Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்18

      அத்தனையையும் அவன் தந்தை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.. மகன் திருந்தியதில் மகிழ்ச்சி தான் என்றாலும்.. இத்தனை வருடங்கள் கழித்து தான் மிகவும் சுயநலமாக நடந்து கொண்டு.. தன் மகன் மகனின் வாழ்வு திசை மாறிப் போக காரணமாகிப் போனோமே என யோசிக்க ஆரம்பித்து இருந்தார்.

     பல வருடங்கள் தவமிருந்து பெற்றவன்.. அவன் அன்னை இருக்கும் வரையில் கண்ணில் நீர் வர அவள் அனுமதித்தது இல்லை.. அவள் சென்ற பின்பு அவன் கண்ணீரைத் துடைக்க ஆள் இல்லை.. தான் ஒரு நல்ல தந்தை இல்லை.. அவனுக்கு தான் தேவைப்படும் போது தன் மகிழ்வு பெரிதென அவனை கண்டு கொள்ளாமல் போய்விட்டேன் என கலக்கத்தோடு இருந்தார்.

     ரேவதியின் கணவன் இறந்த செய்தி கேள்வியுற்று அவனைச் சாடியவர்.. மகிழுக்குத் திருமணமான செய்தி கேட்டு உள்ளம் நொந்து போனார்.. தன் மகனால் அண்ணன் பேத்திக்கு இப்படியா.. இன்னும் என்னவெல்லாம் என்னால் அவர் பார்க்க வேண்டுமோ என மகிழின் தாத்தா முன் செல்லக் கூட மாட்டார்.

     குடித்துக் குடித்து மகன் சீரழிகின்றானே எனத் தெரிந்தும் ஒரு தந்தையாகத் திருத்தாமல் அவனை வெறுத்து ஒதுக்கிவிட்டு இன்று கொட்டிய பாலை நினைத்து அழுது என்ன பயன் என எண்ணியவர் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.



Advertisement

     ரகுவும் எழுந்து தன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு டிராவல்ஸ் கிளம்பினான்.. இருவரும் ஆளுக்கொரு திசையில் சென்றதை உறுதி செய்துவிட்டு மங்கை “உன் மாமனுக்கு புத்தி வந்திடுச்சு போல” எனக் கேலியாக முத்துக்குமரனிடம் கூற

     “மாமனா.. என்ன பொண்ணா தரப் போறான்.. போ அம்மத்தா.. உனக்கு வேற வேலை இல்லைனா” என அலட்சியம் செய்தவனை “சும்மா இருடா.. உங்கம்மா மேல இவனுக்கு அத்தனை பாசம்.. கூடப் பிறந்தாக் கூட இப்படி ஒட்டுதல் வராது” என தன் வாழ்நாளிலேயே ஒரு நல்ல விஷயத்தைக் கணித்தார்.

    அவனும் “அதான் இவனை இன்னும் உயிரோட விட்டு வச்சிருக்கேன்.. இல்லைனா உன்னை அவமானப் படுத்துற இவனுக்கு என்னைக்கோ சரக்குல பூச்சிமருந்து வச்சுக் கொடுத்திருப்பேன்” என்றான்.

Advertisement

      “அவனை விடுடா.. எதோ பண்ணிட்டு ஒரு மூலையில கிடக்கட்டும்.. உனக்குப் பொண்ணு பாக்கவா.. பெரியவர் பேத்தியத் தான் பிடிச்சிருக்குன்னு சொன்னியே.. உன் தாத்தாட்ட சொல்லிப் பேசச் சொல்லவா” என ஆவலாக மங்கை கேட்கவும்

Advertisement

     ‘லூசா நீ’ என்பது போல பார்த்தவன் “ராஜா பொண்டாட்டியை பொண்ணு கேட்கப் போறியா.. சும்மா விடுவானா.. ஏன் அம்மத்தா கூறுகெட்டுத் திரியுற” என கேலி செய்ய

      அவனை முறைத்த மங்கை “நானாடா கூறுகெட்டுத் திரியுறேன்.. நீ தான்டா அவளைப் பாத்து இப்படிப் பொண்ணு கிடைக்குமான்னு வழிஞ்ச” என நினைவுறுத்த.. “அது ஒரு நேரத்தில சொன்னது தான்.. அப்பவே மறந்துட்டேன்” என தோள்களைக் குலுக்கினான் குமரன்.

