Margazhi poove..! – 26
பூ 26:
“நீ என்ன பண்ணுவியோ தெரியாது. விஷயம் வெளிய வரக் கூடாது..! முக்கியமா என்னோட பேர் வெளிய தெரியவே கூடாது..!” என்று விமல் போனில் பேசிக் கொண்டிருக்க, அவனின் அறையை கடந்து சென்ற திவ்யாவின் காதில் லேசாக விழுந்து வைத்தது.
“எந்த விஷயம் வெளிய வரக்கூடாதுன்னு பேசிட்டு இருக்கான். என்ன பிரச்சனை..?” என்று மனதில் எண்ணியவள், நடையை மட்டுப் படுத்தி கொஞ்சம் உன்னிப்பாக கேட்கத் தொடங்கினாள்.
Advertisement
“அந்த டிரைவர் இப்போ எங்க இருக்கான்..?”
“அவன் ஆந்திரா பக்கம் செட்டில் ஆகிட்டான் சார். அவனைப் பத்தியெல்லாம் பிரச்சனை இல்லை..!” என்றான் மறுபுறம் இருந்தவன்.
“நீ இப்படி சொல்ற..? அந்த விஜய் வேற கதை சொல்றானே..?”
Advertisement
விஜய் என்ற பேரைக் கேட்டவுடன் திவ்யாவின் ஐம்புலன்களும் விழித்துக் கொண்டது. அவன் பேசுவது கொஞ்சம் தெளிவில்லாமல் கேட்டது திவ்யாவிற்கு.
Advertisement
“அந்த விஜய் என்ன சார் சொன்னான். அவனுக்கு பழசு எல்லாம் நியாபகம் வந்துடுச்சா..?” என்றான் எதிர்புறம் இருந்தவன்.
“அவனுக்கு நியாபகம் எல்லாம் வந்துடுச்சா இல்லையான்னு ஒன்னும் தெளிவா தெரியலை. ஆனா, அந்த லாரி டிரைவரைப் பத்தியெல்லாம் பேசுறான்னு சொன்னா, அவனுக்கு கண்டிப்பா நியாபகம் வந்திருக்கணும். இல்லைன்னா இவ்வளவு தைரியமா அவன் பேச மாட்டான். நமக்கு இப்போ அது முக்கியம் இல்லை. இப்போதைக்கு அந்த டிரைவர் யார் கைக்கும் சிக்கிடக் கூடாது. அது தான் முக்கியம்.” என்றான்.
“கண்டிப்பா சார்..! அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு அப்படி நடக்க வாய்ப்பே இல்லை..!” என்றான்.
Advertisement
“ஏன் சொல்றேன்னா..? இங்க இப்போதைக்கு என்னோட நிலைமையும் சரியில்லை. என் மாமன் இப்பல்லாம் என்னை சந்தேக கண்ணோடு தான் பார்க்குறான். அந்த ஆளு அதை கன்பார்ம் பன்றதுக்குள்ள, நான் என்ன செய்யணுமோ அதையெல்லாம் செஞ்சாகனும். அதுக்கு இடையில இந்த விஜய் பிரச்சனை வேற.. எதுக்கும் அவனை ஜாக்கிரதையா இருக்க சொல்லு. அப்படி இல்லைன்னா, அவனை வேற எங்கையாவது வடநாடா பார்த்து அனுப்பி வை..!” என்று படு தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான் விமல்.
“இவ்வளவு பிரச்சனை இருக்குன்னு சொல்றிங்க..? பேசாம உங்க மாமாவையும், அந்த விஜய்யையும் போட்டுத் தள்ளிடலாமா சார்..?” என்றான்.
“டேய் முட்டாள்..! அந்த விஜய் என்ன விரல் சப்புற பையன்னு நினைச்சியா..? நினச்ச உடனே போட்டுத் தள்ள.. அவனை போட்டுத் தள்ள, ஏற்கனவே போட்ட பிளானையே நீங்க சொதப்பி வச்சது தான், இப்போ இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்..” என்றான் விமல்.
