Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kaaval neethaanae kaavalanae

Kaaval Neethaane Kaavalane..! – 7

காவல் 7:

 

அந்த போட்டோவைப் பார்த்தவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். அதில் இருந்தவர்களை எங்கோ பார்த்த நியாபகம் அவனுக்கு. ஒரு முக்கியமான கேஸில் அந்த குடும்பத்தைப் பார்த்த நியாபகம். போட்டோவை இருந்த இடத்தில் வைத்து விட்டு, தனது அறைக்கு சென்றவன் ஒரு நிமிடம் நிதானமாக யோசித்தான்.

“எங்க பார்த்தேன்..? எந்த கேஸ்…? வருண்  விடாத யோசி.. யோசி…” என்று தனக்குத் தானே சொன்னவன், மனதை ஒருமைப் படுத்தி யோசித்தான். பல மாதங்கள் பின்னோக்கி செல்ல, ஒரு திருமண மண்டபத்தில் வந்து நின்றது அவனின் யோசனை.



Advertisement

“காட் இட்..!” என்று கண்களைத் திறந்தவனின் முகம் தெளிவானது. அச்சுப் பிசகாமல் அவர்களின் முகம்  நியாபகத்திற்கு வர, அதில் சக்தியின் முகம் மட்டும் அவனுக்கு தெளிவாக நியாபகம் இல்லை. ஆனால் கண்டிப்பாக அது சக்தி தான். அவளைப் பார்த்த நிமிடம் முதல் அவனின் மனதில் தோன்றிய பரிட்சைய உணர்வுக்கு, அவனுக்கு விடை தெரிந்தது.

“தனக்கு யாருமில்லைன்னு சொன்னா…? ஆனா, அன்னைக்கு ஒரு குடும்பமே இருந்ததே..?” என்று வருண் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவனுக்கு போன் வந்தது. கார்த்திக் தான் போன் செய்தது.

“சொல்லுங்க மிஸ்டர் கார்த்திக்..” என்றான் இறுகிய குரலுடன்.

Advertisement

அவனின் விரைப்பான பேச்சில் எதிர்புறம் இருந்தவன் நொந்து கொண்டான். ஆனால் பேச்சில் காட்ட முடியாதே. வருண் அவனுக்கு உயர் அதிகாரி ஆச்சே.

Advertisement

“நீங்க சொன்னபடி மேட்டுப்பாளையம் ஸ்டேஷனுக்கு எல்லா டீட்டைலும் அனுப்பியாச்சு சார். அதோட டீட்டைல்ஸ் உங்களுக்கும் அனுப்பியிருக்கேன் சார். அந்த டெட்பாடி போட்டோசும் சென்ட் பண்ணியிருக்கேன் சார்..!” என்றான் கார்த்திக். அவன் குரலிலும் வேலையைத் தாண்டிய எந்த உணர்வும் தென்படவில்லை.

“ஓகே..! நான் பார்க்குறேன்..!” என்றவன் போனை வைத்து விட்டு,கார்த்திக் அனுப்பிய போட்டோசைப் பார்த்தான். அன்று மழையில் இருட்டில் பார்த்ததை விட,போட்டோவில் முகம் கொஞ்சம் தெளிவாக இருந்தது.

அந்த போட்டோவைப் பார்த்தவனுக்கு, சொல்ல முடியாத அளவிற்கு குழப்பம் தான் அதிகரித்தது. ஏற்கனவே பார்த்த சக்தியின் பையில் இருந்த போட்டோவுடன் இது சம்மந்தப் பட்டிருக்க, வருணுக்கு யோசனை தான் அதிகம் ஆனது.

Advertisement

“ஏதாவது ஒரு முடிச்சை அவிழ்த்தால் தான், வரிசையாக ஒவ்வொன்றும் வரும் என்று நினைத்தான். அவன் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் சக்தி வாயைத் திறந்து ஏதாவது சொல்ல வேண்டும். இல்லை என்றால் அவளை சொல்ல வைக்க வேண்டும். என்ன செய்யலாம்..?” என்று யோசித்துக் கொண்டிருந்தான் வருண்.

