Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kandaenadi Un Kaathalai

Kandenadi un Kaathalai – 8

“சூர்யா” என்று அழைத்த குரலுக்கு மலர் பயந்து நின்றாலும் அவளது எதிரில் நிற்பவனுக்கு அந்த பயம் இல்லை போலும் மலரின் கையை இன்னும் அழுத்தமாக பற்றி நின்றான்.

“டேய் மச்சான் உன்னை பாட்டி கூப்….” வார்த்தை வெளி வரா நர்த்தனம் ஆட, “ நீ இந்த புள்ள கூட இங்க என்னடா பண்ற அதுவும் யாருக்கும் தெரியாத இடமா பார்த்து நிக்கிற” என்றான் நவீன்.

“சும்மா பேசிட்டு இருந்தோம்டா” எரிச்சல் மண்டியது அவனது குரலில்.

பற்றி இருந்த கையின் மீது பார்வை போக “மச்சான் சும்மா பேசுறவன் இப்படி தான் பேசுவானோ?” நம்பாத பார்வையோடு நண்பனிடம் கேட்டான்.



Advertisement

சூரியாவின் கையில் இருந்து தன் கையை விடுவித்து “நீங்க பேசிட்டு வாங்க” என்றவள் கீழே சென்று விட்டாள்.

அவள் சென்றதில் கோபம் வர நண்பனை எரித்து விடுவது போல பார்த்தான்.

“என்னடா கரடி மாதிரி வந்து பூஜையை கெடுத்து விட்டேனோ” என்றான் நவீன்.

Advertisement

“உன் தலை… இடியட் , எற்கனவே என்ன பார்த்து பயந்து ஓடுவா இதுல எப்டியோ இழுத்துட்டு வந்து பேச்ச ஆரம்பிக்கதுக்குல வந்து காரியத்த கெடுத்துட்ட”.

Advertisement

“ம்ச்ச்  என்னடா பேச வந்த அதை சொல்லமா இப்படி தலைவர் கமல் மாதிரி புரியாம பேசாத”

“அந்த விக்கி பார்வை மலர் மேல ரொம்ப அதிகமாகவே இருக்கு. அவள் எங்க இருந்தாலும் வாலு பிடிச்ச குரங்கு மாதிரி மலர் பின்னாடியே சுத்திட்டு இருக்கான். விக்கிகிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருக்க சொல்லி மலர்கிட்ட சொல்ல வந்தேன்” –சூர்யா.

அதுவரை இருந்த இலகு தன்மை மாற முகம் இறுகி இருந்தான் நவீன். “சாரி மச்சான் அவன் இப்படி ஏதாவது தொல்லை செய்வான் தெரிஞ்சிதான் அம்மாகிட்ட  அவனையும், அனிக்காவையும் கூட்டி வர வேண்டாம்னு சொன்னேன். நீ இன்னும் அனிக்காவை மனசுல நினைச்சிட்டு இருக்கியோ?”

Advertisement

நவீனின் பதட்டம் கண்டு சிரித்தவன் “இல்லை மச்சான், அனிக்காகிட்ட தெளிவா சொல்லிட்டேன் அது ஜஸ்ட் க்ரஸ்னு. இனி தொந்தரவும் பண்ணாத சொல்லி அனுப்புனேன்”

“ நீ இதை சாதாரணமா சொல்லிட்ட ஆனால் இந்த விக்ஷயத்தை அவளும் சரி அவள் அப்பாவும் சரி அவ்வளவு சீக்கிரம் விட மாட்டாங்க எதுக்கும் நீ கொஞ்சம் உக்ஷாரா இரு. விக்கிய நான் கண்டிச்சி வைக்கிறேன் மச்சான்….”

“அனிக்கா பற்றி அப்பாகிட்ட சொல்லனும் இல்லைனா அவளோட அப்பா இடையில் புகுந்து குழப்ப அதிக சான்ஸ் இருக்கு… சரி வா பாட்டி கூப்டாங்கனு சொன்னியே கீழே போவோம்” என்றான் சூர்யா.

நகர போனவனின் கையை பிடித்து நிறுத்திய நவீன் “ஏன் மச்சான்! விக்கிய பற்றி நீ கீழ இருந்தே மலர்கிட்ட சொல்லி இருக்கலாமே யாருக்கும் மேலே அதுவும் மொட்டை மாடி மறைவுல வச்சி இழுத்துட்டு வர அவசியம் இல்லையே??!” என்றான்  நக்கலாக.

