Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Vathani’s Anbin Ootrae – A Short Story

Anbin Ottre..!

 

 

அலாரக் குயில் கூவி, மணி ஆறென நினைவுப்படுத்த, சாளரத்தின் திரைச்சீலைக் காற்றில் அசைய, வைகறையில் தன் பணியைச் செவ்வென செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் பகலவனின் வெள்ளி நிறக் கதிர்கள், அவ்வீட்டின் மாமரத்தின் இலைகளில் பட்டுத் தெறிப்பதையே  வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.



Advertisement

 

அதிகாலையிலேயே குருவி ஒன்று தன் குஞ்சுகளுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தது. கண்டிப்பாய் அது அம்மா குருவியாகத்தான் இருக்க வேண்டும் என் மனது அடித்துச் சொல்லியது. “அம்மா” இந்த வார்த்தையைச் சொல்லும்போதே என் மனதில் ஒரு இனம் புரியா உற்சாகம் பொங்கி, அது அப்படியே அடங்கியும் போனது.

Advertisement


அம்மா..! உன்னைப் பார்த்து எத்தனை மாதங்களாகிறது? எப்படியிருக்கிறாய்?
உன்னிடம் சொல்வதற்கென்றே நிறைய கதைகள் என்னிடம் இருக்கின்றன. மறக்காமல், மாற்றாமல் சொல்ல வேண்டி அத்தனையையும் எழுதி வைத்திருக்கிறேன். உன்னைப் பார்க்கையில் அதைக் கொடுப்பேன். கனத்த கைகள் என் மீது விழ அம்மாவுடனான என் பேச்சு முடிவுக்கு வந்தது. அக்கனத்தக் கரங்களை எடுத்து விட்டு புரண்டும் புரளாமலும் அவசரமாய் எழுந்தேன். உடைகளை சரிசெய்து கொண்டு ,ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் கணவனை ஒரு நொடி பார்த்தேன். இங்கு எனக்கிருக்கும் ஒரே ஆதரவு!

Advertisement

 


அறையை விட்டு வெளியே வந்தேன். மாமியார் எழுந்திருந்தார். அவர் பார்வையில்
ஓர் ஏளனம். என் மகனை கைக்குள் போட்டுகொண்டவள் என்கிற வெறுப்பு.
என்று ஒழியும் இந்த சச்சரவுகள்? மனதுக்குள் எண்ணியபடி அன்றைய வேலைகளைக் கவனிக்கப் போனேன்.

 

Advertisement


“லாவன்யா இன்னைக்கு பவித்ராவை பொண்ணுப் பார்க்க வராங்க! வடை, கேசரி, இட்லி, சட்னி, சாம்பார் எல்லாம் பண்ணிடு.” மூச்சுவிடாமல் கத்தினார் மாமியார்.

 

“சரி மாமி.” எனக் கூறியபடி மடமடவென பாத்திரங்களை சுத்தம் செய்தேன். மூன்றாம் மனுஷியிடம் சொல்வதுபோல சொல்லுகிறாரே!
இது புதிதல்ல. ப்ரகாஷ் முன்பே கூறிவிட்ட படியால் எனக்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

 

மீண்டும் அம்மா கண்முன் வந்தாள். அம்மா உன் பெண்ணைப் பார்த்தாயா? இன்றைய பொழுதில் உன் பெண்ணிற்கு அணைத்து வேலைகளும் அத்துபடி. 50 பேருக்குக் கூடத் தனியாக சமைப்பாள் உன் கண்மணி. உன்னோடு இருக்கையில் சிறு துரும்பைக் கூட நான் எடுத்துப் போட்டதில்லை. நீ எதிர்பார்த்ததுமில்லை. இனி நான் அப்படியிருக்க முடியாது. மருமகள் அந்தஸ்து கொடுத்து அடிமையாக்கிவிட்டார் என் மாமியார்.!


அவர் என்ன பேசினாலும் எனக்கு அவரைத் தப்பாய்த் திட்டத்
தெரியவில்லை. காரணம் நீ! உன் வளர்ப்பு! நன்றி தாயே!
இந்த குணம் தான் அவருக்கும், எனக்குமான உறவை வலுப்படுத்துவது! அவருக்குத் தெரியும் தன் தாயைப் பற்றி!


வலுக்கட்டாயமாய் என் அம்மாவைப் பற்றிய நினைவுகளை தள்ளி வைத்துவிட்டு
என் வேலைகளில் மூழ்கிப் போனேன்!


