Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்15

    நாட்காட்டியின் தேதித் தாள்கள் கிழிபடாமல் இருந்தாலும்.. சூரியனும் சந்திரனும் தங்கள் வேலையைச் சரியாய்ச் செய்திருக்க.. ஆயிற்று.. இன்றோடு இரண்டு பகல் இரண்டு இரவு கடந்துவிட்டது.. மகிழ் அவர்களை விட்டுச் சென்று.. அதாவது மகிழ் நந்தாவைத் திருமணம் செய்து சென்று.

தாத்தாவிற்கு மூச்சிரைப்பு அதிகமாகி நேற்று முழுவதும் மருத்துவமனை வாசத்தில் வைத்திருந்து இரவு தான் அழைத்து வந்திருந்தனர்.. யாரின் முகத்திலும் மருந்துக்கும் தெளிவென்பதே இல்லை.. தாத்தாவிற்கு நோயின் தாக்கத்தை விட பேத்தியின் எதிர்பாரா பிரிவு உடலையும் மனதையும் வருத்திவிட்டது.

      முகில் மில்லிற்குச் சென்றிருக்க.. தாத்தாவும் ராகவனும் அமைதியாக ஆசாரத்தில் அமர்ந்திருக்க.. கீழே அமிர்து அவ்வா அமர்ந்திருந்தார்.. தனம் கடமைக்கு ஏதோ சமையலறையில் இருக்க.. வீட்டில் ஒரு சங்கடமான மௌனம்.

       அடுத்து என்ன?? என்ற குழப்பம் வெகுவாக இருக்க.. அனைவரும் மகிழின் நியாபகத்திலேயே உழன்று கொண்டிருந்தனர்..



Advertisement

     அவ்வா பெருமூச்சுடன் “என்ன கூத்து பண்றாளோ.. கண்டிப்பா வீட்டை ரெண்டு பண்ணியிருப்பா” என அங்கலாய்ப்பாகச் சொன்னார்..
என்ன செய்கிறாளே.. யாரை என்ன பாடுபடுத்துகிறாளோ என.. அவளைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்களால் இதைத்தான் யோசிக்க முடிந்தது.

     கணவனும் மகனும் அமைதியாய் இருக்க மீண்டும் “ஏன்ப்பா.. ரெண்டு பேரும் பழகறது உனக்கு முன்னமே தெரியுமா.. அதான் அவசரமா மாப்பிள்ளை பாத்தியா” எனக் கேட்டார்.. இரண்டு நாட்களாக தங்களோடு மருத்துவமனை வீடு என அலைந்த மகன் இன்று ஓய்வாக அமரவும் விசாரித்தார்.

       அவருக்கு பதில் எதுவும் சொல்லத் தோன்றாமல் ராகவன் ஆமென்பதாய் தலையசைத்தார்.. அவரால் அதற்கு கூட முடியவில்லை தான்.. நந்தா கோவிலில் தன் முன்னேயே உரிமையாய் மகிழைப் பார்க்க.. அவருக்கு பயம் தான் வந்தது.

Advertisement

      அதனாலேயே அவனிடம் சென்று மகிழை விட்டு தள்ளி நில் எனச் சொல்ல.. அவனும் அவன் பங்குக்கு செய்துவிட.. இப்போது குடும்பமே கவலையுடன்..

Advertisement

      ஏற்கனவே பல வருடங்களாக இரு குடும்பமும் முகம் பார்க்காமல் இருக்க.. இவர்களின் பிரச்சனையும் அதில் சேர வேண்டாமே என்று தான் ராகவன் நந்தாவை மகிழின் வாழ்வில் இருந்து விலக்க நினைத்தார்.. மற்றபடி அவனிடம் குறை சொல்ல ஒன்றும் இல்லை தான்.

       படிப்பு, குணம், அழகு, அறிவு, திறமை என எல்லாமே நிறை தான்.. அவனைப் போல அவர்கள் பக்கத்தில் தேடித்தான் பெற வேண்டும்.. ஆனால் ஏற்கனவே தன் தம்பியால் ரேவதி வீட்டில் சிறையிருக்க.. நாளை இல்லை என்றாலும் ஒருநாள் ரேவதியை வைத்து மகிழை எதாவது சொல்லிவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம்.

     அவர்களைப் பற்றி நன்றாக அறிந்திருந்தாலும் பெண்ணின் தகப்பனாய் தெரிந்தே அவளை அங்கு அனுப்ப மனமில்லை.. ஆனால் அவர் எவ்வளவு தடுத்தும் அனைத்தும் நடந்து முடிந்து விட்டதே.

