Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 28.1

அத்தியாயம் 28 (1)

காலை எழுந்ததில் இருந்தே கௌதமிற்கு மன அழுத்தமாக இருந்தது. தேஜாவை பற்றிய உண்மையை மிருதுளாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நேற்று முடிவெடுக்கும்பொழுது ஒரு வேகத்தில் எடுத்துவிட்டான். ஆனால் இப்பொழுது, அவளிடம் சொல்ல வேண்டுமே என்று நினைக்கையில், நெஞ்சுக்குள் ஒருவித பயம் உண்டானது. அது, உண்மையைச் சொல்வதைப் பற்றிய பயம் அல்ல, மாறாகச் சொன்ன பிறகு மிருதுளா என்ன நினைப்பாள் என்பதை நினைக்கையில் எழும் பயம்.

‘இதை ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லல?!’ என்று அவள் கேட்க மாட்டாள், ஆனால், ஒருவேளை, ‘என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என் குழந்தைன்னு தெரிஞ்சதும் அவளை உங்ககிட்ட இருந்து பிரிச்சுடுவேன்னு சொல்ற அளவுக்கு நான் மோசமானவளா?? என்னை அப்படித் தான் நினைச்சிட்டு இருக்கீங்களா??’ என்று அவள் கேட்டு விடுவாளோ என்று தான் பயந்தான். உண்மையில் சொல்லபோனால், ஆரா மூலம் அவனுக்கு உண்மை தெரிந்தபொழுது, இப்படித் தான் அவன் நினைத்தான். எங்கே ‘என்னுடை குழந்தை’ என்று மிருதுளா தேஜாவை தன்னிடம் இருந்து பிரித்துவிடுவாளோ என்று தான் நினைத்திருந்தான்.

குழந்தை மேல் அவன் மட்டுமில்லை, அவன் குடும்பே உயிரை வைத்திருந்தினர். மற்றவர்களுக்காவது தேஜா, யாழினியின் குழந்தை இல்லை என்று தெரியாது. ஆனால் தனக்குத் தெரியும். அப்படித் தெரிந்தும், அதையும் மீறி, குழந்தை மேல இவனுக்கு ஒருவித பிடிப்பு, பாசம் உண்டாகியிருந்தது. அது ஏன் என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. தனக்கும் யாழினிக்கும் பிறந்த மகளாகவே தேஜாவை நினைத்திருந்தான். ஏனோ குழந்தையின் துறுதுறுப்பும் யாழினியை போல இருந்ததும், அந்த நினைப்புக்கு ஒரு காரணம். அது மட்டுமில்லாமல், குழந்தை எப்பொழுதும் எல்லாவற்றுக்கும் கௌதமை தான் தேடுவாள். இவனைப் பார்த்த பின்பு தான் அவளின் அழுகையே குறையும். இவனுடன் தான் தூங்குவாள், விளையாடுவாள், இன்னும் பல.



Advertisement

அதிலும் சில நேரங்களில் மாலை இவன் அலுவகம் விட்டு வர நேரமானால், குழந்தையின் அழுகை அந்த அபார்ட்மெண்டையே அதிரவைக்கும். இவன் படிகளில் ஏறி வரும்போதே, அவளின் அழுகை கேட்கும். அப்படி மூச்சை பிடித்து அழுபவள், இவனைப் பார்த்ததும், தன் தாத்தா கைகளில் இருந்து கிட்டத்தட்ட கீழே விழுந்துவிடும் அளவுக்குக் கௌதமை நோக்கி தாவுவாள். அவன் கைகளில் சென்ற பின்பு, அவ்வளவு நேர அழுகையும் ஒரே நொடியில் காணமல் போய்விடும். அந்த நேரங்களில், கண்ணீர் தேங்கிய கண்களுடன் தன்னைப் பார்த்து அவள் சிரித்ததை நினைக்கையில், இப்பொழுதும் திரும்பி, தன் அருகில் படுத்திருக்கும் மகளைப் பார்த்தவனுக்குக் கண்கள் கலங்கியது. கிட்டத்தட்ட தன்னுடைய மகிழ்ச்சிக்கு தேஜாவை தான் சார்ந்திருந்தான் கெளதம்.

