Nimir Episode 17.1
நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அவன் கூறியதை கேட்ட லட்சுமி, கோவிந்தன், கிருஷ்ணன் முகம் கருத்தது.
இப்படி கூறியவன் வேகவேகமாக நடந்து காருக்கு சென்றான். அவனுடைய தாய் வடிவுக்கரசிக்கு தான் மிகவும் தர்மசங்கடமாகி விட்டது. “மன்னிச்சிடுங்க. இவன் எப்பவும் இப்படி பேச மாட்டான். இன்னிக்கு என்னமோ இப்படி பேசிட்டேன். எனக்கு ஒண்ணுமே புரியல. தப்பா எடுத்துக்காதீங்க.” என்று எல்லோரிடமும் பொதுவாக மன்னிப்பு கேட்டுவிட்டு மகளுடன் அவன் பின் நடந்தார்.
“என்னடா இது இப்படி பேசிட்டு வர்ற? அந்த பொண்ணுக்கும் அவ அப்பா அம்மாக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்? நீயா டா இப்படி பேசின?” என்று வடிவுக்கரசி அவனை கேட்டது அறையிலிருந்த வெண்மதியின் காதுகளுக்கு கேட்டது.
Advertisement
அவன் “ இவளுக்கு இது பத்தாது மா. இன்னும் நல்லா திட்டி இருக்கணும். நீங்க வாங்க. உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது.” என்று கூறிவிட்டு காரில் ஏறி மூவரும் சென்றனர்.
மகளிடம் வந்த லட்சுமி, கோவிந்தன்
“என்ன இந்தப் பையன் கொஞ்சம் கூட நாகரிகமே தெரியாம இப்படி சொல்லிட்டு போறான். ஒரு பெண்ணை பார்க்க வந்துட்டு இப்படியா பேசுவாங்க? பெண்ணை அவனுக்கு பிடிக்கல என்றாலும் அதை சொல்றதுக்கு ஒரு வரைமுறை இருக்கு. இப்படியா மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லுவாங்க? கொஞ்சம் கூட நாகரிகம் தெரியாது போல இருக்கு. நீ ஒண்ணும் கவலைப்படாதே வெண்மதி. இதைவிட நல்ல மாப்பிள்ளை உனக்கு கிடைப்பான்.” என்று கிருஷ்ணன் கூற
Advertisement
“பெரியப்பா ப்ளீஸ். எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்.” என்று வெண்மதி கூறினாள்.
Advertisement
“சரிமா உன் இஷ்டம்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் கிருஷ்ணன்.
கோவிந்தன் ‘இதை எல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு மனசை போட்டு குழப்பிக்காத.” என்று கூறிவிட்டு சென்றார்.
லட்சுமி அருகில் வந்து
Advertisement
“மதி இங்கு நடந்ததை எல்லாம் மறந்திடு. நீ ஆசைப்பட்டபடி வேலைக்கு போ. இப்பதான் உனக்கு வேலை கிடைக்கப் போகுது நாம ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா சுதந்திரமா சென்னையில ஜாலியா ஒன்னு ரெண்டு வருஷம் இருந்துட்டு. அதுக்கப்புறம் உனக்கு கல்யாணம்.
நான் என்னென்ன வாங்கனும்னு லிஸ்ட் ரெடி பண்ணி வச்சிட்டேன். அப்பாவும் அதுக்கு தேவையான காசு ரெடி பண்ணி வைத்திருக்கிறார். ஒரு மாசத்துக்கு தேவையான எல்லாமே ரெடியா இருக்கு. அதுக்கப்புறம் உனக்கு சம்பளம் வந்ததும் நாம வாங்கிக்கலாம். எல்லாம் தயாரா இருக்கு. ஆமாம். உனக்கு எப்போ அப்பாயின்மென்ட் ஆர்டர் வரும்னு ஏதாவது தெரிந்ததா?” என்று ஆர்வமாக லட்சுமி கேட்க
“அம்மா” என்று அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகையை அழுது தீர்த்தாள்.
மகளின் அழுகையை பார்த்த லட்சுமி பதறினார்.
நிச்சயமாக இவளை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு சென்ற அவனுக்காக இவள் இப்படி அழுபவள் கிடையாது. என்று தெரிந்தவர்
“என்ன ஆச்சு மதி? சென்னைக்கு போனியே வேலை என்ன ஆச்சு?” என்று பதட்டத்துடன் கேட்டார் லட்சுமி.
“அம்மா எனக்கு வேலை கிடைக்கல.” என்று மீண்டும் அழுதாள். லட்சுமிக்கு இது பெரிய அதிர்ச்சியாக தான் இருந்தது.
எனினும் மகளின் நிலையை பார்த்த அவர்
“வேலைதானே கிடைக்கல. பரவாயில்லை. அதுக்கா இப்படி அழற.” “இல்லம்மா. இந்த வேலையை நம்பி நாம எவ்வளவு கனவு கண்டு இருக்கிறோம்? எல்லாமே போச்சும்மா.”