“சார்..! எங்களை குறை சொல்லாதிங்க சார். அந்த பொண்ணு கடைசி நேரத்துல அப்படி பண்ணும்ன்னு நாங்க என்ன கனவா கண்டோம்..! இல்லைன்னா, அன்னைக்கே ரெண்டு பேரும் அந்த இடத்துலயே சாக வேண்டியவங்க சார். ஜஸ்ட் மிஸ். சரி ஹாஸ்பிட்டல்ல வச்சு அவனைப் போடலாம்ன்னு நான் சொன்னேன். நீங்க தான் வேண்டாம்ன்னு சொன்னிங்க..!” என்றான்.
“அது என்னவோ உண்மைதான்..! அவனுக்கு பழசெல்லாமே மறந்து போய்டுச்சு. இனி நினைவு வர வாய்ப்பே இல்லைன்னு அந்த டாக்டர் சொன்னதை நான் கேட்டேனேடா. அதனால தான் அவனை அப்போதைக்கு எதுவும் பண்ண வேண்டாம்ன்னு சொன்னேன். இவனுக்கு நியாபகம் வந்து மறுபடியும் பழைய கதையை தோண்டுவான்னு நான் என்ன கனவா கண்டேன்..! இப்பவும் எல்லாம் இந்த திவ்யாவால வந்தது. இல்லைன்னா, அவன் வழிக்கே வந்திருக்க மாட்டான்..” என்றான் விமல்.
“நான், நீங்க சொன்னபடியே செஞ்சிடுறேன் சார்..!” என்றான் எதிரில் இருந்தவன்.
“அதை முதல்ல செய். சொன்னது எல்லாம் நியாபகம் இருக்குல்ல..” என்றான்.
“அதெல்லாம் நியாபகம் இருக்கு சார். அப்படியே எனக்கும் ஏதாவது பார்த்து செஞ்சிங்கன்னா நல்லா இருக்கும் சார்..!” என்றான்.
“செய்யறேன்..செய்யறேன். உனக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன். நீ, இப்ப நான் சொன்ன வேலையை மட்டும் சரியா முடி. அதுக்கப்பறம் இந்த ஆளைப் போட்டுத் தள்ளிட்டா, நானே ராஜாடா. என்னை எவனாலும் அசைக்க முடியாது..!” என்றான் விமல்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்…! அந்த டிரைவரை அனுப்பிட்டு உங்க லைனுக்கு வரேன் சார்..!” என்று எதிரில் இருந்தவன் போனை வைக்க,
“எப்படியோ விமல், நீ நினைச்சதை சாதிக்க போற..? என்ன இந்த திவ்யா தான் கொஞ்சம் முரண்டு பண்ணுவா..? அவ அக்காவுக்குத் தான் தாலி கட்ட முடியலை. இவளுக்கு கட்டிட மாட்டேன்..!” என்று பேசிக் கொண்டே, தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.
இதையெல்லாம் வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த திவ்யாவிற்கு சகலமும், சர்வ நாடியும் ஆடிப் போனது. விமலின் குணத்தைப் பற்றி ஓரளவிற்கு அவளுக்குத் தெரியும். ஆனால் அவன் இப்படியெல்லாம் செய்திருப்பான் என்று அவன் வாயாலையே கேட்டதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. இத்தனை நாள் பிள்ளைப் பூச்சி மாதிரி தன் பின்னால் இருந்த விமலின் மனதிற்குள் இப்படி ஒரு வக்கிர எண்ணம் இருக்கும் என்று அவள் நிச்சயமாக எண்ணவில்லை.
வந்தனாவின் சாவிற்கு விஜய் தான் காரணம் என்று நினைத்து அவனைப் பழிவாங்க.. திவ்யா துடித்துக் கொண்டிருக்க, இன்று விமல் தான் காரணம் என்று தெரிந்த போது, அவளுக்கு மூச்சு விடுவது கூட சிரமமாய் இருந்தது. விமல், காலை சுத்தின பாம்பு என்பதை அப்போது தான் உணர்ந்தாள் திவ்யா.
