Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 21

அத்தியாயம் 21

இதோ மிருதுளாவும் சந்துருவும் சென்னைக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இடையில் முத்துபாண்டியின் பதினாறாம் நாள் காரியத்திற்குச் சென்று வந்தனர். அப்பொழுதும் மீனாட்சி மிருதுளாவை கரித்துக் கொட்டினார். அதுவும் சொந்தங்கள் முன்பு, ‘பூனை மாதிரி இருந்துகொண்டு தன் பிள்ளையை மயக்கி விட்டதாகவும்’ ‘தலையணை மந்திரம் போட்டு விட்டதாகவும்’ போன்ற கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அனைவர் முன்னிலையிலும் அருவருப்பாகப் பேசவும், மிருதுளாவிற்குக் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. சந்துரு தன் தாயிடம் எவ்வளவோ சமாதனம் செய்தும், அவர் காதில் வாங்கவே இல்லை. இறுதியில் எக்கேடு கேட்டுப் போங்கள் என்று சொல்லிவிட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டான்.

மிருதுளா சென்னை வந்ததைக் கேள்விப்பட்டு, ஒரு விடுமுறை நாளில், அவளின் பெற்றோரும், ஆராவும் இவளை பார்க்க வந்தனர். திடீரென்று இங்கே கிளம்பி வந்ததைப் பற்றி மிருதுளா பெற்றோர் விசாரிக்க, நடந்ததைச் சொன்ன சந்துரு, “அதனால் தான் மாமா, அங்க இருந்தா இன்னும் இவங்களுக்குள்ள பிரச்சனை வரும்னுதான், இங்கேயே கூட்டிட்டு வந்துட்டேன். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு போகலாம்னு இருக்கேன்.“ என்று சொல்ல, “ஒஹ்! அப்போ சரி மாப்பிள்ளை.” என்று கேட்டுக்கொண்டனர் பெரியவர்கள். அதன்பின் வீட்டை சுற்றி பார்த்து, மகளுக்கு வசதியாக இருக்கிறதா என்பதையும் சுற்றுபுறத்தை பற்றி மருமகனிடம் விசாரித்துவிட்டு, சிறிது நேரம் இருந்தவர்கள், தங்கள் வீட்டிற்குக் கிளம்பி சென்றனர். நேரம் கிடைக்கும்பொழுது, சித்ராவும் ஆராவும், மிருதுளாவை வந்து பார்த்துவிட்டு சென்றனர். ஆராவின் கல்லூரிக்குப் பக்கம் என்பதால், சில சமயம் ஆரா மட்டும் கல்லூரி முடிந்து இங்கே வந்து, சிறிது நேரம் இருந்துவிட்டு சென்றாள்.

சென்னைக்கு வந்த பிறகும், ஊரில் நடந்த விஷயம், மிருதுளா மனதில் முள்ளாக இருக்க, அதுவே அவள் செயல்களிலும் வெளிப்பட, எப்பொழுதும், மீனாட்சி சொன்னதை நினைத்து மிருதுளா அழ, அது சந்துருவின் கோபத்தை அதிகபடுத்த, சில சமயம், அந்தக் கோபம் வாய் வார்த்தைகளாக வெளிப்படும்.



Advertisement

அன்றொரு நாள் அப்படிதான், இரவில் மிருதுளாவிடம் சந்துரு நெருங்க, அவளுக்கோ, மீனாட்சி சொன்ன, ‘தலையணை மந்திரம் செய்துவிட்டாள்’ என்ற வார்த்தை மனத்துக்குள் உறுத்த, தலைவலி என்று அவனைத் தவிர்த்தாள். ஆசையோடு வந்தவனுக்கு மிருதுளாவின் மறுப்பு, கோபத்தை ஏற்படுத்த, அவளிடம் சண்டை போட, அவளோ அழுதுகொண்டு அவன் தாய் சொன்னதை மறுபடியும் நினைவு கூற, அதில் எரிச்சல் அடைந்த சந்துரு, “இப்படியே அழுதுட்டு இருந்தன்னா, உங்க அம்மா வீட்டுக்கு போய்டு. என் உயிரை வாங்காதா. ச்சேய்! மனுஷன் சந்தோஷமா இருக்க முடியுதா இந்த வீட்டில.” என்று சொல்லிவிட்டு, இரவு நேரம் என்றும் பாராமல் அவளை விட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

அவன் திரும்பி வரும்பொழுது, சற்று தள்ளாட்டத்துடன் வரவும், அவன் குடித்து இருக்கிறான் என்பதைத் தெரிந்துகொண்ட மிருதுளா அதிர்ச்சி அடைந்தாள். சந்துரு குடிப்பான் என்று இவள் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. இதில் வந்தவுடன் இவளிடம் சண்டை வேறு போட்டவன், ஒரு கட்டத்தில், அவளைக் கட்டயபடுத்த, அவள் மறுக்க, அதில் வெறியேறியவன் அவளை ஓங்கி ‘பளார்’ என்று அடித்துவிட்டான்.

