Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thedi Unnai Saranadainthaen

Thedi Unnai Saranadainthaen 25

சரண் – 25 

 

ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்

இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா



Advertisement

ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு

அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டு தீண்டுவதா

மாமன் காரன் தானே மால போட நானே

Advertisement

மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்

Advertisement

மீனம்மா மழை உன்னை நனைத்தால்

இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்

அம்மம்மா வெயில் உன்னை அணைத்தால்

Advertisement

இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்

 

மயக்கத்தில் இருந்த அரூபி மெல்ல கண்விழிக்க,எப்பா.! விழிச்சிட்டியா..! நீ எப்படா கண்ணு முழிப்பன்னு காத்துட்டு இருந்தேன். ஆமா எதுக்கு என்னை பார்த்ததும் மயங்கி விழுந்துட்டே இருக்க. இது தான் அழகுல மயங்கி விழறதா. நான் அழகுன்னு எனக்குத் தெரியும். ஆனா நீ மயங்கி மயங்கி விழவும் தான் தெரியுது நான் பேரழகுன்னு.” என சிரிப்புடன் பேச, புகழ் பேசியதெல்லம் அவள் காதில் வாங்கிக் கொண்டது போல தெரியவில்லை. அந்த அறையை முழுசும் கண்களால் அலசிக் கொண்டிருந்தாள். எந்த இடம்.? மூளையை கசக்கினாள், ஒன்றும் தெரியவில்லை. ஒரு கையில் மருந்து ஏறிக்கொண்டிருக்க,  மற்றொரு கையோ அவனிடம் இருந்தது.

 

பிடித்திருந்த கையை வருடியபடியேஎன்னடா.?” என்றான் மற்றொரு கையால் முகத்தில் விழுந்த கூந்தலை ஒதுக்கியபடி. தன் நாவால் இதழ்களை ஈரமாக்கியவள் அவன் பார்வையில் தெரிந்த சிரிப்பில் முறைக்க முயன்று தோற்று, “நாம எங்க இருக்கோம்.” என்றாள் காற்றான குரலில்.

 

“சேம் டயலாக்…” என சிரித்தவன், அது நமக்கு கல்யாணம் ஆகிடுச்சா. இனி நமக்கு அங்க என்ன வேலன்னு ஊருக்கு கிளம்பி வந்துட்டோம்.. இப்போ நாம கோயம்புத்தூர்ல இருக்க நம்ம வீட்ல இருக்கோம்.” என விளக்க

 

“என்ன நமக்கு கல்யாணம் ஆச்சா.?” என அதிர்ந்து எழுந்தவளை,  “அடச்சீ இருடி.. ஒன்னு மயங்கி விழு.. இல்லன்னா ஷாக்காகு. உன்னை வச்சிட்டு என் பொழப்பு எப்படி போக போகுதோ தெரியல.” என புலம்பியவன், “இப்போ எப்படி இருக்கு? எழுந்து உட்கார்றியா, ஜுஸ் எடுத்துட்டு வரட்டுமா.?” என அவளைத் தூக்கி பெட்டில் சாய்த்து உட்கார வைக்க,

 

பெண்ணோ நெளிந்தபடிஇதை.. இந்த ஊசியை எடுக்க முடியாதா.? என பாவமாகக் கேட்க,

 

“ஏன் என்னாச்சு..? வலிக்குதா..? எழும்போது கையை ஆட்டிட்டியா.? அதான் வலி. நேரா வச்சிடு.” என்று அவள் கையை நேராக வைக்க.

