Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Margazhi Poove

Margazhi Poove..! – 27 (1)

பூ 27:

விமல் பேசிய நம்பரின் முகவரி முதல், அவனுடைய சரித்திரம் வரை அனைத்தும் இப்போது திவ்யாவின் கையில். கனகவேல் எவ்வளவு வற்புறுத்திக் கேட்டும் அவரிடம் சொல்ல மறுத்து விட்டாள் திவ்யா. அவள் சொல்லாமல் விட்டாலும், கனகவேலின் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த நம்பருக்கு சொந்தக்காரனை தூக்கிவிட்டால் எல்லாமே வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று நினைத்தாள் திவ்யா.

ஆடிட்டருக்கு போன் செய்து, பினாமி பேரில் இருக்கும் சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் எவ்வளவு, அது முழுவதும் அப்படியே ராதிகாவின் வங்கிக் கணக்கிற்கு வருகிறதா..? என்று ஒவ்வொன்றையும் சோதித்துப் பார்த்தாள். அவள் எடுத்த முயற்சியின் விடைகள் அனைத்தும் விமலுக்கு எதிராகவே இருந்தது. இத்தனை நாள் அவனை இப்படி கண்மூடித்தனமாக நம்பிய தன்னுடைய முட்டாள் தனத்தை நினைத்து நொந்து கொண்டாள் திவ்யா.

“என்ன திவ்யா அதிர்ச்சியா இருக்கா..?” என்றது அவளின் மனசாட்சி.



Advertisement

“அதிர்ச்சிதான். ஆனா, இந்த அளவுக்கு இருக்கும்ன்னு நான் எதிர்பார்க்கலை..?” என்றாள் திவ்யா.

“இப்போ என்ன செய்ய போற..?”

“அதுதான் எனக்கு இன்னும் தெரியலை..!” என்றாள்.

Advertisement

“அந்த ஆளை கண்டுபிடிச்சு உண்மையை சொல்ல வச்சா என்ன நடக்கும்..? ஹாயா ஜெயில்ல போய் உட்கார்ந்திருப்பான். அங்க இருந்துகிட்டும் மறுபடியும் அதே வேலையை செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்..?” என்றது அவளின் மனசாட்சி.

Advertisement

“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..?”

“இதை உங்கப்பாகிட்ட சொல்லிடு. இதை அவர் எப்படி டீல் பன்றாருன்னு பாரு. இந்த பிரச்னையை அவர்கிட்ட ஒப்படைக்கிறது தான் புத்திசாலித் தனம்..!” என்றது மனசாட்சி.

“தங்கச்சி பையன்ற பாசம் அவர் கண்ணை மறைச்சுட்டா..?” என்றாள் திவ்யா.

Advertisement

“கண்டிப்பா அப்படி நடக்காது..! அவனுக்கு சரியான தண்டனை கிடைக்கும்..!” என்றது அவளின் மனம்.

கனகவேல் வரும் வரை அமைதியாக இருந்தாள் திவ்யா. ஆனாலும் மனதிற்குள் ஏதோ ஒன்று நெருடிக் கொண்டிருந்தது.

தன்னுடைய அக்காவை கல்யாணம் பண்ணி, கனகவேலை பழிவாங்குவது தான் விஜய்யின் எண்ணம் என்றே இத்தனை நாள் அவள் நினைத்திருந்தாள். விமல் அப்படி சொல்லியேதான் அவளை உருவேற்றியிருந்தான். இப்போது விமல் மற்றும் அவன் செய்த எல்லாமே பொய்யாக இருக்கும் போது, வந்தனாவின் திருமணமே கேள்விக்குறியில் வந்து நின்றது திவ்யாவிற்கு. விஜய்யிடம் சென்று பேசுவதற்கு திவ்யாவின் ஈகோ இடம் கொடுக்காமல், பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தது.

போனில் பேசியவனை தூக்குவதற்கு ஆட்களிடம் சொன்னவள், விஷயம் எக்காரணம் கொண்டும் விமலின் காதிற்கு போகக் கூடாது என்று உறுதியாய் சொல்லிவிட்டாள். கனகவேலின் விசுவாசிகளும் இருக்கத்தான் செய்தனர்.