இத்தனை நாள் ஒரு வார்த்தை கூடக் கடிந்து சொல்லாமல், பாசத்துடன் நடந்துகொண்டவன், இன்று வெறும் கட்டில் சுகத்தை மறுத்ததற்காக அடித்ததில், இவன் இவ்வளவு தானா என்று ஒருகனம் நினைத்தவள், மறுகனம், துக்கவீட்டில் மீனாட்சி இவளை பேசும்பொழுது, சந்துரு சமாதனம் செய்து சென்னைக்கு அழைத்து வந்தது நியாபகம் வர, ஏதோ டென்ஷனில் இப்படி நடந்துகொண்டான் என்று தன்னைத் தானே சமாதனம் செய்துக்கொண்டாள். ஆனால் அவள் மனதில் அவன் மேல் அதிர்ப்தி முளைத்திருந்தது உண்மை.

Advertisement

அதன் பின், நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. தனியே வந்ததில் இருந்து, சந்துரு அவ்வபோது, கோபப்படுவதும், குடிப்பதும், சிகிரெட் பிடிப்பதும் வாடிக்கையானது. சில சமயம் கோவமாக இருக்கும் நேரத்தில், இவளை அடிக்கவும் செய்தான். ஆனாலும் மிருதுளா அவனின் அலுவக டென்ஷனை நினைத்து இதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் பொறுத்துக்கொண்டு போய்விடுவாள். அப்படியே இரண்டு மாதங்கள் கடந்துவிட, யாரும் இல்லாமல் வீட்டிலேயே தனியே இருப்பது அவளுக்குப் போர் அடிக்க ஆரம்பிக்க, சரி வேலைக்குச் செல்வோம் என்று முடிவெடுத்தவள், சந்துருவிடம் அதைப் பற்றிப் பேச, அவனும் சரி என்று சம்மதம் சொன்னான்.

Advertisement

தோழிகளின் உதவியுடன் அடுத்த ஒரு வாரத்தில் சற்று தள்ளி இருந்த, ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாள். அது அவள் படித்த துறை சம்பந்தப்பட்டதால், விரைவில் கற்றுக் கொண்டவள், அதில் உற்சாகத்துடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள். அதன் பின் அவளுக்கு நாட்கள் பம்பரமாகச் சென்றது. காலை எழுந்ததும் இருவருக்கும் சேர்த்து காலை மதிய உணவுகளைத் தயார் செய்யும் மிருதுளா, பின் குளித்துத் தயாராக, அதற்குள் சந்துருவும் ரெடி ஆகி வர, இருவரும் சாப்பிட்டு முடித்ததும், சந்துரு தன் பைக்கிலேயே, மிருதுளாவை அவளது அலுவலகத்தில் விட்டுவிட்டு தன் அலுவகத்திற்குச் செல்வான். மாலையில் அவள், பஸ் பிடித்து வீட்டிற்கு வந்துவிடுவாள். அதன் பின்பே சந்துரு வேலை முடித்து வருவான்.

மிருதுளா, தன் தோழிகள் வேலை செய்யும் அலுவகத்திலேயே வேலைக்குச் சேர்ந்துள்ளதால், அவர்களின் நண்பர்களும் இவளுக்கும் நண்பர்கள் ஆனார்கள். அதில் ஆண் நண்பர்களும் அடக்கம். மிருதுளாவும் சரி, அவளின் நண்பர்களும் சரி, எந்தவித கள்ளமும் இல்லாமல் நல்ல நண்பர்களாகப் பழகினர். ஆனால் இதுவே மிருதுளா வாழ்கையில் புயலை கிளப்பியது.

