Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kaaval neethaanae kaavalanae

Kaathal Neethaane Kaavalane..! – 12

காதல் 12:

அந்த இடத்திலேயே நின்றிருந்த  வருணுக்கு அந்த சில நிமிடங்கள் சில யுகங்களாகவே மனதிற்கு பட்டது. உள்ளுணர்வு ஏதோ உந்தித் தள்ள, தன்னுடைய பார்வையை நாலா புறமும் சுழல விட்டான்.வருணின் பார்வையை அரை மயக்கத்தில் இருந்த சக்தி எப்படி அறிவாள்..?

“என்னடா..? அவன் நம்மளையே பார்க்குற மாதிரி இருக்கு..! என்றான் அந்த ரவுடிகளில் ஒருவன்.

“நீ கொஞ்சம் வாயை மூடுடா..! நீயே காட்டிக் குடுத்துடுவ போல இருக்கு. எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிற மாதிரி நடந்துக்காத..! என்று மற்றொருவன் எரிந்து விழுந்தான்.



Advertisement

“எனக்கென்னமோ சரியா படலை. அவன் இந்நேரம் மோப்பம் பிடிச்சிருப்பான்..! என்று ஒருவன் பயத்தில் கதி கலங்க,

“மோப்பம் பிடிக்க அவன் என்ன நாயா..? என்றான் இன்னொருவன் எகத்தாளமாய்.

“ஆமாடா..!போலீஸ் நாய்..! என்றான் ஒருவன் குரோதத்துடன்.

Advertisement

இவர்களின் சம்பாஷணைகளை அறியாத வருண், சக்தியைப் பற்றிய யோசனையில் இருந்தான்.

Advertisement

அருகில் இருந்த போலீசிடம்,

“உறுதியா தெரியுமா..?  இந்த பொண்ணை பார்க்கவேயில்லையா..? என்றான் மீண்டும்.

“சார்..! எல்லா வண்டியையும் செக் பண்ணித்தான் சார் அனுப்பிட்டு இருக்கோம். இவங்களை பார்க்கவே இல்லை..! என்றார் அந்த போலீஸ்க்காரர் உறுதியாக.

Advertisement

அதற்குள் வருணின் மொபைலுக்கு போன் வர, அதை எடுத்து பேசத் தொடங்கினான்.

“சார்..! அந்த ருத்ராவை கொடைக்கானல் ஸ்டேஷன் கொண்டு வந்தாச்சு சார்..! என்று எதிர்முனையில் சொல்ல,

“ஓகே..! நான் நேர்ல வரேன். அந்த லேடிகிட்ட இருந்து விசாரணையைத் ஸ்டார்ட் பண்ணாத்தான், இந்த கேஸ்க்கு ஒரு விடிவு பிறக்கும்.. என்றவன், சக்தி இருந்த காரை கடந்து, தன்னுடைய காருக்கு சென்றான்.

ஏனோ அந்த காரைக் கடக்கும் போது, அவன் மனம் கனமாகத் தெரிந்தது அவனுக்கு. அந்த காரை யோசனையுடன் பார்த்தவன், பின் தன்னுடைய சிந்தனையை ஒதுக்கி வைத்து விட்டு வேக நடையிட்டு சென்றான்.

“என்னாச்சு மாப்பிள்ளை..? என்றான் முரளி.

“ஒண்ணுமில்லை மாமா..! இன்னும் பத்து நிமிஷத்துல கிளியர் ஆகிடும்..! என்றவன் சீட்டில் தலை சாய்த்து கண்களை மூடினான். சில கார்களுக்கு முன்னால் சக்தியின் மனம் மயக்கத்திலும் துடித்துக் கொண்டிருக்க, இங்கே வருணின் மனம் அவளை எண்ணி எண்ணி மாய்ந்து கொண்டிருந்தது.

சில நேரங்களில்  அறிவை விட மனம் வென்று விடும். வருணும் இப்பொழுது அந்த நிலைமையில் தான் இருந்தான். அவனுடைய மூளை அவனுக்கு உணர்த்தியதை அவனின் மனக் குழப்பங்களால் தவிர்த்திருந்தான்.