திவ்யா அடிப்படையில் கெட்டவள் கிடையாது. அவளுக்கு விமல் மூலம் போதிக்கப்பட்ட போதனைகள் கெட்டவையாக இருந்தது. வந்தனாவின் மீது அவளுக்கு இருந்த பாசமே, விஜய்யை பழிவாங்கத் தூண்டியிருந்தது. பழிவாங்க வேண்டும் என்று எண்ணித்தான் விஜய்யைப் பார்த்தாள். ஆனால் என்னவோ அவளுக்கும் விஜய்யைப் பிடித்துப் போக, ஆரம்பித்தது பிரச்சனை.

வந்தனா இறந்த பிறகு, அவன் மட்டும் இன்னொரு திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறானே என்ற கோபம் அவளுக்கு. ஒருவேளை அவன் திவ்யாவை திருமணம் செய்திருந்தால் அவளுக்கு கோபம் இருந்திருக்காதோ என்னவோ..?

திவ்யாவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், விமலின் பார்வைக்கு செல்லாமல் துரித கதியில் நடந்து கொண்டிருந்தது. கனகவேலிற்கு, தன்னுடைய மூவ்மென்ட் எதுவும் தெரியாது என்று திவ்யா நினைத்திருக்க, ஒன்று விடாமல் அவரின் பார்வைக்கு சென்று கொண்டே தான் இருந்தது.

அவருக்கு எற்கனவே இருந்த சந்தேகங்கள் இப்போது வலுப்பெற, அவரும் யோசனையில் தான் இருந்தார். மொத்தத்தில் மகளும், தகப்பனும் ஆளுக்கு ஒரு மூலையில் விமலின் கேடித்தனங்களை அறிந்து, தெளிந்து கொண்டிருந்தனர்.

இவர்களின் இந்த ஆராய்ச்சியை அறியாத விமல்,  அவன் போக்கில் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான். அவனின் மிகப் பெரிய ஆசை, திவ்யாவை அடைவது, கனகவேலின் சொத்துக்களை தன் வசம் ஆக்குவது. அதற்காக அவன் அவரை போட்டுத் தள்ளவும் தயாராக இருந்தான்.

இவன் பின்னும் சூழ்ச்சி வலையில் அவர்கள் மாட்டுவார்களா..? இல்லை அவர்களின் சூழ்ச்சி வலையில் இவன் மாட்டுவானா..? என்பது தான் விடைதெரியாத கேள்வி. அந்த கேள்விக்கான பதில் வெகு தூரத்தில் இல்லை. அவனே அதற்கான விடையாக இருக்கப் போகின்றான். அதை அவன் அறியாமல் இருப்பது தான் அறியாமையின் உச்சம். ஆணவத்தின் அடுத்த கட்டம். துரோகியே ஒரு துரோகத்தை சந்திக்கப் போகிறான். கணக்கு நேர்பட போகிறது. அது யாரின் மூலம் என்பது தான் வினாவும், விடையும்.

ஆபீசில் இருந்த விஜய்க்கு ஒரு வேலையும் ஓடவில்லை. ஏனோ துளசியை காலையில் இருந்து பார்க்காமல் இருப்பது, அவனை ஒரு அழுத்தத்திற்கு ஆளாக்கியிருந்தது.

“ஒருவேளை வேணும்ன்னு தான் என்னைத் தவிர்க்கிறாளோ..?” என்று தனக்குள் என்ன,

“அப்பறம் நீ செஞ்ச வேலைக்கு உன்னைக் கொஞ்சுவாளா..? அவளே ஏதோ பாவம்ன்னு பரிதாபப்பட்டு உன்கிட்ட பேசுனா.. அதையே அட்வாண்ட்டேஜா எடுத்துகிட்டு, நீ எல்லை மீறி போனா யார்தான் சும்மா இருப்பா..?” என்று மனம் கேள்வி கேட்டது.

‘நான் என்ன, வேணுமின்னா செஞ்சேன். அவளை பக்கத்துல வச்சுகிட்டு வேற எதைப் பத்தியும் சிந்திக்க முடியலை. எங்க திரும்புனாலும் அவதான் தெரியறா..? நானும் எவ்வளவு நேரம் தான் என்னையே கண்ட்ரோல் பண்றது..?’ என்று அவனின் செயலுக்கு நியாயம் சொல்ல,

“இதெல்லாம் ஒரு சாக்கா..? இத்தனை வருஷம் இல்லாம, திடீர்ன்னு எப்படி அவமேல அப்படி என்ன லவ்வு..! பாட்டிகிட்ட குடுத்த வாக்குக்காக, அவளை மாத்தி, ஒரு சாதாரண பொண்டாட்டியா இருக்க வைக்கணும். அது தான உன்னோட திட்டம்..” என்றது மனம்.