அன்றொரு நாள், இரவு வேளையில், மொபைலில் நண்பர்களுடன் க்ரூப்பில் சேட் செய்துகொண்டிருந்த மிருதுளா, பதிலுக்கு அவர்கள் அனுப்பிய காமடி ரிப்ளைக்கு, அவளையே அறியாமல், வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருக்க, அப்பொழுது அறைக்குள் வந்த சந்துரு, “என்ன மிரு. இப்படி விழுந்து விழிந்து சிரிக்கிற?!” என்று புன்னகையுடன் கேட்க, பதிலுக்கு விவரத்தை கூறிய மிருதுளா, “இந்த ரம்யாவும், சரணும் செம்மையா காமடி சண்டை போடுறாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் ரிப்ளை படிக்கும்போது செம்ம சிரிப்பா இருக்கு.“ என்றவள், அதை அவனிடம் காட்ட, ரம்யா சரனை கலாயித்து மெசேஜ் அனுப்பி இருக்க, அதற்கு அவனோ, அவளின் உடல் எடையைக் குறிப்பிட்டு, “பூசணிக்கா மாதிரி இருக்க, ப்ரோ, உன்னைத் தூக்குனா, அவர் கை கால் உடைறது கன்பார்ம்.“ என்று அனுப்பி இருக்க, ரம்யாவோ, “வந்தேன்னு வச்சுக்கோ அப்படியே உன்னைக் கடிச்சு வச்சுருவேன்.“ என்று பதில் அனுப்பி இருக்க, அதற்கு அவனோ, “சின்ன வயசுல ஸ்கூல்ல வச்சு என்னைக் கையில கடிச்சு வச்சல. அதை நான் மறக்கவே இல்லை. நீ என் கையில மாட்டுன, மவளே ரத்தம் வர்ற அளவுக்குக் கடிச்சு வைக்கிறேன்.” என்று பதில் அனுப்பி இருந்தான். மற்றவர்களோ, டிராகுலா’ படங்களைப் பதிலுக்கு அனுப்பி அவர்கள் சண்டையைக் கிண்டல் செய்திருந்தனர். இவ்வாறு அங்கே ஒரு களேபரமே நடந்துகொண்டிருக்க, அதைப் பார்த்து மிருதுளா சிரித்துக்கொண்டிருக்க, இவளும் சில இடங்களில் ரிப்ளை கொடுக்க என்று ஒரே கலாட்டாவாக இருந்தது.

Advertisement

ஆனால் அவர்கள் சகோதர எண்ணத்துடன் சாதரணாம பேசிக் கொண்டிருந்தது, சந்த்ருவிற்கு மனதுக்குள் தப்பான எண்ணத்தை ஏற்படுத்தியது. ‘அந்தப் பையன் இந்தப் பொண்ணைக் குண்டுன்னு, உடம்பை குறிப்பிட்டுச் சொல்றான். கடிச்சிடுவேன்னு வரம்பு மீறிப் பேசுறான். இதை எல்லோரும் சிரிச்சிட்டு பார்க்கிறாங்க. இவளும் எதுவும் சொல்லாம சிரிக்கிறா. போன்லயே இப்படினா, ஆபீஸ்ல எப்படி இருப்பாங்க?!’ என்று ஒரு கணவனாக அவன் மனதுக்குள் சந்தேகம் முளைக்க ஆரம்பித்திருந்தது. அந்தச் சந்தேகம் போகப் போக ஆலமரம் போலப் பெரிதாகி மிருதுளாவை பார்த்துச் சொல்லகூடாத வார்த்தையைச் சொல்லவைக்கப் போகிறது என்று அவனுக்குப் புரியவில்லை.

தன் எண்ணத்தில் இறந்து வெளியே வந்தவன், “சேட் பண்ணது போதும். போய்த் தூங்கு டைம் ஆச்சு.“ என்று கூறியவன் அவளிடம் இருந்து மொபைலை பிடுங்கி வைத்துவிட்டு, லைட்டை ஆப் செய்துவிட்டு படுக்க, ‘என்ன ஆச்சு இவருக்கு?!’ என்ற யோசனையுடன் இவளும் தூங்கிபோனாள். அதன் பின் அவள் போனை யுஸ் செய்வதைச் சந்துரு பார்க்க நேர்ந்தால், காரனமே இல்லாமல் எரிந்து விழ ஆரம்பித்தான். அவளும் அமைதியாகச் சென்று விடுவாள். இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருக்க,

