Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ46 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 46

 

“மூர்த்தி சார்” என்றாள்.

 



Advertisement

மாம்பழ கொட்டைக்குள் வண்டாய் மனதை குடைந்தது துளசியின் சத்தம். ‘துளசி மா..’

 

மரத்தடியில், அவன் மடியில் அவன் துளசி.. அவள் வாசம் அவன் மனதை நிறைத்துக் கொண்டிருந்தது. சிரித்தாள்.. மீசையை முறுக்கிவிட்டாள்.. “அழகு மூர்த்தி சார் நீங்க” என்றாள். கன்னக்குழியின் இதழ் புதைத்தாள்.. “அப்படியே என்னை உள்ள இழுத்துக்கோங்க மூர்த்தி சார்”..

Advertisement

 

Advertisement

“அண்ணா.. ண்ணா”

 

அழைத்தது செல்வன். அழைத்தது மூர்த்தியை. தன்னை மறந்து மனைவியின் நினைவில் புதைந்திருந்தவன், ஐ.சி.யூ வாடிற்க்கு வெளியே இருந்த இருக்கையில். நேற்றிலிருந்தே இப்படி தான் அமர்ந்திருக்கிறான்.

Advertisement

 

அழைத்த அழைப்பு கேட்கத் தான் செய்தது. கண் திறக்க மனமில்லை.

 

“அண்ணா..”

 

கண்களை திறந்தான், மடியில் துளசி இல்லை. மருந்தின் வாடை.. சுற்றி கண்ணீரும் கவலையும் நிறைந்த முகங்கள்.

 

“வெளில ரெண்டு நிமிஷம் போயிட்டு வா ண்ணா. எவ்வளவு நேரம் இங்கேயே உக்காந்திருப்ப. மைனி கண் முழிச்சதும், உனக்கு சொல்றேன்.”

 

திரும்பி பார்த்தான். பார்வையின் அர்த்தம் புரியாமலில்லை. அவள் எப்பொழுது எழுந்து இவன் எப்பொழுது மூர்த்தியிடம் கூறுவானாம்? அவள் நீண்ட மௌனத்தைக் களைய மனமில்லாமல் படுத்திருப்பது அனைவருக்கும் தெரியுமே. கண் திறக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்ன?

 

தூத்துக்குடி சென்றிருந்த அனைவரும் வந்திருக்க.. முன்தினமே, தங்கம் பாட்டியோடு சென்றிருக்க.. நந்தினியும் முன்தினம் மாலையே கிளம்பியிருந்தாள். மணியும் பானுவும் கூட கண்விழித்தாயிற்று.

 

முன் இரவு பானு கண்விழித்ததும் துளசியைத் தேடினாராம், செவிலி கூறியதாகச் செல்வன் கூறினான் மூர்த்தியிடம். யாரேனும் ஒருவர் சென்று பார்க்கலாம் என்றதிற்கு  மூர்த்தி தான் சென்றான் தன் அக்காவைக் காண.

 

ஜீவன் ஏதோ ஒரு ஓரத்தில் ஒட்டி இருந்தது, பெண்மணிக்கு. அதனால் மூச்சுவிட்டார். அருகில் கைபிடித்து நின்றிருந்தவனுக்கு மூச்சிருந்தது… இருந்தும் ஜீவனில்லை.

 

“மூர்த்தி” என்ற ஒற்றை வார்த்தை உதிர்க்கத் திணறி போனார். அவருக்கு, அவர் ஆயுள் மேல் நம்பிக்கை இல்லை, பேசிவிட வேண்டும் என்ற தீவிரம். இரண்டு பெண் பிள்ளைகள் அனாதையாக நிற்கப் போவதில்லை என்று தெரியும். அதனால் அதுவும் பயமில்லை. ஆனால் அவர் மனதில் தீரா பாரம் ஏறி அமர்ந்திருந்தது. மகன் பேசியதெல்லாம் கேட்டிருக்க வேண்டாம். கேட்டுவிட்டாரே. சாந்தினி இறக்கிய கத்தியை விட அந்த சொற்களின் வலி தான் அதிகம்.

 

ஜீவன் போகும் முன் மன்னிப்பை யாசித்துப் படுத்திருந்தார்.

