அத்தியாயம்…24
“நான் உங்கல எப்போவும் அப்படி தப்பா நினைக்க மாட்டேன்.” என்று சொல்லிக் கொண்டு வந்த மணிமேகலையை அந்த நேரத்தில் வீரேந்திரன் அங்கு எதிர் பார்க்கவில்லை.
‘இப்போது தான் இங்கு இருப்பதா…?இல்லை எதாவது காரணம் சொல்லி தன் மனைவியை இங்கு இருந்து அழைத்துக் கொண்டு செல்வதா…?’ என்று மனதில் யோசனை ஓட… வீரேந்திரன் சங்கரலிங்கத்தை பார்த்தான்.
சங்கரலிங்கமோ வீரேந்திரனின் பார்வையின் அர்த்தம் புரிந்துக் கொண்டவராய்… “வா மணி வா.. இங்கு நீ மட்டும் இல்லையேன்னு தான் குறையா இருந்தது பரவாயில்ல இப்போ நீயா வந்ததும் நல்லதுக்கு தான்.” என்று சொன்னவர்.
“உன் புருஷன் பக்கத்தில் உட்காரும்மா…” என்று சங்கரலிங்கம் சொல்லி முடிக்கும் முன்னவே வீரேந்திரன் தான் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் நகர்ந்து அமர்ந்து தன் மனைவி அமர்வதற்க்கு இடம் கொடுத்தான்.
மணிமேகலை கணவர் பக்கத்தில் அமர்ந்த வாரே அப்போது தான் அங்கு அனைவரும் கூடி இருப்பதை பார்த்து என்னவாக இருக்கும் என்று யோசனையுடன் தன் கணவனை திரும்பி பார்த்தாள்.
அந்த பார்வைக்கு பதிலாய், அவன் கண் திறந்து மூடி அமைதி காக்கும் படி சொன்னது அவளுக்கு ஆறுதலாய் இருந்தாலும், ஏதோ பெரிய விசயம் பேச தான் இங்கு வந்து இருக்காங்க.
அனைவரும் இங்கு இருக்க தன்னை மட்டும் யாரும் தன்னை கூப்பிடவில்லையே என்பதை விட..
வீர் அத்தானும் தன்னை அழைக்கவில்லையே என்பது தான் அவளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. எப்போதும் இவ்வீட்டில் தங்கள் நிலை இப்படி தான். அது அவளுக்கு நன்கு தெரிந்த விசயம் தான்.
இதோடு எல்லாம் இந்த வீட்டில் அவள் அவமான பட்டு இருக்கிறாள். அதை எல்லாம் பார்க்கும் போது இது எல்லாம் ஒன்றும் இல்லை தான்.
ஆனால் இன்று தன் கணவனே தன்னை அழைக்காது தவிர்த்தது தான் அவளை ஏதோ செய்தது. இருந்தும் ஒன்றும் பேசாது அமைதிகாக அங்கு நடப்பதை பார்க்க தொடங்கினாள்.
சங்கரிக்கு மருமகள் வரும் போது தன் மகனை விட்டு கொடுக்காது பேசியது. பின் அங்கு அனைவரும் அமர்ந்து இருப்பதை யோசனையுடன் பார்த்துக் கொண்டே தன் கணவனை பார்த்தது.
அதன் பின்னான அவளின் வேதனை முகம். பின் அதை மறைப்பது போல் செயற்க்கையாக அவள் முகத்தில் தோன்றிய புன்னகை அனைத்தையும் பார்த்திருந்தவருக்கு என்ன தோன்றியதோ…
மணிமேகலையை பார்த்து… “நானும் அப்பா உடனே வான்னு சொன்னதால் தான் வந்தேன்மா…இங்கு வந்த பார்த்த பின் தான் என்னவோ இருக்குன்னு உட்கார்ந்துட்டேன்.”
தான் உனக்கு தெரிய படுத்தாதிற்க்கு காரணத்தை சொன்ன சங்கரி தொடர்ந்து… “வீராவையும் தப்பா எடுத்துக்காதே மணி. அவன் உன்னை கூப்பிடலேன்னா..அதுக்கு கண்டிப்பா ஏதாவது காரணம் இருக்கும்.” என்று தன் மகனை நன்கு அறிந்தவராய் சொன்னார்.
