Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Intersteller Love

Vinto’s Interstellar Kaadhal Episode 19

அத்தியாயம் – 19

Morse code

   மோர்ஸ் கோட் என்பது டெலெகிராப் ( Telegraph ) என்னும் தொலைத்தொடர்பு சாதனத்தில் பயன்படுத்தக் கூடிய குறியீடுகளாகும். இதில் வெறும் இரண்டு வகையான குறியீடுகள் மட்டுமே இருக்கும். அவை புள்ளி (Dits) மற்றும் கோடுகள் (Dahs). ஆங்கிலத்தில் உள்ள இருபத்து ஆறு எழுத்துக்கள், அரபு எண்கள் போன்ற அனைத்திற்கும், தனித்தனியாக குறியீடுகள் உள்ளன. Telegraph-ஐ உருவாக்கிய Samuel Morse என்பவரின் நினைவாக, இந்தக் குறியீட்டுக்கு Morse code என்று பெயரிடப்பட்டது.



Advertisement

  இந்த Morse code பொதுவாக நாம் சுவிட்சுகளில் பயன்படுத்துவது போல, ஆன் – ஆஃப் போன்ற இரு நிலைகளே இருக்கும். பெரும்பான்மையாக, இதை ஒலிப்பு சத்தமாக தான் கேட்பார்கள்.

  குறுகிய ஒலிப்பு சத்தம் உடையதைப் புள்ளி என்றும், அதைவிட மூன்று மடங்கு அதிக ஒலிப்பு சத்தம் உடையதை கோடு என்றும் குறிப்பிடுவர்.

  வார்த்தைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியைக் குறிப்பதற்கு ஏழு புள்ளிகளைப் பயன்படுத்துவர். இந்தக் குறியீடுகளை எளிதாக்க, நாம் ஆங்கிலத்தில் அதிகமாக பயன்படுத்தும் எழுத்தான E– க்கு ஒரு புள்ளி குறியீடு ஆக்கப்பட்டது.

Advertisement

  இந்த விஷயத்தை எதிர்த்து  E என்ற எழுத்தே இல்லாமல் ‘Gadsby’ என்ற ஐம்பதாயிரம் வார்த்தை  கொண்ட நாவலை எர்னஸ்ட் வின்சென்ட் ரைட் (Ernst Vincent Wright) என்பவர் எழுதியது வேறு கதை.

Advertisement

  Morse code– இன் சிறப்பம்சம் என்னவென்றால், அதை நாம் அன்றாட வாழ்வில் கண் சிமிட்டுதல், Torch Light -ஐ பயன்படுத்துதல், விசில் அடித்தல் போன்ற வகையிலும் பயன்படுத்தலாம். இது Emergency Situation– க்கும் பொருந்தும். இதனை அனைவரும் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

******

Advertisement

நந்தினியின் எண்ணத்தை உணர்ந்த பொசய்டன்,  “நடந்ததை இன்னும் நீ முழுவதுமாக பார்க்கவில்லை, நந்தினி. உன் தாயையும் தந்தையையும் ப்ரொமேத்தியஸ் கொன்ற காட்சி, என் கண்முன்னே நிற்கிறது. இருபத்து நான்கு ஆண்டுகள் முடிய போகின்றது. ஆனால், இதெல்லாம் நடந்து சில நாட்கள் ஆனது போலத் தான் தோன்றுகிறது எனக்கு. அத்தனை ஆண்டுகள் கடந்ததற்கு ஒரே சாட்சி நீ தான், க்ரிசான்டா” என்றார்.

   நந்தினி என்ன தான் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள நினைத்தாலும், அவள் கண்கள் கோபத்தை வெளிப்படுத்தின.

  “சரி, அனைவரும் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நாளை கடைசி முறையாக, என்னுடைய நினைவுகளுக்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். அதற்குப் பிறகு நாம் ஈரின் கல்லைத் தேட தொடங்க வேண்டும்” என்றார்  பொசய்டன்.

  அதனைத் தொடர்ந்து பொசய்டனும், ஆரியனும் மட்டும்  தங்களது அறைகளுக்குச் செல்ல, ஆதியும் நந்தினியும் மட்டும் தனித்து விடப்பட்டனர். நந்தினி அந்த பார்ச்மென்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் எவ்விதமான எழுத்துக்களோ அல்லது வரைபடமோ தெரியவில்லை.

   அவளது முகத்தில் தெரிந்த தீவிரத்தை உணர்ந்த ஆதி, “சனா ! உன்ன நீயே கஷ்டப்படுத்திக்காத, நடந்தது நடந்துடுச்சு. இனி நாம அடுத்த வேலைகளை கவனிக்கணும்” என்றான்.

   “நான் அத பத்தி கவலப்படல, ஆதி. அந்த நினைவு எப்பொழுதும் எனக்குத் தூண்டுதலாக இருக்குமே தவிர, இடராக இருக்காது. நான் யோசிக்கிறது எல்லாம் செலினா சொன்னது பற்றித் தான். அந்த ஈரின் கல் ஒரு உண்மையான கயா கிரக வாசிக்குத் தேவைப்படும் நேரத்தில் உதவி செய்ய வரும் என்று சொன்னாங்க இல்லையா? ஆனால், நான் இந்த பார்ச்மென்டை  இவ்வளவு நேரம் பயன்படுத்த முயன்றும், அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையே. இதை எப்படி சால்வ் பண்றதுண்ணும் தெரியவில” என்றாள்.