“ரொம்ப அவசியம்…. நான் எங்க வச்சினாலும் அவகிட்ட பேசுவேன் அதுக்கு உண்டான எல்லா உரிமையும் எனக்கு இருக்கு” கெத்தாக சொன்னான்.

அவனின் பேச்சில் சற்று அதிர்ந்தவன் “டேய் என்னமோ நீ அவளோட புருக்ஷன் மாதிரி பில்டப் கொடுக்குற”  நவீன்.

அவனது பேச்சில் சிரிப்பு வர “போதும் வாடா” என்றவன் அவன் அடுத்து பேசுவதற்குள் கீழே இழுத்து சென்றான்.

பாட்டியிடம் பேசி முடித்தவன் நேராக மலர் முன்பு வந்து நின்றான். ஃபோனை நோண்டி கொண்டு இருந்தவளிடம் இருந்து அதை பிடிங்கி தன் பாக்கெட்டுக்குள் நுழைத்தான்.

‘ம்ச்ச் மறுபடியும் இப்படி அய்யனார் மாதிரி வந்து  நிக்கிறான். என்ன தப்பு செஞ்சி தொலைச்சேனோ இப்படி போற இடம்மெல்லாம் வரான்’ மனதுக்குள் சலித்தவள் அதை முகத்திலும் காட்டி “என்ன” என்றாள்.

அவளது கைமுட்டி பக்கம் பற்றி வெகு அருகில் இழுத்து “அவன்கிட்ட பேசும் பொழுது அலுப்பு தட்டாது…. அதுவே என்கிட்ட பேசனும்னா சலிப்பா இருக்கோஎன்றான் கோபத்துடன்.

“அத்தான் இப்பவாது கொஞ்சம் தெளிவா சொல்லுங்க. நீங்க யார சொல்ரீங்கனு எனக்கு நிஜமா தெரியல” அவனது கையை விலக்க முயன்று தோற்று போனாள்.

விக்கி எதுக்கு எப்பவும் உன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கான்”.

“அதை ஏன் என்கிட்ட கேட்கிறிங்க அவங்கட்ட போய் கேளுங்க. நானா முன்வந்து அவர்கிட்ட பேசவில்லை. அவர்தான் வந்து பேசினார், தானாக வந்து பேசுபவரிடம் முகத்தில் அறைந்தது போல் அந்த இடத்தில இருந்து எழுந்து வர முடியுமா என்ன?”  என்று அவனிடம் எதிர் கேள்வி  கேட்டாள்.

“ஃபர்ஸ்ட் அவனை அவர், இவர்-னு சொல்றத நிறுத்து காதால கேட்க முடியல நாரகாசமா இருக்கு. இனி அவனி உன்கிட்ட பேசுனா நீ விலகி போ. அவன் ஒன்றும் ரொம்ப உத்தமன் இல்லை. அவனிடம் நீ முகத்தில் அறைந்த மாதிரி நடந்து கொண்டாலும் பெரியதாக கவலை கொள்ளும் ஜென்மம் அவன் கிடையாது. இனி, அவன் உன்னிடம் பேசி நான் பார்த்தேன்…. ” என்றவன் அவன் கையிற்கு இன்னும் அழுத்தம் கொடுத்தான்.

‘இவன் மட்டும் அந்த அனிக்காவிடம் கொஞ்சி குழாவுவான், நான் மட்டும் வேறு யாருகிட்டயும் பேச கூடாதாம்,… அப்படி பேசினாலும் கத்த மட்டும் தெரியும்’ என்று நினைத்தாள்.

“என்ன பதிலே காணும்??. மனசுல தாளித்து எடுக்குற மாதிரி தெரியுது!”  உதட்டின் ஓரம் துளிர்விட்ட புன்னகையுடன் கேட்டான்.

அவன் அப்படி கேட்டதும் ‘ஆம், இல்லை’ என்று இரண்டு விதமாக தலை ஆட்டி வைத்தாள். அவளின் செய்கையில் பற்கள் தெரிய சிரித்தவனை இமைகள் புருவம் வரை விரிய ஆச்சிரயமாக பார்த்தாள்.

அவளின் அந்த மை பூசிய கருமை விழி கடலை கண்டவன் மனதில் சில காலமாக அவளின் மேல் எழுந்த உணர்விற்கு உண்டான காரணம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.