இவனின் யோசனைகளைப் பற்றித் தெரியாத சக்தி, எழுந்து அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று  அதிகாலைக் கடமைகளை முடித்து விட்டு வெளியே வந்தாள். கிச்சனிற்கு சென்று மீண்டும் இரண்டு பிளாக் டீயை போட்டவள்,  வருணைத் தேடி சென்றாள்.

“சார்..!” என்று அழைக்க,

“வா சக்தி..!” என்றான் வருண்.

உள்ளே வந்தவளின் கையில் இருந்த டீயைப் பார்த்தவன்,

“பரவாயில்லையே..? சொல்லாமலேயே டீ போட்டுட்ட..!” என்றான் சிரிப்புடன்.

“என்ன சார் கிண்டலா..? எனக்கும் குடிக்கணும் போல இருந்தது..!” என்றாள்.

“பிரஷ் மார்னிங்..! பிரஷ் பிளாக் டீ.. பீல் குட்..!” என்றான் மலர்ந்த சிரிப்புடன்.

ஏனோ அவன் சிரிக்கும் போது, இன்னமும் அழகனாய் தெரிந்தான்.சிரிக்கும் போது கூட கொஞ்சம் கம்பீரம் கலந்திருப்பதைப் போன்று தெரிந்தது அவளுக்கு. பார்த்த நிமிடத்தில் இருந்து இப்போது தான் நன்றாக சிரிக்கிறான். அவள் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க,

“டீ ஆறுது மேடம்..! சூடா இருக்கும் போதே குடிச்சுடனும்..!” என்றான்.

“ம்ம் சார்..!” என்று அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தவள், அவன் அறையில் இருந்து வெளியே வந்து விட, அவளின் அனைத்து பாவனைகளையும் கவனிக்காது போல கவனித்திருந்த வருணின் முகம் முழுவதும் மலர்ந்திருந்தது.

“இப்படி சைட் அடிக்கிறாளே..!”  என்று அவளின் அந்த முகத்தை மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தவன்,

“இந்த பீல் கூட நல்லா இருக்கே..!” என்றபடி அவள் குடுத்த டீயை குடிக்க ஆரம்பித்தான்.

அங்கே சக்தியும் அதைத் தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.

‘என்ன சக்தி..? இப்படியா சைட் அடிச்சு வைப்ப..? உன்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பான்? அவனைப் பார்த்த அன்னைக்கு இருந்து சைட் அடிக்கிற வேலையை மட்டும் தான் உருப்படியா பார்க்குற..!’ என்று மனதிற்குள் பேச,

‘இதெல்லாம் தப்பு சக்தி. அவன் உனக்கு உதவி பண்ணியிருக்கான். அவன் வீட்ல பொண்ணு கூட பார்த்துட்டாங்க. தேவையில்லாம மனசுல எதையும் நினைக்காத..’ என்று ஒரு மனம் அறிவுறுத்த, சக்திக்கும் அதுவே சரி எனப்பட்டது.

அவனைப் பற்றிய சிந்தனையில் இருந்த சக்தி சில விஷயங்களை மறந்துவிட்டாள். அது அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்ற விஷயத்தை தான். நேற்று இரவு வரை இருந்த உறுதி இப்போது கொஞ்சம் ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது அவளுக்குள்.

பேசாமல் வருணிடம் சொல்லி உதவி கேட்கலாமா? என்று கூட யோசித்தாள். ஆனால் அதுவும் அவளுக்கு சரி என்று படவில்லை. வருணைப் பற்றிய எண்ணம் நல்லவிதமாக இருந்தாலும், இருக்கும் நிலையில் யாரையும் முழுமையாக நம்ப அவளின் மனம் மறுத்தது.

