Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

39_2 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  – 39_2

 

வீட்டை அடையும் சமயம் தூறல் ஆரம்பித்திருந்தது. சாரலை முகத்தில் மோத விட்ட தென்றல், சிலிர்ப்பை ஏற்படுத்தியது. வீடு பூட்டி இருந்தது. மூர்த்தி சார் இல்லையோ? வந்து விடுவார்.

 



Advertisement

ஊருக்கு போவதற்கு முன் செடிகளை பார்த்தது… வாசலில் இருந்த செடிகளைப் பார்வை இட்டவள் கண்ணில் பட்டது அவர்கள் பன்னீர் ரோஜாவின் மொட்டு. கொத்தாய் மொட்டுக்கள். பெரிய மொட்டை சுற்றிக் குட்டி குடியாக நிறைய மொட்டுக்கள். எத்தனை வருடக் காத்திருப்பு. நாளை மலர்ந்துவிடும். மூச்சை உள்ளிழுக்க மண்வாசத்தோடு பன்னீர் ரோஜா மணம் உள்ளே சென்றது.

 

‘என்ன மணம் துளசி?’ காதுக்குள் ஒலித்தது மூர்த்தியின் சத்தம்.

Advertisement

 

Advertisement

‘நம்ம செடி பூக்குது மூர்த்தி சார்..’

 

ரோட்டில் சென்ற சைக்கிளில் இணைத்திருந்த டிரான்சிஸ்டர் பாடிக்கொண்டே சென்றது. பாடல் அவள் மூளைக்குள் நுழைந்து கொண்டது.

Advertisement

 

“ஏதோ மோகம் ஏதோ தாகம்

நேத்து வரை நினைக்கலையே

ஆசை விதை முளைக்கலையே”

 

பாடலை ஹம் செய்துகொண்டே தானாய் சிரித்தாள். உள்ளுக்குள் மீண்டும் படபடப்பு… ஆனால் இன்ப படபடப்பு. மூர்த்தியை விட்டு ஓட தோன்றவில்லை. ஒட்டிக் கொள்ளத் தோன்றியது.

 

ரோஜா மொட்டை வருடினாள். என்ன தோன்றியதோ மொட்டுகளை எண்ண ஆரம்பித்தாள். ‘ஒம்பது ஒம்பது’ என்று மனம் சொல்லிக் கொண்டே இருக்க.. எண்ணினாள். ஒன்பது இல்லை.

 

‘பன்னெண்டா..? நாடு தாங்காது. மூனோட நிறுத்திக்கலாம் மூர்த்தி சார்’ சிரித்துக் கொண்டாள்.

 

மழை வலுத்தது. வராண்டாவில் நின்று கொண்டாள். மூர்த்தியோடு சென்று மூர்த்தியோடே வரவிருப்பதால் சாவி வைத்திருக்கவில்லை.

 

சாரல் தீண்டிய உடலைத் தென்றல் அணைத்தது. ஏற்கனவே நனைந்த உடல் சிலிர்த்தது. அரை மணி நேரம் ஆகியும் மழை நின்றபாடில்லை.

 

மழை வேகம் கூட.. சாரல் உடலை முழுவதும் நனைத்திருக்க.. குளிரெடுக்க ஆரம்பித்தது.

 

முழுவதும் நனைந்த பின் ஒளிந்து நின்று என்ன செய்ய? நனைந்து கொண்டே படி ஏறினாள். வழக்கம் போல் மாமி வீட்டில் இல்லை. மெல்ல இறங்கி வந்தாள். கடைசி படியில் அமர்ந்துவிட்டாள்.

 

‘பச்.. போயிருக்கவே கூடாது. இவர் எங்க போனார்?’

 

மழைக்கு நிற்கும் எண்ணமில்லை. அவளுக்கு நிற்கத் திராணி இல்லை.

 

கடிகாரம் நிற்கவில்லை. மழையும் நிற்கவில்லை, மூர்த்தியும் வரவில்லை. உடல் நடுக்கம் கட்டுப்படுத்த முடியவில்லை. பல் தடதடக்க ஆரம்பித்தது. நனைந்த உடலோடு எங்குச் செல்ல?

