Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Iangaathu Veesuthae

சமீராவின் இளங்காத்து வீசுதே – 2

அத்தியாயம் 2

 

அந்த பாடவேளை நிறைவு அடைந்ததன் அறிகுறியாக பெல் ஒலிக்கப்பட பாடம் எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளர் அத்துடன் முடித்துக் கொண்டு வெளியேறிய அடுத்த நொடி கடனே என்று அமர்ந்திருந்த அனித்தும் ஜெய்யும் சட்டென்று எழுந்துவிட அவர்களை தொடர்ந்து அவர்கள் கேங்கில் உள்ள மற்றவர்களும் எழுந்துவிட்டனர் ஆரியனை தவிர..

அவர் நடத்திய  பாடத்திற்கு அவன் குறிப்பு எழுதிக்கொண்டிருக்க,



Advertisement

“ஆர்யா..என்ன உட்கார்ந்திருக்க வா..”

என்று ஜெய் அழைத்தற்கு அசுவாரஸ்சியமாக “எங்க..” என்றான்.

“ம்ம் தொங்க..காலைல தானே சொன்னோம்..ப்ரஸ்ஸர் மீட் போலாம்னு..இப்போ எங்கேனு கேட்குற..”

Advertisement

என்றான் சற்றே எரிச்சலாக..

Advertisement

அதற்கும் அலட்டிக் கொள்ளாமல்,

“நீங்க போங்கடா..நான் வரலை..”

என்றவனை முறைத்த அனித் ஜெய்யிடம் திரும்பி, “என்னடா இவன்..” என்க அதற்கு ஜெய் மற்றவர்களிடம் திரும்பி,

Advertisement

“நீங்க போங்கடா..நாங்க இவனை இழுத்துட்டு வரோம்..” 

என்று அனுப்பி வைத்துவிட்டு ஆரியனிடம்,

“இப்ப உனக்கு என்ன பிரச்சினை..”

என்று கேட்க அவன் பதில் சொல்லாமல் எழுதிக்கொண்டே இருக்கவும் பேனாவை பிடுங்கி மூடி வைத்தவன் சொன்னால் தான் ஆச்சு என்பது போல் பார்க்க சின்ன மௌனத்திற்கு பின்,

“அங்க அந்தாளு இருப்பாரு..அதனால எனக்கு வரப்பிடிக்கலை..”

என்று வெறுப்புடன் கூற ஜெய்-அனித் இருவருக்குமே அவன் யாரை சொல்கிறான் என்று புரிந்தது.

“யாரு விஜய் சாரை சொல்றீயா..டேய் நீ இன்னுமா அந்த இன்சிடென்ட் மறக்கலை..”

என்று ஆயாசமாய் அனித் வினவ அவனை தொடர்ந்து ஜெய்,

“அவர் நம்ம காலேஜ் டீன்.அவங்க எல்லாம் அப்படி தான் இருப்பாங்க..எத்தனை ஸ்டாஃபை பார்த்திருப்போம்.. எவ்வளவு பிரச்சனை வந்திருக்கு..பத்தோட பதினொன்னா விட்டு தள்ளாம அதையே மனசுல வச்சிருக்கியா..”

என்று கேட்டதற்கு ஆரியன்,

“அதெல்லாம் வேற..இது வேறடா..என்னை அவர் இன்செல்ட் பண்ணின விதம்.. கண்டிப்பா மறக்க மாட்டேன்.திமிரு புடிச்சவன்..பணத்திமிர்..நான் பெரிய இவன்குற ஆணவம்..அவனை பார்த்தாலே எனக்கு இரிட்டெட் ஆகுது.இதுல அங்க போனால் அவரை தலையில தூக்கிவச்சிட்டு பேசுவானுங்க.. அதெல்லாம் கேட்க என்னால முடியாது..”