வெளியே வந்த வருண் இவளையே பார்த்துக் கொண்டிருந்ததைப் பாவம் அவள் அறியவில்லை. சக்தியை ஆராய்ச்சியுடன் பார்த்த வருணின் கண்கள் அவளின் கழுத்தில் வந்து கவனம் பெற, அந்த நேரம் பார்த்து அவனைப் பார்த்தாள் சக்தி.

வருணின் பார்வை போன இடத்தைப் பார்த்து அதிர்ந்தவள், சட்டென்று துப்பட்டாவை கழுத்தோடு இழுத்துவிட, அவளின் செயலில் எரிச்சலடைந்தான் வருண்.

“ரெண்டு நாளா ஒரே டிரஸ்ல இருக்க. இங்க பக்கத்துல கடை இருக்கு. நடந்து போற தூரம் தான். போய் வாங்கிட்டு வந்துடு..! கடை இப்ப திறக்க மாட்டான். சோ கொஞ்சம் லேட்டா போ..! என்று சொன்னவன், அவனின் அறைக்குள் சென்று விட, சக்திக்குத் தான் குழப்பம் அதிகம் ஆனது.

“இவன் ஏன் இப்ப இப்படிப் பார்த்தான்..? அப்பறம் ஏன் இப்படிப் பேசிட்டுப் போறான்..? என்று யோசித்தவளுக்கு தலையே வெடித்து விடும் போல் இருந்தது.

‘பக்கத்துல இருக்குற கடைக்கு நான் தனியா போகனுமா..? என்று யோசிக்க,

‘இன்னைக்கு நீ தனியா கொடைக்கானல் போறன்னு அவன்கிட்ட சொல்லிருக்க. அப்படி இருக்கிறப்போ இங்கன இருக்கிற கடைக்கு நீ போகமாட்டியா என்ன..? என்று மனசாட்சி கிண்டல் அடித்தது.

“எனக்கென்ன பயம்..? நானே போய் வாங்கிட்டு வருவேன்..! என்று மனதிற்குள் வீராப்பாய் மொழிந்தவள், சமையல்கட்டில் எதாவது காலை உணவிற்கு செய்ய இருக்கிறதா என்று பார்க்க, ஒன்றும் இல்லை.

“என்ன ஒன்னு கூட இல்லை..! பசிக்குமே …? என்று எண்ணியவள்,

“அதான் வெளிய போறல்ல..அங்க சாப்பிட்டுக்க..! என்றது உள்மனம்.

“சாப்பாடைப் பத்தி எல்லாம் நீ கவலைப் பட வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்துல ஒரு அம்மா கொண்டு வந்து தருவாங்க..! சாப்பிட்டு கிளம்பு..! என்றான் வருண், பட்டும் படாமல்.

“சார்..!!! என்று அதிர்ந்தாள் சக்தி.

“நீதான் இன்னைக்கு ஊருக்கு போகணும்ன்னு சொன்னியே..? மறந்துட்டியா..? என்றான் வேண்டும் என்றே.

அவனின் கேள்வியில் எரிச்சல் அடைந்தவள்,

“மறக்கலை சார்..! கண்டிப்பா கிளம்பிடுவேன்..! என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

அவள் உள்ளே சென்றவுடன், தனது அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்கினான் வருண். தன்னுடைய செல்லை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவன், யாருக்கோ அழைத்தான்.

“கொஞ்ச நேரத்துல வருவாங்க..! அவங்களை யாராவது பாலோ பண்றாங்களா..? அப்படிப் பண்ணினா அவங்க யாரு..? இப்படி எல்லா விபரமும் தெளிவா இருக்கணும்.. (wbctx.com) !  இது பிளானிங் மாதிரி தெரியவே கூடாது..! என்று கொஞ்சம் அமைதியான குரலில் சொன்னவன், போனை வைத்து விட்டு யோசிக்கலானான்.

