Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 28.2

“சரி அதையெல்லாம் விடுங்க. என்னோட விஷயத்துக்கு வாங்க. இப்போ எப்படி நான் ஸ்வீட் செஞ்சு கொடுக்கிறது? இன்னும்1  நாள் தான் இருக்கு.” என்று வருத்தமாக கூறினார் லட்சுமி .

 

முல்லை “இனிமே இந்த இரண்டு பசங்களை நம்பி பிரயோஜனம் கிடையாது. நாம வேற ஆளை பார்க்க வேண்டியதுதான். ஆனால் 1 நாள்ல எப்படி ஆளை தேடி கண்டு பிடிக்கிறது? எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான சொந்தக்காரங்க வீட்டு கல்யாணம் இருக்கு. நான் கண்டிப்பா போயே ஆகணும். இல்லைனா உன்கூட நானே வந்து லட்டு செய்வேன்.” என்றார்.

“எங்க ஆபீஸ்லயும் முக்கியமான ப்ராஜெக்ட் போயிட்டு இருக்கு. என்னால லீவு எடுக்க முடியாது. அப்பாவைப் பற்றி கேட்கவே வேணாம் அவரும் லீவு எடுக்க முடியாது. இப்ப என்ன பண்றது அம்மா? நீங்க மட்டும் தனியா வேலையை ஆரம்பிக்காதீங்க. உங்க உடம்புக்கு ஒத்துக்காது.” என்று வெண்மதி முன்னெச்சரிக்கையாக கூறினாள்.



Advertisement

 

“ஆமாம் லட்சுமி பேசாமல் நீ ஸ்வீட் ஸ்டால் ஓனர் கபிலனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி இன்னும் கொஞ்சம் நாள் டைம் கேளு. வேறு வழியே கிடையாது.” என்று முல்லை கூற

வெண்மதியும் “ஆமாம் அம்மா. அப்படியே செய்யுங்க. நான் வேணா அவர்கிட்ட பேசட்டுமா?” என்று வெண்மதி கேட்டாள்.

Advertisement

“இல்லமா நானே  அவர்கிட்ட நாளைக்கு போன் பண்ணி  பக்குவமா எடுத்து சொல்லிடறேன். சொல்லி இன்னும் கொஞ்சம் டைம் வாங்குறேன். சரி அப்படியே வாங்கினாலும் வேலைக்கு ஆள் இல்லாம நாம எப்படி செய்ய முடியும்?” என்று கவலையாக கேட்டார் லட்சுமி.

Advertisement

முல்லை “நான் வேற ரெண்டு ஆளை  எப்படியாவது இரண்டு நாளில் தேடி கண்டுபிடிக்கிறேன். நீ கவலைப்படாம இரு லட்சுமி.” என்றார்.

“ஆமா மா நீ கவலைப்படாம இருமா. நாம இதையும் சமாளிக்கலாம்.” என்றாள் வெண்மதி உறுதியாக.

அடுத்த நாள் காலை லட்சுமி கபிலனுக்கு போன் செய்தார்.

Advertisement

போனை எடுத்து கபிலன் “என்னமா ஸ்வீட் செஞ்சு முடிச்சிட்டீங்களா? எப்போ கொடுத்து அனுப்புறீங்க? இப்பதான் உங்களை பத்தி பக்கத்து கடைக்காரன் கிட்ட சொல்லிகிட்டு இருந்தேன். கரெக்டா சொன்ன நேரத்துக்கு  ஸ்வீட் கிடைச்சுடும். டைமுக்கு கொடுத்துடுவாங்கன்னு பெருமையா இப்பதான்  பேசிக்கிட்டே இருந்தேன். நீங்களும் கால் பண்ணிட்டீங்க. உங்களுக்கு நூறு ஆயுசு.” என்று புகழ்ந்தார்.

இதனை கேட்ட லட்சுமிக்கு தர்மசங்கடமாக இருந்தது. தான் சொல்ல வந்ததை எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினார்.

மீண்டும்  கபிலன் “என்னமா பேச்சையே காணோம்? சொல்லுங்க. என்ன விஷயம்?” என்று கேட்டார்.

லட்சுமி தடுமாறியபடி ஆரம்பித்தார்

“அது அது வந்து இந்த தடவை என்னால  சொன்ன நேரத்துக்கு ஸ்வீட் செஞ்சு தர  முடியல சார் மன்னிச்சிடுங்க.” என்று சொல்லி முடித்தார்.

“என்னமா என்ன சொல்றீங்க? ஸ்வீட்டை எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கேன். ஏற்கனவே நீங்க செஞ்சு கொடுத்த ஸ்வீட் காலி ஆயிடுச்சு.

நீங்க என்கிட்ட சொன்ன மாதிரி நான் கஸ்டமர் கிட்ட சொல்ல முடியுமா? என்னமா இப்படி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசுறீங்க ?” என்று சிறிது கோபம் காட்டி பேசினார் கபிலன்.

