Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 17 2

 

 

வரு கோவிலுக்கு வந்து பிள்ளையாருக்கு சிறு குடத்தில் நீர் எடுக்க படித்துறையில் நின்ற போது அங்கு பிரதாப் நீச்சலடித்துக் கொண்டிருந்தான். தினமும் வருவை அந்நேரத்தில் அங்குக் கண்டவன் , அவளிடம் தன் விருப்பத்தை சொல்லிவிடும் முயற்சியில் இருந்தான். அதிகமாக அவள்  கண்ணில் படும்படி நின்றாலும் அவள் கண்டுக்கொண்டது போலவே தெரியவில்லை. எப்படியாவது பேசிவிட முயற்சித்துக் கொண்டிருந்தான்.

 



Advertisement

இந்நிலையில் முகூர்த்தப் புடவை எடுக்கப்படும் நாளும் வர , விக்ரம் குடும்பமும் வரு குடும்பமும்  மட்டுமல்லாது அந்த ஊரின் முக்கால்வாசி உறவுகளையும் ஒரு பேருந்தில் அழைத்துக் கொண்டு நெல்லையில் புகழ்ப் பெற்ற ஜவுளிக் கடைக்குச் சென்றனர்.

 

வீட்டு முன் நின்ற கார்களையும் , பேருந்தையும் கண்ட வரு கனிப் பாட்டியிடம்,

Advertisement

 

Advertisement

“பாட்டி …. என்ன இது இவ்வளவு பேர் கல்யாணப் புடவை எடுக்கப் போறோமா … ”

 

” இந்த ஊருல முக்கால்வாசிப்பேர் நம்ம சொக்காரங்க , அவுகள அழைக்காம போனோம்… அவ்வளவுதான் , உங்க பெரியப்பன் கல்யாணத்துக்கு இப்படிப்  போனது , அதுக்கப்புறம் இப்ப அவன் மவன் கல்யாணத்துக்குத் தான் இப்படி போறோம். உங்கப்பன் தான் அவன் இஷ்டத்துக்கு ….” என அவர் சொல்ல வரவுமே , பரணி வந்தவர் ,

Advertisement

 

“ம்மா” என சத்தமாக அழைக்கவும் ,

 

“வந்துருவா எம்மவ எப்ப பார்த்தாலும் என் வாய அடைக்க … என் பேத்திகிட்ட நான் பேசக்கூடாதுனு … ”

 

“நான் அப்படிச் சொன்னேனா … வருமா நீ போய் அனுக் கூடவும் பிரியாக் கூடவும் உட்காரு…. ஏம்மா பேசாம வாங்க… வந்து நீங்க அண்ணன் காருல ஏறுங்க… அது கால் நீட்ட வசதி….”

 

“முட்டி வலியோட என்னைய இந்தப் பாடு படுத்துறியே இதுக்குத்தான் வீட்டுக்கே ஜவுளிய கொண்டு வரச் சொல்லாம்னு சொன்னேன். கடையில தான் நிறைய இருக்கும்னுட்ட… ” என்றுப் புலம்பலுடன் அவரும் கிளம்பினார் .

 

உறவுகள் அனைவரும் அவரவர்க்கு தேவையானதை எடுத்துக் கொள்ள , திலீபனின் கண்ணசைவில் மணமகளுக்கான புடவையில் ஒன்றை சங்கீதா தேர்ந்தெடுக்க , அக்காவின் முகத்தில் வெட்கத்தையும் , திலீபனை அனைவரும் கேலி செய்வதையும் கண்ட வித்யா ,அரவிந்தைப் பார்க்க , அவனும் கண்ணசைவில் ஒரு புடவையைக் காட்ட, அதை எடுக்கப் போனவளை தடுத்த அவளது பாட்டி ,

 

” லதா சின்னவளுக்கு இப்போதைக்கு புடவை எடுக்காத … அவள சேலையிலப் பார்த்து யாராவது பொண்ணுக் கேட்டு இப்பவே வந்தா தவிர்க்க கஷ்டம் , அப்புறம் நீயும் உன் புருஷனும் தான் பதில் சொல்லணும் … “அவ்வளவுதான் கேட்டுக் கொண்டிருந்த வித்யா கையை பின்னிழுக்க , அவளருகிலேயே நின்ற வருவை அரவிந்த்,

 

“பாப்பா … ” என்று சத்தமாக அழைக்கவும் , அனைவரும் அவனை திரும்பிப் பார்க்க ,

 

அண்ணனின் குரலில் திரும்பிய வருவும் என்ன என்றுப் பார்க்க ,

 

“இல்ல…. பாப்பாவ எக்ஸ்ட்ரா ட்ரஸ் எடுத்துக்க சொல்ல தான்… கூப்பிட்டேன்….” என அசடு வழிந்தவன் மற்றவர்கள் திரும்பவும் வித்யாவை விழிகளால் சமாதானப்படுத்தினான்.