வருணின் கணிப்பு சரி என்றால், சக்தியின் வரவுக்காக வெளியே சிலர் காத்துக் கொண்டிருக்க வேண்டும். அதில் இருந்து அவளையும் காக்க வேண்டும். அவர்களையும் அடையாளம் காண வேண்டும் என்பதே அவன் திட்டம்.

இன்றைக்கு அவனுக்கு முக்கியமான பணிகள் நிறைய இருந்தது. அதோடு சக்தி சம்பந்த பட்ட விஷயமும் தெளிவில்லாமல் இருந்தது. அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இன்று ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று தெளிவாக இருந்தான்.

உள்ளே சென்று குளித்துக் கிளம்பியவன், தன்னுடைய யூனிபார்முடன் வெளியே வர, அப்போது அங்கு வந்த சக்தி அவனைக் கண்டு அப்படியே நின்றாள். அந்த காக்கி உடையில் அவன் அப்படியே ஆளே மாறியிருந்தான். அந்த உடையில் அவன் கொஞ்சம் திமிராக இருப்பதைப் போன்று இருந்தது அவளுக்கு. முகம் கொஞ்சம் இறுகி, காக்கி உடைக்குப் போட்ட கஞ்சியை தானும் குடித்தவன் போல், விரைப்பாய் இருந்தான்.

“என்ன..? என்றான் பார்வையால்.

“ஒண்ணுமில்ல..! என்பதைப் போல் அவள் தலை ஆட,

“இது என்னோட நம்பர். அவசரம்ன்னா கூப்பிடு. ஏதாவது உதவி கேட்கணும்ன்னாலும் கூப்பிடலாம். கொஞ்ச நேரத்துல உனக்கு சாப்பாடு வரும். சாப்பிட்டு கடைக்குப் போயிட்டு வந்துட்டு, கிளம்பு. இங்க வெளிய ஒருத்தர் காவலுக்கு இருப்பார். அவர்கிட்ட கீயைக் குடுத்துடு. நான் வெளிய சாப்பிட்டுக்குவேன்..! என்று தன்னுடைய ஷூ லேசைக் கட்டிக் கொண்டே, இயந்திரம் போல் சொன்னவன், கிளம்ப ஆயத்தமாக,

அவன் சொன்னதில் அவள் தான் அதிர்ந்து போய் நின்றாள்.அவன் எதுவும் இல்லாமல் கிளம்பு என்பதை சொல்ல, அதைக் கேட்ட அவளுக்குத் தான் ஒரு மாதிரியாக இருந்தது.

“அவ்ளோதானா சார்..! என்றாள் ஏதோ அடைத்துப் போன குரலில்.

“ம்ம்..! அவ்வளவு தான். வேறென்ன எதிர்பார்த்த..? உனக்கும் எனக்கு என்ன சம்பந்தம். உதவியும் ஒரு அளவுக்கு தான் செய்ய முடியும். எல்லா நேரமும் உன்கூடவே சுத்திட்டு இருக்க முடியாது. எனக்கு இனி நிக்க கூட டைம் இருக்காது. சும்மா பேசி என் டைமை வேஸ்ட் பண்ணாத..! என்று கடுமையான குரலில் சொல்லி முடித்தான் வருண்.

சக்தி பார்க்கும் இந்த வருண் மிகவும் அந்நியமானவனாகத் தெரிந்தான். முற்றுலும் புதிது போல தெரிந்தான். சிறிது நேரத்திற்கு முன்பு, முகம் மலர்ந்து சிரித்தவனா இவன் என்பதைப் போல இருந்தான். அந்த வருணுக்கும், இந்த வருணுக்கும் ஆறு என்ன, ஆயிரம் வித்யாசங்கள் இருந்தது.

“ஓகே..! பாய்..! டேக் கேர்..! என்றவன் கிளம்பி  வாசல் வரை சென்று விட்டு, மீண்டும் வந்தான்.

“சக்தி..! என்றான் முகத்தில் ஒரு பாவனையுடன்.