“டேய்..! அவன் நம்மளைத் தேடி வரலை..! ஒரு வழியா போய்ட்டான்..! என்று ஒருவன் நிம்மதியடைய,

“அப்படி மட்டும் நினைக்காத..!  இப்ப நம்ம பிளானை அப்படியே வொர்க் அவுட் பண்ண முடியாது. இப்போ இங்க என்ன செஞ்சாலும் அவன் கண்டுபிடிச்சுடுவான். என்ன செய்யலாம்ன்னு நான் அண்ணன்கிட்ட கேட்கிறேன்..! என்றவன் லெனினுக்கு போன் செய்தான்.

“என்னடா வந்தாச்சா..? என்றான் லெனின் எடுத்த எடுப்பில்.

“இன்னும் இல்லண்ணே…! இங்க அந்த வருண் வந்துட்டான்ணே..! என்றான்.

“என்னடா சொல்றிங்க..? என்றான் லெனின் அதிர்ந்தபடி.

“ஆமாம்ண்ணே..! ஆனா, அவன் எங்களைத் தேடி வந்த மாதிரி தெரியலை. அவன் வந்த கார்ல கூட, அவன் குடும்பமே இருக்கு..! என்றான் அவன்.

“அப்படி அவனை லேசா எடை போட முடியாது. அவனுக்கு சந்தேகம் வராத அளவுக்கு நடந்துக்கணும். கொஞ்சம் அவனுக்கு சந்தேகம் வந்தாலும், பின்னாடியே வந்துடுவான்..! என்ற லெனின், மேலும் சில திட்டங்களை அவர்களிடம் சொல்லி விட்டு போனை வைத்தான்.

“ஏதாவது பிரச்சனையா வருண்..? என்றான் முரளி.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா…! கொடைக்கானல் ஸ்டேஷன்ல ஒரு அக்யூஸ்ட்டை விசாரிக்கணும். நான் போய்த்தான் ஆகணும்..! என்றான் யோசனையாக.

“எனக்குத் தெரியும் வருண்..! நீ இப்படி ஏதாவது சாக்கு சொல்லிட்டு அங்க வராம இருக்கப் பார்ப்பன்னு. அம்மா..! நான் சொல்லலை..? அதே மாதிரியே பண்றான் பாருங்க..! என்றாள் கவுசல்யா மனத்தாங்களுடன்.

“அப்படி எல்லாம் இல்லக்கா..! இது ஒரு கொலை கேஸ். நான் போய்த்தான் ஆகணும். அப்பத்தான் அடுத்தடுத்த கேஸ்க்கு வழி கிடைக்கும்.. என்றான் பொறுமையாக.

“அவன் சொல்றதும் சரிதான..? ஓடிப் போனவ முக்கியமா, இல்லை அவன் வேலை முக்கியமான்னு பார்த்தா, அவனுக்கு அவன் வேலை தான முக்கியம்..! என்று மோகனா சமயம் பார்த்து குத்த, வெகுண்டாள் கவுசல்யா.

“அத்தை…! அவளும் உங்களுக்கு தம்பி பொண்ணுதான். அதை மறந்துட்டு வாய்க்கு வந்தபடி பேசாதிங்க. அப்பறம் நான் மனுசியாவே இருக்க மாட்டேன்..! என்றாள்.

“இப்ப மட்டும் உன் பொண்டாட்டி மனுசியாவா இருக்கா முரளி. கொஞ்சம் கூட அத்தைங்கிற மரியாதை கிடையாது..!என்ற மோகனா, முரளியையும் துணைக்கு அழைத்தார்.

“ரெண்டு பெரும் கொஞ்ச நேரம் வாயை திறக்காம இருக்கிங்களா..? அவனவனுக்கு என்ன பிரச்சனை..? உங்களுக்கு என்ன பிரச்சனை..! என்று சத்யமூர்த்தி குரலை உயர்த்த, இருவரும் அடங்கினர்.