 

“மூர்த்தி.. மன்னிச்சிடு” என்றார், அவன் கை பிடித்து

 

“தப்பு பண்ணிட்டேன்.. உன் கனவ கலைச்சுட்டேன்.. தப்ப தட்டி கேக்கவிடாம பண்ணிட்டேன். பாவத்த என் வயத்துல சுமந்தது பத்தலன்னு உன் உழைப்பையும் கனவை கலைச்சு பாவம் பண்ணிட்டேன்… மன்னிச்சிடு. தப்ப தைரியமா தட்டி கேளு மூர்த்தி..“ அவர் முடிக்கும் முன் அருகில் இருந்த உபகரண்கள் எல்லாம் ஏதேதோ சத்தம் எழுப்ப.. பானுவிற்கு மீண்டும் சுவாசக் காற்று பொருத்தப்பட்டு, மருந்தின் உதவியால் உறங்க வைத்தனர்.

 

எல்லாம் கேட்டுக் கொண்டான். பதில் பேசவில்லை. ஏனோ பேச முடியவில்லை. எல்லாம் அவளோடு சேர்ந்து தொண்டைக்குள் மாட்டி நின்றுகொண்டது.

 

அவரிடம் மட்டுமா.. மணியிடமும் பேசவில்லை. பேசகூடாதென்றில்லை. பேச்சு வரவில்லை. என்ன மாயமோ, மணி கண் விழித்ததும் மூர்த்தியைத் தான் தேடினான். 

 

காலையில் மணி கண் விழித்ததும் முன்தினம் நடந்ததெல்லாம் கண் முன் வந்து அவனை உயிரோடே கொன்றது. அண்ணனாய் பார்க்கக் கூடாததெல்லாம் பார்த்துவிட்டான். அவன் கண் முன் தானே.. நந்தினி கதறினாள். அசைய முடியாமல் இவன் அமர்ந்திருக்க.. நந்தினி, “அண்ணா பாக்காத… அண்ணா காப்பாத்து” என்று கதறியதெல்லாம் நினைவில் வந்து கொன்றது. செத்து போனால் நலமாயிருக்கும் என்று ஏங்க வைத்த தருணம்.

 

துளசியிடம் விடைபெற்றுச் சென்றவன் வாய்க்கால் ஓரமாய் அமர்ந்திருக்க, தூரத்தில் நிழலாய் ஒரு உருவம் யாரையோ தூக்கிச் செல்வது தெரிந்தது. முதலில் எதுவும் வித்தியாசமாகத் தோன்றவில்லை. அப்பா – பிள்ளையாக இருக்கும் என்று தான் நினைத்தான். திமிறிக் கொண்டு சிறுமி ஓடவும்.. சிறுமியை அடித்த அடியில் கீழே விழுந்தவளை அவன் மீண்டும் தூக்கவும், இவனுக்கும் ஏதோ தவறாய் பட.. பின்னோடு சென்றான்.

 

எதிர்பார்க்கவில்லை, அது அவன் தங்கமாய் இருக்கும் என்று.

 

எதையும் யோசிக்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். கையில் கிடைத்த பாறையைக் கொண்டு பின் மண்டையைத் தாக்க.. அவன் கீழே விழுந்தான். கூடவே திமிறிக்கொண்டைருந்த தங்கமும்.

 

அண்ணனைப் பார்த்ததும் கழுத்தைக் கட்டிக்கொண்டு.. அம்மா இரத்தத்தில் கிடப்பதாக கூறிக்கொண்டே அழவும்..

 

“வீட்டுக்கு ஓடி போ.. செல்வனையும் மாமா பசங்களையும் வர சொல்லு. அப்படியே சுப்புவ கார் எடுத்திட்டு வர சொல்லு… ஓடு…” விரட்டி விட்டவன்.. மீண்டும் தோட்ட வீட்டிற்குள் நுழைந்தான்.

 

நுழைந்தவன் முதுகுத் தண்டு சில்லிட்டது. அம்மா.. கீழே ரத்த வெள்ளத்தில். கூடவே உள்ளிருந்து நந்தினியின் அழுகுரல். எங்குச் செல்ல..? யாரை பார்க்க? அடுக்களையிலிருந்து நந்தினியின் சத்தம் செவிப்பறையைக் கிழித்தது.  இப்படி தான் இவன் வாழும் இடத்தில் புதிதாய் வரும் பெண்கள் ஓலம் எழுப்புவார்கள்.

 

“நந்துமா..” உள்ளே ஓடினான்.

 

அறைக்குள் நுழைந்த நொடி.. நந்தினி மேல் இருந்தவனை இழுத்து பொட்டு தாக்க.. யார், என்ன, எப்படி… எதுவும் உணரும் முன், கத்தி முதுகுத் தண்டில் இறங்கியது. அடுத்த நொடி பின் மண்டை பிளந்து போன வலி.