என்று திட்டவட்டமாய் மறுத்தவனை என்ன சொல்வது என்று தெரியாமல் இருவரும் பார்த்தனர்.இந்த பாடவேளை விரிவுரையாளர் வந்துவிட்டால் பிறகு இவர்களாலும் செல்ல முடியாது.இருவருமே எதுவும் பேசாமல் வந்து தங்கள் இடத்தில் அமர்ந்துவிட,

“நீங்க போங்கடா…”

என்று ஆரியன் கூறவும் ” அதான் வரலைனு சொல்லிட்டேல..மூடிட்டு உட்கார்..” என்று கடுப்படித்துவிட்டு ஜெய் திரும்பிக் கொள்ள அனித் வாயே திறக்கவில்லை.இருவரும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதை காண சகிக்காமல்,

“சரி வந்து தொலைங்கடா..இம்சைங்க…”

என்று முணுமுணுத்தபடி எழும்ப சட்டென்று முகமலர்ந்தது மற்றவர்களுக்கு..

“வா..வா..”

என்று அவசரமாய் எழுந்து வகுப்பறையில் இருந்து வெளியேறி படிக்கட்டில் இறங்கும் போது,

“டேய்…எங்கடா போறீங்க..”

என்று குரல் கேட்கவும் சிலையாய்  நின்றவர்கள் ஸ்லோ மோஷனில் திரும்ப அந்த பாடவேளை விரிவுரையாளர் இவர்களை சந்தேகமாய் பார்த்தபடி நின்றார்.

மற்றவர்களை காட்டிலும் இவர் கொஞ்சம் கெடுபிடி.மாட்டினால் வைத்து செய்திடுவார்.எனவே

மாட்டிக்கொண்ட பதற்றத்தில் திருதிருவென விழித்த ஜெய் பக்கத்தில் இருந்த அனித்தின் வலாவில் குத்தி,

“எதாவது சமாளி பக்கி..”

என்று முணுமுணுக்க அவனோ,

“அது சார்..வந்து சார்..கிளாஸுக்கு..நோட்டுக்கு..”

என்று உளறிக்கொட்ட,

“பிரின்ஸிபால் கூப்பிட்டு இருந்தாங்க சார்..”

என்றான் ஆரியன் பட்டென்று..மற்ற இருவருமும் மண்டையை ஆம் என்று உருட்ட, 

“எதுக்கு…”

என்றார் இன்னும் சந்தேகமாய்..

“தெரியலை சார்..உடனே வர சொன்னதா மட்டும் தான் சொன்னாங்க..”

என்று தயங்காமல் நிதானமாய் ஆரியன் சொல்ல யோசனையோடு,

“எதாவது வம்ப இழுந்துட்டு பிரின்ஸிபால் பின்னாடி அலையிறதே உங்களுக்கு பொழப்பா போச்சு..சரி போயிட்டு சீக்கிரம் வாங்க..”

என்று அவர்கூறவும் மண்டையை மண்டையை ஆட்டிவிட்டு முதல்வர் அறை இருக்கும் திசையில் திரும்ப மீண்டும் அவரே,

“டேய்..அவர் ஆடிட்டோரியத்திற்கு இப்போ தான் போனார்.அங்க இங்க சுத்தாமல்…அங்கே போய் பாருங்க…”

என்று கட்டளையாய் கூறவும் மூவரின் இதழும் சிரிப்பில் மலரத்துடிக்க அதை அடக்கிக்கொண்டு,

“அப்டிங்களா சார்..ஓகே சார்..தேங்க்யூ சார்…”

என்று பவ்யமாய் கூறி அங்கிருந்து நகர்ந்தவர்கள் மின்னல் வேகத்தில் கலையரங்கத்தில் ஆஜராகி தங்கள் குழுவோடு கலந்து கொண்டு,

“அநியாயத்திற்கு நல்ல மனஷனா இருக்கார்ய்யா..”

என்று  சிலாகித்து சிரித்தபடி இருக்கையில் அமர்ந்தனர்.