   “பொறுமையா இரு, சனா. நாளைக்கு எப்படியும் ஒரு வழி கண்டுபிடிச்சுடலாம். இப்போதைக்கு நல்லா தூங்கி, ரெஸ்ட் எடு” என்றான் ஆதித்யன்.

   நந்தினியும் சரி என்று தலையை அசைக்கவே, இருவரும் உறங்கச் சென்றனர்.

  நடக்கும் அனைத்தும் தனக்கு தெரிந்தும், தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று துடித்துக் கொண்டு, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன அந்த இரு கண்கள்.

  மெல்ல அந்த விண்வெளி வாகனம் எல்லை இல்லாமல் பரந்து விரிந்திருக்கும் அந்தச் சமுத்திரத்தில் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

   அன்று யாருக்கும் சரியாக உறக்கம் வராததாலும், நடந்ததைத் தெரிந்து கொள்ளும் ஆர்வ மிகுதியாலும் மூவரும் பொசய்டன் வருவதற்கு முன்னரே அங்கு வந்து அமர்ந்திருந்தனர்.

  சிறிது நேரம் பொறுமையாகக் காத்திருந்த பின்னும் பொசய்டன் வராததால், ஆரியன் பொறுமையிழந்து அவரது அறைக்குள் நுழைய முயற்சிக்கும் போது, அவரே வெளியே வந்தார்.

  அங்கு இருந்தவர்களைப் பார்த்து வியந்தவர், அவர்கள் முன் வந்து அமர்ந்தார்.

   சிறிது நேரம் யாரிடமும் பேசாமல், கண்களை மூடி தனது நினைவுகளை ஒழுங்கு படுத்திய பொசய்டன், மெல்லக் கண் திறந்து ஆதித்யனைப் பார்த்தார்.

  பின், “ஆதித்யன், நான் உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்” என்றார்.

  அனைவரும் அவரைப் புரியாமல் பார்க்க, ஆதி அவரோடு எழுந்து சென்றான்.

  இருவரும் அந்த விண்வெளி வாகனத்தின் கன்ட்ரோல் ரூமிற்குச் சென்று கதவை மூடிக் கொள்ள, என்ன நடந்தது என்று ஆரியனுக்கும், நந்தினிக்கும் புரியவில்லை. சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தனர்.

  அவர்கள் இருவரது முகமும் பலத்த யோசனையைத் தத்தெடுத்து இருந்தது தெரிந்தது.

  மீண்டும் அனைவரும் பழைய இடத்தில் அமர்ந்து கொள்ள, பொசய்டன், “க்ரிசான்டா, இப்பொழுது நான் உங்களுக்குத் தேவையான கடைசி நினைவலையைக் காண்பிக்கப் போகின்றேன். அதன் பிறகு, நீ கயா கிரகத்தின் இளவரசியாக உன் கடமையை நிறைவேற்ற வேண்டும். நாங்கள் அனைவரும் உன் லட்சியத்தை அடைவதற்குப் பயன்படும் கருவிகள், அவ்வளவு தான். நாங்கள் யாரும் இல்லாமல் நீ தனித்து விடப்பட்டாலும், உன் இலட்சியத்தை நீ விட்டு விடாதே” என்றார்.

  அவர் கூறியதில் ஏதோ ஒன்று நந்தினிக்குப் புரிந்தும் புரியாமலும் இருப்பது போலத் தோன்றியது.

  அவளது யோசனையைத் தடை செய்யும் விதமாக, பொசய்டன் தனது கைகளை நீட்ட, மூவரும் அதைப் பிடித்துக் கொண்டனர். மெல்ல மெல்ல அவர்கள் அவருடைய நினைவுகளுக்குள் புகுந்து செல்ல…

 ******

இடம்: வெலாரிஸ் கோட்டை

  வெலாரிஸ் கோட்டையின் தோட்டத்தில்,  யூரஸூம் பொசய்டனும் நின்று கொண்டிருந்தனர். அப்போது சீரஸும், வல்கனும் உடன் மினர்வாவும் எதையோ தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருப்பது போலத் தெரிந்தது.

  பொசய்டனின் மகன் இளைய பொசய்டன் ஏதோ புத்தகத்தில் மூழ்கியிருந்தான். யூரஸின் முகத்தில் வருத்தம் நிரம்பி வழிந்தது.

   “பொசய்டன், உண்மையைக் கூறுங்கள். என் இளைய மகனைப் பற்றி பல்வேறு செய்திகள் என் காதுகளுக்கு வருகின்றன. ஆனால் நீங்கள் இதுவரை அதைப் பற்றி ஒரு வாரத்தை கூட தெரிவிக்கவில்லையே ?” என்று கேட்டார் யூரஸ்.

   பொசய்டன், யூரஸூக்கு இது எப்படி தெரிந்தது என அதிர்ந்து, “பேரரசே ! ப்ரொமேத்தியஸ் மிகவும் புத்திசாலி. கயா கிரகத்தின் வரலாற்றில் அவனது கண்டுபிடிப்புகள் அழியாச் சின்னமாக பதியும் நாள் வெகு தொலைவில் இல்லை. வேண்டுமென்றால் பாருங்கள், வளர்ந்தவுடன் அவன் எங்கள் பரம்பரைக்கு மரபு வழியாக வந்த பதவிக்குப் போட்டியாக வந்து விடுவான்” என்றார்.