Advertisement

      மகனின் வேதனை சுமந்த முகம் பார்க்க சகியாமல் சமையலறை உள் செல்ல.. அங்கே தனம் கண்களில் வடிந்த நீரைத் துடைக்கக் கூடச் செய்யாமல் அப்படியே வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

      ஒரு பத்து நாள் கணக்கீட்டை முன்னிறுத்தி மகளை சந்தேகம் கொண்டு பெருந்தவறு செய்துவிட்டதாகத் தோன்றியது.. நந்தாவை விரும்புவதைக் கூட அவ்வளவு தைரியமாகக் கூறிய பெண் தவறு செய்வாளா என யோசித்திருக்க வேண்டுமோ.. மகளைக் காத்திருக்க வேண்டுமோ என காலங்கடந்து தோன்றியது.

      இவர்கள் இவ்வாறு தான் யோசிப்பார்கள்.. அத்தனை எளிதாக மகிழை யாரும் தவறாக எண்ணி விட முடியாது என்பதால் தான் அவர்களின் கண நேரத் தயக்கத்தை உபயோகப்படுத்தி ஒரே நிமிடத்தில் தனக்குரியவளாக்கிக் கொண்டான் நந்தா.

     மாமியார் வரவும் இன்னும் அவருக்கு அழுகை அதிகமாக “அத்தை.. என் பொண்ணு ராஜா சொல்ற மாதிரி எல்லாம் தப்பு பண்ணியிருக்க மாட்டா.. அவளைப் போய் கூட்டிட்டு வந்துடலாம் அத்தை” என அழ ஆரம்பித்தார்.

       அவரின் அழுகுரல் ஹாலில் அமர்ந்திருந்த இருவரையும் எட்ட.. ஒன்றும் செய்ய முடியாத இயலாமையில் ராகவன் தன் அறைக்குள் சென்றுவிட.. அவ்வா “எம்பேத்தியைப் பத்தி எனக்குத் தெரியாதா.. அவ யார்கிட்டயும் சொல்லலைனு தான் எனக்கு கோவமே தவிர.. அவ தப்பிப் போவாளா.. அவ எங்க இருந்தாலும் அவ ராஜ்ஜியம் தான்.. நீ அழுகாத” என தேற்றிக் கொண்டிருந்தார்.

பாட்டி யூகித்தபடியே தான் நடந்து கொண்டிருந்தது.. வீட்டை அவள் இஷ்டப்படி தான் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தாள் மகிழ்.. மகிழிடம் நந்தாவின் தாத்தா பேசிவிட்டுச் சென்ற பின்.. அவரை நம்பிக்கையில்லாமல் பார்த்தாலும்.. நந்தா மீது உள்ள கோவத்தை மற்றவர்கள் மீது காட்டும் அளவுக்கு அவள் ஒன்றும் சிறுபிள்ளை அல்லவே.

       சகுந்தலை முதல் நாள் முழுதும் முகம் திருப்பியிருக்க.. மகிழ் தான் கொஞ்சி கெஞ்சி மிரட்டி.. அவரைத் தன்னுடன் பேச வைத்திருந்தாள்.. தங்களுள் ஊறிப் போயிருந்த இனப்பற்றை.. பேரன் விரும்பிவிட்டானே என்ற காரணத்திற்காக.. அதை தூக்கித் தூர வீசிவிட்டு சாரதா அப்பத்தாவும் அவளை நன்கு கவனித்துக் கொண்டார்.

      மகிழுக்குக் கோவம் முழுதும் நந்தா மேல் தான்.. இத்தனை வருடங்களில் அவள் பெற்றோரையும் தனது வீட்டையும் பிரிந்து இருந்ததே இல்லை.. அவள் வரும்போது அவ்வா அழுதாரே தாத்தாவிற்கு என்னவோ ஏதோ என மனம் வேறு ஒருபுறம் அடித்துக் கொண்டிருந்தது.

      தன்னைப் பெற்றவளையே நம்ப வைத்து தன்னை தனிமைப்படுத்தி விட்டானே.. எல்லாரையும் தன்னைப் பற்றி தவறாகப் பேச வைத்து விட்டானே என்பதையும் மீறி அவளுக்கு தன் நம்பிக்கையை உடைத்துவிட்டானே என்று தான் நந்தா மீது தாள மாட்டாத ஆத்திரம் அவளுக்கு.. நேற்று இவள் திருமணச் செய்தி கேட்டு வந்த ரகுவையும் அவன் திட்டி திருப்பி அனுப்பயிருக்க.. எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என அடிக்கடி எண்ணிக் கொள்வாள்.

