Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 18.1

அத்தியாயம் 18(1)

அன்றைய பெண் பார்க்கும் தினத்தில் இருந்து, இதோ திருமணத்திற்கு முந்தய நாளும் வந்துவிட்டது. ஆனால் இன்று வரை ஜெய், ஆராவிடம் பேசவில்லை. அலுவகத்திலும் சரி வீட்டிலும் சரி. பெரியவர்கள் சொன்னார்கள் என்பதற்காகத் தினமும் காலையும் மாலையும் அவளைத் தன்னுடைய பைக்கிலேயே அலுவகத்திற்கு அழைத்துசென்று, பின் மாலையில் கூட்டிவந்தான், அவ்வளவே! காதலித்துத் திருமணம் செய்பவர்களுக்கே உண்டான எந்த ஒரு விஷயமும் அவர்களுக்குள் இல்லை. அவளை எங்கேயும் கூட்டி செல்லவில்லை. பரிசு வாங்கிக் கொடுக்கவில்லை. ஏன், ஆசையாக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆராவே ஒருமுறை பரிசு வாங்கி கொடுக்க முயன்றபொழுது கூட, “காசு எதுக்கு வேஸ்ட் பண்ற.” என்று மறைமுகமாக வேண்டாம் என மறுத்துவிட்டான்.

ஆராவிற்கு அவனின் கோபம் எதற்கு என்று நன்றாகவே தெரியும். ஆனால் தான் ஏன் அப்படிச் செய்தோம் என்பதை, அவன் ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறான் என்று நினைத்தாள். ஆனால் ஜெய்க்கோ, தன்னுடைய காதலை ஒருதடவை கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தாண்டி, எப்படி அவள் இன்னொருவனைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் சொல்லும் அளவுக்குத் துணிந்தாள், என்றே வருத்தம். வருத்தம் என்பதை விடக் கோபம்.

‘திருமணம் என்பது என்ன சின்ன விஷயம் என்று நினைத்தாளா? அது வாழ்நாள் பந்தம் அல்லவா! இன்னொருவனுடன் வாழ்ந்துவிடுவாளா? அதுவும் மனைவியாக?’ என்ற நினைக்க நினைக்க அவனுக்குள் கோபம் கட்டுகடங்காமல் பொங்கியது. அவள் மேல் காதல் இருந்தாலும், அதைவிடப் பலமடங்கு கோபமும் இருந்தது.



Advertisement

இதோ நிச்சயதார்த்த நாளும் அழகாக விடிந்தது. இரண்டு வீடும் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாளுக்குத் தேவையான பொருட்களையும், அடுத்த நாள் திருமணத்திற்குத் தேவையான பொருட்களையும் பெரியவர்கள் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, மிருதுளா ஆராவின் உடமைகளைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். ஆராவிடம் அது வேண்டுமா? இதை எடுத்துவைக்கவா? என்று பம்பரமாக இவள் சுழன்று கொண்டிருக்க, ஆராவோ கட்டிலில் அமர்ந்தபடி சுருதியே இல்லாமல் பதில் சொல்லி கொண்டிருந்தாள்.

பல நிமிடங்கள் கழித்தே ஆராவை கவனித்த மிருதுளா, கையில் இருந்தவற்றைக் கட்டிலில் வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தவள், “என்ன ஆரு, டல்லா இருக்க, ஆஃபீஸ்ல எதாவது பிரச்சனையா??” என்று அமைதியாகக் கேட்க, அவளோ ‘இல்லை’ என்பதுபோலத் தலையசைக்க, “இந்தக் கல்யாணத்துல உனக்கு முழுச் சம்மதம் தான ஆரா?!” என்று மிருதுளா சந்தேகமாகக் கேட்கவும், பதறியவள், “அய்யய்யோ, அப்படில்லாம் எதுவும் இல்லக்கா. எனக்கு முழுச் சம்மதம் தான். நான் தான் வேணும்ன்னு ஒத்தைகால்ல நின்ன, அவரைக் கல்யாணம் செஞ்சுக்க நான் ரொம்பக் கொடுத்து வச்சுருக்கணும்.” என்றாள் பதிலுக்கு.

