Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ44_3 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  44_3

 

 

‘கட்டினவனை விட்டுவிட்டு என்னோடு வா’ என்று கூறியவன் கதவை தாழிட்டால், அதன் நோக்கம் என்னவாயிருக்கும் என்று யோசிக்க மூளை தேவை இல்லை என்பதால் துளசியும் யோசிக்கவில்லை. கைகள் இரண்டும் பின் சென்றது. போட்டிருந்த கண்ணாடி வளையல்கள் இரண்டை அவிழ்த்து, இரண்டாய் உடைத்து இறுகப் பிடித்துக் கொண்டாள்.



Advertisement

 

அருகில் அவன் வந்தால் அவளுக்கு நொடிப் பொழுது தான் கிடைக்கும் என்று தெரியும்.. அடுத்த நொடி அவள் மணிகட்டை அவன் பிடித்தால்.. அதற்குமேல் அவளால் தாக்கமுடியாது. அதற்குள்ளாக கையிலிருப்பதை அவன் கழுத்திலோ கண்ணிலோ இறக்கவேண்டும் என்று எண்ணிக் காத்திருந்தாள்.

 

Advertisement

கதவை தாழிட்டவனோ.. அதன் மேல் சாய்ந்து அவளையே பார்த்து நின்றான்.

Advertisement

 

என்ன முடிவெடுத்தானோ.. அவன் அவளை நெருங்க.. அவளும் பின்னோடு நகர ஆரம்பித்தாள். வயிற்றில் பிள்ளை இல்லை என்றால் கூட இவ்வளவு பயந்திருக்க மாட்டாள். கட்டில் தடுக்கவும்.. துளசி நகர இடமில்லாமல் தடுமாறவும், விழுந்துவிடுவாளோ என்று இவனுக்குத் தோன்றவும், சட்டென்று இவன் கைகள் நிலைத்ததென்னவோ துளசியின் புஜத்திலும் வயிற்றிலும் தான்.

 

Advertisement

மாமன் கையை வருடிச் சென்றது குழந்தை. நின்றுவிட்டான். மனசாட்சியை வெகு நேரம் உறங்க வைக்க முடியவில்லை போலும்.. விழித்துக் கொண்டான். முதல் முறை ஒரு சிசுவின் அசைவை உணர்ந்தவனால் வெளி வரமுடியவில்லை. ஏதோ செய்தது.

 

மணியின் வலது கை.. இடப்பக்க வயிற்றைத் தீண்டவுமே.. கையிலிருந்த கூர் வளையல் வேகமாய் அவன் நெஞ்சைத் தொட்டுத் தழுவியது. ஆங்கில ‘X’ என்ற எழுத்தின் மேல் மோகம் வந்துவிட அதைப் பல முறை வரைந்து பார்த்துவிட்டாள் இந்த பாவியின் நெஞ்சில்.

 

இரண்டு நொடியில் அவள் கை வளைக்கப்படும் என்று எண்ணியவள் கையை தடுக்க ஆளில்லாமல் போகவும் கை தன்னால் தளர்ந்தது.

 

எதிரே தெரிந்த மார்பில் சிகப்பாய் திரவம் வழிவதைப் பார்க்கவுமே தலை சுற்றுவது போல் தோன்ற.. நின்றிருந்தவன் முகம் பார்த்தாள்.

 

அவன் கண்ணில் நீர்ப் படலம். அதில் காமத்தையோ வெறியையோ அவள் காணவில்லை. அமைதியான ஆழமான பார்வை பார்த்து நின்றிருந்தான்.

 

‘என்னவோ செய்.. உன் கையால் செத்துப் போகிறேன்’ என்று நின்றுகொண்டிருந்தது போல் அவளுக்குத் தோன்றவும் தோய்ந்து போனாள்.

 

“ப்ச்.. மணி!” என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. கோபத்தைக் கையிலிருந்த வளையலில் காட்ட, அது சென்று சுவரில் முட்டி மோதி  துண்டுகளாய் கீழே விழுந்தது.

 

கட்டிலில் அப்படியே அமர, “ஸ்ஸ்..” என்று இடுப்பை அவள் பற்றவும்.. “ஏய்.. பாத்து” என்றான் தன்னிச்சையாக.