 

அரவிந்த் சுட்டிக் காட்டியதை விட முடியாதவள் ,

 

“அம்மா கல்யாணத்துக்கு கட்டல ஆனா நான் எடுத்துக்கிறேனே … ”

 

” என்ன… நீ எடுத்துக்கிறியா , அது விலை என்னத் தெரியுமா … “என்ற சங்கரி சில லட்சங்களிலான அதன் விலையை சொல்லி,

 

“இதெல்லாம் முகூர்த்தப் புடவை , நம்மக்கிட்ட காசிருந்தாலும் இப்ப தேவையில்லாம எதுக்கு ….வேற பாருங்க … ” என அதட்டவும் , முகம் சுருங்கிய வித்யாவிடம் வந்த ராணி ,

 

” அம்மா கொழுந்தியா பட்டா நான் அவளுக்கு எடுத்துக் கொடுக்கிறேன் , எதுக்கு பிள்ளைய பேசறீங்க… ”

 

கனிப் பாட்டியோ , ” நீ அவளுக்கு மட்டும் அந்த விலையில எடுத்தா  எப்படி , அப்ப மத்த உறவுக்கார பிள்ளைங்க மனசு கஷ்டப்படாதா ….” இப்படி ஒரு விவாதம் வரவும் , ஒதுங்கி வந்த வித்யா, விக்ரமிற்கு அழைப்பு விடுத்து விவரம் சொல்ல ,தங்கையின் வேதனைக் குரல் கேட்டவனிடம் , மற்றவர்கள் வேறுபுறம் பார்க்கும் போது மொபைலில் அந்தப் புடவையை ஃபோட்டோ எடுத்து அனுப்ப , தங்கையை வீடியோ காலில் வரச் சொன்னவன் , அவளைச் சமாதானப்படுத்தி ,

 

“விதுமா.. நீ அந்த புடவை மட்டுமில்ல பக்கத்தில இருக்கிற பச்சையையும் எடுத்துக்கோ, அம்மா கார்ட் வாங்கு , நான் ஃபன்ட் ட்ரான்ஸ்பர் பண்றேன.… காலேஜ் போகப் போற என் தங்கச்சிக்கு அண்ணன் கிஃப்ட் … ” என உற்சாகமாகப் பேசி வைக்க ,

 

அருகில் நின்றிருந்த வரு , விக்ரம் விரும்பியது என்றுத் தெரிந்தவுடன் அரவிந்திடம் சென்றவள் , விக்ரம் தனக்கு விருப்பமான புடவையை சொல்லவும் , தன்  வங்கி அட்டையை எடுத்து தங்கையிடம் கொடுத்து , விரும்பியதை வாங்கிக் கொள்ளச் சொன்னான்.

 

ஆக மொத்தம் இரு அண்ணன்களும் தங்கைகள் மீது அளவுக்கடந்தப் பாசம் வைத்திருந்தனர். அது எந்தளவிற்கு என்றால் , தங்கைக்காக காதலை விட்டுத்தர ஒருவனும் , வாழ்வையே ஒப்படைக்க தயாராக ஒருவனுமாக இருந்தனர்.

 

வருவின் சிந்தனை முழுவதும் விக்ரமே ஆக்ரமித்துக் கொண்டான். உறவினர்களுக்கு மதிய உணவு வாங்கிக் கொடுத்து , அவர்களை எவ்வித குறையுமின்றி அனுப்பி வைத்த திலீபன் குடும்பத்தினர் மட்டும் கடையில் இருந்தனர்.

 

அவர்கள் வாங்கிய துணிமணிகளுக்கு பில் போட்டு, அதனை அட்டைப் பெட்டியில் அடுக்க நேரமாகியதால் , புதுமாப்பிள்ளை இரவில் வீடு திரும்புவது நல்லதன்று என்பதாலும் திலீபனை பெண்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு ஊர் செல்லும்படிச் சொல்லப்பட , விஸ்வனாதன் , அரவிந்த் , திலீபனின் தந்தை சிவநாதன் ஆகிய மூவரும் பொருட்களோடு பின்னால் வருவதாகக் கூறி அனுப்பி விட்டனர்.

 

அந்தக் காரில் பின்புறம் கனிப் பாட்டியும் ராணியும் அமர்ந்துக் கொள்ள ,திலீபனின் அருகில் அமர்ந்து இருளில் பரணி ஆற்றின் அழகை ரசித்துக் கொண்டே வரு வந்துக் கொண்டிருந்தாள்.

 

ஒருபுறம் வயல்வெளிகளும் , வாழை ,தென்னை தோப்புகளும் இருக்க , மறுபுறம் பரணி ஆறு ஓடிக் கொண்டிருந்தது. இரவில் குளிர்ச்சியைக் கொடுக்கும் அவ்விடம் , பகலில் பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும்.