  யூரஸ், “நான் எதைக் கேட்கின்றேன் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும், பொசய்டன்” என்று கூற,

   பெருமூச்சு விட்ட பொசய்டன்,  “அவனது அறிவு எல்லை இல்லாமல் இருக்கிறது, பேரரசே. அவன் தனது அறையில் தனிமையில் பல்வேறு சோதனைகளைச் செய்கின்றான். முக்கால்வாசி நேரம் அவன் அந்த அறையை விட்டு வெளியவே வருவதில்லை. வந்தாலும் யாரும் அவனைத் தன்னோடு சேர்த்துக் கொள்வதில்லை, மினர்வாவைத் தவிர” என்று  கூறியவர்,

  சற்று தயங்கி, “அவன் யாருக்கும் தெரியாமல் இரவு நேரங்களில் டைட்டனின் அறைக்குச் சென்று வருகின்றான்” என்று கூற, இடி தாக்கியது  போல அதிர்ந்து போனார் யூரஸ்.

  “என்ன சொல்கின்றீர்கள்,  பொசய்டன் ? அப்படியென்றால், செலினாவும் நானும் பயந்தது போலத்தான் நடக்கின்றதா ?” என்று யூரஸ் கேட்க,

  “இல்லை அரசே, அவன் எனது கண்காணிப்பில் தான் இருக்கின்றான். சோல் பாக்ஸில் இருந்த டைட்டனின் நினைவுகள் யாருக்காவது கிடைத்து இருக்குமோ என்று நீங்களும் செலினாவும் சிந்திப்பது தேவையற்றது. ஒரு முறை சோல் பாக்ஸூக்குள் நினைவுகள் சென்றுவிட்டால் அது கண்டிப்பாகச் சக்தியாக மாறிவிடும். நிச்சயம் ப்ரொமேத்தியஸிற்கும் டைட்டனுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார் பொசய்டன்.

   யூரஸ், “அனைத்தும் என் தவறு தான். என் மனைவியை இழந்த துக்கத்தில், நான் ப்ரொமேத்தியஸை ஒதுக்கி இருக்கக் கூடாது. இப்போது அதன் பலனை நான் அனுபவிக்கின்றேன். டைட்டனை எனது மூதாதையர்கள் குறைத்து எடை போட்டு விட்டார்கள். அதே தவறை நாமும் செய்யக் கூடாது. எதற்கும்  ப்ரொமேத்தியஸை உங்கள் கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் வேதனையுடன்.

  பொசய்டன், “பேரரசே ! நீங்கள் இப்பொழுதாவது ப்ரொமேத்தியஸிடம் பேசி, இந்தப் பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வரலாமே ?” என்று கேட்டார்.

  யுரஸ், விரக்திப் புன்னகையுடன், “அதற்கான காலம் கடந்துவிட்டது, பொசய்டன். இனி, அவனோடு நான் எப்படி சாதாரணமாக பழக முடியும். அதற்கான அத்தனை வாய்ப்புகளையும் அவன் நிராகரித்து விட்டானே” என்றார்.   

  காட்சி  சிறிது சிறிதாக மாறியது.

 ******

 இந்த முறை, வெலாரிஸ் கோட்டையில் இருந்த சிம்மாசன அறைக்கு வந்தனர்.  யூரஸ் ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஏழு  இருக்கைகளில் சிற்றரசர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

  மக்கள் அந்த நீண்ட அறையை நிறைத்திருக்க, சீரஸ், மினர்வா மற்றும் மற்ற சிற்றரசர்களின் வாரிசுகளும் கீழே நின்றிருந்தனர். வாலிப வயதிற்கே உரிய அழகும் துணிவும் அவர்களிடம் நிறைந்திருந்தது.

   குற்றவாளிக் கூண்டில் ப்ரொமேத்தியஸ் நிறுத்தப் பட்டிருக்க, யூரஸ், “பொசய்டன், விசாரணையைத் தொடங்கலாம்” என்று கூறியவுடன், பொசய்டன் துளியும் விருப்பம் இல்லாமல் தனது கடமையைச் செய்யத் தொடங்கினார்.

   “பேரரசே! இந்தக் குற்றவாளிக் கூண்டில் இருக்கும் ப்ரொமேத்தியஸ், டைட்டனின் கண்டுபிடிப்புகளைப் புதுப்பித்து வருவதாகவும், அதை வைத்து கயா கிரக வாசிகளைப் பரிசோதனை செய்வதாகவும், தகவல் வந்ததையடுத்து, அவருடைய அறையைச் சோதனை செய்ததில் ஒரு பெண் உயிருக்குப் போராடும் நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவை தான் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள்” என்றார் பொசய்டன்.

   அவர் கூறியதைக் கேட்ட யூரஸ், பொறுமையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, “ப்ரொமேத்தியஸ் ! இந்தக் குற்றச்சாட்டுகளை நீ மறுக்கின்றாயா ?” என்று கேட்டார்.

   ப்ரொமேத்தியஸ், நக்கல் சிரிப்புடன், “நிச்சயமாக, பேரரசே. தலைமை அமைச்சர் கூறியது அனைத்தையும் நான் மறுக்கின்றேன். நான் ஒன்றும் டைட்டனுடைய யோசனைகளை திருடவில்லை. என்னுடைய சொந்த அறிவாற்றலை வைத்துதான் என் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறேன். அந்தப் பெண்ணை பற்றிக் கூற வேண்டுமானால், நான் அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தேன். யாரோ என்னை மாட்டி விடுவதற்காக, அதைத் திரித்துக் கூறுகின்றார்கள்” என்று இளைய வல்கனைப் பார்த்துக் கூறியவன்,

   “வேண்டுமென்றால், அந்தப் பெண்ணைச் சோதனை செய்ய செலினாவை வரச் சொல்லுங்கள். உண்மை உங்களுக்கே தெரியவரும்” என்று கூறினான்.