அன்றொரு நாள், மிருதுளா தூங்கியதும், நள்ளிரவில் அவளின் மொபைலை எடுத்த சந்துரு, அவளின் வாட்செப்பை ஓபன் செய்து, மெசேஜ்கள் எல்லாவற்றையும் அவளுக்குத் தெரியாமல் படித்துப் பார்த்தான். இவன் செய்வது தெரியாமல் அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள், முழுவதும் படித்து முடித்தவன், எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அமைதியாகத் தூங்கிவிட்டான். அடுத்த நாள் அலுவகம் சென்ற மிருதுளாவிடம், தோழி ஒருத்தி, “என்னடி உன்னோட வாட்சப், லாஸ்ட் சீன், நைட் ரெண்டு மணி காட்டுச்சு. அவ்ளோ நேரம் என்ன பண்ண?!” என்று கேட்க, இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவள், “நான் நைட் சீக்கிரமே தூங்கிட்டேன் டி. நல்லா பாரு ஐஷு, வேற யாரவது இருக்கும்.” என்று பதில் சொல்ல, அவளின் தோழியோ, “ப்ரோபைல் பிக்சர் வச்சுகூடவா தெரியாது. அது நீ தான். வேணும்னா பாரு.“ என்றவள், உடனடியாகத் தனது மொபைலை எடுத்து காண்பிக்க, ஆம், தோழி சொன்னபடி நள்ளிரவை தான் காட்டியது. இதெப்படி என்று யோசித்தவள், ஒருவேளை தெரியாமல் தூக்க கலக்கத்தில் ஓபன் செய்திருப்போமோ என்ற குழப்பத்தில் இதை அப்படியே விட்டுவிட்டாள். ஆனால் இது தினமும் தொடர்ந்தது.

இது மட்டுமில்லாமல், மிருதுளா இல்லாத சமயத்தில், அவளின் முகநூல் பாஸ்வோர்டையும் எப்படியோ தெரிந்து கொண்ட சந்துரு, தனது லேப்டாப்பில் அவளது முகநூலை ஓபன் செய்தவன், அவளது நண்பர்கள் லிஸ்டில் அவனுக்குப் பார்க்க, தவறாவனர்கள் என்று தோன்றிய ஆண் நண்பர்களையும், மேலும் இவளது போஸ்டிற்குக் கமெண்ட் செய்தவர்களையும் அன்பிரின்ட் செய்தான்.

இந்த விஷயமும் அவளது அலுவகத்தில், சர்ச்சையைக் கிளப்பியது. ஆண் நண்பர்கள் வந்து, “என்ன மிரு, பிடிக்கலனா நேரடியா சொல்லிடு. நாங்க டிஸ்டர்ப் பண்ணமாட்டோம். நாங்க அந்த மாதிரி பசங்க கிடையாது. அதைவிட்டுட்டு எதுக்கு காரணமே இல்லாம, அன்பிரின்ட் செஞ்ச?, நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா?” என்று எல்லோரும் வந்து கூறிவிட்டு போகவும், தான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று இவள் பதில் சொல்ல, “ஒருவேளை உன்னோட ஐடியை ஹேக் பண்ணிட்டாங்களோ?“ என்று நண்பர்கள் சொல்ல, ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று நினைத்தவள், கொஞ்ச நாள் முகநூலை பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்தாள். அதன் பிறகு அவளது ஐடியில் எந்த ஆக்டிவிட்டீஸ்ஸும் காட்டாதாதால், ஹேக் தான் போல என்று, நினைத்து அப்போதைக்கு பயன்படுத்தாமால் சிறிது காலம் கழித்துப் பார்த்துக்கொள்ளலாம் என்று அப்படியே விட்டுவிட்டாள். மொபைலில் இருந்த ஆப்பையும் டிலீட் செய்துவிட்டாள். இவள் இப்படிச் செய்ததனால், சந்துருவும் அதற்கு மேல இவளுடைய முகநூலை பார்க்காமல் விட்டுவிட்டான்.

மிருதுளாவின் அலுவலகத்தில், சமீபத்தில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடி, அடுத்து வரவிருக்கும் விடுமுறை நாளில், ஹோட்டலில் விருந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். அலுவக வேலைகளில் இந்த விஷயத்தைச் சந்துருவிடம் சொல்ல மறந்துவிட்டாள் மிருதுளா. புறப்படும் நாள் அன்று தான் இந்த விஷயம் நியாபகம் வர, சந்துருவிடம் சொல்லலாம் என்று நினைத்தாள், ஆனால் அவனோ அவசர வேலையாக சீக்கிரமே அலுவகம் சென்றுவிட்டான். சரி என்று அவனுக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பிவிட்டு, இவள் ஹோட்டலுக்குச் சென்றுவிட்டாள்.

