Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 26.2

தொடர்ந்து 2 நாட்களாக நன்கு மழை பெய்து கொண்டிருந்தது. கட்டிட வேலை செய்யமுடியாமல் வீட்டிலிருக்கும் அலுவலக வேலையில் ஆழ்ந்திருந்தான் வசந்த். வேலையை முடித்துவிட்டு கைகளை உயர்த்தி நெட்டி  முறித்தவன்   லேப்டாப்பை எடுத்து வைத்து விட்டு  கடிகாரத்தைப் பார்த்தான்.

இரவு 11 ஆகியிருந்தது. வீடு அமைதியாக இருந்தது. இரவு 10 மணிக்குள் அந்த வீட்டில் அனைவரும் அவரவர் அறைக்கு சென்று விடுவர். பெரும்பாலும் தூங்கிவிடுவர்.  எழுந்து அவனுடைய அறைக்கு வந்தான். படுக்கையில் படுத்தான். கண்களை மூடினான். அப்பொழுது  வெண்மதி அவன் முன் வந்து அழகாக சிரித்தாள். அந்த மஞ்சள் நிற ரோஜாக்களின் பக்கத்தில் இவளும் ஒரு அழகிய பெரிய ரோஜாப்பூ போல சிரித்துக்கொண்டிருந்தாள்.  திடுக்கிட்டு கண்களை திறந்தான். தினமும் அவளை பார்த்து பழகி விட்டு இந்த இரண்டு நாட்களாக அவளை பார்க்காமல் இருப்பது அவனுக்கு கடினமாக இருந்தது.  இதற்கு முன்பும் அவளை அவன் பார்க்காமல் இருந்திருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம்  இல்லாத  அவளுடைய நினைப்பு இப்பொழுது அவனுக்கு இருந்தது.  “நான் அவளை மிஸ் பண்றேனா?” என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டான்.

“ஆமாம்” என்றது அவனது உள் மனம். சிறிது ஆச்சரியமாகக் கூட இருந்தது. எனினும் இன்பமாக இருந்தது. அவன் இதழ் புன்னகைத்தது.

 



Advertisement

அடுத்த  நாளும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது வசந்த்  இன்று எப்படியும் வெண்மதியை பார்த்துவிட வேண்டும் என்று முடிவு  செய்தவன் தாயிடம் “அம்மா  நான் கார் சர்வீஸ் விட்டுட்டு வர்றேன்.” என்று கூறிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு காரை நோக்கி  சென்றான்.

“சரிடா  பாத்து போயிட்டு வா ரொம்ப மழையா இருக்கு.” என்று கூறி அனுப்பினார்.

வண்டியை எடுத்துச்சென்று சர்வீசுக்கு கொடுத்துவிட்டு ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு அவன் வேலை செய்யும் இடத்திற்கு வந்தான். அங்கு  சுவர்கள் எழுப்பப்பட்டு இருந்தாலும் இன்னும் கூரை போட வில்லை. எனவே  குடை பிடித்துக் கொண்டு நின்று  கொண்டிருந்தான்.  வெண்மதி வருகிறாளா என்று வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தான்.

Advertisement

 

Advertisement

சிறிது நேரம் கழித்து ‘ஒரு வேளை முன்பே  வந்திருப்பாளோ?’ என்று நினைத்துக்கொண்டு

பார்வையை திருப்பி வீட்டு வாசலை பார்த்தான்.

அப்பொழுது வீட்டு வாசலில் இருந்து லட்சுமி இவனை கைகாட்டி அழைப்பது அவனுக்கு தெரிந்தது.”

Advertisement

அவன் அவர் அருகில் சென்றான்.

“என்ன தம்பி? இப்படி  மழை பொழியுது. இந்த நேரத்துல இங்க வந்திருக்கீங்க. நீங்க மட்டும் தனியா இருக்கீங்க.”

என்ன சொல்வது என்று புரியாமல் சிறிது நேரம் விழித்த வசந்த் ஒரு முடிவுக்கு வந்தவனாய்

“இந்த இடத்தோட ஓனர்  எவ்வளவு தூரம் வேலை முடிஞ்சு இருக்குன்னு போட்டோ எடுத்து அனுப்ப சொல்லி இருந்தார். அதனாலதான் போட்டோ எடுக்க வந்தேன்.”

