Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 6.1

சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி.  இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

 

அடுத்த நாள் மதிய உணவின் பொழுது  விஜய்,  செல்வா, வெண்மதி கவிதா  நால்வரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  கவிதா “இன்னைக்கு எங்க  வீட்ல சிக்கன் பிரியாணி.  அம்மா உனக்கு தனியா இந்த டிபன் பாக்ஸ்ல போட்டு கொடுத்திருக்காங்க மதி. சாப்பிடு.” என்று ஒரு டிபன் பாக்ஸ் முழுவதையும் அவளிடம் கொடுத்தாள்.

“ம்ம்ம் வாசனை நல்லா வருதே டேஸ்ட்டா இருக்கும் போல இருக்கே!” என்று சப்பு கொட்டினான் செல்வா.



Advertisement

“எங்க அம்மா சிக்கன் பிரியாணி ரொம்ப நல்லா பண்ணுவாங்க.  நான் நிறையவே  எடுத்துட்டு வந்திருக்கேன்.  நாம எல்லாருமே ஷேர் பண்ணி சாப்பிடலாம்.” என்று  சாப்பாட்டை  நால்வருக்கும் பரிமாறினாள் கவிதா.  முதலில் சற்று தயங்கினான் விஜய்

“சாப்பிடுங்க” என்று கவிதா கூறவும் அவனும் சேர்ந்து சாப்பிட்டான். “உண்மையாவே பிரியாணி ரொம்ப நல்லா இருக்கு.  என்று பாராட்டினான் செல்வா.

“ஆமாம் கவிதா டேஸ்டியா இருக்கு.” என ஒத்துக் கொண்டான் விஜய். சாப்பிட்டு முடித்ததும் வெண்மதி  தான் கொண்டு வந்திருந்த உணவினை வீணாக்க மனமில்லாமல்

Advertisement

“சரி நீங்க எல்லாரும் இங்கேயே இருங்க. நான் போய் இந்த சாப்பாட்டை யாராவது பிச்சைக்காரர்கள் இருந்தாங்கன்னா கொடுத்துட்டு வர்றேன்.” என்று கூறி விட்டு அந்த வெயிலில் இறங்கி சென்றாள்.

Advertisement

சென்றவள், ஒரு வயதானவரை தேடிப்பிடித்து கொடுத்துவிட்டு கம்பெனிக்கு திரும்பினாள்.

“வெயில் ஜாஸ்தியா இருக்கு. இந்த வெயிலில் அலைய வேண்டுமா?” என்று கேட்டான் விஜய்.

“வெண்மதி எப்பவுமே இப்படிதான். சாப்பாட்டை வீணாக்க மாட்டா. அவளால்  முடிஞ்ச ஹெல்ப் எப்பவும் அவ எல்லாருக்கும் செஞ்சுக்கிட்டு தான் இருப்பா.” என்று தன் உயிர் தோழியின் நல்ல குணத்தை பெருமையாக கூறினாள் கவிதா.

Advertisement

“சரி என்னை புகழ்ந்தது போதும். வா. நாம போய் வேலையை பாக்கலாம்.” என்று கவிதாவை அழைத்துக்கொண்டு கேபினுக்கு சென்றாள் வெண்மதி.

அன்று மாலை வீடு திரும்பிய வெண்மதி  சாப்பிட்டு முடித்துவிட்டு தன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு பால்கனியில் அமர்ந்தாள்.

“வெண்மதி” என்று  பெரியம்மா அழைக்கும் குரல் கேட்க கீழே இறங்கி வந்தாள்.

“வெண்மதி எனக்கு இந்த செல்ஃபை கொஞ்சம் கிளீன் பண்ணனும். நீ எனக்கு  உதவி செய்.”  என்று வேலை வாங்கினார் பெரியம்மா.

“எனக்கு கொஞ்சம் படிக்கிற வேலை இருக்கு . செல்வி அக்காவை கூப்பிட்டு உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லட்டுமா?”  என்று தயங்கியவாறே கேட்டாள்.

“செல்வி அக்காவை கூப்பிட எனக்கு தெரியாதா?  இங்க நிறைய முக்கியமான பைல்ஸ் இருக்கு. அதனால உன்னை கூப்பிட்ட. ஒரு சின்ன வேலை கூட செய்ய மாட்டேங்குற.  எது சொன்னாலும்  எதிர்த்து பேசுற. கல்யாணம் பண்ணிக்கிட்டு போற இடத்தில  மாமியார் கிட்ட மாட்டிகிட்டு நல்லா  கஷ்டப்பட போற.”