“பின்ன ஏன் ஆரா இப்படி இருக்க?!” என்று கேட்டவளிடம், தான் எதற்காக ஜெய்யை திருமணம் செய்யத் தயங்கினேன், தற்பொழுது ஜெய் அவளிடம் பேசாமல் இருப்பது எல்லாவற்றையும் சொன்னவள், “என்னை அவர் புரிஞ்சிக்கவே இல்லைக்கா. நான் அவருக்காகத் தான பார்த்தேன். அதை ஏன் க்கா அவர் புரிஞ்சிக்க மாட்டேங்கிறார்.” என்று வருத்ததுடன் கேட்க, “அவர் உன்னை ரொம்ப லவ் பண்றாரு டா. அதான் இந்தக் கோவத்தோட வெளிப்பாடே. உன்னை உயிருக்கு உயிரா லவ் செஞ்சுட்டு, யாருக்கோ உன்னை விட்டுகொடுக்க மனசு வருமா சொல்லு. உனக்குப் பிடிச்சு இருக்குன்றதுக்காக, நான் ஒரு பொருளை விட்டுக்கொடுக்கும்போது, எத்தனை தடவை நீயே என்னைத் திட்டி இருக்க, என்கிட்ட சண்டை போட்டு பேசாம இருந்திருக்க. ஒரு சின்னப் பொருளுக்கே உனக்குக் கோபம் வரும்பொழுது, அவரோட வாழ்கையே நீ தான் அம்மு. உன்னை அவ்வளவு சுலபத்தில அவரால விட்டுகொடுக்க முடியுமா. அப்படி இருக்கச்ச, அவருக்கு நல்லதுன்னு, நீ இன்னொருத்தரை கல்யணம் செஞ்சுக்கச் சமம்தம் சொன்னா, அவருக்கு உன்மேல கோபம் வரத்தானே செய்யும். அந்தக் கோபத்தோட அடிப்படையைப் புரிஞ்சுகோ டா. எல்லாம் சரி ஆகிடும். இப்போ கோபத்தைக் காட்டுறவரு, கூடிய சீக்கிரம், அம்முகுட்டி, புஜ்ஜுகுட்டின்னு உன்னைக் கொஞ்ச போறாரு.” என்று சொல்லி அவள் கன்னத்தைப் பிடித்து ஆட்ட, ஆராவின் மனதில் இருந்த குழப்பம் அகன்றது போல அவள் முகம் பிரகாசம் அடைந்தது.

Advertisement

அதன் பின் நேரம் ரக்கை கட்டிக்கொண்டு பறக்க, ஒருவழியாக அனைவரும் கிளம்பி தயாராக இருக்க, புக் செய்திருந்த கேபும் வந்து சேர்ந்தது. எல்லாப் பொருட்களையும் வண்டியில் எடுத்துவைத்து கிளம்பி மண்டபம் வந்து சேர, நிச்சயதார்த்தமும் அழகாக ஆரம்பித்தது.

Advertisement

மன மேடையில் இரு குடும்பங்களும் அமர்ந்திருக்க, ஐயர் நிச்சிய பத்திரிக்கை வாசிக்க, இரு குடும்பங்களும் தாம்பூல தட்டுகளை மாற்றிக்கொண்டனர். அதன் பின்னர் மணமக்கள் இருவரும் மேடையேற, இளையவர்களின் விளையாட்டு, கூதுகளத்தோடு, ஆராவின் விரலில் மோதிரத்தை அணிவித்தான் ஜெய். மோதிரத்தை போடும்போது, ஆரா அவன் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் முகத்தில் சிரிப்பு இல்லாவிடினும், தன்னவளை கரம்பிடிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி நிறைந்திருந்தது. திரும்பி மிருதுளாவை அவள் பார்க்க, அவளும் ‘பார்த்தியா!’ என்பது போலத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் புன்னகை புரிந்தது ஆராவின் முகம். அதற்கடுத்து நிகழ்வுகள் மகிழ்ச்சியுடன் நடக்க, ஆரா, ஜெய் நிச்சயதார்த்தம் அழகாக நடந்து முடிந்தது. அதன் பின் எல்லாவற்றையும் ஒதுங்க வைத்துவிட்டு அனைவரும் தூங்க போக வெகு நேரம் ஆகிவிட்டது.