 

பட்டென்று அவன் கையை தட்டி விட்டவள்எடுக்க முடியுமா.? முடியாதா.? எடுத்து விடுங்க எனக்கு அவசரமா போகனும்.” என சுண்டு விரலைக் கடுப்புடன் காட்ட

 

“கிறுக்கி கிறுக்கி.. உன்னை வச்சிட்டு” என வாய்விட்டு சிரித்தவன், கையிலிருந்த ஊசியை எடுத்துவிட்டு,நான் நடப்பேன்’ என்றவளை பொருட்படுத்தாமல் தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான். அங்குள்ளவற்றை காட்டி எப்படி உபயோகிக்கணும் எனக் கூறிவிட்டுஎங்க விழுந்து வாருவயோன்னு பயமா இருக்கே. நிக்கட்டுமா.? போகட்டுமா.?” என கண்களில் மின்னிய சிரிப்புடன் விசமமாகக்  கேட்க

 

என்ன..” என அதிர்ந்தவள், இல்ல.. இல்ல.. நான் பார்த்துப்பேன் மகிக்கா  இதெல்லாம் எப்படின்னு படம்(வீடியோ) போட்டு காட்டிருக்காங்க..” என அவசரமாகச் சொல்ல, 

 

“எனக்கு வில்லியே அவ தான்..” என முனங்கியவன் “கதவை தாழ் போடாத, சும்ம மட்டும் சாத்த்விடு, நீ சட்டுன்னு மயங்கி விழுந்தா நான் ஓடிவந்து தூக்க வசதியா இருக்கும்..” என்றபடியே அரைமனதாக வெளியேறினான். 

 

மன்னவன் பேச்சில் மதி மயங்க, இதழ் வாடா புன்னகையுடன், தன் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தாள். கதவைத் திறக்கும் சத்தத்திற்கு காத்திருந்தவன் போல, அப்படியே அலேக்காக தூக்க, “நான் நடக்குறேனே..” என வார்த்தைகளை மென்று முழுங்க

 

“நடக்கலாமே.. நல்லா நடக்கலாமே.. ஆனா இப்போ இல்ல. நீ ஓடினதுல உன் கால் எல்லாம் பாரு எத்தனை சிராய்ப்புன்னு, அதெல்லாம் சரியானதும்..” என்றவன் கட்டிலில் விட்டு, கையில் அந்த தொட்டிலில் மாட்டிவிட்டு “படுக்க வேணாம், நான் இப்ப வர்ரேன்..” என்று அறையை விட்டு வெளியேறினான்.

 

தன்னை விட்டு அகன்றவனையே விழிகள் தொடர பார்த்துக் கொண்டிருந்தாள் புகழ்வாணனின் காட்டுராணி. கழுத்தில் கிடந்த அவர்கள் வழக்கத்திலான மஞ்சள்கயிறில் சிறிதும் பெரிதுமான பவளங்கள் கோர்க்கப்பட்ட மங்கல நாணை எடுத்துப் பார்த்தாள். நடந்த அனைத்தும் கனவுபோல தோன்றியது. மனம் நேற்றைய நாளை அசைபோட்டது.

 

பத்ரன் அவளை ஒதுக்கிவிடலாம் என்று சொன்னதை அந்தக் கூட்டத்தில்  யாரும் எதிர்பார்க்கவில்லை. எப்படியும் அவளை சேர்த்துக் கொள்ளச் சொல்லி தன்னிடம் கெஞ்சுவான் என எதிர்பார்த்த ஊர் பெரியவரின் எண்ணத்தை மொத்தமாக நீரூற்றி அணைத்தார் பத்ரன். 

 

“எப்போ எங்கனால தான் இவ்வளவு பிரச்சினையும் ஆச்சுன்னு நீங்க பேச ஆரம்பிச்சுட்டீங்களோ இனி நான் அமைதியா இருக்குறதுல அர்த்தமே இல்ல. நானும் இந்த கூட்டத்துல ஒருத்தன் தான். உங்களை பாதிக்குற ஒன்னு என்னையும் பாதிக்கும். என் பேத்தி மேல தப்பு இருக்கோ இல்லையோ, அவ இனி இங்க இருக்க வேண்டாம். அடுத்து ஆகவேண்டியதைப் பாருங்க..” என மனதைக் கல்லாக்கிக் கொண்டு சொல்ல, கூட்டத்தில் சலசலப்பு அதிகமானது. 