லட்சுமிக்கு தான் வருத்தமாக இருந்தது.எனினும்

“சார். வேலைக்கு வரவேண்டிய பசங்க வேலைக்கு வரல. அதனால தான் இப்படி ஆயிடுச்சு. தயவுசெய்து இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க. இன்னும் இரண்டு நாள் டைம் கொடுத்தீங்கன்னா நான் பண்ணி கொடுத்திடுவேன்.”

“அப்ப மட்டும் எப்படி பண்ணுவீங்க? வேலைக்கு ஆள் வரலைன்னு சொல்றீங்க.” என்று கேட்டார் கபிலன்.

“வேற ஆள் போட்டு செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.”

“வேறு ஆள் கிடைத்து விட்டார்களா?”

“இல்லை சார். தேடிக்கொண்டே இருக்கிறோம்.” என்றார் லட்சுமி தயங்கியபடி.

“சரிமா. இன்னும் உங்களுக்கு ரெண்டு நாள் டைம் கொடுக்கிறேன் அதுக்குள்ள ரெடி பண்ணி கொடுத்தீங்கன்னா  தொடர்ந்து உங்களுக்கு ஆர்டர் கிடைக்கும். அப்படி இல்லைனா, நான் ஆடர் உங்களுக்கு கொடுக்க முடியாது மா. அவ்வளவுதான்.” என்று கறாராக பேசி போனை வைத்தார் அவர்.

 

அன்று மாலை வீடு திரும்பிய வெண்மதி தாயிடம் விபரத்தை அறிந்து கொண்டாள். அடுத்த நாள் முல்லை லட்சுமியை பார்க்க வந்தார்.

“என்ன லட்சுமி என்ன ஆச்சு?” என்று விசாரித்தார் ஆர்வமாக.

லட்சுமி விபரத்தை கூற “சரி நாம இந்த ரெண்டு நாள்ல கண்டிப்பா இந்த ஆர்டரை முடிச்சு ஆகணும். நான், நீ,  அப்புறம்  என்னோட தங்கை இரண்டு பேர் இருக்கிறார்கள். அவங்களையும் கூட்டிக்கிட்டு வரேன். நாளைக்கு நாம வேலையை ஆரம்பித்து விடுவோம்  நீ ஒன்னும் கவலைப்படாதே.” என்று லட்சுமிக்கு தைரியம் கூறினார் முல்லை.

லட்சுமிக்கு ஓரளவு மனம் தெளிந்தது.

 

விஷயத்தைக் கேள்விப்பட்ட கார்த்திகேயன், கோவிந்தன் இருவரும் கடைக்கு சென்று தேவையான பொருளை எல்லாம் வாங்கி வந்து கொடுத்தனர்.

சொன்னபடியே  இனிப்பு செய்ய ஆரம்பித்தனர்.  முல்லை மற்றும் முல்லையின் தங்கைகள் இருவரும் அவரவர் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு  லட்சுமிக்கு உதவிசெய்ய வந்தனர். வேலையை ஆரம்பித்து செய்தனர். சொன்னபடியே இரண்டு நாட்களில் இனிப்பை செய்து  முடித்தனர். முடித்ததும் லட்சுமி, முல்லை இருவரும் சேர்ந்து அதனை ஆட்டோவில் எடுத்துக்கொண்டு சென்று  கபிலன் இடம் கொடுத்துவிட்டு வந்தனர்.

“எப்படியோ இந்த ஆர்டர் செஞ்சு முடிச்சிட்டீங்க. அடுத்த ஆடர் உங்களால் செய்ய முடியுமா?” என்று கேட்டார் கபிலன்.

“செய்ய முடியும் சார். நாங்கள் செஞ்சுடுவோம். நீங்க எங்களை நம்பி கொடுங்க.” என்று பணத்தை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

 

“இந்த ஆர்டரை நாம எப்படியோ செஞ்சி முடிச்சிட்டோம். ஆனா இதே மாதிரி   எப்போதுமே செய்ய முடியாது. இந்த இரண்டு நாள் வேலை செஞ்சதுக்கே கை கால் வலி என என்னோட தங்கை பொலம்பிட்டு இருந்தா. இப்போ எப்படி நாம இந்த வேலையை செய்றது?” என்று முல்லையும் லட்சுமியும் குழம்பி கொண்டிருந்தனர்.

“சரி நமக்கு ஒரு வாரம் டைம் இருக்கு. நான் திரும்ப எனக்கு தெரிஞ்ச பசங்க இல்ல பொண்ணுங்க  கிடைக்கிறார்களா  என பார்க்கிறேன்.” என்று முல்லை யோசனையாக கூறினார்.

