Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Dum Dum En Kalyaanam

Dum Dum En Kalyanam 15.1

Episode 15

 

காலையில் அஷ்டா கண்விழிக்கையில் வழக்கம் போல மணி ஏழரையை தொட்டிருந்தது.

 



Advertisement

‘ஐயோ சீக்கிரமே எழுந்துரிச்சாலும் எப்படி கடிகாரம் இதே டைமே காட்டுது? முதல்ல கடிகாரத்தை மாத்தனும்’ என பேசிக்கொண்டே குளியறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

 

அரக்கப்பறக்க அவள் வெளியே வந்தபோது நேரம் எட்டை நெருங்க, சுடிதார் ஒன்றை மாட்டிக்கொண்டு அறையை விட்டு வந்தாள் அஷ்டா.

Advertisement

 

Advertisement

டிவியில் செய்தி முடியும் தருவாயில் இருந்தது. விஜயா அதை கவனித்துக்கொண்டே சம்மணம் போட்டு அமர்ந்திருக்க, “குட் மார்னிங் அத்தே” என்று இறங்கிய குரலில் சொன்னாள் அவள்.

 

‘இதான் எழுந்துக்குற நேரமா?’ என சத்தம் போடுவாரோ என்று ஒருபுறம் பதட்டம்.

Advertisement

 

அஷ்டாவை கண்டவரோ, “வாமா? மைலோ குடிக்குறியா?” என இயல்பாய் கேட்க,

 

‘இவருக்கு கோவமே வராதோ?!’ என சந்தேகமே வந்தது அவளுக்கு.

 

வழமையாய் ஐந்து முப்பதுக்கு எழுந்துவிடும் அம்மா, ஓரிரு நாள் கொஞ்சம் முன்னே பின்னே எழுந்தாலும் இந்த பாட்டி என்ன பாடு படுத்துவார்?! பேசியே கொல்வாரே!? என நினைத்த அஷ்டா,

 

“இல்ல, நானே போட்டுக்குறேன்” என்றாள் அவரிடம்.

 

கையை ஊன்றி சட்டென எழுந்தவர், “நானே போட்டுதரேன்! நீ துவைக்க வேண்டிய துணி இருந்தா கொண்டு போய் பின்கட்டுல மட்டும் போட்டுடு! சரியா?” என சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றார்.

 

‘எல்லாம் ஆரம்பத்துல இனிப்பாங்க போல’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அழுக்குத்துணியை எடுத்து வர சென்றாள்.

 

பலர் சுவிங்கம் போல ஆரம்பத்தில் மட்டுமே இனிப்பாய் இருப்பர்; ஆனால், விஜயா, வீரா போன்ற சிலர் கரும்பை போல; அடி வரை சென்றாலும் தித்திப்பு குறையாது.

கரும்பின் அருமையை அவள் உணரும் காலம் பக்கமே!!!

 

திருமணம் முடிந்த பின் இருநாட்களாய் உடுத்திருந்த அவள் உடுப்புகள் துவைக்கப்படாமல் இருக்க, அதை அள்ளிக்கொண்டு வெளியே வந்தாள் அஷ்டா.

 

“இந்தாடாமா!” என ‘மைலோ’வை நீட்டிய விஜயா, “பின்வாசல்ல உட்காந்து பொறுமையா குடி” என்றார்.

 

‘ம்ம்ம்’ என தலையாட்டினாலும், “இதை ஏன் அங்க போய் குடிக்கணும்?” என யோசித்துக்கொண்டே போனவளுக்கு, சலவைக்கல்லில் போர்வையை போட்டு, ‘தொம்! தொம்!’ என அடித்துக்கொண்டிருந்த வீரா தெரிய, அப்படியே நின்றுவிட்டாள்.

 

தன் கையில் இருந்த துணியையும் அந்த சலவை கல்லையும் பார்த்தவள், “கடவுளே!? இந்த கல்லுலையா நான் துவைக்கணும்?” என ரத்தக்கண்ணீர் வடிக்க ஆரம்பித்த நேரம் அவளை அங்கே கண்ட வீரா,

 

“அட, வாங்க வாங்க! வெல்கம் டு வாசிங் ஏரியா” என கிண்டலாய் வரவேற்றான்.

 

சலிப்புடன் சென்றவள், “இதை எங்க வைக்கணும்?” என்றாள் துணியை அவனிடம் காட்டி, முக சுளிப்புடன்.

 

“கிட்சன்’ல வைங்க” என்றான் தீவிர குரலில்.

 

“எதே?” 