‘திட்டமா..? இதெல்லாம் திட்டம் போட்டு செய்யுற வேலையா..? அவளைப் பார்த்தாலே எல்லாம் தானா நடந்திடுது. நான் என்ன பண்ண..?” என்று அவன் புலம்பிக் கொண்டிருக்க, வந்தான் பிரவீன்.

“என்ன விஜய்..? ஏன் சாப்பிடாம வந்த..? இங்க வந்து ஏன் தனியா புலம்பிட்டு இருக்க..?” என்றான் சிரிக்காமல்.

“ஏண்டா சொல்ல மாட்ட…? என்னோட கஷ்ட்டம் எல்லாம் உனக்கு எங்க தெரிய போகுது..? உனக்கும் கல்யாணம் ஆகும்டா. அப்பத் தெரியும் என்னோட பிரச்சனை..!” என்றான் விஜய்.

“என் தங்கச்சி தெளிவா இருக்கும் போதே, உன்பாடு இப்படி திண்டாட்டமா இருக்கு. இதுல உன் தங்கச்சிக்கு மனசுல, ரொம்ப தெளிவுன்னு நினைப்பு. எந்த அளவுக்கு தெளிவுன்னா..? பார்க்கிறேன்னு தெரியும், விடாம பார்க்கிறேன்னு தெரியும். ஆர்வமா பார்க்கிறேன்னு தெரியும். ஆனா, ஏன் பார்க்கிறேன்னு மட்டும் தெரியாது…! இந்த கொடுமை எல்லாம் வேற எங்கையாவது நடக்குமா..? நம்ம வீட்லதான் நடக்கும்..!” என்று புலம்பினான் பிரவீன்.

“சாரிடா பிரவீன்..!” என்றான் விஜய் பட்டென்று.

“என்ன விஜய்..? என்னாச்சு..?”

“பவியை வச்சு சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்ட்டம் தான்…!” என்றான் சீரியஸாக.

“அடிங்க..! நான் கூட என்னவோன்னு நினைச்சுட்டேன். அது உனக்கு இப்போத்தான் தெரியுமா..? ஊருக்கேத் தெரியும்..!” என்றான் பிரவீன்.

“துளசி ஆபீஸ் வந்துட்டாளா..?” என்றான் விஜய்.

“இன்னைக்கு மேடம் ஆபீஸ் வரமாட்டாங்களாம்..! நிறைய ஷாப்பிங் பண்ண வேண்டியது இருக்காம். மேடம் ரொம்ப பிசி..!” என்றான் பிரவீன்.

“ஒருவார்த்தை என்கிட்டே சொல்லிட்டு போகணும்ன்னு தோணலைல பிரவீன். அந்த அளவுக்கா நான் வேண்டாதவன் ஆகிப் போயிட்டேன்..!” என்ற விஜய்யின் முகம் நொடியில் தொங்கிப் போனது.

விஜய் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவன் வெளியே காட்டுகிற பிம்பம் பொய்யானது என்று பிரவீனுக்கு நன்றாகத் தெரியும். சில சமயம் அனைவருக்காகவும் நடிக்கிறான் என்று கூட நினைத்திருக்கிறான் பிரவீன். அது உண்மைதான் என்பதைப் போல் இருந்தத் விஜய்யின் முகம்.

“அவ சரியான அப்பா பொண்ணுன்னு உனக்குத் தெரியும் தான விஜய். அதுலயும் அப்பா, அவளோட ஒவ்வொரு பிறந்தநாளையும் எப்படி தடபுடலா கொண்டாடுவாரு. இந்த தடவை மாமா இறந்துட்டதால, பங்க்ஷன் மாதிரி எதுவும் பண்ணலை. சும்மா கேக் மட்டும் கட் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டார். இதுல நீ கவலைப் படுற அளவுக்கு ஒன்னும் இல்லை..!” என்றான் பிரவீன்.

“நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்பேன்… மறைக்காம சொல்லணும் பிரவீன்..!” என்றான் விஜய்.