“இந்த வேலை இல்லனா வேற வேலை கிடைக்கும். அதுக்கு ஏன் இப்படி அழற?”
“இல்லம்மா பெரிய பெரிய கம்பெனி எல்லாமே ஆள் எடுத்துட்டாங்க.”
“சரி சின்ன கம்பெனியில் வேலை தேடு.”
“அங்க கொடுக்குற சம்பளத்துல நாம நினைச்ச மாதிரி வாழ முடியாது. திரும்பவும் இதே வீட்டில் பெரியம்மாவின் அதிகாரத்தில் தான் வாழனும். நமக்கு இவங்ககிட்ட இருந்து விடுதலையே கிடையாதா அம்மா? உன்னை ராணி மாதிரி இந்த வீட்டில வாழ வச்சு பார்க்கணும்னு நான் ஆசைப்பட்டேன். அந்த ஆசையெல்லாம் நடக்காது அம்மா.
“நீ ஏன் அப்படி நினைக்கிற மதி. இப்போதைக்கு நடக்காது. அவ்வளவுதானே? நீ கிடைக்கிற வேலையில சேர்ந்து வேலை செய். அதுக்கப்புறம் நல்ல கம்பெனியில இந்த அனுபவத்தை வச்சு வேலை தேடு.”
“அதுக்கெல்லாம் ரொம்ப வருஷம் ஆகும் அம்மா.”
“அதனால என்னமா? பரவாயில்லை. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ நினைச்சது எல்லாமே நடக்கும். “
“கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாம போயிடுச்சே அம்மா. அத நினைச்சா தான் ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று கண்ணீர் விட்டாள்.
லட்சுமிக்கும் கண்களில் கண்ணீர் வழிந்தது. இருந்தாலும் அதனை வெண்மதி அறியாமல் துடைத்துவிட்டு வெண்மதியின் கண்ணீரையும் துடைத்தார்.
“நீ அழாத மதி.”
“அம்மா நீ ஆசைப்பட்ட மாதிரி பெரிய பெரிய கோயிலுக்கு உன் இஷ்டம் போல போக முடியாதே அம்மா . நாம எப்படி எல்லாம் ஆசைப்பட்டோம் வாரத்துக்கு ஒருதடவை பார்க், பீச், சினிமா, ஊட்டி, கொடைக்கானல் ட்ரிப் போகலாம்னு எவ்வளவு ஜாலியா கனவு கண்டுகிட்டு இருந்தோம். இது எதுவுமே நடக்காது அம்மா.”
“பெரிய பெரிய கோயிலுக்கு போனால் தானா? எனக்கு நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற சின்ன கோயிலுக்கு போனாலே போதும். பெரிய பெரிய கோயிலுக்கு போனாலும் என்னால ரொம்ப தூரம் நடக்க முடியாது மா. கால் வலிக்கும். அதுவும் இல்லாம சென்னை நமக்கு பழக்கம் இல்லாத ஊர். அங்க போய் நாம தங்கியிருக்கிறது நமக்கும் கஷ்டமா தான் இருக்கும். பார்க், பீச், சினிமா இதுக்கெல்லாம் நாம போகலைன்னா என்ன? எப்போ முடியுமோ. அப்போ போகலாம். நீ அழுவதை நிறுத்து.
முதல் முதலில் டிவிஎஸ் ஃபிப்டி ஓட்ட கத்துக்கிட்ட போது கீழே விழுந்து கால்ல பெரிய அடிபட்டது ஞாபகம் இருக்கா?”
“ஆமாம் ஞாபகம் இருக்கு அம்மா. பத்து நாள் நடக்க முடியாமல் இருந்தது அதுக்கு அப்புறம் நான் கூட டிவிஎஸ் ஃபிப்டி ஓட்டவே மாட்டேன்னு சொன்னேன். அந்த டிவிஎஸ் ஃபிப்டி என்னை பயம் காட்டுற பயங்கரமான சிங்கம் போல தெரிஞ்சது. அந்த டிவிஎஸ் ஃபிப்டி பார்க்கவே எனக்கு பயமா இருக்கும். உன்னால முடியும் என நீங்க கொடுத்த தைரியத்தில்தான் ஓட்ட ஆரம்பிச்ச. அதுக்கப்புறம் அந்த பயங்கரமான சிங்கம் எனக்கு செல்லப்பிராணி சிங்கமா மாறிடுச்சு.”
“இப்போ அந்த டிவிஎஸ் ஃபிப்டி உனக்கு எவ்வளவு வசதியா இருக்கு?”
“ஆமாம். “
“நீ கடைக்கு போகும் போதெல்லாம் எவ்ளோ சாதாரணமா எடுத்துக்கிட்டு போயிட்டு வர்ற.”