 

சுவரோடு சரிந்து விழுந்தான். சுயநினைவிருந்தென்ன பயன்? அசையமுடியவில்லை அவனால். சாந்தினி நின்றுகொண்டிருந்தாள்.

 

கையிலிருந்த கட்டையைக் கீழே போட்டவள், “சீக்கிரம் இவளையாது தூக்கிட்டு வந்து தொல..” தடியனிடம் மராத்தியின் கூறிவிட்டு.. மணியைப் பார்த்தாள்.

 

“என்ன மாசி.. இது உன் குடும்பமா? சொன்னதே இல்ல! நீ தான் கோமலுக்காகக் கௌரவ போட்டியா? அவன போட்டுட்டு நீ பொண்டாட்டியோட ஜாலியா இருக்க போல! முதல்ல கோமல தேடி தான் வந்தேன். அவ மாசமா இருக்கவும் ஏழு வருஷம் கழிச்சு வந்து பார்த்துட்டு போகலாம்ன்னு நினைச்சேன். ஆனா நீ இங்க இருந்து வெளியில போனத பாத்தப்புறம் தான் தெரிஞ்சுது அவ உன் பொண்டாட்டின்னு. தெரிஞ்ச பிறகு.. சும்மா போக முடியுமா? அது தான் நானும் சந்திராவும் இப்போ தான் பார்த்துட்டு, ‘ஹலோ’ சொல்லிட்டு வந்தோம். உயிர விட்டுட்டு போறேன்.. வருவேன் வந்து உனக்கு பிறக்கிறது ஆணா இருந்தாலும் சரி.. பொண்ணா இருந்தாலும் சரி.. இவளோட சேர்த்து அது வாழ்க்கையும் எங்க கூட தான். இன்னைக்கு தப்பிச்சிட்ட உன் வீட்டு குட்டி பொண்ணையும் பத்திரமா இருக்க சொல்லு! இப்போ சொன்னதை எல்லாம் நினைச்சுட்டே நீ நிம்மதியா செத்து போ..”

 

சென்று கொண்டிருந்த சாந்தினியைப் பார்க்க மட்டும் தான் முடிந்தது மணியால். அசைய முடியவில்லை.

 

“கோமல்… கோமல்… துளசிசிசி” வீறிட்டான். பதிலில்லை.

 

அம்மாவிடம் அசைவில்லை என்று தெரிந்தும் அம்மாவை உதவிக்கு அழைத்தான். அம்மா வரவில்லை.

 

கண் எதிரில் அவன் தங்கை… பார்க்கக் கூடாத கோலத்தில். அவன் தங்கை. பாரம் தாங்காமல்.. போராடி.. கதறிக் கொண்டு. “அண்ணா..” வீறிட்டாள்.

 

உயிரோடு புதைந்து போனான், அவன் நோண்டிய அதே பாழ் குழியில் புதைந்து போனான்.

 

இம்மி அசைய முடியவில்லை. நரம்பு மண்டலம் அடிவாங்கியிருக்க.. உடலை அசைக்க முடியவில்லை. “டேய்.. குழந்த டா அவ… சந்திரா அவள விடுடா..” வார்த்தை ஒழுங்காக வரவில்லை. குழறியது.

 

“அண்ணா… பாக்காதண்ணா…”

 

துளசி.. இப்படி செயலற்று இருக்கவில்லையே. வயிற்று பிள்ளையோடு எப்படித் தாக்கினாள். “நந்து அவன கடி.. விடாதா நந்து.. கண்ணுல குத்து நந்து..”

 

“காப்பாத்துண்ணா..”

 

“நந்து குட்டி.. அழாத. அவன் விரல பலம் இருக்காது.. அத பின் பக்கமா உடச்சு போடு.. அவன் நகந்ததும் ஓடிடு… ஏதாவது பண்ணு நந்து. ஐஞ்சு நிமிஷம்.. வீட்டில இருந்து ஆள் வந்திடும்… தைரியமா இரு நந்து” தேம்பினான்.