நண்பர்களுடன் அரட்டை, கேலி கிண்டல் என்று நேரம் செல்ல, இவள் புறப்பட்டு வீட்டிற்கு வர இரவு நேரம் ஆகிவிட்டது. காலிங் பெல்லை அடித்துவிட்டு இவள் காத்திருக்க, உடைகூட மாற்றாமல், சந்துரு வந்து கதவை திறந்தான். இவள் உள்ளே நுழைந்ததும், கதவை பூட்டிவிட்டு வந்தவன், “எங்க போயிட்டு வர?!” என்று, பல்லை கடித்துக்கொண்டு கேட்க, அவளோ, “அதான் உங்களுக்கு மெசஜ் அனுப்பி இருந்தேனேங்க.” என்று சொல்லி முடிக்கவும், அவள் கன்னத்தில் இடியெனச் சந்துருவின் கை இறங்க, அந்த அடியில் தூர போய் விழுந்தாள் மிருதுளா. கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அதிர்ந்த முகத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் அடித்த அடியில் கண்கள் கலங்கிவிட, கன்னத்தில் கைவைத்துக்கொண்டு தன் கணவனையே மிருதுளா பார்த்துக் கொண்டிருக்க, அவள் அருகில் வந்து அவள் முடியை கொத்தாக பற்றித் தூக்கியவன், “கொழுப்பு கூடிடுச்சா டி உனக்கு. என்ன தைரியம் இருந்தா, என்கிட்டே ஒரு வார்த்தை கேட்காம, ஊர் சுத்த போயிருப்ப. அதுவும் இவ்ளோ நேரம் கழிச்சு வருவ. என்னைப் பார்த்தா, உனக்கு எப்படித் தெரியுது??“ என்று கண்களில் கொலைவெறியுடன் அவள் முகத்துக்கு அருகில் கர்ஜிக்க, மிருதுளாவிற்கு உடம்பெல்லாம் ஜில்லிட ஆரம்பித்தது. “பி…. பிரின்ட் கல்….கல்யாணம்ன்னு ட்ரீ….” என்று சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் இடைபுகுந்தவன், “வாயை மூடுடி. எவ ட்ரீட் கொடுத்தா உனக்கென்னடி. நீ எதுக்குப் போற?! சோத்துக்கு வக்கில்லாமையா இருக்க?! நல்ல வாய்க்கு ருசியா சாப்பிட தான செய்ற!” என்று கேட்கவும, அதிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவள், “ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?? பிரின்ட் தான….” என்று வார்த்தைகள் தந்தியடிக்கப் பதில் சொல்ல, அவள் முடியை இன்னும் இறுக இவன் பிடிக்க, அந்த வலியில், “ஸ்ஸ்ஸ், வலிக்குதுங்க. ப்ளீஸ்.” என்று இவள் முகத்தைச் சுருக்க, “இனிமே பிரின்ட், ம*** யார்கூடையாவது வெளிய போன, காலை உடைச்சிடுவேன்.“ என்று மிரட்டியவன், அப்படியே அவளைத் தள்ளிவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

அவன் செல்வதையே கண்களில் கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தவளுக்கு, ‘ஏன் திடீரென்று இவருக்கு இந்தக் கோவம்?! அலுவகத்தில் வேலை பார்க்கும் அவருக்கு இந்தப் பேசிக் மேனர்ஸ் கூடத் தெரியாதா? ஏன் இவர்மட்டும் அப்படி வெளியே போகவில்லையா? என்னை மட்டும் எதற்குத் திட்டுறாரு?’ என்ற கேள்விகள் மனதுக்குள் வந்து குழப்பியது. அதே நேரம் அவன் அடித்ததில் தலைவலி வந்திருக்க, எழுந்து முகம் கழுவ சென்றாள்.

இந்த சம்பவத்துக்குப் பின், அவ்வபொழுது இது மாதிரி சம்பவங்கள் தொடர்ந்தது. இவள் எதேர்ச்சையாக, வாசலில் நிற்கும்பொழுது, பக்கத்துக்கு வீட்டு ஆண்கள் இவளை பார்ப்பதை, சந்துரு பார்க்க நேர்ந்தால், இவளை தவாறான வார்த்தைகளில் திட்டுவான். இவன் இல்லாத நேரம் யாரேனும் வீட்டிற்கு வந்தால், அதற்கும் இவளுக்கு அடி கிடைக்கும்.