மண்டப்பத்தின் இரண்டாம் தளத்தில், மணமக்கள் வீட்டினர் அனைவரும் தங்கவென அறைகள் இருந்தது. தூங்க செல்லும் நேரம், மிருதுளாவை அழைத்த சித்ரா, அவளிடம் ஒரு பையைக் கொடுத்தவர், ஆராவிற்குக் கொடுக்கவென வைக்கபட்டிருந்த சீர்வரிசை பொருட்கள் இருந்த அறைக்குச் சென்று, அதை வைத்துவிட்டு, ஒருமுறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கெளதமுடன் சேர்ந்து பார்த்துவிட்டு வரும்படி சொல்ல, அவளும் கௌதமை தேடி செல்ல, அவனோ மேற்பார்வை வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு, படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தான். அவனிடம் சித்ரா சொன்ன விவரங்களை மிருதுளா கூற, சரி என்று இருவரும் மண்டபத்தின் பின்பக்க பகுதியில் இருந்த அந்த அறைக்குச் சென்றனர்.

உள்ளே நுழைந்ததும், ஹால் போன்று ஒரு நீள பகுதியும், அதற்கடுத்து வலப்பக்கம் சின்னப் பகுதியும் என்று இரண்டு பகுதிகளைக் கொண்டது அந்த அறை. கட்டில், பீரோ போன்ற பெரிய பொருட்கள் எல்லாம் ஹால் பகுதியில் அடுக்கி வைக்கபட்டிருக்க, குத்துவிளக்கு, குடம் போன்ற இதர சாமான்கள் எல்லாம் உள் அறையில் வைக்கபட்டிருந்தது. பெரிய பொருட்களை எல்லாம் சரி பார்த்துவிட்டு உள் அறையில் அவர்கள் நின்று கொண்டிருக்க, இவர்கள் உள்ளே இருப்பது தெரியாமல், பெரியவர் யாரோ, “பொருள் இருக்கிற ரூமை யார் திறந்து போட்டுட்டு போயிருக்காங்க. கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லை.” என்று சொல்லிக்கொண்டு வெளிப்பக்கம் தாழ் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

Advertisement

இது தெரியாமல் இவர்கள் எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டு, வாசலுக்கு வந்தவர்கள், கதவை திறக்க, அதுவோ, வெளிப்பக்கம் லாக் செய்யபட்டிருப்பது தெரிந்தது. “ஐயையோ! யாரோ வெளியில பூட்டிட்டு போயிருக்காங்க!” என்று கூறிய மிருதுளா, “யாருக்காவது ஃபோன் போட்டு வந்து கதவை திறக்க சொல்லுங்க.” என்று கௌதமிடம் சொல்ல, அவனோ, “குழந்தைங்க கேம்ஸ் விளையாடி சார்ஜ் தீர்ந்துடுச்சுன்னு, ரூம்ல போனை சார்ஜ்ல போட்டிருக்கேன்.” என்று பாவமாகச் சொல்ல, என்ன செய்வது என்று தெரியாமல், இருவரும் கதவை தட்டி பார்க்க, இரவு வெகு நேரம் என்பதாலும், அவர்கள் இருந்ததோ பின்பக்கம் என்பதாலும், கதவு தட்டப்படும் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

இங்கே சித்ராவோ, கீழே போன மகளைக் காணவில்லை என்று தேட, அவர்களின் உறவுக்கார குழந்தை, “சித்திய, சித்தப்பா மொட்டை மாடிக்கு வர சொன்னாரு.” என்று, பல மணி நேரங்களுக்கு முன்பு கெளதம், தேஜாவுடன் மொட்டை மாடிக்கு போகும்பொழுது, சொன்னதை இப்பொழுது அவர்களிடம் சொல்ல, பெரியவர்களோ தங்களுக்குள் சிரித்துக்கொண்டு, அவர்கள் வரும்பொழுது வரட்டும் என்றுவிட்டு தூங்க சென்றுவிட்டனர்.