 

தங்கையின் கதறல் கேட்கும் அளவிற்கு மனம் கடினப்படவில்லை. “நந்து..” அலறினான். அவன் நந்து குட்டியே தான். இப்படி தானே ஒவ்வொரு அண்ணனுக்கும், தம்பிக்கும், அப்பாவிற்கும் இருக்கும். கண்ணாய் மணியாய் பேணிய பிள்ளை கசங்கி நிற்கும் வேளை இப்படி தானே இருக்கும்? அவன் அனுபவிக்க வேண்டிய வலி தான். ஆனால் அவன் பாவத்திற்கு நந்தினி பலியாவதா? பருவ மங்கை.. வலியில் கதறினாள். அவன் ஊட்டி வளர்த்த மிருகம் அவன் கண்முன் அவன் குட்டி தேவதையின் சிறகை அறுத்து எறிந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். இதை விட வேறு என்ன தண்டனை வேண்டும். முதல் முறை ஒரு பெண்ணின் ஓலம் ரசிக்கவில்லை. உயிரோடு கொன்றது.

 

எத்தனை தேவதைகளை நீ சிதைத்தாய்? மனம் கேட்டது. மணி என்ற மிருகத்திற்குள் ஒளிந்திருந்த மனிதன் அழுதான். அவன் இயலாமை நினைத்து வாய் விட்டு அழுதான். அவன் செய்த பாதவத்திற்காகக் கதறி அழுதான்.

 

“என் தங்கைய விடுடா பாவி” என்று கதறினான்.

 

கதறியவனுக்கு ஒன்று புரிந்தது. கதறுவதும் கதறவைத்ததும் ஒரு அண்ணன் என்பது தான் அது.

 

தவறுபவனும், தவறு இழைப்பவனும் பெண்ணில்லாத வேறு கிரகத்திலிருந்து வருவதில்லையே. அவனும் ஒரு பெண்ணிற்குத் தகப்பனோ, தாத்தாவோ, மாமனோ, கணவனோ, சகோதரனோ தான். வீட்டளவில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் மாற்றம் சாத்தியமில்லை. மணி மாறிவிட்டான்… அவன் குற்றம் உணர, அவன் கொடுத்த விலை மிக அதிகம்.

 

மணி உயிர் பிழைக்கலாம். ஆனால் அவனால் ஒரு சராசரி மனிதனாய் வாழ முடியுமா என்பது கேள்வியே. பிழைத்தால்.. கண்டிப்பாக வாழ் நாளை ஏதாவது பைத்தியக்கார மருத்துவமனையில் கழிப்பான் என்பது திண்ணம்.

 

இரண்டு நிமிடத்தில் வெளியே கார் சத்தம்.. ‘தட தடவென்று பல கால்களின் சத்தம். சந்திராசூர் உயிர் தப்பினால் போதும் என்று பின் வாசல் வழி ஓடிப் போனான். ஓடும் முன்.. மணியின் தலையை அடுக்களையில் இருந்த கட்டை மீண்டும் ஒரு முறை பதம் பார்த்தது. அதன் பின் நடந்த எதுவும் தெரியாது.

 

நந்தினி பிழைத்திருப்பாள் என்று தெரியும். துளசி என்ன ஆனாள் தெரியவில்லை. சாந்தினி மீண்டும் வருவதாகக் கூறினாளே.. கண்டிப்பாக இங்கு தான் சுற்றி திரிவாள். மீண்டும் வருவாள்.. பெரிய வீட்டிற்கு சென்றால்? வீட்டில் எத்தனை பிள்ளைகள்? ஒன்றை தூக்கிச் சென்றாலும்.. அந்த வேதனையை அவனால் யோசிக்க முடியவில்லை.

 

சமுதாயம் என்பது நாம் தானே.. ஒவ்வொரு வீட்டு ஆண்மகனும் சரியாய் இருந்தால்.. மற்ற வீட்டுச் சிறுபிள்ளையை தன் வீட்டுப் பிள்ளையாக எண்ணினால் ஏன் இந்த அவலம்? ஒழுக்கமும், சுயகட்டுப்பாடும், ஆண் பெண் இருவருக்கும் பொதுவாய் போனால்.. சமுதாயத்தில் மாற்றம் ஏற்படலாம்.?!

 

மூர்த்தி அருகில் வந்து நின்ற பின், மூர்த்தியின் முகத்தைக் காணத் தைரியம் இல்லை. மண்ணோடு மண்ணாய் புதைந்து போயிருக்கலாம். கையை தூக்க முடியவில்லை. விரல் கொஞ்சம் அசைந்து கொடுத்தது.

 

கண்ணில் வழிந்த நீரை மூர்த்தி தான் துடைத்தான். ஆறுதல் கூற வார்த்தை இல்லை. மெல்லக் கையை தட்டிக் கொடுக்க, விரலைக் கொண்டு பிடித்துக் கொண்டான்.