“சார்..! என்றாள் சக்தி. அவளின் அந்த ‘சார் என்ற அழைப்பே அவளின் மொத்த மன நிலையையும் வருணுக்குத் தெளிவாக சொன்னது. பல குற்றவாளிகளின் முகத்தைப் பார்த்தே மொத்த ஜாதகத்தையும் சொன்னவன் ஆயிற்றே..!

‘கொஞ்ச நாள் பொறுத்திரு பெண்ணே..! உன்னைச் சுற்றியுள்ள மர்மம் விலகட்டும்..! என்று மனதிற்குள் எண்ணிக் கொள்ள,

“அதுக்குப் பிறகு, அவள் நினைக்கிறது நடக்குமா வருண்..? என்று மனசாட்சி கேட்க, ஏனோ அந்த கேள்விக்கு பதில் இல்லை வருணிடம். சிரித்து  மழுப்பினான் மனசாட்சியை.

“ஒண்ணுமில்லை..! பார்த்துப் போயிட்டு வா..! என்றவன், அங்கிருந்து கிளம்பிவிட்டான். கிளம்பியவன், போனில் யாருடனோ பேசிக் கொண்டே செல்ல, ஏனோ வருண் அங்கிருந்து சென்றவுடன் வெறுமையாய் உணர்ந்தாள்  சக்தி.

இரண்டு நாட்கள் அவனுடன் இருந்தது ஏதோ ஜென்ம ஜென்மமாய் உடன் இருந்ததைப் போல் இருந்தது அவளுக்கு. அவன் அருகில் இருக்கும் வரை யானை பலத்தை உணர்ந்தாள். இதோ அவன் விலகிய இந்த நொடி, எதுவுமே இல்லை இனி என்பதைப் போல் உணர்ந்தாள் சக்தி. அந்த உணர்விற்கு பெயர் அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் வருணின் பின்னாலேயே அவள் மனமும் சென்று விட்டது.

அவன் இருந்த இடத்தில் இருக்கிறோம் என்பதே அவளுக்கு பெரிய நிம்மதியாய் இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அந்த நிம்மதி அவளை விட்டுப் போகப் போவதை அறியாமல்.

வருண் கூறியது போல், ஒரு வயதான பெண்மணி அவளுக்காக சாப்பாடைக் கொண்டு வந்தார்.

சாப்பிட்டு முடித்து, கைப்பையில் இருந்து ஒரு பர்சை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள் சக்தி. வீட்டினைப் பூட்டி  சாவியை எடுத்துக் கொண்டவள், அருகில் இருக்கும் கடைக்கு வழி கேட்டுக் கொண்டே போனாள். அவள் நினைத்ததைப் போல் இல்லாமல், மெயின் ரோட்டிலேயே இருந்தது கடை. அப்போது தான் திறந்திருப்பார்கள் போலும். பெரிய கடையெல்லாம் இல்லை. சின்ன பொட்டிக் மாதிரி இருந்தது.

கடையை நோக்கி அவள் செல்ல, அவளை இரண்டு பேர் அவளறியாமல் பின் தொடர்ந்தனர்.

“சார்..!

“சொல்லுங்க..! என்றான் எதிர்முனையில் வருண்.

“நீங்க சொன்ன மாதிரியே ரெண்டு பேர் அவங்களை பாலோ பண்றாங்க சார்..! ஆனா அவங்களுக்கு அது தெரியலை..! என்றார் ஒருவர்.

“ஓகே..! நீங்க எங்க இருக்கீங்க..? என்றான்.

“கடைல பில்லிங் செக்ஷன்ல நிக்குறேன் சார்..! அவங்க உள்ள வரப் போறாங்க..! என்றார் அவர்.

“சக்தி வந்தாச்சா..! என்றான்.

“வந்துட்டு இருக்காங்க சார்..! என்றார்.