‘அதை நான் அப்பொழுது பார்த்துக்கொள்கிறேன்.’ என்று மனதினிலே நினைத்தாலும் வெளியே கூறாமல் அமைதியாகவே நின்றாள் வெண்மதி. மனதில் நினைத்ததை கூறி பிரச்சனையை பெரிதுபடுத்தி  தாய் தந்தையரின் நிம்மதியை கெடுப்பதில் அவளுக்கு விருப்பமில்லை. அன்று  வெகுநேரம் செலவுசெய்து பெரியம்மா சொல்லிவிட்டு போங்ன வேலையை செய்து முடித்தாள் வெண்மதி.

 

வேலையை முடித்துவிட்டு சோர்வாக தன்னுடைய அறைக்கு   திரும்பினாள் வெண்மதி. அதற்குப்பிறகு அவளால்  படிக்க முடியவில்லை.  முதுகு வலித்தது. சோர்வாக  படுத்தவள், அடுத்த நிமிடம் உறங்கிவிட்டாள்.

 

அடுத்த நாள் காலை  கம்பெனியில் கவிதா வெண்மதி நுழைந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது செல்வா, விஜய் “ஹாய் வெண்மதி, கவிதா” என்று குரல் கொடுக்க இருவரும் திரும்பினார்கள்.

“குட் மார்னிங்.” என்றான் விஜய்.

“மார்னிங் மார்னிங்” என்றாள்  கவிதா.

“இன்னைக்கு நாம நாலு பேரும் வெளியே போய் சாப்பிடலாம். மதியானம் நீங்க வெயிட் பண்ணுங்க. நான் கேண்டீனுக்கு வந்து கூட்டிகிட்டு போறேன்.” என்றான் விஜய்.

“வேண்டாம் நாங்க எங்கேயும் வெளியே வர மாட்டோம்.” என்று கூறினாள்  வெண்மதி.

“ஏன் வர மாட்டீங்க?”

“நாங்க ஏன் உங்க கூட வரணும்?”

“நா என்ன உங்களை  கடத்திகிட்டா போக போற?  இதோ பக்கத்துல இருக்குற ஒரு ஹோட்டலில் சாப்பாடு  சாப்பிட்டுவிட்டு வந்துடலாம்.” “வேண்டாம். நாங்க வர மாட்டோம்.” என்று விடாப்பிடியாக நின்றாள் வெண்மதி.

“சரி உங்க இஷ்டம்.  எனக்கு இன்னைக்கு பர்த்டே. அதான் உங்களுக்கு ட்ரீட் கொடுக்கலாம்னு நினைச்சேன்.”

“உங்களுக்கு பர்த்டே வா? மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே.” என்று வாழ்த்தினாள் வெண்மதி.

கவிதாவும் அதையே கூற

“பர்த்டே அதுவுமா என்னை நல்லா ஏமாத்திட்டீங்க. அப்புறம் என்ன விஷ் வேண்டி இருக்கு?” என்று கோபித்துக் கொண்டான் விஜய்.

“நான் ரொம்ப சோகமா இருக்கேன். எல்லாம் உங்களால தான் வெண்மதி.”

வெண்மதி கவிதாவை பார்த்தாள்.

கவிதா பார்வையாலேயே ‘போயிட்டு வரலாமா’ என்று வெண்மதியை கேட்க ‘சரி’ என்பது போல தலையசைத்தாள் வெண்மதி.

“சரி போகலாம் வாங்க.” என்று அழைத்தாள்  கவிதா.

 

அந்த ஹோட்டலில் மூவரும் உட்கார்ந்து இருந்தனர். அப்பொழுது விஜய் வாசல் பக்கம் திரும்பி யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இதனை கவனித்த வெண்மதி “யாரை தேடிக்கிட்டு இருக்கீங்க? விஜய்” “வேற யாரை தேட போற? செல்வாவை தான்  தேடிக்கிட்டு இருக்கேன். வரேன்னு சொன்னான். இன்னும் காணவில்லை.” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே வந்தான் செல்வா.

“ஹாய்” என்று எல்லோரையும் பார்த்து கூறிவிட்டு அந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.

“எல்லோருக்கும் என்ன வேணும்னு சொல்லுங்க. அதுக்கு ஏத்த மாதிரி நான்  ஆர்டர் பண்றேன்.” என்று கூறி மெனு கார்டை நீட்டினான் விஜய். அதை வாங்கிப் பார்த்துவிட்டு “எங்களுக்கு வெஜிடபிள் பிரியாணி போதும்.” என்று வெண்மதி கூற

“சரி” என்று எல்லோருக்கும் வெஜிடபிள் பிரியாணி ஆர்டர் செய்தான். வெஜிடபிள் பிரியாணி வந்ததும் அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டு முடித்த  கவிதா  “மதி பக்கத்துல ஒரு கிரீட்டிங் கார்டு கடை இருக்கு. நான் போய் கிரீட்டிங் கார்டு வாங்கிட்டு வந்துடறேன்.” என்று கூற “இருடி நானும் வரேன்.” என்று கூறி இருவரும் சென்று இரு கிரீட்டிங் கார்டு வாங்கி வந்து விஜயிடம் நீட்டினர்.