“அக்கா..! ஓடிப் போனதால அவ என் மகள் இல்லைன்னு ஆகிடாது. அவ மேல எங்களுக்கு இருக்கிற கோபத்தை பயன்படுத்தி ஏதாவது ஏத்தி விடுற வேலையெல்லாம் வேண்டாம். அவ செஞ்ச இந்த ஒரு விஷயம் தான் தப்பே தவிர, மத்தபடி அவளை ஒரு குறை சொல்ல முடியாது. இப்போ கர்ப்பமா வேற இருக்கா. இந்த சமயத்துல அவளை கரிச்சுக் கொட்டனுமா..? என்று கோபமாய் கேட்கவும், மோகனா கப்சிப் என்று வாயை மூடினார்.

“வருண்..! உனக்கு வேலை இருந்தா நீ கிளம்பு. நான் பார்த்துக்கறேன்..! என்ற சத்தியமூர்த்தியின் குரலில் என்ன இருந்தது என்று வருணால் கண்டு பிடிக்க முடியவில்லை.

“நான் போயிட்டு வந்துடுவேன் ப்பா..! முக்கியமான வேலை. சக்தி பத்தின குளு கிடைக்கக் கூட சான்ஸ் இருக்கு..! என்றான் வருண்.

அவனின் அவசரமும் மனநிலையும் சத்யமூர்த்திக்கு நன்றாகத் தெரிந்தது. வருணின் மனதில் காதல் கண்டிப்பாய் இருப்பாதாகவே பட்டது அவருக்கு.

“நீ போயிட்டு வா வருண்..! என்றவர்,

“அக்கா, வருணுக்கு பார்த்த பொண்ணு வீட்ல, பையனுக்கு பொண்ணைப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்க..! என்றார் பட்டென்று.

“என்ன  சொல்ற மூர்த்தி…? தேடுனாலும் அப்படி ஒரு சம்மந்தம் கிடைக்காது. எல்லாம் கூடி வர்ற நேரத்துல ஏன் வேண்டாம்ன்னு சொல்ற..? வருண் பிடிக்கலைன்னு சொல்லலையே..? என்றார் மோகனா வேக வேகமாக.

“இப்ப வரைக்கும் சொல்லலை. இனிமேல் சொல்லுவான்..! நான் சொன்னதை மட்டும் செய்ங்க..! என்றார் உறுதியாக.

முரளிக்கும் விஷயம் ஓரளவுக்குத் புரிந்தது. ஆனால் வருண் தன் தந்தையை யோசனையுடன் பார்த்தான்.

“இவரு பண்றதைப் பார்த்தா, லவ் பண்ணாதவனைக் கூட லவ் பண்ண வச்சிடுவார் போலயே..? என்று மனதிற்குள் நினைத்த முரளி , தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

“என்ன மாம்ஸ் சிரிப்பு..? என்றான் வருண்.

“உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்..! என்றான் முரளி.

“நீங்க எல்லாம் சிரிக்குற அளவுக்கா இருக்கு உலகம்..? என்றாள் கவுசல்யா.

“இல்லையா பின்னே..?என்றவன்,

“உலகம் இருக்கோ இல்லையோ உங்க வீடு இருக்கு. இதை சத்தமா சொல்ல முடியுமா..? மொத்தமா சேர்ந்து வந்துட மாட்டிங்க..? என்று வருணிடம் குனிந்து சொல்ல,

“என்ன சத்தம்..? என்றாள் கவுசல்யா.

“இன்னும் அரைமணி நேரத்துல போயிடலாம்ன்னு சொல்லிட்டு இருந்தேன்..! என்ற முரளி ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்ட,

“இவ்வளவு பயம் இருக்குள்ள..? அப்பறம் ஏன்..? என்றான் வருண்  சிரிப்புடன்.

முரளியுடன் பேசிக் கொண்டே, சக்தியின் எண்ணை மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டான் வருண். ஆனால் லைன் போகவே இல்லை. ஒரு கட்டத்தில் வருண் சலித்து விட்டான்.

