Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Dum Dum En Kalyaanam

dum dum en kalyaanam 14.2

உண்ட மயக்கத்தில் வந்து தன் அறைக்குள் விழுந்த அஷ்டாவை தேடி வந்தார் நீலா.

 

“அஷ்டா? எப்படி டி இருக்க?”

 



Advertisement

“ம்ம்…ம்ம்ம்” படுத்துக்கொண்டே முனகினாள். மனதிலோ, ‘இப்போ தான் கண்ணுக்கு தெரியுறேன் போல’ என சடைத்துக்கொண்டிருந்தாள்.

 

“காலைல நேரமே எழுந்துரிச்சியா? தலைக்கு ஊத்திக்கிட்டியா? சாமி மாடத்துல விளக்கு ஏத்துனியா? கோலம் போட சொன்னேனே? செஞ்சியா?” வரிசையாய் அவர் கேட்க,

Advertisement

 

Advertisement

“ஸ்ஸ்ஸ்… ஷப்பா! நான் வந்து இவ்ளோ நேரம் ஆச்சு! இப்போதான் என்கிட்ட பேசவே செய்யுறீங்க! அதுலயும் இதை செஞ்சியா? அதை செஞ்சியா?ன்னு ஆயிரத்தி எட்டு கேள்வியோட” என கத்திக்கொண்டே வெடுக்கென எழுந்து அமர்ந்தாள் அஷ்டா.

 

“இல்லடா! புதுசா ஒரு வீட்டுக்கு வாழ போயிருக்க! இங்க இருக்கிறது போலவே இருக்க முடியாதுல அங்கயும்!? அதான் அம்மா சொல்லித்தரேன்” என பக்குவமாய் பேசினார் நீலா.

Advertisement

 

அவர் தன்மையாய் பேசியதில் சற்று அடங்கியவள், “ஹ்ம்ம்… ஹும்…” என்றாள்.

 

மகளின் கரத்தை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்ட நீலா, “மாமியார், மாப்பிள்ளை எல்லாம் நல்லா பழகுறாங்களா? வீடு பிடிச்சுருக்கா?” என்றார்.

 

“ஏன்? பிடிக்கலன்னு சொன்னா வேற வீட்டுக்கு அனுப்பிடுவீங்களோ?” என்றாள் சுள்ளென. 

 

பட்டென அவள் கரத்தில் அடித்தவர், “இப்படி வெடுக்கு வெடுக்குன்னு பேசுறதை நிறுத்து முதல்ல… வாயை குறைக்கலன்னா போயிருக்க வீட்டுல கெட்ட பேரு தான்டி கிடைக்கும்” என்று சொல்ல,

 

“எனக்கு ‘அஷ்டலட்சுமி’ங்குற பேரே நல்லா தான் இருக்கு! வேற எந்த பேரும் புதுசா தேவையில்லை” என்றாள்.

 

“ஏண்டி இப்படி சுள்ளுன்னு பேசுற? உன் நல்லதுக்கு தானே நான் சொல்றேன்?!”

 

“எல்லாம் சொன்ன வரைக்கும் போதும்! கேட்டு கேட்டு புளிச்சு போச்சு!”

 

முறைத்த நீலா, “கல்யாணம் ஆனதும் தலைல ரெண்டு கொம்பு முளைச்சுட்டதா நினைப்பா உனக்கு? உன் அப்பா, அப்பாத்தா’க்கிட்ட பேசுற மாதிரியே என்கிட்டயும் பேசாத” என அதட்ட,

 

“சும்மா சும்மா வந்து அட்வைஸ் பண்றேன்னு டார்ச்சர் பண்ணாதீங்கம்மா” என எரிந்து விழுந்தாள் அஷ்டா.

 

“நீ இத்தனை சொல்ற அளவுக்கு நான் என்னடி இம்சை செஞ்சேன் உன்ன?” என நீலா கேட்க, “ஸ்ஸ்ஸ்… ம்மா! நான் கொஞ்ச நேரம் தூங்கனும்! எழுந்து போறீங்களா?” என்றாள் வாசலைக்காட்டி.

 

ஆத்திரமாய் வந்தது நீலாவுக்கு. அடிக்கும் வயதில் அடித்து வளர்க்காமல் விட்டதன் பலன் இது’ என தன்னைத்தானே நொந்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

 

அவர் போனதும், “ஷப்பா! எப்பபாரு நொய்நொய்’ன்னு” என கடிந்துக்கொண்டு உறக்கத்திற்கு செல்ல முயன்றாள்.  

 

அவள் நல்ல உறக்கத்தில் இருக்கும் போது, “ஷ்…. ஷ்…” என்ற சத்தம் வர, “ப்ச்” முகம் திருப்பி மறுபடியும் உறக்கத்தை தொடர, அவள் கரத்தை தட்டி, மீண்டும், “ஷ்…ஷ்..” என்ற சப்தம்!

