Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ43_2 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  43_2

 

முதல் முறை வீட்டில் அனைவருமே இருக்க, நந்தினி – செல்வன் திருமண நிச்சயம் நல்ல முறையில் கோலாகலமாக நடந்தது.

 



Advertisement

நந்தினி அண்ணனை விடவே இல்லை. பெண் முகத்தில் ஆனந்த தாண்டவம்.  மணி பொறுப்பாய் அனைத்தையும் எடுத்து நடத்த, பானுவிற்குமே மனம் நிறைந்துபோனது. எங்கு, தான் பெற்ற மகன் தனக்கும் தன் பெண்களுக்கும் இல்லாமலே போய்விடுவானோ என்ற பயம் எல்லாம் ஒன்றுமில்லாமல் போனது.

 

மணியும் இறுக்கத்தைக் களைந்தான். வீட்டினரோடு ஒன்றி தான் பார்ப்போமே என்று எட்டிப் பார்த்த ஆவலை தடை பண்ணவில்லை. அனைவரோடும் பழகுவதும் அத்தனை கடினமாயிருக்கவில்லை.

Advertisement

 

Advertisement

எங்கே விட்டால், அண்ணன் மீண்டும் மறைந்துவிடுவானோ என்ற பயம், நந்தினியை அவனோடே ஒண்டிக் கொள்ளச் செய்தது. எல்லாவற்றிலும் இழுத்து பிடித்துக் கொண்டாள். அவள் தேவகைளை எல்லாம் அண்ணம் மூலமே நிறைவேற்றிக் கொண்டாள் பெண்.

 

எப்படியோ, எல்லாம் நல்லபடியே நடந்தேற, வீட்டின் அனைவருக்குமே நிறைவான மனநிலை.

Advertisement

 

துளசிக்கு ஏழாம் மாதம் சீமந்தம் முடித்தபின் திருமணம் வைக்க நினைக்க.. அதே மாதம் சுவாமியின் மகள்,  சுசித்ராவின் பிரசவம் இருக்க, துளசிக்கு ஒன்பதாம் மாதம் சீமந்தம் என்று முடிவெடுத்தனர்.

 

“நம்ம வளகாப்புக்கு நம்ம கீழ வேல செய்யற அத்தன பேருக்கும் புது துணி எடுத்து கொடுக்கணும். ஒரு மாசம் சம்பளம் போனஸ்சா குடுக்கணும். ஊர்ல இருக்க எல்லா வசதி கம்மியானவங்களுக்கும் அன்னைக்கு மூணு வேளை சாப்பாடு கொடுக்கணும். அவங்க எல்லாரும் வயிறார சாப்பிட்டு மனசார நம்ம பாப்பாவ வாழ்த்தணும். செய்வோமா.. மூர்த்தி சார்” இப்படி ஒரு பட்டியலை அவள் கொடுக்கவுமே.. மூர்த்தி தான் சுசித்ராவின் பிரசவத்தோடு, துளசியின் வளைகாப்புக்கு வேண்டாம் என்றுவிட்டான்.

 

வரிசையாக வீட்டில் விசேஷங்கள் இருக்க.. செல்வனும் மணியும் இப்படியே வீட்டோடு இருந்துவிட மாட்டார்களா என்ற ஆசை நந்தினிக்கு.

 

ஆக, துளசியின் ஏழாம் மாதம், சுசித்ராவின் பிரசவம், எட்டாம் மாதம் நந்தினி-செல்வன் திருமணம், ஒன்பதாம் மாதம் அவளின் சீமந்தம் என்று பட்டியல் இட்டு வேலை நடந்தது.

 

ஜெனிப்பதும் மரிப்பதும் நம் கையில் இல்லை என்றது அடுத்து அரங்கேறிய நிகழ்வுகள்.

 

அடுத்து வந்த சில தினங்களில் ஒரு நாள்:

 

ரதிக்கு குழந்தை பிறந்திருக்க, நகைக் கடையில் மூர்த்தியும் துளசியும். கடையை முழுவதும் புரட்டிப் போட்டாயிற்று.. அவளுக்குத் தான் எதுவும் பிடிக்கவில்லை.

 

“எதையாது எடு துளசிமா.. பிறந்த குழந்தைக்கு, ஒரு மணி நேரம் பாக்க கடையில ஒன்னுமே இல்ல.”

 

“ஒரே குழப்பமா இருக்கு மூர்த்தி சார்… வளையலா, செயினா? ம்ம்? ஒரு டென் மினிட்ஸ் குடுங்க.” அவள் மீண்டும் ஆரம்பிக்க..