  அவன் கூறிய பதிலில் பொறுமையிழந்த வல்கனின் மகன் முன் வந்து,  “விசாரணையில் குறுக்கிடுவதற்கு மன்னியுங்கள், பேரரசே ! தலைமை மந்திரி பொசய்டன் வேண்டுமானால் ப்ரொமேத்தியஸின்  அறையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரமான ஆயுதங்களை மறைக்க முயற்சிக்கலாம். ஆனால், நான் உண்மையைக் காட்டுகிறேன்” என்று கூறியவன், ஓர் அழகான ஆயுதத்தைக் காட்ட மக்களிடையே முணுமுணுப்பு சத்தம் எழுந்தது.

   ‘இதற்கு என்ன பதில் கூறுகிறாய் ?’ என்பது போல யூரஸ் ப்ரொமேத்தியஸைப் பார்க்க,

  “இதை நான் மறுக்கவில்லை. ஆனால், இதைப் பயன்படுத்தி நான் யாரையும் தாக்கவில்லையே. மேலும் இந்த ஆயுதங்களால் சோல் பாக்ஸில் இருந்து வரும் சக்திகளைச் சேமித்து வைத்துப் பயன்படுத்த முடியும். இதை நம் படை வீரர்களுக்காக நான் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை, பேரரசர் யூரஸ் இந்த சிறிய ஆயுதத்தைக் கண்டு பயப்படுகிறாரா ?” என்று கேட்க,

   யூரஸ், தனது பொறுமையைக் கைவிட்டு, “ப்ரொமேத்தியஸ் தன்மீது சுமத்தப்பட்டக் குற்றங்களைத் தானே ஒத்துக்கொண்டதால், அவனைப் பெருங்கடல் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன்” என்றார்.

   அதைக் கேட்டு ப்ரொமேத்தியஸைத் தவிர மற்ற அனைவரும் அதிர்ந்து போயினர்.

  ஏனெனில் டைட்டனை அழித்த உடன் அந்தப் பெருங்கடல் கோட்டையை, ஒரு சிறையாக மாற்றி தீயவழியில் தங்கள் சக்தியைப் பயன்படுத்துபவர்களின் சக்தியைக் குறைக்கவென்றே  அகஸ்டஸூம்  செலினாவும் வடிவமைத்தது தான் அந்தச் சிறையே. இப்போது ப்ரொமேத்தியஸ் அங்கு அடைக்கப்படுகிறான் என்றால்???

  பொசய்டன், “பேரரசே  !” என்று தயங்க, “என் உத்தரவைச் செய்து முடித்துவிட்டு, என்னைச் சந்தியுங்கள்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார் யூரஸ்.

   ப்ரொமேத்தியஸை ஏழு சிற்றரசர்களும் இழுத்துச் சென்றனர். ப்ரொமேத்தியஸ் வல்கனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே செல்ல, வல்கனின் கோபம் தலைக்கேறியது .

  இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மூன்று பேரின் மனதில், வேதனை வெள்ளமாய் பெருகியது.

  அடுத்த காட்சி மாறியது.

 ******

  இந்த முறை, அதே அறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன.

  இதுவரை ஆட்சி செய்த யூரஸூம்  மற்ற சிற்றரசர்களும் பொசய்டனும்  தத்தமது வாரிசுகளுக்குத் தங்களது பதவியைக் கொடுத்துவிட்டு, செலினாவின் உதவியுடன் சோல் பாக்ஸூக்குள் சென்றிருக்க, சிம்மாசனத்தில் பேரரசனும், பேரரசியுமாக சீரஸூம் மினர்வாவும் அமர்ந்திருந்தனர்.

  அவர்களுக்கு அருகில் இளைய பொசய்டனும், அவர்களுக்கு அடுத்த நிலையில் மற்ற சிற்றரசர்களும் நின்றிருந்தனர். அவர்களது பதவியேற்பைக் கண்டு மக்கள் ஆர்ப்பரிக்க, மெல்ல மெல்லக் காட்சிகள் உடைந்து, புதிய காட்சி உதயமானது.

******

   கோட்டையின் தோட்டத்திற்கு ஆதி, நந்தினி மற்றும் ஆரியன் வந்திருந்தனர். அங்கே சீரஸ், மினர்வா, வல்கன் மற்றும் அவருடைய மனைவி நின்றிருந்தனர்.

மினர்வா, “குழந்தை மிகவும் அழகாக இருக்கின்றான். எங்களுக்கு மட்டும் பெண் குழந்தை பிறந்தால், நிச்சயம் இவனுக்குத் தான் மணம் முடிப்போம்” என்று அந்தக் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே கூறினாள்.

   “பேரரசி மினர்வா கூறினால், அதற்கு மறுப்பேது” என்று சீரஸ் கூற, அங்கு சிரிப்பலை பரவியது.

   “குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் ? கண்டிப்பாக வல்கன் மட்டும் கிடையாது. எத்தனை தலைமுறைக்குத் தான் அதே பெயரை வைப்பது. எனக்கு அலுத்துப் போய்விட்டது. செலினாவிடம் கூறி அந்தச் சட்டத்தை மாற்ற வேண்டும். இந்தக் குழந்தைக்கு நான் தான் பேர் வைப்பேன்” என்று கூறிய சீரஸ், இரு நொடிகள் கழித்து, “இவன் பெயர் அக்கிலஸ்” என்றார்.