தன் வாழ்கையின் அர்த்தமே அவள் தான் என்னும்போது, அவளைக் கெளதம் இழக்க விரும்பவில்லை. மிருதுளாவுடனான் திருமணத்தின் பொழுது, அவளைப் பற்றி, குழந்தையின் மேல் அவள் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பும், பாசத்தைப் பற்றியும் இவன் நன்கு அறிவான். அப்படிப் பட்டவள், தேஜா அவள் குழந்தை என்று தெரிந்த பின்பு எப்படி நடந்துகொள்வாள் என்று இவனால் ஊகிக்க முடிந்திருக்கவில்லை. குழந்தைக்காக ஏங்கி கொண்டிருக்கும் அவள், ஒருவேளை தேஜாவை எடுத்து சென்று விடுவாளோ என்று அப்பொழுது இவன் நினைத்து உண்மை.

ஆனால் திருமணத்திற்குப் பிறகு, மிருதுளா மேல், இவனுக்கு நம்பிக்கை வளர்ந்திருந்தது. அதிலும் அவள் குழந்தை மேல் மட்டுமில்லாமல், தன் மீதும் பாசமாக இருப்பதை நினைக்கையில், சில சமயம் அவளிடம் உண்மையைச் சொல்லிவிடலாம் என்று கூட நினைத்திருக்கிறான். ஆனால் ஏனோ, ஆரம்பத்தில் சொல்லாமல் விட்டு, இத்தனை நாட்கள் கழித்துச் சொன்னால், மிருதுளா என்ன சொல்வாளோ என்ற தயக்கம், இவனை உண்மையைச் சொல்லாமல் தடுத்துவிட்டது.

Advertisement

ஆனால், நேற்று சந்துருவை சந்தித்த நிகழ்வு, இரவு மிருதுளா சொன்ன வார்த்தைகள், எல்லாம் இவன் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்க, அதிலும் குறிப்பாக, மிருதுளா தன் குழந்தை இறந்துவிட்டதாக இன்றும் நினைத்து வருந்துவதை நினைக்கையில், வாழ்நாள் முழுவதும் அவள் மனதின் ஓரத்தில் இந்த வருத்தம் இருக்கும் என்று இவனுக்குப் புரிந்தது. அந்த வருத்தத்தைப் போக்க வேண்டும் என்ற உந்துதல் இவனுக்குள் இப்பொழுது அதிகமாகியது. உன் குழந்தை சாகவில்லை, தேஜா தான் உன் மகள் என்று சொல்லி அவளை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என்று அவனுக்குள் ஆசை அதிகமாகியது.

Advertisement

உண்மையை அவளிடம் சொல்லும்பொழுது, அழுகை, சந்தோசம், என்று பல உணர்வுகள் அவளிடம் வெளிப்படும் என்று கௌதமிற்கு நிச்சயம் தெரியும், ஆகவே இப்பொழுது சொல்ல வேண்டாம், மாலை வெளியே எங்கையாவது கூட்டி சென்று சொல்லலாம் என்று முடிவு செய்திருந்தான். உள்ளுக்குள் சிறு உதறல் இவனுக்குள் இருந்தாலும், இன்றோடு நம் மனபாரம் விலகப் போகிறது என்று நினைக்கையில் அவனுக்கு மகிழ்ச்சியே. இந்தச் சந்தோஷத்துடனே கிளம்பி அலுவகம் சென்றான்.

இங்கே கெளதம் இப்படி நினைத்திருக்கையில், அங்கே சந்துருவோ, தனக்கு உண்மை தெரிந்த அன்றைய நாளை நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆரா, இவன் வீட்டில் மீனட்சியிடமும், சரண்யாவிடமும், சண்டை போட்டுக்கொண்டிருந்த அன்றைய தினம், தன் தாயை தேடி அவரின் அறைக்கு வந்த சந்துருவின் செவிகளில், இவனின் தாயும், மாமன் மகளும், தாங்கள் செய்த சூழ்ச்சியைப் பற்றி ஆராவிடம் சொல்லிக் கொண்டிருந்தது விழுந்தது.