அவள் அறிந்த, கனகவேல் அறிந்த விமல் அவன் இல்லை. அவனுக்கும் மறுபக்கம் இருக்கிறது. அந்த பக்கம் கொஞ்சம் கொடூரமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டவள், சத்தமே இல்லாமல் சென்று விட்டாள். அவனிடம் நேராக சண்டை போடுவது அவ்வளவு உசிதம் இல்லை என்று திவ்யாவிற்கு நன்றாகத் தெரியும். அவளுடைய மூளை கொஞ்சம் சமயோசிதமாக சிந்தித்தது. விமல் அடுத்து எதுவும் செய்வதற்குள், ஏதாவது செய்தாக வேண்டிய நிலையில் இருந்தாள் திவ்யா.
விமல் யாருடன் பேசினான் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் திவ்யா. ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. விமல் தன்னுடைய போனை மறந்தும் கீழே வைக்கவில்லை. அவனுடைய போனிற்காக கொக்கு போல் காத்திருந்தாள் திவ்யா. அன்று முழுவதும் அவளால் முடியவில்லை.
மறுநாள்,
“மாமா, இன்னைக்கு ஆபீஸ்க்கு சீக்கிரம் போகணும். நீங்களும் என்கூடவே வாங்களேன்..!” என்றாள் திவ்யா.
“நிஜமாவா திவ்யா..?”
“ஆமா மாமா..! சீக்கிரம் குளிச்சுட்டு கிளம்புங்க..!” என்றாள்.
“என்ன? இன்னைக்கு இவ ரொம்ப மரியாதையா பேசுறா..?” என்று யோசித்தவன்,
“எப்படி இருந்தா என்ன விமல்..? இவளா வழிக்கு வரும் போதே, பிடிச்சு இழுத்துப் போட்டுடனும்..!” என்று நினைத்துக் கொண்டே, கிளம்ப சென்றான். அவனின் பின்னேயே பார்வையை வைத்திருந்தவள், அவன் குளிக்க சென்ற அடுத்த நிமிடம், மெல்ல அவன் அறைக்குள் நுழைந்திருந்தாள். பாத்ரூம் கதவின் வெளி தாழ்ப்பாளை மெல்ல போட்டவள், அவனின் செல்லை எடுத்து ஒப்பன் செய்ய, அது திறக்க மாட்டேன் என்று சண்டித் தனம் செய்தது. அவன் பாஸ்வேர்ட் போட்டு வைத்திருக்க, அவளும் பலவகையில் முயன்று விட்டாள், முடியவில்லை. கடைசியாக விமல் திவ்யா என்று போட்டுப் பார்த்தாள் அது உடனடியாக திறந்து கொள்ள,
“இந்த நாய்க்கு இந்த ஆசை வேறயா..? உனக்கு இருக்குடா மவனே..!” என்று மனதில் எண்ணிக் கொண்டே, அவன் முதல் நாள் பேசிய நேரத்தில், அவன் பேசிய அனைத்து நம்பரையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்தவள், அதை தன்னுடைய நம்பருக்கு அனுப்பி விட்டு, அதை டெலீட் செய்தாள். எடுத்த ஸ்க்ரீன் ஷாட்டையும், அவனுடைய போனில் டெலீட் செய்தவள், அது எப்படி இருந்ததோ அப்படியே வைத்தாள். பாத்ரூம் கதவின் தாழ்ப்பாளை நீக்கி விட்டவள், வேகமாக அவனுடைய அறையில் இருந்து வந்து விட்டாள். அதற்கே அவளுக்கு மூச்சு வாங்கியது.
அறைக்கு வந்தவள், சரியாக நேற்று அவன் பேசும் போது என்ன நேரம் என்பதை கணக்கிட்டு பார்க்க, அந்த நம்பரை மட்டும் தனியாக எடுத்தவள், அதை வாட்ஸ்சப்பில் தந்தைக்கு அனுப்பினாள். அனுப்பிய அடுத்த நிமிடம், அவருக்கு போன் செய்ய..