இன்னும் நிகழ்ச்சி தொடங்கவில்லை.மாணவ-மாணவிகள் அப்பொழுது தான் கும்பல் கும்பலாய் கலையரங்கத்தில் கூடினர்.

அவ்விடம் முழுதும் அழகாய் அலங்கரிக்கப்பட்டு  வண்ணமயமாய் இருந்தது. மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் சில வாசகங்களை தாங்கிய அட்டைகள் ஆங்காங்கே தொங்க விடப்பட்டிருக்க ஒவ்வொன்றையும் படித்தபடி வந்த ஆரியன் ‘ரொம்ப மெனக்கெட்டிருக்கானுங்க..’ என்று எண்ணிக் கொண்டான்.அப்பொழுது அருகில் அமர்ந்திருந்த அனித்,

“அங்க பாரு மண்ட கசாயத்த..ப்பா கொடுக்குற அலப்பறை தாங்கலல..”

என்று அங்கே பம்பரமாய் சுற்றி ஒவ்வொருவருக்கும் இன்ஸ்ரக்ஷன் சொல்லிக் கொண்டிருந்த மனோஜை சுட்டிக்காட்டினான்.எம்.காம் இரண்டாம் ஆண்டு மாணவன்.இவர்களின் எதிர்கட்சி தலைவன்.இவர்களுக்குள் பிரச்சனை தொடங்கியது ஆரியனின் முதலாம் ஆண்டில் தான்.

கே.வி.எஸ் கல்லூரி படிப்பில் மட்டும் அல்ல விளையாட்டிலும் தலை சிறந்து விளங்கியது. மாநில அளவிலும் தேசிய அளவிலும் புதிய ரெக்கார்ட்களை சாதித்த மாணவ-மாணவிகளையும் உருவாக்கிய பெருமையும் உண்டு.

கல்லூரி அளவில் அது பெருமை எனினும் உள்ளே மாணவர்களுக்குள் ஒரு புகைச்சலும் காலங்காலமாய் வந்தது.கே.வி.எஸ் கல்லூரியில் விளையாட்டு துறையில் இதுவரை ஆர்ட்ஸ் தான் முதலிடத்தை வசப்படுத்தி வைத்திருந்தது.அதை குறித்த கர்வமும் அம்மாணவர்களுக்கு எப்பொழுதுமே உண்டு.

‘ஸ்போர்ட்ஸில் கிங் நாங்க தான்..’ என்ற அவர்கள் கர்வத்தை முறியடிக்கவே வந்தவன் போல் ஆரியன், தான் கல்லூரியில் சேர்ந்த முதலாண்டிலே தடகளப்போட்டியில் இதுவரை உள்ள ரெக்கார்ட்களை எல்லாம் தகர்த்தெறிந்து வெற்றியை தன்வசப்படுத்தினான்.ஒருமுறை இருமுறையல்ல ஒவ்வொரு முறையும்.மனோஜூம் தடகளபோட்டியில் சிறந்தவன் தான் எனினும் அவனால் ஆரியனை தோற்கடிக்க இயலவில்லை.

தனது திறமையில் அபார நம்பிக்கை கொண்ட மனோஜிற்கு இந்த தோல்வி பெரிய அடியாக இருக்க ஆரியன் மீது ஓர் வெறுப்பு உருவானது.

ஆரியன் இந்த எண்ணமெல்லாம் இன்றி நட்பாய் மனோஜுடன் பழக முன்வந்தபோதும் மனோஜ் அதற்கு இடமளிக்கவில்லை.

தனது செல்லவநிலையையும் ஆரியனின் நடுத்தரவர்க்க நிலையையும் ஒப்பிட்டு ‘நீயெல்லாம் எனக்கு சமமா’ என்று இழிவாய் நடத்த ஆரியனும் சிலிர்த்தெழுந்தான்.