     “அப்ப சொத்து வரதா” என முகம் சுருக்கிய மங்கையிடம் “ஐயோ அம்மத்தா.. இது எல்லாம் என்ன சுண்டக்கா சொத்து.. உன் பேரனுக்கு அடிச்சிருக்க அதிர்ஷ்ட்டத்துக்கு எவ்வளவு வரப் போகுதுன்னு பாரு” என பூடகமாக்க கூறியவாறே எழுந்து கையைக் கழுவிவிட்டு மங்கையிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டான் குமரன்.

Advertisement

      எப்படியோ சொத்து வந்தால் சரி என்ற நினைப்பில் மங்கையும் தன் அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

       டிராவல்ஸில் சென்று வண்டியை நிறுத்திய ரகு.. சாவியை வாங்கச் செல்ல.. நெற்றி நிறைய விபூதிப் பட்டையுடன் அகலமாய்ப் புன்னகைத்த ஓனர் இவனைப் பார்த்து “வாங்க தம்பி” என்றழைத்து சாவியைக் கொடுத்தார்.. இன்று ஸ்டேண்டிற்குச் செல்ல வேண்டாம் எனக் கூறியவர் ஒருவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் கொடுத்து பேருந்து நிலையம் செல்லச் சொன்னார்.

இங்கு மகிழும் அகமும் முகமும் மலர பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாலும்.. நேற்று நந்தா அவள் அறைக்கு வந்த குற்றவுணர்வு மற்றவர்களை நிமிர்ந்து பார்க்க விடாமல் செய்தது தான்.. அவன் கூறிய அனைத்தையும் யோசித்தபடியே பள்ளிக்குச் செல்ல.. அவள் நாயகன் தான் அங்கு இல்லை.

     ‘எல்லாம் வெறும் வாய்.. நிஜத்தில ஒன்னும் கிடையாது’ என அவனைத் திட்டியபடியே தன் வழக்கமான பணிகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

       பேருந்து நிலையம் சென்ற ரகு முதலாளி குறிப்பிட்டிருந்த ஆளைத் தேட.. ஒரு இளவயது ஆணும் பெண்ணும் வந்தனர்.. புதிதாகத் திருமணமானவர்கள் போலும்..  அவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் குறிப்பிட்ட கோவிலுக்கு வண்டியைச் செலுத்தினான் ரகு.

     உள்ளே ஏறியதும் அந்த ஆடவன் “இவ்வளவு தூரம் வந்து என்னைப் பாருன்னு சாமி சொல்லுச்சா” என கிண்டல் விரவிய குரலில் கேட்க

     அந்தப் பெண்ணோ “நீங்க தானே அசோக் என்னோட பர்த்டேக்கு என்ன கேட்டாலும் செய்றேன்னு சொன்னிங்க.. இப்ப இப்படிப் பேசறிங்க.. உங்க நல்லதுக்காகத் தான் வேண்டுதல்” என அவனை மிரட்டிக் கொண்டிருந்தாள்.

     “உனக்கு உங்கம்மாவைப் பாக்கனும்னு சொல்லு.. அதை விட்டுட்டு எனக்காகன்னு கதை விடாதே சரியா” என்றான் அந்த அசோக்காகப் பட்டவன்.

        “இருக்காத பின்ன.. பாத்து ஒன் மன்த் ஆச்சு.. அப்பா தான் நம்மளை சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களே.. இன்னைக்கு என் பிறந்தநாள்னு கண்டிப்பா அம்மா அந்த அம்மன் கோவிலுக்கு வருவாங்க” என மகிழ்ச்சி பொங்கச் சொல்லிக் கொண்டிருக்க..