Advertisement

அதைகேட்டு அதிர்ந்து போனவனுக்கு, தன்னுடைய நிலைமை, தலைகுனிய வைத்தது. குணத்தால் தாழ்ந்தவன் என்றாலும், ஒரு ஆணாக, தன்னைப் பற்றிக் கேட்கக் கூடாததை அவன் கேட்க நேர்கையில், அப்படியே உடம்பெல்லாம் கூனி குருகிபோனது சந்துருவிற்கு. தான் முன்பு செய்த தவறான செயல்களின் வினை, இப்பொழுது தன் வாழ்கையே காவு வாங்கியுள்ளது என்ற உண்மையை உணர்ந்தான்.

தெரிந்தே தவறு செய்திருந்தாலும், அதன் பலனை கேட்கையில், அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் வாழ்கையே போயிற்று என்பது போலத் தான் அவன் மனம் நினைத்தது. இந்த உண்மை வெளியே தெரிந்தால், யாரும் தன்னை மதிக்க மாட்டார்களே, என்று நினைக்கையில், நெஞ்செல்லாம் ரணமானது. அந்த அவச்சொல்லில் இருந்து தன்னைக் காப்பாற்றவேண்டும் என்றால், இவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, மிருதுளாவும் அவள் குழந்தையும் தான்.

இவனின் சொந்த ஊரில், இவனும் மிருதுளாவும் பிரிந்ததற்கான காரணம் அவ்வளவாக யாருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை என்று இவன் நினைத்தான். ஏதோ மிருதுளா, இவனுக்குத் துரோகம் செய்துவிட்டாள் என்றுதான் ஊர்மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இவன் நினைத்தான். ஓர் அளவுக்குப் படித்தவர்களுக்கு மட்டும் தான் விவரம் தெரியும். ஒருவேளை அவர்கள்கூட, இவனும் மிருதுளாவும், மீண்டும் சேரநேர்கையில், இதைப் பற்றிக் கேள்வி எழுப்பினால், சாம்பிள் மாறிவிட்டது, பைல் மாறிவிட்டது என்று பொய் சொல்லிவிடலாம் என்று நினைத்தான். இங்கே சென்னையில் அவனின் நண்பர்களுக்கு இவர்கள் பிரிந்தது தெரியாது. தெரிந்து, ஏன் எதற்கு என்ற கேள்வி வருவதற்குள், எப்படியாவது மிருதுளாவை சமாளித்துத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டான். அவனுக்குத் தெரியும் நிச்சயம் ஆரா, இந்த விஷயத்தை மிருதுளாவிடம் சொல்லியிருக்க மாட்டாள் என்று.

ஆனால் அவனுக்குத் தெரியாது, ஆரா இங்கு நடந்த அனைத்தையும் தன் வீட்டில் அனைவரிடமும் சொன்னதோடு மட்டுமில்லாமல், சந்துரு, மீனாட்சிக்கு எதிராகக் கோர்டில் கேஸ் போடலாம் என்றும் கூறினாள் என்று. ஆனால் மீனாட்சி கூறியதை தான் மிருதுளாவும் அப்போது ஆராவிடம் கூறியவள், கோர்ட், கேஸ் என்ற பெயரில், ஒரு சிலருக்கே தெரிந்த விஷயம், இந்த உலகத்தின் முன், கேலி கூத்தாக மாற வேண்டாம் என்று தடுத்துவிட்டாள்.

தன் யோசனையில் உழன்று கொண்டிருந்தவன், அறையை விட்டு வேகமாக ஆரா வெளியேறியதும் தான் நினைவுக்குத் திரும்பியவன், அவளிடம் மிருதுளா மற்றும் குழந்தையைப் பற்றி விசாரித்து, அவளிடம் மன்னிப்பு கேட்டு, மிருதுளாவை திரும்ப அழைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தவன், ஆராவை பின்தொடர்ந்து செல்ல, அதற்குள் அவள் இவன் கண்களில் இருந்து மறைந்திருந்தாள்.