“கொஞ்சம் ரிலாக்ஸா இரு மாப்பிள்ளை. அப்பத்தான் புத்தி சரியா யோசிக்கும். அந்த பொண்ணுக்கு ஒன்னும் ஆகியிருக்காது. என்ற முரளியின் வார்த்தைகள் வருணுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

முதல் நாள் நடந்த விஷயத்தில் இருந்து இப்போது நடந்து கொண்டிருக்கும் விஷயம் வரை அனைத்தையும் மனதிற்குள் மீண்டும் ஓட்டிப் பார்த்தான் வருண். ஒவ்வொரு செயலின் முடிவிலும் சக்தியின் முகம் தான் வந்து நின்றது. அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே கொடைக்கானாலும் வந்து விட, அப்போதைக்கு அவளின் நினைவுகளை தள்ளி வைத்தான் வருண்.

“நான் இங்க இறங்கிக்கிறேன். வேலை முடிஞ்சதும் வரப் பார்க்குறேன்..! என்றான் வருண்.

“வரப் பார்க்குற இல்ல, கண்டிப்பா வர்ற..! என்றாள் கவுசல்யா உத்தரவாய்.

அவர்கள் சென்றவுடன் சிறிது தூரம் நடந்து சென்று ஸ்டேஷனை அடைய, மப்டியில் இருந்த அவனை அங்கிருந்த சிலருக்கு அடையாளம் தெரியவில்லை.

அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வந்து வணக்கம் வைக்க,

“அக்யூஸ்ட் எங்க..? என்றான் நிமிர்ந்த நடையுடன்.

“லாக்கப்ல இருக்கா சார்..! என்றார் அவர். அதற்கு பிறகு வருண் யாரையும் சட்டை செய்ததாக தெரியவில்லை. நேராக ருத்ரா இருந்த இடத்தை நோக்கி நகர்ந்தான்.

அங்கு அப்பாவியாக உட்கார்ந்திருந்த ருத்ராவைப் பார்த்த வருணுக்கு எரிச்சல் ஏகத்திற்கும் வந்தது.

“இப்படி ஒரு அப்பாவியான மூஞ்சிய வச்சுத்தான் உன் புருஷனை கொலை பண்ணுனியா..? என்றான் வருண் எடுத்த எடுப்பில்.

அதற்கு அவளிடம் இருந்து பதில் இல்லை. அவனைத் திமிராக ஒரு பார்வை பார்த்தவள், முகத்தைத் திருப்ப, அவளின் செய்கை வருணுக்கு எரிச்சலுடன் கலந்த கோபத்தை வரவழைத்தது.

“சோ நீ பேச மாட்ட..? என்று சொன்னவன்,

“அந்த கார் டிரைவர், செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டான் தானே..! என்றான் அருகில் இருந்த இன்ஸ்பெக்டரிடம்.

“ஆமா சார்…! இவ தான் காரணமுன்னு தெளிவா சொல்லிட்டான். அவன் அப்ரூவரா மாறினதால தண்டனை குறைய வாய்ப்பிருக்கு. அது மட்டும் இல்லாம, அவன் ஒரு கருவி தான்.மெயின் ஆளே இந்த பொம்பளை தான் சார்..! என்றார் அவர்.

“இவ குழந்தை எங்க..? என்றான்.

“குழந்தையும் இங்க தான் சார் இருக்கு. சிவபிரகாஷோட அப்பா,அம்மாகிட்ட குழந்தையை குடுக்க இந்த பொம்பளை விட மாட்டேங்குது சார்..! என்றார் அவர்.

“அது என் குழந்தை. அதை அவங்ககிட்ட எல்லாம் குடுக்க முடியாது..! என்றாள் ருத்ரா கோபமாய்.

“கொலைகாரிக்கு குழந்தை பாசமெல்லாம் கூட இருக்கு போலவே..? என்றான் வருண் நக்கல் கலந்த குரலில்.

“அது என்னோட குழந்தை..

“செத்துப் போன சிவப்பிராஷ்க்கும் அது குழந்தை தான். சட்டப்படி பார்த்தா குழந்தை தாத்தா பாட்டியோட தான் இருக்கணும்..! என்றான் வருண்.

