Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 17.2

“சரி நான் லீவு போட்டுட்டு  உங்ககூட வரட்டுமா? ஆனா எனக்கு நாளைக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு. எதுக்கும் நான்  லீவ் கேட்டு பார்க்கிறேன்.”

“இல்லைங்க. பரவால்ல நான் அவளை கூட்டிக்கிட்டு போயிட்டு வரேன். கடலூரில்  எங்க சொந்தக்காரங்க கல்யாணம்  நாளைக்கு இருக்கு. நான் போக வேண்டாம்னு முதல்ல நினைச்சேன். இப்போ போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்.  வெண்மதியையும் கூட்டிகிட்டு போயிட்டு வரேன். அப்படியே பார்க், பீச் எல்லாம் போயிட்டு நைட்டு தான் வருவோம்.”

“நல்ல முடிவுதான் எடுத்திருக்க லட்சுமி. நீ எப்பவுமே நல்ல முடிவு தான் எடுக்கிற. நான் தான் சரியான முடிவு எடுக்கிறது கிடையாது. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட ஒரே காரணத்தினால் நீயும் என் கூட சேர்ந்து கஷ்டப்படுற.”

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன். சரி லட்சுமி. இந்தா பணம் வச்சுக்கோ. நாளைக்கு தேவைப்படும்.” என்று கூறி லட்சுமியிடம் பணம் கொடுத்தார். அதனை வாங்கிக் கொண்டார் லட்சுமி.



Advertisement

 

அடுத்த நாள் காலை 4 மணிக்கு எழுந்து லட்சுமி காலை டிபன், மதிய சாப்பாடு  என இரண்டையும் செய்து முடித்தார். முடித்தபிறகு லலிதாவை தேடி சென்றார்.

“அக்கா என்னோட சொந்தக்காரங்க கல்யாணம் இருக்கு. அந்த கல்யாணத்துக்கு நான் வெண்மதியை கூட்டிட்டு போறேன்.

Advertisement

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.  வெண்மதிக்கு கிடைக்க வேண்டிய வேலை  கிடைக்கல. அதனால  அவள் சோகமா இருக்கா. அதான் அவளையும் என் கூட கூட்டிட்டு போகலாம்னு நினைக்கிறேன். அப்படியே பீச், பார்க் போயிட்டு வருகிறோம்.” என்று முதன்முறையாக நான் இதை  செய்யட்டுமா? என்று  அனுமதி கேட்காமல் செய்யப்போகிறேன். என்று விபரம் கூறினார் லட்சுமி.

Advertisement

லலிதா வாயடைத்து போய் இருந்தார். அதுவும் லலிதாவின் கண்களை நேராக பார்த்து சிறிது கூட பயமோ தயக்கமோ இல்லாமல் தெளிவாகவும் அழுத்தமாகவும் கூறினார்.

லட்சுமியின் இந்த அவதாரத்தை பார்த்த லலிதா வாயடைத்து போய்  இருந்தார். லலிதா பதிலேதும் கூறாமல்  பார்த்துக் கொண்டு இருக்கும்பொழுதே லட்சுமி லலிதாவின் பதிலை எதிர்பாராமல் திரும்பி நேராக நடந்து வெண்மதியின் அறைக்கு வந்தார்.

இரவு வெகு நேரம் நிறைய கம்பெனிக்கு வேலை விண்ணப்பம் ஈமெயில் பண்ணிக்கொண்டு இருந்துவிட்டு அதிகாலையில் உறங்கிய  வெண்மதியை எழுப்பினார் லட்சுமி.

Advertisement

“என்னம்மா ரொம்ப லேட் ஆயிடுச்சா? என்று பதறியபடி எழுந்தாள் வெண்மதி.

ஜன்னல் வழியாக வெளியே  பார்த்தாள் இருட்டாக இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தாள் மணி ஐந்தரை என்று காட்டியது.

“என்னம்மா இன்னைக்கு ஏதாவது விசேஷமா? சீக்கிரமா  எழுப்பி இருக்கீங்க.” என்று யோசனையாக கேட்டாள் வெண்மதி.

“ஆமாம் விசேஷம் தான் மதி. என்னோட சொந்தக்காரங்க வீட்டு கல்யாணம் இருக்கு. நாம ரெண்டு பேரும் அந்த கல்யாணத்துக்கு போக போறோம்.”

“நானும் வரணுமா?”

“நீ கண்டிப்பா என் கூட வரணும்.” என்று லட்சுமி தெளிவாக கூற

“சரி ஏதோ முடிவு பண்ணிட்டீங்க. நானும் வர்றேன்.” என்று கூறியவள் எழுந்து தலை குளித்துவிட்டு ஒரு நல்ல சல்வார் எடுத்து போட்டுக்கொண்டு அதற்கு ஏற்றார் போல மெல்லிய வெள்ளி நகைகளை எடுத்து அணிந்துகொண்டு தயாரானாள்.