 

“திரும்பவும் முதல்ல இருந்தா… துளசி மா…?” மூர்த்திக்கு கண்ணைக் கட்டியது.

 

“பச்.. நாலு கடை ஏறி இறங்க விடல.. அட்லீஸ்ட் ஒரு கடைய நாலு தரம் பாக்க விடுங்களேன்..”

 

“இது என்ன லாஜிக் துளசி?”

 

“நீங்க பேசிட்டே இருந்தா.. இன்னும் லேட்டாகும்” அவள் மிரட்டல் வேலை செய்ய..

 

‘நீ ஆரம்பி’ என்பது போல் கையசைத்து, கைகட்டி நின்றுகொண்டான்.

 

மீண்டும் அவள் ஆரம்பிக்க… அவன் கண் நிலைத்ததோ அந்த அழகிய கொலுசில். முழு கொலுசிலும் வரிசையாகச் சலங்கை தொங்க, மண் படாத.. கொழு மொழு.. பிஞ்சு காலில் அதை எண்ணிப் பார்த்தவனுக்கு மிகவும் பிடித்துப் போனது.

 

“ரதி மேடம் பொண்ணுக்கு, கொலுசா கொடுக்க போறோம்?” கேட்டவளிடம்

 

“இல்ல.. நம்ம பொண்ணுக்கு!” என்றான், கண்கள் மின்ன.

 

“நமக்கு பையன் தான் மூர்த்தி சார்.. அன்னைக்கு ஒத்துகிட்டு இன்னைக்கு பேச்சு மாறுறீங்க! அதுவும் பாப்பா பிறக்கதுக்கு முன்ன யாராவது வாங்குவாங்களா? உங்களுக்கு ரொம்ப ஆசையா இருந்தா, இதையே உங்க ஃப்ரெண்டு பாப்பாக்கு குடுங்க”

 

அவன் முகம் விழுந்து போனது. பெண் குழந்தை வேண்டும்… அவன் துளசியின் சாயலில். அவனின் தீரா.. தணியா ஆசை. எதுவும் அவர்கள் கையில் இல்லை என்று தெரியும் தான்… இருந்தாலும்.. ஆசை படுவதில் குற்றமில்லையே..

 

“ம்ம்ஹூம்… அது அன்னைக்கு நீ என்னை வசியம் பண்ணி ஏதேதோ பேச வச்சுட்ட..”

 

“மூர்த்தி சார்.. என்ன பேச்சிது வசியம் அது இதுன்னு.. யாராவது காதில விழுந்தா என்ன நினைப்பாங்க?”

 

“வசியம் வச்சா தான் இந்த பொண்ணுக்கிட்ட போவான்னா.. இவன் ஒரு வேஸ்ட்டுன்னு நினைப்பாங்க..” அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு வெடித்துக் கொண்டு வந்தாலும்… தனியே நின்று, கடையில் இந்த பேச்சு தேவை தானா என்று தோன்றவும்,

 

“மூர்த்தி சார்… ட்ராக் மாறுது உங்க பேச்சு!”

 

“ம்ம்.. ஆமா ஆமா. என்ன பேசிட்டு இருந்தோம்? பாப்பா பத்தி! இன்னும் நாலு மாசம் தானே.. பார்த்திடுவோம்!

 

பொண்ணு பிறந்த பிறகு உன் முகத்த எங்க கொண்டு வைக்க போறன்னு நானும் பாக்கறேன்..”

 

“ச்சு! ரெண்டு வாரம் குறைச்சு சொல்லிட்டீங்க. உள்ள இருந்து முழுசா வளர்ந்துட்டு வரட்டுமே!

 

இன்னும் நாலு மாசம், ரெண்டு வாரம் இருக்கு மூர்த்தி சார்.  என் முகத்த பத்தி கவல படாம.. உங்க முகத்த பத்தி கவல படுங்க!”

 

மகனோ மகளோ.. உள்ளத்தின் அன்பை எல்லாம் கொட்ட இருவருமே ஆசையுடன் காத்திருக்கும் நாட்கள் இவை.

 

மூர்த்தி, அவன் மகளுக்கு பார்த்த கொலுசை சிகப்பு தாளில் முடிந்து வாங்கிக்கொண்டாள், ரதியின் மகளுக்காக.

 

அடுத்தடுத்து நாட்கள் நகர, ஒரு நாள் மாலை வேளையில் முல்லையின் தகப்பனார் காலம் ஆனார் என்ற செய்தி வரவுமே, குடும்பம் தூத்துக்குடியை நோக்கி பிரயாணப்பட்டது. முல்லை குடும்பமும்,  அங்கேயே தங்கிவிட மற்றவர்கள் அடுத்த நாளே திரும்பி வந்தனர். இறந்தவர் செல்வ மணியின் ஒன்றுவிட்ட அக்காவின் கணவன் என்பதால் முத்துவும், செல்வ மணியும் தங்கவேண்டிய சூழல்.