 

ஒரு நிமிடம் இருவருக்கும் இடையே அமைதி. அவன் மிரட்டிய போது வராத கண்ணீர், விழி தாண்டியது.

 

சுவரோடு சாய்ந்து நின்றுகொண்டான். இன்னும் அதே பார்வை தான் அவனிடம்.

 

பார்க்க, வாட்டம் சாட்டமாக, மேல் தட்டு களையோடு அத்தனை அழகும் கம்பீரமுமாக இருந்தான். இவனுக்கு என்ன குறை? என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

 

‘என்ன கர்மம் பிடித்த காதல் இது?’ என்று தான் அவளும் எண்ணினாள். உண்மையிலுமே மனம் வலித்தது அவனுக்காக.

 

துளசி எழுந்து அவனைத் தாண்டி செல்ல.. அமைதியாக நின்றிருந்தான். சென்றவள் அலமாரியிலிருந்து ஒரு வெள்ளை துண்டை, அங்கிருந்த குடிநீரில் நனைத்து எடுத்து வந்தாள்.

 

ஒரு கால் சுவரிலும், இரண்டு கைகளும் பேன்ட் பாக்கெட்டிலுமாக நின்றிருந்தவன் கண்கள் மட்டும் அவள் சென்ற திசை எல்லாம் சென்றதே ஒழிய அவன் நகரவில்லை.

 

“மணி..!” அவனிடம் நீட்ட.. வாங்கினான் இல்லை.

 

“நீ நிஜமாவே பொண்ணுங்கள அங்க வித்தியா?”

 

“ம்ம்..”

 

“ஏன் மணி..”

 

“தெரியல. அப்போ ஒரு வெறுப்பு. அப்பா போனதும் எல்லாமே போன மாதிரி ஆகிடுச்சு. இழப்ப தாங்க தெரியல. வாழ்க்கையில பிடிப்பு இல்ல. தப்பான ஃப்ரெண்ட்ஸ்.. தப்பான பழக்கம். பண புழக்கம் அதிகம். போதை அதிகம். உன்ன பார்த்தேன். முதல் முதலா.. சறுக்கினேன். போத தெளிஞ்சு உன்ன தேடினேன். கௌஷின்னு ஒருத்திட்ட உன்ன விலை பேசிட்டதா தெரிஞ்சு அங்க போனேன். அங்க போணும்ன்னா ஒண்ணு பொண்ணுக்காக போகணும் இல்ல பொண்ணோட போகணும். நான் உன்ன தேடிப் போனேன். அப்போ என்னையே இழந்துட்டேன். பணம் நிறைய செலவாகவும்.. என்னை நம்பி வந்த பொண்ணுங்கள கௌஷிட்ட கொடுத்தேன். தப்பு தான்.. ரொம்ப தப்பு.. முழு நேர குடிகாரனுக்கு அது தெரியல.

 

மூர்த்தி கல்யாணத்துக்கு வந்த போது உன்ன பார்த்தேன்.. உன் கூட வாழ போறதா கனவெல்லாம் கண்டேன். ஆனா நீ கோமல் இல்ல துளசின்னும், நீ  மூர்த்தியோட மனைவின்னு சொன்னதும்.. நகர்ந்துட்டேன்.

 

ஆனா குடும்ப வாழ்க்கை மேல ஆசை ஏற்பட்டுது. அதுக்கு நான் தகுதியானவன் இல்லன்னு தெரியும். குடிய நிறுத்தினேன். போதை இல்லாம  பொண்ணுங்க பின்னாடி போக பிடிக்கல. அதுவும் நிறுத்திட்டேன். ஆனா அந்த ஏரியால.. என்ன காரணம் காட்டி நான் சுத்த முடியும். என்னால ஒருத்தியையும் தொட முடியல. அப்போ வித்து தானே ஆகணும். சோ அத செஞ்சுட்டு இருந்தேன். தெரிஞ்சே தப்பு செய்யறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அப்போ தெரிஞ்சுகிட்டேன். மனசாட்சிய கொன்னுட்டு.. உணர்வே இல்லாத மிருகமா சுத்தி திருஞ்சேன்.