“லயா….. என் கணவரின் அழைப்பு வர காபியுடன் போனேன்!
கண்ணம்மா என்னடா இது.? இப்படி வேர்த்திருக்கு.” .அன்பாய்
துடைத்துவிட்டார். அவர் செய்யும் இந்த சேவைக்காக எத்தனை வேலையானாலும் செய்யத் தயார் மனதுக்குள் கூறிக் கொண்டேன்.
மாமியார் பற்றி எந்தக் குறையையும் நான் சொல்வதில்லை. இதுவும் என் அன்னையின் அறிவுரைதான். ‘கண்ணம்மா உன் புருஷனிடம் பேசும் போதும் வரையறை தெரிந்து பேசு. பெற்ற தாய் எவ்வளவு கெட்டவளாக இருந்தாலும், எந்த மகனுக்கும் தன் தாயை குறை சொல்வது பிடிக்காது” அன்று சொன்னது இன்று வரைக் கடைபிடிக்கிறேன்.


“அம்மாவ நினைச்சியா? என் கண்களில் கண்ணீர் வழிவதைக் கண்ட கணவர் ஆதரவாய் என் தோள் பற்றினார். 

 

“அம்மாவைப் பார்க்கனும் ப்ரகாஷ்!” இது நான்.


“போலாம்..” எப்பவும் போல அவர்.

 


சாயங்காலம் பெண் பார்க்கும் படலம் முடிந்தது. பெண்ணைப் பிடித்திருப்பதாக வந்தவர்கள் சொல்லிவிட, என் மாமியாரின் கால்கள் தரையில் இல்லை.
மெதுவாய் நான் பேசினேன். “நான் ஒரு 2 நாள் ஊருக்கு போயிட்டு வரட்டுமா?”
பத்தாவது முறையாக விண்ணப்பம் செய்கிறேன். 

 

ப்ரகாஷ¤ம் “ஆமாம்மா.. அவள் போகட்டும், அப்புறம் கல்யாண வேலை போயிட்டு வந்திடட்டும்..” எனக் கூற அவர் தலை சம்மதம்மாய் அசைந்தது

.
சந்தோஷத்தின் விளிம்பில் நான். இரவு முழுவதும்
உறக்கமேயில்லை. அம்மாவுக்கு நான் எழுதிய அத்தணைக் கடிதங்களையும் மறக்காமல் எடுத்துவைத்தேன். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவளிடம் கூறவேண்டும். பத்து மாதக் கதையை 2 நாளில் சொல்ல வேண்டும்.
அடுத்த நாள் அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினேன்.


இதோ எனது ஊர். மண்ணில் கால் வைத்ததுமே உடலில் ஓர் இனம் புரியா சந்தோஷம். வாசலில் அப்பா அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர்! பையை வைத்து விட்டு கடிதங்களை எடுத்துக் கொண்டு
“அப்பா..! அம்மாவைப் பார்த்துட்டு வரேன்.” ஓட்டமாய் ஓடினேன். அவர் பதிலுக்கும் காத்திராமல்.


அங்கு அம்மா அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளைச்சுற்றி நான் நட்ட ரோஜா செடிகள் பூத்துக்குலுங்கின. அம்மா சந்தோஷமாயிருப்பதாய் எண்ணிக் கொண்டேன்,. என் உடல் நடுங்கியது. கையிலிருந்த கடிதங்களை அவளிடம் சமர்பித்தேன். அப்படியே அவள் மேல் தலை சாய்த்தேன்.
காற்றின் தழுவலில் என் அம்மாவின் வாசனை கலந்திருந்தது.
லாவி நான் எப்பவும் உன் கூடத்தான் இருக்கிறேனென காதுக்குள் ஒரு சத்தம்.
திடுக்கிட்டு விழித்தேன். பொழுதாகியிருந்தது.!


தூரத்தில் அப்பா வந்துகொண்டிருந்தார் அம்மாவின் கல்லறையை நோக்கி………..

 

 

என்ன தவம் செய்து

எனைப் பெற்றாள்

என் அம்மா

எனக்கது தெரியாது

சொல்லக் கேள்வி

தவமாய் தவமிருந்து என்று

அவளுக்கு நான் வரம்

எனக்கோ அவள் தான் உலகம்

உள்ளங்கையில் எனைத்தாங்கினாள்

உறங்க தாலாட்டு பாடினாள்

பசிக்கு பாலை ஊட்டினாள்

என் வளர்ச்சியில் அக்கரை காட்டினாள்

இத்தனையும் எளிதாய் இல்லாதபோதும்

முகத்தில் மலர்ச்சியை மட்டும் காட்டினாள்

என்நலன் மட்டுமே அவள் நோக்கம்

அக்கம் பக்கம் பொறாமையாய்


எனை பார்க்கும்

தேவை என்றெதுவும் நான் தேடியதில்லை

என் தேவைகளை அவள் தேடியதால்

அவள் தேவை எது என்று நான்

உணரும்முன்னே அவள் தேவையென்று


காலன்

அழைத்து சென்றான்

இருண்டு போனது என் உலகம்

அவள் இல்லாது போனதால்

நானோ இன்று தனி மரம்..,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!