Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

pon maazhai pozhuthu

பொன் மாலை பொழுது 19

மறுநாள் காலை எழும்போதே மனம் மிக சோர்வாக உணர்ந்தாள் மதிவதனி.அவள் பிறந்தநாளுக்கு அனைவரும் அவளுக்கு வாழ்த்து கூறினர்.ஊரிலிருந்து அவள் அத்தை கூட அவளுக்கு வாழ்த்து கூறினார்.ஆனால் அதிலெல்லாம் அவளுக்கு சந்தோஷம் இல்லை.

தன் மனம் கவர்ந்தவன், தனக்கு எதுவும் பரிசு தரவில்லையே என்று மனம் அதையே நினைத்து வாடியது.’அவர் ஏன் எனக்கு, பரிசு தர போறார்?இதுவே நித்யா பிறந்தநாள்னா கண்டிப்பா ஏதாவது பரிசு குடுப்பார்.ச்சே!இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் அவரை பத்தி யோசிக்கவே கூடாதுனா இந்த புத்தி கெட்ட மனசு கேக்கவே மாட்டிக்குது!’

யோசனையின் நாயகனே அவள் முன் வந்து நின்றான்.

“ஓய்! என்ன தீவிர யோசனை?இன்னும் நீ குளிக்கவே இல்லையா?சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா. எல்லாருமா சேர்ந்து கோயிலுக்கு போயிட்டு வரலாம்”



Advertisement

“ம்ம்….போறேன்…போறேன்….”அவள் ஒரு கடுப்புடன் கூறவும் அவன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றான்.

அவள் குளிக்கக் கிளம்பவும் அவளை கூப்பிட்டு ஒரு பார்சலை குடுத்தான்.உடனே அவள் முகம் மலர்ந்தது.

“ஷப்பா!கண்ணு கூசுது.1000 வாட்ஸ் பல்பு போட்ட மாதிரி முகத்துல லைட் எரியுதே?!”

Advertisement

“அதெல்லாம் ஒன்னுமில்லையே.அது உங்க மனபிராந்தி”

Advertisement

“ஓஹோ.சரி,சரி! பிரிச்சு பாரு”

அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் அவன் குடுத்த பார்சலை பிரித்து பார்த்தாள்.

உள்ளே அவளே ஆசையுடன் டிசைன் செய்த அந்த மயில் கழுத்து புடவை இருந்தது.அதை பார்த்து அவள் கண்கள் வியப்பில் விரிந்தது.

Advertisement

“இது….இது எப்படி?அப்போ நீங்க உண்மையிலேயே கிளையன்ட்க்கு கேக்கலையா?”

“இல்லை இல்லை, நான் உன்னை, கிளையன்டுக்கு தான் செய்ய சொன்னேன்.ஆனால் இதை செஞ்சு முடிச்சிட்டு திரும்ப என் கிட்ட குடுக்கும்போது, உன் முகத்தை பார்க்கணுமே! ஏதோ சின்ன புள்ளைகிட்டேர்ந்து லாலிபாப்பை புடுங்குன மாதிரி ஏக்கமா பார்த்த, அதான் உனக்கே கிஃப்ட்டு பண்ணிட்டேன்”

“பெரிய கிஃப்ட்டு போங்க. நான் டிசைன் பண்ணினதை எனக்கே குடுக்குறீங்களாக்கும்?!”

“சரி,உனக்கு வேற என்ன கிஃப்ட்டு வேணும் சொல்லு?நீ என்ன கேட்டாலும் தரேன்”

ஒரு நிமிடம் நித்யாவிடம் பேசக் கூடாது என்று கேட்க யோசித்தவள், பின்பு அந்த மாதிரி கேட்பது ஏதோ பிச்சை கேட்பதை போல கேவலமாக தோன்றவே வேண்டாமென ஒதுக்கி விட்டாள்.

குளித்துவிட்டு தயாராகி வந்த அவள், அந்த புடவையில் தோகை விரித்தாடும் மயிலை போலவே இருந்தாள்.தாமரையும்,நிலாவும் அவளை புகழ்ந்து தள்ளினர்.பின்பு எல்லோருமாக கிளம்பி கோவிலுக்குச் சென்றனர்.