அன்று அப்படிதான், சந்துரு கடைக்குச் சென்றிருந்த நேரம், திடீரென்று கிட்சன் பைப் உடைந்து தண்ணீர் பீயிச்சி அடிக்க, அவசரத்துக்கு அபார்ட்மெண்ட் ப்ளம்பரை வரவழைத்திருந்தாள். அப்பொழுது பார்த்து வீட்டிற்கு வந்த சந்துரு வாசலில் ஒரு ஆணின் செருப்பு இருப்பதைப் பார்த்ததும், வேகமாக உள்ளே வந்தவன், மிருதுளாவை அழைக்க, அறையில் இருந்து வெளியே வந்தவளை, “எவன் செருப்பு டி அது வெளியே கிடக்கு. யாரு, உன்னோட கள்ள காதலனா?!” என்று அசிங்கமாகக் கேட்க, இந்த வார்த்தையில், அதிர்ந்தவள், பதில் சொல்லுமுன், வேலையை முடித்துவிட்டு அங்கே வந்த ப்ளம்பர், இந்தக் காட்சியைப் பார்த்துவிட, “சர், இப்படித் தப்பா பேசாதீங்க. அந்தப் பொண்ணு எவ்வளவு நல்ல பொண்ணு. அதைப் போய்த் தப்பா பேசுறீங்க!!” என்று சொல்ல, இவளை விடுத்தது அவனிடம் சென்றவன், “இவ நல்லவன்னு உனக்கு எப்படித் தெரியும்?! உன்கிட்ட அப்படிதான் பழகுறாளா?!” என்று கோவத்துடன் கேட்க, “சர், மரியாதையா பேசுங்க!! என்று அவன் பதில் சொல்லவும், “உனக்கு என்னடா மரியாதை வேண்டி கிடக்கு. திறந்த வீட்டில நாய் நுழைஞ்ச மாதிரி…..” என்றவன் அவனை அடிக்கப் போக, மிருதுளா தான், சந்துருவை இழுத்துப் பிடித்துத் தடுத்தாள். “நீங்க போங்க ண்ணா. ப்ளீஸ். இவர் பேசுறதுக்கு நான் மன்னிப்புக் கேட்கிறேன். ப்ளீஸ் ண்ணா.” என்று கெஞ்ச, இவனை முறைத்துக்கொண்டே போனவன், “இப்படி நாக்குல நரம்பு இல்லாம பேசுறவனுக்கு எல்லாம், இப்படி ஒரு நல்ல பொண்ணு.” என்று முனுமுனுத்துக்கொண்டு சென்றான்.

அவன் சென்றதும், கணவன் அடித்த அடியிலும், பேசிய வார்த்தைகளிலும், உடலளவிலும் மனதளவிலும் கூனி குறுகி போய்விட்டாள் மிருதுளா. அதன் பின் வந்த நாட்களில் இவள் அனுபவித்த வேதனையைத் தண்டனை கைதிகள் கூட அனுபவித்திருக்க மாட்டார்கள். ஆனால் தங்களுக்குள் நடக்கும் எதையும், தன் பெற்றோர் வீட்டில் ஒரு தடவை கூட மிருதுளா சொன்னதில்லை. அவர்கள் எப்பொழுது வந்தாலும் சிரித்த முகமாகவே, இருப்பவள், அவர்கள் கிளம்பும் வரையில் அப்படியே இருப்பாள். தன் மகள் சந்தோஷமாக இருப்பதாகவே சித்ராவும் மோகனும் நினைத்திருந்தனர். அதே நேரம், தங்களுக்கு இன்னும் ஒரு பேரகுழந்தை இல்லையே என்ற சின்ன வருத்தம் மட்டுமே அவர்கள் மனதுக்குள் இருந்தது.

இப்படியே நாட்கள் செல்ல, அவர்கள் திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டை கடந்திருந்தது. இப்போதெல்லாம் சந்த்ரு சொல்லும் உடைதான் மிருதுளா அணிந்துகொள்வாள். அந்த அளவுக்கு இவளை அவன் தன் கட்டுபாட்டிற்குள் வைத்திருந்தான். அவனே காலையும் மாலையும் மிருதுளாவை அழைத்துசென்று, கூட்டிவருவான். இவளுக்கே தெரியாமல் சில விஷயங்கள் அவன் கண்களுக்குப் பட்டாலும், மிருதுளாவிற்கு அன்றைக்கு அடி உதை தான். எல்லாவற்றையும் தன் பெற்றோருக்காகப் பொறுத்துக்கொண்டாள்.