 

“பின்ன என்னங்க? துணி துவைச்சுட்டு இருக்குறதை பார்த்துட்டும் இதை எங்க போடுறதுன்னு கேட்டா என்ன சொல்றது!?” என அவன் மென்னகை செய்ய, உம்’மென்று நின்றிருந்தாள் அவள்.

 

அவள் முகத்தூக்கலை கூட ரசித்தவன், அவள் கையில் இருந்த துணிகளை வாங்கி அங்கிருந்த சோப்பு நீரில் ஊற வைத்தான்.

 

மறுகையில் இருந்த மைலோவை இருகைகளாலும் பிடித்து மிடறு மிடறாய் குடிக்க ஆரம்பித்தாள். அவள் நின்றுக்கொண்டே குடிக்கவே, “அங்கே இருக்க பெஞ்ச்’ல உட்காந்து குடிங்க” என்றான்.

 

அவன் காட்டிய இடத்தில் அமர்ந்தவள், சுற்றிலும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டே குடிக்க, இவனும் இவளை வேடிக்கைப்பார்த்துக்கொண்டே துவைத்துக்கொண்டிருந்தான்.

 

நல்ல விஸ்தாரமான இடம்… பின்கட்டில் மட்டுமே நான்கு ஒன் பி.ஹெச்.கே வீடுகள் கட்டலாம். அத்தனை பெரிய இடம் சும்மா கிடக்கிறதே!?

 

இந்த எண்ணம் மூளைக்குள் ஓட, “நீங்க நிஜமாவே மூணு லட்சம் சம்பாதிக்குறீங்களா?” என்றாள் இவள் எந்தவித முகாந்திரமும் இன்றி!

 

துவைத்ததை அலசிக்கொண்டிருந்தவனுக்கு சரியாய் கேட்கவில்லை.

 

“என்ன கேட்டீங்க?”

 

மறுபடியும் கேட்க ஒருமாதிரி இருக்க, “இல்ல… ஒண்ணுமில்லை” என்றாள். அவன் விடாமல் அவளை சொல்லசொல்லி ஊக்க,

 

“இல்ல… நீங்க நிஜமாவே மூணு லட்சம் சம்பாதிக்குறீங்களான்னு……..?”

முன் கேட்டதையே மீண்டும் கேட்டாள் அஷ்டா.

 

கையில் இருந்த துணியை குண்டானில் போட்டுவிட்டு இடுப்பில் கைவைத்து முறைத்தபடி நின்றான் வீரா.

 

முட்டிக்கு மேல் இருந்த ‘தொழ-தொழ’ ஷார்ட்ஸ்! கையில்லாத ஒரு வெண்ணிற பனியன்!

 

இத்தனை நேரம் மாங்குமாங்கென வேலை செய்ததாலும், குனிந்து நிமிர்ந்து அலசியதாலும் உடலில் ஆங்காங்கே நீர்த்துளிகள்.

 

மிக சாதாரண தோற்றம்!

 

ஏனோ அவள் கண்களுக்கு ரம்யமாய் பட்டது.

 

அவள் எதுவும் பேசாது இருக்க, தன் முறைப்பை விட்டவன், “உங்களுக்கு மட்டும் எப்டிங்க டிசைன் டிசைனா சந்தேகம் வருது?” என்றான்.

 

அவன் கேள்வியில் கலைந்தவள், “ஹான்? இல்ல இல்ல… தோனுச்சு” என்றாள் முணுமுணுப்பாய்.

 

“தோணுச்சுன்னா அதுக்கு காரணம் இருக்கணுமே!? அதையும் சொல்லுங்க” என்றான் விட்ட வேலையை தொடர்ந்தபடி.

 

“இல்ல… இவ்ளோ பெரிய இடமா இருக்கு! நல்ல பெரிய பங்களாவே கட்டலாம்! அதை விட்டு இடத்தை சும்மா போட்டுருக்கீங்களே?”

 

அவள் அப்படி சொன்னதும், புருவம் சுருங்க அவர்கள் இருக்கும் இடத்தை சுற்றி பார்த்தான் வீரா. அவன் கண்களுக்கு அவ்விடம் சும்மா இருப்பதை போன்று தோன்றவேயில்லை.

 

“இந்த இடம் எங்கங்க சும்மா இருக்கு? நல்லா கண்ணை விரிச்சு பாருங்க! எத்தனை மரம், செடி, கொடி எல்லாம் இருக்கு! இதை போய் சும்மா கிடக்குற இடம்ன்னு சொல்றீங்க?” என்றான் மெல்லிய ஆதங்கத்துடன்.

 

இத்தனை நேரமும் அதைத்தானே குப்பை கூளமென எண்ணிப்பார்த்தாள்.