“சொல்லுமா திவ்யா..!” என்றார் கனகவேல்.
“டாடி, உங்களுக்கு ஒரு போன் நம்பர் அனுப்பியிருக்கேன். அந்த நம்பரோட அட்ரஸ், கால் டீட்டெயில்ஸ் எல்லாமே வேணும்..!” என்றாள்.
“விமல் கிட்ட சொல்லுமா..! வாங்கித் தருவான்..!” என்றார்.
அவர் அப்படி சொன்னதும், அவளுக்கு உள்ளுக்குள் எரிச்சல் மூண்டது. இப்படி தொட்டதுக்கெல்லாம் அவனை எதிர்பார்த்து தான், அவன் இந்த அளவிற்கு வந்து விட்டான்..என்று எண்ணியவள்,
“டாடி, நீங்க வாங்கிக் குடுங்க. நான் கேட்டா ரெண்டு நாள் ஆகும்ன்னு சொல்லுவாங்க. நீங்கன்னா, உடனே கிடைக்கும்..! முக்கியமா விமல்க்கு இந்த விஷயம் தெரியவே கூடாது..!” என்றாள்.
“என்னாச்சு திவ்யா..? ஏன் விமல்க்கு தெரியக் கூடாது. திருப்பியும் ஏதாவது வம்பைக் கூட்ட போறியா..?” என்றார்.
“டாடி பிளீஸ்..! முக்கியமான விஷயம். இப்போதைக்கு போன்ல சொல்ல முடியாது. கண்டிப்பா நான் தப்பா எதுவும் பண்ணலை. வாங்கிக் குடுங்க..!” என்றாள்.
“சரி, வாங்கித் தரேன்..!” என்றவர் போனை வைத்து விட, அப்போது தான் அவள் நிம்மதியாக மூச்சு விட்டாள்.
அவள் போனையே பார்த்துக் கொண்டிருக்க,
“நான் கிளம்பிட்டேன் திவ்யா. நீ இன்னும் கிளம்பாம இருக்க..?” என்றபடி வந்தான் விமல்.
“இன்னைக்கு ஒரு நாள் நீங்க ஆபீசை பார்த்துக்கோங்க மாமா. ரொம்ப தலைவலிக்குது காய்ச்சல் வர மாதிரி வேற இருக்கு..!” என்றாள் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.
“என்னாச்சு திவ்யா..? டாக்டர்கிட்ட போகலாமா..?” என்றான்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாமா..! தூங்கி எழுந்தா சரியாகிடும்..” என்றாள்.
“அப்போ, நீ ரெஸ்ட் எடு திவ்யா. நான் கிளம்புறேன்..! இன்னைக்கு இவ்வளவு நல்ல விதமா பேசுவன்னு நான் நினைக்கவேயில்லை திவ்யா..!” என்றான்.
“எல்லாம் அந்த விஜய்யால வந்தது மாமா. இப்போதான் அவனை மறக்கணும்ன்னு நினைக்கிறேன்..!” என்றாள் வேண்டுமென்றே.
“நல்ல விஷயம் திவ்யா..! நீ ரெஸ்ட் எடு..!” என்றவனுக்கு மனதிற்குள் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
“ஆடுற மாட்டை ஆடித்தாண்டா கறக்கணும்..!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் திவ்யா.
அவளின் சூழ்ச்சி தெரியாத விமல், சந்தோஷமாக கிளம்பி சென்றான்.
விடிந்து எழுந்தது முதல் விஜய்க்கு மனதிற்குள் அப்படி ஒரு சந்தோசம். ஏனோ இனம் புரியாத மகிழ்ச்சி, ஒரு புத்துணர்வு அவனுக்குள். அதற்கு துளசி தந்த பூஸ்ட் தான் காரணம். முதல் நாள் அவளிடம் நடந்து கொண்டதை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டான் விஜய். அதுவே அவனுக்கு மேலும் மகிழ்ச்சியை தந்தது.