எப்படியும் பஸ் ஸ்டான்ட் தான் சென்றிருப்பாள் என்று நினைத்தவன், அங்கே சென்று பார்க்க, அவன் நினைத்தது போல அவள், அங்கே தான் நின்றிருந்தாள். ஆனால் சென்னைக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறாமல், திருச்சி செல்லும் பஸ்ஸில் ஏறியது, இவனுக்குள் சந்தேகத்தை ஏற்படுத்த, இவனும் அந்தப் பஸ்ஸில் ஏறி, அவள் கண்களில் படமால அமர்ந்துகொண்டான். அதன் பின் திருச்சிக்கு சற்று முன்பு ஒரு இடத்தில அவள் இறங்க, இவனும் அவளுக்குத் தெரியாமல், அவள் பின்னோடு இறங்கியவன், அவளைப் பின்தொடர்ந்தான்.

இறுதியில் அவள் ஒரு அனாதை ஆஷ்ரமம் சென்றது, இவனுக்குள் மேலும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. உள்ளே செல்லாமல், வாசலில் மறைந்து நின்றுகொண்டவன், அவள் வெளியேறியதும், உள்ளே சென்று, ஆரா என்ன கேட்டாள் என்று விசாரித்தான். இந்த ஆஷ்ரமம், சுற்றி இருக்கும் ஊர்களில் பிரபலம் என்பதால், சந்துருவின் தந்தை, பஞ்சயத்து தலைவர் என்ற முறையில், இந்த ஆஷ்ராமத்துக்கு நன்கொடை கொடுக்கவெனச் சில முறை வந்து சென்றுள்ளார். இப்பொழுது தன் தந்தையின் பெயரை இவன் சொன்னதும், அங்கிருந்த ஒரு சிலருக்கு இவனைத் தெரிய, அவன் கேட்ட விவரத்தை கூற, இவனுக்கு மிகுந்த அதிர்ச்சி.

மிருதுளா எப்படிக் குழந்தையை இப்படி விடச் சம்மதித்தாள் என்று இவனுக்குள் மிகபெரிய கேள்வி. தான் சொன்னதற்காக, அவள் குழந்தையை விட்டிருக்கமாட்டாள் என்று உறுதியாகத் தெரியும். அப்படி இருக்கையில் அவளின் குழந்தை இங்கே எப்படி என்று யோசிக்கையில், அங்கு வேலை செய்தவர் ஒருவர் தான் பார்த்ததைச் சொன்ன பிறகு தான் தெரிந்தது, குழந்தையை ஒரு பெரியவர் விட்டுச் சென்றது. அதன்பின்பே இவனுக்குப் புரிந்தது, குழந்தையை மிருதுளாவின் தந்தை தான் வந்து விட்டுச்சென்றிருக்க வேண்டும் என்றும், குழந்தை இங்கு இருப்பது மிருதுளாவிற்குத் தெரிய வாய்ப்பில்லை என்றும். அதன்பின் ஆரா வாங்கிச் சென்ற அந்த விலாசத்தை இவனும் வாங்கிக்கொண்டான்.

இதற்கிடையில் அவனுக்குப் பெங்களூருக்கு இடம் மாற்றம் கிடைக்க, அங்கே சென்று சில மாதம் கழித்து, ஆராவை போல இவனும் தன் துப்பறியும் வேலையைச் செய்ய, ஆராவை போலவே இவனுக்கும், குழந்தை கௌதமிடம் இருப்பது தெரிந்தது. இதற்கிடையில் இந்த விவரத்தை மிருதுளாவிடம் கூறி, எப்படியாவது குழந்தை மற்றும் இவளுடன் மீண்டும் சேர்ந்து விடவேண்டும் என்று நினைத்தான். ஆனால் அதற்குள், மிருதுளா குடும்பத்துடன் பெங்களூர் சென்றுவிட்டது தெரிந்தது. அதன்பின் தன் வேலைக்கு நடுவே மிருதுளா இருக்கும் இடத்தைத் தேடினான். அப்பொழுதுதான், ஒருநாள் அலுவக விருது வழங்கும் விழாவில் அவளைக் கெளதமுடன் பார்த்தது.