இப்போதும் மணிமேகலை தன் கணவனை திரும்பி பார்த்தாள் தான். ஆனால் அந்த பார்வையில் வேதனையின் சாயல் தெரியாது…
‘நான் இருக்கவா…?போகவா…? என்று அனுமதி கேட்கும் பார்வையை பார்த்தவளுக்கு… “இரு சிட்டு…இங்கு எது பேசினாலும் உன் மனச மட்டும் விட்டுட கூடாது. என்ன புரியுதா…?” என்று சொல்லிக் கொண்டே அவளின் கை மீது தன் கை வைத்து…
“எதுன்னாலும் நான் இருக்கேன்.” என்பது போல் தைரியம் சொன்னான்.
வீரேந்திரனின் பேச்சுக்கு மணிமேகலை பதிலாய் அவனுக்கு புன்னகை புரிந்தாலும், என்னவாக இருக்கும் என்ற யோசனையே மனதில் குழப்பிக் கொண்டு இருந்தது.
அவனின் யோசனையை அவர்கள் குடும்ப வக்கீல் … “நான் மிச்சத்தையும் படிச்சிட்டுங்கலா அய்யா…?” என்ற அந்த வக்கீல் அனுமதி கேட்க…
“படியும்.” என்பது போல் சங்கரலிங்கம் சைகை செய்தார்.
இவர்களின் குடும்ப சண்டையில் படிப்பதை நிறுத்திய அந்த குடும்ப வக்கீல்… மீண்டும் இன்னொரு காகிதத்தை எடுத்து…
“சங்கரலிங்கம் தன் சுய உழைப்பில் வந்த சொத்தான திரையரங்கை தன் மனைவி தெய்வநாயகியின் பெயரில் பதிவு செய்கிறார்.” என்று சொன்னதும்…
“அப்போ அந்த கல்யாண மண்டபம்…” என்று மூணாவது மகன் சஞ்சீவன் கேட்க…
“ஆமா கல்யாண மண்டபமே இதுல வரலையே…” என்று இளைய மகனுக்கு ஒத்து ஊதுவது போல இரண்டாவது மகனும், இருமருமகள்களும் கேட்டனர்.
இப்போது தெய்வநாயகியின் பார்வை கூர்மையுடன் தன் கணவனின் முகத்தில் படிந்து இருக்க… அனைவரையும் பார்த்த சங்கரலிங்கம்…
“அதை பத்து வருடம் முன்னவே என் மூத்த மகன் கமலக்கண்ணன் பெயரில் எழுது வைத்து விட்டேன்.” என்று சொன்னது தான் தாமதம்…
“என்ன மாதிரி காரியம் செஞ்சி வெச்சி இருக்கிங்க…உங்களுக்கு புத்தி கித்தி பேதலிச்சி போயிடுச்சா…? ” என்பது போல் தொடர்ந்து தான் என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று தெரியாது தன் கணவரிடம் சத்தம் போட்டார்.
அந்த வீட்டில் தெய்வநாயகியின் குரல் தான் எப்போதும் ஓங்கி இருக்கும். ஆனால் அந்த குரல் தன் கணவன் அந்த இடத்தில் இல்லாத வரை தான். கணவர் முன் எப்போதும் தெய்நாயகி அடங்கி தான் நடப்பார் என்பதை விட…அவருக்கு உண்டான மரியாதையை அந்த வீட்டில் அவருக்கு கெடாது பார்த்துக் கொள்வார்.
அதே போல் தான் சங்கரலிங்கமும்…ஊருக்கு நாட்டாமை செய்பவர் வீட்டில் மனைவி சொல்வது தான் சரியாக இருக்கும் என்று விட்டு விடுவார். தான் வெளியில் இருக்க வீட்டில் என்ன நடக்குது…?ஏது நடக்குது…? என்று தன் மனைவிக்கு தானே தெரியும்.
அப்போ வீட்டின் முடிவை மனைவி எடுப்பது தானே சரியாக இருக்கும் என்பது அவரின் எண்ணம்.
ஆனால் அந்த எண்ணம் பத்து வருடம் முன் பொய்த்து போய் விட…தன் மனைவியை அதை பற்றி கேள்வி கேட்காது இதோ இன்று வரை அமைதி காத்திருக்கிறார்.
அதற்க்கு முதல் காரணம் மணிமேகலை…பின் ஊர் சனம்…முதல் பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டது. அடுத்து ஊர்..ஊரை பார்த்தால் வீட்டுக்கு துரோகம் இழைத்தவன் ஆகிவிடுவேன்.
இது இப்போது நான் சொல்லவில்லை என்றால்… தங்கள் குடும்பத்தையே நம்பி வந்த மூத்த மருமகளுக்கு அநியாயம் செய்தவனாகி விடுவேன். என்று நினைத்து தான் இன்று அதற்க்கு ஒரு முடிவு கட்ட அனைவரையும் கூட்டியது.