 

ஒரு தரம், நான் கௌஷிய தேடிப் போன போது ஒரு ஒம்பது வயசு பொண்ணு ஓடி வந்து ‘அண்ணா.. காப்பாத்துன்னு’ என் இடுப்ப கட்டிட்டு அழவும்.. மனசு விட்டு போச்சு. என் கண்ணு முன்ன அந்த பொண்ண அழ அழ இழுத்துட்டு போனான். போதையும் இல்லியா.. அவ்வளவு தெளிவா இருக்கும் போது பார்த்த அந்த காட்சி மனச அசைச்சிடுச்சு. எனக்கும் மனசாட்சி எல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுது! என் தங்கம் அழுதா பொறுப்பேனா..?  என்னைக்கும் இல்லாத ஞானோதயம் அன்னைக்கு..

 

அப்புறம் செஞ்சிட்டு இருந்த அந்த கேடுகெட்ட வேலையும் விட்டுடேன். அந்த கௌஷி கூட தொடர்பு வேணும்ன்னு போன ஒரு வருஷத்தில ஒரு தரம் ரெண்டு பொண்ணுங்களோட போனது தான்.. அதுவும் அவங்க கேரளால இந்த தொழில் செஞ்சிட்டு இருந்தவங்க தான். அவங்க விருப்பத்தோட கொண்டு விட்டேன். உனக்கு இருபது தாண்டி இருக்கும்.. இனி மேல் உன்ன அங்க பாக்க முடியாதுன்னு தோனிச்சு.

 

அந்த வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுட்டு தான் இங்க வந்தேன். உன்ன தொலைச்சுட்டேன்னு நினைச்சேன். அன்னைக்கு வாய்க்கால் கிட்ட உன்ன, உன் தோள்ள இருக்க மச்சம் காட்டி கொடுத்திடுச்சு.

 

ஒரு கோபம்… திரும்பவும் தோத்திட கூடாதுன்னு இன்னைக்கு போய் தண்ணி அடிச்சிட்டு வந்தேன்.. உன்ன தூக்கிட்டு போயே ஆகணும்ன்னு ஒரு முடிவோட வந்தேன்.  

 

என்ன எழவு சரக்கோ தெரியல போதை ஒழுங்கா ஏறி தொலையல போல.. உன் கூட நின்னு கத அடிச்சுட்டு இருக்கேன்..” சிரித்தான். சிரிப்பால் வலியை கடத்த முடியுமா? கடத்தினான்.

 

“உன் வயிறு இப்படி இல்லாம இருந்திருந்தா தூக்கிட்டுப் போயிருப்பேனோ என்னவோ.. இப்படி இருக்க உன்ன தொடவும் முடியல… என்னோட கோமலா நினைக்கவும் முடியல.

 

நீயும் வர மாட்டேன்னு சொல்லிட்ட. உன்ன பார்த்துட்டே என்னால இங்க இருக்க முடியாது. இப்போ திரும்பவும் எதுவுமே இல்லாம தனியா நிற்கிறேன். நான் செஞ்ச பாவம் எல்லாம் அர்த்தமே இல்லாம போச்சு போ..! இவ்வளவு பாவம் செஞ்ச நான் எல்லாம் லாரி அடிச்சு இன்னும் சாகாம ஏன் இருக்கேன்னே தெரியல. அது கூட ஒரு நிமிஷ வலி தான். ஆண்டவன் என் விஷத்துல ரொம்ப கெட்டவன் தெரியுமா… இனிமேல் நான் வாழணுமே.. அது தான் பெரிய தண்டனை! அடுத்து என்னன்னு தெரியல? திரும்பவும் அதே சாக்கடையா? தெரியல!”

 

மனதை மறையாது உரைத்தான். ஆனால் அது லேசாகவில்லை.

 

“அப்படி பேசாத மணி..”

 

இரத்தம் அதிகமாக வழியவும், அவளே துடைக்க ஆரம்பித்தாள்..