பயிர்ச்சியாளர் அவர்கள் மோதலை புரிந்து கொண்டு “இரண்டு பேரும் வெற்றியாளர்கள் தான்..வென்றது நம் கல்லூரி தான்..நமக்குள் பிரிவினை இருக்க கூடாது..ஸ்போர்டிவ்வா இருங்க..”

என்று அறிவுரை மழைகளை பொழிந்தாலும் அதை கேட்பார் இல்லை.

அதில் தொடங்கிய போட்டி ஆரியன் கேங் – மனோஜ் கேங் இருவருக்கும் அனைத்திலுமும் தொடர்ந்தது. நீயா…? நானா..?என்று ஒவ்வொரு விஷயத்திலும் போட்டியிடுவது இந்த நான்கு ஆண்டில் வழக்கமானது.

திடீரென கூட்டத்தில் சலசலப்பு அடங்கி மொத்த ஆடிட்டோரியத்தின் கவனமும் அப்பொழுது வந்த டீன்,பிரின்ஸிபால்,வய்ஸ் பிரின்ஸிபால் இன்னும் சில முக்கிய பொறுப்பில் வகிக்கும் விரிவுரையாளர்கள் அவர்களிடம் திரும்பியது.

இன்னும் சொல்ல வேண்டும் எனில் அவர்களுள் நடுநாயகமாய் ஆகாய நீலத்தில்  உடையணிந்து ஆணழகனாய் அருகில் அந்த ஐம்பது வயது மதிக்கதக்க தலைமை செயளாலர் மாரியாதையுடன் ஏதோ மும்முரமாய் பேசி வருவதை ஓர் சிறுத்தலையசைப்போடு கேட்டபடி வந்த விஜய்வரதனிடம் தான் இருந்தது எனலாம்.

படிப்பு முடிந்து நேராக நிர்வாக பொறுப்பை கையில் எடுத்தாலும் அவன் வயது இளைஞர்களுக்கு உண்டான குறுப்போ விளையாட்டோ அவனிடம் இருக்காது.மாறாக ஒரு ஆளுமையும் கண்டிப்பும் ஒட்டிப்பிறந்த உடன்பிறப்புபோல் கூடவே இருக்கும்.தான் நினைத்தை செய்து முடிப்பவன்.சுற்றியுள்ளவர்கள் ஆலோசனைகளை எடுத்துக்கொண்டாலும் முடிவு அவன் கையில் மட்டும் தான் இருக்கும்.அதை மாற்றும் வலிமை அவனது தந்தைக்குகூட கிடையாது.

அவனைவிட பெரியர்களுக்கும் சரி அவனிடம் பேசும்போது.. ஏன் பார்த்தாலே ஒரு மரியாதை தானே வந்து ஒட்டிக்கொள்ளும்.அதே சமயம் ஆளுமையும் அழகும் நிறைந்த விஜய் பதின்வயதில் சுற்றும் மாணவிகளின் கனவு நாயகனாவும் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருந்தான்.

ஆரியனும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஆனால் ஒருவித வெறுப்புடன்.

அவர்களை வரவேற்று அவர்களுக்கான இடத்தில் அமர்ந்ததும் நிகழ்ச்சி தொடங்கியது.

மேடையில் கோர்ட் ஷூட்டில் இருந்த இரண்டு இளைஞர்களுள் ஒருவன்  மைக்கில்,

“ஹலோ எவ்ரிவோன்…

அ வாம் வெல்கம் டூ ஆவர் ரெஸ்பெக்ட்ட் டீன்,பிரின்ஸிபால்,வய்ஸ் பிரின்ஸிபால்,புரோஃபஸர்ஸ் லெக்சரர்ஸ்,மை கோ ஸ்டூடென்ஸ் அன்ட் ஆல் த ஃபிரஸ் நியூ ஃபேஸஸ்..”

என்று வரவேற்று பேச தொடங்க தன் இருக்கையில் சாய்ந்து அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஆரியனின் கவனத்தை பின்னால் ஒலித்த ஒரு பெண் குரல் ஈர்த்தது.