மிருதுளா இன்னொருவனைத் திருமணம் செய்து கொண்டாளா! என்ற அதிர்ச்சி ஒருபக்கம் என்றால், கௌதமின் பெயரை கேட்டதும், ஒருவேளை மிருதுளாவின் குழந்தையை வாங்கிச் சென்ற கௌதமாக இருக்குமோ என்ற சந்தேகம் இவனுக்கு எழுந்தது. அதன்படி அந்த விலாசத்திற்குச் சென்று பார்கையில், தான் தேடும் கெளதம் தான், மிருதுளாவின் கணவன் என்றும் தெரிந்து கொண்டான். பின் அங்கு வசிப்பவர்களிடம் விசாரித்த பின்புதான், கௌதமின் மனைவி இறந்துவிட்டாள் என்ற செய்தி இவனுக்குத் தெரியவர, அதன் பிறகே அவனிடம் இருக்கும் குழந்தை தேஜா, மிருதுளாவின் குழந்தையாகத் தான் இருக்ககூடும் என்று ஊகிக்க முடிந்தது. ஆனால் இந்த உண்மை மிருதுளாவிற்குத் தெரியுமா? தெரிந்து அவனைத் திருமணம் செய்து கொண்டாளா? இல்லை தெரியாமல் எதேர்ச்சையாக இவர்கள் திருமணம் நடந்ததா? என்பது தான் இப்பொழுது இவனுக்குள் இருக்கும் கேள்வி.

இதற்கிடையில், நேற்று மிருதுளாவை கடையில் வைத்து பார்த்தபொழுது, அவளின் கலங்கிய கண்களைப் பார்கையில், இன்னும் அவள் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று தவறாக புரிந்துகொண்டான். ஆகவே இன்று அவளைக் கெளதம் இல்லாத சமயம் நேரில் சென்று சந்தித்து, அவளிடம் எப்படியாவது பேசி, ஒருவேளை, குழந்தையைப் பற்றியை உண்மை அவளுக்குத் தெரியவில்லை என்றாள், உண்மையை அவளிடம் சொல்லி, கௌதமிற்கு எதிராக அவளைத் திருப்பவேண்டும் என்று முடிவு செய்தான்.

அப்படி அவள் கௌதமை வெறுக்க நேர்ந்தால், அடுத்து எப்படியாவது அவளின் மனதை கரைத்து, தன்னுடன் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தான். அதாவது தேஜா என்னும் குச்சியை வைத்து, அவர்களுக்குள் குட்டையைக் குழப்பி, அதில் மீன்பிடிக்கத் திட்டம் தீட்டினான் இவன். சந்துரு நினைத்தது போல உண்மை தெரிந்த பின் மிருதுளா கௌதமை வெறுப்பாளா??

எல்லாவற்றையும் யோசித்த பின், ஒரு முடிவுடன் சந்துரு மிருதுளாவை பார்க்கவெனக் கிளம்பி வர, இங்கே மிருதுளா, கெளதம் கிளம்பி சென்றதும், வழக்கம் போலக் காலை செய்யவேண்டிய வேலைகளைச் செய்து முடித்துவிட்டு, தேஜாவிற்கு உணவை ஒரு கிண்ணத்தில் பிசைந்து எடுத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தவள், கிண்ணத்தை டேபிளில் வைத்துவிட்டு, கீழே தரையில் விளையாடி கொண்டிருந்த குழந்தையைத் தூக்கசெல்லும் நேரம், வாசலில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. பெரியவர்கள் அனைவரும், பக்கத்தல் இருக்கும் கோவிலில் பூஜை என்று காலையிலேயே புறப்பட்டுச் சென்றிருந்தனர். அவர்கள் வர எப்படியும் மதியத்துக்கு மேல் ஆகும் என்று மிருதுளாவிற்குத் தெரியும். அப்படி இருக்கையில், இப்பொழுது யார் வந்திருக்ககூடும் என்ற சந்தேகத்துடனே, சென்று வாசல் கதவை திறந்தவள், எதிரில் நின்றிருந்த சந்துருவை அப்பொழுது எதிர்பார்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!