 

நினைத்த மாதிரி பேச முடியவில்லை. குரலும் போய்விட்டதா? புரியவில்லை. முயன்று பேசினான். கூறினான், சாந்தினி பற்றி, கௌஷி பற்றி, வந்தவர்கள் பற்றி என்று அனைத்தையும் எப்படியோடோ இழுத்துப் பிடித்துக் கூறிவிட்டான்.

 

“அவங்கள உயிரோட விட்டா வருவாங்க மூர்த்… மாமா.. சத்யன் கிட்ட மிச்சம் வைக்காம முடிக்க சொல்லுங்க..” என்ற வாக்கியம் முடிப்பதற்குத் திணறிப் போனான்.

 

முதல் முறை ‘மாமா’ என்றான். எல்லாம் முடிந்து போனது! அவன் பிடித்துவைத்திருந்த அர்த்தமற்ற பகையால்.

 

கூறியதை கேட்டுவிட்டு வந்து அமர்ந்தவன் தான்… அப்படியே அமர்ந்திருந்தான், செல்வன் அழைக்கும் வரை.

 

மூர்த்தி எழுந்து கொள்ளவும், “ண்ணா… ஒரே ஒரு தரம் மைனிய பாரேன்” என்றான் வேண்டுதலாய்.

 

“யாருக்காக?” கேட்டவன் சென்றுவிட்டான்.

 

அண்ணனைப் புரியவில்லை. அண்ணன் உணர்வுகளும் புரியவில்லை. ஏன் அழவில்லை? ஏன் கலங்கவில்லை? விஷயம் கேள்விப்பட்டு 26 மணி நேரம் ஆகியும் மைனியை ஒரு முறை கூட பார்க்காமல் அமர்ந்திருக்கும் அண்ணனை சுத்தமாகப் புரியவில்லை.

 

அவனால், அவன் மைனியை விட்டு நகர முடியாமல் மருத்துவமனையை சுற்றித் திரிந்தாலும், அனுமதி கிடைக்கும் வேளையிலெல்லாம் பார்த்து வருவான். அண்ணன் இங்கு தான் அமர்ந்திருந்தாலும்.. அமைதியாய் அமர்ந்திருக்கிறானே ஒழிய.. ஒரு முறை கூட மைனியை பார்க்கவில்லை. ஏன்? தெரியவில்லை. ஏதோ முடிவோடு இருப்பதாகத் தோன்றியது.

 

நாலடி முன் சென்றவன் நின்று திரும்ப.. செல்வன் ஓடி சென்று மூர்த்தி முன் நின்றான்.

 

“சொல்லுண்ணா..”

 

“பாத்துக்கோ.. கண் முழிச்சா..” பேச்சு தொண்டையில் மாட்டி நின்றது.

 

“அண்ணா… டாக்டர் சொல்லறது எல்லாம் நடந்திடுமா என்ன? அவர் என்ன கடவுளா? சரி ஆகிடும் ண்ணா.. மைனி பிழைச்சுடுவாங்கண்ணா..”

 

கண்ணீர் வழியக் கூறியவனுக்கு, வறண்ட புன்னகை பதிலாக வந்தது.

 

“கிளம்புறேன். வந்தா.. துளசிய பார்க்கிற தகுதியோட வரேன். நீயே பாத்துக்கோ.”

 

அண்ணன் மீண்டும் மருத்துவமனை வர மாட்டான் என்று நின்று கொண்டிருந்தவனுக்குத் தெரியாததால், அவன் கூறியது புரிந்து கொள்ள நாள் எடுத்தது. அண்ணனும் வரவில்லை, துளசியும் கண் விழித்தபாடில்லை.

 

“பல்ஸ் குறையுது. குழந்தைய மட்டுமாவது காப்பாத்த முடியுதான்னு பாக்கலாம். சர்ஜரி அவங்க உடம்பு தாங்காது.. ரொம்ப லேட் பண்ணாம  யோசிச்சு சொல்லுங்க” என்று மருத்துவர் கூறும் வரையிலுமே மூர்த்தி வருவான் என்று காத்திருந்த குடும்பத்தினருக்கு ஏமாற்றமே.

 

“மருத்துவர் கூறியதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று சத்தயன் மூலமாகக் கேட்டதற்கும், பதில் வரவில்லை என்றதும் தான் அண்ணன் கூற்று புரிந்தது. அதன் பின் பல முறை முயன்றும் பேசயியலவில்லை. சத்யனும் தொடர்பில் இல்லை. அண்ணனும் தொடர்பில் இல்லை.

 

மூர்த்தி என்ன ஆனான்? எங்குச் சென்றான்? ஒருவருக்கும் தெரியவில்லை.

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!