Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 25.2

அத்தியாயம் 25(2)

தன் அக்காவின் வாழ்வில் நடந்தவற்றைச் சொல்லி முடித்திருந்தாள் ஆரா. பழைய நினைவுகளின் தாக்கத்தில், அவள் கண்களில் கண்ணீர் வழிய, பக்கத்தில் அமர்ந்திருந்த ஜெய், எழுந்து அவள் அருகில் போக, கணவனின் வயிற்றில் முகம் புதைத்து அழ ஆரம்பித்துவிட்டாள். “அழாதடா அம்மு. ப்ளீஸ். நடந்து முடிஞ்சதை நினைச்சு உன்னை நீயே கஷ்டபடுத்திக்காத டா. உண்மையில அண்ணி ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்க. அவங்க நல்ல மனசுக்கு இனி அவங்களுக்கு எல்லாமே நல்லது தான் நடக்கும் ஆரா. நீ கவலைபடாத மா. அவங்க காயத்துக்கு எல்லாம் கெளதம் அண்ணா மருந்தா இருப்பான்.” என்றவன் அவளின் முதுகை வருடி கொடுக்க, ஆராவின் அழுகை நின்ற பாடில்லை. மெல்ல அவள் அருகில் அமர்ந்தவன், அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொள்ள, இவன் நெஞ்சில் முகம் புதைத்தவள் இத்தனை நாள் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த மன அழுத்தம் குறையும் வரை அழுது கரைந்தாள்.

தன்னவனின் அணைப்பில், தன் இத்தனை நாள் பாரத்தை இறக்கி வைத்தவளின் அழுகை நேரம் ஆக ஆகக் குறைய, அவளின் கண்ணீரை அழுத்த துடைத்துவிட்ட ஜெய், “நீ எப்படி ஆரா பாப்பாவை கண்டுபிடிச்ச?! அவங்க செஞ்சது சூழ்ச்சி எப்படி தெரிஞ்சுது?” என்று கேட்க, அதையும் அவனிடம் சொன்னாள்.

************



Advertisement

அன்று மிருதுளா தற்கொலை முயற்சி செய்ததைப் பார்த்ததும், ஆராவிற்கு மீனாட்சி மேல் கட்டுகடங்காமல் கோபம் வந்தது. அவரை நேரில் சந்திந்து முகத்துக்கு நேரே நாலு கேள்வி கேட்க வேண்டும் என்ற வெறி உண்டாக, வீட்டில் தோழிக்குத் திருமணம் என்று பொய் கூறிவிட்டு, பிளைட் பிடித்து மதுரை வந்தவள், நேரே மீனாட்சியின் வீட்டிற்குச் செல்ல, காவலாளி ஒன்றும் சொல்லாமல் இவளை உள்ளே விட, ஹாலுக்கு வந்தவள், வேலை செய்யும் பெண்ணிடம் மீனாட்சியைக் கேட்க, மேலே அறையில் இருப்பது தெரிந்தது.

