Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai KadanthaalUncategorized

அ06_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால் 6_2

 

“மிஸ் மீ?”

 



Advertisement

“..”

 

“மிஸ் மீ?”

Advertisement

 

Advertisement

“..”

 

“மிஸ் மீ?”

Advertisement

 

“யார் டா நீ எனக்கு? மிஸ் பண்ண?”, சத்தமாக முனகினாள் அலர்விழி.

 

“ஏய்.. அலர்..”, நகுநா உலுக்க கொல்லைப்புற திண்ணையில் சாய்ந்து கண்ணயர்ந்திருந்தவள் கண் திறந்தாள்.

 

இருட்டாக இருந்தது. அவன் எங்கே? மூடிய அறையில்லை.. திறந்த வெளி.. நிலவு ஒளியில் கிணறும் மரமும் அவள் முன்! அவனில்லை!

 

“அலர்?”, மீண்டும் நகுநா உலுக்க, சுயம் பெற்றாள்.

 

“யார மிஸ் பண்ற?”, நகு கேட்க, அலர்விழியிடம் உணர்ச்சியற்ற முக பாவம்.

 

மூன்று முறை பார்த்திருப்பாளா அவனை? பெயர் கூட தெரியாதே.. இரண்டு வார்த்தைகள் பேசியிருக்கிறான்.. எப்படி தனக்குள் பதிந்து போனான்? அவளுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. அவள் நிலை அவளுக்கு பிடிக்கவுமில்லை.

 

இருமுறை அவனை காயப்படுத்தியும் எந்த முகச்சுளிப்பும் காட்டாமல்.. நமுட்டு சிரிப்பை உதிர்த்தவனால் மனதில் சின்ன சலனம், அது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வேண்டாம் என்று நினைக்க நினைக்க அதிகமாக அவனை நினைத்தாள். இரண்டு நாட்களாக அவன் நினைவு வந்து அவளை இம்சிப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை!

 

‘போடா நீ யாரோ. என் கனவு வேற அதுல நீ இல்ல.. போடா’ மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டாள். அவன் நினைவுகளைத் தள்ளி நிறுத்த நினைத்துத் தோற்றுக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. ‘பதினெட்டு வயதில் இது உனக்குத் தேவையா? ம்ம்ஹூம் இது தேவையில்லாத சிந்தனை. வயது கோளாறில் சிக்கினால் வாழ்க்கை தடம் மாறிப் போகும்! வேண்டாம் நீ போ…’. மூளை, அவனைத் தள்ளிவிட முயன்று.. எக்கச்சக்கமாக தோற்றுக்கொண்டிருந்தது.

 

“அம்மா.. இவ கண்ண திறந்து வச்சுகிட்டே தூங்கராம்மா..”, நகு கூவிக்கொண்டே உள்ளே செல்ல, அப்பா வந்தார்.

 

மகள் இருளை வெறித்து அமர்ந்திருந்தாள்.

 

தலை வருடப்படவும் தலை நிமிர்த்தியவள் பார்வையில், அப்பா முன் வர… சிந்தனையில், ‘அவன்’ பின் சென்றான்.

 

“என்ன பாப்பா யோசனை? எக்ஸாம் நல்லா எழுதியிருக்கத் தானே?”

 

அம்மா தட்டோடு வந்துவிட்டார்.

 

“ரொம்ப நல்லா எழுதியிருக்கேன் ப்பா”

 

“அப்புறம் என்ன பாப்பா ஏதோ மாதிரி உக்காந்து இருக்க?”

 

“ஒன்னும் இல்லப்பா.. சும்மா உக்காந்து இருக்கவும் காத்துக்கு தூங்கிட்டேன்.. அது தான்!”

 

“சாப்பிட்டுட்டு உள்ள போய் நிம்மதியா கால் நீட்டிப் படு பாப்பா..”, அப்பா வாஞ்சைசோடு மகள் தலை தடவ..

 

“இல்ல பா.. தூக்கம் எல்லாம் இல்ல..”

 

“அவளுக்கு கம்யூட்டர் க்ளாஸ் போகணுமாம் சித்தப்பா.. அது தான் மேடம் மூட் சரியில்லாம சுத்தறாங்க!”, மாதவன் வாய் விட்டான்.

