Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 32.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி.  இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அப்பொழுது  அவர் முதலில் வெண்மதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு  பின் திரும்பினார் .

அதேநேரம் அந்த இரு திருடர்கள்,  பைக்கில் உட்கார்ந்தபடியே லலிதாவை நெருங்கி  வந்தனர்.  ஓட்டுனர் இருக்கையில் உட்கார்ந்து இருந்தவன் வண்டியை லாவகமாக ஓட்ட பின்னாடி உட்கார்ந்து இருந்தவன்  அவர் கழுத்தில் இருக்கும் சங்கிலியை பறிப்பதற்காக கையை நீட்டினான் .

 



Advertisement

லலிதா திரும்பவும்  பைக்கில் அமர்ந்திருந்த முகமூடி திருடன் அவர் கழுத்திலிருந்த சங்கிலியை பறிப்பதற்காக கை நீட்டவும் சரியாக இருக்க, அந்த நொடியில் அவர் திரும்புவார் என்று எதிர்பார்த்திராத அவன்  தடுமாறினான்.

 

திரும்பிய லலிதா,  2 முகமூடி திருடன்களையும்  பார்த்து முதலில் திகைத்தாலும் சூழ்நிலையை புரிந்துகொண்டு கையிலிருந்த அர்ச்சனை  கூடையை  பைக்கை ஓட்டி கொண்டு இருந்தவன் மீது வேகமாக தூக்கி  எறிந்தார்.  அந்தக் கூடையில் இருந்த விபூதி குங்குமம் சில பூக்கள் அவன் கண்களில் பட அவன் வண்டியை தாறுமாறாக ஓட்டி கீழே விழுந்தான். விழுந்தவன் சுதாரித்துக்கொண்டு எழுந்து கண்களையும் முகத்தையும் துடைத்தான்.  அப்பொழுது அவன் அணிந்திருந்த முகமூடி கழண்டு விழுந்தது.  அவனது முகத்தை பெரியம்மா  பார்த்துவிட்டார்.  இதனை கவனித்த அவன் திரும்பவும் முகமூடியை எடுத்து அணிந்து கொண்டே

Advertisement

“டேய் அந்த பொம்பளை என் முகத்தை பாத்துட்டா.  அவளை போட்டு தள்ளனும்.  இல்லன்னா,   நம்மள போலீஸ்ல காட்டிக்கொடுத்துடும்.”  என்றான் ஆவேசமாக.  அப்போது இன்னொருவன்  வெண்மதியை பார்த்து

Advertisement

“ஏதோ ஒரு குட்டி வண்டியில நம்மள பாத்து வந்துட்டு இருக்கு.” என்றான்

“வரட்டும் வரட்டும். அதையும்  சேர்த்து போட்டு தள்ளுவோம்.” என்று அலட்சியமாக கூறினான் இன்னொருவன்.

இருவரும் லலிதாவை நோக்கி கத்தியோடு நெருங்கி கொண்டிருந்தனர்.

Advertisement

லலிதா நடுநடுங்கி கொண்டு

“என்னை எதுவும் பண்ணிடாதீங்க. விட்டுடுங்க நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன்.” என்று கையெடுத்து கும்பிட்டபடி

கேட்டுக்கொண்டிருக்க இன்னொருவன் அவரது பேச்சை காதில் வாங்காமல் அவரை குத்துவதற்காக கத்தியை ஓங்கினான்.

அந்த நொடி வெண்மதி  அவர்களை அடைந்து விட்டிருந்தாள். ஓட்டி வந்து இருந்த வண்டியிலிருந்து இறங்கி வண்டியை கத்தியை ஓங்கி கொண்டிருந்தவன்  மீது விட்டாள். அவன் தடுமாறி கீழே விழுந்தான். அவன் மீது வண்டி விழுந்தது. வெண்மதியின் இந்த செயலால் ஆவேசமான இன்னொருவன், அவள் மீது கத்தியை ஓங்கினான். அப்பொழுது வெண்மதி தன் கையில் வைத்திருந்த பெப்பர் ஸ்பிரே பாட்டிலை எடுத்து அவன் முகத்தைப் பார்த்து அடித்தாள். அவன் எரிச்சல் தாங்காமல் “ஆ ஆ” என்று கத்தியபடி கத்தியை கீழே போட்டு விட்டு கண்களை கசக்கினான்.

அதே நேரத்தில் கீழே விழுந்த திருடன் சமாளித்துக் கொண்டு எழுந்து   கீழே கிடந்த கத்தியை எடுத்து  வெண்மதியின் தோளில் ஒரு வெட்டு வெட்டினான். அவள் கஞ்சி போட்டு அணிந்திருந்த காட்டன் சல்வாரினால்  அவளுக்கு பெரிதாக காயம் படவில்லை என்றாலும் அவளது சல்வார் தோளில் கிழிந்து  அவள்மீது ஒரு கீறல் விழுந்தது.

