Unathu Kaathalil Vizhunthaen 5
உனது காதலில் விழுந்தேன் – 5
“நீயா என் பொண்டாட்டி” என்று அதிர்ந்த பிரபு, சட்டென்று ஏதோ நினைத்தவனாய் தனது பெற்றோரின் முகத்தைப் பார்த்தான்.
அவர்களின் முகத்தில் எந்தவிதமான அதிர்ச்சியும் இல்லை. அவர்கள் அவனின் முகத்தை சற்று இறைஞ்சுதலாக பார்த்தபடி நின்றிருந்தனர்.
அடுத்ததாக, அவனின் பார்வை யாழினியின் பெற்றோரின் முகத்தின் மீது விழுந்தன. அவர்கள் இருவரின் முகத்திலும் சற்று பதற்றம் தென்பட்டது.
Advertisement
இப்போது, அவனின் பார்வை கடைசியாக யாழினியின் முகத்தில் வந்து மீண்டும் நிலைத்தது. அவளின் முகம் எந்த விதமான உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கவில்லையா அல்லது அவள் அதை தன்னிடம் வெளிப்படுத்தி விடக்கூடாது என்று கட்டுப்படுத்துகிறாளா என்பதை அவனுக்கு சொல்லத் தெரியவில்லை.
அவளின் முக உணர்வுகளை தான் அவனால் படிக்க முடியவில்லை… ஆனால், அவளின் உடல் மொழி அவள் பதட்டத்தில் இருப்பதை அவனிடம் காட்டிக்கொடுத்தது…அவளின் மெல்லிய சிவந்த மருதாணி இட்ட விரல்கள் நடுங்கின… அவளின் ரோஜா நிற கீழுதட்டை தனது பற்களால் கடித்தபடி நின்றிருந்தாள்… அந்த காலை நேரத்திலும் அவள் உடல் முழுவதும் வியர்வையில் நனைத்திருந்தது…(ஏப்ரல் மாச வெயில்ல யாருக்கா இருந்தாலும் வேர்க்கும்னு நீங்க நினைக்கிறது புரியுது சங்கத்தினரே…)
அவளின் உடல் மொழியை படித்து முடித்தவனுக்கு அவள் தன் முகத்தில் பதட்டத்தை காட்டாமல் இருக்க முயற்சிப்பது புரிந்தது.
Advertisement
ஆனால், ஒன்று மட்டும் இப்போது நன்றாக புரிந்தது… இங்கு பெண் மாறிய செய்தி தனக்கு மட்டுமே புதிய செய்தி.
Advertisement
மற்றொன்றும் நன்றாக புரிந்தது… இவர்கள் அனைவரும் சேர்ந்து திட்டம் போட்டு தான் தன்னிடம் இந்த விஷயத்தை சொல்லாமல் ஒருசேர மறைத்திருக்கிறார்கள்.
இவ்வளவு நேரம் அனைவரின் முக உணர்வுகளையும் படித்தவனுக்கு… அவனின் மன உணர்வுகளே அவனுக்கு சற்று குழப்பம் அளித்தது.
எவ்வளவு பெரிய விஷயம் இது… அவனது வாழ்க்கையில் அவனுக்கே தெரியாமல் ஒரு பெண்ணை நுழைத்திருக்கிறார்கள் …
Advertisement
அப்படி இருக்கும் போது, முதல்கட்ட அதிர்ச்சியைத் தாண்டி… இந்த விஷயத்தை அனைவரும் அவனிடம் மறைத்ததற்காக… அவனுக்கு நிச்சயம் கோபம் வந்திருக்க வேண்டும் அல்லது பத்திரிக்கை அடித்து ஊரெல்லாம் கொடுத்த பிறகு, கிட்டத்தட்ட திருமண நெருக்கத்தில் ஒரு பெண் அவனை மறுத்து சென்றதற்காக அவனுக்கு வேதனை எழுந்திருக்க வேண்டும்.
ஆனால், அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவனின் மனம் இப்போதும் நிதானமாக இருந்தது.
