Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thalaivanin Kaathali

அத்தியாயம் 11.1 : தலைவனின் காதலி!!!

அத்தியாயம் 11

உந்தன் நினைவுகள்

என் கண்களில் வாழ்கின்றன

அழகான கனவாக



Advertisement

இல்லை, கண்ணீராக!!!

 

சுசீலாவின் அலறல் சத்தம் கேட்ட பிறகு தான் அனைவரும் திரும்பி பார்த்தார்கள். அனைவரும் திரும்பி பார்த்ததால் சுசீலாவைக் கத்தியால் குத்தியவன் அங்கிருந்து ஓடப் பார்க்க அவன் நெற்றியில் அடுத்த நொடி தோட்டா பாய்ந்தது. அந்த இடத்திலே மடிந்தான் அவன். யுவனின் ஆட்கள் தான் அவனை சுட்டிருந்தார்கள்.

Advertisement

 

Advertisement

சுசீலாவின் அருகே ஓடிய யுவன் அடுத்த நொடி அவளை கையில் ஏந்தியிருந்தான். துப்பாக்கிச் சூடு நடந்ததால் அங்கே வந்திருந்தவர்கள் எல்லாம் பதறினார்கள். அங்கே சலசலப்பு கேட்க அதை எல்லாம் கண்டு கொள்ளாது “கேசவ் இவன் யாரு என்ன, எப்படி உள்ள வந்தான்னு செக் பண்ணு. மாயா, சுமன் நீங்க ரெண்டு பேரும் வந்திருக்குற கெஸ்ட்டைப் பாருங்க”, என்று அவர்களுக்கு அவசர கதியில் கட்டளை போட்ட யுவன் சுசீலாவை கையில் ஏந்திக் கொண்டு காருக்கு சென்றான். வலி உயிர் போனாலும் அவன் கையில் இருக்கும் அந்த நொடியை ரசித்தாள் சுசீலா. அவன் கண்ணில் இருந்த தவிப்பு அவளுக்கு பிடித்திருந்தது.

 

பின் சீட்டில் அவளை படுக்க வைத்தவனின் கையில் கார் சீறிப் பாய்ந்தது. வயிற்றில் இருந்து அதிகமாக போய்க் கொண்டு இருந்தது சசீலாவுக்கு. ஏற்கனவே அவன் உடை, கையில் எல்லாம் ரத்தம் படிந்திருந்தது.

Advertisement

 

இப்படி ஒரு சூழ்நிலையை அவன் எதிர் பார்க்கவே இல்லை. அவள் வயிற்றில் இருந்து வந்த ரத்தம் அவனுடைய காரின் சீட்டை நனைத்தது. அந்த வெண்ணிற சீட்டில் ரத்தம் படிவதைக் கண்ட சுசீலா “உங்க வெளிநாட்டுக் கார் நாஸ்தியாகிருச்சு”, என்றாள்.

 

“ஷட் ஆப். இது ரொம்ப முக்கியமா?”, என்று கேட்டான் யுவன்.

“மெதுவா போங்க. நீங்க போற வேகத்தைப் பாத்தா ஹாஸ்பிட்டல் போறதுக்குள்ள  நான் செத்துருவேன் போல?”

 

“இடியட். கொஞ்சம் அமைதியா வரியா?”, என்று கத்திய யுவன் மேலும் காரின் வேகத்தைக் கூட்டினான். அவளைக் காப்பாற்ற அவன் பதறிக் கொண்டிருக்க அவள் அப்படிச் சொன்னால் அவனும் என்ன தான் செய்வான்?

 

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு. கொஞ்சம் மெதுவா ஒட்டுங்களேன்”, என்றாள் சுசீலா.