தரிசனத்தை முடித்துவிட்டு காரில் ஏறச் சென்ற மதிவதனியை, மனோரஞ்சன் தடுத்து விட்டான்.

தாமரையும்,நிலாவும் மதிவதனியை பார்த்து கெக்கபிக்கவென்று சிரித்துக் கொண்டே இருந்தனர்.என்னவென்று அவள் கேட்டதற்கு, சொல்ல மறுத்து விட்டனர்.எல்லோரும் அவர்களுக்குக் கை அசைத்துவிட்டு கிளம்பி விட, அவர்கள் இருவர் மட்டும் தனித்து விடப்பட்டனர்.

“நாம இப்போ எங்க போறோம்?”

“வா சொல்றேன்”

முதலில் அவர்கள் சென்றது ஒரு ஹோட்டலுக்கு. அங்குச் சென்று மனோரஞ்சன் அவளுக்கு பிடித்த அடை அவியலும்,சாம்பார் வடையும் அவளை கேட்காமலே ஆர்டர் செய்ய அவள் ஆச்சரியபட்டாள்.

“இது தான் எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”

“ஆல் டீட்டைல்ஸ் ஐ நோ. சாப்பிடு” என்றான்.

சாப்பிட்டு முடித்ததும் அவன் அவளை கூட்டிச் சென்ற இடம் அவள் சற்றும் எதிர்பாராதது. அது ஒரு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான காப்பகம்.

அந்த காப்பகத்தின் பொறுப்பாளரான சிஸ்டர், மனோரஞ்சனிடம் நன்றாக பேசினார்.மதிவதனியிடமும் வாஞ்சையாக பேசினார்.அவர் சொல்லியபிறகு தான் மனோரஞ்சன் அந்த காப்பகத்துக்கு அடிக்கடி வருவதும் அங்கு நிறைய உதவி செய்வதும் தெரிந்தது.

மனோரஞ்சன் ஆதரவற்ற பெண்களுக்கென்று ஒரு தனி அமைப்பு உருவாக்கி, அதன் மூலம் உதவி கேட்டு வரும் பெண்களை இந்த காப்பகத்தில் சேர்த்து அவர்கள் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வந்ததை பற்றி பெருமையாக பேசினார்.

இவனிடமா பெண்ணடிமைத்தனம் பற்றியும், ஆணாதிக்கம் பற்றியும் பல தடவை விவாதம் பண்ணிருக்கோம்? தன்னையே நொந்து கொண்டாள் மதிவதனி.ஆனால் அவள் மனதிற்குள் சின்ன ஒரு நெருடல் இருந்தது.அதை மனோரஞ்சனிடமே கேட்டு தெளிந்து கொண்டாள்.

“ரஞ்சன்….இங்க, இப்போ என் பர்த்டே செலிப்ரேட் பண்ணவா வந்திருக்கோம்?”

கண்களை சுருக்கி அவளை பார்த்தவன்,”ஏன் கேக்குற?”என்றான்.

“இல்லை இங்க உள்ள நிறைய பசங்களுக்கு அவங்க பிறந்த தேதி என்னனு தெரியாது. அப்படி இருக்கும்போது எனக்கு இன்னைக்கு பர்த்டே, அதை கொண்டாட தான் வந்தோம்னு சொன்னா அவங்க மனசு கஷ்டப்படாதா?”

அவள் கேள்வியை கேட்டு சிரித்தவன்,”ரொம்ப கரெக்டா சொன்ன மது. நிறைய பேர் நல்லது செய்யுறதா நினைச்சிகிட்டு, அவங்க பர்த்டேவை இங்க வந்து கேக் வெட்டி கொண்டாடி எல்லா குழந்தைகளுக்கும் குடுப்பாங்க.ஆனால் அவங்க அந்த குழந்தைகளோட நிலைமைல இருந்து யோசிக்க தவறிடுவாங்க”

“இந்த கொண்டாட்டத்தை எல்லாம் பாக்குற குழந்தைகளுக்கு நமக்கும் இந்த மாதிரி கொண்டாட முடியலையேனு ஏக்கம் தான் வரும்.அதனால தான் இன்னைக்கு உன் பர்த்டேனு நான் சிஸ்டர் கிட்ட கூட சொல்லலை.கொஞ்சம் நேரம் இந்த குழந்தையோட குழந்தையா விளையாட போறோம். அவங்களுக்கு தேவையானதை நாமளே செய்ய போறோம். அவ்ளோதான்”