‘அடே ஒரு பொண்ணு ஒன்ன வேணாம்னு சொல்லிட்டு போய் இருக்கா… அத மறைச்சு உன்னோட அப்பா, அம்மா இன்னொரு பொண்ண உனக்கு கட்டி வச்சுருக்காங்க… நீ ஒரு ரோஷக்கார பய புள்ளையா இருந்தா, உனக்கு கோவம் தானே வரணும்… அத விட்டுட்டு இவ்ளோ நிதானமா யோசிச்சு கிட்டு இருக்க…’ என்று அவனின் மனமே அவளைக் காறித் துப்பியது.
அதற்கு அவன், ‘இப்போ அதுக்கு என்ன… கடைசி நேரத்துல கல்யாணத்துல பொண்ணு ஓடறதும்… இரண்டாவது பந்தியிலே பொரியல் கூட இல்லாம சாப்பாடு போடறதும்… ரொம்ப சாதாரணம் சரியா… என்னோட அப்பா, அம்மா எதை செஞ்சாலும் அது என்னோட நல்லதுக்கு தான் இருக்கும்’ என்று தனது மனதிடம் சப்பைகட்டு கட்டியவன்…
‘என்ன இங்க பொண்ணு தான் பிரச்சனை… பொண்ணு வேற யாரா இருந்தாலும் பரவால்ல… யாழினியா இருக்கிறதுதான் கொஞ்சம் ஏத்துக்க முடியாம இருக்கு…’ என்று நினைத்தவன் தனது பெற்றோரை குற்றம்சாட்டும் பார்வை பார்த்தான்.
மகனின் அந்தப் பார்வை அவனின் பெற்றோர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி அளித்தது. ஒருவேளை மகனின் பார்வையில் வேதனைத் தெரிந்திருந்தால்… அவர்களால் நிச்சயம் தங்களையே மன்னித்து இருக்க முடியாது.
என்னதான் மகனைப் பற்றி தெரிந்திருந்தாலும்… யாரின் மன உணர்வுகளையும் யாராலும் சரியாக கணித்து விட முடியுமா என்ன…
அந்த எண்ணமே… இவ்வளவு நாட்களாக அவனின் பெற்றோரை வாட்டி வதைத்திருந்தது.
அவன் பெண்ணின் முகத்தை பார்த்த நொடியில் இருந்து… முதலில் அவனது முகத்தில் தென்பட்ட அதிர்ச்சி… பிறகு அவன் அவர்களை ஆராயும் பார்வை பார்த்தது… இப்போது குற்றம்சாட்டும் பார்வை பார்ப்பது… என எந்த இடத்திலும் அவன் முகத்தில் சிறு வேதனை கூட பிரதிபலிக்கவில்லை. அதுவே அவர்களுக்கு போதுமானதாய் இருந்தது. அவன் தன் பெற்றோரின் முகத்தில் பார்வையை அழுத்தமாய் பதித்தவாறு, “மா… நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் கொஞ்சம் தனியா பேசணும்” என்றான்.
தேவி ஒரு நொடி யாழினியின் பெற்றோரை சங்கடமாய் பார்த்தவர், சட்டென்று சுதாரித்து நிலமையை சமாளிக்க, “யாழினி நீ கல்யாணத்துக்காக அதிகாலையிலயே எழுந்திரிச்சி இருப்ப… அதனால உனக்கு ரொம்ப சோர்வா இருக்கும்… நீ போய் கொஞ்சம் பிரெஷ் ஆகிக்கோ மா… அப்புறம் இன்னிக்கு இங்க யாரும் உன்ன வந்து உன்ன பாக்க மாட்டாங்க… அதனால பட்டு புடவைய மாத்திட்டு உனக்கு சௌகரியமான உடைய போட்டுக்கோமா.. உனக்கு உதவி பண்ண உங்க அம்மாவையும் கூட்டிக்கோ… அதோ அந்த ரூம்தான் உங்களுக்காக ஏற்பாடு பண்ணியிருக்கேன்” என்று சொல்லியவாறு ஒரு அறையை சுட்டிக் காட்டினார்.