  மற்றவர்கள் அனைவரும் புன்னகைக்க, ஆதியின் முகத்தில் மட்டும் பொறாமை தென்பட்டது. அதைக் கண்ட நந்தினியும் ஆரியனும் தங்களுக்குள் சிரித்துக் கொள்ள, அவர்களை முறைத்தான் ஆதித்யன்.

  பெண்கள் இருவரையும் விட்டு தனியாகப் பிரிந்து வந்தனர், வல்கனும் சீரஸூம்.

  வல்கன், “சீரஸ், நான் கேள்விப்பட்டது உண்மையா ?” என்று கேட்க,

  “பொறுமை, வல்கன். ப்ரொமேத்தியஸ் சிறையிலிருந்து தப்பி விட்டான். அவனால் எந்தப் பாதிப்பும் வராது  என்று நான் உறுதி அளிக்கின்றேன். இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் அவன் மேல் கொண்ட துவேஷத்தை நீ குறைத்துக் கொள்ளவில்லையா, வல்கன் ? அவன் பக்கமும் ஏதாவது நியாயம்…” என்று சீரஸ் கூறி முடிப்பதற்குள்,

   “நீ வேண்டுமென்றால், பேரரசராக உனது கருணையைக் காட்டலாம். ஆனால், அந்த ப்ரொமேத்தியஸை மட்டும் நான் மன்னிக்க மாட்டேன். அவனைக் கண்டாலே எனக்கு டைட்டன் தான் நினைவுக்கு வருகின்றான். நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி, டைட்டன் தான் ப்ரொமேத்தியஸ். இன்னும் ஓராண்டில் கன்வர்ஜென்ஸ் வரப்போகின்றது. அதற்குள் அவனைக் கைது செய்ய வேண்டும்” என்றார் வல்கன்.

  என்னதான் உள்ளுக்குள் வல்கன், ப்ரொமேத்தியஸின் அறிவைக் கண்டு வியந்தாலும், எங்கே அவன் டைட்டனின் வாரிசாக இருப்பானோ என்ற எண்ணமே அவரது வெறுப்பை அதிகமாக்கியது

  ஆனால், அவர் இப்பொழுது பயன்படுத்துவதே ப்ரொமேத்தியஸின் தொழில்நுட்பக் கருவிகளைத் தான். எங்கே அவன் அதைத் தவறாகப் பயன்படுத்தி தனது மூதாதையர் டைட்டனிடம் ஏமாந்தது போல, தானும் ஏமாந்து விடுவோமோ என்ற பயம் தான் அவருக்கு.

  அதை அறிந்து வைத்திருந்த சீரஸ், ‘உன்னைத் திருத்தவே முடியாது’ என்பதைப் போலப் பார்த்தார்.

  அந்தக் காட்சி சிறிது சிறிதாக மறைய அடுத்த காட்சி தோன்றியது.

  ******

  இதுவரை, இது போன்ற காட்சி மாற்றத்தை அவர்கள் பார்த்ததே இல்லை. கயா கிரகமே இருள் சூழ்ந்திருப்பது போல தோன்றியது. அந்த இடமே நிசப்தமாக இருந்தது.

  பின்னர் அங்குக் காட்சிகள் தெளிவாகத் தெரியத் தொடங்க, அவர்கள் ஏதோ ஒரு மலைக்கு அருகில் வந்திருப்பது தெரிந்தது.

  அந்த மலையுடைய  வாயிலின் முன் ப்ரொமேத்தியஸ், தனது படை வீரர்களுடன் நின்றிருந்தான். அவன் ஏதோ ஏளனமாகப் பேசுவது மட்டும் அவன் முகபாவனைகளில் இருந்து தெரிய, அவன் என்ன பேசுகிறான் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

  சிறிது நேரம் கழித்து எழுவர் மலையிலிருந்து சீரஸூம் மினர்வாவும் வெளியே  வருவது தெரிய, நந்தினிக்கு ஏதோ பெரிய விபத்து நடக்கப்போகின்றது என்று அவள் உள்ளுணர்வு கூறியது.

  அங்கு என்ன நடக்கப் போகின்றது என அவளது அறிவு கூற, அவளது மொத்த உடலும் நடுங்கத் தொடங்கியது. இப்பொழுது வல்கனும் சீரஸும் ஏதோ பேசிக் கொள்ள, சிறிது நேரத்தில் ப்ரொமேத்தியஸ் விண்ணில்  செலுத்தப்பட்ட வாகனத்தைப் பின்தொடரத் தொடங்கினான்.

  அதனைத் தொடர்ந்து சீரஸூம் மினர்வாவும் தங்களது சோலை உடலை விட்டுப் பிரித்துக் கொண்டதைக் கண்ட நந்தினி பல உணர்ச்சிகளுக்கு மத்தியில் பந்தாடப்பட்டாள்.

   ப்ரொமேத்தியஸ் அவர்களது சோல்களை அழித்ததைப் பார்த்த போது, நந்தினியின் கோபம் உச்சத்துக்குச் சென்றது.

   இதற்கு முன்னரே வாய் வழியாகக் கேட்டிருந்தாலும், இப்போது அதைக் கண்ணால் கண்டது அவளைக் காயப்படுத்தியது. பொசய்டன் அங்கு இருந்த போதும் எதுவும் செய்யாமல் இருந்ததைக் கண்டு, அவள் தன் சுய நினைவை இழக்கத் தொடங்கினாள்.