 

அம்மா உணவை உருண்டை பிடிக்க, மாதவன் வாய் திறக்க.. முதல் வாய் அவனுக்கு. மாற்றி மாற்றி ஒவ்வொருத்தருக்காய் அவர் கொடுக்க, பிள்ளைகள் மூவரும் நிலவு ஒளியில் ஒன்றாய் உண்டு முடித்தனர்.

 

அன்று சென்று வந்த கணினி மையம் பற்றிக் கூறி முடித்திருந்தாள்.

 

“வேலை கிடைச்சிடுமா பாப்பா..?”

 

“ஆமா ப்பா.. என்னால கண்டிப்பா அவங்க சொல்ற அளவுக்கு மார்க் எடுக்க முடியும். பெரிய கம்பனில கிடைக்கும் பா.. கண்டிப்பா முதல் வருஷமே 4.5ல இருந்து 5.5 லட்சம் வரைக்கும் எதிர் பாக்கலாம்பா..”

 

“சரி பாப்பா… உனக்கு சரின்னு பட்டா, அப்பா பணத்துக்கு ஏற்பாடு பண்றேன்”. எல்லா அப்பாக்களும் போல் மகளுக்காக மட்டுமே யோசிக்கத் தெரிந்த அப்பாவாய் தியாகு.

 

பெண் முகம் மலர்ந்து முடிக்கவில்லை..

 

“படிப்பு முடியவும் ஒரு வருஷம் வேலைக்குப் போக போறியா? அதுக்கு எதுக்கு பாப்பா இவ்வளவு செலவு? கல்யாணம் ஆனதும் உன் புருஷன் வீட்டுல வேலைக்கு விடுறாங்களோ என்னவோ?”, பெற்றவளால் பெண்ணின் கனவை மட்டுமே பார்க்க முடியாதே… அவள் ஆசைக்குப் பின்னும் முன்னும் இருக்கும் கணக்கு வழக்கையும் சேர்த்துத் தானே பார்க்கவேண்டியுள்ளது.

 

“ம்மா.. என்ன மா? கல்யாணமா? ஏன் மா? எனக்குன்னு ஒரு தடம் பதிக்கணும்மா.. எனக்குக் கனவு இருக்குமா. கண்டிப்பா அதுல இப்போதைக்கு கல்யாணம் இல்லமா.”

 

“அப்போ என்ன சாமியார் ஆக போறியா?”

 

“ஷ்ஷ்ஷ்… என்ன சௌந்தரியா இது? படிக்கிற பிள்ளை கிட்ட என்ன பேச்சு இது? அவ படிக்கட்டும். வேலைக்கு போகட்டும். அதுக்கப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு அத பத்தி யோசிப்போம். பொம்பள குழந்த சுயமா நிக்க கத்துக்க வேண்டாமா? படிப்பும் வேலையும் இருந்தா பிள்ளைங்க தன்னம்பிக்கையோட இருப்பாங்க. நேரங்காலம் பாக்காம ஒரு கனவோட கண்விழிச்சு படிச்சு கஷ்டப்பட்டு வாங்கின வேலைய எதுக்கு கல்யாணம் பண்ணினதும் விடணும்?”

 

எப்பொழுதும் போல் பாட்டி தான் பேசினார் அவளுக்காக.

 

“என்ன அத்த பேசறீங்க? இவளுக்கு இன்னும் ரெண்டர வருஷ படிப்பு, ஹாஸ்டல் செலவு இருக்கு. அடுத்து நகு-க்கு படிப்பு செலவு இருக்கு. இப்படியே கல்யாணத்துக்குச் சேர்த்து வைக்கிறதை எல்லாம் காலி பண்ணிட்டா… பொண்ணுங்கள கரை சேக்க வேண்டாமா?”

 

“மா நான் இங்க தானே லோக்கல்ல படிக்க போறேன் எனக்கு ரொம்ப எல்லாம் செலவு ஆகாது. அக்கா கேக்கற க்ளாஸ்ல சேர்த்து விடுங்களேன்.”, நகு நடுவே பேச..

 

“இது என்ன புது பழக்கம் நகு.. பெரியவங்க பேசும் போது நடுவில பேசிகிட்டு?”, அம்மா காய்ந்தார்.

