Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 18 2

 

அரவிந்தின் பேச்சுக்கள் வித்யாவின் மனதைத் தொடும் என்றால் , பார்வை மட்டும் உடலைத் தொட்டு அவளை சிலிர்க்க வைக்கும் . கைப் பிடித்துப் பேசக்கூட யோசித்தான் அரவிந்த்.தங்கையின் தோழி , பதினெட்டு வயதை தொடவே இன்னும் ஒரு மாதம் இருக்க , ஒரு மருத்துவனான தானே சிறு பெண் மனதில் சஞ்சலத்தை உண்டாக்கி  விட்டோம் என்ற எண்ணமும் அவளை தொட்டுப் பேச அனுமதிக்கவில்லை.

 

தன்னைப் பற்றி தன் குடும்பத்தைப் பற்றி அதிகம் பேசுவான். அவளிடமும் அவள் விருப்பங்களை பற்றித் தெரிந்துக் கொள்ள என ஓடிய நாட்கள் திலீபனின் திருமணத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே இருக்கின்றது என்ற நிலை வந்தது.



Advertisement

 

இந்த நாட்களில் திருமணப் பத்திரிக்கைத் தர என மூத்த உறுப்பினர்கள் பம்பரமாகச் சுழல, இளையவர்கள் தங்கள் நேரங்களை தங்கள் மனங்கவர்ந்தவர்களோடு மகிழ்ச்சியோடு செலவழித்தனர்.

 

Advertisement

ஆம் வருவும் மனங்கவர்ந்தவனின் விருப்பத்தை , ஆர்வத்தை அறிந்துக் கொண்டவள் அதற்கான முயற்சிகளில் இறங்கினாள். நாளை பந்தக்கால் நடும் விழா அதை முகூர்த்தக்கால் என்றும் சொல்வார்கள். எல்லோரும் அந்தப் பரபரப்பில் இருக்க ,வித்யாவும் லதாவோடு வெளியேச் சென்றிருந்த நேரம் ,வரு ஒரு பெரிய அட்டைப் பெட்டியை தூக்கிக் கொண்டு சங்கீதாவிடம் வந்தாள்.

Advertisement

 

“அண்ணி உங்களுக்கு என்னோட கிஃப்ட் ” எனத் தந்தவளிடம் ,

 

Advertisement

” என்ன “என்றுப் பிரிக்கப் போக , லதாவின் உறவினர்கள் அவளைப் பார்க்க வந்து விட்டனர். வருவின் முகம் பார்த்தவள் ,

 

“அப்புறம் பிரிச்சுப் பார்க்கிறேன்” எனவும் வரு சரி என்றுத் தலையசைத்தவள், வந்திருந்தவர்கள் விக்ரமின் அம்மா வழி உறவினர்கள் என்பதை அறிந்து அவர்களோடும் இரு வார்த்தைகள் பேசிவிட்டே கிளம்பினாள்.

 

விக்ரம் எப்போது வருவான் என்று யாராவது சொல்ல மாட்டார்களா என்றிருந்தது .ஏற்கனவே இரு முறை வித்யாவிடம் கேட்டுப் பார்த்து விட்டாள்.

 

திரும்ப திரும்ப கேட்க சங்கடப்பட்டு இருந்தவள் அறையை விட்டு வெளியேறி கீழே போக இருந்த சமயம் வேலை செய்பவர் அவனறையை திறந்து வைத்து சுத்தம் செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்து,

 

“மாரி ஆன்ட்டி வந்திருக்கிறவங்க தங்குறதுக்கா க்ளீன் பண்றீங்க….”

 

” என்ன தாயி இப்படிக் கேட்டுட்ட , வந்திருக்கிறவங்களுக்கு தங்க கீழே ரெண்டு ரூம்பு சுத்தம் பண்ணியாச்சு , இது நம்ம சின்ன ஐயா நாளைக்கு வந்தா தங்க சுத்தம் பண்றேன்.”

 

யாராவது இந்தத் தகவலைப் பரிமாற மாட்டார்களா என ஏங்கிக் கொண்டிருந்தவளுக்கு இந்தச் செய்தியைக் கேட்டவளுக்கு வானில் பறக்கும் உணர்வு தான். விடிகாலையில் எழுந்து திருமணச் சடங்குகள் செய்ய அன்று இரவு ராணி அங்கு வீட்டிலயே தங்கும் படி வருவைக் கூறி விட்டார். விக்ரம் இரவில் வந்தால் பார்க்க இயலாதே என்றக் கவலை இருந்தாலும் , விடியலை ஆவலுடன் எதிர்பார்த்தாள்.

 

வீட்டு ஜன்னல் அருகே நின்று நடு இரவு வரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கார் ஏதேனும் வருகிறதா என்று. அவன் சென்ற நாளிலிருந்து அவனுக்குப் பிடிக்கும் என சொல்லப்பட்டதெல்லாம் தனக்கும் பிடித்துப் போக , அவன் வந்ததும் தன் காதலை அவனிடம் சொல்ல முடிவெடுத்து இருந்தாள்.

