Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 7.2

இரண்டு நாட்களாக வானத்தில் பறந்தது போல் இருந்த நிலையிலிருந்து கீழே இறங்கி தன்னுடைய வேலையை செய்வதற்கு சிறிது கடினமாக இருந்தது வெண்மதிக்கு. எனினும் அலைபாய்ந்த மனதினை அடக்கி கொண்டு தன் வேலையை தொடங்கினாள். தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவனது குரல் கேட்க திரும்பினாள். அவன் அங்கு யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.

“என்னடி மதி எங்க பாக்குற?” என்று கவிதா கேட்க சுதாரித்துக்கொண்டு   வேலையை  இயந்திரத்தனமாக தொடர்ந்தாள்.

“என்ன  மதி தப்பு தப்பா டைப் பண்ணிக்கிட்டு இருக்க? பாரு ஒழுங்கா  பார்த்து டைப் பண்ணு.” என்று கூற அப்போதுதான் தன் தவறை உணர்ந்தாள் வெண்மதி.

“சரிடி நான் பார்த்து பண்றேன்.” என்று கூறிவிட்டு வேலையை தொடர்ந்தாள்.



Advertisement

மதிய உணவு இடைவேளையின் போது வெண்மதி, கவிதா இருவரும் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அவர்களுடைய டிபன் பாக்சை திறந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

சாப்பிட்டுக்கொண்டே வெண்மதி விஜய்யை தேடினாள். இதனை கவனித்த கவிதா “என்னடி  யாரையோ தேடுற மாதிரி இருக்கு. யாரை தேடுற?” என்று கேட்க அவள் திடுக்கிட்டு திரும்பி

“யாரையும் தேடல. சும்மாதான் பாத்தேன்.” என்று பொய்க்கு மேல் பொய் கூறினாள். கவிதாவிடம் கூறி அவள் ஏன் என்று கேட்டால் சொல்வதற்கு இவர்களிடம் பதில் இல்லை. ஏனென்று இவளுக்கே தெரியவில்லை.

Advertisement

அவளது தடுமாற்றத்தை கவனித்த கவிதா “உன்கிட்ட ஏதோ வித்தியாசம் தெரியுது. முகத்துல ஏதோ பல்பு  எரியுது. நல்லா டிரஸ் பண்ணி இருக்க.  என்னடி விஷயம்? என்கிட்ட எதையாவது  மறைக்கிறாயா? சொல்லுடி.” என்று கேட்டாள்.

Advertisement

“அதெல்லாம் ஒன்னும் இல்லை கவி. நான்  முகத்துக்கு  பப்பாயா  போட்டு கழுவினேன். அதனால முகம் கொஞ்சம் பளிச்சின்னு தெரியுது. அவ்வளவுதான். வேற ஒன்னும் கிடையாது.” என்று சமாளித்தாள்.

அப்போது அங்கு விஜய் மற்றும் செல்வா வந்தார்கள்.

செல்வா இரண்டு பத்திரிக்கைகளை இருவரிடமும் நீட்டி

Advertisement

“வரும் வெள்ளிக்கிழமை எங்க அக்காவுக்கு நிச்சயதார்த்தம். நீங்க ரெண்டுபேரும் கண்டிப்பா வரணும்.”

“எத்தனை மணிக்கு?” என்று வெண்மதி கேட்க

“காலை 10 மணிக்கு. சரி  வந்து விடுகிறோம்.” என்று கூறினாள் வெண்மதி.

“என்னடி மதி இப்படி சொல்லிட்ட, அப்பா அம்மா கிட்ட என்ன சொல்றது?” “பிரண்ட் வீட்ல பங்க்ஷன் என சொல்லிக்கலாம்.”

“எந்த  பிரெண்ட் என கேட்டாங்கன்னா என்ன சொல்றது?”

“நம்ம காலேஜ் பிரெண்டுனு சொல்லிக்கலாம்.” என்று வெண்மதி பதில் கூற கவிதா அமைதியானாள்.

 

அந்த விழாவிற்கு கண்டிப்பாக விஜய் வருவான். அவனுடன் சிறிது நேரம் செலவிடலாம். என்று நினைத்த வெண்மதி கண்டிப்பாக அந்த விழாவிற்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள். கவிதாவுக்கு வெண்மதியின் திடீர் மாற்றம் வியப்பை தந்தது. எனினும் அதனுடைய காரணம் புரியாமல் அமைதியாக  இருந்தாள்.

வீடு திரும்பிய வெண்மதி தாயிடம் மெல்ல ஆரம்பித்தாள்

“அம்மா வரும் வெள்ளிக்கிழமை என்னோட ஃப்ரெண்ட்  ஒருத்தியின் அக்காவுக்கு நிச்சயதார்த்தம். நானும் கவிதாவும்  போகலாம்னு நினைக்கிறேன்.”