மலர் உன்னை உங்க அத்தை கூப்ட்டாங்க” இருவரும் சேர்ந்து நிற்பதை பார்த்து “டேய் நீ இன்னுமாடா அவகிட்ட பேசிட்டு இருக்க. என்ன கை பொசிசன் மட்டும் மாறி இருக்கு. ஃபர்ஸ்ட் அந்த புள்ள கையை விடுடா பாவம் கை செவந்து போய் கிடக்கு.” என்றவன் சூர்யா காதில் “மச்சான் நீ அந்த புள்ளய டாவடிக்கிறனு எனக்கு தெரிஞ்சு போச்சுடா” என்று பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்த மாதிரி முகத்தில் பெருமை பொங்க சொன்னான்.

நண்பனின் பேச்சில் இன்ஸ்டன்ட் புன்னகை முகத்தில் வந்து ஒட்டி கொண்டது. ஓரகண்ணால் மலரை பார்த்தான்… அவள் அவன் கையை எடுக்க தீவிர முயற்சியோடு இருந்தாள் கூடவே வேறு யாராவது வருகிறார்களா என்று சுற்றி சுற்றி பார்த்தாள். அதனால் இவர்கள் பேச்சை அவள் கூர்ந்து கவனிக்கவில்லை.

 கண்கள் பளிச்சிட  “ஹ்ம்ம், ஆமாடா இப்பொழுது எல்லாம் அனிக்காவின் நினைவு அதிகமாகவே இருக்கு. இரண்டு வருடம் பிரிந்து இருந்ததின் தாக்கம் போல” என்றான் மலரை பார்த்து கொண்டே.

நண்பனின் சூழ்ச்சி நவீனுக்கு நன்றாகவே புரிந்தது. அதனால் இடையில் எதுவும் பேசாது மலரின் முகத்தை பார்த்தான்.

சூர்யா அனிக்கா பற்றி அப்படி சொன்னதும் கைகள் தானாக வேலை நிறுத்தம் செய்ய தொண்டை கனத்து போனது. கண்களில் இருந்து கண்ணீர் கீழ் இமை முடியில் படிந்து நின்றது.

அதை கண்டவனின் கணகளில் குழப்பம் வந்தது. இதற்கு மேல் அவளை சீண்ட விரும்பாமல் “நீ போ மலர்” என்ற அவனின் அந்த வார்த்தைக்கு காத்து கொண்டு இருந்தவள் போன்று உடனே அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாள்.

அவள் சென்ற திசையை பார்த்திருந்தவனின் கவனத்தை நவீனின் கேள்வி கலைத்தது.

“என்ன சூர்யா உன் மனசு ஏன் மலரை தேடுதுனு யோசிக்க ஆரம்பிச்சிட்டியோ” என்றான் நவீன் புன்னகையுடன்.

அதுவும் ஒரு காரணம் தான்.  இங்கு வந்த முதல் நாளில் மலரை பார்த்தில் இருந்து என் மனசே சரியில்லைடா. மலரின் செய்கை ஒவ்வொன்றும் எனக்கு ரசிக்கும்படியாக இருக்கிறது….. சொல்ல போனால் அவள் அழகை இன்னும் நான் ரசிக்கிறேன்.  சிறு வயதில் என் கூடவே வளர்ந்தவள் மீது இப்பொழுது மட்டும் இந்த எண்ணம் ஏன் தோன்றுகிறது என்று எனக்கு தெரியவில்லை.” மனதில் உள்ளதை மறைக்காது நண்பனிடம் சொன்னான்.

“சரி வேறு காரணம் என்ன?”

“முன்னமும் சரி, இப்பவும் சரி நான் அனிக்கா பற்றி பேசினாலே அவளோட முகம் அப்படியே இருண்டு போகுது. அது ஏன்னு தெரியல??” என்றான் யோசனையுடன்.

சூர்யாவின் மனநிலை நவீனுக்கு நன்கு புரிந்தது. “இங்கு பார் சூர்யா, உன் மனதில் மலரின் மீது தன் மாமா பெண் என்ற பாசம் இருந்தது…. இப்பொழுது அது ஒருவித உரிமையாக வடிவெடுத்திருக்கிறது”

“எனக்கும் புரியுதுடா அவளின் மீது எனக்கு வந்திருப்பது வெறும் ஈர்ப்பாக இருந்து விடுமோ என்ற பயமும் அதிகமாக இருக்கிறது”.