 

ஒன்பது மணிக்குத் தான் வருவாரோ? பயம் பிடித்தது. ‘அதற்குள் செத்துப் போய்விடக் கூடாதே..’ குளியலறை நினைவில் வர வீட்டின் பின்புறம் சென்றாள்.

 

குளியலறை கை நீட்டி வரவேற்றது. உள்ளே சென்று முழங்காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்து விட்டாள். ஈர உடலில் ஊசி இறங்கும் வலி. குளிர் தேகத்தை துளைத்தெடுத்தது. எத்தனை நொடிகள்? எத்தனை நிமிடங்கள்? எத்தனை மணி நேரமாக அமர்ந்திருக்கிறாள்? அவளுக்கு தெரியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் எதுவுமே தெரியவில்லை. கை காலை அசைக்க முடியவில்லை.

 

ஒரு வழியாய் மழை நின்றது.

 

அடுத்த பத்தாவது நிமிடத்தில் வீட்டைத் திறந்து உள்ளே போனவன் முகத்தில் அடக்கி வைத்திருந்த கோபம்.

 

வீட்டுச் சாவி ஒரு மூலைக்குப் பறந்தது. கையிலிருந்த அவள் புத்தகங்களை மேசை மேல் விட்டெறிந்தான். இரண்டடி சென்றவன், என்ன நினைத்தானோ… மீண்டும் அதை எடுத்து அடுக்கி வைத்தான். கண் மூடி மூச்சை உள்ளிழுத்து.. வெளிவிட்டு.. சமன் செய்து கொண்டான்.

 

இன்னும் அவன் மன நிலையில் மாற்றமில்லை. தன்மானத்தைச் சீண்டிவிட்டிருந்தாள் பெண். மூர்த்தியிடமிருந்து ஓடி ஒளிந்திருக்க வேண்டாம். குழப்பத்தை.. படபடப்பை மூர்த்தியிடமே கூறியிருக்கலாம். விளக்கியிருப்பான்.

 

இது என்ன வாழ்க்கை என்ற சலிப்போடே பாலை அடுப்பில் வைத்தான். தனிமை பிடிக்கவில்லை. வானொலி பெட்டியை உயிர்ப்பித்தான்.

 

“எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்

வீணாகத்தான் போகுது

அந்த வெள்ளி நெலா காயுது..

 

பாடல் கடுப்பேற்றியது.

 

‘தல எழுத்து’ முனகிக்கொண்டே, துண்டை இடையில் கட்டிக்கொண்டு, அடுப்பை அணைத்து, கிணற்றங்கரைக்கு சென்றான். கடனே என்று ஒரு வாளி தண்ணீரை ஊற்றி குளியலை முடித்து, உடலை துடைத்து கொண்டு நிற்க.. முனகல் சத்தம்.

 

எங்கிருந்து?

 

பார்த்தவன், நடுங்கிப் போனான். “துளசி மா… துளசி.. துளசி மா..”

 

அவன் துண்டால் துடைத்து, மாற்ற எடுத்து வந்த வேட்டி, துளசியைச் சுற்றிக் கொள்ள, தூக்கிக் கொண்டு படுக்கையில் கிடத்தி இரண்டு போர்வை கொண்டு மூடி, தலை துவட்டி, கை, காலை அனல் பறக்க தேய்த்தபின்னும் முனகல் நின்றபாடில்லை.

 

நீண்ட போராட்டம்.. கால் ரேகை அழிந்து போகும் முன், “மூர்த்தி சார்” என்றாள். பெண்ணவள் குரல் கேட்டவன், சப்த நாடியும் ஒடுங்க.. ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்துவிட்டான். நிம்மதி மூச்சு வெளிவந்தது.

 

தலை மாட்டிற்கு வந்தவன், தலையை வருடி விட்டுக் கொண்டே, “என் வாழ்க்கையில என்னை இப்படி யாருமே பாடா படுத்தினதே இல்ல துளசி மா. கொல்ற துளசி என்னை..” என்றான், குரலில் பகுத்தறிய முடியா உணர்வு.

 

“மூர்த்தி சார்..” உதடு நடுங்கப் புன்னகைத்தாள்.