“ஓகே..! பி கேர்புள். இதுல சக்திக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது. அவங்களுக்கு அப்படி  ஒரு எண்ணம் இருந்தா, ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி நீங்க உங்க வேலையை செஞ்சிருக்கணும்! என்றான் வருண்.

“ஓகே சார்..! என்றார் அவர்.

சக்திக்கு யாரோ தன்னை பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்று இருந்தது. உள்மனம் உறுதியாக சொன்னது, தன்னை யாரோ பின் தொடர்ந்து வருகிறார்கள் என்று.

“இப்ப என்ன பண்றது..? என்று யோசிக்க,

“வருண் சார்க்கு போன் பண்ணு..! என்றது மனம்.

“இல்லை வேண்டாம். என்னால இனி அவருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது. எது நடந்தாலும் என்னோடவே போகட்டும்..! என்று மனதில் உறுதியாக நினைத்தவள், பயத்தை மறைத்தபடி, அந்த கடைக்குள் சென்றாள்.

“சார்..! உள்ள வந்துட்டாங்க சார்..! என்றார் அவர் வருணிடம்.

“ஓகே..! பின்னாடி வரவங்க கடைக்குள்ள வந்தா, அவங்க முகம் தெளிவா தெரியற மாதிரி ஒரு போட்டோ எடுக்கணும். அவங்க உஷார் ஆகவே கூடாது..! என்றான் வருண்.

“ஓகே சார்..! என்றவர் போனை வைக்க,

“வாங்க மேடம்..! என்ன பார்க்கணும்..! என்றார் கடை உரிமையாளரைப் போல்.

“சுடி..! என்றாள்.

“இவங்க கேட்குறதைக் காட்டுங்கம்மா..! என்று அங்கிருந்த பெண்ணிடம் சொன்னவர், வெளியே ஒரு பார்வையை வைத்திருக்க,  சக்தியைப் பின் தொடர்ந்து வந்தவர்கள் வெளியே தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.  அவர்கள் கவனிக்காத போது, அவர்களை புகைப்படமாய் போனில் பதிவு செய்து கொண்டார் அவர்.

வருணிற்கு அழைத்தவர்,

“சார் அவங்க உள்ள வந்துட்டாங்க சார். அவனுக வெளிய தான் நிக்குறாணுக சார். என்ன செய்யட்டும் சார்..! என்றார் மப்டியில் இருந்த அந்த காவலர்.

“நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம். அந்த பொண்ணை மட்டும் பார்த்துக்கோங்க. அவனுக உள்ள வரலைன்னா நான் பார்த்துக்கறேன்..! என்றவன் போனை வைத்து விட்டு யோசிக்கலானான்.

முதலில் சக்தியின் பிரச்சனையை சின்ன பிரச்சனை என்று தான் நினைத்தான். ஆனால் நடக்கிற சம்பவங்கள் ஏதோ ஒரு பெரிய பிரச்சனை என்பதை அவனுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்தது. அதன் காரணமாகவே அவனுடைய இந்த திட்டம். அவனுடைய யோசனையில் முக்கியமான வேலை ஒன்றை மறந்து விட்டிருந்தான். இனி அதையும் செய்தாக வேண்டும்.

அங்கே சக்தி தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டிருந்தாலும், உள்ளே மனம் அடித்துக் கொண்டது. பார்வையை அவ்வப்போது சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள். யாரும் இல்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டே, பில்லிங் பக்கத்தில் வந்தவள்,

“எவ்ளோ ஆச்சு..? என்றாள்.

“வருண் சார் வாங்கக் கூடாதுன்னு சொல்லிட்டார். நீங்க இதை எடுத்துட்டு போங்க..! என்றார் அந்த மப்டி காவலர்.