ஆனால் அனைவரின் முன்னும் தன் மனைவி பேசிய பேச்சுக்கு, பதில் பேச்சு பேசாது அமைதியாக தான் மனைவி முகத்தை பார்த்திருந்தார் சங்கரலிங்கம். அப்போது தான் தெய்வநாயகி தான் மட்டும் பேசி கொண்டு இருக்க தன் கணவன் எதுவும் பேசாது அழுத்தமாக தன்னை பார்த்துக் கொண்டு இருப்பதை உணர்ந்தவர்.
‘என்ன செய்து விட்டேன்…?இப்போ எதுக்கு நான் இப்படி கத்தினேன்…?’ என்று தன்னையே கடிந்துக் கொண்டவராய் அமைதியாக அமர்ந்தாலும், மனதில் என்ன காரியம் செய்து வைத்து இருக்கார்.
மனைவியிடம் சொல்லாது சொத்தை எழுதி வைத்து விடுவாறா…அதுவும் மத்த பையனுக்கு என்றால் கூட பரவாயில்லை. ஊமையனுக்கு கடவுளே…என்ன மாதிரி சொத்து அது.
ஒரு திருமணத்திற்க்கு ஒரு நாள் வாடகையாக குறைந்தது ஒரு லட்சம் விட கூடியது. மாதத்திற்க்கு பத்து முகூர்த்தம் என்றாலும், மாதம் பத்து லட்சம் வருமானம் வரும் சொத்து.
கல்யாணம் வைக்காத மாதத்தில் இந்த திருப்பூர் காரன்களுக்கு ஒரு பத்து நாள் வாடகை விட்டால், அதில் ஒரு கணிச்சமான தொகை வரும். இப்படி செய்து விட்டாரே…என்று நினைத்தவருக்கு நெஞ்சு ஆரவில்லை.
அதன் வெளிப்பாடாய் முன் போல் சத்தம் போடவில்லை என்றாலும்…
“ஊருக்கு எல்லாம் நியாயம் செல்றவரு…இவ்வளவு பெரிய விசயம் செய்யும் போது கட்டினவ என் கிட்ட சொல்லனுமுன்னு உங்களுக்கு தோனலையா…?” என்ற தெய்வநாயகியின் கேள்விக்கு…
சிரித்துக் கொண்டே… “இப்போ தான் நீ சரியா பேசி இருக்க தெய்வா…மனைவி கிட்ட சொல்றது என்ன…? அவங்க கிட்ட ஆலோசனை கூட கேட்கனும். அது தான் நியாயமும் கூட… கண்டிப்பா சொல்லனும். நான் உன் கிட்ட சொல்லி இருக்கனும்.” என்று ஒரு தீர்மானத்துடன் பேசிக் கொண்டு வந்த சங்கரலிங்கம் தன் பேச்சின் முடிவில்…
“இது எல்லாம் ஒரு உண்மையான மனைவிக்கு, கணவன் கொடுக்கும் மதிப்பு…ஆனால் அந்த மதிப்பை நான் உனக்கு கொடுக்க முடியாது பாரு… ஏன்னா…நீ என் கிட்ட உண்மையா இல்ல.” என்ற பேச்சில்…
திரும்பவும் கோபம் கொப்பளிக்க… “என்ன கூறு கெட்ட தனமா பேசிட்டு இருக்கிங்க…நான்..நான்…உண்மையா இல்லையா…?” என்று மூச்சு வாங்க கேட்டார்.
“ஆமா..நீ என் கிட்ட உண்மையா இல்ல…சொல்…நம்ம நாளு பசங்களுக்கும் அப்பா நான் தானா…?” என்ற அவர் கேள்வியில் அனைவரும் வாய் அடைத்து போயினர்.
அதுவும் மூன்று மருமகள்களும் கையை ஒன்று போல் வாய் அடைத்துக் கொள்ள.. சின்னவர்கள் என்ன…இது பேச்சு என்பது போல் சங்கரலிங்கத்தை அருவெருத்து பார்க்க…இது வரை தந்தையின் முன் பேசாது இருந்த இரண்டு மகன்களும் ..
“என்ன பேச்சு பேசுறிங்கன்னு புரிஞ்சி தான் பேசுறிங்கலா…? வயசு ஆனா புத்தி பேதலிச்சி போயிடுமுன்னு கேள்வி தான் பட்டு இருக்கேன். ஆனா இப்போ தான் அதை நேருல பாக்குறேன்.” என்று அவரின் வயதை கூட பார்க்காது வைய்தனர்.