 

கொஞ்சமாய் கண்ணை திறந்து பார்த்தவள், கண் முன்னே வீராவை கண்டதும் சடாரென அப்படியே எழுந்து அமர,

 

“பொறுமை பொறுமை” என அவளை அமைதிப்படுத்த சொன்னான் வீரா.     

 

“என்னாச்சு?” என்றாள்.

 

“மணி ஆறாச்சு! கிளம்பலாம்’ன்னு நினைச்சேன்! போலாமா?”

 

அவன் மணியை சொன்னதும், ‘இப்போதானே படுத்தோம்! அதுக்குள்ளயா ஆறாச்சு?’ என திகைத்தவள்,  “கிளம்பலாம்” என்றாள் அவனிடம்.

 

“அப்போ நீங்க ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க! நான் வெளில இருக்கேன்” என்றவன், அறையை விட்டு சென்றுவிட்டான்.

 

அவள் தன்னை சீர்ப்படுத்திக்கொண்டு வெளியே வந்தபோது அவன் கிளம்பி நிற்ப்பது தெரிய, நேராய் அவன் அருகே சென்று நின்றுக்கொண்டாள்.

 

அதைக்கண்டதும், ‘என்கிட்ட தான் எரிச்சு விழுறா போல! மாப்பிள்ளைக்கிட்ட இணக்கமா தான் இருக்கா!’ என தப்பாய் கணக்கு போட்டார் நீலா.

 

சிதம்பரம் ஒரு தாம்பூலத்தை எடுத்துக்கொடுக்க, அதை வாங்கிக்கொண்ட சண்முகம், “வாங்கிக்கங்க மாப்ள” என அதை நீட்டினார் வீராவிடம்.

 

அதில் பழங்களோடு துணிமணி இருக்க, அஷ்டாவின் கரம் பிடித்து அவர் கால்களில் விழுந்தவன், ‘நன்றி’ சொல்லி பெற்றுக்கொண்டான்.

 

‘எதாவது குடுத்தா உடனே வாங்கிப்பாரு போல… ச்ச!’ இப்படி நினைப்பது அஷ்டாவே அன்றி வேராருமில்லை.

 

மனம் நிறைந்த மகிழ்வோடு மகளை மருமகனோடு வழியனுப்பி வைத்தனர் சண்முகம் வீட்டார்.

 

பைக்கில் வேடிக்கை பார்த்தபடி சென்றுக்கொண்டிருந்தாள் அஷ்டா. அடிக்கடி பக்கவாட்டுக்கண்ணாடியில் அவளை பார்த்துக்கொண்டிருந்த வீராவுக்கு, ‘வெளில போலாமா?’ன்னு கேட்போமா? வேண்டாமா? என பட்டிமன்றமே உள்ளுக்குள் நடந்துக்கொண்டிருந்தது.

 

முடிவாய் குரலை செருமியவன், பக்கவாட்டில் கொஞ்சமாய் தலை சரித்து, “ஏங்க?” என்றான்.

 

“சொல்லுங்க”

 

“வெளில எங்கயாது போலாமா?”

 

“எங்க?”

 

“ம்ம்ம்… எங்கயாது?” என்றவன், “காவேரி பாலத்துல கொஞ்ச நேரம் நிப்போமா?” என்றான்.

 

உடனே, “உங்க விருப்பம்” என்றுவிட்டாள் அஷ்டா.

 

‘என்ன உடனே ஒத்துக்கிட்டாங்க!?’ என சந்தோஷமானவன், நெருக்கடி இல்லாத இடமாய் பார்த்து பைக்கை நிறுத்திவிட்டு, பாலத்தின் நடைபாதையில் ஏறி நின்றான். அவனுக்கு ஓரடி இடைவெளியில் நின்றாள் அஷ்டா.

 

மாலை நேர காற்று ஜில்லென்று உடலை தழுவியது. சுற்றிலும் இவர்களை போல ஜோடிகள், குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் நின்று காற்று வாங்கிக்கொண்டிருக்க, ஆங்காங்கே தின்பண்ட தள்ளுவண்டி கடைகள் இருந்தன.

 

“எதாவது சாப்புடுறீங்களா? வாங்கிட்டு வரவா?” என்றான்.

 

‘வேண்டாம்’ என மறுத்தவள், வேடிக்கையை தொடர, இவனும் வேடிக்கையை தொடர்ந்தான், அஷ்டாவின் மீது.

 

இறுக்கி பின்னியிருந்த கூந்தலில் இருந்து சில கற்றைகள் காற்றுக்கு அடங்காமல் சிலுப்பிக்கொண்டு முகத்திற்கு வர, அவள் அனாயசமாய் ஒதுக்கிக்கொண்டு பளிச், பளிச் என இரவு நேர விளக்கொளியில் மின்னும் மலைக்கோட்டையை பார்த்திருந்தாள் அவள்.

 

இவன் விழியெடுக்காமல் அவள் வதனத்தை ரசிக்க, “ரொம்ப அழகு! இல்லங்க!” என்றாள் மலைகோட்டையை ரசித்தபடி.