“இந்த ராங்கி கிட்ட என்னமோ ஒன்னு இருக்கு. இவ இவ்வளவு திமிரா இருக்கும் போதே, மனசு இவ பின்னாடி தான் போகுது. இவ மட்டும் கொஞ்சம் இறங்கி வந்தா, விஜய் உன்காட்டுல மழை தான். அப்பறம் உன்னையும் பிடிக்க முடியாது..!” என்று தனக்குத் தானே எண்ணிக் கொண்டவனுக்கு ஒரு வெட்க புன்னைகையும் வந்தது.
“அவளை நினைச்சாலே மனசு சும்மா காத்துல பறக்குதே.?” என்று வாய்விட்டு முனங்க,
“பறக்கும்டா பறக்கும்..! டைம் என்னன்னு பாரு..? எந்த உலகத்துல இருக்குற விஜய்..?” என்று பிரவீன் கேட்க,
“நீ எப்போடா வந்த..?” என்றான் விஜய்.
“ஏண்டா கேட்க மாட்ட..? நேத்து வரைக்கும் நல்லாதானடா இருந்த..? திடீர்ன்னு என்னடா ஆச்சு..?” என்றான் பிரவீன்.
“சொல்லனுமா மச்சான்..?” என்றான் விஜய்.
அவன் மச்சான் என்று சொல்வதிலேயே புரிந்து கொண்டான் பிரவீன், அவன் துளசியைப் பற்றி தான் சொல்லப் போகிறான் என்று. அவள் நினைப்பில் இருந்தால் மட்டுமே பிரவீனை மச்சான் என்று அழைப்பான் விஜய்.
“சொல்லுடா..” என்றான்.
“நேத்து நைட்.. உன் தங்கச்சிக்கு மறுபடியும் வைத்தியம் பார்த்தேனா..? ஆனா பாரு, அதோட எபக்ட் எனக்குக் காட்டுது. அதைத்தான் யோசிச்சுட்டு இருந்தேன்..!” என்றான்.
“அடப்பாவி..! நான் கூட உன்னைய என்னமோ நினைச்சேன் விஜய். ஆனா, நீ பயங்கர விபரம் தாண்டா..! அதுக்குள்ளயா..?” என்றான் பிரவீன் அதிர்ச்சியுடன்.
“இவன் ஒருத்தன்.. எப்ப பார்த்தாலும் ஓவர் இமேஜின் பண்ணிக்கிட்டு. நானே இப்பதான் ஏதோ தட்டுத் தடுமாறி போய்கிட்டு இருக்கேன்..!” என்று புலம்ப,
“அப்ப ஒன்னும் நடக்கலையா..?” என்றான் பிரவீன் சிரிப்புடன்.
“டேய் மெதுவா பேசுடா..! அவ காதுல கேட்டா, மறுபடியும் வந்து தூக்கிப் போட்டு மிதிச்சாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை..!” என்றான் விஜய்.
“மாப்பிள்ளைக் கலையே இப்பதாண்டா உன் முகத்துல தெரியுது..” என்று பிரவீன் சொல்ல,
“எனக்கு ஒரு சந்தேகம் மச்சான்..!” என்றான்.
“இப்ப என்ன சந்தேகம்..?” என்றான்.
“இல்ல..! எப்படிடா, இப்படி ஒரு செம்ம பிகரை வீட்ல வச்சுகிட்டு, அவளை நான் லவ் பண்ணாம இருந்தேன். பழைய விஜய் கொஞ்சம் கோவக்காரனோ?” என்றான் விஜய்.
“ரொம்ப முக்கியமான சந்தேகம்.! ஏன் இப்ப மட்டும் நீ கோவக்காரன் இல்லையா..?” என்றான் பிரவீன்.