 

“என்ன பத்ரா இப்படி முடிவெடுத்துட்ட, பொட்ட புள்ளயா எங்க போகும்.. யோசிச்சு சொல்லு.. காடு வெட்டி அய்யனாருக்கிட்ட குறி கேட்டு பார்ப்போம்..” என ஆளாளுக்கு வந்து சொல்லியும் அவர் முடிவில் தீவிரமாக இருந்தார். மங்கையும் வெற்றியும் கூட எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட கேட்கவில்லை. “உங்க வேலையை சுலுவா மாத்திக் கொடுத்துருக்கேன்.” என்றுவிட்டு பேத்தியைப் பார்த்தார்.

 

‘ஏன் இப்படி செய்தீங்க’ என்றக் கேள்வியுடன் புகழின் கைவளைவில் இருந்தபடியே தாத்தனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளிடம் வந்தவர் “உனக்காக ஒரு குடும்பமே இந்தக் காட்டுல வந்து  கஷ்டப்படும் போது, நீ நல்லா இருக்கனும்னு நினைக்கிற நான் எதுவும் செய்யலன்னா எப்படி. நான் இந்தக் காட்டை விட்டு வரமுடியாது. இந்தக் காடுதான் என் உலகம். என் கட்டை வேகுறதும் இந்தக் காட்டுக்குள்ளதான் நடக்கும். ஆனா நீ என்னைப் பார்க்க வரனும். எனக்குன்னு உன்னைத் தவிர யாரும் இல்ல. நீ வரப்போற நாளை நான் எதிர்பார்த்துட்டே இருப்பேன்.. தைரியமா இருக்கனும். தாத்தனுக்கு ஒன்னும் ஆகாது..” என்றவர், புகழிடம் திரும்பி

 

“தம்பி உங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன்னு நினைக்கிறேன். என் பேத்திதான் என் உலகமே. என் உலகத்தையே உங்களுக்கு தாரவாக்குறேன். அவளை நல்லா பார்த்துக்கோங்க. உங்களுக்கு எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ அவளைக் கூட்டிட்டு என்னைப் பார்க்க வாங்க. நான் காத்திருப்பேன்.” என்றவர் தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தை மூடி அழ, வெற்றி வந்து அவரைத் தாங்கிக் கொண்டான்.

 

“தாத்தா… நீங்க என்னை நம்புங்க. அம்மாயி என் கூட பொறக்கல. ஆனா அவ எனக்கு தங்கச்சிதான். நான் பார்த்துப்பேன் எப்பவும். இவ்ளோ கஷ்டம் எதுக்கு நீங்களும் எங்களோட வந்துடுங்களேன்.. அபி சந்தோசப் படுவாளே..” என மங்கை பேசவும்,

 

“இல்ல தாயி.. அது சரி வராது..” என்றவர் தன் மடியில் வைத்திருந்த சிவப்பும், கருப்புமான ஒரு பாசியை அவள் கையில் கொடுத்து, “இது என் பொஞ்சாதியோட தாலி, முடிஞ்சா இந்த மாங்கல்யத்தை அவளுக்கு கட்ட சொல்லுங்க..” என முடிக்க, அதற்குள் கூட்டத்தில் இருந்து “பத்ரா..” என அழைப்பு வர, பேத்தியின் தலையில் கைவைக்க, அதுவரை அடக்கியிருந்த அழுகை மொத்தமும் வெடிக்க, “நான் போமாட்டேன் தாத்தா.. என்னை அனுப்பாத, நீ இல்லாம எனக்கு ஒன்னுமே வேணாம்..” என அவரின் மேல் விழுந்து அழ, பார்த்திருந்த அத்தனை பேரின் கண்களும் கலங்க ஆரம்பித்தது.

 

அன்று வெற்றியிடம் பேசிய அதே பாட்டி இன்றும் வந்து பத்ரனிடம் “பாவா புள்ளய அனுப்ப உனக்கு எப்படி மனசு வந்துச்சு. கைக்குள்ளயே வளர்ந்த புள்ள பாவா, போன்னா எங்க போவா.. யோசிச்சு சொல்லு பாவா. அம்மயி அழறதை பார்க்க முடியல..” எனவும்

 

அவரிடம் வந்த வெற்றி மற்றவர்கள் அறியாமல் அவரைத் தனியாக அழைத்துச் சென்று அனைத்தையும் சொல்ல, அவரும் “என் பேத்தி மாதிரி தான் ராசா அம்மாயி. அவளை நல்லபடியா பார்த்துக்கோங்க போதும்..” என்றவர் அரூபியிடம் வந்து “உன் மனசுக்கு நீ ராணீயாட்டம் இருப்படி கண்ணு..” என்றுவிட்டு கூட்டத்தை நோக்கி நகர்ந்தார்.