 

அன்றுப் பொன்னுருக்கும் நிகழ்வுக்கு வந்த போது எடுத்த ஃபோட்டோக்களில் அவனை மட்டும் தனியே எடுத்துப் பார்த்துக் கொண்டே ,

 

“விக்கி …. நான் உன்னை எனக்கு பிடிச்சிருக்குனு உன்கிட்ட சொன்னா … நீ என்ன சொல்வத் தெரியுமா…. புதுசா ஒரு பேர் வச்சிருக்கியே….ஆன்… லட்சுமினு…. லட்சுமி இது படிக்கிற வயசு , இதுக்கு பெயர் காதல் கிடையாது … இன்ஃபாக்சுவேஷன் … நீயும் என் தங்கச்சியும் ஒன்னு … “மெல்லிய புன்னகையோடு … “கரெக்ட்டா…..நீ ஜென்டில்மேன் ஆச்சே இப்படித்தான் சொல்லப் போற ….. ஆனா அப்பா சொன்னாங்க அம்மா சொல்ல முடியாம தவிச்சாங்களாம்… நானும் உன் கிட்ட சொல்லல… எனக்கு உலகமே நின்னது போல ஆகிடும் …. ” தனக்குள்ளயே சிரித்துக் கொண்டவள் ,

 

” கொஞ்சம் பப்ளியா இருந்தாலும் உனக்கு என்னைய பிடிக்கும் , ஆனா லவ்வரா பார்க்க மாட்டியே …ம் … .”

 

யோசித்துக் கொண்டே ஜன்னல் சுவரோரத்திலயே உறங்கிவிட்டாள்.

 

தனியாக உறங்கினாலும் கதவைத் தாழிட்டு பழக்கம் இல்லாததால் , அதிகாலையிலயே ராணி வந்து எழுப்பியவர் ,

 

” என்ன அம்மு மா தரையில படுத்திருக்க , கார்பெட் இருந்ததால சரியாப் போச்சு , இல்லனா ஏசி குளிருக்கு முடியாம போயிருக்கும் … சீக்கிரம் எழுந்து குளிச்சுட்டு வா , தாவணி கட்டி விடுறேன் …”

 

” பெரியம்மா தாவணி கட்ட வித்யா சொல்லி தந்தா… சேலை மட்டும் பழகணும் … ”

 

“அது மெதுவா பழகலாம் … அத்தைக்கிட்ட நான் சொல்லிக்கிறேன் .. ” என்றவர் அவளுக்கு தேவையானதை எடுத்து வைத்து விட்டுச் சென்றார்.

 

விக்ரம் வந்திருப்பான் என்ற எண்ணமே அவளை உற்சாகமாக வைக்க அழகாக தாவணியில் தயாராகி வந்தாள்.

 

பேத்தியைக் கண்ட கனிப் பாட்டி ,

 

“ராணி பூவெடுத்துட்டு வா , என் பேத்தியப் பாரு … அப்படியே இளவரசியாட்டம் நடந்து வாரத … “வருவை அருகழைத்து உச்சி முகர்ந்தவர் ,

 

” விஸ்வா …. இப்பதான் டா என் பேத்தி இந்த வீட்டு வாரிசுனு நிரூபிக்கிறா…. இத்தனை நாளா அரைகுறை உடுப்புல பார்க்கும் போதெல்லாம் , இவ அங்குள்ள வாரிசுங்கிற நினைப்பு தான் வந்துச்சு ….”

 

“ம்மா உடுக்கிற உடைய வச்சு யாரையும் தப்பா கணக்குப் போடாதனு எத்தனை தடவைச் சொன்னாலும் கேட்க மாட்டியா … ” என நொந்துக் கொண்டவரிடம் ,

 

“போடா .. நான் இப்படி தான் வளர்ந்தேன் , என் பொண்ணையும் இப்படிச் சொல்லி தான் வளர்த்தேன்…. என் பேத்திக்கிட்ட சொல்ல எனக்கு உரிமையில்லயா , இந்த உடுப்புல அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கா , பார்க்கிறவங்க கையெடுத்து கும்பிட தோணுற மாதிரி உடுப்பு போடணும்…. ”

 

தயாராகி நின்றிருந்த சிவாவும் ராணியும் மேலும் பேச்சு பெரிதாகும் முன் வருவையும் , விஸ்வநாதனையும் அழைத்துக் கொண்டனர்.

 

நல்ல நேரத்தில் முகூர்த்தகாலிட்டு பூஜைகள் முடிந்து திலீபனுக்கு இங்கு நலங்கு வைத்தனர் என்றால் , அங்கு சங்கீதாவிற்கும் நலங்கு வைக்கப்பட்டது. வந்திருந்த சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் தரப்பட்டு அனுப்பியதும் எப்போதடா வித்யா வீட்டிற்கு செல்வோம் என்றிருந்தவள் சாருவையும் அமுதாவையும் அழைத்துக் கொண்டு உடனேக் கிளம்பிவிட்டாள்.

