையில் கூட என் வீட்டுக்கு இன்னும் நான் நியாயம் வழங்கல…இதை இப்படியே விட்டா…என்னோட அந்த நியாயம் புதைந்து போயிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு வீரா…அதான் இரண்டு நாளா யோசிச்சி.. இதுக்கு ஒரு முடிவு கட்டிடனுமுன்னு நம்ம வக்கீலுக்கு போன போட்டுட்டேன்.

என் பெரிய மகன் பேசாதவன்..அவன் சார்பா பேச வேண்டிய அவன் மனைவியோ திருதிராஷ்ரனின் மனைவி காந்தாரி தன் கணவனுக்கு கண் தெரியவில்லை என்று தானும் கண்ணை கட்டிக் கொண்டது போல…

Advertisement

வரலட்சுமியின் வாய் இருந்தும் இது வரை அந்த பெண் ஒத்த வார்த்தை யாரையும் எதிர்த்து பேசியது இல்லை.

அதான் அவங்க சார்பா அவங்க மருமகன் உன்னை அழச்சேன். இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் அம்மாவும், அப்பாவும் கூட வந்து விடுவார்கள்.” என்று சங்கரலிங்கம் சொல்லி முடிக்கவும், அந்த இடத்திற்க்கு சங்கரி தன் கணவரோடு வந்து இறங்கினாள்.

“என்னப்பா காலையிலேயே போன போட்டு அவசரமா  வான்னு சொன்னிங்க.அதுவும் உன் புருஷனையும் கூட்டிட்டு வான்னு சொன்னதும்…

நான் என்னவோ ஏதோன்னு பயந்து பதறுனதுல… என் மருமக ஆக்குன ஆப்பத்தையும்…பாயாவையும் ஒழுங்கா கூட சாப்பிடாம அரக்க பறக்க வந்து பார்த்தா நீங்க விட்டேந்தியா உங்க பேரன் கூட பேசிட்டு இருக்கிங்க… என்னப்பா உங்களுக்கு இன்னைக்கு பஞ்சாயத்து எதுவும் இல்லையா…?என்று கேட்டாள்.

சங்கரலிங்கம் வெளியில் எதுவும் வேலை இல்லை என்றால், இது போல் தான் தன் மகன்களோடு மகளையும் அழைத்து பழைய நினைவுகளை பேசிக் கொண்டு இருப்பார். அது போல் நினைத்து தான் சங்கரி கேட்டது.

ஆனால் அதற்க்கு சங்கரலிங்கம்… “வீட்டிலேயே தீர்க்காத ஒரு பெரிய பஞ்சாயத்து இருக்கு…அது தான் உங்க எல்லோரையும் அழச்சேன்.” என்று சொன்ன தந்தையின் முகமும், சொன்ன குரலின் வேறு பாட்டையும் அப்போது தான் கவனித்த சங்கரி தன் மகனை  பார்த்து…

“என்ன…?” என்பது போல் சைகையில் வினாவினார்.

அதை கவனித்த சங்கரலிங்கம்… “இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லோருக்கும் எல்லாம் தெரிஞ்சிடும்மா…” என்ற அவர் பேச்சில்..

“அப்பா நீங்க என்னமா எல்லாத்தையும் கவனிக்கிறிங்க…அது தான் ஊருக்குள்ள ஒன்னுன்னா எல்லோரும் உங்களை தேடி வர்றாங்க.” என்று எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல் பேசி வைத்தார் சங்கரி

“ஊரை பார்த்து என்னம்மா பிரயோசனம். வீட்டை பாக்காம விட்டுட்டனே…” என்று சொன்ன அவர் பேச்சில் அளவுக்கு  மீறிய வேதனை தெரிந்தது.