“என்னடா கேட்க போற..?”

“இல்ல, நிஜமாவே அந்த ஆக்சிடென்ட்க்கு முன்னாடி துளசி மேல எனக்கு எந்த ஒரு கிரஷ்ஷுமே இல்லையா..? நானும் யோசிச்சு யோசிச்சு பார்க்குறேன். ஆனா, அங்கதான் ஒண்ணுமில்லையே..?” என்றான் அவன் தலையைக் காட்டி.

“எதுக்கு விஜய் இப்படி திடீர்ன்னு கேட்குற..?”

“எனக்குத் தெரிஞ்சாகனும் பிரவீன். என்னதான் தாலி கட்டின மனைவியா இருந்தாலும், இவ்வளவு பிரச்சனைகளுக்கு அப்பறமும், அவளைப் பார்த்தா எனக்கு எல்லா கவலையும் மறந்திடுது. மனசு அவளை மட்டும் தான் தேடுது. ஓப்பனா சொல்லப் போனா, பார்க்காமயே இருக்க முடியலை. இதெல்லாம் எப்படி சாத்தியம். இப்போ இருக்குற எனக்கு இப்படி இருக்குன்னா.. அப்போ பழைய விஜய்க்கு ஏன் அப்படித் தோணலை. அப்படித் தோணியிருந்தா, வந்தனாங்கிற ஒரு பொண்ணு எப்படி உள்ள வந்திருக்க முடியும்..?” என்றான் விஜய்.

“விஜய் சில விஷயங்களை நான் சொல்லிப் புரியவைக்க முடியாது. ஆனா, ஒன்னு மட்டும் உறுதியா தெரியும் வந்தனாவை நீ கடைசி வரைக்கும் லவ் பண்ணவே இல்லை. அது மட்டும் சத்தியம்..!” என்றான்.

“நான் துளசியைப் பத்தி கேட்டேன்..!” என்றான் விஜய் விடாமல்.

“துளசியைப் பத்தின்னா, அவளுக்கு ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்வ. உனக்கு அவமேல காதல் இருந்துச்சான்னு எல்லாம் தெரியாது. ஏன்னா, நீயா வாயை விட்டு எதுவும் சொன்னதில்லை. துளசிக்கும் அப்படித்தான், காலேஜ் கேண்டீன்ல காபி வாங்கிக் குடுக்கக் கூட நீ வேணும். ஆனா, வந்தனா இடையில வந்ததுக்கு அப்பறம் துளசி உன்கிட்ட பேசுறதையே குறைச்சிட்டா. ஒரு கட்டத்துல உங்க ரெண்டு பேருக்கும் பேச்சு வார்த்தை சுத்தமா இல்லை. உன்னைக் கண்டாலே எரிஞ்சு விழ ஆரம்பிச்சா..! அவ்வளவு தான்..!” என்றான் பிரவீன். அவன் கடைசியாக சொன்ன வாக்கியத்தை கொஞ்சம் அழுத்தமாக சொல்லி முடித்திருக்க,

“ஏன்? துளசி அப்படி பண்ணனும். வந்தனாவை நான் லவ் பண்ணியே இருந்தாலும் துளசி அதை சந்தோஷமா தான அக்சப்ட் பண்ணியிருக்கணும். ஆனா, அவ அப்படி பண்ணலை. கோபப்பட்டு என்கிட்டே பேசுறதையே நிறுத்தியிருக்கா..? அப்படின்னா என்ன அர்த்தம்..?” என்றான் விஜய்.

“என்ன அர்த்தம்..?” என்றான் பிரவீனும், அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே.

“துளசி மனசுல என்னவோ இருந்திருக்கு. அது தான் அவளோட கோபத்துக்கு காரணமா இருந்திருக்கு. இன்பாக்ட் அந்த லாஸ்ட் நாள் ப்ரீத்தியோட போன் காலை எடுத்து பேசினது துளசிதான்னு நீ சொன்ன. அவ என்கூட சண்டை கட்டி தான் நான் உடனே கிளம்பி போயிருக்கேன். நான் வந்தனாவை அப்படி மேரேஜ் பன்றதாவே இருந்தாலும், துளசி ஏன் அப்படி கோபப்படனும். அவ மனசுல ஒன்னும் இல்லைன்னா, எனக்கு ஹெல்ப் தான் பண்ணியிருப்பா..! இதுல இருந்து என்ன தெரியுது..?” என்றான் விஜய்.