 “அதை காலம் தான் உனக்கு உணர்த்தும். மேலும் அந்த அனிக்காவை விட உனக்கு, உன் குடும்பத்துக்கும் ஏற்றவள் மலர் மட்டும் தான்”  தன் மனதில் தோன்றியவற்றை எல்லாம் சூர்யாவிடம் கூறி முடித்தான்.

“எனக்கு  நீ அனிக்காவிடம் பேசுவது பிடித்தம் இல்லை. அவளின் மீது இருந்த மயக்கம் உனக்கு தெளிந்துவிட்டது அதுவே எனக்கு மிகவும் சந்தோஷம் மச்சான். பின், உன் மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. ஆனால், அதை நீ இன்னும் தெளிவா உணர வேண்டும்” என்றவன் அத்தோடு பேச்சை முடித்து விட்டான்.

இங்கு விக்கி அவன் அறையில் அடிபட்ட பாம்பு போல் சீறிக்கொண்டு இருந்தான். ‘அனிக்கா சொன்னபொழுது அதை அலச்சியமாக விட்டு இருந்திருக்க கூடாது…. என்னையே எச்சரிகிறாயா, இந்த திருவிழா முடியும் சமயம் மலரின் பிடி என்னிடம் இருக்கும்…. அப்பொழுது உன்னை நான் கவனித்து கொள்கிறேன் சூர்யா’ என்று கறுவியவன் தன் அறைக்கு வரும்படி அனிக்காவை போனில் அழைத்தான்.

விக்கியின் முகத்தை பார்த்ததுமே அனிக்காவிற்கு தெரிந்துவிட்டது ‘என்னை போல் இவனும் இன்று பல்ப் வாங்கிருக்கிறான்’ என்று மனதுக்குள் சிரித்தவள்,

“என்னடா பெரிய இவன் மாதிரி சீரிகொண்டு போன… இப்போ உன் பல்லை பிடிங்கி அனுப்பிட்டான் போல.”

அவனது முறைப்பை அலட்சியபடுத்தி “எதுக்கு வர சொன்ன” என்று கேட்டாள்.

“இங்கு பார் அனிக்கா, நாளை ஒன்பதாம் நாள் விழா…. இரவு பத்து மணிக்கு வீட்டில் உள்ள எல்லோரும் கிளம்பி கோவிலுக்கு போயிருவாங்க, கண்டிப்பாக நாமும் அவர்களுடன் சென்று விடுவோம்” என்றவனின் பேச்சில் ஒன்றும் புரியாது அவனையே பார்த்தாள்.

“நீ சொல்லவதை சுத்தி வளைக்காது சொல்லி முடி”. முழு எரிச்சலுடன் சொன்னாள்.

“விழா முடிந்து எல்லோரும் வர இரண்டு மணி ஆகிவிடும். ஆனால், அதற்கு முன்னமே நீ மலரை ஏதாவது சாக்கு சொல்லி அரைமணி நேரத்திற்கு முன்னால் அவளை வீட்டிற்கு அழைத்து வந்து அவளின் அறையில் வைத்து நீ பூட்டி விட வேண்டும் மற்றும் அவள் அறை பக்கத்தில் உள்ள ஸ்டோர் ரூமையும் நீ திறந்து வைத்து இருக்க வேண்டும்” என்று சொல்லி முடித்தான்.

அவனின் திட்டம் இன்னும் முழுவதும் அவளுக்கு புரியவில்லை தான்…. இருந்தும் அவனிடம் ஒன்றும் கேட்காது ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு வந்தாள்.

அன்று இரவு எல்லாரும் வீட்டின் கூடத்தில் இருந்தனர். இளசுகள் கைகள் கைபேசியில் விளையாடிட்டு இருக்க, பெருசுகள் பாதி ஊர் கதை பேச, பாதி சமையலில் மூழ்கி இருந்தனர். மலர் சப்பாத்தி தேய்த்து கொடுக்க கங்கா அதை ஸ்டவ் அடுப்பில் போட்டு எடுத்தாள்.

“மலருக்கு படிப்பு முடிஞ்சிட்டு அவளை கல்யாணம் செஞ்சி கொடுக்க போறியா இல்லை மேற் படிப்பு படிக்க வைக்கனுமா” என்று நவீனின் அப்பா வரதன் கேட்டார்.

