Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 15.2

அத்தியாயம் 15(2)

அன்று விடுமுறை தினம். நண்பர்களைப் பார்க்க கிளம்பிய ஜெய் படிகளில் இறங்கிகொண்டிருக்க, அப்பொழுது ஆராவுடைய குரல் கேட்கவும் எட்டி கீழே பார்க்க, அவள் தான் போனில் யாருடனே பேசிக்கொண்டு மேலே வந்து கொண்டிருந்தாள். இது தான் சந்தர்பம் என்று நினைத்த ஜெய், பின்னாடி திரும்பி பார்க்க, யாரும் வருவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. படிகளில் இறங்கி ஆரம்பப் படியில் நின்றுகொண்டு அவள் வருகைக்குக் காத்திருந்தான்.

போன் பேசிக் கொண்டே படிகளில் ஏறி திரும்பிய ஆரா, முதல் படியில் நின்று கொண்டிருந்த ஜெய் மேல் மோதினாள். ‘சாரி’ என்று சொல்ல நிமிர்ந்தவள் ஜெய்யை பார்த்து அதிர்ந்தாள். அவளைப் பார்த்ததும், ‘இத்தனை நாளா பேசாம, டிமிக்கி கொடுத்துட்டு இருக்க. இப்போ வசமா மாட்டிகிட்டியா.’ என்று உள்ளுக்குள் நினைத்தவன் அவளை முறைத்துக்கொண்டு நிற்க, தன்னையே முறைத்துக்கொண்டு நிற்கும் அவனின் விழிகளைப் பார்த்து ஒரு நொடி திடுகிட்டவள், அடுத்த நொடி தன்னைச் சரி செய்துகொண்டு, “நான் அப்புறம் பேசுறேன் டி.” என்று கூறிவிட்டுப் போனை வைத்தவள், ஜெய்யை சுற்றிக்கொண்டு மேலே ஏற முயசிக்க, அவள் பக்கம் நகர்ந்து நின்று அவளுக்கு வழி விடாமல் மறித்து நின்றான். சரி என்று மறுபக்கம் இவள் நகர, தன் கைகளைக் குறுக்கே நீட்டி அவள் போகவிடாமல் செய்தான். அவன் செயலில் கோபம் அடைந்தவள், பற்களைக் கடித்துக்கொண்டு, “வழிய விடுங்க.” என்று சொல்ல, அவனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. ‘இன்றைக்கு என்னிடம் பேசாமல் இங்கிருந்து போக முடியாது.’ என்று சொன்னது அவனது கழுகு பார்வை.

ஆனால் இதற்கெல்லாம் ஆரா அசரவில்லை. “உங்களைத் தான், வழிய விடுங்கன்னு சொன்னேன்.” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் சொல்ல, “எனக்குப் பதில் சொல்லிட்டு அப்புறம் வீட்டுக்குப் போகலாம். எப்படியும் வீட்டுக்குப் போகப் போய் ஒன்னும் செய்யப் போறதில்லை.” என்று இவன் வம்பிழுக்க, “உங்களுக்கு எந்தப் பதிலும் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை. நகருங்க அந்தப் பக்கம்.” என்று ஆரா சற்றே சத்தமாகச் சொல்ல, பதில் சொல்லாமல் அவளை நோக்கி முன்னேறினான் ஜெய்.