“அப்பா என்னப்பா..?ஏன் இவ்வளவு கவலையா பேசுறிங்க.” என்று தன் தந்தையிடம் கேட்ட சங்கரி…அங்கு விடை கிடைக்காத்தால்…

தன் மகனிடம்… “நியாவது சொல்லேன் வீரா…” என்று கேட்க… எதுவும் சொல்லாது அவனும் அமைதி காத்தான்.எது என்றாலும் அது தன் தாத்தாவின் மூலமே வரட்டும்.

தாத்தா சொன்னது போல் இதை இப்படியே விட்டால்..யாருக்கும் உண்மை தெரியாது கூட போய் விடும். அவருக்கும் வயதாகிறது. நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம். பின் நான் உண்மை சொன்னாலும், அதை நம்புபவர்கள் எத்தனை பேர் என்று சொல்ல முடியாது.

அதனால் எது என்றாலும் தன் தாத்தா சொல்லட்டும். என்று அமைதியாகி விட்டான். ‘சொல்ல மாட்டானே…அப்படியே அவன் தாத்தா மாதிரியே அழுத்தம்’  என்று சங்கரி தன் மகனை தன் மனதில் அர்ச்சனை செய்துக் கொண்டு இருந்தார். 

எப்போதும் போல் காலையில் உனவு உண்ண சாப்பிடும் டேபுளுக்கு வந்த இருமகன்களும் இருமருமகள்களும்…அங்கு சங்கரியின் குடும்பத்தோடு , தங்கள் குடும்ப வக்கீலும் அவர்களோடு பெரிய மனிதர்கள் போல இருவரும் இருப்பதை பார்த்து நான்கு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பின் அந்த நான்கு பேரும் சங்கரலிங்கம் எதிரில் அமர்ந்துக் கொண்டனர். மற்றவர்கள் மட்டும் இருந்து இருந்தால், அவர்கள் நமக்கு என்ன என்று தான் சாப்பிட சென்று இருப்பர். ஆனால் குடும்ப வக்கீலை பார்த்ததும் தான் அங்கு வந்து அமர்ந்ததே… 

தன் இருமகன் இருமருமகள்களையும் பார்த்த சங்கரலிங்க…சரி ஆராம்பித்து விடலாம் என்று… சமையலறை நோக்கி சென்றவர்…அங்கு தன் முந்தியில் நெற்றியை துடைத்த வாறே காலை உணவிற்க்கு அரக்க பறக்க சமைத்துக் கொண்டு இருந்த வரலட்சுமியிடம்…

“அம்மா  முக்கியமான விசயம் பேசனும். போய் உன் புருஷனை கூட்டிட்டு வாம்மா…” என்று சொன்ன மாமனாரை வரலட்சுமி என்ன என்பது போல் ஆசரியத்தோடு பார்த்தார்.

திருமணம் முடிந்து இத்தனை வருடத்தி,ல் சங்கரலிங்கம், சமையலறையில் இது வரை கால் எடுத்து வைத்தது கிடையாது.அதே போல் தான் தன்னிடம் நேருக்கு நேர்  தன் மாமனார் எப்போது பேசினார் என்பது போல் தான் அவர் பேச்சு இருக்கும். தன்னிடம் மட்டும் இல்லை மற்ற மருமகளிடமும் கூட அவர் அநாவசியமாக பேச மாட்டார்.

அனைவரிடமும் வார்த்தைகளை அதிகம் விடாது.  கச்சிதமாய் சொல்ல வேண்டிய விசயத்தை ரத்தின சுருக்கமாக சொல்லி விடுவார். அப்படி பட்ட தன்னை தேடி சமையலறைக்கே  வந்து தன்னிடம் பேசுகிறார்.

என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே கூடத்தை கடக்கும் போது தான் அங்கு அனைவரும் அமர்ந்து இருப்பதையே வரலட்சுமி கவனித்தது.

அதுவும் தன் இரு மச்சினர்களும் ஒருகத்திகளு,ம் என்ன எப்படி நடந்தாலும் சாப்பிடும் நேரத்தை தவற விட மாட்டார்கள்.