தனது அருகில் இருந்தவர்களின் பேச்சு சூர்யாவிற்கு நன்கு கேட்டது. அவனது அப்பாவின் பதிலுக்கு காத்து இருந்தான்.

“அதை அவகிட்ட கேட்கனும் வரதா. படிக்க விருப்பம் இருக்குனு சொன்னா படிக்க வைக்கனும். அதுவும் இல்லாம மலரை ஒரு இரண்டு வருசம் பக்கத்துல வச்சிக்கனும்… படிக்க விருப்பம் இல்லைனு சொன்னாலும் எங்ககூட கொஞ்ச நாள் இருக்கட்டும். சின்னதுல இருந்து கூடவே இருந்தவ சீக்கிரம் கெட்டி கூடுக்கவும் மனசு வரல. அவள் வீட்க்கு வந்த ஒரு வருசத்துல என் தொழிலும் நல்ல லாபம்… கைராசிக்காரி” மருமகளை மெச்சி பேசினார் சங்கர்.

தூரத்தில் நவீனுடன் பேசியபடி வேலை செய்தவளிடம் சூர்யாவின்  பார்வை சென்றது. அப்பா, அம்மாவை இழந்துட்டு வீட்டுக்கு வந்த பொழுது இருந்த அதே குழந்தை முகம்.

அவளது அழகு, குழந்தைதனம் இன்னும் கூடுதலாகவே அவள் வசம் அவனது மனதை இழுத்தது.

“அது இல்லைடா சங்கர் எனக்கு தெரிஞ்ச உறவுல மலரை ஏதோ கோவில்ல பார்த்து இருப்பாங்க போல என்கிட்ட கேட்டாங்க அதான் உன் காதுல போட்டு வச்சா உனக்கு தோது படுத  நேரம் சொன்னனா பேசி முடிச்சிரலாம்.” என்றார் வரதன்.

இந்த பேச்சே சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. “அதுதான் அப்பா இப்போதைக்கு வேண்டானு சொல்றாங்களே மாமா. மலர் அடுத்த படிக்க போறதா என்கிட்ட சொல்லிட்டு இருந்தா” எப்படியாவது இந்த பேச்சுக்கு முற்றுபுள்ளி வைக்க முயன்றான்.

“என்கிட்ட மலர் படிப்பு பற்றி எதுவும் சொல்லவில்லையேடா” என்றார் சங்கர்.

“சரி சங்கர் மலருக்கு  அப்போ நான் அவங்ககிட்ட இப்போதைக்கு கல்யாணம் பண்ணலனு சொல்றேன்” என்றவர் அங்கு இருந்து நகர்ந்துவிட்டார்.

“அப்பா மலர்கிட்ட இப்போ எதுவும் கேட்கவேண்டாம். திருவிழா முடிஞ்சி ஊருக்கு போனதும் பார்த்துக்கலாம்” அடுத்த அவர் வாய் திறக்கும் முன் எழுந்து சென்றுவிட்டான்.

மாடி நோக்கி சென்றவனை “சூர்யா சாப்ட்டு போடா” என்றார் கங்கா.

“ரெஃப்ரெஸ் ஆயிட்டு வரேன்மா. டென் மினிட்ஸ்” அவனது அறைக்கு சென்று விட்டான்.

கதவை மூடிவிட்டு ட்ரைஸ்ஸை கழற்றவும் அதில் இருந்து செல்ஃபோன் ஒன்று கீழே விழுந்தது. அதை பார்த்தும் அது மலருடையது என்பது தெரிந்தது.

எடுத்து அன்லாக் பண்ணா பாஸ்வேர்டு பேட்டர்ன் கேட்டது. மூன்று முறை முயற்சி செய்ய அது தானாகவே டெம்பரவரி லாக் ஆயிட்டு. கீழே அவன் அம்மா அழைக்கும் சத்தம் கேட்க குளித்துவிட்டு சென்றான்.

கீழே சென்றவனின் கண்கள் அவளை தேட பாட்டி அருகில் இருந்து சாப்ட்டு கொண்டு இருந்தாள். தானும் ஒரு தட்டில் சாப்பாடி போட்டு கொண்டு அவள் அருகில் போய் அமர்ந்தான்.

“உன் ஃபோன் அன்லாக் பர்ட்டன் என்ன?” ஒரு வாய் சப்பாத்தியை வாயில் அடைத்தவாறு கேட்டான்.