இதை எதிர்பார்த்திராத வெண்மதி “ஆ ஆ” என்று கத்தியபடி தன் கையிலிருந்த ஸ்ப்ரே பாட்டிலை நழுவவிட்டாள். மேலும் அவன்,

வெண்மதியை ஓங்கி ஒரு அறை விட்டான்.  அதில் அவள் நிலை தடுமாறி கீழே விழுந்தாள்.

விழுந்தவளை பார்த்து வெறித்தபடி அவளை நோக்கி குனிந்தான்.  அதே நேரம்  இன்னொருவனும்  எரிந்த கண்களை சமாளித்துக் கொண்டு அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தான்.

இதனை கவனித்த லலிதா

‘இவளுக்கு நாம் எவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கிறோம்.  அதையெல்லாம் மறந்து ஆபத்து என்று தெரிந்தும் என்னை காப்பாற்றுவதற்காக இங்கு வந்து இவர்களிடம் சிக்கியிருக்கிறாள். இவளையா நாம கஷ்டப்படுத்தினோம்?’ என்று ஒரு கணம் மனம் நொந்தார். பின்பு ‘இவளுக்கு இனிமேலும் எந்த கஷ்டமும் வர விட க்கூடாது’ என்று நினைத்தவர்

 

இருவரின் முதுகிலும் தன்னால் முயன்ற அளவு குத்தினார்.

“அவளை விடுங்கடா.” என்று கத்தியபடி குத்தினார்.  ஆனால் அந்த குத்து அந்த இருவருக்கும் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.  லலிதாவை ஒரு கையால் தடுத்து அந்தப்பக்கம் தள்ளினான் ஒருவன்.

இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்ட வெண்மதி இருகைகளிலும் தரையில் கிடந்த மண்ணினை எடுத்து இருவரின் முகத்திலும் அடித்தாள். இதை சிறிதும் எதிர்பார்க்காத இருவரும் கண்களின் எரிச்சல் தாங்காமல் கையில் இருந்த கத்தியை போட்டுவிட்டு நிலைதடுமாற.

 

அதே நேரம் வெண்மதி  அந்த இரு கத்திகளையும் கையில் எடுத்து அவள் கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருந்த அவர்கள் இருவரின் கால்களிலும் அவளது முழு பலத்தையும் திரட்டி வெட்டு வெட்டினாள்.

 

கால்களில் விழுந்த வெட்டுகளும் கண்களின் எரிச்சலும் தாங்கமுடியாமல் நிலைதடுமாறி கீழே இருந்த வெண்மதி மேலே விழு போக அவர்களிடம் இருந்து லாவகமாக நகர்ந்த வெண்மதி தன் கையிலிருந்த  கத்தியை  தவறவிட்டாள். இருவரும் கீழே விழுந்தனர்.

வெண்மதி எழுந்து  “வாங்க பெரியம்மா போய்டலாம்.” என்று கூறியபடி  டிவிஎஸ் 50 இடம் சென்றாள்.  ஆனால் அந்த வண்டியில் சாவி இல்லை. வண்டி விழுந்த வேகத்தில் சாவி காணாமல் போயிருந்தது.

‘அய்யோ இப்போ எப்படி இவங்க கிட்ட இருந்து தப்பிக்கிறது?’ என்று முதலில் பதறினாள்.  பிறகு சமாளித்துக்கொண்டு  லலிதாவிடம் சென்றாள்.

“பெரியம்மா வண்டி சாவியை காணோம்.  நாம ஓடி தான் போகணும். வாங்க ஓடி போகலாம்.” என்று லலிதாவின் கையை பிடித்து  இழுத்தாள்.

“என்னால ஓட முடியாது மா. எனக்கு கால் ரொம்ப வலிக்குது.” என்று ஒரு பக்கமாக கால்களை பிடித்தவாறு கூறினார் .

ஏற்கனவே இருந்த மூட்டுவலியும் இப்போது அந்த திருடன் தள்ளி விட்டதால் ஏற்பட்ட கால் வலியும் சேர்ந்து  கொள்ள அவருக்கு வேகமாக நடப்பதே சிரமமாக இருந்தது.