 

“நான் மெதுவா போனா உன்னை எப்படிக் காப்பாத்த முடியும்? கொஞ்சம் கண்ணை மூடிட்டு உக்காரு சுசீ. உன்னைக் காப்பாத்தனும்னு என் கூட வச்சி நானே உன்னைக் இந்த கதிக்கு ஆளாக்கிட்டேனே? உனக்கு அந்த ரெட்டியால ஆபத்து இருக்குனு தெரிஞ்சும் வீட்ல பங்ஷன் வச்சது தப்பு”

 

“ஆபத்து எப்ப வேணும்னாலும் வரும். கேவலமான வாழ்க்கை வாழ்ந்து அசிங்க பட்டு சாக வேண்டிய எனக்கு உங்க மடில நிம்மதியான சாவு வந்தா அதை விட சந்தோஷம் வேற என்ன இருக்கு? சாவு இப்ப வந்தா என்னோட மனசுக்கு அமைதி கிடைக்கும்”

 

“அப்படி பேசாத சுசீ. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உனக்கு ஒண்ணும் ஆக விட மாட்டேன். உனக்கு ஒண்ணும் ஆகாது. இப்ப ஹாஸ்பிட்டல் போயிறலாம்”

 

“நான் இருந்து என்ன செய்ய? எதுக்கு வாழுறேன்னு தெரியாம ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன். எங்க எங்கயோ சுத்திட்டு இருக்கேன். முதல்ல அம்மா அப்பா இல்லாம அனாதையா ஆனேன்? சொந்த மாமா வீடுன்னாலும் அவங்க வீட்ல நான் நிம்மதியா இருந்தது இல்லை. எங்க அத்தை என்னை நிம்மதியா இருக்க விட்டது இல்லை. அவங்க வாங்கின கடனுக்காக தப்பான தொழிலுக்கு என்னை வித்துட்டு போயிட்டாங்க.,.”

 

“பேசாம அமைதியா வா சுசீ”

 

“இல்லை நான் பேசணும். என்னோட மனசுல இருக்குறதை எல்லாம் உங்க கிட்ட கொட்டனும். அந்த ரெட்டி ஆட்கள் கிட்ட இருந்தப்ப வாழ்க்கை எப்படி ஆகுமோன்னு பயம் வந்துச்சு. அங்க இருந்து சம்பந்தமே இல்லாத நீங்க என்னைக் காப்பாத்துனீங்க. அந்த நிமிஷம் நீங்க எனக்கு கடவுளா தான் தெரிஞ்சீங்க. உங்க கிட்ட வந்த அப்புறம் நான் எதிர் பார்க்காத சம்பவங்கள் எல்லாம் நடந்து உங்க வீட்ல இருந்து தப்பிச்சு… போயி.. மறுபடியும் நீங்க தான் என்னை காப்பாத்துனீங்க. உங்களைப் பத்தி தெரிஞ்சப்புறம் உங்க மேல இருந்த தப்பான அபிப்ராயம் எல்லாம் மாறி ரொம்ப நல்லவங்கன்னு என்னோட மனசு நம்புச்சு. அந்த மனசுல என்னையே அறியாம உங்க மேல ஒரு ஈர்ப்பு உருவாச்சு..”

 

“சுசீ, இதெல்லாம் அப்புறம் பேசலாம் மா. நீ இப்ப ரொம்ப பேசக் கூடாது. பிளீஸ். கொஞ்ச நேரம் அமைதியா வா மா”

 

“இல்லை, இப்ப பேசலைன்னா அப்புறம் பேச முடியாமலே போயிரும். செத்துப் போய்ட்டேன்னா எப்படி உங்க கிட்ட பேச முடியும்? எனக்கு உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கணும். எதுக்கு யுவன் உங்களுக்கு என்னை பிடிக்கலை?”, என்று அவள் கேட்டதும் அதிர்ச்சியாக அவளை திரும்பி பார்த்தான்.

 

இப்படி நேரடியாக அவள் கேள்வி கேட்பாள் என்று அவன் சுத்தமாக எதிர் பார்க்கவில்லை. சாதாரண நிலையில் இருந்தால், அவளும் அப்படி கேட்டிருப்பாளோ என்னவோ?

 

இப்போது உயிர் பயம் அவளை அப்படி பேச வைத்தது. மனதில் இருந்த அனைத்தையும் அவனிடம் ஒப்பித்தாள். ஒரு வேளை தான் உயிரோடு இல்லாமல் போனால் அவனிடம் மனதில் இருப்பதை அவளால் கேட்க முடியாதே.

 

“சொல்லுங்க யுவன், என்னோட மனசுல இருக்குறது உங்களுக்கு தெரிஞ்சும் எதுக்கு உங்களுக்கு என்னை பிடிக்கலை?”