அதனால் தான் அய்யோ வீட்டு ஆட்கள் வரும்  நேரமாகி விட்டதே என்று, அவசர அவசரமாக  சமைத்துக் கொண்டு இருந்தது. அப்படி பட்டவர்கள் அவர்கள் சாப்பிடும் நேரம் கடந்தும் இங்கு வந்து அமர்ந்து இருக்கிறார்கள்.

கூடவே அமர்ந்து இருந்த சங்கரியின் குடும்பத்தை பார்த்து தான்  வரலட்சுமிக்கு  பதட்டம் அதிகரித்தது. அதுவும் தன் மகள் வரா,து அவள் மாமியார் மாமனார் அவளின் கணவரோடு காலையில் வந்து இருப்பது பார்த்து போன வாரம் திருமணம் முடிந்து போன பெண்ணை பற்றி…

 என்ன என்னவோ நினைத்து கற்பனை செய்துக் கொண்டவரின் முகம் கலவரத்தை பூசிக் கொள்ள…தன் அத்தை சமையலறையில் இருந்து வரும் போதே அவரையே கவனித்துக் கொண்டு இருந்த வீரேந்திரன் அவரின் கலவையான முக குழப்பத்தில்…

“அத்தை ஒன்னும் இல்ல. தாத்தா வர சொன்னார். அதான் வந்தோம். உங்க மகள்  அவள் வீட்டில் நல்லா இருக்கா…” என்று சொல்ல வேண்டியதை சுருங்க சொல்லி வரலட்சுமியின் பதட்டத்தை  போக்கினான் வீரேந்திரன்.

வீரேந்திரன் பேச்சு கேட்டதும் தான், வரலட்சுமியின் முகத்தில் புன்னகையே வந்தது. அனைவரையும் பார்த்து பொதுவாக… “வாங்க.” என்று அழைத்தவர்.

இவர்கள் வந்து இருக்கிறார்கள் என்று யாராவது சொல்லி இருந்தால், முதலில் குடிக்க ஏதாவது கொடுத்து இருக்கலாமே…இவர்கள் வந்து எவ்வளவு நேரம் ஆகிறது என்று  கூட தெரியாது இருந்து விட்டனே…

இப்போது தன் கணவரை அழைக்க தங்கள் அறைக்கு செல்வதா …இல்லை இவர்களுக்கு ஏதாவது கொடுக்க சமையல்கட்டுக்கு செல்வதா என்று குழம்பியவளை தெளிய வைத்தது சங்கரலிங்கத்தின் பேச்சு…

“கமலாவை கூப்பிட்டு விட்டு, இவங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வாம்மா…” என்று சொன்னவரின் பேச்சை கேட்டு முதலில் தன் கணவரை அழைத்து வந்தாள்.

கமலக்கண்ணன் எப்போதும் இது போல் அழைத்தாலே அது என்னவோ அவர் முகத்தில் பதட்டம் தன்னால் குடிக் கொண்டு விடும். அதுவும் இன்று வீட்டு ஆட்களோடு வெளியாட்களும் இருக்க…கொஞ்சம் தயங்கிய வாறே தான் கமலக்கண்ணன் அங்கு வந்தார்.

சங்கரலிங்கம் பக்கத்தில் அமர்ந்து இருந்த வீரேந்திரன் தன் மாமாவை பார்த்த்தும் எழுந்து நின்று… “நீங்க இங்க உட்காருங்க மாமா.” என்று  சைகையில் சொல்லி  அவருக்கு இடம்  கொடுத்து விட்டு, தான் பெற்றோர்கள் பக்கத்தில் அவன் அமர்ந்து விட்டான்.

“நீ பொழச்சிப்ப டா…” என்று சொன்ன சங்கரியின் கிண்டல் பேச்சில் சிரம் தாழ… “எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் தாயே…” என்று பணிவுடன் வணங்கி சொன்னான்.

