அத்தியாயம் 10.2 : தலைவனின் காதலி!!!
“இப்பவும் எனக்கு நல்ல பொண்ணு தான் கிடைச்சிருக்கு. உனக்கு என்ன குறை மாயா? உன்னை தவிர வேற யாரையும் எனக்கு பிடிக்காது”, என்று ஒருமையில் அழைத்தான்.
அதைக் கவனித்தவள் அதைக் கண்டு கொள்ளாது “என்னால உடனே சாதாரண வாழ்க்கைக்கு…மாற முடியுமான்னு தெரியலை”, என்று இழுத்தாள்.
Advertisement
“அது மட்டுமே வாழ்க்கை இல்லை மாயா. எவ்வளவு நாள் வேணும்னாலும் டைம் எடுத்துகோ. அது நம்மளோட வாழ்க்கையோட கடைசி நாளா இருந்தா கூட சந்தோஷம் தான். ஒரு நண்பனா உன் கூடவே இருக்க ஆசைப் படுறேன்”, என்று சொன்னதும் இதை விட அவள் மனதை மாற்ற வேறு வார்த்தைகள் இருக்க முடியுமா என்ன? அவள் முகத்தில் சிறு புன்னகையின் கீற்று உதயமானது.
சுமன் மாயா திருமணம் வெகு விமர்சியாக ஒரு சர்ச்சில் வைத்து நடந்து கொண்டிருந்தது. வரிசையாக போடப் பட்டிருந்த இருக்கைகளில் யுவனுக்கு தெரிந்தவர்கள் அமர்ந்திருந்தார்கள். ஒலிபெருக்கியில் இதமான கிறிஸ்த்துவப் பாட்டுகள் ஒலித்துக் கொண்டிருந்தன. அதிக கூட்டம் அங்கே இல்லை. தொழில் வட்டாரத்தில் உள்ளவர்கள் மட்டுமே அங்கு இருந்தார்கள்.
Advertisement
Advertisement
அஸ்வதியும் ஹோமில் உள்ளவர்களும் வந்திருந்தார்கள். அஸ்வதியும் சுசிலாவும் சேர்ந்து தான் மாயாவை ரெடி ஆக்கிக் கொண்டிருந்தார்கள்.
கருநீல கோட் சூட்டில் கம்பீரமாக பாதர் பக்கத்தில் நின்றிருந்தான் சுமன். அப்போது மெல்லிய சலசலப்பு எழ அனைவரும் திரும்பி பார்த்தார்கள்.
Advertisement
அங்கே மாயா தூய வெண்மை நிற உடையில் தேவதை போல நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளுடைய தலை முடியைக் கொண்டையிட்டு அதில் வெண்ணிறப் பாசிகளை ஊசி வைத்து சொருகி வைத்திருந்தார்கள் அழகு நிலையப் பெண்கள். நெட் போல இருந்த வெண்மை நிறத் துணி அவள் தலையைச் சுற்றி முக்காடிடப் பட்டிருந்தது.
அவளையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான் சுமன். மாயாவுக்கு இரு புறமும் யுவனும் சுசிலாவும் நடந்து வந்தார்கள். கேசவ் வந்திருந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தான்.
சுமன் அருகில் மேடையில் ஏறி நின்றாள் மாயா. பாதிரியார் இருவருக்குமான திருமணச் சடங்கை ஆரம்பித்தார்.
இருவரிடமும் மாற்றி மாற்றி சம்மதம் கேட்டார். இருவரும் மனப்பூர்வமாக சம்மதம் என்று சொன்னார்கள்.
“நாம தானே இந்த சர்ச்ல கல்யாணம் வைக்க போறோம்னு பாதர் கிட்ட சொன்னோம். ஆனா இந்த பாதர் என்ன இவங்க கிட்ட சம்மதமான்னு கேக்குறார்? இவங்க சம்மதிச்சது அவருக்கு தெரியாதா?”, என்று யுவனின் காதில் முணுமுணுத்தாள் சுசீலா.
அவள் இது போன்ற திருமணங்களை பார்த்திராததால் அவளுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்தது.
“ஸ்ஸ் இது இங்கே முறை சுசீலா. பொண்ணு கிட்டயும் மாப்பிள்ளை கிட்டயும் தனி தனியா சம்மதம் கேப்பாங்க. அடுத்து நம்ம பக்கமும் கேப்பாங்க. இது இப்படித் தான்”, என்று அவளுக்கு யுவன் சொல்லும் போதே “இவர்கள் திருமணத்தில் உங்கள் யாருக்காவது எதிர்ப்பு இருக்கிறதா?”, என்று கேட்டார் பாதர்.
