Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thalaivanin Kaathali

அத்தியாயம் 8.2 : தலைவனின் காதலி!!!

ஒரு ஆணை இப்படி பார்ப்பது தவறு என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். ஆனாலும் சில நேரம் அவனையே அவள் பார்வை தழுவியது. ஒரு முறை அவனையே அவள் பார்த்துக் கொண்டிருக்க எதையோ கேட்க திரும்பிய யுவன் அவளுடைய பார்வையில் தடுமாறிப் போனான்.

 

அவன் கண்டதை பார்த்த அவளோ “கடவுளே, பாத்துட்டானே”, என்று தனக்குள் சொல்லி விட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

 



Advertisement

இனி மேல் இங்கே இருக்க கூடாது என்று அவள் உள் மனது எண்ண அங்கிருந்து எழுந்து விட்டாள்.

 

இவனிடம் மயங்கி நிற்பது அவளின் நிலைக்கு உகந்ததில்லை, என்ற நினைவில் தலையை ஆட்டிக் கொண்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தாள். எதிர்காலம் இல்லா இந்த உணர்வை அவள் மனதுக்குள் வளர்த்து தான் என்ன பயன் இருக்க போகிறது?

Advertisement

 

Advertisement

அப்போது “சுசீலா எங்க மா போற?”, என்று கேட்டாள் சாரு.

 

“இல்லை மா, நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. நான் இதோ வரேன்”, என்று சொல்லி விட்டு வெளியே வந்தாள்.

Advertisement

 

அவள் அவளுடைய அறைக்கு வந்து சிறிது நேரத்தில் அங்கு வந்தான் யுவன்.

 

“வாங்கோ”, என்று சொல்லி எழுந்து நின்றவள் அவனைப் பார்க்க முடியாமல் தடுமாறினான்.

 

அவளுடைய தடுமாற்றத்தில் அவன் கண்கள் மின்னியது. அவன் முன் வெட்கத்தைக் காட்டி நிற்கும் முதல் பெண் அவள் தான்.

 

அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் பார்வையில் அவள் கண்களில் மீண்டும் தடுமாற்றம் வந்தது. அவளை ஒரு மார்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் யுவன்.

 

ஒரு ஆக்டோபசைப் போல் அவன் பார்வை அவளை சுற்றி வளைப்பது போல இருந்தது. அடுத்த நொடி அவனைப் பார்க்க முடியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

 

அடுத்த நொடி தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவன் “என்ன பேசிட்டு இருக்கும் போதே எழுந்து வந்துட்ட சுசீ? அம்மா உன்னை கூப்பிடுறாங்க. என்னன்னு கேளு போ”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

 

அவன் சென்றதும் தன்னுடைய மனம் என்னும் குதிரையை கட்டுக்குள் கொண்டு வந்தவள் அதன் பின்னே சாருவைக் காணச் சென்றாள்.

 

பார்க்கும் போதெல்லாம் அவள் மீது தன்னுடைய நேச விதை விழுவதை யுவனும் உணர்ந்தே இருந்தான். அவளைக் காணும் போதெல்லாம் ஒரு சந்தோஷம் அவனுக்குள்ளும் மின்னி மறைந்தது.

 

ஆனால் அதை வெளிப்படுத்த தான் அவனால் முடியவில்லை. அவன் இப்போது இருப்பது போர்க்களம். வாளேந்தி போர் புரியும் தருணத்தில் பூ மனம் கொண்ட சுசிலாவை நினைக்க அவனுக்கு ஏது அவகாசம்? தன்னையே அடக்கி கொண்டு தான் அங்கிருந்து விரைந்து விட்டான்.

 

அதன் பின் வந்த நாட்களில் இருவரும் பார்க்காமலே கண்ணாம் பூச்சி ஆட்டத்தை விளையாடினார்கள்.

 

அவன் மீது தனக்கு வந்திருப்பது காதல் தான் என்று உணர்ந்த சுசீலா அதை விரட்ட பாடுபட்டாள். அதுவும் முடியாமல் மனதுக்குள் போராடினாள். அவனை நினைக்காதே என்று மனதுக்கு கட்டுபாடு போட்டாள். அதையே நித்தமும் சொல்லி அனுதினமும் அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள்.

 

யுவனின் பேச்சு, சிரிப்பு, அவனது நடை என அனைத்தையும் எண்ணி பார்த்து தனக்குள்ளே ரசித்துக் கொண்டிருந்தாள்.

 

அலை மீது போராடும் காகிதத்தால் செய்த படகைப் போல மனதுக்குள் போராட ஆரம்பித்தாள். மெழுகைப் போல அவன் நினைவில் கரைய ஆரம்பித்தாள். காதல் என்பது சாதாரண ஒன்றா? அது உள்ளே இருந்து கொல்லும் வியாதி போன்றது என்று அவளுக்கு யார் சொல்வது?

 

சுசீலா அந்த வீட்டில் நடக்கும் மற்றொரு விஷயத்தை கண்டு பிடித்தாள். அது மாயா மற்றும் சுமனுக்கும் இடையில் எதுவோ ஒரு பந்தம் இருப்பதை.