“முக்கியமான கேள்விதாண்டா. அவளைப் பார்க்கும் போதே, என்னமோ அப்படி ஒரு பீல். அவளை கைக்குள்ளயே வச்சுக்கணும் அப்படின்னு எல்லாம் தோணியிருக்கு. இது இப்ப இருந்து இல்ல, நம்ம அந்த பிஸ்னஸ்மீட் போனோமே..? அப்ப இருந்தே. அன்னைக்கு இவகிட்ட விழுந்தவன் தான்..!” என்றான் விஜய்.
“என்னடா சொல்ற..? அப்பறம் என்னமோ அவளைப் பிடிக்காத மாதிரியே பில்டப் குடுத்த..?” என்றான்.
“ம்ம்ம்..! அவ பேசின பேச்சுக்கு யாரா இருந்தாலும் அப்படித்தான். கொஞ்சம் திமிர்காரி தான். ஆனா, விஜய்க்கு ஏத்த திமிர்காரி..!” என்றான் விஜய்.
“ஆபீஸ் கிளம்புற ஐடியா இருக்கா இல்லையா..?”
“பத்து நிமிஷம் மச்சான்..!” என்றவன் குளியல் அறைக்குள் புக, அவனை அப்படிப் பார்த்த பிரவீனுக்கு மனம் நிறைந்தே போனது. அவன் இப்படி இயல்பாய் சீண்டி.. பேசி, வருடங்கள் ஆகியிருந்தது.
கிளம்பிக் கீழே வந்தவன், துளசியைத் தேட,
“யாரை விஜய் தேடுற..?” என்றார் வள்ளி.
“துளசி எங்க பாட்டி..? ஆளையே காணோம்..?” என்றான்.
“அதுவா, மாப்பிள்ளை அவளை கடைக்கு கூட்டிட்டு போயிருக்கார். சீக்கிரமே கிளம்பிப் போயிட்டாங்க..!” என்றார்.
“என்ன கடைக்கு..?” என்றான் புரியாமல்.
“அவளுக்கு நாளைக்கு பிறந்த நாள். அடுத்த நாள் தாலி பிரிச்சு கோர்க்கணும். அதான் டிரஸ் எடுக்கப் போயிருக்கா ! அவ வேண்டாம்ன்னு சொன்னாலும் மாப்பிள்ளை எங்க விடுறார்..?” என்று வள்ளி நீட்டி முழக்க,
“எனக்கு எதிரியே உங்கப்பா தான் பிரவீன். அவருக்கு துளசி என்னோட வொய்ப்ன்னு அடிக்கடி நியாபகப் படுத்தனும் போல..!” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
“விடு விஜய்.. ! இது ஒரு சின்ன விஷயம். இதுக்கு ஏன் நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற..? நீ இப்போதான் அவளுக்கு புருஷன். ஆனா அவரு, அவ பிறந்ததில் இருந்து அவளுக்கு அப்பா. அவங்க ரெண்டு பேரைப் பத்தி தான் உனக்குத் தெரியும்ல..!” என்றான் பிரவீன்.
“தெரியாம சொல்லிட்டேண்டா..!” என்றவன் கடுப்புடன் எழுந்து சென்று விட்டான்.
“விஜய் ஏன் சாப்பிடாம போறான்..?” என்று வித்யா ஓடி வர,
“அம்மா..! அவனுக்கு துளசியைப் பார்க்க முடியலைன்னு கடுப்பு. வேற ஒண்ணுமில்லை. ஆபீஸ்ல பார்த்துக்கிறேன்..!” என்றபடி அவனும் விஜய் பின்னாடியே சென்று விட்டான்.
“பிரவீனுக்கும் காலகாலத்துல கல்யாணத்தை முடிச்சு வைக்கணும் வித்யா. அவனுக்கும் வயசாகிட்டே போகுது..!” என்றார் வள்ளி.
“ஆமாம்ம்மா..!”