அவரின் குறிப்பைப் புரிந்து கொண்ட யாழினியும்… அவளின் பெற்றோரும் உடனடியாக சோபாவில் இருந்து எழுந்தனர் .
தேவி அவர்களை அறைக்கு அழைத்து சென்று, அவர்களுக்கு வேண்டியதை எடுத்து கொடுத்து விட்டு, வெளியேற நினைக்கும் போது, யாழினி தயக்கத்துடன், ” அத்தை அவர் கிட்ட கொஞ்சம் பொறுமையா எல்லாத்தையும் எடுத்து சொல்லுங்க… என்ன இருந்தாலும் அந்த பொண்ணு ஓடிப்போனத சொல்லும் போது, அவருக்கு கொஞ்சம் வருத்தமா தான இருக்கும்…அவர முடிஞ்ச வர வருத்தப்பட விடாம மேலோட்டமா மட்டும் சொல்லுங்க அத்தை… அவர் கோபப்பட்டா என்னால தாங்க முடியும்… ஆனா வருத்தப்படறதா தாங்க முடியாது…” என்று சொன்ன மருமகளை பார்த்து நெகிழ்ந்த தேவி…
” இல்லமா, அவன் கண்டிப்பா இதுக்காக வருத்தப்பட மாட்டான். நீயே பாத்தால… அவனுக்கு பொண்ணு மாறானது தெரிஞ்சதும் அதிர்ச்சி தான் ஏற்பட்டுச்சி. வருத்தமோ, வேதனையோ, கோபமோ வரல… அந்த பொண்ணு போனத நெனச்சி அவன் கவலைப்படலன்னு அப்பவே உனக்கு தெரியலயா…” என்று மருமகளுக்கும் அவளின் பெற்றோருக்கும், என் மகனின் மனதில் அந்த பெண்ணால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை மறைமுகமாக உணர்த்திய தேவி..
“எப்படி… எப்படி… அவன் கோபப்பட்டா உன்னால தாங்கிக்க முடியுமா… என்ன அவன் கிட்ட நெறய வாங்கி கட்டியிருக்க போல” என்று சிரித்து கொண்டே கேட்டார்.
“அதெல்லாம் நிறைய வாங்கியிருக்கன்” என்று யாமினியும் சிரித்து கொண்டே சொன்னாள்.
“சரிமா… நீ பிரெஷ் ஆகு… நான் போய் வாத்திய கவனிக்கணும்” என்று மருமகளை பார்த்து கண்ணடித்த தேவி, அவளின் பெற்றோரிடம் தலையசைத்து விடைபெற்றார்.
தேவி அவர்களை அறைக்குள் விட்டுவிட்டு, நடந்து வரும்போதே மகனை முறைத்து கொண்டே வந்தார்.
“மா… நீங்க பண்ண வேலைக்கு… நான் தான் உன்னை முறைச்சு பார்க்கணும்… இங்க எல்லாமே தலைகீழா நடக்குது” என்ற பிரபுவிடம்,
“டேய்… வேண்டாம்… ஏதாவது சொல்லிட போறேன்… ஏன்டா மெத்தப் படித்த மேதாவி தான நீ… எப்ப எத பேசணும்னு கூட உனக்கு தெரியாதா… அவங்க எல்லாம் இருக்கும்போதே தனியா பேசணும்னு சொல்ற… இப்போ அவங்களும் நம்ம குடும்பத்து ஆளுங்க தான்… அவங்கள விட்டு நாம மட்டும் தனியா பேசினா, அவங்களுக்கு சங்கடமா இருக்காது” என்ற தேவியிடம்,
“ஆமா… ஆமா… நான் உங்ககூட பெரிய ரகசியம் பேச கூப்பிடறன் பாரு… அவங்களுக்கு சங்கடமாய் இருக்கிறதுக்கு… நானே உங்கள விசாரணைக்கு கூப்பிட்டு இருக்கேன்… அதை மறந்துடாத” என்ற பிரபுவிடம்
“டேய்… நீ வாத்தியார் தான்… எங்கள விசாரிக்க நீ ஒண்ணும் போலீஸ் இல்ல…” என்றார் அண்ணாமலை.