அடுத்து சில மணிநேரங்களுக்கு மதிவதனி தன்னை அந்த குழந்தைகளிடம் முற்றிலும் தொலைத்தாள்.அவர்களுடன் விளையாடி,அவர்களுடன் கதைபேசி,அவர்களுடன் சண்டையிட்டு,அவர்களுடன் பாடம் படித்து என மனோரஞ்சனும், மதிவதனியும் வேறு உலகத்திற்கே சென்றனர்.

அந்த உலகம் மாசு மறுவற்றது, கள்ளம் கபடமற்றது, சுயநலமற்றது, எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ளாதது,அது கடவுளின் உலகம்.அந்த உலகத்துக்கு சென்ற இருவராலும் திரும்பி வர முடியவில்லை.

மனோரஞ்சன் பசங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான்.அங்கு அவள் முற்றிலும் வேறு ஒரு மனோரஞ்சனை பார்த்தாள்.ஒரு பையனிடம் தான் அவுட் இல்லை என்று சரிக்கு சரியாக வாதாடிக்கொண்டிருந்தான்.கண்ணை இமைக்காது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பார்வையை உணர்ந்த அவன் திரும்பி, அவளை பார்த்து என்னவென்று கேட்டான். அவள் ஒன்றுமில்லை என்று தலையாட்டி விட்டு தன் சிவந்த முகத்தை மறைக்க வேறு புறம் திரும்பினாள்.

அதற்குள் சிஸ்டர் அங்கே வந்து, பிறந்து 10  நாட்களே ஆன ஒரு குழந்தை நேற்று அவர்கள் இல்லத்திற்கு வந்ததாகவும், வேண்டுமென்றால் அந்த குழந்தையைச் சென்று பார்க்குமாறும் சொல்லவே அவர்கள் இருவரும் சென்று அந்த குழந்தையை பார்த்தனர்.

பஞ்சு பொதியினுள் தன் சின்னஞ் சிறு கை கால்களை ஒண்டியபடி படுத்திருந்த அந்த குழந்தையை பார்த்தவுடன் மதிவதனிக்கு மூச்சை அடைத்து.

“இந்த இளம்பிஞ்சை எப்படி தான் அந்த தாயுள்ளம் கைவிட்டதோ?எனக்கு புரியவே இல்லை” என்றாள் கண்களில் லேசாகக் கோர்த்த நீருடன்.

“அப்படி சொல்லாதே மது. அவங்களுக்கு என்ன கஷ்டமோ?! நமக்கு தெரியாதே?இதை வேண்டாம்னு முடிவெடுக்கும் போது அவங்க மனசு என்ன பாடு பட்டிருக்கும்?”

இந்த கோணத்தில் நாம யோசிக்கவே இல்லையே என்று நினைத்தவள் கைகளை சுத்தம் செய்துக் கொண்டு அந்த குட்டி பஞ்சு பொதியை கையிலெடுத்தாள். அவள் தொட்டவுடன் சிறிது தூக்கம் கலைந்த அந்த குழந்தை தன் குட்டி வாயை திறந்து கொட்டாவி ஒன்றை வெளியிட்டது.மதிவதனிக்கு உடல் முழுவதும் சிலிர்த்தது.

சில நிமடங்கள் கழித்து குழந்தையை மனோரஞ்சனிடம் குடுத்தாள். அவனுக்கும் கண்களில் நீர் திரையிட்டது.அந்த குழந்தையை கொஞ்சிக் கொண்டே நிமிர்ந்து மதிவதனியை பார்த்தான். அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.கையில் குழந்தையை வைத்துக்கொண்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றது அப்படியே ஒரு சித்திரம் போல இருந்தது.

மதிய சாப்பாட்டை குழந்தைகளுக்கு பரிமாறிவிட்டு,அந்த குழந்தைகளுடனே சேர்ந்து சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்ப மனசே இல்லாமல் கிளம்பினாள் மதிவதனி.