இவர்களின் பேச்சு இப்படி குசு குசு என்று  நடந்து கொண்டு இருக்க…சங்கரலிங்கம் தன் இரண்டாம் மகன் தில்லையிடம் … “நீ போய் உங்க அம்மாவை அழச்சிட்டு வா.” என்று சொன்னவர்…

தன் மூன்றாம் மகனிடம்ம். “நீ போய் வாசு வசீகரன்…அப்புறம் வசுவையும் கூட்டியா…” என்று சொன்னவரின் பேச்சை செய்தாலும், அனைவரின் மனதிலும்..எதோ பெரிய விசயம் நடக்க போகிறது என்று மட்டும் தெளிவாக புரிந்து.

ஆனால் அது என்ன…?என்று மட்டும் நம் வீரேந்திரனை தவிர யாருக்கு புரியாது, அது என்ன என்று அறியும் ஆவளில் காத்திருக்க..வரலட்சுமி கொடுத்த காபியை அனைவரும் குடித்து முடிக்கும் வரை அமைதி காத்தவர்…

வரலட்சுமியிடம்… “நீயும் உன் புருஷன் பக்கத்தில் உட்காரும்மா…” என்ற சொல்லி தயங்கியவாரே உட்காருவதா….?வேண்டாமா என்று  யோசித்து இருந்தார்.

இது வரை அனைவரின் முன்னும் வரலட்சுமி அமர்ந்தது கிடையாது. அமராதே என்று இது வரை யாரும் சொல்லியது இல்லை. ஆனால் அவர்கள் பார்வையே நீ எல்லாம் எனக்கு சமமா என்று சொல்லாமல் சொல்லும்.

 அதனால் வரலட்சுமி எப்போதும் வீட்டு  வேலை முடிந்ததும் தன் அறையில் முடங்கி கொள்வார். இன்று தன் மாமனார் உட்காரு என்று சொன்னதும், கொஞ்சம் தயக்கத்துடன் தான் வரலட்சுமி நின்று கொண்டு இருந்தார்.

“நான் சொல்றேன் உடகாருன்னு.” என்பது போல் சங்கரலிங்கத்தின் பேச்சில் சடாரென்று தன் கணவனின்  பக்கத்தில் அமர்ந்துக் கொண்டார்.

இதை எல்லாம் கூர்மையுடன் பார்த்திக் கொண்டு இருந்த தெய்வநாயகி, அதிசயமாக இன்று வாய் திறக்காது அமைதியாக தன் கணரின் எதிரில் அமர்ந்துக் கொண்டார்.

இரு மருமகள்களுக்கு இது ஒரு பெரிய ஆச்சரியம் தான்… “என்ன இது அத்தை வாய் திறக்கமா இருக்காங்க…?” என்று தன் ஒரவத்தியும் சகோதரியுமான கீதாவிடம்  காதில் ஓத….

“எனக்கும் அது தான் ஆச்சரியமா இருக்குக்கா… ஆனாலும் பார்த்தியா ஒரு வாரமா அதாவது கல்யாணம் அப்போவிலிருந்து எதுவும் பேசாம அமைதியாவே இருக்காங்க..என்ன விசயமா இருக்கும்.” என்று பதிலுக்கு கீதா தன் சகோதரியிடம் தங்கள் மாமியாரை பற்றி பேச…

அப்போது தான் அந்த இடத்திற்க்கு வந்த வாசுவையும், வசுந்தாரவையும் பார்த்த கீதா… “எல்லாம் நம்ம குடும்ப மானத்தை வாங்கினதுங்கல நினச்சி தான் அத்தை இப்படி ஆகி இருப்பாங்க.” தன் மகனையும், மருமகளையும் முறைத்து பார்த்த வாறே கீதா சொன்னார்.

வசுந்தராவுக்கு இவர்களின் பேச்சு காதில் விழவில்லை என்றாலும், அவர்கள் தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்று அவர்கள் பார்த்த ஏளன பார்வையிலேயே புரிந்துக் கொண்ட வசுந்தரா..அங்கு ஓரமாக நின்றுக் கொண்டாள்.