இதனை பார்த்த செல்வா “என்ன கிரீட்டிங்   கார்டு இது? அதுக்குள்ள லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று முந்திரிக்கொட்டை போல கேட்க கோபமானாள் வெண்மதி.

“கிரீட்டிங் கார்டை பிரித்து படித்து பாருங்க. அப்புறம் பேசுங்க.” என்று கோபமாக கூறினாள்.

“கூல் கூல்” என்று கூறிவிட்டு செல்வா அதனை வாங்கி பிரித்து பார்த்தான். அதில் ‘ஹேப்பி பர்த்டே  விஜய்’ என்று எழுதியிருந்தது. அதனை பார்த்த செல்வா விழுந்து விழுந்து சிரித்தான்.

“என்ன ஹாப்பி பர்த்டே  வா? இன்னைக்கு இவனுக்கு  பர்த்டேனு யாரு உங்க கிட்ட சொன்னா?” என்று மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தான். கவிதா வெண்மதி ஒருவரை ஒருவர்  புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின்  விஜய் பக்கம் திரும்பினார்கள். விஜய்  தன் சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் புரிந்துவிட்டது. “அப்போ நீங்க எங்க கிட்ட பொய் சொல்லி இருக்கீங்க.” என்று கோபமாக வெண்மதி கூற

“சாரி சாரி” என்று சிரிப்பின் நடுவில் மன்னிப்பு கேட்டான் விஜய். அவனுக்கு பதில் ஏதும் கூறாமல் இருவரும் கம்பெனியை நோக்கி  நடந்தனர்.

விஜய்  சாப்பிட்டதற்கான பணத்தை கட்டிவிட்டு அவர்களை பின் தொடர்ந்தான்.

“நான் உங்களை சும்மா கூப்பிட்டபோது, நீங்க வர மாட்டேன்னு சொல்லிட்டீங்க. அதனால தான் இப்படி ஒரு பொய் சொல்ல வேண்டியதா போச்சு. ஜஸ்ட் ஃபார் ஃபன்.” என்று மேலும் பலமாக சிரித்தான். அவனுடைய சிரிப்பு  வெண்மதியின் கோபத்தை இன்னும் அதிகமாக்கியது. எதுவும் பேசாமல் இருவரும் நடந்து கம்பெனிக்குள் சென்றனர்.

விஜய் வெண்மதியின் கேபின் சென்று அவளிடம் பேச முயற்சி செய்தான். அவள் பேசவில்லை. பின் மதியம் உணவு இடைவேளையின் பொழுது கேண்டீனில் வெண்மதி, கவிதா இருவர் முன்பும் உட்கார்ந்துகொண்டு வேண்டுமென்றே பேச்சுக் கொடுப்பான். ஆனால் இருவரும் பதில் பேச மாட்டார்கள்.

ஒரு நாள் பேருந்து நிலையத்தில் இவர்களுக்காக காத்திருந்து இவர்கள் வந்ததும் வெண்மதி பின் தொடர்ந்து வந்து பேசினான். வெண்மதி அவனிடம் பேசவில்லை.

அதற்குப் பின் வந்த நாட்களில் விஜய் இவர்கள் இருவரையும் மதிய இடைவேளையில் பார்த்து  பேசினான்.

“இந்த சின்ன விஷயத்துக்கு ஏன் இப்படி ஓவரா ரியாக்ட் பண்றீங்க வெண்மதி?

“நான் என்ன உங்களை  கடத்திக் கொண்டு போய்…..” என்று ஆரம்பித்த அவனை

“ஷட் ஆப்.” என்று அவனை பார்த்து கோபமாக கத்திவிட்டு

அங்கு இருந்த தண்ணீர் பாட்டிலை அவன் மீது ஊற்றினாள் வெண்மதி.

 

அங்கு இருந்த அனைவரும் இவர்களை திரும்பி பார்த்தனர்.   விஜய் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று விட்டான்.  வெண்மதிக்கு தர்மசங்கடமாகி விட்டது. தன்னையறியாமல் அப்படி அவள் செய்தது  அவளுக்கே தவறாக தோன்றியது.

அன்று வீடு திரும்பிய  அவளிடம் லட்சுமி “எல்லாத்தையும் சூடு பண்ணிட்டேன் சாப்பிடுமா.” என்று  கூற வெண்மதி விஜய்யை நினைத்துக்கொண்டே பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.

“என்ன சொல்றது காதுல விழல? சாப்பிட வான்னு சொன்னேன் இல்ல?” என்று லட்சுமி திரும்பவும் சத்தமாக கேட்க….

“வெண்மதி சாப்பாடு, சாப்பாடு இதை தவிர வேறு எதுவும் உனக்கு தெரியாது. சமைக்கணும் சாப்பிடணும்.” என்று தேவையில்லாமல் தாயின் மீது எரிந்து விழுந்தாள்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!