 

“ம்ம்கும்… இப்படிக் கூப்பிட்டுக் கூப்பிட்டே என்னை முழு பைத்தியக்காரன் ஆக்கிடு”

 

“மூர்த்தி சார்!” கண்ணை உருட்டினாள்.

 

“இரு சூடா பால் எடுத்துட்டு வரேன்..” அவன் நகரவும் ..

 

“மூர்த்தி சார்… இஞ்சி போட்டு டீ..” என்றாள். உதறல் விட்டபாடில்லை இருந்தும் உத்தரவு பலமாக வந்தது.

 

மஞ்சள் தூள் போட்ட மிளகு பால் கொண்டு வந்தான். “எழுந்து அடம் பிடிக்காம குடி”. கட்டில் அருகிலிருந்த குட்டி மேசை மேல் வைத்தான்.

 

ஈர துண்டிலிருந்து வேட்டிக்கு மாறினான்.

 

சூடு பால் தொண்டைக்கு இதமாக இருந்தாலும், குளிருக்கு உதவவில்லை.

 

“குடிக்கறியா இல்லியா?” கேட்டுக் கொண்டே திரும்பியவன் தன்னை மறந்து நின்றது ஒரு சில வினாடிகள் தான்.

 

சாய்வாய் அமர்ந்திருந்தாள், பால் கோப்பையோடு. மூடியிருந்த போர்வை மடி வரை இருக்க.. நின்றுவிட்டான்.

 

மார்பை சுற்றிய லுங்கியோடு குளத்தில் அவர்கள் ஊரில் பெண்கள் குளிப்பது சகஜம். அவனும் அவர்களைக் கடந்து தான் போவான். இவன் தான் மனைவிக்கு உடுத்தியும் விட்டது. மனைவி கண்விழிக்க வேண்டுமே என்ற வேண்டுதல் மட்டுமே இருக்க அப்பொழுது எதுவும் கவனத்தில் பதியவில்லை.

 

முதல் முறை பளிங்கு தேகம் ஆண்மகனை அசைத்துப் பார்த்தது. பார்வையை விலக்கப் பாடுபட்டான்.

 

காலி கோப்பையோடு அவன் செல்ல..

 

“என்னங்க ரொம்ப குளிருது” என்றாள், உடல் நடுங்க பற்கள் அடித்துக்கொண்டது.

 

“மூடிக்கோ… வரேன்” என்று திரும்பி பார்க்காமல் அடுக்களைக்குச் சென்று வந்தான்.

 

சுருண்டு படுத்திருந்தவள் அருகில் அமர்ந்தவன், கையை மட்டும் வெளியே எடுத்து மீண்டும் அனல் பறக்க தேய்துவிட்டான். மறந்தும் அவள் பக்கம் திரும்பினான் இல்லை.

 

“ரொம்ப குளிருது மூர்த்தி சார்” தந்தி அடித்துக் கொண்டே முதுகைக் காட்டி கட்டிலில் அமர்ந்திருந்தவனை ஒண்டிக்கொண்டாள். தலைவன் இதயம் பந்தயத்திற்குத் தயார் ஆனது.

 

அடித்துக் கொண்டது – அவளுக்குப் பல்… இவனுக்கு இதயம்.

 

காலையிலிருந்து அவள் அவனிடம் காட்டிய ஒதுக்கம்.. இன்னும் மறக்கவில்லை. அவனிடம் இருந்து பயந்து ஓடி ஒளிந்தவளாயிற்றே.. மூர்த்தியால் நெருங்க முடியவில்லை.

 

“கொஞ்சம் பொறுத்துக்கோ…” என்றான்.

 

சில்லிட்ட விரல் சில்லிட்ட தேகம் தொட்டால்.. அனல் பறக்குமா?

 

ஒரு கை கணவன் மடியில் இருக்க.. மறு கை மூர்த்தியின் முதுகை வருடியது.

 

இங்கு, அந்த சின்ன தீண்டலில் தீ மூண்டது.