“அப்போ நான் கண்டிப்பா இந்த கடைக்கு தான் வருவேன்னு அவனுக்குத் தெரியுமா..? என்று அவள் யோசிக்க,

“இதென்ன பெரிய விஷயமா..? அவன்தான இந்த கடையைச் சொன்னான். அப்போ இவங்களுக்கும் அவனே சொல்லி இருப்பான். இதுக்கான காசை வீட்டில் வச்சுட்டுப் போய்டணும்..! என்று நினைத்தவள், தான் வாங்கிய உடைகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

“நம்மகிட்ட கார்ட் தான் இருக்கு. அவனுக்குப் பணம் குடுக்கணுமே..? என்று நினைத்தவள், சுற்றும் முற்றும் பார்க்க, தூரத்தில் ஒரு ஏடிஎம் மெசின் தெரிந்தது.

‘கொஞ்சம் கேஷ் எடுத்துக்கலாம்.. என்று எண்ணியபடி அந்த ஏடிஎம்மை நோக்கி சென்றாள்.

“சார் பொண்ணு வெளிய வந்துடுச்சு..! என்று அவளைப் பின்தொடர்ந்து வந்த இருவரில், ஒருவன் போனில் யாரிடமோ தகவல் சொல்லிக் கொண்டிருந்தான்.

“அந்த வருண் பக்கத்துல இருக்கானா..? என்றான் தேவன் எதிர்புறம்.

“இல்லை சார்..பொண்ணு தனியா தான் இருக்குது..! என்றான் அவன்.

“உறுதியா தெரியுமா..?

“சார்..! என் கண்ணு முன்னாடி தான் போகுது..! என்றான் அவன்.

“போலீஸ்காரனை எல்லாம் நம்ப முடியாது. ஆனா இன்னைக்கு அவ செத்திருக்கணும். பார்த்து பக்குவா முடிச்சிடு..! என்று தேவன் சொல்ல, அவன் சொல்லே வேதவாக்கு என்பதை போல இந்த பக்கம்  இருந்தவன் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்.

வாரத்தின் முதல் நாள், காலை நேரம் என்பதால்.. அந்த மெயின் ரோட்டில் வாகனங்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக இருந்தது.

“டேய்..! இதுதான் நல்ல சந்தர்ப்பம்.  நானும் ஏடிஎம் போற மாதிரியே போறேன். நீ பின்னாடியே வந்து அவளை முடிச்சிடு. முகத்துக்கு ஸ்கார்ப் போட்டுக்க..! என்றான்.

“ஏடிஎம்ல கேமரா இருக்கும்டா..! என்றான்.

“அதெல்லாம் தலைவர் பார்த்துக்குவார். இப்போ அவளை முடிக்கணும். அது மட்டும் தான் வேலை. அப்படியே நாம மாட்டிகிட்டாலும் அவர் பேரை  மட்டும் சொல்லவே கூடாது. மத்ததை எல்லாம் தலைவர் பார்த்துக்குவார்..! என்றான்.

“சரி..! நீ சொன்ன மாதிரி அவளை முடிச்சிடுறேன்..! நீ போய் அங்க இருந்து சிக்னல் குடு..! என்றான் மற்றொருவன்.

உடனே அவன் சாதாரண நபர் போல, அவளுக்குப் பின்னால் ஏடிஎம்மிற்குள் நுழைந்தான்.

சக்தியும் யாரோ பணம் எடுக்க வந்திருக்கிறார்கள் என்று, அவள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே இருந்த இரண்டு மெஷினில் அவள் ஒன்றில் பணம் எடுத்துக் கொண்டிருக்க, இவன் மற்றொரு மெஷினில் பணம் எடுப்பதைப் போல முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அவன் உள்ளே இருந்து, வெளியே இருந்தவனுக்கு சிக்னல் கொடுக்க, அவன் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல முயற்சிக்கும் கடைசி நொடியில்.. அவனையும் சேர்த்து உள்ளே தள்ளிக் கொண்டு போனான் வருண்.