 

“இந்த மரம் எல்லாம் எதுக்கு தேவையில்லாம இடத்தை அடைச்சுக்கிட்டு? இதெல்லாம் வெட்டிட்டு, இந்த வீட்டை பெருசுப்படுத்தலாம்ல?”

 

‘இடம் அடைக்குதா?’ என திகைத்தவன், வேலையை விட்டுவிட்டு அவளிடம் வந்தான்.

 

“என்னங்க இவ்ளோ ஈசியா இடம் அடைக்குதுன்னு சொல்லிட்டீங்க? இப்போ இந்த மொத்த இடத்துலையும் வீட்டை கட்டி நம்ம என்ன செய்யுறது? இருக்கிறது மூணே பேரு! நமக்கு இந்த வீடு போதாதா?”

 

“நல்ல பெரிய ஹால், மூணு பேரு நின்னு தாராளமா வேலை செய்யுற மாதிரி கிட்சன், ரெண்டு பெரிய பெட்ரூம் வித் அட்டாச்ட் பாத்ரூம்… என்ன வேணும் இதை விட?”

 

அஷ்டா திணறினாள் என்ன சொல்வதென.

 

“உங்களுக்கு எதாவது சௌகர்ய குறைச்சல் இருந்தா தயங்காம என்கிட்ட சொல்லுங்க! நான் என்ன தேவையோ அதை செஞ்சு தரேன்! இன்னும் வீடு பெருசா வேணுன்னா சொல்லுங்க… மேல இழுத்து கட்டுவோம்! மாடி மொத்தமும் உங்களுக்கு குடுத்துடுறேன்! அம்மா கீழ இருந்துக்கட்டும்! என்ன சொல்றீங்க?”

 

அவன் பாட்டிற்கு சொல்லிக்கொண்டே போக, “ஐயையோ, எனக்கு இந்த வீடே போதுங்க!” என்றாள் அவசரமாய்.

 

“அப்பறம் ஏங்க இதெல்லாம் இடம் அடைக்குதுன்னு சொன்னீங்க?” என்றான். அவள் எளிதில் சொன்னதை அவன் மனம் எளிதில் ஜீரணிக்கவில்லை.

 

அங்கிருக்கும் ஒவ்வொன்றும் அவன் பார்த்து பார்த்து வளர்த்ததாயிற்றே!

 

“இல்ல… இதெல்லாம் எடுத்துட்டா பெருசா வீடு கட்டி வாடகைக்கு விடலாம்ல? அதான்” தயங்கி தயங்கி அவள் சொல்ல,

 

“ஓ! எம்.பி.ஏ மூளைல? அதான் சட்டுன்னு காசு கணக்கு பண்றீங்க?” என சிரித்த வீரா, அலசி முடித்த துணிகளை உதறி கொடியில் போட ஆரம்பிக்க,

 

“அப்டியெல்லாம் ஒன்னும் இல்ல! சும்மா ஐடியா சொன்னேன், அவ்ளோதான்” என்றாள்.

 

“ஹும்ம்…!” என்றவன், “உங்க வீட்டுல சமையலுக்கு காய்கறி வேணும்ன்னா என்ன செய்வீங்க?” என்றான்.

 

“கடைல வாங்குவோம்!”

 

“ஏன் கடைல வாங்குறீங்க?”

 

“ஏன் கடைல வாங்குறீங்கன்னா என்ன சொல்றது? எங்ககிட்ட இல்ல, அதான் வாங்குறோம்! சமையலுக்கு வேணும்ல?”

 

“ஆனா, நாங்க வாங்க மாட்டோம்!” என்ற வீரா,

 

“இந்த பக்கம் பாருங்க! கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, கருவேற்பிலை, பச்சைமிளகாய் செடி! அந்த பக்கம், அவரைக்காய், சுண்டைக்காய்! சைடுல, பூசணி, புடலங்காய் கொடி. முருங்கைமரம், கொய்யா மரம், பப்பாளி மரம், மாதுளை மரம்… ஒரு தென்னைமரம் கூட இருக்கு! அதுபோக நாலு வாழைமரம் வச்சுருக்கோம்! மாமரம் இன்னும் காய்க்க ஆரம்பிக்கல! இன்னும் ரெண்டு வருஷத்துல பழம் பிடிச்சுடும்!”

 

அவன் கரம் நீட்டி ஒவ்வொன்றாய் காட்ட காட்ட, பார்த்துக்கொண்டே வந்தாள் அஷ்டா.