 

“தாங்க முடியல.. உடம்பெல்லாம் குத்துது” என்றாள் நடுக்கம் குறையாமல். தோள் மேல் இருந்த சில்லிட்ட கை.. மெல்ல நட்டெலும்பு வழியே கீழே இறங்கி இடையைச் சுற்றவுமே.. எழுந்து விட்டான்.

 

“இரு இன்னொரு போர்வை எடுத்திட்டு வரேன்” தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவன் எழுந்து கொள்ளவும்.. அவன் கையை பிடித்துக்கொண்டாள் மனையாள்.

 

“குளிருது மூர்த்தி சார்..” என்றாள்.

 

அவன் திரும்பினான் இல்லை.

 

“அதுக்கு தான் போர்வை எடுக்குறேன்னு சொன்னேன்”

 

“நான் உங்கள மூர்த்தி சார்ன்னு கூப்பிடுறனாலையோ… நீங்க என்னைக் குட்டி பொண்ணா நினைக்கிறனாலையோ… நீங்க என் வாத்தியாரும் இல்ல.. நான் உங்க குட்டி பொண்ணும் இல்ல மூர்த்தி சார்..” தடதடக்க கூறினாள்.

 

சிரிப்பு வரத் திரும்பினான்.

 

“அப்போ நீங்க யாரு?” சிரித்துக் கொண்டே கேள்வி கேட்டான்.

 

“கண்டு பிடிச்சு சொல்லுங்க..” எழுந்து சாய்வாய் அமர்ந்துகொண்டே பதில் உரைத்தாள்.

 

என்ன முயன்றும் கண் சொல் பேச்சு கேட்கவில்லை. தறி கெட்டலைந்தது. ஷண நேரத்தில் கனமான சூழல்.

 

காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது

காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது

 

ஆசை கொல்லாமல் கொல்லும்

அங்கம் தாளாமல் துள்ளும்

என்னைக் கேட்காமல் ஓடும்

இதயம் உன்னோடு கூடும்

 

விரகமே ஓ நரகமோ சொல்

பூவும் முள்ளாய் மாறிப் போகும்

 

பனி விழும் இரவு நனைந்தது நிலவு

இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது

பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது

வா… வா… வா…”

 

வானொலி பெட்டி அதன் வேலையை செவ்வனே செய்தது.

 

தவிப்பும் தாகமும் கரைபுரளச் செய்வதறியாது நின்றான். அவள் ஓடி ஒளியாமல் இருந்திருந்தால் இப்படி நின்று வெந்து கொண்டிருக்க மாட்டான்.

 

“குளுருது மூர்த்தி சார்.” என்றாள் மீண்டும். வாய் தந்தியடிக்க படுத்திருப்பவளை இன்னும் எவ்வளவு நேரம் தான் பார்த்து நிற்பது?

 

“உள்ள இருந்து இன்னும் ஒரு ஷீட் எடுக்கறேன் துளசி” அவன் நகர, கைவிரலை அவள் விட்டாளில்லை.

 

“கணக்கு வாத்தியாருக்குக் கணக்கு பண்ணவும் தெரியல… கணக்கு வாத்தியார எப்படி கணக்கு பண்றதுன்னு எனக்கும் தெரியல!” வாய் முணுமுணுத்தது.

 

கொஞ்சம் சத்தமாக முணுமுணுத்திருக்கலாம்.

 

“என்ன?” அவன் திரும்பி அவளைப் பார்க்க.. அவள் விழி அவன் மேல் தான். அவளும் எவ்வளவு நேரம் தான் விழியால் விருந்துண்பாள்? கையை பிடித்தாயிற்று.. இன்னும் நின்று கொண்டிருந்தால் அவளும் என்ன தான் செய்வாள்? எப்படி அழைப்பது? தெரியவில்லையே..!

 

கொள்ளை அழகு கண் முன் கொட்டி கிடந்தாலும், அவன் விழியைக் கட்டுக்குள் வைப்பது அத்தனை எளிதாக இருக்கவில்லையென்றாலும். வாழ்வில் இது மிகப் பெரிய சோதனையாகத் தோன்றினாலும்… தன்மானம் இழக்க மூர்த்தியால் முடியாது. வேண்டாம் என்று ஓடி ஒளிந்தவளிடம் சென்று பாய முடியாது அவனால்.