 

ஆம் அது உண்மை தான். மாயாவுக்கு சுமனையும் சுமனுக்கு மாயாவையும் அதிகம் பிடிக்கும். ஆனால் இருவரும் அதை சொல்லிக் கொள்ள வில்லை.

 

அவர்கள் இருவருக்குமே அடுத்தவருக்கு பிடிக்கும் என்ற உண்மையே தெரியாது. ஆனால் அதை சுசீலா கண்டு பிடித்தாள்.

 

மாயாவின் பார்வை சுமனை வட்டமிடுவதும், அவள் பார்க்காத போது சுமன் அவளை பார்ப்பதையும் சுசீலா கண்டு கொண்டாள்.

 

அப்போது ஒரு நாள் காலை எழுந்து குளித்து முடித்து விட்டு சாரு அறைக்கு சென்றாள் சுசீலா. அங்கே சாருவோ மூச்சு பேச்சில்லாமல் கிடந்தாள்.

 

அதைக் கண்ட சாரு அவசரமாக மாயாவுக்கும் யுவனுக்கும் அழைத்துச் சொன்னாள். யுவன் ஒரு டாக்டரை வீட்டுக்கே வரவைத்தான்.  சாரு அறையில் யுவன், மாயா, சுசீலா மூவரும் கவலையாக அமர்ந்திருந்தார்கள். சாருவை மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

 

அவர் பரிசோதித்து விட்டு நிமிரவும் “டாக்டர் அம்மாவுக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்டான் யுவன்.

 

“நேத்து இவங்க ரொம்ப நேரமா பனில நின்னுருக்காங்க. அதனால தான் வீசிங்க் வந்துருக்கு. பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க. வயசாகிடுச்சு இல்லையா? அதனால இந்த பிரச்சனை எல்லாம் வரும்”, என்று சொல்லி விட்டு சென்றார் டாக்டர்.

 

சாரு கண் விழித்ததும் “அம்மா, ஏன் இப்படி பண்ணுனீங்க? நைட் பால்கனில போய் நின்னீங்களா?”, என்று கேட்டான் யுவன்.

 

அவனைப் பார்த்து சிரித்த சாரு “பழைய விஷயங்களை நினைச்சிட்டே வெளியே நின்னுட்டேன் போலப்பா”, என்றாள்.

 

“சாதாரணமா சொல்றீங்க? எங்களை எல்லாம் விட்டுட்டு போகலாம்னு முடிவு பண்ணிட்டீங்களாம்மா?”, என்று கேட்டாள் மாயா.

 

“அப்படியும் வச்சிக்கலாம்.  நான் இருந்து என்ன செய்ய போறேன்”

 

“அம்மா”, என்று அதட்டினான் யுவன்.

 

“எதுக்கும்மா இப்படி எல்லாம் பேசுறீங்க?”, என்று கேட்டாள் சுசீலா.

 

“உனக்கு தெரியும் தானே சுசீ? நான் என் பிள்ளைகளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்க ஆசை படுறேன்னு? ஆனா ரெண்டு பேருமே பிடி கொடுக்க மாட்டிக்காங்க. அப்ப நான் இருந்து என்ன செய்ய? என்னோட பிள்ளைகளா இருந்துருந்தா என்னோட பேச்சைக் கேட்டுருப்பாங்க”, என்று சாரு சொன்னதும் அங்கிருந்து அழுத படியே ஓடி விட்டாள் மாயா.

 

“அம்மா, இப்படி எல்லாம் பேசாதீங்க. நாங்க உங்க பிள்ளைகள் தான். எப்படி உங்களால பழசை எல்லாம் மறக்க முடியலையோ அதே போல தான் எங்களுக்கும். அதுவும் மாயா… அவ மனசுல இருக்குற ரணம் கொஞ்சம் ஆரட்டும் மா”, என்று பொறுமையாக எடுத்துரைத்தான் யுவன்.

 

“இவங்களைப் பத்தின உண்மையை நான் இன்னும் தெரிஞ்சிக்கலையே?”, என்று எண்ணிக் கொண்டிருந்தாள் சுசீலா.

 

“சரி மாயாவை விடு. அவளைப் பாத்துக்க நீ இருக்க. ஆனா உனக்கு கல்யாணம் செய்யுறதுக்கு என்ன டா? இப்படியே சுத்திக்கிட்டு இருக்க போறியா? உனக்குன்னு ஒரு குடும்பம் வேண்டாமா?”, என்று கேட்டாள் சாரு.

 

“அம்மா நம்ம நிலைமை என்னன்னு தெரிஞ்சிருந்தும்…”, என்று இழுத்தான்.

 

“அதெல்லாம் நீ சொல்ற சாக்கு யுவன். நீ நினைச்சா எல்லாம் முடியும்”

 

“உடனே எப்படி மா பொண்ணு கிடைக்கும்?”

 

“இதோ நம்ம சுசீலா இருக்காளே. இவளையே கட்டிக்கோ டா. அப்புறம் நீங்க ரெண்டு பேரும் சேந்து மாயாவுக்கு வழி பண்ணுங்க”, என்று சொன்னதும் இருவரும் திகைத்து போனார்கள்.