     அவளின் இந்த கோவத்தில் நந்தா கூட அயர்வாகத்தான் உணர்ந்தான்.. பேசி அவளை சமாளிக்க முடியும் என்ற அவனது எண்ணம் வலுவிழந்து கொண்டே வந்தது.. இவனாக என்ன பேசினாலும் சுருக்.. சுருக்கென பதில் சொல்லுவாள்.

       அணிந்து கொள்ள உடை இல்லையே சென்று எடுத்து வரலாம் வா.. என நந்தா அழைத்ததற்கு.. “வெளியே வர மாதிரியா நீ பண்ணி வச்சிருக்க.. பழி வாங்கறதுல இருக்க அறிவு.. ரெண்டு செட் துணி வாங்றதுல இருக்காதா.. போ” என எரிந்து விழுந்தாள்.

      அவன் வாங்கி வந்ததை ஒரு குறையும் சொல்லாமல் அவள் அணிந்து கொண்டாள் தான்.. ஆனால் குற்றப் பார்வை மட்டும் மாறவே இல்லை.. இத்தனையும் செய்தாலும் மகிழ் மனதில் ஏதோ ஒரு தனிமை உணர்வு.. இது எதுவுமே வேண்டாம்.. இங்கிருந்து ஓடிப்போய் அம்மா மடியில் முகம் புதைத்துக் கொள்ள வேண்டும் போல.

     எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும்.. நாளுக்கு நாள் இந்த உணர்வு அதிகம் தான் ஆயிற்று.. அவளை இங்கு கட்டுப்படுத்த எல்லாம் யாரும் இல்லை.. அப்பத்தா அறையில் தான் இருக்கிறாள்.. நந்தா கூட இதில் அவளை ஒன்றும் சொல்லவில்லை.. தனியே அவளிடம் சிக்கிக் கொள்ள அவனும் விரும்பவில்லை.

      அன்றும் அனைவரும் உறங்கிய பின்பு அவள் மட்டும் அமைதியாய்.. வீட்டின் பின்புறத் திண்ணையில் அமர்ந்து நீல வானம் மீது கோவம் கொண்டு தேயும் வெண்ணிலவாய்.. தனியாக அமர்ந்திருக்க.. அதைக் கண்ட நந்தாவிற்குத் தான் ஒரு மாதிரி ஆகியது.

      சரி அவளிடம் பேச்சுக் கொடுக்கலாம் என அவளை நெருங்கியவன்.. அருகில் அமர்ந்து கொள்ள.. அவன் தான் என அவளுக்குப் புரிந்தது.. இருந்தாலும் இப்போது அவனோடு சண்டையிடும் மனநிலையில் அவள் இல்லை.

      ஆனால் நந்தாவிற்கோ அவளது நிராதரவான நிலையைப் பார்க்க முடியவில்லை.. மெதுவாக “தூங்கலையா மயிலு” எனக் கேட்க.. ‘நான் நிம்மதியா தூங்குற மாதிரியா நீ பண்ணி வச்சிருக்க’ என்ற பதிலைத்தான் எதிர்பார்த்தான்.

     மகிழ் என்ன யோசித்தாளோ “இல்ல” என்று மட்டும் பதிலளிக்க.. அவள் சோக முகம் பார்க்க முடியாமல் “அதென்ன எங்கப்பாவும் மாமா.. நானும் மாமாவா” என அவளை வம்பிழுக்க

      எதிர்பார்த்தபடி அவனை அனல் பார்வை பார்க்க.. அவனோ சிறு சிரிப்புடன் “பாவான்னு கூப்பிடு மயிலு.. சின்ன வயசுல உங்கம்மா கூப்படறதைப் பாத்து நீயும் என்னை அப்படி சொல்லுவ” என புன்னகைக்க..

     மகிழோ “உன்னையை மாமான்னு கூப்பிட்டதையே நான் வெறுக்கறேன்.. உன்னைப் பாக்கவே எரிச்சல் மண்ணாங்கட்டியா இருக்கு.. என்னைக் கொஞ்ச நேரம் கூட நிம்மதியா விட மாட்டியா நீ” என கத்திவிட்டாள்.