“அது அவனுக்கு பிறந்த குழந்தையே இல்லைன்னு சொல்லுவேன்..! என்றாள்.

“நெவர்..! டிஎன்ஏ டெஸ்ட் ரிபோர்ட் அது ஜெயப்பிரகாஷ் குழந்தைன்னு உறுதியா சொல்லுது..! என்றான் வருண்.

ருத்ரா அமைதியாக அவனைப் பார்க்க,

“அதுமட்டுமில்லை.. நீ வாக்கு மூலம் குடுக்கலைன்னாலும், நீதான் இந்த கொலையை பண்ணின அப்படிங்கிறதுக்கான ஆதாரம் எங்ககிட்ட நிறைய இருக்கு. நீயா ஒப்புக்கொண்டா தண்டனை குறையும். இல்லையா சாகுற வரைக்கும் களி திங்க வேண்டியது தான்..! என்றான் வருண்.

“நான் சொல்லிடுறேன். ஆனா, என் குழந்தையை என்கிட்டே குடுத்துடுங்க..! என்றாள்.

“நீ முதல்ல வாக்குமூலம் குடு. மத்ததெல்லாம் தானா நடக்கும்..! என்ற வருண்,

“சொல்லு எதுக்காக கொலை பண்ணின..? என்றான்.

“நான் ஒருத்தரை விரும்புனேன். எங்க காதலுக்கு அவர் தடையா இருப்பார்ன்னு நினைச்சுதான் கொலை பண்ணினோம்..! என்றாள்.

“அதுக்குப் பேர் காதல் இல்லை.. கள்ளக் காதல்..! என்றான் கோபமாய்.

“நான் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒருத்தரை லவ் பண்ணேன். ஆனா, வீட்ல இவருக்கு என்னை கட்டாயமா கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. ஆரம்பத்துல எல்லாமே நல்லாத்தான் போயிட்டு இருந்தது. இவர் வெளிநாடு போகவும், நான் ரொம்ப தனிமையா உணர்ந்தேன். அந்த சமயத்துல தான்… என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“பொய்..! அப்பட்டமான பொய்.. உன்னோட கல்யாணத்துக்கு அப்பறமும் நீ பழைய காதலனோடு தொடர்பில் இருந்திருக்க… என்றான் வருண்.

“ஆ..ஆமா..! என்றாள்.

“மேல சொல்லு..!

“என்னால அவரை மறக்கவும் முடியலை, அதே சமயம் இங்க இவரை விட்டு போகவும் முடியலை. அந்த நேரத்துல தான் நான் கர்ப்பம் ஆனேன். குடும்பம் முழுசும் என்னை சுத்தியே இருந்தாங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. அப்போதான் என் லவ்வரோட தம்பியை என் நாத்தனார் பிரியாக்கு மாப்பிள்ளையா நிறுத்துனேன்.. என்று அவள் சொல்ல,

“அதாவது சக்தி பிரியதர்ஷினிக்கு..! கரெக்ட்..! என்றான்.

“ம்ம்..ஆமா..! அந்த கல்யாணம் நடந்தா, அவர் ஈசியா வீட்டுக்குள்ள வந்துட முடியும்னு நினைச்சேன். ஆனா, அந்த கல்யாணம் நடக்கலை..! அவரோட தம்பியை போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சு.! என்றாள்.

“அந்த அரெஸ்ட் பண்ணின போலீசே நான்தான்..! என்றான் நக்கலுடன்.

“கல்யாணம் நின்ன விரக்தியில் இருந்த பிரியா, வேலைக்குப் போறேன்னு கிளம்ப, அவளை அவர் மூலமாவே கொடைக்கானல்ல வேலை வாங்கிக் குடுத்து, எங்க கண் பார்வையிலேயே வச்சுகிட்டோம்..! சிவாவுக்கு அவர் தங்கை பிரியான்னா ரொம்ப பிரியம். அதான் அவளைப் பார்க்க போகலாம்ன்னு கூட்டிட்டு வந்து, கொலை செஞ்சோம்..! என்றாள்.