இங்கே பூட்டிய அறைக்குள் மாட்டிக்கொண்ட மிருதுளாவும் கௌதமும், எவ்வளவோ முயன்றும் கதவை திறக்க முடியாததால், வேறு வழியில்லாமல், காலை விடிந்ததும் யாரவது வந்து திறப்பார்கள் என்று விட்டுவிட்டனர். நேரம் வேறு நள்ளிரவை நெருங்கி கொண்டிருக்க, கெளதம் படுக்கவென்று, பாய் போன்று ஏதாவது இருக்கிறதா என்று மிருதுளா சுற்று முற்றும் தேடி கொண்டிருந்தாள். ஆனால் அங்கே எல்லாம் புதுப் பொருட்களாகவே இருக்க, வேறு வழியில்லாமல், புதிதாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த பாயை பிரிக்க மிருதுளா முயற்சிக்க, கெளதமோ, “என்ன செய்ற ரிது?!” என்றான் அவள் செயல் புரியாது. “டைம் ஆச்சு. நீங்க தூங்கணுமே. அதான் பாய்….” என்று சொன்னவளை தடுத்தவன், “அதுக்கு எதுக்கு, புதுப் பாயை எடுக்குற மா. அதான் தரை இருக்கே. தரைலையே படுத்துக்கலாம். ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்றவனைக் கேள்வியாகப் பார்த்தவள், “நீங்க எப்படிக் கீழே?!!” என்று சங்கடமாகக் கேட்க, “இதுல என்ன இருக்கு. நான் என்ன பணக்காரனா, தரையில் படுக்காம இருக்க!! சின்ன வயசுல இதெல்லாம் எங்களுக்குப் பழக்கம் தான். நானும் ஜெய்யும் எத்தனை தடவை அம்மா மடியில் தலை வச்சு படுத்துருக்கோம் தெரியுமா.” என்றவன், சுவற்றில் சாய்ந்துகொண்டு கால்களை நீட்டியபடி தரையில் அமர்ந்து கொண்டான். கூடவே மிருதுளாவையும் அருகே அமர வைத்துகொண்டான்.

சிறிது நேரம் மவுனமாகக் கழிய, அதன்பின் கெளதம் அவளிடம், “நான் உன்னோட மடியில படுதுக்கவா ரிது?!” என்று கேள்வியாக அவளைப் பார்க்க, அவளோ “என்னங்க நீங்க என்கிட்டே போய் இதெல்லாம் கேட்டுகிட்டு.” என்று பதறியவள், அவன் படுத்துக்கொள்ளும் வகையில் வசதியாக அமர்ந்துகொள்ள, அவளின் மடியில் தலை சாய்த்துக்கொண்டான் அந்த அன்பு கணவன்.