இந்த சமயத்தின் மயக்கம். அதுவும் ஒரு வாரமாய் அவளாள் இங்கு சரி வர சாப்பிட முடியாது போயிற்று. தன்னை பார்த்தாலே ஏதோ பார்க்க கூடாததை பார்த்தது போல் அனைவரின் முகத்திலும் வந்து போகும் அந்த அருவெருப்பான பார்வைக்கு பயந்தே…கூடிய மட்டும் தன் அறையிலேயே அவள் முடங்கி கொள்வாள்.

சாப்பிட கூட அவள் கீழே வர மாட்டாள். வரலட்சுமி தான்.. “இந்த சமயத்தில் வயித்தை காய போட கூடாதும்மா…வந்து இரண்டு வாய் சாப்பிடு. நாளையில் இருந்து உனக்கு என்ன சாப்பிடனும் என்று தோனுதோ சொல். நான் செஞ்சி வைக்கிறேன்.” என்ற வரலட்சுமியின் பேச்சில் வசுந்தராவின் கண்ணில்  இருந்து கண்ணீர் தன்னால் வர… அவர் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டார். 

“இப்போ எதுக்கும்மா அழற…நீயும் எனக்கு மணி மாதிரி தான். உனக்கு செய்வதில் என்ன இருக்கு…?” என்ற அவர் கேள்வியில்..

‘ஆனால் எனக்கு  இருந்ததே… என் மனதில் ஆயிரம் வஞ்சம் இருந்ததே…’ என்று  வரலட்சுமியின் முன் கூனி குருகியவளாய் தான் இருந்தாள்.

வசுந்தரா இப்போது இங்கு வந்து நிற்க்கும் அளவுக்கேனும் தெம்பு இருக்கு என்றால், தான் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காது, தன் அறைக்கே  உணவை எடுத்து வந்து கொடுத்த வரலட்சுமியால் தான்.

 அதனால் வசுந்தரா யாரின் முகத்தையும் பார்க்க முடியாது தலை குனிந்து ஒரு ஓரமாய் நின்றுக் கொண்டாள். வாசுதேவன் எப்போதும் போல் தன் தம்பி வசீகரன் பக்கத்தில் அமர்ந்து கொள்ள…

சங்கரலிங்கம் தன் பேச்சை தொடங்கினார்… “நான் இப்போ உயில் எழுத தான் நம்ம குடும்ப வக்கீலை கூப்பிட்டேன்.” என்று சொன்னதும்…

அங்கு ஒரு குண்டூசி  விழுந்தால் கூட சத்தம் எழும் அளவுக்கு, அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாகி விட்டனர்.

சிறிது நேரம் கழித்து தெய்வநாயகி மட்டும் ஒரு வாரம் சென்ற நிலையில் தன் கணவர் முகத்தை பார்த்து…

 “இப்போ இதுக்கு என்ன அவசியம்…?” என்று கேட்டார்.

“இப்போ எழுதாம எப்போ எழுத சொல்ற தெய்வா…எனக்கு வயசு போக போக ஏறுது…? குறையுதா…? இன்னும் கேட்டா இதுவே அதிக காலம் கடத்தி விட்டேன்னு தான் எனக்கு தோனுது.” என்று சொன்னதும் அதற்க்கு அடுத்து தய்வநாயகி தன் கணவரிடம் வாய் திறந்து பேசவில்லை என்றாலும்,

மனதில் அப்போ அந்த விசயம் தெரியல போல…தெரிஞ்சி இருந்தா இப்படி சாதரணமாய் தன்னிடம் பேசி இருக்க மாட்டாரே என்று  நினைத்தவராய் ஒரு வாரம் பயம் அகல நிமிர்ந்து உட்கார்த்தார்.

வக்கீலை பார்த்து… “ம்..நேத்து எழுத சொன்னது போல தானே எழுதினிங்க…?” என்று கேட்டதற்க்கு அந்த குடும்ப வக்கீல்..

“ஆமாம் அய்யா..நீங்க சொன்னாப்பலவே எழுத்திட்டேன்.” என்று சொன்னவர்.