வேகமாகப் படிகளில் ஏறி, அறை வாசலுக்கு வந்தவளின் காதில், சரண்யாவும், மீனாட்சியும் பேசிக் கொண்டிருந்தது விழ, அவர்கள் செய்த சதியை தெரிந்துகொண்டவள் அதிர்ந்து போனாள். கோபத்தில் விருட்டென்று கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றவள், “ச்சீ!! நீங்க எல்லாம் மனுஷ ஜென்மங்களா? உங்க சுயநலத்துக்காக, என் அக்கா வாழ்கையில விளையாடி இருக்கீங்க? நீங்களும் பொண்ணு தான!!” என்றவள் மீனாட்சியின் புறம் திரும்பி, “பெரியவங்களா இருந்துகிட்டு, இந்த அளவுக்குக் கீழ்த்தரமான வேலை செய்வீங்கன்னு நான் நினைச்சு கூடப் பார்க்கல!! உங்களை நம்பி கல்யாணம் செஞ்சு கொடுத்ததுக்குப் பச்சை துரோகம் செஞ்சுட்டீங்க? உங்க பையனுக்காக, என் அக்கா வாழ்கைய நாசப்படுத்துட்டீங்க!! செய்றதையும் செஞ்சுட்டு, சந்தோஷமா இருக்கீங்களா? அங்க என் அக்கா தினம் தினம் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா. உங்களைச் சும்மா விட மாட்டேன். நீங்க செஞ்ச கேவலமான வேலைக்கு, இப்போவே உங்க மேல போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து, உங்க சுயரூபத்தை இந்த ஊருக்கு காட்டுறேன்.” என்று கர்ஜித்தவள், திரும்பி போகக் காலடி எடுத்து வைக்க, “முடிஞ்சா செஞ்சுக்கோ!” என்ற மீனாட்சியின் குரலில் பிரேக் அடித்தது போல நின்றவள், திரும்பி அவரை முறைக்க, “என்ன அப்படிப் பார்க்குற, போலிசுக்குப் போகப் போறியா, தாராளமா போய்க்கோ. போலிஸ் போனா போகபோறது எங்க மானம் இல்லை, உன் அக்கா மானம் தான். டெஸ்ட் பைலை காமிச்சா, உன் அக்கா தான் ரொம்பவே அசிங்கபடுவா. என் பையனுக்கு உன் அக்கா தான் துரோகம் செஞ்சுட்டான்னு சொல்வேன். அதுக்கு ஆதாரம் தான் அந்தக் குழந்தை. எப்படிச் சொல்லணுமோ, அப்படிச் சொல்லுவேன். அதை மீறி உன்னால என்ன செய்யமுடியும்?! நாங்க தான் செஞ்சோம் சொல்றதுக்கு உன்கிட்ட எந்த ஆதாரமும் இல்ல.” என்று சொன்னவரின் கண்களில் கேலியும், வஞ்சமும் தெரிய, கலங்கி போனாள் ஆரா.

அதிர்ந்து போய் நின்றவளின் அருகில் வந்த சரண்யா, “உங்க அக்கா, வேற ஒரு……” என்று மேற்கொண்டு அசிங்கமான வார்த்தைகளைச் சொன்னவள், “போலிஸ் கேஸுன்னு போனா, கோர்டில இதைதான் நாங்க சொல்லுவோம். அத்தானும் நாங்க சொல்றதை தான் சொல்வாங்க. மீறி நீ ப்ரூவ் பண்ணும்னு எங்க போனாலும், ரிசல்ட் எங்களுக்குச் சாதகமாகத் தான் வரும். அதை வச்சே, உன் அக்காவை அசிங்கபடுத்த முடியும். பஞ்சாயதுலையே சொன்ன எங்களால, கோர்டில சொல்ல முடியாதா. நீயே உன் அக்காவோட மானத்தை நாறடிச்சிடாத. அப்புறம் குடும்பத்தோட…..” என்றவள் இறப்பது போலச் சைகை செய்து சிரிக்க, “ஏய்!!!!” என்று கர்ஜனையுடன், அவள் கழுத்தை பிடிக்கப் போன ஆரா, கஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டாள், இருவரையும் பொதுவாகப் பார்த்து, “எவ்ளோ நாள் உண்மையை மறைச்சு வைக்குறீங்கன்னு நானும் பார்க்கிறேன். என் அக்கா பட்டுட்டு இருக்கிற கஷ்டத்துக்கும் அவ கண்ணீருக்கும் நிச்சயம் நீங்க ஒரு நாள் தண்டனை அனுபவிப்பீங்க. சத்தியமா சொல்றேன். இது நடக்கும்.” என்று ஆவேசத்துடன் சொன்னவள், “கர்ர்ர்த்தூஊ!!” என்று தரையில் காரி உமிழ்ந்துவிட்டு, முகச் சுளிப்புடன் விறுவிறுவென்று படிகளில் இறங்கி சென்றாள்.

Advertisement

அவர்கள் சொன்னது போல, ஆராவால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் போயிற்று. எந்த வழியில் சென்றாலும், கடைசியில் அவமானப்படப் போவது தன் சகோதரி தான் என்பதால், கைகள் கட்டபட நிலையில் அங்கிருந்து புறப்படவள் அடுத்து சென்ற இடம், மோகன் அன்று குழந்தையை விட்டுச்சென்ற ஆனாதை ஆஷ்ரமம்.