“யாஹூஹூ….எனக்கு பிடிச்ச ப்ளூ ஷர்டில் விஜய் சர் வந்திருக்கார்…ப்பா செம்மல..”

என்று அக்குரல் கொஞ்ச அதைக்கேட்ட ஆரியனிற்கு தலையில் அடித்துக் கொள்ளவேண்டும் போல் இருந்தது.

‘இதே பொழப்பா சில டிக்கெட் திரியும் போல..’

என்று எண்ணிக் கொண்டவனின் காதுகள் அத்தனை ஸ்பிக்கர்களில் எதிரொலித்த ஆங்கரின் பேச்சில் இல்லாமல் தனக்கு பின்னால் மெல்லிய குரலில் நடந்த சம்பாஷணையிலே கவனமாய் இருந்தது.

‘ஏய்..மச்சி..மச்சி பாரேன்.. எவ்வளவு ஸ்டைலா உட்கார்ந்து இருக்கார்னு..’

என்று அதே குரல் மீண்டும் ஒலிக்க அதற்கு மற்றொருவள்,

‘எங்கடி…அவர் சாதாரணமா தானே இருக்கார்..’

என்று சொல்ல அவளோ,

‘அவர் சாதாரணமா உட்கார்ந்திருந்தாலும் அது தனி ஸ்டயில் தான்..’

என்னும் போது 

‘ஸ்ஸ்பா.. முடியலை..’ என்று முகத்தை சுழித்தான் ஆரியன்.

அதற்குள் வரவேற்புரைகளை முடித்த தொகுப்பாளன் ஒரு ஸ்பீச் கொடுக்குமாறு  விஜய்யை மேடைக்கு அழைக்கவும் இதை எதிர்பார்க்காததால் விஜய் மறுத்துக் கூற முனையும்போதே மொத்த கூட்டமும் கைத்தட்டி ஆர்பரிக்க தொடங்க வேறு வழியின்றி எழுந்தான்.

அதுவும் அவன் எழும்போதே பின்னணியில்,

“ஊருக்கண்ணு உறவுக்கண்ணு

உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு

சின்ன மகராசன் வரான்

மீச முறுக்கு

எங்க மண்ணு தங்க மண்ணு

உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்

ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்

எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்

கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்…”

என்று பாடல் ஒலிப்பெருக்கியில் அதிர மாணவ-மாணவிகளின் ஆர்பாட்டம் இன்னும் கோலாகலமாய் ஆனது.

அதிலும் ஆரியன் பின்னால் இருந்த பெண்ணோ அவனை பேச அழைக்கவுமே,

“வாவ்…செம்ம….செம்ம…விஜய் சார்..விஜய் சார்…”

என்று குதூகலமாய் கத்த அருகில் இருந்தவளோ “அய்யோ..லூசு சக்தி..கத்தி மானத்தை வாங்காதேடி..”

என்று அவளை இழுக்க அவளோ அதற்கெல்லாம் மசியவில்லை.

“முடியாது போ..என் டார்லூ பேச போராரு..என்னை கையக்கட்டி நல்லபிள்ளை வேஷம் போட சொல்றீயா..போடி…”

என்றவள் மீண்டும் கத்த அப்பொழுது ஒலிப்பெருக்கியில் ஆளபோறான் ஆரம்பிக்கவும் 

“ஹோஓஓஓஓ….”

என்று அவளது கூச்சலும் ஆர்ப்பாட்டமும் அதிகரித்தது.மற்றவர்களுக்கு 

கூட்டத்தில் அவள் தனியாக தெரியவில்லை எனினும் முதலில் இருந்தே அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஆரியனிற்கு அவளது கூச்சல் எரிச்சலை கிளப்பியது.

‘இப்போ எதுக்கு இந்த ஆட்டம் போடுறா..’