அதுவரை அவளையே கவனித்து வந்த ஆதி, ஆரியனை இழுத்துக் கொண்டு அங்கிருந்து ஓட ஆரம்பித்து விட்டான். ஆரியனுக்கு எதுவும் புரியாவிட்டாலும் ஆதியைப் பின் தொடர்ந்து ஓட ஆரம்பித்தான்.

   சிறிது நேரத்தில் நந்தினியின் விழிகள் தங்க நிறத்துக்கு மாற ஆரம்பித்தன. அடுத்து அவளைச் சுற்றி சக்தி வளையங்கள் தோன்றத் தொடங்கின. மெல்ல மெல்ல அந்தச் சக்தி வளையங்கள் பெரிதாகிச் சுற்றி இருந்த இடத்தை சிதற வைத்தன.

  பின் யாரோ பலமாகக் கத்தும் குரல் அவள் செவிப்பறையைக் கிழிக்க, மெல்லச் சக்தி வளையங்கள் மறைய தொடங்கின. அவள் விழிகள் கருப்பு நிறத்திற்கு மாற அப்படியே மயங்கி விழுந்தாள்.

  அந்தக் காட்சி சிறிது சிறிதாக  ஒடிந்து விழத் தொடங்கியது.

 ******

  தனது மூளையில் உள்ள ஒவ்வொரு நரம்பும் வெடிப்பதைப் போல உணர்ந்தாள் நந்தினி.

  சுற்றிலும் அந்தகாரம்… தனிமை மரண தண்டனையை விடக் கொடுமையானது. அதுவும் அந்தக் கருப்பு மண்டலத்தில் யுக யுகமாக இருப்பது போல் தோன்றியது.

  அப்பொழுது அங்கே ஒரு பூ தோன்றி கண்சிமிட்டி அழைப்பது போலிருந்தது. அது செலினா என்று உணர்ந்து, அந்தப் பூவை நெருங்குவதற்குள். தூரத்தில் ஏதோ ஒரு சிறிய ஒளி தென்பட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி, அந்த இடத்தை ஒளிமயமாக மாற்றியது.

  அந்த ஒளியில் “சனா ! சனா !” என்று ஆதி கூறுவது போலக் கேட்க, மெல்லத் தனது இமைகளைத் திறந்தாள் நந்தினி.

  அவள் அவளது அறையிலிருந்த மெத்தையில் படுக்க வைக்கப்பட்டிருக்க, மெல்லச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

  ஆதியும் ஆரியனும் தன்னைப் பார்த்து கொண்டிருப்பது தெரிய, மெல்ல எழுந்து அமர முயன்றாள். அவளது முயற்சியைப் புரிந்துக் கொண்ட ஆதி அவளுக்கு உதவினான்.

  கொஞ்ச நேரம் அந்த இடத்தில் அமைதி நிலவியது. பிறகு, நந்தினி, “ஆதி, நான் மறுபடியும் அன்னைக்கு மாதிரி நடந்துக்கிட்டேனா ?” என்று கேட்க,

   ஆதி, “ஆமாம், சனா நீ கவலைப்படாத, எங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆகல” என்று கூறினான்.

  அப்போது தான் நந்தினி, அந்த இடத்தில் பொசய்டன் இல்லாததை உணர்ந்தாள்.

   தனக்கு இப்படி பிரச்சனை ஏற்பட்டிருக்க பொசய்டன் எங்கே போயிருப்பார் என்ற கேள்வி மனதில் எழ, அப்பொழுது தான் அவளுக்கு நினைவு வந்தது.

 “போன தடவை எனக்கு இந்த மாதிரி ஆனப்ப, என் ரூம்ல இருந்த எல்லா பொருட்களும் உடைஞ்சுடுச்சே, ஆரிக்கும் ஆதிக்கும் வேற சக்திகள் Transfer ஆச்சு. இந்த தடவை நான் பொசய்டனோட நினைவுகளில் தானே இருந்தேன். அப்படின்னா, அவருக்கு.. அவருக்கு…” இந்த எண்ணங்கள் அனைத்தும் ஓரிரு நொடிகளில் முடிந்துவிட, தன் மேல் உண்மையான அன்பை வைத்த ஜீவன் உயிர் இழந்தது அவளை யோசிக்கும் நிலைக்கு விடவில்லை.

  அதுவும் அவளுடைய செய்கையால் நடந்தது என்று நினைக்கும் பொழுது துக்கம் பொங்கியது. அப்பொழுது தான் அவர் அன்று நினைவுகளில் பயணம் செய்வதற்கு முன் பொசய்டன் கூறியதன் பொருள் விளங்கியது.

  ஆரியன், “நந்து, மறுபடியும் விஸ்வரூபம் எடுத்துடாத. நாம் இப்ப ஸ்பேஸ் ஷிப்ல இருக்கோம். நீ பாட்டுக்கு எல்லாத்தையும் அழிச்சிறாதமா” என்றவன்,

   “பொசய்டன் இப்போ உயிரோட தான் இருக்கார்” என்றான்.

  நந்தினி, “அப்புறம் ஏன் அவர் என்னைய பார்க்க வரல ? அவருக்கு ஏதாச்சும் பெரிய காயம் பட்டுடுச்சா ? எழுந்திருக்க முடியாம இருக்காரா ?” என்று கேட்க,

  ஆதி, “அவருக்கு ஒன்னும் இல்ல, சனா. அவருக்கு இப்போதைக்குக் கொஞ்ச நாட்கள் ரெஸ்ட் வேண்டும்” என்றான்.