 

“அவ என்ன தப்பா சொல்லிட்டா? பொண்ண, கேட்ட க்ளாஸ்ல சேத்து விடேன் சௌந்தரியா!” – பாட்டி

 

“அத்த… அவ கேக்கிற க்ளாஸ் லட்சத்து இருபதினாயிரமாம்!”

 

ஒரு நிமிடம் அங்கு அமைதி நிலவ, மாதவன் கிணற்றின் திண்டின் மேல் அமர்ந்து கொண்டு நடப்பதை பார்த்து கொண்டிருந்தான். சத்தம் எழுப்பாமல் சித்தப்பாவிடம் பேசியிருக்க வேண்டும்! அவரிடம் தனிமையில் பேசியிருந்தால் அமைதியாக அலர்விழிக்கு சாதகமாக முடிந்திருக்கும்.

 

“கட்டையில போற வயசுல எனக்கு எதுக்கு கையிலையும் கழுத்துலையும்? இத வித்து பிள்ளையைப் படிக்க வை..”, சகுந்தலா பாட்டி தீர்மானமாகக் கூறவும்

 

“அம்மா.. என்ன பேச்சு இது?” – தியாகு

 

“பாட்டி…! ஏன் பாட்டி இப்படி பேசறீங்க? அப்படி ஒன்னும் எனக்கு படிக்க வேண்டாம்.”, அலர், பாட்டி மடி சாய்ந்து கொள்ள..

 

“பாப்போம் பாப்பா.. என்ன பண்றதுன்னு.. ஒரு ஃபிக்ஸட் டெபாசிட் இருக்கு.. அத எடுப்போம்.. என்ன வட்டி கிடைக்காது. போகட்டும் விடு!” – அப்பா

 

“பொம்பளை பிள்ளைக்கு படிப்புக்கே இவ்வளவு செலவு செஞ்சா… இவ அளவுக்கு மாப்பிளை தேடணும். பெரிய படிப்பும்.. நல்ல வேலையிலும் இருக்கவருக்கு என்னத்த கொடுத்து பொண்ண கரை சேக்க..?”

 

“எனக்கு விலை கொடுத்து வாங்கற மாப்பிள்ளை வேண்டாமா..”

 

“அலர்விழி!”

 

“பச்! யாரையாது வாங்குங்க! ஒரு தரம் ஆன் சைட் போனா போதும் மா.. சேத்துடலாம்!”

 

“நடக்கிறதை மட்டும் பேசுவோம் பாப்பா! நீ மட்டும் இல்ல உன் தங்கச்சியும் இருக்கா! சொத்துன்னு இருக்கது இந்த ஒரு வீடு தான்! உன் அளவுக்கு அவளுக்கும் வரன் பாக்க வேண்டி வருமே.. என்னத்த வித்து கொடுப்போம்?”

 

பேச்சு போகும் திசை சரியில்லை என்று புரிந்தது அலர்விழிக்கு. நகுநாவின் கை பற்றி அம்மா ஒரு வார்த்தை கூறினாலும் தங்கை உடைந்து போக மாட்டாளா? தங்கை காயப்பட்டு.. அம்மா விருப்பமின்றி தரும் இந்த படிப்பு தேவை தானா? அவளுக்கு அம்மாவும், நகுவும் முதன்மையாக தெரிய.. கனவாவது ஏதாவது என்ற முடிவுக்கு வந்தாள்.

 

“சரி விடுங்க ம்மா.. முதல்ல காலேஜ் முடிக்கிறேன்.. அப்புறம் மத்ததை யோசிப்போம்!”

 

மூத்த மகளாய், பிரச்சினையாக முன் நின்ற அவள் ஆசைக்கு, தங்கை முகம் பார்த்து முற்றுப் புள்ளி வைத்தாள், அலர்விழி. இதுவே மற்ற எல்லா பிரச்சினைகளுக்கும் வழக்கமாய் மாறிப் போகாமலிருந்தால் சரி தான்!

 

மாதவன் பேச வார்த்தை இல்லாமல் நின்றிருந்தான். அளவான குடும்பம்.. அளவான வருமானம்.. பாசம் கொட்டி கிடக்கிறது. ஒருவர் மற்றவர்களுக்காக யோசிப்பதும்.. தாங்குவதும் பார்க்க அழகு தான்!

 

வசதி இல்லை என்பதால் இதுபோல் எத்தனை பிள்ளைகளுக்கு அவர்கள் படிப்பும், பட்டமும் கூட எட்டா நிலவாகப் போய் விடுகிறது!