      அசோக்கோ “என்னால தானே.. நீ உன் ஃபேமிலியை விட்டுட்டு வந்துட்ட.. உனக்கும் என்னை மாதிரியே யாரும் இல்லாம பண்ணிட்டேன்ல” என வேதனைக் குரலில் பேச “அடி வாங்கப் போறிங்க அசோக்.. எனக்கு நீ போதும்.. அப்பா அம்மா நாளைக்கு கூட மனசு மாறலாம்” என அதட்டிக் கொண்டிருக்க.. அவர்கள் சொன்ன கோவில் வந்துவிட்டது.

      அவர்களை இறக்கிவிட்டு டிவைடர் இருந்ததால் யுடர்ன் போட சற்று முன்னே சென்று காரைத் திருப்ப.. அவன் காரை மின்னல் வேகத்தில் ஒரு லாரி கடந்து செல்லவும்.. ஒரு பெண்ணின் “அசோக்” என்ற கதறல் கேட்கவும் சரியாக இருந்தது.

      சாலையில் வைத்திருந்த கவனம் இப்போது குரல் வந்த திசையில் செல்ல.. அவன் இறக்கிவிட்ட பெண் நடு ரோட்டுக்கு ஓடுவது தெரிந்தது.. சுற்றிலும் கூட்டம்.. இவனும் இறங்கிச் சென்று பார்க்க.. சற்று முன்பு சிரித்துக் கொண்டிருந்த அவள் கணவன் சுற்றிலும் பூஜைக்கு வாங்கிய மலர்களும்.. மாலைகளும் இரைந்து கிடக்க இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தான்.

      “அசோக்.. அசோக்” என அவன் தலையை மடியில் வைத்துக் கொண்டு அவள் கதறுவது பார்க்க முடியவில்லை.. ரகுவிற்கு ரேவதியின் நியாபகம் தான் வந்தது.. அவளும் இப்படித் தானே கணவனை இழந்தாள் எனத் தோன்ற.. இல்லை.. இவனை சாக விடக் கூடாது என மனதில் உறுதி பிறக்க.. அவனை நெருங்கினான்.

      அவனை நிமிர்ந்து பார்த்த அந்தப் பெண்ணும் “சார்.. என் புருஷனைக் காப்பாத்துங்க சார்.. ப்ளீஸ்” என கதறத் துவங்கினாள்.

       இன்விடேஷனில் சிறு மாற்றம் இருக்க.. அதை நேரிலேயே சொல்லலாம் என நினைத்து அச்சகம் வந்திருந்த நந்தாவும் ரகு அந்தப் பையனைத் தூக்குவதைக் கண்டு அருகில் ஓடி வந்தான்.. அவனுக்காக கார் கதவை  திறந்த நந்தாவை அவன் ஆச்சரியமாகப் பார்க்க “சீக்கிரமா பக்கத்துல இருக்க ஜி.ஹெச் கொண்டு போ மாமா.. நான் பின்னாடியே வரேன்” என அவனைத் துரிதப்படுத்தினான்.

       அந்தப் பெண் அழுத்திப் பிடித்திருந்த அவள் கணவனின் பின்னந்தலையில் இருந்து ரத்தம் வருவதைக் கண்டு இன்னும் இன்னும் அழ ஆரம்பித்தாள்.

        பூஜைப் பொருட்களும் மாலையும் வாங்க அவர்கள் நின்றது தான் தெரியும்.. அவன் சத்தம் கேட்டுத் திரும்பி அவள் பார்க்கும் போது ஒரு லாரி அவனை அடித்து வீசுவதும் எதிரில் வந்த ஒரு ஆம்னியில் மோதி மீண்டும் அவன் கீழே விழுவதும் தான்.

        என்ன நடந்தது எனப் புரியாமல் அரை உயிராய் இருந்த கணவனை மடியில் கிடத்தி அவள் அழுது கொண்டிருக்க.. அதற்குள் மருத்துவமனை வந்திருந்தது.. அவர்களுக்கு முன் வந்திருந்த நந்தா கதவை திறந்து அவனை கைத்தாங்கலாக ஸ்ட்ரெச்சரில் வைக்க.. அவன் கண்கள் மேல் நோக்கி நிலை குத்திப் போயிருந்தது.

      அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் கொண்டு செல்லப்பட்ட அடுத்த பத்தாவது நிமிடம் வெளியே வந்த மருத்துவர் அவன் இறந்ததை அறிவித்துச் சென்றுவிட.. அந்தப் பெண்ணின் அழுகை பேரழுகை ஆனது.

         இவனையும் தன்னால் காப்பாற்ற முடியவில்லையா.. அரைமணி நேரம் முன்பு சிரித்துக் கொண்டிருந்த முழு மனிதன் இப்போது இல்லையா.. என ரகு அப்படியே சேரில் தொய்து அமர்ந்துவிட.. நந்தா அடுத்து என்ன மருத்துவரிடம் விசாரிக்கச் சென்றான்.

      பிரேதப் பரிசோதனைக்குப் பின் தான் உடல் அளிக்கப்படும் என அவர்கள் சொல்ல.. அந்தப் பெண்ணின் நிலை பரிதாபமாக இருந்தாலும் அவள் வீட்டிற்குத் தகவல் சொல்ல நம்பர் கேட்க.. அவள் அழுதபடியே “அசோக்குக்கு பேரன்ட்ஸ் இல்லை.. நாங்க லவ் மேரேஜ்.. ஒன் மன்த் முன்னாடி” என மீண்டும் கணவன் நினைப்பில் அழுதாள்.

     அவளுக்கு ஆறுதல் எல்லாம் இப்போது கூற முடியாமல் போக “சரிம்மா.. உன் பேரன்ட்ஸ் நம்பர் சொல்லு.. இங்கேயே இருக்க முடியாதுல்ல.. உங்கப்பா யாரு” என பொறுமையாகக் கேட்கவும்

      அவள் திக்கித் திணறியபடியே “எக்ஸ் எம்.பி அறிவழகன்” என்றாள்.. அவனுக்குத் தெரிந்தவர்கள் மூலம் அவரிடத்தில் செய்தி சொல்லியவன்.. ரகுவைப் பார்க்க அவனோ இடிந்து போய் அமர்ந்திருந்தான்.

       கண்கள் சிவந்து முகமெல்லாம் கலங்கி அவன் அமர்ந்திருந்த தோற்றம் நந்தாவையே சலனப் படுத்தியது.. அருகில் சென்று அமர்ந்தானே தவிர ரகுவிடம் ஏதும் பேச முயற்சிக்கவில்லை.

      அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு நடுத்தர வயது ஆண் கரை வேட்டியிலும் அவரது அருகில் தலையில் அடித்தபடி ஒரு நடுத்தர வயதுப் பெண்ணும் வர.. அவர்தான் அறிவழகன் என்பது நந்தாவிற்குப் புரிந்தது.

      அந்தப் பெண் அந்த இளம்பெண்ணைக் கட்டிக்கொண்டு “இப்படி புருஷனைத் தூக்கிக் கொடுக்கவா ஒரு அவசரக் கல்யாணம்.. எங்க இருந்தாலும் நல்லா இருன்னு தானே.. எங்களை விட்டுப் போனாலும் சரின்னு இருந்தோம்.. ஒரே மாசத்துல தாலியை அறுத்துட்டு நிக்கிறியே” என ஒப்பாரி வைத்தார்.

      அறிவழகனும் “அனும்மா.. இப்படி உன்னைப் பாக்கவா அருமை பெருமையா வளத்தேன்.. ஐயோ” என அந்த அனுவின் தலையை வருட.. அவள் தந்தையின் மார்பில் சாய்ந்து ஓவென அழுது தீர்த்தாள்.

      அந்த சத்தத்தில் கலைந்த ரகுவும் அவனைப் பார்க்க.. யார் அசோக்கை அழைத்து வந்தனர் என விசாரித்துவிட்டு இவர்களை நெருங்கினார் அறிவழகன்.

நாயகன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!