 

அதன் பிறகுதான் அனைவரும் கூட்டத்தை கவனித்தனர். நேரம் நள்ளிரவைக் கடந்து கொண்டிருந்தது. பறை மேளங்கள் முழங்க, கூட்டத்தின் மத்தியில் நெருப்பு ஏற்றப்பட்டிருந்தது. சில பெண்கள் வந்து அரூபியை அழைத்துச் செல்ல, உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் பதுமையாக அவர்களுடன் சென்றாள்.

 

நெருப்பின் ஒரு பக்கம் பத்ரனை அமரவைத்து தலையில் தண்ணீர் ஊற்றி, உடலிலெல்லாம் சேற்றைப் பூச, அய்யனார் சிலையில் இருந்த அருவாளை எடுத்து ஆடிக்கொண்டே வந்த பூசாரி, தன் கையில் கீறி, வழிந்த உதிரத்தில் பத்ரனுக்கு திலகமிட்டு, அந்த அருவாளை அவரிடம் கொடுத்தார்.

 

அவருக்கு எதிரே அரூபியை அமரவைத்து அவளுக்கும் தண்ணீரை ஊற்ற, காயங்கள் அனைத்தும் எரிச்சல் எடுக்க ஆரம்பித்தது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

ஆனால் புகழ்தான் தவித்துப் போனான். “டேய் என்னடா பன்றாங்க.. விபரீதமா எதுவும் நடந்துடப் போகுது வெற்றி. என்னால இதையெல்லாம் பார்க்க முடியல வெற்றி. அவங்களை நிறுத்தச்சொல்லுடா. குளிர்ல அவளுக்கு ஜன்னி வந்துட போகுதுடா..” என பரிதவிக்க,

 

“புகழ்.. சும்மா இரு. அவங்க முறைப்படி செய்றாங்க. தப்பா ஒன்னும் நடக்காது. நீ உணர்ச்சிவசப்பட்டுக் காரியத்தை கெடுத்துடாத..” என்றுத் தம்பியை அதட்டியவன், “மகி நீ உள்ள போ.. பயந்துட போற.. இப்போ அது நல்லதுக்கில்ல..” என மனைவியையும் விரட்ட,

 

“நான் இருப்பேன். எனக்கு ஒன்னுமில்ல.. நீங்க அங்க பக்கத்துல போய் நில்லுங்க.. நான் மாமா கூட இருக்கேன்..” எனவும், “ஒருத்தரும் நான் சொல்றதைக் கேட்காதீங்க..” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டு, அவள் சொன்னதைப் போல அரூபிக்கு அருகில் சற்றுத் தள்ளிப்போய் நின்றான்.

 

அரூபியை சுற்றி நின்ற பெண்கள் எல்லாம் வித்தியாசமான முறையில் ஒரு குலவை போட்டு, பின் ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க, புகழின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. அதில் வயதான பெண் ஒருவர் அரூபியின் முன் வந்து அவள் தலையைக் கலைத்து, அவள் அணிந்திருந்த ஒவ்வொன்றையும் கழட்ட ஆரம்பிக்க, பெண்கள் சுற்றி இருந்ததால் வெளியே தெரியவில்லை என்றாலும், கழட்டிய பொருட்களை எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போடப் போட, பார்த்திருந்த அவளின் மன்னவனுக்கு எப்படி இருக்கிறதாம்.

 

“அய்யோ… அப்படியெல்லாம் செய்யாதீங்க, அவளை விடுங்களேன்..” எனக் கத்த ஆரம்பிக்க, அவர்கள் அரூபியின் மாராப்பில் கைவைக்கும் போதே அங்கிருந்து நகர்ந்திருந்த வெற்றி, தம்பியை சமாளிக்க முடியாமல் போராடும் மனவியைத் நகர்த்திவிட்டு, அவனைப் பிடித்துக் கொண்டு சமாதானப் படுத்தினான்.