 

“ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கோ மணி. குழந்தைக்கு ரெண்டு மாசம் ஆகட்டும். நாங்க மெட்ராஸ் போயிடுறோம். நீ இங்கேயே குடும்பத்தோட இரு. பழைய பாவம் செஞ்சது, செஞ்சது தான். மாத்த முடியாது. சத்யன் அண்ணாட்ட நீ இருந்த இடத்தைப் பத்தி சொல்லு… அங்க இருக்க பிள்ளைங்கள அண்ணா காப்பாத்துவாங்க. அது அந்த குழந்தைகளுக்கு நீ கொடுக்கிற சிறகு. காப்பாத்தி விடு மணி. அதனால உன் பழைய பாவம் இல்லன்னு ஆகாது. ஆனா.. ஒரு பரிகாரம் மாதிரி.. ஆகலாம் இல்லையா?

 

திரும்பவும் தப்பு பண்ணாத. அங்க போகாத. நீ இங்க இருக்க ஸ்கூல பார்த்துக்கோ. நிறைய சின்ன குழந்தைங்க இருக்காங்க. அவங்களுக்கு ஒழுக்கமும் பத்திரமும் சொல்லி குடு. இதுக்கும் மேல இந்த தப்பான வாழ்க்கை உனக்கு வேண்டாம் மணி. அது உன்ன மாதிரி மனசாட்சி உள்ளவங்களுக்கான வாழ்க்கை இல்லை. இந்த பாவம் உன்னையும்.. நீ உயிரா நினைக்கிற உன் குடும்பத்தையும் அழிச்சிடும்.

 

எனக்குத் தெரியாமலே உன்ன ரொம்ப கஷ்ட படுத்தியிருக்கேன். முடிஞ்சா என்னை மன்னிச்சிடு மணி. நிஜமாவே ரொம்ப சாரி. எனக்கு சத்தியமா தெரியல மணி என்னால் ஒரு ஜீவன் இவ்வளவு வேதனையை அனுபவிக்குதுன்னு. இன்னைக்கு வரைக்கும் தெரியலை. என்னை மன்னிச்சிடு மணி..”

 

கையை நெஞ்சோடே பிடித்துக் கொண்டான். துண்டின் கீழ் தான் அவன் மார்பு இருந்தாலும்.. அவளால் அவன் துடிப்பை உணரமுடிந்தது. கையை உருவ முயலவில்லை. அவன் வலியைப் போக்கத் தெரியவில்லை. பானுமாவின் மகனாயிற்றே.. அவனுக்காக வருந்தாமல் இருக்க முடியவில்லை.

 

“அப்போ… நீ.. நான்.. சாத்தியமே இல்லையா கோமல்?” வார்த்தை உடைந்து, கரகரப்பாய் வெளிவந்தது.

 

“நீயே சொல்லிட்டியே. நீ! நான்! நாம இல்ல.” என்றாள், அவள் கை மேல் இருந்த கையை பார்த்துக்கொண்டே.

 

அவனே கையை விடுவித்தான்.

 

“என்னோட பதினாறு வயசுல தான் முதன் முறையா உன் மாமாவ பார்த்தேன். அவர பார்த்த அந்த நிமிஷம் இதயம் நின்னுது. அவர பார்த்த அதே நிமிஷம் நின்ன இதயம் துடிச்சுது. அத நான் அவர் கிட்ட மட்டும் தான் உணர்ந்தேன். காதல் ரெண்டு பேராலுமே உணரப்படணும்.

 

நான் அவர ஏமாத்திட்டு போயிட்டேன்னு ஒரு ஐஞ்சு மாசம் அவர் நம்பினார்.. ஏன்னா அப்போ நான் ஒருத்தன நம்பி அவன் கைல தாலி வாங்கி,  நான் அவன் கூட போயிட்டேன். என்னை நினைக்கவும் முடியாம.. மறக்கவும் முடியாம அவஸ்தைப் பட்ட அந்த ஐஞ்சு மாசமும் அவர் பொண்ணுங்கள கடத்தவும் இல்ல.. பல பெண்ணுங்க கூட உறவும் வச்சுக்கல..