என்று எண்ணியபடி தலையை மட்டும் திரும்பி பார்த்தான்.

கண்களில் ஆர்வமும் சந்தோஷமும் மின்ன கைகளை வாயருக்கே குவித்து கத்தியபடி இரகளை செய்யும் சக்தியை ஒரு நிமிடம் பார்த்தவன் தலையை உலுக்கி திரும்பிக் கொண்டான்.

அதற்குள் மேடை ஏறியிருந்த விஜய்,

“குட் ஈவினிங் எவ்ரிவொன்..

எல்லாரும் நல்ல செலிப்ரேட்டிங் மூடில் இருப்பது புரியுது..பட் இவ்வளவு சவுன்ட் வேணாம்.. கொஞ்சம் குறைச்சுக்கோங்க..”

என்று கண்களை சுருக்கி அவன் சொல்லும்போது இதழ்களில் புன்னகை அரும்ப,

‘சந்து..பாரு..பாரு..எங்க தல சிரிக்கிறார் பாரு..’

என்று ஒரு படத்தில் பார்த்திபன் விவேக்கிடம் ‘சார்..ரம்பா..சார்…’ என்று சொன்னதே சொல்வதுபோல் சக்தி சந்தியாவை நச்சரிக்க தலையில் கைவைத்து அலுத்துக் கொண்டது சந்தியா மட்டும் அல்ல.. ஆரியனும் தான்..

“ஃபர்ஸ்ட்லீ…டுடே ஃபர்ஸ்ஸர்ஸ் டே..காலேஜ் லைஃப் பத்தி பல கனவுகள்.. பல ஆசைகளை தாங்கி இங்க அடியெடுத்து வைச்சிருக்கும் ஃபர்ஸ் இயர் ஸ்டூடென்ஸை நம்ம கே.வி.எஸ் பேமிலி சார்பா வரவேற்கிறேன்..கண்டிப்பா உங்க கனவுகளையும் லட்சியங்களையும் அடைய இக்கல்லூரி ஒரு தூண்டுகோலவும் ஏணியாவும் இருக்கும் என்பதை நான் ஷூயரா சொல்லுவேன்..பீஸைட்ஸ் காலேஜ் லைஃப்லில் என்ஜாய்மென்டும் அவசியம் தான்..ஏன்னா நம்ம லைஃப்பில் எவ்வளவு தூரம் போனாலும் நமக்கு எப்பவும் செரீஷ்ஷிங் மெமரீஸ்ஸா இருப்பது நம்முடைய காலேஜ் கலாட்டாக்கள் தான்..

ஸோ ஸ்டெடீஸ் + ஃபன் ரெண்டுமே பேலன்ஸ்டா இருந்தால் உங்க லைஃப் அட்டகாசம் தான்..ஓகே இத்தோட ஒரு சின்ன கதை சொல்லி முடிச்சிக்கிறேன்..இந்த கதை எங்கோ படித்தது.. இப்போ நியாபகம் வரவும் சொல்றேன்..போரடிச்சால் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க..”

“அய்யோ சார்..நீங்க பேசி போரடிக்குமா..?நீங்க பேசினால் நான் நாள் புராவும் உட்கார்ந்து கேட்பேன்…”

இது வேறு யாராக இருக்க முடியும் அகெய்ன் சக்தியே..!!

தொடர்ந்து விஜய்,

“ஒரு ஆசிரமத்தில் ஒரு மாமுனிவர் இருந்தாராம்..முக்காலத்தையும் கற்றுத் தேர்ந்த வல்லவராம்..அந்த ஊர்மக்கள் அவரை ஆஹா ஓஹோனு புகழ்வதை பார்த்து உங்களை மாதிரி ஒரு பையனுக்கு அவரோட அறிவை டெஸ்ட் பண்ணி பார்க்க தோனுச்சாம்.ஸோ அவரை சந்திக்க போன அந்த பையன் தனக்கு பின்னால் தன் கையில் ஒரு பறவையை மறைச்சு வச்சிக்கிட்டு அவருட்ட,