 

இவனும் ரசனையாய், “ஆமா! ரொம்…..ப அழகு” என்று சொல்ல, அவன் புறம் திரும்பியவள், தன்மீதிருந்த அவன் பார்வையை கண்டு கூச்சத்துடன் குனிந்துக்கொள்ள, அதையும் உரிமையாய் ரசித்தான் வீரா.

 

இதமான நிலை அப்படியே சில நிமிடங்கள் தொடர்ந்தது.

 

அவன் பார்வை அவளுக்கு அவஸ்தையாய் இருக்க, அதை மாற்றும் முயற்ச்சியாய், “கிளம்பலாமா?” என்றாள் சன்னமான குரலில்.

 

“போலாம்… என்ன அவசரம்” குரல் குழைந்து வந்தது அவனுக்கு.

 

பாலத்தின் கைப்பிடியை இறுகப்பற்றி உதட்டை கடித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

 

அவன் கண்கள் கடிந்திருந்த அவள் உதடுகளை குறிவைக்க, ‘கைக்கு எட்டியது; வாய்க்கு எட்டாத’ தன் நிலையை நொந்துக்கொண்டு நின்றவன், எங்கே தன் பேச்சைமீறி தன்னிருகைகள் அவளை அள்ளிக்கொள்ள சென்றுவிடுமோ என்ற பயத்தில், இறுக்கமாய் தன்னோடு சேர்த்து பிணைத்துக்கொண்டான்.

 

இருவருமே ஒருவித மோன நிலையில் தானிருந்தனர்.

 

“எனக்கு இது ரொம்ப நாள் ஆசை! எனக்கே எனக்குன்னு! எனக்கு உரிமையான பொண்ணோட, அவ கையை கோர்த்துக்கிட்டு இந்த பாலத்துல மத்தவங்க மாதிரி நானும் ஜோடியா நிக்கணும்ன்னு!!!” கிறங்கிய குரலில் சொன்னான் அவன்.

 

இருவருக்கும் நடுவே இருந்த இடைவெளி குறைந்துக்கொண்டே வந்தது.

அவன் சட்டை அவள் புடவையை உரசும் நெருக்கம் வந்திருக்க,

 

“கல்யாணம், பொண்டாட்டி, குழந்தை! இப்படி பெருசா எதையும் கற்பனை செஞ்சதில்லை நான்! ஆனா, இந்த பக்கம் போறப்போவும் வரப்போவும், இங்க நிக்குறவங்களை பார்க்குறப்போ கொஞ்சம் ஏக்கமா இருக்கும்! நம்மளும் ஒரு நாள் இப்படி வந்து நிக்கனும்டா’ன்னு தோணும்”  

 

அதுவரை சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் புறம் திரும்பி, “இன்னைக்கு என் ஆசை நிறைவேறிடுச்சு!” என்றான் ரம்யமான புன்னகையில்.

 

“எனக்கு அப்படி தோணல” என்றாள் அவள்.

 

சட்டென அவள் அப்படி சொல்லிவிட, “ஏன்?” என்றான் புரியாமல்.

 

நாணத்துடன் தலை குனிந்தவள், “கை…!” என நிறுத்த,

 

“கை?”

 

“கை பிடிக்கலையே!?” என்றாள், சொல்லிவிட்டு கீழுதட்டைக்கடித்துக்கொண்டு.

 

ஆச்சர்யமாய் விழிவிரித்தவன், “பிடிச்சா… பொண்டாட்டிக்கு பிடிக்காதோன்னு தான்” என்றான் குறும்பாய்.

 

“கை பிடிச்சா கற்பு போச்சுன்னு சொல்ற அளவுக்கு நான் ஒன்னும் பழங்காலம் இல்லங்க”

 

“அப்போ பிடிச்சுக்கலாங்குறீங்க?” இன்னமும் அவன் கேள்வியே கேட்க,

 

“கேட்டுட்டே இருக்கீங்களே?” என சீண்டினாள் அவள்.

 

அதற்கு மேல் தாமதிக்காமல் அவள் கரத்தை தன் இரு கைகளாலும் அவன் அழுத்திப்பிடித்துக்கொள்ள, அவனுக்கு வாகாய் திரும்பி நின்றுக்கொண்டாள் அவள்.

 

அவனுக்கு என்னவோ தன் நெடு நாள் ஆசை நிறைவேறிய பூரிப்பு உள்ளுக்குள் இருந்தாலும், மறுபுறம், ‘தொடக்கூடாதுன்னு சொல்றாங்க! தொடவே மாட்டேங்குறேன்னும் சொல்றாங்க! நான் இப்ப என்னதான் பண்ணணும்!?’ என குழப்பம் ஓட,

 

‘ஷப்பா!! இந்த பொண்ணுங்க இருக்காங்களே!?’ என மண்டைகாய, அவளுடன் அமைதியாய் வீட்டிற்கு சென்றான் வீரா.

 

cauvery bridge

-to be continued…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!