“அப்பா, ஊர்ல நடக்கிற திருட்டுத்தனத்தை தான் போலீஸ் விசாரிக்கணும்… வீட்ல நடக்கிற திருட்டுத்தனத்தை விசாரிக்க உங்க மகன் வாத்தியே போதும் சரியா…” என்ற பிரபு,
“என் வாழ்க்கையில கூடி கும்மியடிச்சிட்டு ,ரெண்டும் என்னமா பேசுதுங்க” என்று தன் பெற்றோரை பற்றி முணுமுணுத்தான் பிரபு.
“சரி விடுங்க …அவனுக்கே வாத்தியார் வேலை சலிச்சு அடிச்சு போல… ஒரு நாள்தான் போலீஸ் வேலை பார்த்துகிட்டுமே” என்று நக்கலாய் சொன்ன தேவி,
மகனைப் பார்த்து, “என்னடா முழு விசாரணையும் வராண்டா வுல நடக்குமா… இல்ல ரூமுக்கு போய் உன் விசாரணையை வச்சிக்கிறியா” என்றார் .
பிரபு எந்த பதிலும் சொல்லாமல், அவர்கள் வீட்டில் இருந்த மற்றொரு அறைக்குச் சென்றான்.
அவனை தொடர்ந்தபடியே, அவனின் பெற்றோரும் சென்றனர் .
இந்த நேரத்தில்… யாழினியின் பெற்றோரின் மனநிலையை பற்றி சொல்ல வேண்டுமென்றால்… அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
முதலில் பிரபு அதிர்ந்ததை பார்த்தவர்களுக்கு சற்று பதற்றமாக தான் இருந்தது.
என்னதான் முதலிலேயே அவனின் அம்மாவும் அப்பாவும் அவனை பற்றி சொல்லி இருந்தாலும், மனிதனின் மன உணர்வுகள்… எந்த நேரத்தில்… எப்படி இருக்கும்… என்று யாருக்கு தெரியும்.
ஆனால், அவன் அடுத்த நொடியே தன்னை சமாளித்து அங்கிருந்தவர்களின் முகத்தில் தென்படும் உணர்ச்சிகளை ஆராய ஆரம்பித்ததும், அவர்களுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது.
அவன் கோபம் கொள்ளாமல்… ஆராய்ச்சி செய்தால் நிதானமாக இருக்கிறான் என்றுதானே அர்த்தம் என்று எண்ணியவர்களுக்கு, தங்களது மகளின் தேர்வு சோடை போகவில்லை என்று அந்த நொடி சந்தோஷமாக இருந்தது.
அவன் தங்களின் முன், அவர்களின் பெற்றோரிடம் எந்த கேள்வியையும் கேட்க விரும்பாமல், அவர்களை தனியாக விசாரிக்க நினைத்ததையும் எண்ணி அவர்களுக்கு பெருமையே.
மேலும் என்னவென்றால், அவனைப் பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் நிறைய பேரிடம் விசாரித்து தெரிந்து கொண்டாலும், தேவி திருமணம் முடிந்து ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில், சட்டென்று தங்களையும் இந்தக் குடும்பம் தான் என்று சொன்னது அவர்களை நெகிழ்த்தி இருந்தது.
யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு சம்பந்தி… என்று எண்ணி பூரித்து போனார்கள்.
இனி, அவர்களின் ஒற்றை மகளின் வாழ்க்கையை நினைத்து… அவர்கள் எந்தவித கவலையும் கொள்ளத் தேவையில்லை .
அங்கே உள்ளே சென்ற பிறகு, நேராக தேவியிடம், “என்ன நடந்துச்சு” என்றான் பிரபு.
மகன் இதுவரை பொறுமையாக இருந்ததே போதும் என்று நினைத்த தேவி நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