“எங்க கல்யாணம்?”

“மயிலாடுதுறையில் கல்யாணம்.”

“அன்னைக்கு உனக்கு லீவா?”

“இல்லைமா. நானும் கவிதாவும் லீவு போட்டுட்டு போகலாம்னு இருக்கோம்.”

“நீங்க ரெண்டு பேரும் தனியா எப்படி போவீங்க?”

“இல்லைமா நாங்க நாலு பேரும் சேர்ந்து தான் போறோம். அதனால  பயம் கிடையாது.”

“சரிமா போய்ட்டுவா.” என்று அனுமதி கொடுத்தார் லட்சுமி.

அன்றிலிருந்தே வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள் வெண்மதி. வியாழக்கிழமை அன்று அவள் வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த குண்டுமல்லி களை பறித்து அழகாக கட்டி  தனக்கு வைத்துக்கொண்டு சிறிது கவிதாவுக்கும் எடுத்துக்கொண்டாள் ஒரு அழகான சிகப்பு நிற பட்டு புடவை ஒன்றை அணிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல வெள்ளி நகைகள் அணிந்துகொண்டு  தயாராகி தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்த நிம்மதி திருப்தி அடைந்தாள். இதையெல்லாம்

கவனித்துக்கொண்டிருந்த லட்சுமிக்கு இவளுடைய செயல் வினோதமாக பட்டது. எனினும் இப்போது தான் அவள் அவளுடைய வயதுக்கேற்ற மாதிரி நடந்து கொள்கிறாள் என்று நினைத்துக் கொண்டாலும் ஏதோ சிறிது உறுத்தலாக இருந்தது. ஆனாலும் மகளின் மீது இருக்கும் நம்பிக்கையால் அவளை எதுவும்  கேட்காமல்  விட்டுவிட்டார்.

கவிதா வெண்மதி இருவரும் கிளம்பி நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றனர். வெண்மதி எதிர்பார்த்ததுபோலவே அங்கு விஜய் வேலை செய்து கொண்டிருந்தான். இவர்கள் இருவரையும் பார்த்ததும் அவர்களிடம் வந்தான். இவனைப் பின் தொடர்ந்து  செல்வாவும் வந்தான். இரு பெண்களையும்  வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான்.

அது ஒரு பெரிய திருமண மண்டபம்.  மண்டபம் முழுவதும் வெகு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேடை பல வண்ண பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

“என்னடி மதி?  பங்க்ஷன் பெரிய பணக்கார வீட்டு விசேஷம் போல இருக்கு. பணத்தை தண்ணியா  செலவழிச்சு இருப்பாங்க போல இருக்கு.” என்று கேட்க.

“நானும் அதை தாண்டி பார்க்கிறேன். ரொம்ப கிராண்டா பண்றாங்க. நிச்சயதார்த்தத்துக்கு இவ்வளவு செலவு பண்றாங்க. பெரிய பணக்கார இடம் போல இருக்கு.” என்று பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்தான்  விஜய் .

“கரெக்டு தான். அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறவர் பெரிய பிசினஸ் மேன். சென்னையில் பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு. கோடீஸ்வரர்.”

 

“கோடீஸ்வரர் வீட்டுக்கு பெண்ணை கொடுக்கிறார்களா? அப்போ செல்வா கோடீஸ்வர வீட்டு  பையனா?” என்று கவிதா ஆச்சரியமாக கேட்க

“அதுதான் இல்லை.  செல்வாவின் அக்கா இவரை சென்னையில பார்த்து லவ் பண்ணி பெரியவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்றாங்க.”

“ஓ அப்படியா!. சரி வாடி நாம வந்த வேலையை பார்ப்போம்.”

“வந்த வேலையா?” என்று வெண்மதி கேட்க

“அதான்  சாப்பிடலாம்னு சொல்றேன்.” சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கவிதா கூற மூவரும் சேர்ந்து சிரித்தனர்.

விஜய் வெண்மதியை கவிதா கவனிக்காத நேரத்தில் கண் காட்டி தனியாக அழைத்தான்.

“கவி நீ போய்கிட்டே இரு. நான் இதோ வந்துடறேன்.”

“எங்கடி போற?”

“ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடறேன்.” என்று வெண்மதி கூற

“சரி  நான் போயிட்டு இருக்கேன். நீ வந்துரு.” என்று கூறிவிட்டு முன்னே நடந்தால்

விஜய் வெண்மதி கையை பிடித்துக்கொண்டு தனியாக ஒரு இடத்திற்கு கூட்டி சென்றான்.