Advertisement

அதில் திடிக்கிட்டவள் பின்னே செல்ல, இரண்டடியில் சுவற்றில் மோதி நின்றாள். அவளை நெருங்கி நின்றவன், “எனக்கு நீ பதில் சொல்லணும்.” என்று மீண்டும் அதையே கேட்க, ஜெய் தன் அருகில் நிற்பது அவளுக்கு அவஸ்தையைக் கொடுக்க, “என்ன பதில் சொல்லணும். கேட்டு தொலைங்க.” என்று அவள் எரிச்சலுடன் சொன்னாள். “ஏன் இப்போலாம் என்கிட்டே சரியா பேசுறது இல்லை. எதுக்கு என்னை அவாயிட் பண்ற? என்ன ஆச்சு?!” என்ற அவனின் கேள்வியில், ‘மறுபடியும் மொதல்ல இருந்தா!’ என்று உள்ளுக்குள் நொந்தவள், “இங்க பாருங்க. நான் ஏற்கனவே சொல்லிட்டேன். நான் நார்மலா தான் இருக்கேன். நீங்களா எதையாவது கற்பனை செஞ்சுக்க வேண்டாம். இப்போ வழிய விடுங்க.” என்று அடிக்குரலில் சொல்ல, “கற்பனை செஞ்சுக்க நான் ஒன்னும் பைத்தியம் இல்லை. நல்லா தெளிவாதான் இருக்கேன். எனக்குச் சுயூரா தெரியும். நீ என்னை அவாயிட் பண்றன்னு. அண்ணன் கல்யாணத்தில இருந்து தான் இப்படி எல்லாம் நடந்துக்குற. அதுதான் ஏன்னு தெரியல. உண்மைய சொல்லு ஆரா, அன்னைக்கு என்ன ஆச்சு?” என்றவனின் கேள்வியில், ‘தன்னைக் கண்டுகொண்டான்’ என்று புரிந்து, ஒரு நொடி அவள் திடிக்கிட, அதையும் நோட் செய்துகொண்டான் ஜெய். இருந்தும் தன்னைச் சரி செய்துகொண்டவள், “எதையும் உங்ககிட்ட சொல்லனும்ன்னு அவசியம் இல்லை. மொதல்ல நீங்க யாரு சர் எனக்கு! எதுக்கு உங்ககிட்ட நான் சொல்லணும்?” என்று அவள் வார்த்தையை விட, அவளை ஒரு நொடி கூர்ந்து பார்த்தவன், “நான் சந்தேகப்பட்டது சரி. அன்னைக்கு என்னமோ நடந்து இருக்கு. எப்படிக் கேட்டாலும் நீ சொல்லமாட்ட. இப்போ நீ அதை என்கிட்டே மறைக்கலாம். இன்னைக்கு இல்லனாலும் ஒரு நாள் சொல்லுவ. சொல்ல வைப்பேன். ஏனா,..” என்று சொல்லி நிறுத்தியவன் அவள் முகத்துக்கு வெகு அருகில் சென்று, “நான் தான், உன் கழுத்தில தாலி கட்டபோற உன் மாமன். பெட்ரூம்குள்ள உன்கிட்ட அடிவாங்க போற உன் புருஷன்.” என்றவன் தான் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தவளின் கன்னத்தில் சட்டென்று இதழ் பதித்துவிட்டு, அடுத்த நொடி படிகளில் இறங்கி செண்டிருந்தான்.

ஜெய்யின் முதல் இதழ் ஸ்பரிசத்தில், அதிர்ச்சியில் உறைந்து ஆரா நின்றிருக்க, யாரும் இதைப் பார்க்கவில்லை என்று நினைத்துச் சென்றிருந்த ஜெய்க்குத் தெரியாது, அனைத்தையும் கெளதம் பார்த்துவிட்டான் என்று.

வெளியே சென்றுவிட்டு வரும்பொழுது ஒரு பொருள் வாங்கி வரும்படி சொல்ல ஜெய்யை தேடி வெளியே வந்த கெளதம், படிகளில் அவன் ஆராவிடம் பேசியதை எல்லாம் கேட்க நேர்ந்தது. தான் கண்ட காட்சியில் அதிர்ந்தவன், அப்படியே திரும்பி வீட்டுற்குள் சென்றுவிட்டான். அன்றொரு நாள், தேஜாவிற்கு உடம்பு முடியவில்லை என்று கிளம்பியபொழுது ஆராவை ஜெய் பேர் சொல்லி உரிமையாகக் கூப்பிட்டதை வைத்து இவர்களுக்குள் எதுவும் இருக்குமோ என்று ஒரு சதவீதற்கும் குறைவாக நினைத்தவனுக்குத் தற்பொழுது கண்ட காட்சி, ஒரு சதவீதம் இல்லாமல், நூறு சதவீதம் உறுதியானது அவர்களுக்குள் இருக்கும் அந்த ஒன்று ‘காதல்’ என்று. அதில் கொஞ்சம் ஆடித்தான் போனான் கெளதம். காதலுக்கு எதிரி இல்லை அவன். ஏனெனில் அவனே காதல் திருமணம் செய்துகொண்டவன் தான். ஆனால் ஆரா கோபமாகப் பேசியது உண்மை என்றால், அவள் இவனைக் காதலிக்கின்றாளா?! இல்லையா?! ஆம் என்றாள் ஏன் அவனிடம் கோபமாகப் பேசினாள்?! இல்லை என்றாள், ஜெய் இவ்வளவு தூரம் செய்தும் அவள் ஏன் கோபப்படவில்லை?! என்று பல கேள்விகள் அவனைக் குழப்பியது. இதைப் பற்றி மிருதுளாவிடம் பேசலாமா என்று நினைத்தவனுக்கு, அன்று இரவே இதைக் கண்டுபிடிக்க ஒரு வழி கிடைக்கபெற்றது.