 

அங்கு வீட்டிற்கு சென்றதும் உறவினர்கள் கூட்டத்தில் விக்ரமைத் தேட அவன் கண்ணிலேயேப்படவில்லை. வித்யா தான் அவளுடன் பேசிக் கொண்டிருந்தாள். வித்யாவிற்கு திருமணம் முடிந்ததும் அவரவர் ஊருக்குச் சென்று விடுவோமே ,இனி அரவிந்தை எப்போது காண்போமோ என காதலனைப் பிரியப் போகும் ஏக்கத்தில் வருவிடம் பேசிக் கொண்டிருக்க ,

 

காதலனை கண்டு விட மாட்டோமா என்ற ஏக்கத்தில் அவளிடம் ஒற்றை வார்த்தைகளில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

திடீரென வரவேற்பறையில் சலசலப்பு மாடியிலிருந்து கீழேப் பார்த்த வித்யா ,

 

“அண்ணா …” என்றவாறு படியிறங்க ஆரம்பித்து விட்டாள். வருவிற்கு இறங்கக் கூடத் தோன்றாது அப்படியே நின்று விட்டாள். உள்ளம் துள்ள மகிழ்ச்சியில் கண்ணீர் வரும் போல இருக்க அவனைப் பார்த்துக் கொண்டே இறங்க ஆரம்பித்தாள்.

 

கருநீல நிற ஜீன்ஸில், ஆகாய நீலமும் வெண்மையும் கலந்த டீ ஷர்ட்டில் கம்பீரமாக கூட்டத்தில் நின்றவனை காணத் தெவிட்டவில்லை.

 

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க

 

காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க

ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே

வழி வருக வழி நெடுக ஒளி நிறைக            வாழ்விலே❤

 

சுற்றி நின்றவர்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தவன் அருகில் சென்றவள் அவன் தன்னைப் பார்ப்பானா என பார்த்திருக்க … ம்ஹூம் அவன் கண்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. மனதில் ஏமாற்றம் வந்தாலும் அவன் அப்படித்தான் என்பதால் , கண்ணுக்குள் அவனை நிறைப்பதோடு நின்று விட்டாள்.

 

அன்று மாலை கோவிலுக்குச் சென்றவள் , பிள்ளையாருக்கு மாலை சூடி அங்கிருந்த படித்துறையிலயே அமர்ந்து விட்டாள். எப்படி விக்ரமை அணுகுவது , காதலை எப்படி தெரிவிப்பது என்ற யோசனையில் இருந்தவள் முன் பிரதாப் வந்து நின்றான்.

 

உடனே எழுந்தவளை , “லட்சு… லட்சு ஒரு நிமிஷம் … ”

 

” என்ன லட்சுவா ….”

 

“ம்…. லட்சுமியோட சுருக்கம் லட்சு… நான்… நான் பிரதாப் குமார் ” என்றவனைப் பார்த்தவள் ,

 

“ஓஹோ நீ தான் இந்தப் பெயர விக்கிகிட்ட சொல்லிருக்கியா…” மனதினுள் நினைத்தவள் ,

 

” திலீபண்ணாக் கூடப் பார்த்து இருக்கேன். என் பேர் லெட்சுமி இல்ல … ”

 

“தெரியும் அமிர்தவர்ஷினினு சொன்னாங்க , நான் சாரு வருனு கூப்பிடவும் வரலட்சுமினு நினைச்சிட்டேன்… அது வந்து அது வந்து நான் உங்க மாலதி அத்தை பையன் தான் …. எனக்கு உன்னைய ரொம்ப பிடிச்சிருக்கு வீட்லயும் சொல்லிட்டேன் … இப்பலாம் கல்யாணம் வேண்டாம்…. நீ படிச்சு முடிச்சப் பிறகு தான் … ”

 

வரு ஏதோ சொல்வதற்குள் ,

 

“இப்ப எதுவும் சொல்ல வேண்டாம்…. நீங்க ஊருக்கு கிளம்பறதுக்குள்ள என் விருப்பத்த சொல்லணும்னு நினைச்சேன் சொல்லிட்டேன் … வாரேன்…” என்றவன் விறுவிறுவென சென்று விட்டான்.

 

வருவுக்கு என்னவோ போலாகிவிட்டது , “என்ன இவங்க இப்படி சொல்லிட்டுப் போறாங்க … எனக்கு விக்கிய தான பிடிச்சிருக்கு ,இதே போல நான் விக்கிகிட்ட சொல்லும் போது , என்னையப் பிடிக்கலனு உடனே சொல்லிட்டா…” தலையைப் பிடித்துக் கொண்டவள் ,

 

“வேண்டாம் ….இப்ப சொல்ல வேண்டாம்…. அப்ப எப்ப சொல்ல… இன்னும் ரெண்டு நாள் டைம் இருக்கு ….. பார்த்துக்கலாம் … ”

 

திருமணமும் வந்தது ,விக்ரமிடம் காதலைச் சொல்ல நேரமும் வந்தது. சொல்லத்தான் முடியவில்லை ….

 

உயிரின்
உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய்
அறிந்தேன் தொடர்ந்தேன்….

தூவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!