யாரும் எதிர்ப்பு சொல்ல வில்லை என்றதும் “கடவுள் உங்கள் இருவரையும் இத்தருணம் இணைத்து வைக்கிறார். அதை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்”, என்று சொன்னார் பாதர்.
சர்ச்சின் மணி ஒலிக்க ஆரம்பித்தது. இருவரும் மண்டியிட்டு கர்த்தரை ஜெபித்தார்கள். யுவன் பாதர் கையில் மோதிரம் கொடுக்க அதை மணமக்களுக்கு கொடுத்தார் பாதர்.
சுமனும் மாயாவும் மோதிரம் மாற்றிக் கொண்டதும் கூட்டத்தில் கரகோஷம் கேட்டது. பாதர் மணமக்களை வாழ்த்தி விட்டு அங்கிருந்து சென்றதும் ஒவ்வொருவராக மணமக்களுக்கு வாழ்த்து சொன்னார்கள். சர்ச்சை ஒட்டியிருந்த மைதானத்தில் பந்தல் போட்டு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான் யுவன்.
தங்களின் திருமணம் இப்படி நடக்குமா? இல்லை ஹிந்து முறைப்படியா என்று எண்ணிக் கொண்டே யுவனைப் பார்த்தாள் சுசீலா.
அவள் பார்வையில் எதை உணர்ந்தானோ அடுத்த நொடி எதுவோ வேலை இருப்பதாக சென்று விட்டான். அவன் முகத்தை திருப்பிக் கொண்டு சென்ற பிறகு தான் தன்னுடைய எண்ணத்தைக் கண்டு அவளே விதிர்த்து போனாள் சுசீலா. யுவனும் அதே மனநிலையில் தான் இருந்தான்.
என்ன தான் அவளை விட்டு விலக வேண்டும் என்று எண்ணினாலும் அவளுடைய அழகு அவனை ஈர்க்கவே செய்தது. சுமனும் மாயாவும் திருமணத்துக்கு சம்மதம் சொன்ன நொடியில் இருந்து சுசிலாவும் யுவனும் சேர்ந்து தான் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
அப்போதெல்லாம் சுசிலாவின் பார்வை தன் மீது விழுவதை அறிந்து தவித்து அவளை தவிர்க்க முயல்கிறான்.
சிறிது நேரத்தில் இருவரும் நடப்புக்கு திரும்பி திருமண சடங்குகளில் கலந்து கொண்டார்கள். அதன் பின் மணமக்கள் வீட்டுக்கு அழைத்து செல்லப் பட்டார்கள்.
அன்று இரவு இருவருக்கும் முதலிரவுக்கான ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரவு உணவு முடிந்ததும் மாயாவை மிதமாக அலங்கரித்து சுமனின் அறைக்குள் அனுப்பி விட்டு மொட்டை மாடிக்கு சென்றாள் சுசீலா. சிசிலுவென்ற காற்று அவள் உடலைத் தீண்டிச் சென்றது. அந்த காற்றில் சிலிர்த்து போனவளாய் கண்களை மூடிக் கொண்டாள்.
“இங்க இந்நேரம் தனியா என்ன பன்ற சுசீ?’, என்று கேட்ட படி அங்கே வந்தான் யுவன். அவள் அமைதியாக அவனை திரும்பி பார்க்க அவனோ அவளையே தீர்க்கமாக பார்த்துக் கொண்டு நின்றான்.
அவன் பார்வை அவள் மனதை ஊடுறிவிச் சென்றது. அந்த பார்வை அவளை சுற்றி வளைத்துக் கொள்ள பார்த்தது. என்ன மாதிரியான பார்வை இது என்று மனது சிலிர்த்தாலும் ”இந்த பார்வைக்கொன்னும் குறைச்சல் இல்லை”, என்று எண்ணிக் கொண்டது அவள் மனது.
“அடிக்கடி இப்படி பாத்தே சாகடிக்கிறானே? இதுல என்னோட மனசு தெரிஞ்சும் இப்படி ஒதுங்கி நின்னா நான் என்ன செய்யுறது? இவனோட பார்வைலே நான் இவனுக்குள்ளே தொலையுறேன்னு இவனுக்கு தெரியுமா?”, என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே “என்ன பதிலே காணும்?”, என்று கேட்டான் யுவன்.