Advertisement

கௌதமை போல மிருதுளாவுக்கும், ஆரா – ஜெய் காதலை தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தது. அன்று மதியம் ஆராவை எதற்கோ தேடி அன்னையின் வீட்டிற்குச் சென்றவள், ஆராவின் அறைக்குச் செல்ல, கதவு தாழ்போடாமல் சாத்தப்பட்டிருக்க, கதவை திறந்தவளுக்கு, உள்ளே ஆரா புலம்பி கொண்டிருந்தது எல்லாம் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.

Advertisement

கட்டிலில் குப்புற படுத்திருந்தவளின் கையில், கெளதம் மிருதுளா திருமணத்தில் அவளும் ஜெய்யும் நெருங்கி நிற்பது போல இருந்த புகைப்படம் இருந்தது. அவளின் கண்கள் அழுதழுது சிவந்திருக்க, அந்தப் புகைப்படத்தைப் பார்த்துகொண்டே, “நீங்க கேட்டது உண்மை தான் ஜெய். நான் உங்களை லவ் பண்றேன். எப்போல இருந்து எனக்குத் தெரியாது. ஆனா உங்களை ரொம்ப லவ் பண்றேன். அக்கா கல்யணம் முடிஞ்சதும் உங்ககிட்ட சொல்லனும்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள வேற ஒருத்தர் முந்திகிட்டாங்க. இனி நான் உங்களுக்கு வேண்டாம் ஜெய். உங்க கனவு ஆசைக்கு அவங்க தான் சரியா வரும். இனிமே நான் குறுக்க நிற்க மாட்டேன். என்னைவிட அவங்க தான் உங்களுக்குச் சூட்டபிளா இருப்பாங்க. அவங்களால தான் உங்க லட்சியங்களை நிறைவேத்த முடியும்.” என்று கண்ணீருடன் சொன்னவள் அப்படியே குப்புற படுத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

தான் கேட்டவற்றில் அதிர்ச்சியில் இருந்த மிருதுளா, சத்தமில்லாமல் தன் வீட்டிற்குத் திரும்பி வந்தவளுக்கு, என்ன மாதிரி உணர்கிறோம் என்றே தெரியவில்லை. முதலில் இந்தக் காதல் விஷயமே அவளுக்கு வியப்பாக இருந்தது. எப்போதில் இருந்து இந்தக் காதல் முளைத்தது?! இது சரியா? தவறா? என்றுகூடத் தெரியவில்லை. ஏற்கனவே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அவளின் செல்ல தங்கையிடம் நேராகப் போய்க் கேட்கவும் இவளுக்குத் தோன்றவில்லை. வேறு எவரிடமும் இதைப் பற்றிப் பேசவும் தோணவில்லை. குழப்பத்துடனே தனது வேலைகளைக் கவனிக்கச் சென்றாள்.

அன்று இரவு ஆண்கள் மூவரும் தேஜாவுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். மிருதுளா பாத்திரங்களை ஒதுங்க வைத்து கொண்டிருந்தாள். அப்பொழுது தொலைகாட்சியில் வந்த ஒரு காட்சியைப் பார்த்ததும் நியாபகம் வந்தவராகச் சேகர், “கெளதம், இன்னைக்கு என்னோட ஸ்கூல் ப்ரிண்ட் ராமுவை பார்த்தேன் ப்பா.” என்று சொன்னதும் கெளதம் அவரிடம், “யாரு ப்பா?!” என்று கேட்க, “உன்னோட கல்யாணத்துல கூட, உனக்கு அறிமுகம் செஞ்சு வச்சேனே ப்பா. ‘ராம்’ன்னு ஒருத்தரை. ஸ்கூல்ல ஒன்னா படிச்சோம். அதுக்கு அப்புறம் அவன் பிசினெஸ் பக்கம் போய்ட்டான். இப்போ சொந்தமா சின்ன அளவுல ஐ.டி கம்பனி வச்சுருக்கான்னு.” என்று அவர் சொல்லவும், நியாபகம் வந்தவனாக, “ஆமாம் ப்பா. இப்போதான் நியாபகம் வருது. சரி ப்பா. இப்போ என்ன விஷயம்?” என்று கேட்டான்.