  “டேய்… ரெண்டு பேரும் ஒழுங்கா சொல்லித் தொலைங்கடா, அவருக்கு என்ன ஆச்சு ? அது சரி நீங்க ரெண்டு பேரும் என் பக்கத்துல தானே இருந்தீங்க, உங்களுக்கு மட்டும் எதுவும் ஆகல ?” என்று கேட்க, தங்களது மரியாதை காற்றில் பறப்பதை உணர்ந்து, அதைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு,

ஆதி, “சனா உனக்கு எல்லாத்தையும் சொன்னா தான் புரியும். உன்கிட்ட இருந்து வந்த சக்தி அலைகளால பொசய்டனோட  மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கு. கொஞ்ச நாட்கள்ல அது சரியாகிடும். இன்றைக்குக் காலையில் அவர் என்ன தனியா கூட்டிட்டு போய் என்ன சொன்னாருனா…” என்று தொடங்கியவன், அன்று காலை பொசய்டனிடம் பேசியதைக் கூறினான்.

 ******

   அந்த அறைக்குள் நுழைந்த பின்னர், “ஆதித்யன், நான் இப்ப சொல்றத கொஞ்சம் கவனமா கேட்டுக்க. இன்னைக்கு நந்தினிக்கு காட்டப் போறது தான் கடைசி நினைவலை. அது முடியும் போது அவ ரொம்ப எமோஷனலா ட்ரிக்கர் ஆகிடுவா“ என்றார்.

  உடனே ஆதி, “அப்படினா மறுபடியும் அவளோட உடலிலிருந்து சக்தி அலைகள் வருமா ?” என்று கேட்டான்.

  “சரியாக சொன்னாய், ஆதித்யன். அவளிடம் கொஞ்சம் மாறுதல் ஏற்பட ஆரம்பித்த உடனே, அந்த இடத்தை விட்டு நீயும் ஆரியனும் ஓடி விடுங்கள். இல்லையென்றால், உங்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடும்” என்றார் பொசய்டன்.

  அவர் கூறியதைக் கேட்ட ஆதி, “எங்களுக்கு எதுவும் ஆகாது. ஆனா, இது உங்க மூளையில் நடக்கும் போது, உங்களுக்கு ஏதாவது ஆகிடுச்சுனா ?” என்று கேட்டான்.

  “அதை சொல்றதுக்கு தான் ஆதித்யன் உன்னைக் கூப்பிட்டேன். கண்டிப்பாக என்னுடைய மூளையில் பாதிப்புகள் ஏற்படும். ஆனால், அது என்னை அழித்து விடாது. நான் கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டி இருக்கும்.

அதுவரை நந்தினியை நீ தான் பார்த்து கொள்ள வேண்டும். ஈரின் கல்லைத் தேடுவதில், அவளுக்கு உதவி செய்து, அவளுக்குத் தேவையான நேரத்தில் ஆறுதலாக, ஒரு வழிகாட்டியாக நீ அவளை வழிநடத்த வேண்டும். இந்த விண்கலத்துக்கு நீ கலபதியாக பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

  அவர் கூறியதைக் கேட்ட ஆதித்யன், ஒரு நிமிடம் திகைத்துப் போனான். தன்னால் இது முடியுமா என்று தோன்ற, அவன் முகத்திலிருந்த எண்ணங்களைப் படித்த பொசய்டன், “உன்னால் முடியும், ஆதித்யன்” என்று கூற, ஆதித்யன் சம்மதமாகத் தலையசைத்தான்.

  அப்போது தான் ஆதிக்கு நந்தினியிடம் தான் இதே டயலாக்கை கூறியபோது, எப்படி உணர்ந்திருப்பாள் என்று புரிந்தது. பிறகு பொசய்டன் அவனுக்கு அந்த வாகனத்தை எப்படி கன்ட்ரோல் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

 ******

  அவன் அனைத்தையும் கூறி முடித்தபோது, நந்தினி சீட்டுக்கட்டு கோட்டையில் கடைசி சீட்டை வைக்கும் போது, அது முழுவதுமாக இடிந்து விழுந்தால் எப்படி இருக்குமோ, அப்படி உணர்ந்தாள்.

  “ப்ச்… எல்லாமே முடிஞ்சு போச்சு, இப்ப பொசய்டன் இல்லாம நாம் எப்படி ஈரின் கல்ல கண்டுபிடிக்கிறது ?” என்று சோர்வாகக் கேட்டாள் நந்தினி.

  மற்ற இருவரும் அதையே உணர்ந்தாலும் வெளியில் சொல்லவில்லை.

  “சனா இப்ப நமக்கு வேற வழி இல்லை. பொசய்டன் முழிக்குற வரைக்கும் நாம வெயிட் பண்ணோம்னா, கன்வர்ஜென்ஸ் பக்கத்தில் வந்துடும். அப்புறம் ப்ரொமேத்தியஸை அழித்து, மக்கள நம்மளால காப்பாத்த முடியாது. நாம உடனே ஏதாவது செய்ய தொடங்கணும்” என்றான்.

  நந்தினி கோபமாக, “நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன் ?” என்றவள், பக்கத்திலிருந்த அந்த பார்ச்மென்டை எடுத்து, குப்பை போலக் கசக்கினாள்.

  ஆரியன், ‘நந்து’ என்று கத்துவதும், நந்தினி ‘ஆ’ என்று அலறுவதும் ஒரே நேரத்தில் நடந்தது. ஆதித்யன் என்ன நடந்தது என்று புரியாமல் குழம்பி நிற்க, நந்தினி, “கையைக் கிழிச்சிடுச்சு, ஆதி” என்றாள்.