”இந்த மழையில் போட்டோ எடுக்க போறீங்களா?”

“ஆமாமா என்ன பண்றது. எங்க தொழிலே அப்படி தான். வெயில் மழை எல்லாம் பார்த்தால் முடியுமா?” என்று கூறி சமாளித்தான்.

“சரி உங்க வேலை முடிஞ்சுதா? என்று லட்சுமி கேட்டார்.

“முடிஞ்சிடுச்சின்னு சொன்னா நாம இங்க வெயிட் பண்ண முடியாது. அதனால முடியலன்னு சொல்லுவோம்.” என்று  நினைத்த வசந்த்

“இன்னும் முடியலம்மா.”

“அப்படியா தம்பி? சரி.” என்று ஏமாற்றமாக உள் நோக்கி திரும்பினார்.

அவர் முகத்தில் ஏமாற்றத்தை கவனித்த வசந்த்

“என்னமா நீங்க ஏதாவது சொல்ல வந்தீங்களா?”

“இல்லை தம்பி பரவாயில்லை. பாத்துக்கலாம்.”

“இல்லை சொல்லுங்க. அம்மா. வெண்மதி வந்துட்டாங்களா?” என்று வெகுநேரமாக அவன் மனதில் இருந்து கேள்வியினை கேட்டு விட்டான்.

“இல்லப்பா இன்னும் வரல. அதான் எதிர் பார்த்துட்டு இருக்கேன். நீங்க ஃப்ரீயா இருந்தா உங்க கார்ல இந்த தெரு முனையில் அவள் வந்துவிட்டாளான்னு பாத்துட்டு வர சொல்லலாம்னு நினைச்சேன். ரெண்டு நாள் முன்னாடி  புதுசா ஒரு குழி தோண்டி இருக்காங்க. அவளுக்கு தெரியும்.  இருந்தாலும் கொஞ்சம் பயமாய் இருக்கு.  சரி தம்பி நீங்க தான் பிஸியா இருக்கீங்களே. சரி  அவளே வரட்டும்.” என்றார் லட்சுமி

 

இதனை கேட்ட அவனது மனது   “டேய் இப்படி கையில கிடைச்சா கோல்டன் சான்சை  விட்டுட்டியே டா. இப்போ காரும் இல்ல. பிசினு சொல்லியாச்சு. சரியான வேஸ்ட் டா நீ.” என அவனை திட்டியது.

“சரி தம்பி உங்க வேலை முடிஞ்சதும் கொஞ்சம் போயிட்டு வர முடியுமா?” என்று அவர் மீண்டும் கேட்க அவன் அழாத குறையாக

“நான் காரில் வரலமா. காரை சர்வீசுக்கு விட்டிருக்கேன்.” என்று சோகமாக கூறினான்.

இதனை கேட்ட லட்சுமி “அதுக்கு ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க? பரவாயில்லை விடுங்க. அவள் வந்துவிடுவாள்.”என்று லட்சுமி சொல்லிக்கொண்டிருக்கும்போதே

வசந்த் “அச் அச்” என்று இருமுறை தும்பினான். இதனை பார்த்த லட்சுமி

“என்ன தம்பி சளி பிடித்து இருக்கு போல.

நீங்க உங்க வேலை முடிஞ்சதும் உள்ள வந்து உட்காருங்க.  நான் இன்னைக்கு ஒரு சூப் பண்ணியிருக்கேன்.  இந்த மழைக்கு அது ரொம்ப நல்லா இருக்கும். நீங்க கொஞ்சம் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போங்க.”  என்றார்.

“சரிங்க மா”  என்றான் வசந்த் ஆனந்தமாக.

இந்த அடை மழையில் நின்றுகொண்டிருக்கும் போது அவனால் வெண்மதியை சரிவர பார்க்க முடியாமல் போய் விடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தான். இப்பொழுது லட்சுமி அவனை உள்ளே கூப்பிட்டதும்

‘அப்பாடி இன்னைக்கு நாம நிம்மதியா அவளைப் பார்த்துட்டு போகலாம்’ என்று  நினைத்துக்கொண்டான்.