 

“டேய்… கொஞ்ச நேரம் சும்மா இருடா.. நீ கத்தியே எல்லாருக்கும் தெரிய வச்சிடுவ போல.. அமைதியா இரு புகழ். உன்னால அவ இன்னும் கஷ்டத்தை அனுபவிக்கனுமா.. அதுதான் உன்னோட ஆசையா..?” என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அதட்ட, அந்த அதட்டல் சற்று வேலை செய்தது. முகத்தைத் துடைத்துவிட்டு அமைதியாக நடப்பவற்றை கவனிக்க ஆரம்பித்தான்.

 

ஆடைகள் முழுவதுமாக கழையப்பட்டதும், அவள் மேல் ஒரு வெள்ளச் சேலையை போட்டு சுற்றியவர்கள் அப்படியே பத்ரனின் முன்னே நிறுத்த, நிலவொளி கூட இல்லாத நடு இரவில், தகதகவென எரியும் நெருப்பின் ஜ்வாலைகளும், பறை சத்தங்களும், ஒப்பாரி ஓலங்களூம் என பார்க்கவே அந்த இடம் படுபயங்கரமானதாக இருந்தது. 

 

தன் முன் இருந்த பேத்தியைப் பார்த்தவர், பிறகு கண்மூடி அந்த அருவாளை ஓங்கவும், சற்று முன் தன் கையில் பெரியவர் கொடுத்த மாங்கல்யத்தை எடுத்தவன், வெற்றி அசந்த நேரம் அவனைத் தள்ளிவிட்டு முன்னே வரவும் சரியாக இருந்தது. புகழின் இந்த செய்கையைப் பார்த்த பத்ரனுக்கு மனதெல்லாம் நிறைந்து மகிழ்ச்சி ஆறெனப் பெருக, ஓங்கிய வேகத்தில் அப்படியே அவளின் நடுமண்டையில் இறக்கினார்.

 

“அய்யோ..” என்று மூன்று அலறல்கள் கேட்க, யார் யார் எனத் திரும்பி பார்ப்பதற்குள், பத்ரனிடம் இருந்தக் கத்தியை வாங்கிக்கொண்டு அவரையும் அழைத்துக்கொண்டு ஆண்கள் கூட்டம் காட்டுக்குள் நடக்கத் தொடங்கியது. அவரும் இனி புகழ் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் கொடுத்த நிம்மதியில் அவர்களோடு திரும்பியும் பார்க்காமல் நடந்தார்.

 

அந்தக் காட்சியைப் பார்த்து அய்யோ எனக் கத்தி வெற்றியின் மேல் மயங்கி விழுந்த முதல் ஆள் மங்கை. அடுத்த இருவர் புகழும் அரூபியும். அவளை வெட்டப்போவதாக எல்லாரும் நினைத்து நடுங்க, ஆனால் நடந்ததென்னவோ அரூபியின் தலையில் அருவாளால் ஒரு துளி அளவிலால் ஆன உதிரத்தை வரவைத்துவிட்டு, காயம் கொடுத்தவரைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று மூன்று நாட்கள் தனிமையில் விட்டுவிடுவார்கள். 

 

அவர் திரும்பி வருவதற்குள் ஊரை விட்டு ஒதுக்கிவைத்த ஆளை அவர்களின் எல்லையைத் தாண்டி கொண்டு சென்று விட்டுவிட்டு வந்துவிடுவார்கள். இனி அவர் இந்தக் கூட்டத்தில் உள்ள ஆள் இல்லை என்பதாக எடுத்துக் கொள்ளப்படும்.

 

“அய்யோ..” என மயங்கி விழுந்த அரூபியை, அவனும் “அய்யோ..” எனக் கத்தியபடி பிடித்துக் கொண்டான். “தம்பி.. என்ன செய்றீக, விடுங்க அவளை. நீங்க தொடக்கூடாது. தொட்டா நீங்கதான் அவளைக் கட்டிக்கனும்..” என ஒரு பாட்டி சொல்ல, சற்றும் யோசிக்காமல், தன் கையில் இருந்த அந்த நாணை தன் காட்டுராணியின் கழுத்தில் கட்டி, அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு காருக்கு வந்தான்.