“உன்னோட இச்சைக்கு எத்தனை பேர் வாழ்க்கையில விளையாடி இருக்க..? நீயெல்லாம் பெண்கள் இனத்துக்கே ஒரு சாபக் கேடு..! என்று காரி துப்பாத குறையாக பேசியவன்,

“சரி, சிவாவை எப்படி கொலை பண்ணிங்க..? என்றான்.

“கோயம்புத்தூர் தாண்டி வந்துட்டு இருக்கும் போதே, அவருக்கு இளநீர் வாங்கி, அதுல தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமா கலந்து குடுத்தேன். குழந்தையோட விளையாடிட்டு இருந்த சிவா, கவனிக்காம குடிச்சு முடிச்சுட்டார். கொஞ்ச நேரத்துல அவர் தன்னை மறந்த தூக்கத்துக்கு போனார். ஆனா, குழந்தை அழும் போது அந்த நிலைமையிலும் ‘குழந்தை அழுது ருத்ரா.. அப்படின்னு உளறினார். அதனால் எங்க பிளானை மாத்தினோம். இடையிலேயே ஒரு கடையில கத்தி  வாங்கினோம். கொடைக்கானல் மலை ஏற ஆரம்பிச்ச உடனே, அவர் ஆழ்ந்த தூக்கத்துப் போய்ட்டார். அந்த சமயத்தைப் பயன்படுத்தி, வண்டியை நிறுத்தி பின்னாடி வந்த டிரைவர், அவர்  தலையை பிடிக்க, நான்தான் கழுத்தை அறுத்தேன். அந்த இடம் பள்ளம் அப்படின்னு நினைச்சு தான் அங்க தூக்கிப் போட்டோம். ஆனா, அது ரொம்ப பள்ளமா இல்லாம இருந்ததால தான் மாட்டிகிட்டோம்..! என்றாள்.

“அத்தனை மாத்திரையும் மீறி, குழந்தை சத்தத்துல நினைவுக்கு வந்திருக்கான் அப்படின்னு சொன்னா, அவன் உங்க மேல எவ்வளவு பாசமா இருந்திருக்கணும். அப்படி பட்ட ஒருத்தனுக்கு இப்படி ஒரு துரோகத்தை பன்றோம்ன்னு உன் மனசாட்சி உறுத்தலை. பல்லியைக் கண்டாலே பயப்படுற எத்தனையோ பெண்கள் இன்னமும் இருக்காங்க. ஆனா, உன் கையாலையே கழுத்தை அறுத்தேன்ன்னு எவ்வளவு தைரியம் இருந்தா சொல்லுவ..? என்ற வருணுக்கு கோபம் கண்ணை மறைக்க, அங்கிருந்த லேடி போலீசை அழைத்தவன்,

“இவளை நாலு அறை அறைங்க..!! என்றான் ஆத்திரம் அடங்காமல். அப்படி ஒரு ஆத்திரம் அவனுக்கு. அந்த லேடி போலீஸ் அறைந்ததில் அவள் கண்ணம் ரெண்டும் வீங்கிப் போக, அப்போதும் ஒரு சொட்டு கண்ணீர் விடமால் இருந்தாள் ருத்ரா.

“உனக்கு இந்த பிளானை எல்லாம் போட்டுக் குடுத்த உன்னோட அந்த தெய்வீக காதலன் யாரு..? என்றான்.

“சொல்ல முடியாது..! என்றாள்.

“அப்போ குழந்தையையும் குடுக்க முடியாது..! என்றான்.

“லெனின்..! என்றாள் ருத்ரா.

“வாட்..!!! திருப்பி சொல்லு..! என்றான் வருண் .

“லெனின்..!!! என்றாள் மீண்டும் தெளிவாக.

“ஆனா, உங்களால அவனை ஒன்னும் பண்ண முடியாது. அவன் தலை மசிரை கூட உன்னால தொட முடியாது..! என்றாள் தெனாவெட்டாய்.