Advertisement

ஆம்! அவளுக்கு மிருதுளாவின் குழந்தை உயிரோடு இருப்பது தெரியும். அன்றொரு நாள், குழந்தையின் நினைவில், சித்ரா மோகனிடம் பிதற்றிக் கொண்டிருக்க, தந்தையிடம் ஏதோ கேட்க வந்த ஆராவின் காதில் அனைத்தும் விழுந்தது. எப்பொழுதும் குழந்தையின் நினைவில், எல்லாவற்றையும் இழந்தது போல விட்டத்தை வெறித்துக் கொண்டிருக்கும் அக்காவிற்கு, குழந்தையாவது ஆறுதலாக இருக்கட்டும் என்று தான், எப்படியாவது குழந்தையைத் திரும்ப அழைத்துபோக இப்போது திருச்சிக்கு வந்திருந்தாள்.

ஆனால் அவளுக்கு, அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. முடிந்தவரை தனக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லி இவள் விசாரிக்க, இவள் அதிர்ஷ்டம் அன்றைக்கு, ஒரு குழந்தை தான் ஆஷ்ரமத்தில் விடபட்டிருந்தது. அதே நேரம் இவள் துரத்ரிஷ்டம், ஏற்கனவே அக்குழந்தையை யாரோ தத்தெடுத்து சென்றிருந்தனர்.

கஷ்டபட்டு, அவர்களிடம் போராடி, பணம் செலவு செய்து எப்படியோ ப்யுனிடம் இருந்த தத்தெடுத்தவரின் விலாசத்தை வாங்கினாள். தனது ப்ராஜக்ட் வேலைகளுக்கு நடுவில், தன் துப்பறியும் வேலையைச் செய்தவள், அந்த விலாசத்திற்குச் செல்ல, அங்கே இருந்தவர்களோ, காலி செய்திருக்க, அவர்கள் கொடுத்த சென்னை விலாசத்திற்குச் சென்று பார்க்க, அங்கேயும் அவளுக்கு ஏமாற்றமே. அவர்கள் மூலம் குழந்தை இருக்கும் இடம் பெங்களூரு என்று தெரியவந்தது. இதெல்லாம் கண்டுபிடிப்பதற்குள் அவளுக்கு எக்ஸாம் முடிந்து, கல்லூரி படிப்பும் முடிந்திருந்தது. வேலை தேடிக் கொண்டிருந்தாள்.

Advertisement

அந்தச் சமயம் தான் இண்டர்வியு என்று கூறிக்கொண்டு, பெங்களூர் வந்தவளுக்கு, மகிழ்ச்சியான நல்ல செய்தியும் கூடவே கெட்ட செய்தியும் கிடைத்தது. நல்ல செய்தி, குழந்தை இருப்பது அவளுக்கு ஏற்கனவே அறிமுகமான கௌதமிடம். அதனால் எப்படியும் அவனிடம் மிருதுளாவின் நிலைமையை எடுத்துச்சொல்லி, குழந்தையை வாங்கிச் செல்லலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால், கௌதமின் மனைவி இறந்துவிட்டாள் என்ற கெட்டச் செய்தி, அவளின் மனதில், வருத்தத்தைக் கொடுத்த அதே நேரம், மிருதுளாவும் கௌதமும் இணைந்தால் நன்றாக இருக்குமே என்ற அபத்தமான ஆசையையும் உண்டாக்கியது. ஏனெனில் அவளுக்குத் தெரியும் கௌதமை பற்றி. அவனின் நல்ல குணம் பற்றி.

ஆனால் இந்த எண்ணம் எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்று அவளுக்குத் தெரியாது, அதே நேரம் இந்த எண்ணம் சுயநலம் போல ஒரு பக்கம் தோன்றினாலும், மிருதுளாவையும், தேஜாவையும் நினைக்கையில், அது அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அதன் பின் அவளின் ஒரே குறிக்கோள் எந்தக் காரணத்தையாவது வைத்து குடும்பத்துடன் பெங்களுர் வருவது.