 

காரின் பின் சீட்டில் அவளைப் படுக்க வைத்தவன், ஊருக்கு மத்தியில் வந்து “இனி அம்மாயி உங்க இனத்துல சேர்ந்தவ இல்லைதானே. அவ இனி என்னோட மனைவி. அவளுக்கு இப்போ கண்டிப்பா மருத்துவம் பார்க்கனும். அதுக்காகத்தான் நான் அவளை இங்க இருந்து அழைச்சிட்டு போறேன். சீக்கிரம் அவளோட வர்ரேன்.” என்று விட்டு யாரையும் கவனிக்காமல் வெற்றியிடம் சென்றான்.

 

மயக்கத்தில் இருந்த மனைவியை அப்போது தான் எழுப்பியிருந்தான். அவளும் பயந்தபடியே சுற்றிலும் பார்த்து “மாமா.. என்னாச்சு.? அபி எங்க.?” என, 

 

“அவளுக்கு ஒன்னுமில்ல..” என்ற புகழ், “சாரிடா வெற்றி.. எனக்கு இனி இங்க இருக்க முடியாது. நான் கோவை கிளம்பறேன். வீட்டுல என்னால யாருக்கிட்டயும் பேச முடியாது. நீயே பேசி சமாளி. கார் நான் போயிட்டு உனக்கு அனுப்புறேன். அதுவரைக்கும் அட்ஜஸ்ட் செய்துக்கோ. ஃபங்க்சனுக்கு நான் வரமுடியுமா தெரியல, ரூபி நல்லாகிட்டா அவளையும் அழைச்சிட்டு வர்ரேன். நீ பார்த்துக்கோ..” என்றவன், “மகியையும் கூப்பிட்டு போகவா..” என

 

“இல்ல அவ வேண்டாம், நீங்க கிளம்புங்க.. இங்க எந்த பிரச்சினையும் இருக்காது. இருந்தாலும் பார்த்துக்கலாம். அதுதான் நம்ம ஆளுங்க இங்க இருக்காங்களே. மேனேஜ் பண்ணிப்பேன்.” என்ற வெற்றியை அணைத்து விடைபெற்றவன், பென்ஸை கோவையை நோக்கிப் பறக்கவிட்டான். அதன்பிறகு என்ன நடந்தது என்று எதுவும் அரூபிக்கு தெரியாது. அவனாக சொன்னால்தான் உண்டு. 

 

தாத்தா, வைத்தியர் எல்லாம் எப்படி இருக்கிறார்களோ..? என்ற யோசனையில் இருந்தவளின் முன் பாலை நீட்டியவன், “இதைக் குடிச்சிட்டு அந்தக் கோட்டையைப் பிடிக்கிறதப் பத்தி யோசிச்சிக்கலாம்.” என சீரியசாக சொல்ல,

 

“எந்தக் கோட்டை, ஏன் பிடிக்கனும்..” எனக் கேட்க, 

 

“இல்ல.. ரொம்ப சீரியசா ஏதோ யோசிச்சிட்டு இருந்தியா.. அதுதான் ஏதோ ஒரு கோட்டையைப் பிடிக்கத்தான் யோசிக்குறன்னு நினைச்சு சொன்னேன்..” என சிரிக்காமல் சொல்ல..

 

“உங்களை….” என்று முறைத்தவள், அவன் விடாது அவளைச் சிரித்தபடியே பார்க்க, அதில் பெண்ணுக்கு முகம் சிவந்து போக “போங்க நீங்க..” என அவன் கையில் இருந்தப் பாலை வாங்கி குடிப்பது போல குனிந்து கொண்டாள். மனைவியின் முகத்தில் தெரிந்த சிவப்பில் அவனுக்கும் கர்வம் தூக்க, அவளருகில் அமர்ந்து தன்மேல் சாய்த்துக் கொண்டான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!