“எதுக்கு?” பதில் கேள்வி கேட்டாள்.

“என்ன இருக்குனு பார்க்கதான்”

“ஹ்ம்ம் அதை உங்களால அன்லாக் பண்ண முடியாது அந்த பேட்டர்ன்ன நீங்க அவ்வளவு ஈசியா கெஸ் பண்ணமாட்டிங்க” என்றாள் வெகு தையிரியமாக.

“ஓஹோ அந்த தையிரியத்துல தான் ஃபோன் என்கிட்ட இருந்தும் நீ கூலா இருக்க அப்படிதான?!”

மலர் பேச வாய் திறக்குமுன் “ஹாய் சூர்யா” என்று அனிக்கா அவனது வலது புறம் வந்து அமர்ந்தாள்.

நொடியில் அவனது முகம் இறுக, மலரோ எழுந்து செல்ல பார்த்தாள். அவளுக்கு இருவரையும் சேர்த்து பார்க்கவே பிடிக்கவில்லை.

எழுந்து செல்ல முயன்றவளின் கையை இறுக்கமாக பிடித்து உட்கார வைத்தான்.

அனிக்காவிடம் திரும்பி “அனிக்கா வீ நீட் சம் ப்ரைவேசி” என்றான். அவனது பேச்சில் முகம் கறுக்க மலரையும், அவன் பற்றி இருந்த கையையும் பார்த்தவள் அங்கு இருந்து சென்று விட்டாள்.

அனிக்காவிடம் அவன் பேசிய விதம் மலருக்கு ஆச்சிரியமாக இருந்தது. ஒரு காலத்தில் அவள் பெயர் சொன்னாலே கண்களோடு சேர்ந்து முகமும் அவனுக்கும் மலரும். அப்படி ஒருத்தியை இப்போ முகம் பார்க்க கூட விரும்பாது அனுப்பி வைக்கிறான்.

“அத்தான் நீங்க அவங்களை….” அவள் கேட்க வருவது அவனுக்கு புரிந்தது “அதை பற்றி அப்பறம் பேசிக்கலாம். இப்போ உன் பேர்ட்டன் சொல்லு” என்று நச்சரித்தான்.

அனிக்கா கோபத்துடன் செல்வதை பார்த்த நவீன் அவள் வந்த இடத்தில் இருந்து சூர்யா, மலர் இருப்பாதை பார்க்க அவர்கள் அருகில் சென்றான்.

“டேய் மச்சான், இதோட மூன்று முறைடா” அலறினான் நவீன்.

‘எது?’ என்பது போல் அவர்கள் இருவரும் அவனை பார்த்தனர்.

“இன்னைக்கு நான் பார்க்குபொழுது எல்லாம் நீ அந்த புள்ள கூடதான் இருக்க… அதுவும் சும்மா இல்லாம அவள் கையை புடிச்சிட்டே இருக்க. இங்கு இருக்குறவுங்க கண்ணுல உங்க அலும்பு படலையா இல்ல தெரிந்தும் சும்மா கண்டுக்காம இருக்காங்களா?. இங்க வந்து ஒரு பொண்ண என்னால கரெக்ட் பண்ண முடியல ஆனால் நீ வந்த நாள்ல இருந்து ஒரே ரொமன்ஸ் தான்” மனகுமுறலுடன் சொன்னான்.

அவனது பேச்சில் சத்தமாக சூர்யா சிரிக்க, அவனது சிரிப்பில் மலருக்கு கூச்சம் அதிகரிக்க எழுந்த செல்ல முயன்றாள்.

“ஏய் இரு சும்மா சும்மா ஓடுற. அவன் சொன்னதுக்கு ஏற்ப நீயும் ஓடதான் செய்யுற இந்தா உன்னோட ஃபோன்” அவளது கையில் தினித்தான்.

அவள் சென்றதும் “இந்த வீட்ல நீ எங்கள மட்டும்தான் நோட் பண்றியோ… நாங்க பேசிட்டு இருந்தா உனக்கு மூக்கு வேர்த்துறுமே” என்றான் சூர்யா கடுப்புடன்.

இருவரும் பேசிகொண்டு இருக்க “அம்மா” என்ற சத்தம் கேட்டு பதறி சத்தம் வந்த திசை நோக்கி சென்றனர்.   

மலரும்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!