 

‘ஆமா.. இவ ஆசையா பாக்கிறான்னு நினைச்சு கிட்ட போனா.. முகத்த கூட பாத்துத் தொலைய மாட்டா. உயிர எடுத்துகிட்டு!’

 

இன்னும் ஒரு நொடி நின்றாலும் கண்டிப்பாகத் தவறாகிவிடும் என்று தோன்றவுமே..

 

“கை விடு துளசி… உயிர எடுக்காத. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. என்னைத் தேவ இல்லாம சீண்டாத.”  எரிந்து விழுந்தான்.

 

‘தேவையோடே சீண்டினா?’ பார்ப்பதை நிறுத்தவும் இல்லை… கையை விடவும் இல்லை. விரலில் அழுத்தம் கூடியது.

 

அவன் முனிவன் இல்லையே.. எதிரில் இருப்பது அவன் மனைவி. இதற்கு மேலும் தள்ளி நிற்க இளமை இடம் கொடுக்கவில்லை. நெருங்கத் தன்மானம் இடங்கொடுக்கவில்லை. முழு சித்திரவதை இது தான்.

 

“என் உயிர எடுக்கணும்ன்னு முடிவில இருக்கியா? இப்போ உனக்கு என்ன தான் வேணும்? கைய விட்டா தானே ஷீட் எடுக்க முடியும்? நான் உதற விரும்பல.. நீயே கைய விடு”

 

அவன் நெருங்க தள்ளிச் சென்றவள்.. அவளே நெருங்கினாள். மெல்ல அவன் உள்ளங்கை அவள் கன்னத்தில் பதித்து கொள்ள.. குளிருக்கு இதம். உள்ளங்கைக்குள் கன்னம் உலா வர.. இருவருக்குமே பாடாய் போனது.

 

உள்ளங்கையில் உதடு உரச.. “மூர்த்தி சார்..” என்றாள். குரலில் கிறக்கம். கண்ணில் மயக்கம்.

 

ஒரு வழியாய் முனிவன் தவம் கலைந்து. கோபம் விடைபெற்றது.

 

விரல் தன்னவள் இதழ் வருடவுமே… பெருவெள்ளம் மடை திறந்தது. மீண்டும் அவள் பார்வை கண்ணாளன் முகத்திற்கு உயர.. கண்கள் மோத… உள்ளம் உரச.. விரல்கள் பின்னிப் பிணைய.. அவள் குளிரும் தேகத்திற்கு அனலாய் அவன்.

 

போர்வைகளுக்கு வேலையில்லாமல் போயிற்று.

 

“நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி

பொன்வண்டோடும் மலர் தேடி

பொன்வண்டோடும் மலர் தேடி

 

என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்

நீ எந்தன் உயிர் அன்றோ

 

பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது

இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..”

 

பாடல் கடுப்பேற்றவில்லை.

 

ஆழ ரசித்தான். காதில் நுழைந்ததையும்… கண்ணை கவர்ந்ததையும்.

 

இமை மூடிய பெண்ணோவியத்தால், இதழை மூட முடியவில்லை. இது புது அனுபவம்.. உச்சி முதம் பாதம் வரை ஒவ்வொரு அணுவையும் புரட்டிப் போடும் உணர்ச்சி பெருக்கை எதிர்பார்க்கவில்லை.

 

அன்று.. இருட்டின் மறைவில் பல்லைக் கடித்து இரவை கடத்தும் தெளிவோடு தான் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள்.

 

இன்று.. இரவு ஆரம்பிக்கவில்லை… வெளிச்சம் தடுக்கவும் இல்லை. மெல்ல மெல்ல.. பொறுமையாய், காதலாய் ஆட்கொண்ட கணவனுக்குள் தன்னை முழுவதுமாக கொடுக்க.. அவனும் அவளுள் புதைய.. காதலில் காமம் கலக்க இருதேகமும் பற்றி எரிந்தது. அவன் விரும்பியது போல்.. அந்த குளிரிலும் வேர்த்தது. ஆனால் ‘துளசி தள்ளேன்’ என்று கூற தோன்றவில்லை. இன்னும் வேண்டும் என்றது எட்டு மாத தவிப்பு.