“அட இங்க பாருங்கப்பா..! மேடம் சவால் எல்லாம் விடுறாங்க..!  சீக்கிரம் உனக்குத் துணையா அவனையும் கொண்டு வந்து உட்கார வைக்கிறேன். ரெண்டு பெரும் ஜெயிலுக்குள்ளேயே டூயட் பாடுங்க..! என்ற வருண் எழுந்து செல்ல,

“குழந்தை..! என்றாள் மீண்டும்.

“கட்டின புருஷனையே ஒருத்தனுக்காக கொலை செஞ்சவ, நாளைக்கு இன்னொருத்தனுக்காக அந்த குழந்தையையும் கொல்ல மாட்டேன்னு என்ன நிச்சயம். குழந்தை யார்கிட்ட இருக்கணுமோ, அவங்ககிட்ட கண்டிப்பா குடுத்துடுவோம்..! குழந்தை இல்லாம எத்தனையோ பேர் தவிக்கிறப்போ, உனக்கெல்லாம் குழந்தை ஒரு கேடு..! என்றவன்,

“இவளை கோர்ட்ல பிரடியூஸ் பண்ற வரைக்கும், நாலு சாத்து சாத்துங்க. முடிஞ்சா அந்த லெனினை பத்தி விசாரிங்க. அவன் யாரு என்னன்னு, எனக்கு கொஞ்ச நேரத்துல தகவல் வந்தாகணும். எனக்கு ஒரு கெஸ் இருக்கு. அவன்தான் இவனான்னு எனக்குத் தெரியனும்..! என்றவன் வெளியே வர, அவனையே குரோதத்துடன் பார்த்திருந்தால் ருத்ரா.

வெளியே வந்த வருணுக்கு மனம் கனமாக இருந்தது. அவன் விசாரித்ததில் சிவப்பிரகாஷ் மாதிரி ஒரு நல்லவனைப் பார்க்க முடியாது என்றே அனைவரும் சொல்லி இருந்தனர். அவனுக்கு இப்படி ஒரு கொடூர முடிவை, துரோக முடிவை கடவுள் கொடுத்திருக்க வேண்டாம் என்றே எண்ணியது அவனின் மனம்.

சமீப காலமாக, கள்ளக் காதல்களும் அதன் தொடர்ச்சியாக அரங்கேறும் கொலைகளும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்திருந்தாலும், ஏனோ இதில் மனம் கொஞ்சம் அதிகமாக கணத்து தான் போனது.

“அடுத்து சக்தி பாதுகாப்பா இருக்காளா இல்லையான்னு தெரியனும். அப்பத்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்..! என்று எண்ணியவன், அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கினான்.

“ஹலோ..!

“வேலை முடிஞ்சதா வருண்…! என்றார் நித்யா.

“முஞ்சதும்மா..! என்றான்.

“கார்த்திக் உன்னைப் பிக்கப்பண்ண வந்துட்டு இருக்கான். அவன் கூடவே வந்துடு..! என்றார் நித்யா.

“நெவர்..! என்று வருண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நித்யா போனை வைத்திருந்தார். எரிச்சலுடன் அந்த போனையே வெறித்துக் கொண்டிருந்த வருணுக்கு பட்டென்று மூளையில் மின்னல் வெட்டியது.

கண்ட்ரோல் ரூமை தொடர்பு கொண்டவன்,

“என்னோட குவார்ட்ரசில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் எந்தெந்த கடைக்கு வெளிய சிசிடிவி இருக்கோ அதோட புட்டேஜ் எல்லாம் கலெக்ட் பண்ணுங்க. குறிப்பா நேத்து மதியத்துக்கு மேல, ஈவ்னிங்குள்ள இருக்குற டைமிங்ல சேவ் ஆன எல்லா புட்டேஜும் வேணும்..! டிரைவ்ல போட்டு என்னோட மெயில்க்கு அனுப்புங்க..! என்றான்.

அதில் ஏதாவது ஒரு தடயம் கிடைக்கும் என்று நம்பினான் வருண். அவன் பேசி முடிக்கவும், கார்த்திக் அவன் அருகில் வரவும் சரியாக இருந்தது.

“சார் போகலாமா..? என்றான் வெகு பவ்யமாய்.