“என்ன தெரியுது..?” என்றான் பிரவீன், இந்த முறையும் அதே அழுத்தமான பார்வை.

“ஒன்னு துளசிக்கு என்மேல காதல் இருந்திருக்கணும். இல்லண்ணா, வெறுப்பு இருந்திருக்கணும்..! நீ சொன்னதை வச்சு பார்க்கும் போது, வெறுப்பு இல்லாம, நாங்க குளோசா தான் இருந்திருக்கோம். அப்போ, பர்ஸ்ட் சொன்னது தான், துளசி என்னை லவ் பண்ணியிருக்கா..?” என்றான் விஜய்.

அவனின் சாதூர்யத்தைக் கண்டு வியந்து தான் போனான் பிரவீன். விஜய்யின் நிலையில் இந்த அளவிற்கு அவன் யோசிப்பதைக் கண்டு அவனுக்கு ஆச்சர்யம் தான். இருந்தாலும் பிரவீனுக்கு இன்னமும் கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டியிருந்தது.

“நீ வீட்டுக்குத் தெரியாம, வந்தனாவை கல்யாணம் பண்ணப் போற அப்படிங்கிற கோபமா கூட இருந்திருக்கலாம் தானே விஜய்..?” என்றான் ஆழம் பார்க்கும் பொருட்டு.

“என்ன பிரவீன்..? என்னையே ஆழம் பார்க்குற மாதிரி இருக்கு. அப்படி அதுக்காக அவ கோபப்பட்டிருந்தாலும், உடனே என்ன பண்ணியிருக்கணும்.. வீட்ல இருக்கவங்ககிட்ட சொல்லியிருக்கணும். ஆனா, அவ அதை பண்ணலை. மனசு அதுக்கு இடம் கொடுக்கலை. என்னோட சந்தோசம் முக்கியம்ன்னு கூட நினைச்சிருக்கலாம்..!” என்றான் நாடி பிடித்தவன் போல்.

விஜய் பேசப் பேச பிரவீன் கண்கள் கலங்கி விட்டான். தான் ஏதும் சொல்லாமல், துளசி ஏதும் சொல்லாமல் அவனாக சில விஷயங்களை புரிந்து கொண்டது, பிரவீனுக்கு அப்படி ஒரு சந்தோசம். துளசி நினைத்தவனையே அவளிடம் சேர்ப்பித்த நிம்மதி பிரவீனுக்கு.

“நீ கண் கலங்குறதைப் பார்த்தா, உண்மை இது தான் போல. உனக்கும் இந்த விஷயம் ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. அப்படித்தான பிரவீன்..?” என்றான்.

“ஆமாம்..!” என்பதைப் போல் தலையை ஆட்டினான் பிரவீன்.

“அப்பறம் ஏன் நீ இதை என்கிட்டே சொல்லலை..!”

“இது நான் சொல்ல வேண்டிய விஷயம் கிடையாது விஜய். துளசி தான் சொல்லணும். ஆனா, அவ இந்த ஜென்மத்துல சொல்ல மாட்டான்னு எனக்குத் தெரியும். அவளைப் பத்தி தான் உனக்குத் தெரியுமே, ஒரு தடவை அவ கேட்டது கிடைக்கலைன்னா, அப்பறம் அது எப்பேர்பட்ட  விஷயமா இருந்தாலும் திரும்பிக் கூட பார்க்க மாட்டா. வாழ்க்கைல அவளுக்கு எப்பவுமே செக்கேன்ட் சாய்ஸ் பிடிக்கவே பிடிக்காது. உன்னோட விஷயத்திலும் அதுதான் நடந்தது. அவளுக்கு உன்னைப் பிடிக்கும் விஜய். உன்னைய மட்டும் தான் அவ்வளவு பிடிக்கும். ஆனா, அவளுக்கு தான் ரெண்டாவது அப்படிங்கிற எண்ணம் ஆழமா பதிஞ்சு போய்டுச்சு. இவ இப்படியே இருந்திடுவாளோ அப்படின்னு எங்களுக்குப் பயம். அதான், கட்டாயப்படுத்தியாவது உன்கிட்ட சேர்த்திடனும்ன்னு முடிவு பண்ணோம்..! அது உன்மேல இருந்த நம்பிக்கையா கூட இருக்கலாம்..!” என்றான் பிரவீன்.