  ஆரியன், “பேப்பர் எப்படி கையைக் கிழிக்கும் “ என்று கூறிக்கொண்டே, அந்த பார்ச்மென்டை  எடுத்துப் பார்க்க, அதில் ஏதோ குறியீடுகள் தோன்றத் தொடங்கி இருந்தன. அந்த பார்ச்மென்டின் ஓர் ஓரத்தில் சிறிய ஆணி போன்ற ஒரு பொருளும் இருந்த்து.

ஆரியன் அதை உற்றுப் பார்க்கையில், நந்தினி வேகமாகச் சென்று அந்த பார்ச்மென்டைப் பிடுங்கிப் பார்க்க, அதில் வெறும் கோடுகளும் புள்ளிகளும் தான் இருந்தது.

  அதைப் பார்த்த ஆதி, “சனா, யூ டிட் இட்” என்று கத்த, இப்பொழுது தான் நந்தினிக்குத் தனது இரத்தம் பட்டவுடன் தான் அந்த பார்ச்மென்டில் அடையாளங்கள் தோன்றத் தொடங்கியது என்று புரிந்தது. சிறிது நேரம் கழித்து அதில் எந்த எழுத்துக்களும் வராமல் இருக்கவே, ஆதியும் நந்தினியும் குழம்பினர்.

(1) .– . ……. … .. -..- ……. -.– — ..- ……. .– .. .-.. .-.. ……. … . . ……. ..- -. .. –.- ..- .

 

(2) – …. . ……. … .. -..- ……. – …. .- – ……. .– .. .-.. .-.. ……. -.-. — — . ……. ..-. — .-. . …- . .-.

 

(3) -.. — .– -. ……. – …. . ……. …. .. .-.. .-.. ……. .– . ……. .-. — .-.. .-..

 

(4) .- -. -.. ……. -.. — ……. .– …. .- – ……. .- –. . … ……. -.. —

 

(5) – …. . ……. -.. .. ..-. ..-. . .-. . -. -.-. . ……. .. … ……. .– …. .- – ……. -.– — ..- ……. -. . . -..

 

(6) .– …. .. -.-. …. ……. .– .. .-.. .-.. ……. – .-. .- .–. ……. -.– — ..- ……. ..-. — .-. . …- . .-.

 

(7) .– . ……. .- .-.. … — ……. …. .- …- . ……. – …. . ……. ..- -. .. –.- ..- . ……. ..-. — ..- .-.

 

(8) – . .-.. .-.. ……. ..- … ……. .. -. ……. – …. . ……. .– .- -.– ……. .– . ……. -.-. — ..- .-.. -.. ……. …. . .- .-.

 

(9) -.. .. … – .- -. -.-. . ……. – — ……. – .-. . .- … ..- .-. . ……. .– .. .-.. .-.. ……. -… . ……. -. . .- .-.

 

(10) -… . .– .- .-. . ……. – …. . ……. .– .-. — -. –. ……. -.-. .- ..- … . … ……. ..-. .. .-. .

“இது ஏதோ வேறு ஒரு கோட் வேர்ட் போலிருக்கு, நந்து” என்று ஆதி கூற,

“அது Morse Code” என்றான் ஆரியன்.

  இருவரும் அவனை நம்பிக்கையின்றி பார்க்க, “உங்க ரெண்டு பேர் மேலயும் சத்தியமா சொல்றேன்டா. அது மோர்ஸ் கோட் தான். சாமுவேல் மோர்ஸ் தான்  இதைக் கண்டுபிடித்தார். ஆனா, இப்போதான் புரியுது இந்த குறியீடும் கயா கிரகத்துல இருந்து தான் வந்திருக்கு” என்றான்.

  “சரி சீக்கிரம் அதை டீக்கோட் செய்டா” என்றான் ஆதி.

  “ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு குறி இருக்கு. இரண்டு வார்த்தைக்கு இடைவெளி விடனும்னா  ஏழு புள்ளிகள் வைக்கணும்” என்றவன், அந்த பார்ச்மென்டில் இருந்ததை வேறு ஒரு காகிதத்தில் மொழிபெயர்த்து எழுதி முடித்தான். அவன் முடிக்கும் வரை பொறுமையாக இருந்த இருவரும், முடித்தவுடன் படித்துப் பார்த்தனர்.

“We Six, you will see Unique

The Six, that will come forever

Down the hill, we roll

And do what ages do

The difference is what you need

Which will trap you forever

We also have the Unique Four

Tell us in the way we could hear

Distance to treasure will be near

Beware the wrong causes fire”

முழுவதுமாக படித்த மூவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

 இறுதி வாக்கியத்திற்கு மட்டும் அவர்களுக்குப் பொருள் விளங்கியது. ஏதாவது தவறு செய்துவிட்டால், அந்த பார்ச்மென்ட் எரிந்து விடும் என்பது தான் அது. அப்படி நடந்துவிட்டால் பிறகு அவர்களால் அந்த ஈரின் கல்லைக் கண்டு பிடிக்கவே முடியாது என்றதும், அதன் தீவிரம் புரிந்தது அவர்களுக்கு.

   “இது ஏதோ விடுகதை மாதிரி இருக்கு, இதை கண்டுபிடிச்சா தான் நம்ப அடுத்த லெவலுக்கு போக முடியும்” என்றாள் நந்தினி.

  மூவரும் அந்த விடுகதையை அவிழ்க்க முயற்சி  செய்ய, அதில் நந்தினி வெற்றி பெறுவாளா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!