அப்படியே சில நிமிடங்கள் அமைதியாக அவன் படுத்திருக்க, அவனின் கேசத்தை மிருதுளா மெதுவாக வருட, அவளைத் தடுத்தவன், அவள் கையேடு தன் கையையும் சேர்த்து, தன் கன்னத்தில் வைத்து கொண்டவன், நெகிழ்ச்சியான குரலில், “இப்போ நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் டா. வாழ்கையில எல்லாம் கிடைச்சு மாதிரி மனசு நிறைஞ்சிருக்கு. இப்படி ஒரு நாள், என் லைஃப்ல வருமன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை ரிது. முக்கியமா தேஜாக்கு இப்படி ஒரு அம்மா கிடைப்பான்னு நான் எதிர்பார்க்கல. உன்னை மாதிரி ஒரு குட் சோலை, என்னோட லைஃப்ல சந்திப்பேன்னோ, இல்லை நீயும் நானும் லைஃப்ல ஒன்னு சேருவோம்ன்னோ, நான் நினைச்சுகூடப் பார்த்ததில்லை ரிது மா.” என்றவன் சில நொடி இடைவெளிக்கு பிறகு, “யாழினிக்கு அப்புறம் இன்னொரு கல்யாணம் செய்ய எனக்குச் சுத்தமா ஐடியா கிடையாது. இன்பாக்ட் அவ இருந்த இடத்தில இன்னொருத்தரை வைக்க, என் மனசு இடம் கொடுக்கல. அவ மட்டும் என் வாழ்கைக்குப் போதும்ன்ற முடிவில இருந்தேன். அவளுக்கு அப்புறம் தேஜா தான் என் லைஃப்னு வாழ்ந்துட்டு இருந்தேன்.” என்றவன், இப்பொழுது அவள் முகம் நோக்கி, “ஆனா இப்போ சொல்றேன் டா. யாழினியை எந்த அளவுக்கு லவ் பண்ணேனோ, எந்த அளவுக்கு அவ தான் என் லைஃப்னு இருந்தேனோ, அந்த அளவுக்கு உன்னையும் லவ் பண்றேன். நீ என் வாழ்கையில் வந்ததே எனக்குக் கடவுள் குடுத்த வரம் டா. எல்லாரையும் நீ நல்லா கவனிச்சுக்கிறதாலையோ, இல்லை தேஜாவுக்கு நீ நல்ல அம்மாவா இருக்கிறதாலையோ இப்படிச் சொல்லல ரிது. அதையும் தாண்டி நீ ரொம்ப ஸ்பெஷல். உன்னை மாதிரி ஒரு கேரக்டர் சான்சே இல்லை. நான்…நான் எப்பவும் யாழினிய பத்தியே பேசுறேன்னு தப்பா நினைக்காத ரிது மா.” என்றவனைத் தடுத்தவள், “இதுல நான் தப்பா நினைக்க என்னங்க இருக்கு. அவங்க உங்க வைப். உங்ககூட வாழ்ந்தவங்க. மோசமான வாழ்க்கை வாழ்ந்த நானே என்னோட பாஸ்ட்டை மறக்க முடியாதப்போ, உங்க லவ்வை உங்களால மறக்க முடியுமா. நான் எதுவும் தப்பாவோ, இல்லை வேற விதமாவோ எடுத்துக்கலங்க. யாழினிக்கு உங்க வாழ்கையில ஒரு இடம் இருந்த மாதிரி, எனக்கும் உங்க லைப்ல ஒரு இடம் இருக்கு. எனக்கு அது போதும். வரம்ன்னு சொல்ற அளவுக்கு நான் ஸ்பெஷல்லாம் இல்லை. ரொம்ப ரொம்ப நார்மல் பொண்ணு தான்.” என்று சொன்னவளை கண்சிமிட்டாமல் பார்த்திருந்தவன், அவளின், “என்ன அப்படிப் பார்க்குறீங்க?!” என்ற கேள்வியில், “இதோ இதுனால தான், நீ ஸ்பெஷல்ன்னு சொன்னேன்.” என்றான் புன்னகையாக. அவளும் இவனின் புன்னகையில் முகம் மலர்ந்தாள்.

அதன் பின் அவர்களுக்குள் பேச்சிலேயே நேரம் கழிய, மிருதுளாவிற்குத் தூக்கம் வருவது போல இருக்க, அவளையும் தன் அருகில் படுக்க வைத்தவன், அவள் முகத்தையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருக்க, எதேர்ச்சையாக அவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்னங்க?!” என்று கேட்க, “இப்போ நான் ஒன்னு கேட்டா, அதுக்கு நீ என்ன சொல்வன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.” என்று பதில் சொல்ல, “என்னனு சொல்லுங்க. அப்புறம் சொல்றேன்.” என்றாள் அவள்.

அவள் உதடுகளைப் பார்த்தவன், “இங்க ஒரு கிஸ் பண்ணவான்னு கேட்கலாம்னு இருந்தேன்.” என்று கேட்டுவிட்டு, அவள் முகத்தை ஆர்வமாகப் பார்க்க, அவளோ, “இதுக்கு என்ன பதில் சொல்வேன்னு எதிர்பார்த்தீங்க?!” என்று குறும்புடன் கேட்க, “ஹம், உன்னோட சிக்னேச்சர் டயலாக், என்னங்க நீங்க என்கிட்டே போய் இதெல்லாம் கேட்டுகிட்டு,” என்று அவளைப் போலப் பேசி காட்டியவன், “இதைச் சொல்வேன்னு நினைச்சேன்.” என்று பதில் சொல்ல, அவனைச் செல்லமாக முறைத்தவள், “அதுக்குப் பதிலா வேற ஒன்னு சொல்லவா?!” என்க, அவன் ‘சொல்லு’ என்பது போலத் தலையை அசைக்க, “என்னங்க நீங்க இன்னும் தூங்காம இருக்கீங்க. மொதல்ல கண்ணை மூடி தூங்குங்க.’ என்று சொல்லிவிட்டு கள்ள சிரிப்பு சிரிக்க, கௌதமின் முகமோ சோகத்தைக் காட்டியது. அதில் பதறியவள், “என்ன ஆச்சுங்க. நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?” என்றாள் வருத்ததுடன்.