“கூடவே இருந்த அவளோட மனசைக் கூட நான் புரிஞ்சுக்காம இருந்திருக்கேன்னா.. நானெல்லாம் என்ன ஜென்மம்..?” என்று விஜய் பழியைத் தன்மேலேயே போட்டுக் கொள்ள,

“அப்படியெல்லாம் இல்லை விஜய். நீ துளசிக்கு தான் அப்படின்னு அவ ரொம்ப நம்பிட்டு இருந்தா. இதுல அவளோட தப்பு எதுவும் இல்லை. எல்லாமே பாட்டி அவகிட்ட சொன்னது தான். அது அவ மனசுல ஆழமா பதிஞ்சு போய்டுச்சு. அது இல்லைன்னு வரும் போது, அவளால தாங்க முடியலை. அதே சமயம் உன்னோட சந்தோஷமும் அவளுக்கு முக்கியம். அதான் தன்னைக் கோவக்காரியா காட்டிட்டு அப்படியே இருந்துட்டா..!” என்றான்.

“இந்த விஷயம் உனக்கு எப்பத் தெரியும்..?” என்றான் விஜய்.

“எனக்கு முதல்லயே தெரியும் விஜய்…!”

“அப்பறம் ஏன் என்கிட்டே சொல்லலை..?”

“இது நான் சொல்ல வேண்டிய விஷயம் இல்லை. அதே சமயம் அந்த நேரத்துல தான் நீ வந்தனாவை பத்தி பேசிட்டு இருந்த. உனக்கு அவ மேல தான் விருப்பம்ன்னு நினைச்சேன்.. அதான் சொல்லலை..! அது இல்லைன்னு தெரிஞ்சப்பவும் அல்ப்பமா ஒரு சின்ன சந்தோசம். ஆனா, அதுவும் கடைசில நிலைக்கலை..” என்றான்.

“என்னை சுத்தி எல்லாருமே நல்லவங்களா தான் இருந்திருக்கிங்க பிரவீன். தங்கச்சி விரும்புறான்னு தெரிஞ்சும், நண்பனோட காதல் முக்கியம்ன்னு நீ நினைச்சிருக்க. என்னோட விருப்பம் நடந்தா போதும்ன்னு அவ நினைச்சிருக்கா, இல்லாத ஒரு காதலுக்காக நான் நிறைய பேரை கஷ்ட்டப் படுத்தியிருக்கேன்னு மட்டும் தெளிவா தெரியுது..!” என்றான் விஜய். அவன் வருத்தப்படுவதை பிரவீனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“இல்லாத காதலா..? யார் சொன்னது..? நல்லா தேடித் பாருன்னு அன்னைக்கே சொன்னேன்ல..? இப்பவும் அதைத்தான் சொல்றேன்..! இதுக்கு மேல உனக்கு புளி போட்டு விளக்க முடியாது..! எனக்கு வேலையிருக்கு..!” என்ற பிரவீன் வேலையைப் பார்க்க, விஜய்க்கு மண்டை காய்ந்தது.

“எதைத் தேடி பார்க்க சொல்றான். வந்தனாவை காதலிக்கலைன்னு தெளிவா சொல்லிட்டான். அப்பறம் எதைத் தேட..?” என்று யோசித்த விஜய்க்கு, மண்டைக்குள் எங்கோ மணியடித்து.

“நானும் துளசியை லவ் பண்ணேனா..? அது எப்படி நடந்திருக்கும்..?” என்று அவனின் யோசனை நீண்டு கொண்டு தான் போனது.

“டேய் மரமண்டை..! நீ இப்போ செய்ய வேண்டியது, அவளோட காதலை வெளிய கொண்டு வரணும். அது நடந்துட்டா எல்லாமே ஜெயம் தான். இன்னும் இப்படி அரைவேக்காடு மாதிரி திறியாம, உருப்படியா எதாவது வேலையைப் பாரு..!” என்றது மனம்.

“வரேண்டி மை டியர் பொண்டாட்டி..!” என்று மனதிற்குள் உற்சாகமாய் சொல்லிக் கொண்டான்.

அவனின் செய்கைகளை எல்லாம் பார்க்காதவன் போல் பார்த்துக் கொண்டிருந்த பிரவீனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!