“ஏய் எங்க கிட்டயா விளையாடற? உன்னை என்ன பண்றேன் பாரு.” என்று  ஆவேசமாக கூறியபடி   கண்களை துடைத்துக் கொண்டு வெட்டு விழுந்த காலையும் சமாளித்துக்கொண்டு எழுந்திருக்க முயன்று கொண்டிருந்தான் ஒருவன். இதனை கவனித்த வெண்மதி

இதற்கு மேலும் இங்கே இருப்பது இருவருக்குமே ஆபத்து. இன்னும் சற்று நேரத்தில் இந்த இரு திருடர்களும் சுதாரித்துக் கொண்டு எழுந்து அவர்களை திரும்பவும் தாக்க வருவார்கள்  என்று நினைத்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

 

பக்கத்தில் ஒரு பெரிய பாழடைந்த வீடு தெரிந்தது.  கைப்பையில் இருந்து கீழே விழுந்து கிடந்த செல்போனை எடுத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தவளாய்

“பெரியம்மா வாங்க.  நாம இந்த வீட்டுக்குள்ள போகலாம்.” என்று ரகசியமாக அவரிடம் கூறி அவரை  கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.

 

இதனைப் பார்த்த ஒரு திருடன்

“டேய்  அவளுங்க ரெண்டு பேரும் அந்த வீட்டுக்குள்ள போய் இருக்காளுங்க.  எழுந்து வாடா போலாம்.”  என்றான் இன்னொருவனிடம்.

இருவரும் சமாளித்துக்கொண்டு எழுந்து அவர்களது இடுப்பில் வைத்திருந்த  வேறு கத்தியை எடுத்துக்கொண்டு நின்றனர்.

காலில் வெட்டுப்பட்ட காயம் இருந்ததால்  தாங்கி தாங்கி  இருவரும் நடந்து வந்தனர்.

 

அதற்குள்  லலிதாவும் வெண்மதியும் அந்த பெரிய  பாழடைந்த வீட்டுக்குள் நுழைந்து இருந்தனர்.

 

 

“என்னால முடியல கால் வலிக்குது.”என்று கூறியபடி மெதுவாகவே நடந்து வந்து கொண்டிருந்தார் லலிதா.

வெண்மதி “முடிஞ்சவரைக்கும் வேகமா வாங்க” என்று அவரை அவசர படுத்தியபடி செல்போனை எடுத்து நடந்துகொண்டே கோவிந்தனுக்கு போன் செய்தாள்.  அவர் போனை எடுக்கவில்லை.

‘கோயிலில் இருந்து வீடு வரும் வழியில் இருக்கும் பாழடைந்த வீட்டில் மாட்டி இருக்கிறோம் வாங்க’ என்று குறுஞ்செய்தி வசந்த்திற்கும் கோவிந்தனுக்கும் கார்த்திகேயனுக்கும் அனுப்பினாள் . காவல் நிலையத்திற்கு போன் பேசலாம் என்று நினைத்த போது, காலில் ஏதோ பட தடுமாறியவள் சமாளிப்பதற்காக சுவரை பிடிக்க கையிலிருந்த கைபேசி எங்கோ இருட்டில் விழுந்தது. அதைத் தேடிக் கொண்டு அங்கேயே இருக்க முடியாது என்பதால் அதை அங்கேயே விட்டுவிட்டு இருவரும் நடந்தனர்.

அப்போது பெரியம்மா

“வெண்மதி நீ வாழவேண்டிய வயசு பொண்ணு . இவனுங்க பார்வை சரி கிடையாது.

நான் வாழ்ந்து முடித்தவ.  எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.  நீ ஓடி போயிடு. என்னால ஓடவும் முடியல. நீ ஓடிப் போய்டு.  நான் முடிஞ்சா வர்றேன்.  அப்படி இல்லன்னா கடவுள் இஷ்டபடி நடக்கட்டும்.”   என்றார் வெண்மதி மீது அக்கறையாக.

வெண்மதிக்கு ஆச்சரியமாக இருந்தது.

“பெரியம்மா” என்று குரல் தழுதழுக்க கூப்பிட்டாள். அந்த வீட்டின் வாசல் வழியாக நிலவின் வெளிச்சம் மட்டுமே ஓரளவு இருக்க,  வெண்மதியின் முகத்தை பார்க்க முடியாவிட்டாலும் அவள் குரலைக் கேட்ட அவள் மனதை புரிந்து கொண்ட லலிதா

“என்னமா எப்பவுமே நம்மள திட்டிகிட்டு, வேலை வாங்கிக்கொண்டு, குறை சொல்லிக்கிட்டு இருக்குற பெரியம்மாவா இப்படி பேசறதுன்னு யோசிக்கிறாயா? அந்த வீடு வேணும்னு பேராசை பட்டேன் தான். உங்களை அதிகாரம் பண்ண  நினைச்சேன் தான்.  அதுக்காக எப்பவுமே உங்களை நான் அழிக்க நினைத்தது கிடையாது. இத எல்லாம் பேசுறதுக்கு இப்போ நமக்கு நேரம் கிடையாது. நீ  என்னை இங்கேயே விட்டுட்டு ஓடிப் போயிடு.” என்றார் பெரியம்மா.

 

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!