“நம்ம பவித்ராவும் படிப்பை முடிச்சுட்டா..! பேசாம பேசி முடிச்சு கல்யாணத்தைப் பண்ணிடனும்..!” என்று வள்ளி சொல்ல,
“அம்மா, நீலா அண்ணிக்கு இதுல விருப்பம் இருக்குற மாதிரி தெரியலை..!” என்று வித்யா சொல்ல,
“துளசியைக் குடுக்கும் போது, எங்களை கண்ணுக்குத் தெரியலையே அண்ணி உங்களுக்கு..?” என்றபடி வந்தார் நீலா.
“நீலா, என்ன பேச்சு இது..? இப்போ துளசியை வெளியவா குடுத்திருக்கோம். நம்ம விஜய்க்கு தான. அவனும் உனக்குப் பையன் தான..?” என்றார் வள்ளி.
“இருந்தாலும், அருணுக்கு குடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும். நானும் என் மகளை என் இஷ்ட்டப்படி தான் குடுப்பேன்..!” என்று நீலா முறுக்கிக் கொண்டு நிற்க, ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்த அருணின் காதில் எல்லாம் விழுந்தது.
“அம்மா, என்ன பேச்சு பேசுறிங்க..? துளசி இப்போ எனக்கு அண்ணி. நீங்க இன்னும் இந்த பேச்சை விடலையா..? அது மட்டுமில்லாம, எனக்கு என்னைக்குமே அந்த எண்ணம் இருந்ததே இல்லை. பவித்ரா எப்படியோ, அப்படிதான் துளசியும்..” என்று அருண் எரிச்சலுடன் சொல்ல,
“அப்படி சொல்லு அருண்..! உங்கம்மாக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது..! பிரவீனை விட ஒரு நல்ல பையன் நீ தேடுனாலும் பவிக்குக் கிடைக்க மாட்டான் நீலா. சும்மா, எதையாவது மனசுல வச்சுகிட்டு, அவளுக்கு நடக்கற நல்லதை தடுக்காத..!” என்றார் வள்ளி.
“பவித்ராவுக்கும், பிரவீனுக்கும் ஒன்பது வருஷ வித்யாசம்…!” என்றார் நீலா.
“இருந்துட்டு போகட்டும்..! உனக்கும் சுந்தருக்கும் தான் பத்து வருஷ வித்யாசம். நீங்க குடும்பம் நடத்தலையா..? இல்ல, பிள்ள குட்டி தான் பெத்துக்கலையா..?” என்றார் வள்ளி.
“அம்மா..! அவங்களுக்கு விருப்பம் இல்லைன்னா விட்டுடுங்க…” என்று வித்யா சொல்லிவிட,
“விஜய் வேண்டாம்ன்னு சொன்னாலும் வழிய போய் துளசியை கட்டி வச்சிங்க. இப்போ நான் வேண்டாம்ன்னு சொன்னா, உடனே நீங்களும் இந்த பேச்சு வேண்டாம்ன்னு சொல்றிங்க..?” என்றார் நீலா.
“என்னை என்னதான் பேசச் சொல்றிங்க நீலா அண்ணி. இப்படிப் பேசுனாலும் தப்பு. அப்படிப் பேசுனாலும் தப்பு. நான் வேற என்னதான் பண்ண..?” என்றார் வித்யா.
“பவித்ராவுக்கு பிடிச்சிருந்தா, நான் ஒன்னும் சொல்லலை. நீங்க அவளையே கேட்டு முடிவு பண்ணுங்க..!” என்றார் நீலா.
“அம்மாவுக்கு சம்மதமாம் அத்தை. அதைத் தான் இப்படி சுத்தி வளச்சி சொல்றாங்க..” என்ற அருண் சிரிக்க,
“நீ முதல்ல கிளம்புடா..!” என்றார் நீலா.
“அப்பறம் என்ன வித்யா..? துளசிக்கு தாலி பிரிச்சு கோர்த்துட்டு, இவங்க கல்யாணத்தையும் பேசி முடிச்சுடலாம்..!” என்றார் வள்ளி.
“சரிம்மா..!”