அதே நேரத்தில் லட்சுமியும் பட்டுப்புடவை கட்டிக்கொண்டு  தன்னிடம் இருந்த ஒரு சில நகைகளுடன் குண்டுமல்லி சரத்தை வைத்துக்கொண்டு அந்த மகாலட்சுமி போலவே தயாராகி வந்தார்.

லட்சுமியை பார்த்த வெண்மதி “ரொம்ப அழகா இருக்கீங்க.” என்று பாராட்டினாள்.

“நீயும்தான் ரொம்ப ரொம்ப அழகா இருக்க. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. வெண்மதியின் முகத்தை சுற்றி  நெட்டி முடித்தார்.”

அதேநேரம் கோவிந்தன் அங்கே வர

“ரெடியாயிட்டீங்களா ரெண்டு பேரும்?” என்று கேட்டார்.

“அப்பா வேலை?” என்று சோகமாக ஆரம்பித்தாள் வெண்மதி.

“எல்லாம் எனக்கு தெரியும் மதி. நீ ஒண்ணும் கவலைப்படாதே. எல்லாம் நல்லதுக்கே. இந்த வேலை போனது கூட ஏதோ ஒரு  நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ. கவலைப்படாதே. நீ ஆசைப்பட்டது எல்லாமே கூடிய சீக்கிரம் நடக்கும்.”

“சரி சரி. கிளம்பு டைம் ஆகுது” என்று லட்சுமி அவசரபடுத்தினார்

“ஆமா மா முகூர்த்தநேரம் முடியறதுக்குள்ள கல்யாணத்துக்கு போகணும் இல்லனா  நேரா போய் சாப்பிட்டுட்டு வர்ற மாதிரி   ஆகிட போகுது.” என்று கூறிவிட்டு இருவரையும் தன்னுடைய ட டிவிஎஸ் 50 இல் ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார்.

ஒரு பேருந்தில் இருவரையும் ஏற்றி விட்டு

“அம்மாவும் பொண்ணும் ஜாலியா இருந்துட்டு வாங்க.” என்று  வாழ்த்தி கையசைத்து வழியனுப்பினார்.

ஏழு மணி இளம் வெயில்  வெண்மதியின் முகத்தில் பட வெண்மதிக்கு உற்சாகமாக இருந்தது. ஜன்னல் வழியே வந்த காற்று அவள் மனதில் இருந்த பாரத்தை  கரைத்தது போல இருந்தது. பேருந்தில் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து கொண்டு செல்வது வெண்மதிக்கு பிடித்த விஷயம். அதுவும் இந்த இளம் காலை நேரத்தில் இளம் வெயிலில் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு செல்வது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த நேரத்தை அனுபவித்துக்கொண்டு தூரத்தில் எழும்பிக் கொண்டிருக்கும் சூரியனை  பார்த்து ரசித்துக் கொண்டே பயணித்தாள் வெண்மதி.

செங்கதிர்களுடன் எழும்பிக் கொண்டிருக்கும் சூரியனைப் பார்த்த பொழுது அவளுக்கும் ஏதோ ஒரு உற்சாகம் பொங்குவது போல இருந்தது.  பேருந்து கடலூரை அடைந்தது. இன்னும் சிறிது நேரம் இந்த பயணம் நீண்டு இருக்கக்கூடாதா என்று கூட தோன்றியது வெண்மதிக்கு. இருவரும் கீழே இறங்கி ஒரு ஆட்டோவை பிடித்தனர். அந்த திருமண மண்டபத்திற்குள் நுழைந்தனர்.

லட்சுமியை பார்த்த ஒரு பெண்மணி

“என்னடி அதிசயமா இருக்கு? உன்னோட பெண்ணை கூட்டிக்கொண்டு வந்து இருக்க. உன்னோட பெண்ணை பார்க்கணும்னா உங்க வீட்டுக்கு தான்  வரணும். என்னதான் உன்னோட பொண்ணு அழகியா இருந்தாலும் நீ அவளை வீட்டுக்குள்ளேயே பொத்தி பொத்தி  வச்சிக்கிறது கொஞ்சம் ஓவர் தான்.” என்று லேசாக பொறாமைப்படும்  குரலில் கூறினார் அந்தப் பெண்மணி.

“நாங்க  உன் பெண்ணை பார்த்து கண்ணு வைத்திட போகிறோம்ன்னு  தானே இப்படி பண்ற.” என்று லட்சுமியை விளையாட்டாக சீண்டினார்அந்தப் பெண்மணி.

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை அக்கா. இவ்வளவு நாள் அவள் படிச்சிகிட்டு இருந்தா. அதனால எங்கேயும் கூட்டிகிட்டு வர முடியல. இப்போ டிகிரி முடிச்சிட்டா.”