“ஆமாம் அம்மா. கரெக்ட் தான் .”
“என்னால முடியாதுன்னு நீ விட்டிருந்தா நீ டிவிஎஸ் ஃபிப்டி ஓட்ட கத்து இருப்பியா ? இல்லை நான் தான் உன் கூட டிவிஎஸ் ஃபிப்டி ல ஏறி கோயிலுக்கு கடைக்கு என வசதியா போயிட்டு வர முடியுமா? வாழ்க்கையும் அப்படித்தான் மதி. ஒரு தடவை நாம தோல்வி அடைந்துவிட்டோம்னு சோர்ந்து போய் உட்கார்ந்துட்டா அதுக்கப்புறம் நமக்கு கிடைக்க வேண்டிய வெற்றி நமக்கு கிடைக்காமலே போய்விடும். தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும். நீ எப்போ தோல்வி அடைகிறாய் தெரியுமா? எப்போ நீ உன்னோட முயற்சியை கைவிட ரியோ அப்பதான். நீ முயற்சியைக் கைவிடாத வரைக்கும் நீ தோல்வி அடைய மாட்டாய்.”
“என் கூட கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆன எல்லோருக்கும் வேலை கிடைச்சிடுச்சு. எனக்கு மட்டும்தா கிடைக்கல.” என்று தழுதழுத்த குரலில் கூறினாள் மதி.
“வாழ்க்கை ஒண்ணும் ரன்னிங் ரேஸ் கிடையாது. முதல்ல வர்றவங்க மட்டும் ஜெயிக்கிறதுக்கு. அவங்க, அவங்க வாழ்க்கையை வாழறாங்க. நீ எதுக்கு உன்னோட வாழ்க்கையை அவங்க கூட சேர்த்து வச்சி பாக்குறே. வெற்றி எல்லோருக்கும் ஒரே மாதிரி கிடைக்கிறது கிடையாது. ஒரு சிலருக்கு சீக்கிரமா கிடைக்கும். ஒரு சிலருக்கு கொஞ்சம் லேட்டா கிடைக்கும். அதுக்காக கிடைக்காது என அர்த்தம் கிடையாது. அதனால உனக்கும் வெற்றி ஒருநாள் கிடைக்கும். அதுவரைக்கும் உன்னோட முயற்சியை நீ கைவிடாமல் இருக்கிறதுதான் இப்போ நீ செய்யவேண்டியது. இப்படி அழுதுட்டு நேரத்தை வீணாக்காம அடுத்தது என்ன பண்ணனும்னு உக்காந்து யோசிச்சு நல்ல முடிவு எடுத்து அதுபடி நட.”
சரியான நேரத்தில் தாயின் உபதேசம் வெண்மதிக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. கண்களை துடைத்துக் கொண்டாள்.
“நீங்க சொல்றது எல்லாமே கரெக்ட்டு மா. நான் இனிமே அழுது என்னோட எனர்ஜியை வேஸ்ட் பண்ண மாட்டேன். முடிந்து போனதை நினைத்து அழுது டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன். நிறைய கம்பெனியில் வேலைக்கு அப்ளை பண்ண போறேன். பெரிய கம்பெனியோ சின்ன கம்பெனியோ கிடைக்கிற வேலையில முதல்ல ஜாயின் பண்றேன். அங்க என்னோட திறமையை வளர்த்துகிறேன். சரிமா நான் எல்லா கம்பெனிக்கும் இப்பவே அப்ள்ளை பண்றேன்.” என்று கூறி அவள் எழுந்து சென்று முகத்தை கழுவிவிட்டு வந்து லேப்டாப்பை எடுத்து கொண்டு உட்கார்ந்தாள்.
உட்கார்ந்த வேகத்தில் நிறைய கம்பெனிக்கு வேலை விண்ணப்பம் அனுப்பினாள். ஓரளவு மனம் தெளிந்தது. அவள் ஆசைப்பட்டபடி வாழலாம் என்று நம்பிக்கை வந்தது.
இரவு கோவிந்தனிடம் லட்சுமி
“வெண்மதிக்கு வேலை கிடைக்கல.”
“என்ன சொல்ற லட்சுமி?”
“ஆமாங்க. வெண்மதிக்கு வேலை கிடைக்கல.”
“ஏன் கிடைக்கல? என்ன காரணம்னு சரியா தெரியல. இவளைவிட மேலான யாரோ ஒருத்தருக்கு இவளோட வேலை போயிடுச்சு.”
“அப்படியா? வெண்மதி ரொம்ப கஷ்டப்படுறாளா?”
“ஆமாம் ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டா. நான் ஏதேதோ சொல்லி அவளை கொஞ்சம் தேற்றி இருக்கேன். இருந்தாலும் அவளை கொஞ்சம் வெளியே கூட்டிகிட்டு போயிட்டு வரலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?”