Advertisement

பதிலுக்குச் சேகரோ, “உன்னோட கல்யாணத்துல அவனைப் பார்த்தப்போ, அவனோட பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறானாம். நம்ம ஜெய்யை பார்த்து அவனுக்குப் பிடிச்சுப் போச்சாம். அதான் அவன் பொண்ணுக்கு ஜெய்யை கேட்டுப் பேசினான். நான் தான், இப்போதான உனக்குக் கல்யாணம் முடிஞ்சு இருக்கு. அதனால கொஞ்ச நாள் கழிச்சுப் பார்க்கலாம் சொன்னேன். நேத்து அவனை மறுபடியும் பார்த்தேன். கல்யாணத்தப்போ சொன்ன விஷயம் பத்தி பேசினான். என்னோட முடிவு என்னனு கேட்டான். நான் வீட்டில பேசிட்டு சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். நீ என்ன சொல்றப்பா?” என்று கேட்கவும், கெளதமோ தந்தை அறியாமல் எதிரில் அமர்ந்திருந்த ஜெய்யை அடி கண்ணால் பார்க்க, அவனோ, சேகர் பேசும்வரை மும்முரமாக மொபைலை நோண்டி கொண்டிருந்தவன், அப்படியே அதை நிறுத்திவிட்டு, இவர்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய விரல்கள் அந்தரத்தில் இருப்பதை வைத்தே அதைப் புரிந்துகொள்ள முடிந்தது கௌதமால்.

ஜெய்யை பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்ட கெளதம், வேண்டும் என்றே, “ஹம்! நல்ல இடமா தான் தெரியுது ப்பா. சொந்த கம்பனி வேற வச்சு இருக்காங்க. ஜெய்யோட ட்ரீமே கம்பனி வைக்கிறதுதான். அவனோட அதிர்ஷ்டம் அவனைத் தேடி தானா வருது. உங்களுக்குப் பிடிச்சு இருந்தா மேற்கொண்டு பேசலாம் ப்பா. பொண்ணோட போட்டோ கிடைச்சா அவன் கிட்ட காட்டலாம்……” என்று கெளதம் பேசிக்கொண்டிருக்கும் போதே, விருட்டென்று தனது இருக்கையில் இருந்து கோபத்தை அடக்கிக்கொண்டு எழுந்தவன், தனது அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்தினான். அந்தச் சத்ததிலேயே அவன் எவ்வளவு கோபத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டான் கெளதம். அவன் சென்றதும் தனது தந்தையிடம் சில விஷயங்களைச் சொல்ல, அவரோ, “அப்படியா கெளதம்!! இது எனக்குத் தெரியாதே ப்பா. ரொம்ப நல்ல விஷயம் தான்.” என்று சொன்னவர் கௌதமின் விஷயத்திற்குத் தனது சம்மதத்தைச் சொன்னார்.

அறைக்குள் வந்த ஜெய்க்கோ, கோபம் கட்டுகடங்காமல் வந்தது. “யாரை கேட்டுகிட்டு இவங்களே முடிவு செஞ்சுகிறாங்க. என்னைக் கேட்க வேண்டாமா! கல்யாணம் செஞ்சுக போறது நானு. இவங்க பேசுற வேகத்தைப் பார்த்தா, இப்பவே கூட்டிட்டுப் போய்க் கல்யாண மேடையில் உட்கார வச்சுடுவாங்க போல. இந்த அண்ணனை சொல்லணும். தம்பி இங்கதான இருக்கான், ஏன் டா? நீ யாரையாவது லவ் பண்றியான்னு ஒரு வார்த்தை கேட்கிறதுக்கு என்ன வந்துச்சு.” என்று அவன் போக்கில் உருமி கொண்டிருந்தவனுக்கு, அப்பொழுது தான் ஒன்று புரிந்தது. கெளதம் திருமணத்தின் பொழுது தனது தந்தையும் அவரது நண்பரும் பேசிக்கொண்டதை ஆரா கேட்டிருக்கிறாள். அதனால் தான் தன்னிடம் இருந்து விலகுகிறாள் என்று.

“பெரிய தியாகி இவ. எனக்காகத் தியாகம் பண்றாங்களாம். அவ இல்லாம நான் சந்தோஷமா இருந்துடுவேனா?! அதை நினைச்சு பார்த்தாளா! அன்னைக்கு ப்ரொபோஸ் பண்ணப்போவே, அவ கிட்ட ஆமாவா இல்லையான்னு பதிலை வாங்கி இருக்கணும். அப்படி வாங்கி இருந்தா இன்னைக்கு, நான் உங்ககிட்ட அப்படிப் பழகலன்னு சொல்வாளா. இருடி. உன் வாயாலே ஐ லவ் யு சொல்ல வைக்கிறேன். அப்புறம் இருக்கு உனக்கு.” என்று இங்கே இவன் ஒரு திட்டம் தீட்ட, அவனுக்கு வேறொரு அதிர்ச்சி அடுத்த நாள் காத்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!