 

சுசியின் பிரசவத்திற்கு ஒரு மாதம் இருக்க.. பிள்ளைக்கு என்ன அவசரமோ.. அன்று இரவே சுசித்ராவின் பனிக்குடம் உடைந்து போக.. இரவோடு இரவாக பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாள்.

 

மறுநாள் விடியலில் ஆண் குழந்தை பிறந்தது. தாய் சேய் நலமென்றனர். அறுவைச் சிகிச்சை செய்யப் பட்டதாலும்.. குழந்தையும் ஐந்து வாரம் முன் பிறந்துவிட்டதாலும், இருவரின் நலன் வேண்டி, ஒரு வாரம் தாயும் சேயும் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம். மகளோடு பெற்றவர்கள் சுவாமி நாதனும், சுவர்ணமும் மருத்துவ மனையில்.

 

பிறப்பு, இறப்பை மறக்கடித்தது. வீட்டிலிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி தான் புதுவரவில். பானுவும் நந்தினியும் சாப்பாட்டை பார்த்துக் கொள்ள.. துளசி பள்ளி வேலையில் மூழ்க.. மூர்த்தியும் மணியும் செல்வமும் மாற்றி மாற்றி வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் என்று அலைந்தனர்.

 

பிள்ளை பிறந்த மறு நாள் துளசியும், நந்தினியும் தங்கத்தோடு மருத்துவமனை சென்று குழந்தையைப் பார்த்துவிட்டு வரவும், “வாய்க்கால்ல குளிச்சிட்டு வீட்டுக்கு போலாம்..” என்று பெண்கள் முடிவெடுத்து, தோட்ட வீட்டை ஒட்டிய பகுதியிலிருந்த நீர் நிலையில் குளிக்கச் சென்றனர்.

 

மீன் குஞ்சு போல் தங்கம் நீந்த.. நந்தினியும் துளசியும் எப்பொழுதும் போல் மார்பைச் சுற்றிய லுங்கியோடு, கதை பேசிக்கொண்டே துணியைத் துவைக்க ஆரம்பித்தனர்.

 

ஏறிக்கொண்டிருந்த வெயிலுக்கு, குளிர் நீரில் குளிப்பது அலாதி இன்பம் தான். தங்கம் நீந்துவதும்… வெளியே ஓடுவதுமாய் இடத்தை சேறாக்கி கொண்டிருந்தாள்.

 

“தங்கம்… ஈரக் காலோட சேற்ல ஓடாத. சருக்கி விழுந்திடுவ..” துளசி கூறி முடிக்கும் முன் ‘தொப்’பென்ற சத்தத்தோடு சருக்கி விழுந்தாள், தங்கம்.

 

சிரித்துக்கொண்டே.. “நிரைய தரம் விழுந்திருக்கேன். ஒண்ணும் ஆகாது க்கா..” கூறியவள் அடுத்த நொடி தண்ணீருக்குள்.

 

சேறில் சருக்கிகொண்டே நீரில் தொப்பென்று விழுந்து, அதில் முங்கியும்.. நீந்தியும் என தங்கம் விளையாட… பெண்கள் பேசிக் கொண்டே துணியைத் துவைத்து முடித்தனர்.

 

“நந்தினி இவ சேட்டை ஓவரா இருக்கு. எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. நீ தங்கத்தோட குளி. மேல வர விடாத. நான் இத அந்த கொடியில தொங்க விட்டுட்டு வரேன்.. குளிச்சுட்டு, போகும் பொது எடுத்துக்கலாம்..”

 

துவைத்த துணிகளை செம்மண் பாதையின் ஓரமாயிருந்த கொடியில் தொங்கவிட்டு, துளசி வரவும், வாய்க்கால் ஓரம் இவள்  நேர் எதிரில் செல்வனும் மணியும், வாய்க்காலின் மறுபக்கம் அமர்ந்திருந்த நந்தினியிடம் ஏதோ கூறிவிட்டு இவளை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

 

பேசிவிட்டு தண்ணீரில் இறங்கும் முன் துளசியை, நந்தினி பார்த்துவிட.. நீரில் இறங்காமல் வாய்க்காலின் மறுபக்கமிருந்தே துளசியைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.