“பாட்டி..! எல்லாருக்கும் நல்லது பண்றிங்க..? என்னை மட்டும் மறந்துட்டிங்களே..?” என்றான் அருண் பாவமாய்.
“என்னடா மறந்தேன்..?”
“இல்லை, எனக்கும் வயசாகுது. எனக்கும் பொண்ணு பார்க்கணும். நம்ம வீட்லயும் பொண்ணு இல்ல. வெளிய தான் தேடனும். இப்ப இருந்து தேட ஆரம்பிச்சாத்தான்..இல்லைன்னா என்னோட நிலைமையை யோசிச்சு பாருங்க..!” என்றான் அருண்.
“அடப்பாவி..! இங்க பாரு வித்யா இவன் பேசுறதை..?” என்று வள்ளி செல்லமாய் அவனை முறைக்க,
“ஏன் சொல்றேனா..? நானும் நைன்டீஸ் கிட்ஸ் பாருங்க..! என்னோட கஷ்ட்டம் எனக்கு. சரி சரி, நான் கிளம்புறேன். எதுக்கும் ஒரு நல்ல முடிவா எடுத்து வைங்க” என்றான் சிரிக்காமல்.
“அடிங்க..!” என்று வித்யா அவனைத் துரத்த,
“கொஞ்சம் கூட மனசு இறங்க மாட்டேங்குறாங்க. உங்க மனசெல்லாம் என்ன கல்லா..?” என்றவன் அதற்கடுத்து அங்கு நிற்கவில்லை.
“இவனுக்கு இன்னும் இந்த வால்தனம் மட்டும் போகவே இல்லை நீலா..!” என்றார் வள்ளி சிரிப்புடன்.
அங்கே சுரேஷ், துளசி போதும் போதுமென்று சொல்லும் அளவிற்கு வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தார்.
“போதும்ப்பா..!” என்று துளசி எடுத்து சொல்லியும், அவர் கேட்கவில்லை. அவர் என்னவோ கேட்க நினைக்கிறார் என்பது மட்டும் துளசிக்கு புரிந்து போனது.
“என்கிட்ட ஏதாவது கேட்கணுமாப்பா..?” என்றாள்.
“அப்பா மேல உனக்கு கோபம் இல்லையேடா..?” என்றார் சுரேஷ்.
“என்னப்பா திடீர்ன்னு..?”
“இதுவரைக்கும் உனக்குப் பிடிச்சதை மட்டும் தான் வாங்கிக் குடுத்திருக்கேன். நீ கேட்டதை மட்டும் தான் செஞ்சிருக்கேன். ஆனா, உன்னோட லைப் விஷயத்துல நான் எடுத்த முடிவு உனக்குப் பிடிக்கலைன்னாலும், பின்னாடி நீ புரிஞ்சுப்பன்னு நினைச்சேன்டா..!”
“அது தெரிஞ்ச விஷயம் தானேப்பா..!” என்றாள் புரியாமல்.
“நீ சந்தோஷமா இருக்கியா துளசி..?” என்றார் சுரேஷ்.
“என்னப்பா திடீர்ன்னு..?” என்று அவர் முகம் பார்ப்பதை அவள் தவிர்க்க,
“நீ சொல்லாம விட்டாலும், உன்னைப் பத்தி இந்த அப்பாவுக்கு தெரியும் துளசி. அதான் அப்படி பண்ணேன்..!”என்று அவள் முகம் பார்க்க,
அவள் ‘அப்படியா..?’ என்பதை போல் பார்க்க,
“ஆமாம்..” என்பதை போல் அவர் தலை அசைத்தார்.
அவ்வளவு தான், அதற்கு மேல் அவளால் கண்ணீரை அடக்க முடியவில்லை.
“ப்பா…!” என்று அவரை அணைத்துக் கொண்டாள் துளசி. ஏனோ அவள் மனதில் இருந்த பாரங்கள் எல்லாம் விலகியதைப் போல் இருந்தது அந்த நிமிடம்.