 

அது ஒரு தேசிய நெடுஞ்சாலை , அவர்கள் ஊருக்குச் செல்ல ஒரு வளைவில் இருக்கும் சிறிய ஆற்றுப்பாலத்தைக் கடக்க  வேண்டும். அது இரவு நேரம் வாகனங்கள் ஒன்றிரண்டு மட்டுமே சென்றுக் கொண்டிருந்தது.

 

அந்த வளைவு வரவும் ஒரு பெரிய சரக்கு லாரி அந்த வளைவில் திரும்ப முயலும்  போது ஓரமாக இருந்த மரத்தில் மோதி நின்று விட்டது. இதை சிறிது தூரம் பின்னால் வந்துக் கொண்டிருந்தவர்கள் கவனித்து விட்டதால், இவர்கள் வாகனத்திற்கு முன்பிருந்த இரண்டு மூன்று வாகனங்களும் நின்று விட்டன. காரிலிருந்த அவர்கள் அந்த லாரியில் இருந்து இறங்கிய நால்வரிடமும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்க திலீபனும் திருப்பம் வருவதால் மெதுவாகத்தான்  காரை செலுத்திக் கொண்டிருந்தான். எனவே அவனும் வண்டியை நிறுத்திவிட்டு என்ன என்றுப் பார்க்கச் சென்று விட்டான்.

 

கனிப் பாட்டியோ புலம்ப ஆரம்பிக்க , ராணி சமாதானம் செய்துக் கொண்டிருந்தார்.

 

” என்ன ஆனாலும் என் மனசுக் கேட்க மாட்டிக்குது , குலதெய்வக் கோயிலுக்கு போய் பொங்கல் வச்சு திலீபன் பேருல அர்ச்சனை பண்ணிரு … “அதற்குள் திரும்பி வந்த திலீபன் வருவை கீழே இறங்கச் சொல்ல ,

 

” குமரா …  இருட்டுக்குள்ள வயசு பிள்ளைய ஏன் இறங்கச் சொல்ற ” என ராணிக் கேட்க ,

 

“ம்மா … அந்த லாரிக்காரனுக இந்திப் பேசுறானுக , தமிழும் புரியல , இங்கிலீஷும் சரியா புரியல … அதான் பாப்பாவ அழைச்சிட்டுப் போய் அவனுக என்ன சொல்றானுகனு கேட்டுட்டு வாறேன். வண்டிய எடுத்தாதான் இப்படிப் போக முடியும் , இல்ல சுத்திதான் போகணும்” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

 

வரு வரும்போது அதில் ஒருவனை மக்கள் பிடித்து அடித்து காவல் நிலையத்திற்கு தகவல் அடித்துக் கொண்டிருந்தனர். அவன் கண்களைப் பார்த்தவளுக்கு அன்று பார்த்த விக்ரமின் கண்கள் தான் நினைவில் வந்தது.

 

திலீபன் அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இந்தியில் கேட்க அதற்கு அவர்களும் இந்தியிலயே பதிலளித்தனர்.

 

அதாவது அங்கிருந்த ஒரு பெரும் புகழ்ப் பெற்ற நூற்பாலையில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு வட மாநிலத்திற்கு திரும்ப இருந்தவர்கள். அருகிலிருந்த குற்றாலம் சென்று குளித்து மது அருந்தி விட்டு வண்டியை ஓட்டி வந்துள்ளனர். அதில் இரு ஓட்டுநர்கள் , இரு உதவியாளர்கள் என நால்வர் இருந்துள்ளனர்.

 

அடுத்து சுங்கச்சாவடி வரவுள்ளதால் போலிஸாரிடம் சிக்காமல் இருக்க ஆற்றோரம் வண்டியை நிறுத்த முயல அது மரத்தில் மோதியதோடு அந்த சாலையின் குறுக்காக பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே போலீஸாரும் வந்து விட , அதற்குள் அரவிந்தும் அவன் அப்பாவையும் பெரியப்பாவையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டான் .எனவே வருவை காருக்கு அனுப்பி விட்டு அரவிந்தும் விஸ்வனாதனும் போலீஸாருக்கு மொழிபெயர்க்க ஆரம்பித்தார்கள்.

 

வருவின் மனம் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானது. அங்கிருந்தவர்கள் மது அருந்தி விட்டு இப்படி செய்வது மிகப் பெரியக் குற்றம் என்றதோடு, அதில் ஒருவன் இவர்கள் திட்டுவது அடிப்பதுக்கூடத் தெரியாமல் சுயநினைவின்றி இருந்ததைப் பார்த்தவள் , மனதினுள் ,

 

“விக்கி நீ அன்னைக்கு நடந்துக்கிட்டது ரொம்ப பெரிய தப்பு , ஆனாலும் உன்னைய எனக்கு பிடிச்சிருச்சு … நீயும் ஃபீல் பண்ணிட்டே தான் இருந்த … இருந்தாலும் … ” என நினைத்துக் கொண்டே காரில் அமர்ந்தாள்.

 

அவளால் அன்றைய நாளை மறக்க முடியவில்லை.

தூவும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!