“ஒண்ணும் இல்லை சும்மா தான்”, என்றாள் சுசீலா.
கல்யாணத்திற்காக அவள் அணிந்திருந்த உடையை அவள் இன்னும் மாற்ற வில்லை. தூங்கும் போது குளித்து விட்டு மாற்றலாம் என்று இருந்து விட்டாள்.
அவளையே அவன் கண்கள் அளவிட்டது. ரோஸ் கலர் பட்டுச் சேலையில் அழகாக இருந்தாள்.
கழுத்திலும் காதிலும் அதற்கு பொருத்தமான நகையை வாங்கித் தந்திருந்தான் யுவன்.
கைகளில் கற்கள் வைத்த வளையல்கள் குலுங்கிக் கொண்டிருந்தது.
மல்லிகைச் சரம் அவள் தோள்களில் வழிந்தது. தலை முதல் கால் வரை ஒரு பார்வை பார்த்து வைத்தான் யுவன்.
அவன் பார்வையில் அவள் கன்னங்கள் சிவந்தன. தன்னுடைய உணர்வுகளையும் தன்னுடைய நிலையையும் நினைத்து அவள் கண்களில் கண்ணீர் வந்தது. அதைக் கண்டு அவன் அவளிடம் நெருங்கினான். அவள் மனம் அவசரமாக கிளர்ச்சியுற்றது. அவசரமாக பின்னோக்கிச் சென்றாள்.
அவளை நெருங்கிய நிலையில் அவன் இருக்க அவள் உடம்பில் ஜிவ்வென்ற உணர்வு வந்தது. கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
“சுசீ”, என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான். கண்களை திறந்து அவனைப் பார்த்தாள். அவன் கண்களில் வழிந்த காதலில் அவள் திகைத்து நிற்கும் போதே அவள் நெற்றியில் தன்னுடைய இதழைப் பதித்தான் யுவன்.
அதிர்ந்து போய் அவள் திக் பிரம்மை பிடித்து நிற்க “ரொம்ப நேரம் பனியில் நிற்க்காதே”, என்று சொல்லி விட்டு அவசரமாக கீழே சென்று விட்டான்.
அவன் ஏற்படுத்திய உணர்வலைகளில் அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள் சுசீலா.
எதற்கு நெருங்கினான், எதற்கு விலகினான் என்று புரியாமல் சுசீலா குழம்பி தவிக்க தன்னுடைய உணர்வுகளை அடக்க முடியாமல் தான் அவன் அங்கிருந்து சென்றான் என்பதை அவளுக்கு யார் சொல்வது?
அடுத்த நாள் மணமக்களுக்கு பிரம்மாண்டமாக விருந்தளித்தான் யுவன். அவர்களுடைய தொழிலில் ஈடு பட்டவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.
சுமன் சாம்பல் நிற கோர்ட்டில் இருக்க மாயா டிசைனர் புடவையில் ஜொலித்தாள்.
இருவரையும் ஆராய்ச்சியாக பார்த்தாள் சுசீலா. சுமனும் மாயாவும் ஒரு ஒட்டாத் தன்மையுடன் இருப்பது போலவும் இருவருக்கும் இடையே நெருக்கம் இல்லாமல் இருப்பது போலவும் பட்டது.
அதையே அவள் யோசித்துக் கொண்டிருக்க “சுசீ என்ன அச்சு? ஏன் என்னவோ போல் இருக்க?”, என்று கேட்டான் யுவன்.
அவனைப் பார்த்ததும் அவள் நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள் “மாயாவும் சுமனும் என்னவோ போல இருக்குற மாதிரி இருக்கு. அவங்க உண்மைலே லவ் பண்ணுறாங்க தானே? நான் ஏதாவது தப்பான அர்த்தம் கண்டு புடிச்சி அவங்களை சேத்து வச்சிட்டேனா? அவங்க நல்லா வாழ்வாங்க தானே?”, என்று கலக்கமாக கேட்டாள்.
அவள் குரலிலே அவள் கலக்கத்தை உணர்ந்தவன் “ஆமா இதில் என்ன உனக்கு சந்தேகம்? கொஞ்ச நாள்ல சரியாகிரும் சுசீ. அவங்க மனசும் கொஞ்சம் மாறனும் தானே?”, என்று அவன் ஆறுதல் சொன்னதும் தான் நிம்மதியானாள்.