காரில் செல்கையில் ஒரு வித மோன நிலையிலேயே இருந்தாள். அவனும் அந்த மோனத்தை கலைக்காமல் காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.கடைசியாக கார் நின்றபிறகு, தான் எங்கு வந்திருக்கிறோம் என்று சுற்றி பார்த்தாள்.அடுத்ததாக அவன் அவளை கூட்டி வந்த இடம் பீச்.

பீச்சை பார்த்ததும் குழந்தையை போல குதுகலித்தாள் மதிவதனி.

“அய்யோ! ரஞ்சன், எனக்கு பீச்சுக்கு போகணும்னு எவ்ளோ ஆசை தெரியுமா?இதுக்கு முன்னாடி நான் போனதே இல்லை”

அவள் குதிப்பதை ரசித்தவன் அவளை அலைகளுடன் விளையாட கூட்டிச் சென்றான்.

இருவரும் சிறுபிள்ளைகளாய் அலைகளை தொட்டு பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.சிறிது நேரம் விளையாடிய பின்பு, இருட்ட தொடங்கியதால் கிளம்பலாம் என்று மனோரஞ்சன் சொல்லவும், அங்கிருந்தும் கிளம்ப மனமில்லாமல் கிளம்பினாள் மதிவதனி.

அடுத்து அவன் அவளை அழைத்துச் சென்றது ஒரு தள்ளுவண்டி கடை.ஒரு பாட்டி சுடசுட இட்லிகளை இறக்கிக் கொண்டிருந்தார்.ஏற்கனவே பீச்சில் விளையாடியதால் பயங்கர பசியில் இருந்த மதிவதனி, வேக வேகமாக சுடான இட்லிகளை உள்ளே தள்ளினாள்.

“ஏய்! பார்த்து, பார்த்து மெதுவா சாப்பிடு. விக்கிக்க போகுது! இன்னொரு பிளேட் சாப்பிடுறியா?”

“என்ன கேள்வி இது?இன்னொரு ப்ளேட் சொல்லுங்க. அப்புறம் ஒரு ஃபுல் பாயில் சொல்லிடுங்க. அடுத்து ஒரு பரோட்டா”

மனோரஞ்சன் வாயை பிளந்துக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“அடியேய்! என்னடி, இப்படி சாப்பிடுற?”

“ச்சு…கண்ணு போடாதீங்க ரஞ்சன்”

“என்னவோ, இன்னைக்கு உன்னை பார்க்கவே வித்தியாசமா இருக்கு. என் மதுவா இதுனு சந்தேகமா இருக்கு”

‘என் மது’ என்ற அவன் வார்த்தைகளில் தன்னை தொலைத்தவள், அதை மறைப்பதற்கு அவனிடம்,”அதெல்லாம் ஒன்னும் இல்லை ரஞ்சன், ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான், நான் நானா இருக்கேன்” என்றாள்.

அவளையே முகம் கனிய பார்த்துக் கொண்டிருந்தவன் அவளிடம்,”ஆக்சுவலா இன்னைக்கு டின்னர்க்கு ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் புக் பண்ணிருந்தேன். ஆனால் கடைசி நிமிஷம் அந்த ஹோட்டல்காரன் ஏதோ டேட் கன்ஃபுயுஸ் ஆகி சொதப்பிட்டான்”

“நல்ல வேளை அவன் சொதப்பினான். இல்லேனா இப்படி ஒரு ருசியான சாப்பாட்டை மிஸ் பண்ணிருப்பேன்”

மனோரஞ்சன் சிரித்துக் கொண்டே,”அதுவும் உண்மை தான் மது.அந்த 5 ஸ்டார்ட் ஹோட்டல் சமையல்ல, தரமான உணவு பொருள் தான் யுஸ் பண்ணுவாங்க.இங்க அப்படி இருக்குமான்னு சொல்ல முடியாது. ஆனால் அங்க வெறுமனே வியாபாரத்துக்கு மட்டும் தான் சமைப்பாங்க. இந்த பாட்டி கூட கொஞ்சம் பாசத்தையும் சேர்த்து போட்டு செய்வாங்க. அதனால தான் இந்த சாப்பாடு ருசி அதிகம்”

அவர்கள் சாப்பிட்டு முடிக்கும்போது அவன் டிரைவர் ரங்கனை போனில் அழைத்து அவர்கள் இருக்கும் இடத்தைக் கூறி வந்து காரை எடுத்துச் செல்லுமாறு கூறினான்.