 

அதே பாம்பேல தான் என்னை பார்த்தார். ஒரே ஒரு பார்வை தான் பார்த்தேன்.. கௌரவ்ன்னு ஒரு அரக்கன் கையில இருந்து என்னை மீட்டார். அதுக்கு அப்புறம் என் கிட்ட இருந்து என்னை மீட்டார். ரொம்ப பயந்தேன்.. 24 மணி நேரமும் என்னை யாராவது பிச்சு பிடுங்கற மாதிரி உணர்வுல செத்துச் செத்து பிழைச்சேன்.

 

என் போராட்டம் எல்லாம் அவர் போராட்டமா எடுத்து எனக்காகவே ஒரு வாழ்க்கை வாழறார். இன்னைக்கு என் பாரம் எல்லாம் போய் ரொம்ப லேசான வாழ்க்கை என் புருஷனால தான் வாழறேன். எங்க அன்போட பரிசு தான் என் வயிறுல..

 

நினைவில்லாம, அந்த மாதிரி ஒரு இடத்துல ஒரு சின்ன பொண்ணு கிடந்தா.. அவள காப்பாத்த தோணாம அவ கிட்டயே தப்பா நடக்க எப்படி உனக்கு மனசு வந்துது மணி?

 

உன் தங்கம் அப்படி படுத்து கிடந்தா என்ன பண்ணி இருப்பியோ அத தானே நீ எனக்கு பண்ணியிருக்கணும்.

 

உனக்கு அப்போ அந்த சதை தானே முக்கியமா பட்டுது. எப்போ அது காதல் ஆச்சு மணி? உணர்வுகள் உணரப்படாம ஒரு காதல்.. காதல் ஆகுமா? காதல் தப்பில்ல.. அதுக்கும் ஒரு வரம்பு முறை இருக்கு.

 

இப்போ.. எனக்கும்  உனக்கும் அம்மா மகன் உறவு மணி. நந்தினிக்கு அண்ணன் எனக்கும் அண்ணன். என் மகளுக்கு நீ தான் மாமன்.

 

சில உறவ மாத்த முடியாது. மாத்த நினைச்சா.. கலாச்சாரம் சாக்கடையா போயிடும்.. கூடவே நம்ம நடத்தையும்.. வாழ்க்கையும்.

 

இத எல்லாம் உன் மனசில வச்சுக்கோ.. என்னை பாக்கும் போது உனக்கு காதல் எல்லாம் வராது. பாசம் தான் வரும். ஒரு தங்கைங்கிற பாசம்.”

 

என்ன நினைத்தானோ.. என்ன புரிந்ததோ.. கண்ணில் நீர் மல்க புன்னகைத்தான். ஏனோ அவனுக்கு இதயம் கனத்து கொண்டே போனது. வாழ்க்கை பாரமாகத் தோன்றியது. ஒட்டு மொத்த வாழ்க்கையும் நிராசையாகவே முடிந்து விடும் என்ற எண்ணம் வலியை அதிக படுத்தியது. காதலி எல்லாம் தங்கையாகி போனால் இப்படி தான் வலிக்கும் போலும்!

 

எதிரில் நின்றிருந்தவள் உச்சந் தலையில் கைவைத்தான். “என்னைக்கும் மூர்த்தியோட நல்லா இரு. உன்ன நான் இனி மேல் பாக்கவே கூடாதுன்னு வேண்டிக்கிறேன். நீயும் என் கண்ணு முன்னாடி வந்திடாத!”

 

கீழே கிடந்த சட்டையோடு கதவைத் திறந்து வெளியே சென்றவன் கவனமும் பார்வையும் மங்கிப் போயிருக்க, கீழே கிடந்த அம்மா தெரியவில்லை.

 

நடக்கும் போது கால் இடிக்கவும் தான் கவனித்தான், அம்மா கீழே இருப்பதை.

 

“அம்மா..” என்று அவரை திருப்பி முகத்தில் நீர் தெளிக்கவும், அவர், “துளசி..” என்றார். கசந்த புன்னகையை உதிர்த்தவன், அவர் முகத்தில் எப்படி விழிக்க என்று சென்றுவிட்டான். இனி ஒருவர் முகத்திலும் விழிக்கும் நோக்கம் இல்லை அவனுக்கு.  

 

 

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!