 

“உன்னைப் பிடிக்கலைன்னு யார் சொன்னா? உன்னைப் பிடிக்காம தான் உன்னை என்னோட வீட்ல ஒரு ஆளா இருக்க வச்சிருக்கேனா?”

 

“நீங்க அன்பா ஒண்ணும் என்னை உங்க வீட்ல இருக்க வைக்கலை. யாரும் இல்லாத அனாதைன்னு நினைச்சு ஆதரவு கொடுத்துருக்கீங்க”

 

“நீ இப்படி நினைச்சா நான் என்ன செய்ய? ஆதரவு கொடுக்க உன்னை எதுக்கு வீட்ல தங்க வச்சிருக்கேன்? ஹோம்ல சேத்துருப்பேனே?”

 

“அது நான் உங்களை இடிச்சு தள்ளினதுனால நீங்க உயிர் தப்பினதுனால இருக்கலாம். ஆனா என்னை உங்களுக்கு பிடிக்கலை”

 

“எதை வச்சு அப்படி சொல்ற?”

 

“சாரும்மா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது பத்தி கேட்டப்ப மறுத்தீங்களே”

 

“அதுக்கு பதில் இன்னொரு நாள் சொல்றேன் சுசீ”

 

“இல்லை எனக்கே பதில் தெரியும். உண்மைலே உங்களுக்கு என்னை பிடிக்கலை. ஆனா என்ன காரணம்னு தான் எனக்கு தெரியலை. ஒரு வேளை நான் அந்த ரெட்டியோட ஆட்கள் கையில் சிக்கினப்ப கெட்டுப் போயிருப்பேன்னு நினைக்கிறீங்களா? அதனால தான் உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா?”, என்று கேட்டதும் அதிர்ந்து போனான் யுவன். இப்படி எல்லாம் சுசீலாவால் பேச முடியும் என்று அவன் கனவில் கூட எண்ண வில்லை.

 

“வாயை மூடு சுசீ. இதுக்கு மேல ஒரு வார்த்தை நீ பேசக் கூடாது”, என்று சீறினான். அப்படி திட்டினால் அவள் அமைதியாவாள் என்று எண்ணினான்.

 

“இல்லை நான் பேசுவேன். எதனால உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு சொல்லுங்க. நீங்க பணக்காரனா இருக்கீங்க, நான் ஒண்ணும் இல்லாதவள். அதனால உங்களுக்கு பிடிக்கலையா? சொல்லுங்க யுவன்”

 

“வாயை மூடுன்னு சொன்னேன் சுசீ”

 

“இல்லை, எனக்கு பதில் தெரியணும்”

 

“நீ சொன்னா கேக்க மாட்டல்ல? உன்னை. உன்னை…”, என்று கத்தியவன் காரின் டேஷ் போர்டில் இருந்து ஒரு கர்ச்சிப்பை எடுத்து பின்னால் திரும்பி அவள் மூக்கில் அழுத்தினான். அடுத்த நொடி மயங்கிச் சரிந்தாள் சுசீலா.

 

சிறிது நேரத்தில் ஹாஸ்பிட்டலில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க பட்டாள். அவளுக்கு ரத்தம் ஏற்றப் பட்டது. பதட்டத்துடன் வெளியே இருந்தான் யுவன்.

 

அவனுடைய பதட்டமே அவளை அவனுக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் என்பதை அவனுக்கே புரிய வைத்தது. சில மணி நேரத்திற்கு பிறகு “அவங்க ஆபத்தை தாண்டிட்டாங்க”, என்று டாக்டர் சொன்னதும் தான் நிதானமாக மூச்சு விட்டான் யுவன்.

 

தளர்ந்து போய் அங்கிருந்த சேரில் அமர்ந்தான். சுசீலா பேசிய பேச்சுக்கள் எல்லாம் நினைவில் வந்தது. அவள் பேசியதிலே அவள் மனதில் இருப்பது அவனுக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது.