அன்றும் அப்படிதான், தனது மொபைலில் எதையோ பார்த்துக்கொண்டு மிருதுளா சிரிக்க, அதைப் பார்த்துவிட்ட சந்துரு, அவள் மறுபடியும், யாருடனோ சேட் செய்துகொண்டிருகிறாள் என்று நினைத்தவன், வேகமாக அவள் அருகில் வந்து அவள் மொபைல பிடிங்கியவன், கோபத்துடன் அதைத் தூக்கி போட, சுவற்றில் மோதி, சுக்குநூறாக உடைந்து சிதறியது.

கலவரத்துடன் இந்தக் காட்சியை மிருதுளா பார்த்துக் கொண்டிருக்க, அவள் அருகில் வந்தவன், “அதுக்குள்ள புதுசா பாய்பிரின்ட் பிடிச்சிட்டியா?!” என்று கேட்க, என்ன சொல்ல வருகிறான் என்று குழம்பியவள், குழப்பத்துடன் அவன் முகத்தைப் பார்க்க, “என்னடி முழிக்கிற?? ஏற்கனவே உன் fbல இருந்த ப்ரிண்ட்ஸ் எல்லாரையும் அன்னைக்கு அன்பரின்ட் செஞ்சுட்டேனே. இப்போ யார் கூடப் புதுசா பேசிட்டு இருக்க??” என்று கர்ஜிக்க, அப்பொழுது தான், அன்று தன் நண்பர்கள் சொன்னது இவளுக்குப் புரிந்தது. “நீங்க தான் அப்படிச் செஞ்சதா?!” என்று அதிர்ப்தியுடன் அவள் கேட்க, “ஆமாம் டி. நான் தான் செஞ்சேன்.” என்று அவன் தெனாவட்டாகப் பதில் சொல்ல, “யாரை கேட்டு, இப்படிச் செஞ்சீங்க?? என் ப்ரிண்ட்ஸ் என்ன நினைப்பாங்கன்னு யோசிக்க மாட்டீங்களா?!” என்று சற்றே கோபத்துடன் பதிலுக்கு அவளும் கேட்க, அவளது தாடையைப் பற்றியவன், “எவன் கிட்ட டி கேட்கணும். நீ கண்டவன் கூடப் பிரின்ட்ஷிப் வச்சுப்ப, அதை நான் பார்த்துட்டு இருக்கனுமா?” என்று கர்ஜிக்க, “அவங்க கண்டவங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்றாள் பதிலுக்கு. அதில் இன்னுமே கோபமடைந்தவன், அவளது தாடையை இன்னும் இறுக பற்றி, “என்னைத் தவிர எவனுமே உனக்குக் கண்டவங்க தான். இனி மொபைல் யுஸ் பண்றதை பார்த்தேன். தொலைச்சுடுவேன் தொலைச்சு.” என்று கூறியவன், அப்படியே அவளைத் தள்ளிவிட்டு வெளியே வந்தவன், கதவை இழுத்து சாத்திவிட்டு சென்றுவிட்டான். அவன் போனதும் அழுகையுடன் அப்படியே மண்டியிட்டவள், ‘இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கொடுமையைத் தாங்க போறேனே!’ என்று நினைத்து அழுது கரைந்தாள்.

இரண்டு வருடம் கூட முழுதாக முடியாத பொழுதே மிருதுளாவிற்குத் திருமண வாழ்க்கை மிகவும் கசந்து போனது. சந்துரு பேசும் வார்த்தைகளும், நடந்துகொள்ளும் முறையும், அவளை அவளே கூனி குறுக செய்தது. சில சமயம் படுக்கையில், அவன் பேசும் வார்த்தைகளைக் கேட்கும்பொழுது, எங்கையாவது போய்ச் செத்துவிடலாம் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். ஆயினும், என்றாவது ஒரு நாள் திருந்துவான் என்று நம்பி கொண்டிருந்தாள்.