 

கொட்டி கிடப்பதை அள்ள ஆள் இல்லாமல் அவர்களிடம் இருக்க.. லட்ச ரூபாய்க்கு எவ்வளவு பாடு. இவர்கள் சேர்க்காவிட்டால் என்ன? அவன் தங்கையை அவள் இஷ்டப்படி படிக்க வைத்தே தீரும் நோக்கம் அவனிடம்.

 

சௌந்தரியா படித்தவர் தான். ஆனால் பழமைவாதி. அவருக்குத் தெரிந்ததெல்லாம் வீடும், அலுவலகமும், கோவிலும் தான்! ஒரு வட்டம் இட்டு அதைத் தாண்ட விரும்பாதவர். நூலைப் போலத் தானே சேலை இருக்க வேண்டும்? ஆனால் ஏன் அவர் மகள் மட்டும் அனைத்து விஷயத்திலும் அவர் வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருக்கிறாள்?

 

“என்னதான் இருந்தாலும்.. எந்த வேலைக்குப் போனாலும்.. பொண்ணுங்க கல்யாணம் ஆனாலே ஒரு வீட்டுக்குப் போய் சமைக்கத் தானே போறாங்க? குழந்தையை பாத்துக்க ஆள் இல்லன்னா அந்த வேலையும் போச்சு! அதுக்கு தான் பாப்பா சொல்றேன்!” கால காலமாய் நடைமுறையில் அது தானே நடக்கிறது?

 

“நான் அந்த காலத்து ஆள் தான் சௌந்தரி.. ஆனா என் சிந்தனை எல்லாம் அப்போவே ஒரு படி மேலன்னு என் அம்மா சொல்லுவாங்க. நாம அப்படி தான் இருக்கணும்…

 

கொல்லை துளசியா பாரம்பரியம், பண்பாடு, பழமை எல்லாம் இருக்கணும். ஆனாலும் காலத்துக்கு ஏத்த மாதிரி மாற தெரியணும். எல்லா கட்டுபாடுக்கும், எண்ணத்துக்கு ஒரு எல்லை இருக்கு. வெளியில வா சௌந்தரி!

 

பொண்ண பெத்தாலே கல்யாணம்ன்னு ஒரு சின்ன வட்டத்துக்குள்ள அடக்க நினைக்கக் கூடாது. அவ, அவள பத்தி தெரிஞ்சுக்க அவகாசம் குடு. 

 

அவளுக்குன்னு ஒரு தடம் பதிக்க விரும்பிறவ கனவ புரிஞ்சு அவள மேல் தூக்கி நிறுத்த தெரியறவனுக்கு கட்டி கொடுக்கணும். அத விட்டுட்டு அவ வாழ்க்கையில இன்னும் வராத ஒருத்தனுக்காக படிக்க விரும்பிற பிள்ள படிப்ப கெடுத்துகிட்டு!

 

கல்யாணமான கையோட அவ சுயத்தைச் சாம்பல் ஆக்குற எவனையும் காசு கொடுத்து வாங்க வேண்டாம் என் பேத்திக்கு. என் பேத்திங்க அழகுக்கும் அறிவுக்கும் எல்லாம் நல்லதே நடக்கும். படிக்க வை மா!”

 

“எல்லாம் சரி தான் அத்த… இவ்வளவு பணம்.. அது தான்! அப்போ அந்த ஃபிக்ஸட் டெப்பாசிட்ட ப்ரேக் பண்ணணுமே!”

 

“ஆது எல்லாம் தேவைப் படாது சித்தி. அவ மார்க்குக்கு 75% ஸ்காலர்ஷிப் கிடைக்கும் சித்தி. எந்த சென்டர்ல்ல அந்த வசதி இருக்குன்னு விசாரிச்சு சேர்த்து விடுவோமே… ஒரு முப்பது எல்லாம் சமாளிச்குடுவீங்க தானே..?”, மாதவன் வாய்க்கு வந்ததை அளந்து விட்டான்!

 

அலர்விழிக்கு தெரிந்தது.. மீதி பணத்தை மாதவன் தான் கட்டப் போகிறான் என்று.