 

துளசி, மெல்லத் தான் நடந்தாள். அடி மேல் அடி எடுத்துத் தான் வைத்தாள். காற்று, தோளைச் சுற்றிப் போட்டிருந்த துண்டை நகர்த்திப் பறக்க விட.. ஒரு கை வயிற்றின் கீழ் இருக்க.. மற்ற கை கொண்டு கீழே விழுந்துகொண்டிருந்த துண்டை பிடிக்க.. சேற்றில் கால் வழுக்கியது.

 

“அக்கா…” நந்தினி அலற..

 

“மைனி..” செல்வன் ஓடி வர..

 

ஓடி வந்த மணி அவளை அணைத்தவாக்கில் தாங்கி பிடித்திருந்தான். பயந்து போனாள். கை கால் நடுங்க ஆரம்பித்தது. மெல்ல வயிற்றை வருடி பார்த்துக் கொண்டாள். படு வேகத்தில் அடித்துக் கொண்டிருந்த இதயத்தை அடக்கவே நிமிடம் தேவைப் பட, செல்வனின் வசை மொழி காதில் விழவில்லை.

 

“மெல்ல வந்தா என்ன? உனக்கு குளிக்க தான் ரெண்டு வீட்டுலயும், அண்ணா பாத் ரூம் கட்டி விட்டுருக்கானே… இங்க என்ன வேலை உனக்கு. வழுக்கி விழுந்திருந்தா என்ன ஆகி இருக்கும்..? அறிவிருக்கா?” ஆச்சா… பூச்சா.. என்று செல்வன் மூர்த்திக்கும் சேர்த்தே அவளை வறுத்தெடுத்தான்.

 

“மணி மட்டும் இல்லேனா என்ன ஆகி இருக்கும்?” காட்டுக் கூச்சல் போட்டான்.

 

அவளின் நல்ல நேரம் மணி இருந்தான். அவளின் பொல்லாத நேரம் மணி இருந்தான்.

 

“போங்க அந்த பக்கம்.. அவங்க கை கால் நடுங்குது… நின்னு திட்டிட்டி இருக்கார். குடிக்க தண்ணி எடுத்துட்டு வாங்க..” நந்தினி, செல்வனை நகர்த்திவிட்டு. “நீ வா க்கா..” துளசியைக் கூட்டிச் சென்றாள்.

 

அனைவரும் ஒரு வித அதிர்ச்சியில் இருக்க.. மணி தான் அதிர்ச்சியின் உச்சத்திலிருந்தான். அவன் முன் அவன் சீட்டுக்கட்டு மாளிகை இடிந்து விழுந்து கொண்டிருந்தது.

 

அதே வெண் பஞ்சுப் பொதி.. அதே பட்டின் வழவழப்பு… அதே மென்மை.. வலது மார்புக்கும் தோளுக்கும் இடையே, அதே மச்சம்!

 

‘ஓ’வென்று கத்தி அழ வேண்டும் போல் தோன்றியது.

 

“கோமல்..” என்றான். அவளைக் கூப்பிட நினைக்கவில்லை. உள்ளே இருந்த இதயம் வலியில் குமுற.. சத்தம் வெளி வந்தது.

 

அப்பொழுது தான் நடக்க ஆரம்பித்தவள் காதில் துல்லியமாக விழ… “ம்ம்..?” என்று திரும்பிப் பார்த்தாள்.

 

துளசியின் முகம் கண்ட மணியின் கண் பனித்தது. மங்கிய பார்வையோடு நேர் எதிரே நடக்க ஆரம்பித்தான். கால் தள்ளாடியது.

 

ஐந்து வருடத் தவம்! மிக நீளமான ஐந்து வருடக் காத்திருப்பு!! இதோ கண் முன்னே.. ஆனால், விதியின் சதி! கட்டி ஆரத்தழுவ முடியவில்லை. மனம் திறந்து அவன் காதலைக் கூற முடியவில்லை.

 

காத்திருப்பு வேதனை என்று எண்ணினான். ஆனால் இது? அதை விடக் கொடுமை என்று தெரிந்தது. அவன் காதலி.. மூர்த்தியின் பிள்ளையை ஏந்திக் கொண்டு! கண் காணா தேசத்தில் வேறு யாருக்கேனும் வாழ்க்கை பட்டிருக்கலாமே.. ஏன் கண் முன்? என்னை கொல்லவென்றே பிறவி எடுத்தாயா ராட்சசி? கண்ணை அழுத்தித் துடைத்துக் கொண்டான்.

 

‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை மூர்த்தியிடம் ஏமார்ந்து செல்ல வேண்டுமா?

 

இதயத்தில் குடும்பம் நடத்தி, அவன் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாய் போன  ‘தன்னவளை’ தன்னவளாக்கிக் கொள்ளவேண்டுமா?

 

அவன் மாசிலாமணி!

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!