 

“தினமும் சமையலுக்கு கடைக்காரர்க்கிட்ட போய் காசு குடுத்து காய்கறி வாங்கிட்டு வந்து சமைக்குறதை விட, இப்படி நம்ம தோட்டத்துல, நம்ம வளர்த்த செடில இருந்து பறிச்சு, அதை சமைக்குறப்போ கூடுதல் ருசியா இருக்கும்ங்க! சாப்பிடுறப்போ ஒரு கருவேற்பிலையை தூக்கிபோடக்கூட மனசு வராது!” என்றான்.

 

‘காலைலேயே இந்த பிரசங்கம் எனக்கு தேவைதான்’ என நினைத்துக்கொண்டாள்.

 

“இதெல்லாம் நான் இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து ஆசையாசையா வளர்ததுங்க” என்றான்.

 

“செடி, கொடி மட்டும் தானா? இந்த ஆடு, மாடு, கோழி! இதெல்லாம் இல்லையா?” அவள் என்னவோ பரிகாசமாக தான் கேட்டாள்.

 

அவனோ, “நான் காலேஜ் படிக்குற வரைக்கும் மாடு வச்சுருந்தோங்க! வேலைக்கு போன பிறகு தான் அதை பராமரிக்க எனக்கு நேரம் பத்தல! அம்மாக்கும் கஷ்டம்! அதான் இந்த தெருல இருக்க ஒரு அக்காக்கிட்ட ஓட்டி விட்டுட்டோம்!” என சொன்னதும்,

 

‘இதென்ன எல்லாத்துக்கும் ஒரு கதை சொல்றாரு?!’ என உதடு பிதுக்கினாள் அவள்.

 

“நீங்க வேணா ஓகே’ன்னா சொல்லுங்க, இப்போக்கூட ரெண்டு கறவை மாடு விலைக்கு வருது” என வேண்டுமென்றே அவளை சீண்ட, அதை உண்மை என எண்ணியவள்,

 

“அய்யயோ, நான் மாட்டேன்; நான் மாட்டேன்” என பதறினாள்.

 

அவள் பதறுவதை கண்டு சிரித்தவன், “என்னங்க நீங்க? உங்களை நம்பி ஒரு மாட்டுப்பண்ணை ஆரம்பிக்கலாம்ன்னு இருந்தேங்க! இப்படி கடைசி நிமிஷத்துல ‘பேக்’ அடிக்குறீங்களே?” என்றான் போலி வருத்தத்துடன்.

 

அதைக்கேட்டு இன்னமும் கலவரமாகினாள் அஷ்டா.

 

‘எங்கே விட்டால், என்னை சாணி அள்ள வச்சுடுவாரு போலருக்கே! அஷ்டா உஷாராகிடுடி!’ என தனக்குள் சொல்லிக்கொண்டவள்,

 

“நான் வேலைக்கு போக மாட்டேன்! போகவும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி தானே நான் மேரேஜ் பண்ணேன்! இப்படி மூணே நாள்ல வார்த்தை தவறுறீங்களே!? இதெல்லாம் நியாயமா?” என்றாள் மூக்கை உறிஞ்சி.

 

அவளை மேலும் மேலும் சீண்ட ஆசை வந்த போதிலும், ‘ஐயோ பாவம்’ என அவன் நினைக்க, அதே நேரம்,

 

“டேய் கண்ணா! சின்ன வெங்காயம் ஒரு கிலோ வாங்கிருக்கேன்டா… ஒரு காலிபிளவர் வாங்குனேன்! வேற எதாவது வாங்கட்டுமா?” என கேட்டுக்கொண்டே பின்கட்டுக்கு வந்தார் விஜயவேணி.

 

“வேற என்ன? கொஞ்சம் பீன்ஸ், கேரெட் இருந்தா வாங்குங்க… போதும்” என்றான்.

 

உடனே அங்கிருந்து அவர் செல்ல, நமட்டு சிரிப்புடன் அவனை அலட்சியமாய் பார்த்துக்கொண்டிருந்தாள் அஷ்டா.

 

அவள் பார்வையை கண்டவன், “என்னங்க ஒரு மார்கமா பார்க்குறீங்க?” என்றான்.

 

“நீங்க காய்கறி வேணுன்னா என்ன செய்வீங்க? கடைல தானே வாங்குவீங்க? ஆனா, நாங்க… கடைல வாங்கமாட்டோம்” என்று ஏற்ற இறக்கங்களோடு அவன் பேசியது போலவே சொல்லிக்காட்டியவள்,

 

“இல்ல…????” என தலைசரித்து எள்ளல் சிரிப்பு சிரிக்க,

 

அசட்டு சிரிப்பை ஒன்றை உதிர்த்தவன், “ஹிஹி! வீட்டுல இல்லாதத மட்டும் கடைல வாங்கிப்போம்” என்றான்.

 

“ஓ………” என நக்கலாய் சிரித்தாள் அவள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!