தன்னுடைய கவலையில் இருந்து வெளியே வந்தவளின் கண்ணில் அப்போது தான் அவனுடைய அழகே பட்டது.
அவள் அவனை ரசித்து பார்க்க ஆரம்பிக்க அப்போது அங்கே வந்த ஒரு பெண் நேரடியாக அவனிடம் வழிந்த படி அவனுடைய அழகைப் புகழ சுசீலாவுக்கு காதில் புகை வந்தது.
அவள் கண்களில் பொறாமையைக் கண்ட யுவனின் கண்கள் மின்னியது. அந்த பெண் கிளம்பியதூம் “எதுக்கு சுசீ அந்த பொண்ணை முறைக்கிற? அவ மேல உனக்கு பொறாமையா?”, என்று கேட்டு வம்பிழுத்தான்.
“எனக்கு எதுக்கு பொறாமை?”, என்று வீம்பாகச் சொன்னாலும் அவள் கண்களில் அனல் பறந்தது.
“சரி சரி நம்பிட்டேன். அதோ நிக்குற அந்த ஆளும் உன்னையே பாக்குற மாதிரி இருக்கு”, என்று சொல்லி கை நீட்டினான்.
நீட்டிய அவன் கையை மடக்கியவள் “ஐயோ கையை நீட்டி பேசுறீங்க? அவன் அவனைத் தான் பேசுறோம்னு நினைச்சு இங்க வந்துறப் போறான்”, என்று சொன்னவளுக்கு அவன் விரலை பிடித்திருப்பது நினைவிலே இல்லை.
அவனுக்கோ அவளுடைய தொடுகை ஜிவ்வென்ற உணர்வைக் கொடுத்தது. அவள் கைகளின் மென்மையை அவன் கை உணர்ந்தது. அந்த நொடியை வெகுவாக ரசித்தான் யுவன்.
அவனிடம் இருந்து பதில் வராமல் போகவும் தான் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனுடைய பார்வை இருவரின் கைகளில் இருக்க அவசரமாக கையை விலக்கப் பார்த்தாள். இப்போது அவள் கையை அவன் இறுகப் பற்றிக் கொள்ள அவனை தவிப்புடன் பார்த்தாள்.
அவனுடைய கையின் வலிமையான பரிசம் அவளுக்குள் தீயை மூட்டியாது. அந்த உணர்வில் திணறினாள் சுசீலா.
“கையை விடுங்கோ”, என்று முணுமுணுத்தாள். அவன் கையை விடாமல் சிரிக்கவும் “வீட்ல நிறைய பேர் இருக்காங்க. பிளீஸ் விடுங்க”, என்று சொன்னதும் தான் அவள் கையை விட்டான். அடுத்த நொடி அங்கிருந்து சென்றும் விட்டான்.
அவளுடைய அழகும் காதலும் அவனை மாய வலையில் கட்டிப் போட்டிருக்கிறது தான். அதில் சிக்க அவனுக்கும் கோடி ஆசை இருக்கிறது. ஆனாலும் சிறிது பயம் அவனுக்குள் இருக்கிறது. அந்த ரெட்டியை முடிக்க வில்லை என்றால் தன்னால் இயல்பாக இருக்க முடியாது என்று அவனுக்கு தெரியும்.
சிறு வயதில் இருந்து ஓடிக் கொண்டிருக்கும் அவனை இளைப்பாற வைத்தது சுசீலா தான். இவள் ஒரு தேவதை என்று எண்ணிக் கொண்டான்.
சுசிலாவுக்கோ யுவனின் மனது தெளிவாக புரியாமல் குழப்பமாக இருந்தது. அவன் கண்கள் காதலை கக்குகின்றன. செயலும் அன்பாக உரிமையாக இருக்கிறது. அவளிடம் உரிமையுடன் வம்பிழுக்கிறான். நெற்றியில் இதழ் பாதிக்கிறான். ஆனால் காதலைப் பற்றியோ திருமணத்தைப் பற்றியோ எதுவுமே அவன் பேசாதது அவளுக்கு திகைப்பைக் கொடுத்தது.
அவனுடைய நினைவில் இருந்து வெளியே வந்தவள் மாயாவைக் கவனிக்க சென்றாள். அப்போது மாடிப்படிக்கு அருகே அவள் நடந்து வந்த போது அங்கே ஒளிந்திருந்த ஒருவன் அவள் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டான்.
“ஆஆ அம்மா”, என்ற அலறலுடன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தாள் சுசீலா.
காதல் தொடரும்….