குடையைப் பிடித்துக்கொண்டு நான்கைந்து போட்டோக்களை எடுத்துக்கொண்டு திரும்பினான். அப்பொழுது வெண்மதி அங்கு வந்து கொண்டிருந்தாள்.  குடை பிடித்து இருந்தாலும்  நன்கு மழை பெய்து கொண்டிருந்ததால் சாரல் பட்டு நனைந்திருந்தாள்.  பார்த்து பார்த்து அடி எடுத்து வைத்து வெகு ஜாக்கிரதையாக அவள் நடந்து வந்து கொண்டிருப்பதை  ரசித்துக்கொண்டிருந்தான்.

‘வெரி ஸ்மார்ட்’ என மனதினில் மெச்சிக்கொண்டான்.

 

அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவள் அவன் அருகில் வந்து

“ஹாய் வசந்த்” என்று கையை ஆட்டினாள்.

அவன் பதிலுக்கு  கையை ஆட்டி “ஹாய் வெண்மதி” என்றான்.

அதே நேரத்தில் லட்சுமி வெளியே வர

“வந்துட்டியா மா.  இப்பதான் நிம்மதியா இருக்கு. எங்க பார்த்தாலும் ஏதாவது  காரணம் சொல்லி குழி தோண்ட வேண்டியது அப்புறம் அதை பத்தி எந்த அக்கறையும் இல்லாம இருக்க வேண்டியது? பொதுமக்களுக்கு இதனால எவ்வளவு கஷ்டம். எப்பதான் இந்த மாதிரி விஷயங்களில் பொறுப்போடு இருக்க போறாங்களோ தெரியல. சரி உன்னை வெளியே நிக்க வச்சுட்டு பேசிட்டு இருக்கேன் பாரு. உள்ளே வா  மதி.” என்று மகளை அழைத்தார்.

பின்பு வசந்த்திடம் திரும்பி “உங்கள் வேலை முடிஞ்சுதா?” என்று கேட்டார். இதனை எதிர்பார்த்து காத்திருந்தது போலவே அடுத்தகணம் “முடிஞ்சிடுச்சி அம்மா.” என்று கூறவும்

“அப்ப நீங்களும் வாங்க உள்ள.” என்று லட்சுமி கூப்பிட ஆனந்தமாகவீட்டினுள்  நுழைந்தான் வசந்த்.

வெண்மதி “அம்மா நான் போய் குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வந்திடறேன்.” என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

“நீங்க உட்காருங்க தம்பி.” என்று வசந்தை வரவேற்று உட்கார வைத்தார் லட்சுமி.

 

ஒரு துண்டை வசந்த் இடம் கொடுத்து “துடைச்சுக்கோங்க” என்றார் லட்சுமி.

உள்ளே சென்று சூப்பை சூடு செய்து ஒரு பீங்கான் கிண்ணத்தில் ஊற்றி ஒரு சிறு கரண்டி அதில் போட்டு எடுத்து வந்து வசந்த் இடம் கொடுத்தார். அதை வாங்கிய அவன் ஒரு மிடறு அருந்தினான். உண்மையாகவே  சூப் அந்த  ஈரத்திற்கும் குளிருக்கும் இதமாக தொண்டையில் இறங்கியது.

காளான், பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் என்று அனைத்தும் அந்த சூப்பில் ஊரி தொண்டைக்கு இதமாக உள்ளே இறங்கியது.

வசந்த் அதனை ரசித்து குடித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது குளித்து முடித்துவிட்டு ஈர தலையில் துண்டுடன் வேறு ஒரு சல்வாரில் இருந்த வெண்மதி அங்கு வந்தாள்.

எந்த ஒப்பனையும் இல்லாமல் துடைத்து வைத்த குத்துவிளக்கு போல அழகாக இருந்தாள்.

“வந்துட்டியா மா. நான் போய் உனக்கும் சூப் எடுத்துட்டு வர்றேன்.” என்றுகூறிவிட்டு லட்சுமி சமையலறை நோக்கி நடந்தார்.

அவர் சென்றதும் வெண்மதி அறியாமல் அவளை  ரசித்துக்கொண்டிருந்தான்.  அப்பொழுது மழை ஓரளவு நின்றிருந்தது. சிறிது நேரத்தில் சூப்புடன் வெளியே வந்த லட்சுமி

“ இந்தா வெண்மதி நீயும் குடி.” என்று அவளுக்கும் கொடுத்தார்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!