சந்தேகம் என்ற நெருப்பு, சிறு பொறியாகச் சில சமயம் கண்ணனுக்குத் தெரிந்தாலும், ஒரு குடும்பத்தையே அழித்து நிர்கதியாக நிற்கவைக்கும் சக்தி அது ஒன்றுக்கே மட்டுமே உண்டு. கணவன், குடித்துவிட்டு வந்து அடிப்பதோ, இல்லை வீணாகக் கோப படுவதைக் கூடத் தாங்கிக்கொண்டு, “அவர் அப்படித்தான். அடிப்பாரு. அப்புறம் என்கிட்டே தானே வருவாரு.” என்று தங்களைச் சமாதனம் செய்துகொண்டு செல்லும் மனைவிமார்கள் எத்தனையோ பேர்.

ஆனால் சந்தேகம் என்ற திரை மட்டும் கணவன் மனைவி நடுவில் விழுந்துவிட்டால், சர்வநாசத்தை உண்டாக்கும். இன்றைய சமுதாயத்தில் நாட்டில் நடக்கும், எவ்வளவோ கொலைகளுக்கு இந்தச் சந்தேகமும் ஒரு முக்கியக் காரணம். மனைவி மேல் சந்தேகப் பட்டு, அவள் கழுத்தை அறுப்பதும், பின் பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்வதும் ஓர் இடத்தில நடக்கிறது என்றால், கணவன் மேல் சந்தேகம் கொண்டு, கூலி படைகளை ஏவியோ, இல்லை நண்பர்களுடன் சேர்ந்தோ, இல்லை தன் கையாலேயே கணவன்மார்களைக் கொள்வதும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கு ‘அன்பு’ என்பதே ஒரே வழி. உங்கள் துணையை முழு மனதுடன் நேசியுங்கள். ஒரு இடத்திலும், அவர்களை அன்புக்கும் ஏங்க வைக்காதீர்கள். அவர்களை எந்தச் சந்தர்பத்திலும் விட்டுக் கொடுக்காதீர்கள். அவர்களை இழிவு படுத்தாதீர்கள். அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். உங்கள் எதிர்பார்ப்பை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களின் இயல்பை காதலியுங்கள். நிச்சயம் அவர்கள் உங்களை ஏமாற்ற மாட்டார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் பாசம் கிடைக்கவில்லை எனும்போது தான், அதை வெளியே தேட ஆரம்பிப்பார்கள். அதன் பாதிப்பு, போலியான அன்புக்கு அடிமை ஆகி, தங்கள் சுயத்தையே இழந்துவிடுகிறார்கள். சில சமயம் தங்களையே இழந்துவிடுகிறார்கள். தப்புச் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் கூட உங்களின் தூய்மையான அன்பை பார்த்து, உங்களுக்குத் துரோகம் செய்யயும் எண்ணத்தைக் கைவிடுவார்கள்.

இதுபோன்ற வீணான கற்பனை தான், இப்பொழுது சந்துருவை மிருகம் போல நடக்கவைக்கிறது. அவனின் எல்லா இழி செயல்களையும் பொறுத்துக்கொண்டு போகும் மிருதுளா, நிச்சயம் அவன் இப்படி ஒரு செயலை செய்வான் என்று கனவிலும் கண்டிராத ஒன்றை தான் அடுத்து அவள் பார்க்கபோவது.

அன்றைய தினம் விடுமுறை நாள். சில நாட்களுக்கு முன்புதான், தாயை பார்பதற்காகச் சந்துரு ஊருக்குச் சென்றிருந்தான். இன்று விடுமுறை தினம் என்பதால், ஆரா தன் சகோதரியை பார்பதற்காக அன்று மிருதுளாவின் வீட்டிற்கு வந்திருந்தாள். சமைத்து சாப்பிட்டு, சிரிப்புடன் இருவரும் தங்கள் நேரத்தை கழித்துக் கொண்டிருக்க, மாலை வேளை, மிருதுளா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்க, காலையில் இருந்து வேலை செய்து அவள் சோர்ந்து தெரிவதால், அவளிடம் இருந்து துடைப்பத்தை வாங்கிய ஆரா, தானே வீடு முழுவதையும் பெருக்கி முடித்தவள், ஒட்டடை குச்சியால், ஒவ்வொரு அறையாகச் சுத்தம் செய்துகொண்டிருக்க, அப்பொழுது மிருதுளாவின் படுக்கை அறையில் இருந்த பரனை சுத்தம் செய்யும்பொழுது, சின்னதாகக் கருப்பு நிற பொருள் ஒன்று மேலே இருந்து கீழே விழ, “என்னதிது?!” என்பது போல அதை எடுத்துப் பார்த்தாள் ஆரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!