 

“ண்ணா..”, அவள் வாய் திறக்கவும்,

 

“உள்ள போ அலர். அப்புறம் பேசுவோம். நாளைக்கு காலையில நான் கிளம்பணும். படுக்க போறேன்”, என்று பேச்சை கத்தரித்தான்.

 

மாதவன் படுக்கச் செல்ல மாநாடு கலைய ஆரம்பித்தது. அப்பாவு அம்மாவும் பணத்துக்கு என்ன செய்வது என்று பேசிக் கொண்டே உண்ணச் செல்ல, நேரம் பார்க்க, கடிகாரம் மணி ஒன்பது என்றது!

 

“போங்க பசங்களா.. உங்களால என் ‘சிங்க நாட்டாமை’ சீரியல் போச்சு! இன்னைக்கு நாட்டாமை என்ன செஞ்சு வச்சானோ? பட்டணத்து பொண்ண பாக்க வண்டில போனான்.. எதிர்ல்ல வேற வேகமா லாரி வந்துது! என்ன ஆச்சோ?”, தன்போல் பாட்டி புலம்பிக்கொண்டே படுக்கச் சென்றார்.

 

அவரை தொடர்ந்து தைல பாட்டிலோடு நகுநா. அவளைத் தொடர்ந்து அலர்.

 

“ஆமா.. ஒரு பொண்ண ஒருத்தன் கெடுத்துட்டான்னு ஒரு தரம் ஒரு கேஸ் தீர்ப்புக்கு வந்துதே.. என்ன டி ஆச்சு?”, இருவரையும் தொடர்ந்து வந்த அலர்விழிக்கு பெருத்த சந்தேகம்.

 

“காதலிச்ச மாமனை விட்டுட்டு.. கெடுத்தவன கட்டி வச்சுட்டாங்க”

 

“ஹீரோயில் நடுவுல குதிச்சாளே..? தடுக்க முடியலியா?”

 

“ஒன்னும் வேலைக்கு ஆகல! அந்த மாமன் காரனோட அம்மா வேற ஜாதிய  சேர்ந்தவங்களாம். அதனால அவனுக்கு அவங்க இனத்து பொண்ண கட்டுற தகுதி இல்லியாம்.”

 

“என்ன டி? அவன் நல்லவன். அவங்க குடும்பம் நல்ல அன்பான குடும்பம்.. அந்த தகுதி பத்தலியா?”

 

“ம்கூம்! ஒரு பொண்ண மானபங்கம் பண்ணினாலும் அந்த பல்குத்தி தான் அவங்க இனமாம். அவனுக்குத் தான் எல்லா தகுதியுமாம். அதனால தான் அந்த தீர்ப்பாம்!”

 

“என்ன கர்மம்?!”

 

“ம்ம்.. தீர்ப்பு வந்ததும் மக்கள் எல்லாம் கைதட்டி நாட்டமை புத்தி கூர்மைய பாராட்டி தள்ளிட்டாங்க! அது ஏன்..? நம்ம அம்மாக்கும் அந்த தீர்ப்புல பரம திருப்தி! அது மேட்டர் இல்ல..”

 

“அதுக்கு மேல என்ன டி இருக்கு?”

 

“அந்த பொண்ணு இப்போ அவ புரிஷனோட ஹேப்பி.”

 

“ஓஹ்.. அவ்வளவு தானா அவ மாமன் மேல இருந்த லவ்… அட கடவுளே…”, அலர்விழியால் நம்பத்தான் முடியவில்லை!

 

“மேடம் ப்ரெக்னென்ட் இப்போ..”

 

“அது வேறையா..”, அது தான் அவள் கூறிய பாழுங்கிணறா? அலர் சத்தமாக சிரிக்க…

 

“கேளு கேளு… அவ மாசமானதும், அதையே வச்சு..

 

‘சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு

என் கண்ணம்மா

செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

என் பொன்னம்மா-ன்னு ஒரு வாரம் சீரியல் ஓட்டினானுங்க!”

 

“என்னவோ நல்லா இருந்தா சரி தான்..”

 

“யாரு? அவ இப்போ ஹாப்பி ஆனா அந்த மாமன் அர லூசு மாதிரி அவளையே நினைச்சுட்டி சுத்துது!”

 

“ஓஹ்!”