“ஊரில் எல்லாரும் உங்களை ரொம்ப பெரிய ஞானினு சொல்றாங்களே..என் கையில் ஒரு பறவை வச்சிருக்கேன்..அது உயிரோட இருக்கா..இல்லை செத்ததானு சொல்லுங்கனு..” கேட்டானாம் அதுக்கு அந்த மாமுனிவர் புன்னகையோடு,

“அது உன் கையில் தான் இருக்கு..நான் இறந்திடுச்சுனு சொன்னால் என்னை தப்புனு நிரூபிக்க அதை உயிரோடு காட்டுவ..அப்படி நான் உயிரோடு இருக்குனு சொன்னால் அதை கொன்னுட்டு இறந்துடுச்சுனு என்னிடம் காட்டுவ..”

அப்படினு அவர் சொல்லவும் தான் நினைச்சதை அவர் சொல்லிட்டாரே என்று வியந்துப்போனான் அந்த பையன்.

இந்த கதையில் வர பறவை போல தான் நம்ம லைஃபும்..அதை உயிர்ப்போடு வச்சிருப்பதும் வச்சிருக்காததும் நம்ம கையில் தான் இருக்கு…”

என்று கூறி முடித்தவன் “தேங்க் யூ..”

என்று விடைப்பெற அரங்கம் முழுவதும் கைத்தட்டலில் நிறைந்தது.

விஜய் இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் ஆரியனும் மற்றவர்களை போல் இருந்திருப்பானோ என்னவோ..?பிடிக்காத ஒருவரை அனைவரும் தூக்கி வைத்து ஆடுவது அவனுக்கு அதீத எரிச்சலை கொடுக்க அதிலும் அவனுக்கு பின்னால் உள்ள பெண்ணின் வழிசலில் இன்னும் அதிகரித்தது.

விஜய்யை தொடர்ந்து பிரின்ஸிபால் ஒருசில வார்த்தைகள் பேச பின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது.

அப்பொழுது விஜயிக்கு ஓர் அழைப்பு வர அதையெடுத்து பேசியவன் அருகில் இருந்த செயலாளரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப,

“அய்யோ..சந்து..அங்க பாருடீ..விஜய் சார்…போராரு..”

என்று சக்தி பதற தாங்க முடியாத கடுப்பில் திரும்பி அவளை முறைத்தான் ஆரியன்.ஆனால் அவளோ அவனையெல்லாம் அறவே கவனிக்கவில்லை.

“எதாவது வேலை வந்திருக்கும்..இதுப்பெரிய விஷயமா..”

என்று சந்தியா சொல்ல,

“போடி..நான் அவர் முன்னாடி பர்ஃபாமன்ஸ் பண்ண எவ்வளவு ஆவலா இருந்தேன் தெரியுமா..ம்ம்ஹூம்…ஏன்டி எனக்கு மட்டும் இப்படி நடக்குது..”

என்று விட்டால் அழுதுவிடுவது போல் அவள் உண்மையிலே சிணுங்க அதே சமயம் அங்கே வந்த ஒரு பெண்,

“ஹேய் சக்தி..அடுத்து உன் ஃப்லூட் பர்ஃபாமன்ஸ் தான்..வந்து முன்னாடி நில்லுவா…”

என்று அழைக்க கொலைவெறியோடு,

‘வீணாப்போனவ.. கொஞ்சம் முந்தியே என்னை கூப்பிடிருக்க கூடாது..’

என்று முணுமுணுத்தவள் அங்கிருந்து வெளியேறும் விஜய்யை பார்த்தபடி எழும்ப அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆரியனிற்கு கனநேரத்தில் ஒரு யோசனை தோன்ற ஒரு விஷம புன்னகையோடு அதை செயல்படுத்த முனைந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!