 

அத்தனை மணி நேர தீண்டலிலும் மூர்த்தி மாட்டும் தான் துளசியின் உள்ளும் புறமும். ஒரு ஓநாயும் நினைவில் வரவும் இல்லை.. அவளைப் பிராண்டவும் இல்லை. பழைய தழும்புகளுள் மறைந்திருந்த அருவருப்பான நினைவுகள் எல்லாம் கணவனின் வியர்வையால் கழுவப்பட்டு.. இன்ப அவஸ்தைகளால் நிரப்பப்பட்டது.

 

துளசிக்குள் இருந்த பழைய வலி.. கேவல்.. அலறல்.. என்று அவளைப் பயமுறுத்திய எல்லா இருட்டும், மூர்த்தி என்ற தீபத்தால் நிறைக்க.. இனி அவனோடு சேர்ந்து அவளும் ஒளிர்வாள்.

 

நிலவும் நட்சத்திரமும் கருமேகத்தால் மூடப்பட்டது. நின்ற மழை மீண்டும் ஆரம்பித்தது. இரவு முழுவதும் மழை விடாது பெய்யும் என்றது வானிலை அறிவிப்பு.

 

அவர்கள் வாழ்வில்:

வறண்டச்  செம்மண் பூமி மேல் ஒரு சொட்டு மழை நீர் விழ… பூமி உள்வாங்கியது நீரை.

சொட்டு சொட்டாய் நீர் விழ.. செம்மண் உள்வாங்கிக் கொண்டே இருந்தது.

நீரும் செம்மண்ணும் ஒன்று சேர்ந்து விட.. நீரின் பண்பு மாறி.. செம்மண் தன்மை மாறி…. தனித் தனியே இருந்த  நீரும் செம்மண்ணும் ஒன்று சேர்ந்து, பிரிக்க முடியாத சேறாய் ஒழுகிச் சென்றது.

செம்புலம் சேர்ந்த நீர்த்துளியாய் துளசியும், மூர்த்தியும்.

 

மழை கொட்ட.. மழை நீரோடு செம்மண் மணம் வீசியது.

 

பன்னீர் ரோஜா மொட்டு மலர்ந்து மணம் பரப்பியது.

 

அந்திசந்தி பொழுதில், இணையின் அணைப்பில்.. ‘மூர்த்தி சார்’ துளசியின் உதடு முணுமுணுத்தது, சிணுங்கியது, அழுதது, சிரித்தது.

கொஞ்சலும் சிணுங்கலும் கவிதையாய் மாறியது.

துளசியின் எல்லா உணர்விலும் அவளின் மூர்த்தி சார் நிறைந்திருந்தான்.

 

‘துளசி..’ மூர்த்தியின் சத்தம் அறையை நிறைக்க.. துளசி மூர்த்தியை நிறைத்திருந்தாள்.

 

இருவருக்குமிடையே இருந்த ஒற்றை சுவரும் இடிந்து விழுந்தது.

 

கண் வழியே காதலை அவன் கடத்தவில்லை.

வாய் வார்த்தை கொண்டு மாயாஜாலம் செய்யவில்லை.

விரல் நுனியால் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தி மெல்லிய உணர்வைத்  தூண்டவில்லை.

 

மூர்த்தியின் காதல் அனைத்தையும் அவன் அன்பால்.. அரவணைப்பால்.. செயலால் உணர்த்தியிருந்தான். மீனுக்கு நீந்தச் சொல்லித் தர வேண்டாம். காதலும் அப்படி தான். என்ன போராட்டம் வந்தாலும், அதன் இணையைச் சேர்ந்துவிடும்.

 

கோமலாய் சீரழிந்து போக இருந்த ஒரு ஜீவனை அவன் வீட்டில்.. அவன் மனதில், துளசி மாடமாய் மாற்றிவிட்டிருந்தான்.

 

அவன்: புல்லாங்குழல்.

அவள்: பூங்காற்று.

நாம்: அவர்கள் இணைந்து எழுப்பும் இசையில் மயங்கி…

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!