 

“பாவம் அலர் அந்த லூசு மாமன். நீ சொன்னது சரி தான் அலர். இந்த காதல் எல்லாம் சரி வராது. யாரது ஒருதர பலி வாங்கிடும் போல! இவங்கள பிரிச்சு வச்ச நாட்டாமை பட்டணத்து பொண்ண லவ் பண்ணிட்டு சுத்துது.. ஒன் சைட் லவ் அது. அவளுக்கு வேற ஆள் இருக்கணும்… அவ இவனுக்கு அல்வா குடுக்கணும்.. அப்போ தான் இவனுக்கு எல்லாம் அறிவு வரும்!”

 

“இல்லத அறிவு எங்க இருந்து வருமாம்?”, இருவரும் கெக்கப் பிக்க எனச் சிரிக்க..

 

“பாப்பா.. அண்ணாக்கு பால ஊத்தி குடுத்துட்டு.. அவனுக்கு படுக்கை ரெடி பண்ணு!”, அம்மா சத்தம் கொடுக்க… நாட்டாமையை மறந்து போனாள்.

 

அறைக்குச் சென்றவள், படுக்கையை விரித்துக் கொண்டே, “ண்ணா..” என்று ஆரம்பித்தாள்.

 

ஆரம்பிக்க மட்டும் தான் முடிந்தது.

 

“வார்த்தைக்கு வார்த்தை அண்ணான்னு சொல்லு… ஆனா அது வார்த்தையில மட்டும் தான் இல்ல?”

 

“ஏன் ண்ணா அப்டி சொல்ற?”

 

“ம்ம்.. நான் உன் அண்ணன்னா நான் செய்யறத நீ தடுக்காத. ஆமா.. அம்மாவும் அப்பாவும் சைட்ல பணம் வாங்க தான் செய்யறாங்க. இவங்க வாங்கினா தான் இவங்க மேல இருக்க அதிகாரிங்களுக்கு இவங்களால கொடுக்க முடியும். அப்படி இவங்க நல்லவங்களா பணம் வாங்காம, மேல இருக்கவங்களுக்குப் பணம் கொடுக்க முடியாதுன்னு சொன்னா.. வருஷத்துக்கு நாலு ட்ரான்ஸ்ஃபர் இருக்கும்!

 

அதுக்காக அவங்க செய்யறது சரின்னு நான் சொல்லல. முழு சிஸ்டமும் அப்படி தான் இருக்கு! அந்த பணத்துல தான் நான் சாப்பிட்டு.. படிச்சு.. வாழ்ந்துட்டு இருக்கேன். அதனால நான் உனக்கு அண்ணனா இல்லாம போகலியே…? சோ வாய மூடிட்டு போய்டு. நான் செய்யறத வேண்டாம் சொன்னா… நானும் உனக்கு இல்ல.”

 

“பச்.. நீ ரொம்ப பேசற ண்ணா..”

 

“போ போய் நிம்மதியா தூங்கு.”

 

“அம்மா அப்பா ஒத்துகணுமே..”

 

“நீ வாய் திறக்க வேண்டாம். நேரம் பாத்து நானே சித்தப்பாட்ட சொல்றேன்”

 

சொல்லுவானா? நம்பாத பார்வை அவள் பார்க்க.. அவன் கள்ள சிரிப்பு சிரித்தான்.

 

“நான் சம்பாரிச்சு திருப்பி தருவேன் ண்ணா”

 

“ம்ம்.. வட்டியோட எதிர்பார்ப்பேன்”, புன்னகைத்தான்.

 

“ரொம்ப தாங்கஸ் ண்ணா..”, அண்ணன் கையை பிடித்துக் கொண்டாள்.

 

“போடி போடி.. போய் நிம்மதியா தூங்கு!”, தலையில் தட்டி துரத்திவிட்டான்.

 

வேண்டாம் என்று கூறியவள் தான்… அண்ணன் பிடிவாதமாக உதவ முன்வரவும்.. எங்கோ ஒரு மூலையில் எழுந்த சின்ன களிப்பு மனம் முழுவதும் பரவ.. உடலில் ஒரு புத்துணர்வு.. நடையில் ஒரு துள்ளல்.. வாயில் ஒரு பாடல்.

 

பார்த்து நின்றவன் முகத்தில் புன்முறுவல்.

 

அண்ணன் அமைவது கூட இறைவன் கொடுத்த வரம் தான் போலும்.

 

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!