“என்ன படிச்சிருக்கா”

“பி . ஈ படிச்சி இருக்கா.”

“எப்படியோ நீயும் கோவிந்தனும் கஷ்டப்பட்டு உங்க பொண்ணு ஆசைப்பட்ட மாதிரியே அவளை படிக்க வச்சுட்டீங்க. ரொம்ப பெரிய விஷயம் டி லட்சுமி. இவர் கூட ஒரு நாள்  கோவிந்தன் கிட்ட ஏம்பா பொம்பள பிள்ளையை இவ்வளவு செலவு பண்ணி படிக்க வைக்கிறேன்னு கேட்டார்.

அதுக்கு கோவிந்தன் “பொண்ணா இருந்தா என்ன பையனா இருந்தா என்ன? எல்லாம்  ஒன்னு தான். நான் பையன் வேணும்னு என்னிக்கும் ஆசைப்பட்டது கிடையாது. கடவுள் கொடுத்த குழந்தை பொண்ணா இருந்தா என்ன பையனா இருந்தா என்ன அவங்களை ஒழுங்கா வளக்கறது  அவங்க ஆசை நியாயமானதா  இருந்து நம்மால   முடிஞ்சா நிறைவேற்றுவது நம்ம வேலை.”

” அதுக்கு இல்லப்பா  நீயே கஷ்டப்பட்டுட்டு இருக்க. இந்த நிலைமையில் இவ்வளவு செலவு செஞ்சு பொம்பள பிள்ளையை படிக்க வைக்கணுமா?  பையனா இருந்தாலும்  கஷ்டப்பட்டு படிக்க வைக்கலாம். அந்த பையன் நமக்கு வருங்காலத்தில் சம்பாதிச்சு கொடுப்பான்.”

 

“எனக்கு என்னோட பொண்ணு சம்பாதிச்சு கொடுக்க வேண்டாம். அவள் படிக்கணும்னு ஆசைப்பட்டா அதனால நான் அந்த ஆசையை  நிறைவேற்றுகிறேன். அவள்  சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும். எதையும் எதிர்பார்த்து நான் அவளை படிக்க வைக்கல. பையனா இருந்திருந்தாலும் இப்படியேதான் பண்ணி இருப்பேன்”

. என்று முடித்துவிட்டு எழுந்தார்”  என்று அந்த பெண்மணி லட்சுமியிடம்  கூறியதை கேட்டாள் வெண்மதி.

தந்தையை பெருமையாக நினைத்துக் கொண்டாள் வெண்மதி. அவர் மீது மேலும் பாசம் அதிகரித்தது.

திருமண மேடையில் மாப்பிள்ளை பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்ததும் அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வதித்தனர். பிறகு அந்த பெண்ணின் தாய் கீழே இறங்கி வந்து

“லட்சுமி இது உன்னோட பொண்ணு தானே? ரெண்டு பேரும் சாப்பிட வாங்க.”

“ஆமாம் அண்ணி.”

“இந்த ஒன்றுவிட்ட அண்ணி பொண்ணு கல்யாணத்துக்கு உன்னோட பெண்ணை கூட்டிக்கிட்டு வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். கோவிந்தன் வரலையா?”

“இல்லை. அண்ணி. அவருக்கு முக்கியமான வேலை இருந்துச்சு.”

“சரி சரி நீ வந்ததே பெரிய விஷயம். அந்த லலிதா உன்னை விட்டுட்டாளா? இன்னும் உன்னை அதிகாரம் பண்ணிக்கிட்டே தான் இருக்காளா?”

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை அண்ணி. நீ எப்ப தான் உன்னோட ஓரகத்தியை விட்டுக்  கொடுத்து இருக்க? அவ உன்ன என்ன வேலை வாங்கினாலும் நீ இப்படியே தான் அவளுக்கு வளைஞ்சு கொடுத்துட்டே இருப்ப. உன்னை திருத்தவே முடியாது. என்று சலித்துக் கொண்டார்.

 

“வாமா வெண்மதி. ரெண்டு பேரும் வாங்க. சாப்பிடலாம்.” என்று அழைத்து சென்று இருவரையும் சாப்பிட வைத்தார்.

வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது விசேஷங்களில. சாப்பிடுவது வெண்மதிக்கு பிடிக்கும். எனவே நெடுநாட்களுக்கு பிறகு தன்னுடைய மனக் கஷ்டங்களை எல்லாம் மறந்து வயிறார சாப்பிட்டாள். இருவரும் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் அங்கே அமர்ந்திருந்தனர். அங்கு  5 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

குழந்தைகள் பட்டு வேஷ்டி சட்டை, பட்டுப்பாவாடை என்று அழகாக அணிந்துகொண்டு அங்கும் இங்கும் ஓடி  கல கலவென சிரித்த படிமகிழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!