‘அது இல்லை’ என்பது போல உதடு பிதுக்கியவன், “நான் கிஸ் பண்ணவான்னு கேட்டதை நீ தப்பா எடுத்துகிட்டியோன்னு..” என்றவனைத் தடுத்தவள், “என்னங்க நீங்க. இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு. நான் எதுவும் தப்பா எடுத்துக்கல. என்கிட்டே தான கேட்டீங்க.” என்று அவன் வருத்தத்தைப் போக்க இவள் சொல்ல, அவனோ கள்ள சிரிப்புடன், “அப்போ நீ தப்பா எடுத்துக்கல தான ரிது. எனக்கு அந்த ரைட்ஸ் இருக்குன்னு நீயே ஒதுக்கிற தான அம்மு.” என்று சொல்லவும் தான், மிருதுளாவிற்குத் தான் சொன்ன வார்த்தைகள் நியாபகம் வர, “உங்களை!!” என்றவள், வெட்கத்தில் தலைகுனிய, சிவந்திருந்த அந்த அழகிய கன்னத்தில் அழுத்தமாகத் தன் இதழ்களைப் பதித்தான் கெளதம். அதில் அவன் மார்பிலேயே அவள் முகம் புதைத்துக்கொள்ள, அவளின் முகத்தை நிமிர்த்தியவன், கண்களால் அனுமதி கேட்க, அவள் கண்களோ நடக்கபோவதை அறிந்து, தாமாக மூடிக்கொண்டது. அதை ரசித்தவன், மெல்ல குனிந்து அவள் இதழ்களுக்கு வெகு அருகில் தன் இதழ்களைக் கொண்டு சென்று, ஒரு நொடி இருவர் மூச்சு காற்றையும் ஒன்றாகக் கலக்கவிட்டவன், அடுத்த நொடி அவள் உதடுகளோடு தன் உதடுகளை உறவாடவிட்டான் முதன் முறையாக.

வெகு நேரம் அதில் லயித்திருந்தவனின் கைகள், அவள் இடுப்பை சுற்றி வளைத்து, அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டது. பல நிமிடங்கள் கழித்தே இவன் நிமிர, அவளோ வெட்கத்தில் அவன் மார்பிலேயே முகம் புதைத்துக்கொண்டாள். அடுத்து அவன் இதழ்கள் அவள் கழுத்து வளைவில் உரசி செல்ல, அவளோ கூச்சத்தில் நெளிந்தாள். அதற்குச் சிரித்தவன், அவள் காதில், “இப்போ இது போதும் அம்மு. மிச்சத்தை இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்.” என்று ஹஸ்கி குரலில் ரகசியம் போலச் சொல்ல, அவளோ, “உங்களை!….இதுவே அதிகம்.” என்று சத்தமில்லாமல் சொல்ல, “அடி பாவி. யானை பசிக்கு சோள பொரி போதும் சொல்ற. இதெல்லாம் எனக்குப் பத்தாது” என்று சினுங்கியவனின், கையை அவள் கிள்ள, அதில் வாய்விட்டு சிரித்தவன், “என்னைக்கு இருந்தாலும் என்கிட்டே மாட்ட தான் போற. அப்போ பார்த்துகிறேன்.” என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு. “இப்போ தூங்கு அம்மு. டைம் ஆச்சு. நாளைக்குச் சீக்கிரம் எழுந்துக்கணும்.” என்று சொல்ல, அவன் நெஞ்சிலேயே மிருதுளா தலை சாய, அவளைச் சுற்றி கைகளைப் போட்டவன், அவளுடன் உறங்கி போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!