       அதில் அவனும் கோவம் கொண்டு “இங்க பாருடி நான் ஒன்னும் என்னை விரும்பாத பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலை.. நீயும் என்னை மனசார விரும்பின தானே.. அப்புறம் ஏன் இந்தப் பிடிவாதம்” எனக் கேட்க

        “எப்படி நான் கலகலன்னு சிரிக்கனும்னு நீ எதிர்பாக்கற.. நீ எந்த அடிப்படையில இங்க கூட்டிட்டு வந்துருக்க.. பொய்யோட அடிப்படையில ஆரம்பிக்கற உறவுக்கு என்ன மதிப்பு இருக்கு சொல்லு.. நீ சொன்ன பொய் என்னைக்கு வெளுக்குதோ அன்னைக்கு இந்த உறவுக்கு என்ட் கார்ட் தான்.. இந்தச் செயினை அறுத்து உங்கையில கொடுத்துட்டு போயிட்டே இருப்பேன்” என்றாள் பதிலுக்கு அவளும்.

      அவள் வார்த்தைகள் அவனை நிதானம் இழக்கச் செய்ய “நீ போறேன்னு சொல்லச் சொல்லத்தான் எனக்கு இன்னும் உன்னை விடவே கூடாதுன்னு தோணுது.. ஆமா பொய் தான் சொல்லிட்டேன்.. அதுக்கு எப்படி மன்னிப்பு கேட்கனும்னு சொல்லு செய்யறேன்.. ஆனா என்னை விட்டு போக மட்டும் நான் உன்னை அலவ் பண்ண மாட்டேன்.. இதை திமிராத்தான் சொல்றேன்.. நீயா மனசு மாறுவடி.. பாக்கறேன் உன் வீம்பெல்லாம் எத்தனை நாளைக்குன்னு” என அவனும் கத்திவிட்டு அங்கிருந்து அகன்றுவிட.. மகிழ் தரையில் அமர்ந்து கண்ணீரை சொரிய ஆரம்பித்தாள்.

     பாதி உறக்கத்தில் விழித்த நந்தாவின் தாத்தா மகிழைக் காணவில்லை என தேடி வர இத்தனையையும் கேட்டார்.. அவரும் இன்று பேரனிடம் பேசியிருக்க.. அவன் பிடிவாதமாக மகிழை விடமாட்டேன் என கூறியிருந்தான்.

     மகிழ் இருக்கும் நிலையில் எதாவது செய்து கொள்வாளோ என்ற பயம் வேறு அவருக்கு.. எப்படித்தான் நந்தாவை மாற்றுவது என அவருக்கும் புரியவில்லை.

      இருபது வயதுப் பெண் தானே.. சீக்கிரம் சரியாகி பேரனுடன் மனதொத்து வாழ்வாள் என சாரதா எண்ணியிருக்க.. குமாரசாமியோ சதா ஏதோ யோசனையிலேயே இருந்தார்.. யாரிடமும் சரிவரப் பேசுவதில்லை.

     அன்று மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.. அனைவரும் வீட்டில் இருக்க.. நந்தாவின் தாத்தா மட்டும் இல்லை.. சாரதா அம்மத்தா எட்டி எட்டி வாசலைப் பார்க்க “ஏன் அம்மத்தா அப்புச்சி என்ன குழந்தையா.. மழையில நனைஞ்சுட்டு வர.. எங்கியாவது ஒதுங்கி நின்றிருப்பாரு” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே குழந்தை போலத்தான் அவர் மழையில் நனைந்தபடி வந்தார்.

      அம்மத்தா பதறிப்போய் “வயசாச்சுன்னா கூறுகெட்டுப் போய்டுவிங்களோ.. இந்த மழையில வரனுமா.. எங்கயாவது நின்னு வரதுக்கென்ன” என திட்டியவாறே அவரிடம் துண்டைக் கொடுத்தார்.

      மகிழும் “ஏன் அப்புச்சி.. மழையில நனைஞ்சுட்டு வர”  என்க

        “அட என்ன கண்ணா.. இந்த மழையில தான் நானும் உன் தாத்தனும் மல்லிகைச் செடிக்கு பதியம் போடுவோம்.. அப்படியெல்லாம் பாடுபட்டு வேலை பழகி.. வளத்து.. இவனுங்க கையில சும்மா தூக்கிக் கொடுத்துத்தான் இன்னைக்கு எங்க பண்ணையம் திண்ணையேறிப் போச்சு” என மகனையும் பேரனையும் தன் பேச்சில் குட்டியவர்.. அமைதியாக அமர்ந்துவிட்டார்.

     அவருக்கு டிபி இருக்க.. கோடைமழை ஒத்துக் கொள்ளாமல் சளி தொடர்ந்து இருமல் என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்நது.. மருந்து மாத்திரை எதற்கும் கட்டுப்படாமல் வெயில் காலத்தில் கூட இளைப்பு அதிகமாய் வர குடும்பமே பயந்து போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!