அவள் நினைத்தது போல, அவளுக்கு அங்கே வேலை கிடைத்துவிட, அதுவே அவளுக்கு ஒரு வித பாசிடிவ் உணர்வை தர, இதற்குப் பின் கடவுள் விட்ட வழி என்று முடிவு செய்துகொண்டு இங்கே கிளம்பி வந்துவிட்டாள். அதற்குப் பின் அவள் நினைத்தது போலவே எல்லாமே நடந்து முடிந்து, இதோ இன்று கௌதமும் மிருதுளாவும் வாழ்கையில் இணைந்து விட்டனர்.

**********

எல்லாவற்றையும் தன் கணவனின் கையணைப்பில் சொன்ன ஆரா, ஜெய்யிடம் இருந்து விலகி, அவன் முகம் பார்த்தவள், “நான் செஞ்சது தப்பா ஜெய்?! என்னோட அக்காவை மட்டும் நினைச்சு சுயநலமா இருந்துட்டேனா?!” என்று கண்களில் தவிப்புடன் கேட்க, “ச்சே!! என்ன அம்மு. ஏன் இப்படி எல்லாம் பேசுற?! உன் அக்காவுக்காக இவ்வளவு பெரிய வேலையெல்லாம் செஞ்சு இருக்க. நீ எவ்வளவு கிரேட் தெரியுமா!! ஐயம் ரியலி ப்ரௌட் ஆப் யு. நான் அந்த இடத்தில இருந்தாலும், என் அண்ணாவுக்கு நல்ல வாழ்கை அமையணும்னு, நானும் இதையே தான் செஞ்சு இருப்பேன்.”

“நீ பெங்களூர் வர்ற போய்த் தானே, என் அண்ணாவுக்கு, மிருதுளா அண்ணி மாதிரி ஒரு நல்லவங்க மனைவியா கிடைச்சு இருக்காங்க. அண்ணன் தனியாவே இருந்துடுவானோன்னு நானும் எத்தனை தடவை வருத்தப்பட்டிருக்கேன் தெரியுமா அம்மு. இன்னைக்கு அண்ணன் வாழ்கையில தேவதை மாதிரி ரெண்டு பொண்ணுங்க வந்திருக்காங்க. ஒன்னு அண்ணி. இன்னொரு குட்டி தேவதை தேஜா. அவங்க ரெண்டு பேரும் இல்லைன்னா, அண்ணன் வாழ்கை எப்படி இருந்திருக்குமோ?!!“ என்று உணர்ந்து கூறியவனுக்குத் தேஜா, கௌதமின் குழந்தை இல்லை என்பது புதிய செய்தி.

கௌதமின் வாழ்கையில் நடந்தவற்றைச் சுருக்கமாக மனைவியிடம் சொன்னவனுக்கு இப்பொழுது எல்லா நிகழ்வுகளும் புரிந்தது போல இருந்தது. அதையே அவளிடம் சொன்னவன், “உனக்கு இருந்த தைரியம் கூட எனக்கு இருந்திருக்குமோ தெரியல அம்மு. என்னவெல்லாம் செஞ்சுருக்க, சாம்பு துப்பறியும் சாம்பு!” என்று அவளை அமைதிபடுத்த இவன் கிண்டல் அடிக்க, ஆராவோ சற்று முன்பு பேசியதை எல்லாம் மறந்து, “நான் சாம்புவா!!” என்றவள், ஜெய்யை அடிக்க எழுந்துகொள்ள, அவனோ, அவளை இழுத்து அணைத்தவன், அவளுடன் சேர்ந்து கட்டிலில் சரிய, கைகள் இரண்டும் அவன் பிடியில் இருக்க, ஆராவோ, அவனைக் கடிக்க முயற்சிக்க, “அடிப்பாவி!! புருஷனை கடிக்கிற. உன்னை என்ன பண்றேன் பாரு.” என்றவன், அவள் இதழ்களைச் சிறைப்பிடித்தான்.