“ரஞ்சன்! ஏன் காரை எடுத்துட்டு போக சொல்றீங்க?நாம எப்படி வீட்டுக்கு போக போறோம்?”

“நடந்து தான். இங்கிருந்து ரெண்டு தெரு தாண்டினா நம்ம வீடு வந்துடும் அப்புறம் என்ன?”

“நடக்கிறது பிரச்சனையை இல்லை. எதுக்கு…”

“சொல்றேன் இரு”

ரங்கன் வந்து காரை எடுத்துச் செல்லவும், மனோரஞ்சனும் மதிவதனியும் பொடி நடையாக நடக்க ஆரம்பித்தனர்.

அன்று பௌர்ணமி.பால் நிலவு தண்ணொளியை வீசிக்கொண்டிருந்தது. அந்த நிலவொளியில், லேசாக வீசும் காற்றில், யாருமற்ற சாலையில், மனோரஞ்சனின் கைகள் உரச, அவன் பக்கத்தில் ஒட்டி நடந்துக் கொண்டிருந்த மதிவதனிக்கு உலகத்தில் மற்ற எல்லாமே மறந்தது. நித்யா உட்பட!

“என்ன மது? அமைதியா வரே?”

“என்ன பேச?”

“ஏதாவது பேசு. சரி,இன்னைக்கு நாள் உனக்கு பிடிச்சிருந்துச்சா?நீ கேட்ட மாதிரி உனக்கு எதுவுமே கிஃப்ட்டு வாங்கி குடுக்க முடியல”

“இல்லை ரஞ்சன்,இன்னைக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.இந்த பர்த்டே நான் மறக்கவே மாட்டேன்.ஏதாவது பொருள் வாங்கி குடுத்திருந்தா கூட அதோட மதிப்பு, அந்த பொருள் இருக்கிற வரைக்கும் தான்.ஆனால், இன்னைக்கு நீங்க என்னை கூட்டிட்டு போன இடம், நாம பேசுனது,சிரிச்சது,இன்னைக்கு நடந்தது எதையுமே அழிக்கவே முடியாது. அதை அப்படியே என் மனசுக்குள்ள பதிஞ்சி வச்சுகிட்டேன்.இது தான் ரொம்ப பெரிய கிஃப்ட்டு”

“நீ நல்ல பேச கத்துகிட்ட”மனோரஞ்சன் மந்தகாசம் சிந்தினான்.

பேசிக்கொண்டே சென்ற மனோரஞ்சன்,சிறிது நேரம் கழித்து மதிவதனியின் கையை பிடித்துக் கொண்டான்.அவன் உள்ளங்கையின் வெம்மை அவள் உடல் முழுவதும் பரவியது.எதுவும் சொல்லாமல், கோர்த்த கையை பிரிக்காமல், பேசா மௌனத்துக்கு ஆயிரம் அர்த்தமுண்டு என்பது போல நடந்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வீட்டை நெருங்கும் சமயம்,மனோரஞ்சன் அவள் கையை ஒரு முறை அழுத்தி அவளை நிற்குமாறு சொன்னான்.பின் தன் சட்டை பையிலிருந்து ஒரு சின்ன பெட்டியை எடுத்தான். மதிவதனி மூச்சை பிடித்துக் கொண்டு நின்றாள்.

அவன் அந்த பெட்டியை திறக்க போகும் சமயம் அவன் போன் ஒலித்தது.அதை எடுத்து பார்த்தவன் உடனே அதை கட் செய்தான். மீண்டும் பெட்டியை திறக்க போக இரண்டாம் முறையாய் போன் ஒலித்தது.

இந்த முறை அவன் கையிலிருந்த போனை பறித்த மதிவதனி, திரையில் தெரிந்த பெயரை பார்த்து,கோபத்தில் முகம் சிவக்க அந்த இடத்தை விட்டு வேகமாக நகன்றாள்….

புலரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!