 

சுசீலா விழி விரித்து யுவனைப் பார்க்க அவனோ “அம்மா என்ன பேசுறீங்க? அவ எங்க? நான் எங்க? மாயாவுக்கு எப்படி நல்ல வாழ்க்கையை நான் ஏற்படுத்துவேனோ, அதே போல சுசீலாவுக்கும் நல்ல வாழ்க்கையை நான் ஏற்படுத்தி தருவேன். இனி தேவையில்லாம கவலைப் பட்டுட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க”, என்று சாருவிடம் சொன்னவன் சுசீலா புறம் திரும்பினான்.

 

அவன் பேச்சில் நெஞ்சில் ரத்தம் வடிய நின்றிருந்தாள் சுசீலா. “அம்மா ஏதோ ஒரு நினைப்புல பேசிட்டாங்க. நீ தப்பா எடுத்துக்காத சுசீலா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

“இவன் மனசுல என்னைப் பத்தின எந்த எண்ணமும் இல்லை. நான் தான் தேவையில்லாம யோசிச்சிட்டு இருக்கேன்”, என்று எண்ணி தன்னையே கடிந்து கொண்டவள் சாருவைப் பார்த்தாள்.

 

“உன்னையும் கஷ்டப் படுத்திட்டேனா டா?”, என்று கேட்டாள் சாரு.

 

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை மா. நீங்க தேவையில்லாம எதையும் யோசிக்காதீங்க மா. நீங்க சந்தோஷமா இருந்தா தான் நாங்க எல்லாரும் நிம்மதியா இருப்போம்”, என்று சொல்லி புன்னகைத்தாள் சுசீலா.

 

“எப்படி சுசீம்மா சந்தோஷமா இருக்க? இங்க நடக்குற விஷயத்தை எல்லாம் நீயும் பாக்குற  தானே? அவன் வாழ்க்கை போராட்டத்திலே கழியுது. இந்த மாயாப் பொண்ணும் ஒத்தை மரமா நிக்குறா. நான் எத்தனை நாள் இருப்பேன்னு சொல்லு”

 

“உங்களுக்கு ஒண்ணும் ஆகாது மா”

 

“இல்லை டா, எனக்கு என்னமோ மனசே சரியில்லை. எனக்கு ஏதாவது ஆனாக் கூட மாயாவை நீ கொஞ்சம் பாத்துக்கோ சுசீ. எதுவோ மனசுக்கு நெருடலாவே இருக்கு”

 

“அம்மா, நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க? எல்லாருமே நல்லா இருப்போம். டாக்டர் மருந்து கொடுத்தாங்க தானே? நீங்க அமைதியா தூங்குங்க”, என்று சொல்லி அவளைப் படுக்க வைத்து ஒரு போர்வையை மூடி விட்டாள் சுசீலா.

 

சிறிது நேரத்தில் சாரு தூங்கியதும் அவள் அருகில் அமர்ந்திருந்த சுசீலா அந்த தாயையேப் பார்த்தாள்.

 

“இவங்க மனசுல என்ன கவலை இருக்கு? யுவனும் மாயாவும் இவங்க பிள்ளைகள் இல்லைன்னா அப்ப சாரும்மா யாரு? யுவனும் மாயாவும் அண்ணன் தங்கை இல்லைன்னா அவங்களோட அம்மா அப்பா யாரு? இதை யார் கிட்ட கேட்டாலும் அவங்களோட காயத்தை கிளறி விடுற மாதிரி இருக்குமே”, என்று எண்ணிக் கொண்டு மாயாவைக் காணச் சென்றாள்.

 

மாயா அவளுடைய அறையில் அழுது கொண்டிருக்க அவளை சமாதானப் படுத்த உள்ளே நுழைந்தாள் சுசீ. “மாயா என்ன இது? எதுக்கு இப்படி சின்ன பிள்ளை மாதிரி அழறீங்க?”, என்று கேட்டாள் சுசீலா.

 

“அம்மா என்ன சொன்னாங்கன்னு கேட்டீங்க தானே சுசீ? கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க? நான் எப்படி கல்யாணம் எல்லாம்?”, என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதாள் மாயா.

 

“என்ன ஆச்சு இவளுக்கு? இவளுக்கு சுமனை பிடிச்சிருக்குன்னு நாம நினைச்சோமே? ஆனா இவ கல்யாணம்னு சொன்ன உடனே இப்படி தவிக்கிறா? அப்ப சுமன்?”, என்று எண்ணிய சுசீலா “அம்மாக்கு உடம்பு சரியில்லை மாயா. அதனால அப்படி பேசிட்டாங்க. அவங்க இந்த நிலைமைல இருக்கும் போது நீங்க உங்களோட வருத்தத்தை அவங்க கிட்ட காமிக்கலாமா? கொஞ்ச நேரம் தூங்குங்க. எல்லாம் சரியாப் போகும்”, என்று ஆறுதல் சொல்லி விட்டு வெளியே வந்தவளின் கண்ணில் பட்டான் சுமன். அவனை நோக்கிச் சென்றாள் சுசீலா.

 

காதல் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!