“எல்லாம் என் நேரம்..! என்று மனதிற்குள் நொந்து கொண்ட வருண், அவனை முறைத்தபடி வண்டியில் ஏறினான். நீண்ட நாட்களுக்குப் பிறகு வருணுடன் பைக் பயணம். வேண்டுமென்றே தான் பைக்கை எடுத்து வந்திருந்தான் கார்த்திக். ஏனோ அந்த பயணம் கார்த்திக்கு அப்படி ஒரு சுகமாக இருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பனுடன் அப்படி ஒரு பயணத்தை வருணும் எதிர்பார்க்கவில்லை. அவனின் உள்மனம் அதை ரசித்தாலும், அதை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை அவன்.

அதற்குள் வருணுக்கு மீண்டும் போன் வர,

“சொல்லுங்க..! என்றான்.

“சார்..! சிசிடிவி இருக்குற எல்லா ஷாப்புக்கும் இன்பார்ம் பண்ணிட்டோம் சார். ஒவ்வொருத்தரையும் செப்பரேட்டா உங்களுக்கு மெயில் பண்ண சொல்லிட்டோம் சார். எல்லார்கிட்டயும் கலெக்ட் பண்ணி, ஒண்ணா சென்ட் பண்ணா டைம் எடுக்கும் சார். அதான் இப்படி பண்ணோம் சார். என்று அவர் சொல்லி முடிக்க,

“வெரி குட். கீப் இட் அப்…! என்றவன்,

“கார்த்தி கொஞ்சம் வண்டியை நிறுத்து..! என்றான் எதார்த்தமாய்.அவனின் கவனம் முழுவதும் அவனுடைய போனிலேயே இருந்தது. அவன் ஏதோ ஒரு நியாபகத்தில் தான் கார்த்தியை அப்படி அழைத்திருக்கிறான் என்பது கார்த்திக்கும் தெரிந்தே இருந்தது. இருந்தாலும் அவனுக்கு சந்தோஷமே. நண்பனின் பழைய மாதிரியான அழைப்பைக் கேட்டு.

வருண் ஒவ்வொரு வீடியோவாக பார்த்துக் கொண்டே வர, குறிப்பிட்ட அந்த நேரத்தில் சக்தியை எதிலும் காணவில்லை. மனம் சோர்வடைய, கடைசியாக வந்த அந்த வீடியோவை வேண்டா வெறுப்பாக ஓட விட்டான்.

அதில்  சக்தி ஆட்டோவிற்காக காத்திருப்பதும், இரண்டு பேர் வந்து பேச்சுக் கொடுப்பதும் தெரிந்தது. வருணின் முகம் சீரியசாய் அதைப் பார்க்க, சில நிமிடங்களில் அவளின் அருகில் ஒரு கார் வந்து நின்றது. அவளும் யதார்த்தமாக காரில் ஏறுவது போல் ஏறிச் சென்றாள். பக்கத்தில் இருந்த யாருக்கும் சந்தேகம் வராதபடி.

“பஸ்ல தான போறேன்னு சொன்னா..? இப்ப கார்ல போயிருக்கா..! யார் கூட போயிருப்பா..? என்று யோசித்தவன், மீண்டும் அந்த வீடியோவை ஓட விட, அந்த காரை எங்கோ பார்த்ததைப் போல் இருந்தது வருணுக்கு. கார் நம்பரைப் பார்க்க முயற்சி செய்தான். ஆனால் வீடியோவில் கார் நம்பரை அவனால் தெளிவாக பார்க்க முடியவில்லை.

“இந்த காரை எங்க பார்த்தேன்..! என்ற யோசனையுடனேயே,

“போகலாம் கார்த்தி..! என்றபடி வண்டியில் ஏறி அமர்ந்தான். காரில் இருந்த சக்தி இப்போது ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தாள்.

“எதுக்காக அந்த பொண்ணுக்காக இப்படி ரிஸ்க் எடுக்குறான். ஒருவேளை அந்த பொண்ணை நிஜமாவே லவ் பண்றானோ..? என்ற சந்தேகம் கார்த்தியின் மனதிற்குள்ளும் விழுந்தது.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!