“நீங்க வேணா ஒரு தடவை படிச்சி பார்த்திடுங்கலே…” தன்னிடம் உள்ள கத்தை காகிதத்தை சங்கரலிங்கம் பக்கம் நீட்டினார்.

“தேவையில்லை. நீங்கல அனைவரும் கேட்கும் படி படிங்க…” என்று சொன்னதும்…

தென்னந்தோப்பு …மாந்தோப்பு … விவசாயம் விலைநிலைங்களோடு அரிசி ஆலை…என்று  பட்டியல் இட்டு கொண்டு வந்தவர்…

“இது எல்லாம் சங்கரலிங்கம் அய்யாவோட மூதையார் சொத்து…அதை தன் மூன்று மகன்களுக்கும், ஒரு மகளுக்கும்  சமமாய் நான்கு பங்காய் பிரித்து கொடுக்கிறார்.” என்று அந்த வக்கீல் சொல்லி முடிக்கவில்லை…

அதற்க்குள் தெய்வநாயகி சங்கரலிங்கத்திடம்… “இப்போ எதுக்கு நாளா போடனும். ஊமையனுக்கு என்ன தெரியுமுன்னு அவனுக்கு பாகம் கொடுக்குறது. மூனா போட்டா போதும்.  கடைசி வரை ஊமையனை அவனுங்க தம்பி சோறு போடுவாங்க.” என்ற வார்த்தையில் வரலட்சுமியின் கண்களில் கண்ணீர் சுரந்தது.

வழிந்த கண்ணீரை  துடைத்துக் கொண்டே தன் கணவனை திரும்பி பார்த்த வரலட்சுமிக்கு இது தான் தோன்றியது… “நல்ல வேல இவருக்கு காதும் கேட்காதது. “ என்று நினைத்துக் கொண்டார்.

“தெய்வா என் நான்கு பசங்களுமே ஒருவரை நம்பி ஒருவர் இருக்க கூடாது. நான் முடிவு செய்தது தான்.  பரம்பரை சொத்தை நாளா தான் பங்கு போட பட வேண்டும்.” என்று சொன்னவரிடம்… 

“அப்போ ஒன்னு வேணா செய்யுங்க. ஊமையன் சொத்தை வீராவின் பேரில் எழுதி வெச்சிடுங்க. அவ மக புருஷனுக்கு தானே போகுது.” என்று சொன்னதும்…

அது வரை அமைதியாக அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்த வீரா தெய்வநாயகியின் இந்த பேச்சுக்கு மட்டும்…

“ஏன் அம்மத்தா…ஏன்..உங்களுக்கு இந்த கொல வெறி…?” என்று கேட்டான்.

“நீ என்னை மதிக்கலேன்னாலும், நான் உனக்கு நல்லதை தான் செய்யிறேன். நான் சொல்ற சொத்து மதிப்பு எவ்வளவுன்னு நான் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை.” என்று சொன்ன தெய்வநாயகியின் பேச்சை தடுத்து நிறுத்திய  வீரேந்திரன்…

“சொத்து மதிப்பை பார்த்து என்  சிட்டு  என் மீது வைத்திருக்கும் மதிப்பை இழக்க நான் தயாராக இல்லை அம்மத்தா…”

“இதில்  உன் மதிப்பு கெட என்ன இருக்கு…?” என்று கேட்ட தெய்வநாயகிக்கு…

“என் சிட்டு நம்ம சொத்துக்காக தான் நம்மல கல்யாணம் செய்து இருப்பானோ தன் கணவன்னு லேசா…ரொம்ப லேசா அவ மனசுல எங்காவது ஒரு மூலையில் நினச்சா கூட…” அவன் பேச்சுக்கு இடைமறித்த பேச்சாய்…

“நான் எந்த நிலையிலும் உங்களை அது போல நினைக்க மாட்டேன்  வீரா அத்தான்.” என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்திற்க்கு வந்தாள் மணிமேகலை.

 

  

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!