வெண்மதியும் தனக்கு தெரிந்தவர்களிடம் இந்த வேலைக்கு ஆள் கிடைக்கிறதா என்று விசாரித்து பார்த்தாள்.

 

இதனைக் கேள்விப்பட்ட கவிதாவின் தாய் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு பையன்களுடன் அன்று வீட்டிற்கு வந்தார்.

லட்சுமியிடம் கவிதாவின் தாய் மாலினி “ இவங்க ராமு, ரகு. இந்த இரண்டு பசங்களும் எனக்கு தெரிஞ்ச பசங்க தான். இவங்க உங்க வேலைக்கு சரி வருவாங்களா பாருங்க.” என்று கூறினார்.

“இப்போ நான் இருக்கிற நிலைமைக்கு ஆள் கிடைச்சாலே போதும் மாலினி. அதனால தம்பி நீங்க ரெண்டு பேரும் நாளையிலிருந்து வேலைக்கு வந்துருங்க.” என்று ஆர்வமாக கூறினார் லட்சுமி.

வெண்மதிக்கு இந்த இரண்டு பேரும் வேலைக்கு வருவார்களா என்ற சந்தேகம் இருந்தது. எனினும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக  நாளை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

 

அன்று இரவு இந்த விபரத்தை லட்சுமி , கணவரிடம் ஆர்வமாக கூறினார்.

அதனை கேட்ட கோவிந்தன்

“என்ன இப்போ திருப்தியா? வேலைக்கு ஆள் கிடைச்சிடுச்சு. நீ இனிமே நிம்மதியா வேலையை பார்க்கலாம்.” என்று கூறினார்.

அன்று வழக்கத்தை விட சீக்கிரமாகவே வேலை முடிந்து விட வெண்மதி அலுவலகத்திலிருந்து கிளம்பி வந்தாள்.

பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது முத்து,  சேகர் மற்றும் மாலினி அழைத்து வந்த  ராமு, ரகு,  அந்த தெருவில் இருந்த குட்டி சுவற்றின் மீது உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.   இவள்தான் அவர்களை பார்த்தாலே தவிர அவர்கள் இவளை பார்க்கவில்லை. அவள் வேறு பக்கமாக நடந்து அவர்கள் அருகில் சென்றாள்.  அப்பொழுது அதில் ஒருவன் அவளை பார்த்துவிட்டான். பார்த்தவன் மற்றவர்களிடம் கூற மற்றவர்களும் இவளை பார்த்து விட்டு

“ஏய் ஓடுங்கடா” என்று ஓட முயற்சித்தனர்.

அப்பொழுது அவள் முத்துவை தடுத்து வழி மறித்தாள். மற்றவர்கள் ஓடிவிட்டனர். “டேய் நில்லுடா.” என்று வெண்மதி  இரு கைகளையும் நீட்டி அவன் வழியை மறித்தாள். அப்போது அவன் அவளை தள்ளி விட்டு ஓட  முயற்சித்தான்.

 

அவள் “இப்ப நீ நிக்கல, நா போலீசுக்கு கால் பண்ணி நீ எங்க வீட்ல இருந்து பணத்தை திருடிட்டு ஓடிட்டன்னு  கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன். ஒழுங்கா நில்லுடா.” என்று மிரட்டினாள்.

“ஐயோ நான் அப்படி பண்ணவே இல்லையே!” என்று ஓட முயற்சித்தவன் நின்று அவளிடம் பேசினான்.

“அது உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். போலீசுக்கு தெரியாதே! போலீஸ் உன்னை பிடிச்சு  ஜெயில்ல போட்டு செம அடி அடிப்பாங்க. அப்புறம் நீ கலி தான் திங்கணும்.” என்று அவனை மிரட்ட

அவன் திருதிருவென்று விழித்தான்.

“இங்கே பாரு ஒழுங்கா நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லிடு. இல்லை நான்  போலீஸ் ஸ்டேசன் போக வேண்டி இருக்கும். அப்புறம் உன் இஷ்டம்.” என்று விரித்து இருந்த கையை மடக்கினாள்.

அவன் ஓடலாமா வேண்டாமா என்று யோசிக்க ஆரம்பித்தான்.

“நீ உண்மையை சொல்லிட்டா. உன்னை விட்டு விடுவேன். இல்லைனா உங்க 2 பேரு மேலையும்  திருடிட்டதா  கம்ப்ளைன்ட் கொடுத்திடுவேன். இந்த ஊரு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் என் பிரெண்டோட அப்பாதான். நான் சொன்னேனா உன் கை காலை உடைச்சு ஒரு மூலையில் உட்கார  வச்சிடுவாங்க. என்ன சொல்ற?” என்று அவன் முகத்தை கூர்ந்து கவனித்தாள்.

உண்மையில் அப்படி யாரையும் அவளுக்கு தெரியாது. எனினும் அவனை அப்படி கூறி மிரட்டினாள்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!