அவனின் இந்தத் திடீர் செயலில் திமிறி அடங்கியவள், அந்த இதழ் ஸ்பரிசத்தில், தன்னைத் தொலைக்க, நீண்ட நேரத்திற்குப் பின்பு அவள் முகத்தில் இருந்து நிமிர்ந்தவன், அடுத்தகட்டத்துக்குச் செல்ல அனுமதி வேண்டி தன் மனைவியின் முகம் பார்க்க, ஆராவோ, “யாரோ இங்க பஸ்ட் நைட்ல, என்கிட்டே சண்டை போட்டு, வீர வசனம் எல்லாம் பேசுனாங்களே!” என்று அவனை வம்பிழுக்க, ஜெய்யோ, “அது போன மாசம் இருந்த ஜெய். இது இந்த மாசம் இருக்கிற ஜெய்.” என்று பதில் கூற, “அப்போ அடுத்த மாசம் எந்த ஜெய் இருப்பாரு?!” என்று அவள் சிரிக்காமல் கேட்க, “ம்ம்! அடுத்த மாசம், உன்னை மாசமாக்க (முழுகாம) போற ஜெய்.” என்றவன், அவள் கழுத்தில் செல்லமாகக் கடித்து, தான் சொன்ன வேலையில் இறங்க, ஆராவோ சிரிப்புடன் அவனுடன் இரண்டற கலக்க, அங்கே கணவன் மனைவி உறவு அழகாக மலர்ந்தது.

இங்கே கௌதமின் அறையிலும் ஒரு வித கனத்த நிலைமை தான். சற்று முன்பு பார்டியில் சந்துருவை பார்த்ததில் இருந்து, பழைய நினைவுகள் என்னும் சூறாவளி சுழற்றி அடித்ததில், தூசி போல் கரைந்து காணமல் போயிருந்த மிருதுளாவிற்கு, பிடியாக இருந்தான் கெளதம். அறைக்குள் வந்ததும் தன்னைக் கட்டுபடுத்திக்கொள்ள முடியாமல் அழுகையுடனே கௌதமிடம் எல்லாவற்றையும் சொல்லி முடித்திருந்தாள் மிருதுளா.

சொல்லி முடித்தவள், இன்னும் அன்றைய நாள் நினைவில், கூனி குறுகிபோய், தன் கைகளில் முகம் புதைத்து கதறி அழ, ஒன்றும் சொல்லாமல் அவளை அழவிட்டவன், இறுக அணைத்துக் கொண்டான். பல மணிநேரம் அழுது கரைந்தவளின் விசும்பல் மட்டும் இன்னும் குறையாமல் இருக்க, அவளை விட்டு எழுந்தவன், குனிந்து அவளின் இடுப்பில் கைகொடுத்து, அப்படியே கையில் ஏந்த, சட்டென்று கண்விழித்த மிருதுளா, கண்களை விரித்துக் கௌதமின் கண்களைப் பார்க்க, அவனும் இவளின் கண்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

மிருதுளாவின் கண்களில் தன் கருவிழிகளைக் கலக்கவிட்டபடியே, அவளைத் தூக்கிக்கொண்டு பால்கனிக்கு சென்றவன், அவளை இறக்கிவிட, இன்னும் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்துக்கு அருகே தன் முகத்தை இவன் கொண்டு போக, அனிச்சை செயலாக, அவள் கண்கள் மூடிக்கொள்ள, அழுது சிவந்திருந்த அவளின் கண்களில் மென்மையாகத் தன் இதழை ஒத்தி எடுத்தவன், அவளின் நெற்றில் ஆழமான முத்தம் ஒன்றை வைக்க, இப்பொழுது அவள் கண்கள் திறந்துகொண்டது, உதடுகள் அவள் நெற்றியில் அப்படியே இருக்க, மீண்டும் இருவர் கண்களும் மற்றவர் கண்களில் தங்களைப் புதைத்துக்கொள்ள, கௌதமின் அந்தப் பார்வையே சொன்னது, ‘இனி நீ, எனக்கு மட்டும் தான். வேறு எதுவும் உனக்குத் தேவையில்லை.’ என்று. அதில் நெகிழ்ந்தவள், அவன் நெஞ்சில் தலை சாய்த்துக்கொள்ள, சில நிமிடங்கள் அப்படியே இருந்தவன், பின் அவளை நிமிர்த்தி வானத்து நிலவை பார்க்கும்படி நிற்கவைத்து, அவளின் பின்னில் இருந்து அணைத்துக் கொண்டவன், அவள் தோளில் தன் தாடையை வைத்துக்கொண்டான்.