“ நீ இந்த புடவையில் செம அழகாக இருக்க.” என்று அவளை விழுங்கி விடுவது போல மேலும் கீழும் பார்த்தான். அவளுக்கு வெட்கமாக இருந்தது.

“சரி நான் போகட்டுமா? கவிதா என்னை  தேடிக் கொண்டு இருப்பா.” என்று வெண்மதி போக துடித்துக் கொண்டிருக்கும்போதே

“நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.”

“என்ன? சீக்கிரம் சொல்லுங்க.” என்று கேட்க.

“நான் ரொம்ப நாளா உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். இன்னைக்கு உன்னை இந்த டிரஸ்ல பார்த்ததுக்கு அப்புறம் என்னால இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது.” என்று கூறியவன் அங்கு இருந்த ஒரு ரோஜா பூவை எடுத்து நீட்டி

“ஐ லவ் யூ.” என்று கூறினான்.

அவள் எதிர்பார்த்ததுதான் என்றாலும் அவன் கூறிய பொழுது அவளுக்கு ஒரே நேரத்தில் சிறிது பயமாகவும்  சந்தோஷமாகவும் இருந்தது.

“நீயும் என்னை லவ் பண்றேன்னு தெரியும். இருந்தாலும் நீ அதை வாயால சொல்லணும்னு நான் எதிர் பார்த்துகிட்டு இருக்கேன். சொல்லு ப்ளீஸ்” என்று கேட்டான்.

“அது வந்து விஜய்” என்று தயங்கினாள் வெண்மதி. அவளுக்கும் அவனை பிடித்திருந்தது.

“சொல்லு ப்ளீஸ் சொல்லு.” என்று கெஞ்சும் குரலில் கேட்டான் விஜய்.

அவள்  “ஐ லவ் யூ டூ.” என்று பதில் கூறினாள்.

“ஆனால்  இந்த விஷயத்தை நமக்கு வேலை கிடைக்கும் வரை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.”  என்று விஜய் கூற வெண்மதிக்கு அது சரியாகவே பட்டது.

அதேநேரம் கவிதா அவளை தேடி அங்கே வர விஜய் அங்கிருந்து ஓடிவிட்டான். வெண்மதி கவிதாவிடம் சென்று “வாடி கவி நாம சாப்பிட போலாம்.” என்று அவளையும் அழைத்துக்கொண்டு சாப்பிட்டாள். அன்று வீட்டுக்கு வந்த சேர்ந்த வெண்மதி தூங்க முடியாமல் தவித்தாள்.

நான் செய்தது சரியா தவறா என்று அன்று இரவு யோசித்துப்பார்த்தாள். வென்மதி அப்பொழுது விஜயின் முகம் அவள் முன்பு தோன்றியது. அதற்குப்பிறகு எதுவுமே தப்பாக அவளுக்கு தோன்றவில்லை. காதலிப்பது எப்பொழுதும் தவறாகாது என்று ஒரு முடிவுக்கு வந்தாள். விஜயுடன் தான் வாழப்போகும் வாழ்க்கையினை கற்பனையில் வாழ ஆரம்பித்தாள்.  அந்த வாழ்க்கை சொர்க்கமாய் தெரிந்தது அவளுக்கு. அவனை திருமணம்  செய்துகொள்ளும் நாளை எதிர்பார்த்துக்கொண்டு அவளுடைய வாழ்நாள்  செல்வது போல இருந்தது. சிறகுகள் முளைத்து வானத்தில் பறப்பது போல  மிதந்து கொண்டிருந்தாள்.

 

அடுத்தநாள் வெண்மதி, கவிதா இருவரும் கணினி முன்பு உட்கார்ந்து கொண்டு தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர்.  அப்போது விஜய் ஏதோ ஒரு காரணம் சொல்லி கொண்டு அங்கு வந்தான். வந்தவன் கவிதா அவனை கவனிக்காத நேரத்தில் வெண்மதியை பார்த்து கண் கண்ணடித்தான். வெண்மதி அவனை ‘அங்கிருந்து போ’ என்று சைகை காட்டினாள். அவன் மனம் இல்லாமல் செல்வது போல சைகை காட்டி விட்டு சென்றான்.

அதற்குப் பிறகு வெண்மதிக்கு வேலை ஓடவில்லை.  தடுமாறிக் கொண்டிருந்தாள்.

“என்னடி பண்ற?”

“ஒன்னும் இல்லடி.”

“என்ன ஒன்னும் இல்லையா?”

“உன்கிட்ட கொஞ்ச நாளா ஏதோ சேஞ்ச் தெரியுது. என்ன விஷயம்?” என்று அவளை கூர்ந்து நோக்கினாள்.

அவளை நேராக பார்க்க முடியாமல் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டு ஏதோ வேலை செய்வது போல பாவனை செய்தாள்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!