சங்கரியும் அவள் கணவனும் மட்டும் ஒன்றும் புரியாது சங்கரலிங்கத்தை பார்த்தனர். பின் தன் மகனையும் பார்த்தனர். மகனின் முகத்தில் தெரிந்த எதோ ஒன்றில் அவர்கள் மட்டும் சங்கரலிங்கத்தை ஒன்றும் பேசவில்லை.
கமலகண்ணன் தலை குனிந்து அமர்ந்து இருந்ததால், எப்போதும் போல் எதுவும் கேட்காது இருந்ததால்…அப்படியே அமர்ந்து இருந்தார்.
மணிமேகலை தன் கணவனிடம்… “என்னங்க…?” என்பது போல் கேட்டாள்.
“சும்மா பாரு.ஆனா நீ தான் தைரியமா இருக்கனும். உங்க அம்மா அப்பாவின் தைரியமே நீ தான். புரியுதா சிட்டு…” என்று கேட்க…
“அப்போ …அப்போ…” என்று அவள் தன் நெஞ்சின் மீது கை வைத்து ஏதோ கேட்க தொடங்கினாள். ஆனால் அவளாள் அந்த கேள்வியை கேட்க முடியவில்லை. அவளுக்கும் அவள் அப்பா அம்மாவுக்கு, அவள் அப்பத்தா நியாயம் செய்யவில்லை தான்.
ஆனால் இப்படி அவள் நினைத்து கூட பார்க்க முடியாது. அது போல் வார்த்தையினால் கேள்வியை அவளாள் கேட்க முடியாது. கேட்க வந்து கேட்க முடியாது வாய் மூடிக் கொண்டு இருந்தவளின் கை பிடித்து …
“அமைதி சிட்டு. அமைதி. புரியுதா…நான் இருக்கேன். எல்லாத்துக்கும் நான் இருக்கேன்.” என்று சொன்னவனின் பேச்சை கூட உள்வாங்கி கொள்ள முடியாத நிலையில் மணிமேகலை இருந்தாள்.
தெய்வநாயகிக்கோ தன் கணவனின் பேச்சில் ரத்தம் கொதிக்க… “இந்த பேச்சு யாரு பேசுவா தெரியுமா…எதுக்கும் லாயிக்கி இல்லாதவன்…புரியுதுங்கலா எதுக்கும் லாயிக்கி இல்லாதவன் தான் பேசுவான்.” மூக்கு விடைக்க பேசிய தெய்வநாயகியின் பேச்சில் நியாயத்திற்க்கு சங்கரலிங்கத்திற்க்கும் கோபம் வந்து இருக்க வேண்டும்.
ஆனால் சங்கரலிங்கம் கோபப்படாது… “அது தான் எத்தனைக்கு நான் லாயிக்கானவன்னு தெரியனும் தெய்வா…சொல். நீயே சொல்.” என்று சொன்னவர்..
பின்… “சரி நான் நேரிடையாகவே கேட்கிறேன். நம்ம மூத்த மகனுக்கு நான் தான் அப்பாவா…?” என்று கேட்டார்.
இவ்வளவு நேரம் தலை குனிந்து இருந்த கமலக்கண்ணன்..அங்கு நடக்கும் சூழ்நிலை ஏதோ சரியில்லாது அப்போது தான் நிமிர்ந்தார். அதுவும் நிமிர்ந்தவர் சரியாக சங்கரலிங்கம்… “மூத்த மகனுக்கு நான் தான் அப்பாவா…?” என்று கேட்கும் போது சரியாக பக்க வாட்டில் அமர்ந்து இருந்த தன் தந்தையின் பக்கம் பார்வையை செலுத்தியவருக்கு, அவர் சொன்ன வார்த்தைகள் சரியாக அவர் உதட்டசைவின் மூலம் தெரிய…
அமர்ந்து இருந்தவர் எழுந்து நின்றுக் கொண்ட கமலக்கண்ணனுக்கு வியர்வையில் முகம் முத்து முத்தாக பூக்க…அதை துடைக்க கூட தோனாது நின்று விட்டார்.
சங்கரலிங்கம் கமலக்கண்ணனை தன்னை பார்க்கும் படி செய்து … “சொல் தெய்வா…கமலக்கண்ணன் உன் வயிற்றில் பிறந்தவனா…?” என்று நேரிடையாக கேட்டார்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.