சில நிமிட அமைதிக்குப் பின், “ரிது மா, நடந்ததில உன்னோட தப்புன்னு எதுவும் இல்லை. அது உனக்கே தெரியாம நடந்த விஷயம். நீ எந்தத் தப்பும் செய்யாதப்போ, அதை நினைச்சு நீ கூனி குறுக வேண்டிய அவசியம் இல்லை அம்மு. அதை மொதல்ல புரிஞ்சிக்கோ. இப்படிச் செஞ்சதுக்கு அவங்க தான் தலை குனியனும். இனி நீ பழசை பத்தி நினைச்சுப் பார்க்ககூடாது. இப்போ நீ மிஸ்ஸஸ் கெளதம். நீ என் பொண்டாட்டி ரிது. இனி யாரும் உன்னை ஒரு வார்த்தை சொல்ல நான் விடமாட்டேன். இதை மொதல்ல உன் மனசில பதியவச்சுக்கோ. இல்லை நான் பதிய வைப்பேன்.” என்று கெளதம் சொல்ல, அவன் கை அணைப்பில் நின்றவாறே, முகத்தை அவன் பக்கம் திருப்பியவள், ‘எப்படி?!’ என்ற பார்வை பார்க்க, அவளைத் தன் பக்கம் திருப்பியவன், “இப்படித் தான்.” என்றவன், அவள் நெஞ்சில் தன் இதழை அழுத்த பதிக்க, அதன் கூச்சத்தில் இவள் சிரிக்க, மீண்டும் மீண்டும் அவளை இவன் சீண்ட, “ப்ளீஸ் விடுங்க. கூசுது.” என்றவள் ஒரு கட்டத்தில், “ப்ளீஸ் கெளதம்.” என்று சொல்ல, சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தவன், “இப்போ என்ன சொன்ன?!” என்று கேட்க, அவளோ “என்ன சொன்னேன்??” என்று கேட்க, “என்னை என்ன சொல்லி கூப்பிட்ட??!” என்று அவன் பதிலுக்குக் கேள்வி கேட்க, முதல் முறை அவன் பெயரை சொன்னது நியாபகம் வர, வெட்கத்தில் முகத்தைக் குனிந்து கொண்டாள்.

மனைவியின் முகத்தை நிமிர்தியவன், “ரிது மா. இன்னொரு தடவை சொல்லேன். ப்ளீஸ்.” என்று வம்பிழுக்க, அவளோ இவன் பிடியில் இருந்து ஓடப்பார்க்க, இவன் விட்டால் தானே. எதுவும் சொல்லாமல் மிருதுளாவின் முகத்தையே அவன் பார்த்துக்கொண்டிருக்க, சொல்லாமல் விட மாட்டன் என்பது புரிய, மெதுவாக, “கெளதம், ப்ளீஸ!” என்றாள் அவன் முகம் பார்க்காமல்.

அவள் முகத்தில் தெரிந்த அவஸ்தையைப் பார்த்து வாய் விட்டு சிரித்தவன், “பேர் சொல்றதுக்கு எதுக்கு அம்மு இவ்ளோ வெக்கம். என்கிட்டே நீ ப்ரீயா இருக்கலாம் டா. என்னவேனா கூப்பிட்டுக்கோ. ஈவன் வாடா போடா கூடக் கூப்பிடலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.” என்று இவன் சொல்லவும் மிருதுளா ‘அப்படியா?!‘ என்பது போலப் பார்க்க, அவள் நெற்றியில் தன் நெற்றியை வைத்து லேசாக முட்டியவன், “அப்படிதான்!” என்றான். அவனின் முகத்தில் தெரிந்த கனிவில் தன் கவலையை மறந்து போனாள் அவனின் மனையாள்.

அதன் பின் அவளை அழைத்துக்கொண்டு அறைக்குள் வந்தவன், கட்டிலில் அவளைத் தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு படுக்கவைத்தவன், முதுகில் தட்டிக்கொடுத்து, அவளைத் தூங்க வைத்தான். நேரம் செல்ல செல்ல, மிருதுளா தன்னை மறந்து தூங்க ஆரம்பித்ததும், அவளின் நெற்றியில் மிருதுவாக இதழ் பதித்தவன், அவளைச் சுற்றி கைகளைப் போட்டுக்கொண்டு தானும் உறங்கி போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!