 

ஆனால் அவனால் அவளை ஏற்றுக் கொள்ள முடியுமா? அவனைப் பற்றிய உண்மை தெரிந்தால் அவளே அவனை பிடிக்க வில்லை என்று சொல்லி விட மாட்டாளா? அவன் கடந்து வந்த பாதைகளை அறிந்தால் அப்போதும் அவன் மீதான நேசம் அவளுக்கு இருக்குமா?

 

ஒரு வேளை நூற்றில் ஒரு பங்காக அவனைப் பற்றி அறிந்த பின்னும் அவனை அவள் ஏற்றுக் கொண்டால் ஒரு சாதாரண மணவாழ்க்கையை அவளுக்கு அவனால் கொடுக்க முடியுமா? அவனுடைய நிழல் உலகம் அவனை நிம்மதியாக வாழ விடாது. அந்த நிழல் உலகத்தில் மனைவியாக அவளும் நுழைந்தால் எந்நேரமும் அவளுக்கு ஆபத்து வரலாமே?

 

அவளைப் பற்றியே அவன் யோசித்துக் கொண்டிருக்க அப்போது அங்கே சுமனும் மாயாவும் வந்தார்கள். “சுசீ எப்படி இருக்காங்க பையா?”, என்று கேட்டாள் மாயா.

 

“சேஃப் ஆகிட்டா மாயா. அப்புறம் சுமன், சுசீலாவைக் குத்தியவன் யாருன்னு விசாரிச்சியா?”

 

“வேற யாரு? அந்த ரெட்டி ஆள் தான். செத்தவன் போனை செக் பண்ணப்ப ரெட்டி நம்பர் தான் அதிகம் தொடர்புல இருந்துருக்கு. பங்க்ஸனை சாதகமா வச்சு உள்ள நுழைஞ்சிருக்கான். நம்ம பிஸ்னஸ் கூட தொடர்புடையவன் அப்படிங்குறதுனால நம்ம செக்யூரிட்டியும் அவனை உள்ள விட்டுருக்காங்க. இவன் ரெட்டிக்கிட்ட விலை போவான்னு யாரும் நினைக்கலை. கன் கொண்டு வந்தா அவனை உள்ளே விட மாட்டோம்னு தெரிஞ்சு நம்ம கிட்சன்ல இருக்குற கத்தியை எடுத்து குத்திருக்கான் பாஸ்டர்ட்”, என்ற சுமனின் குரலில் கோபம் கொப்பளித்தது.

 

“இதுக்கு மேல அந்த ரெட்டியை விட்டு வைக்க கூடாது சுமன். அப்படி விட்டு வச்சா அவன் யாரையும் வாழ விட மாட்டான். நீங்க ரெண்டு பேரும் சுசீலாவைப் பாத்துக்கோங்க. நம்ம ஆட்களை உங்க பாதுகாப்புக்கு இங்க வரச் சொல்லிருவேன். கொஞ்ச நேரத்துல இங்க வந்துருவாங்க. நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்”, என்று சொல்லி சுசீலாவை அவர்கள் பொறுப்பில் விட்டு விட்டு கிளம்பி விட்டான்.

 

யுவன் நெருப்பை போன்றவன். அவனை நெருங்க இது வரை யாராலும் முடிந்ததில்லை. அடி மட்டத்தில் இருந்து கஷ்டப் பட்டு முன்னுக்கு வந்திருக்கிறான். பல இடங்களில் அவன் கால் தடம் பதிந்திருக்கிறது.

 

யாரை எப்படி எங்கே அடிக்க வேண்டும் என்ற யுக்தி தெரிந்தவன். அவன் முன் விரல் நீட்டும் துணிச்சல் இது வரை யாருக்கும் இருந்ததில்லை. அப்படி பட்ட யுவனை சீண்டிப் பார்த்து விட்டான் ரெட்டி. அவனின் கோட்டைக்குள்ளே ஆளைப் நுழைத்து இந்த காரியத்தை செய்திருக்கிறான் என்றால் இனி யுவனால் நிம்மதியாக இருக்க முடியுமா?

 

ரெட்டி கதையை முடிக்க வில்லை என்றால் யாராலும் நிம்மதியாக இருக்க முடியாது என்று எண்ணியவன் ரெட்டியிடம் இருக்கும் இன்பார்மரான வினித்துக்கு போனைப் போட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!