இப்படி திடீரென்று அவன் அங்கு வருவான் என்று அவர்கள் ஒரு சதவிகிதம் கூட யோசித்திருக்கவில்லை. வருணைக் கண்டவுடன் உள்ளே இருந்தவன், சக்தியை இழுத்து, அவள் கழுத்தில் கத்தியை வைக்க, வருணோ இன்னொருவனைப் பிடித்து அவன் கழுத்தில் துப்பாக்கியை வைத்திருந்தான்.

“அவனை விடுங்க சார்..! இல்லைன்னா இந்த பொண்ணை உங்க கண்ணு முன்னாடியே பொணமாக்கிடுவேன்..! என்றான் அவன்.

நெற்றி நரம்புகள் புடைக்க, அவனை முறைத்த வருண், “எங்க கழுத்தை அறுடா பார்ப்போம்..! என்றான் தெனாவெட்டாய்.

சக்திக்கு வியர்க்க ஆரம்பித்தது. அவளுடைய உயிர்நாடிக்கும், கத்திக்கும் இடையே நூலளவு இடைவெளிதான் இருந்தது. அவள் பயத்துடன் வருணிப் பார்க்க, அவனோ..

“நத்திங்..! நான் இருக்கேன்..! என்பதைப் போல பார்த்து வைத்தான்.

“நீ அவளை விட்டாத்தான், உன்னோட கூட்டாளி இவனை விடுவேன்..! என்றான் வருண்.

“எதுக்கு இவளை விட்டப் பிறகு, எங்க ரெண்டு பேரையும்  சுட்டுத் தள்ளவா..? போலீஸ்காரனை நம்ப முடியாது.. என்றான் அவன்.

“தெரியுதுல்ல… விடுடா அவளை..! என்று வாயில் சொல்லிப் பார்த்தான் வருண்.

ஆனால் அவன் அசைந்தபாடில்லை. சக்திக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. அவள் லேசாக திமிர,

“ஏய்..! நகராத. அப்படியே கழுத்தை அறுத்துடுவேன்..! என்று அவன், அவளைப் பார்த்து சொன்ன அந்த ஒரு வினாடி நேரத்தை பயன்படுத்திக் கொண்ட வருண், காலால் அவனைத் தட்ட, அவன் கை சற்று தடுமாறிய கணத்தில், கத்தியைப் பிடுங்கியிருந்தான் வருண்.

வெளியே மப்டியில் இருந்தவர்கள் வேகமாக உள்ளே வர, அவர்கள் இருவரையும் அவர்கள் வசம் ஒப்படைத்தவன், சக்தியை அருகில் இழுத்துக் கொண்டான்.

“ஒண்ணுமில்லை..! நீ சேப்..! என்று அவன் சொன்னாலும், அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவளது நடுக்கத்தைப் புரிந்து கொண்டவன், அவளைத் தோளோடு இறுக்கிக் கொண்டான்.

“நான் தான் சொல்றேன்ல. உனக்கு ஒண்ணுமில்லை..! என்றவன், முன்னால் இருந்தவர்களிடம் கண்களால் ஜாடை காட்ட, அவர்கள் அந்த இரண்டு ரவுடியையும் இழுத்துக் கொண்டு சென்றனர்.

அவளை வெளியே அழைத்து வந்தவன், அங்கிருந்த ஜீப்பில் ஏற சொல்ல, அவனை பயத்துடன் பார்த்தாள் சக்தி.

“வீட்டுக்குத்தான் போறோம்..! ஏறு..! என்றான்.

கொஞ்சம் கூட, குறையாத படபடப்புடன் அவனருகில் ஏறி அமர்ந்தாள் சக்தி. அவள் ஏடிஎம் போவாள் என்று வருண் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவன் சில நிமிடங்கள் தாமதித்து இருந்தாலும், சக்தி உயிருடன் இருந்திருப்பது சந்தேகமே.

சக்தி அவனை பயத்துடன் பார்க்க, அவன் முகமோ கல்லாய் இறுகியிருந்தது. அவன் சந்தேகம் உறுதியானதால் வந்த இறுக்கம் அது.

 

 

  

 

 

 

 

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!