Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kaathal Kaanaang Kuruvigal

காதல் கானாங்குருவிகள்..! – 4

காதல் 4:

இங்கே அவள் தூக்கத்தைத் தொலைத்திருக்க, அங்கே ஈஸ்வரனும் தூங்காமல் யோசித்துக் கொண்டு தான் இருந்தான். மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்வதைப் போல் இருந்தது. பாண்டியன் அவனிடம் சொன்ன விஷயத்தை அவனால் நம்பவும் முடியவில்லை. அதே நேரம் நம்பாமலும் இருக்க முடியவில்லை. இப்படியெல்லாம் நடக்குமா? என்ற அளவிற்கு அவன் யோசிக்கவில்லை. ஏனென்றால், இந்த காலத்தில் என்ன நடக்கும், எப்படி நடக்கும், எப்போது நடக்கும் என்று யாருக்கும் தெரியாதே. ஈஸ்வரனும் அதே நிலையைச் சேர்ந்தவன் தான்.

அவனைப் பார்க்க வந்த பாண்டியன், அவனிடம் சொன்ன விஷயத்தை தான் இப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறான். இடையில் மகா பேசிய விதமும் அவனின் கோபத்தைத் தூண்டிவிட, பாண்டியனின் பேச்சில் இளகியிருந்த அவனது மனம், மகாவின் பேச்சில் மீண்டும் சுருண்டு கொண்டது.

“நீ இப்ப என்ன முடிவு எடுத்திருக்க ஈஸ்வரா..?” என்று அவனின் மனம் அவனையே கேள்வி கேட்க,



Advertisement

“இதுல பதில் சொல்ல என்ன இருக்கு? பாண்டியன் மாமாவைப் பார்க்க பாவமா இருந்தாலும், அந்த பொண்ணு மகாவுக்கும் எனக்கும் சுத்தமா செட்டாகாது. இன்னைக்கு அவருக்காக தலையை ஆட்டிட்டு சம்மதம் சொன்னா, எதிர்காலத்துல அவ சொல்றதுக்கு எல்லாம் தலையை ஆட்டுற நிலைமை வந்துடும்..” என்றான் மனதிடம்.

“இது தான் காரணம்ன்னு நீ சொன்னாலும் அவங்க நம்ப மாட்டாங்க. அவர் செஞ்சதுக்கு, பதிலுக்கு நீயும் செய்றதா தான் அவர் நினைப்பார்.” என்றது மனம்.

“அவர் எப்படி வேணும்ன்னாலும் நினைச்சுக்கட்டும். அதைப் பத்தியெல்லாம் எனக்கு கவலையில்லை. அவசர அவசரமா இப்படி ஒரு முடிவுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்..” என்று மனதிற்குள் தீர்மானமாய் சொல்லிக் கொண்டான் ஈஸ்வரன்.

Advertisement

மகா பத்ராவிற்கு அன்றைக்கு மிகவும் சோதனையான நாளாக அமைந்தது. காலையிலேயே பரபரப்புடன் எதையோ தேடிக் கொண்டிருந்தார் பாண்டியன்.

Advertisement

சில பத்திரங்களை அவர் தேடி எடுத்துக் கொண்டிருக்க,

“என்னப்பா ஆச்சு உங்களுக்கு..? எதுக்கு இப்படி பதட்டமா இருக்கீங்க..?” என்றாள் மகா.

“நம்ம நிலத்து பத்திரத்தைத் தேடிட்டு இருக்கேன் மகா..” என்றவர்,

Advertisement

“கமலா, அதைக் கொஞ்சம் எடுத்துக் கொடு..” என்றவருக்கு ஆயாசமாய் வந்தது.

“எதுக்குப்பா நம்ம நிலத்து பத்திரம்..?” என்றாள் மகா.

“விக்கிறதுக்கு பேசியிருக்கேன் மகா. அதான் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து வச்சுட்டா, பின்னாடி பிரச்சனை இருக்காதுல்ல..” என்றார் அவர்.

“நிலத்தை விக்கிற அளவுக்கு என்ன பிரச்சனைப்பா..? அதுவும் இவ்வளவு அவசரமா விக்கிற அளவுக்கு..?” என்றாள் மகா.

“உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியலை மகா. இந்த மூணு வருஷமா எந்த விளைச்சலும் இல்லை. வாங்குன கடன் எல்லாம் வட்டிமேல வட்டி ஏறிக் கிடக்கு. இதுல அக்கா கல்யாணத்துக்கு வாங்குன கடன் வேற இருக்கு. இதுக்கெல்லாம் ஒரே வழி எல்லாத்தையும் விக்கிறது தான்..” என்றார்.

“இல்லப்பா, எனக்கு என்னவோ இடிக்குது. நம்ம அந்த அளவுக்கு கஷ்ட்டத்துல இருந்தது இல்லை. எங்கையோ என்னவோ இருக்கு. ஆனா, நீங்க அதை மறைக்கிற மாதிரி இருக்கு. இதே மூணு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லா செழிப்பா இருந்த வீடு தான் நம்ம வீடு.  இப்படி திடீர்ன்னு எல்லாத்தையும் விக்கிற அளவுக்கு என்ன நடந்தது..?” என்றாள்.

“அந்த கஷ்ட்டமெல்லாம் உனக்கெதுக்கு மகா. நிலத்தை விக்கிற காசுலயே, உன்னோட கல்யாணத்தையும் முடிச்சுட்டேன்னா எனக்கு நிம்மதியா இருக்கும்..! அடுத்த வீட்டுக்கு வாழப் போற பொண்ணு மேல குடும்ப பாரத்தை ஏத்துறது சரியா வராதுமா..” என்றவர், அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ஆனால், மகாவிற்கு எதோ இருப்பதாய் பட்டது. பாண்டியனையே யோசனையுடன் பார்த்தவாறு நின்றாள்.

எதையோ யோசித்தவள் சட்டென்று கிளம்பி அவர்கள் ஊரில் இருக்கும் அந்த பேங்கிற்கு சென்றாள்.

‘என்னோட அந்த கொஞ்ச சேவிங்ஸ், அப்பாவோட பிரச்சனை ஒன்றையாவது தீர்க்குமே..’ என்ற எண்ணம் தான் அவள் மனம் முழுவதும்.

யோசனையுடன் சென்றவள், முன்னால் இருந்தவனை கவனிக்காது, அவன் மீதே மொத்தென்று மோதினாள். பொதிமூட்டையை யாரோ மொத்தமாக தன்மேல் தள்ளி விட்டதைப் போல் உணர்ந்த ஈஸ்வரன், தடுமாறி விழாமல் நின்றான்.

“முன்னாடி ஆள் இருக்குறது தெரியலையா..? கண்ணு என்ன பிடனிலையா இருக்கு..?” என்று திட்டிக் கொண்டே திரும்பியவன், அங்கே மகாவை எதிர்பார்க்கவில்லை. அவளைப் பார்த்தவுடன் அவனின் கோபம் கூடத்தான் செய்தது.

“அறிவில்லையா உனக்கு..?” என்றான் கோபமாய்.

“ஏன்..? நீ கடன் தரப் போறியா..?” என்றாள் இடக்காய்.

“உன்கிட்ட மனுஷன் பேசுவானா..?” என்றவன், எரிச்சலுடன் முகத்தைத் திருப்பிக் கொள்ள,

“என்கிட்டே மனுஷன் பேச மாட்டான். ஆனா, உன்னை மாதிரி காட்டான் பேசுவான்..” என்றாள் அவளும் விடாமல்.

“அம்மா தாயே..ஆளைவிடு..!” என்றவன், போன வேலையில் கவனம் செலுத்தினான்.

“இவனெல்லாம் ஒரு ஆளுன்னு, இவன்கிட்ட பேசிட்டு இருக்கேன் பாரு, என்னை சொல்லணும்..” என்று தலையில் தட்டிக் கொண்டே சென்றாள்.

அவள் சேவிங்க்ஸ் என்று தனியாய் வைத்திருந்த பணத்தை முழுவதுமாக எடுத்தவள், அதை ஹேண்ட் பேக்கிற்குள் பத்திரப்படுத்தினாள்.

அவளை கண்டும் காணாதவன் போல் இருந்தவனுக்கு,

‘எதுக்கு இவ்வளவு பணத்தை எடுக்குறா..?’ என்ற எண்ணம் மனதிற்குள் வராமல் இல்லை.

வெளியேற முற்பட்டவள், என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அங்கிருந்த பேங்க் மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள். அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்த மகாவிற்கு உள்ளே செல்லும் போது இருந்த தெளிவு இப்போது இல்லை. முகத்தில் ஏதோ குழப்பம் இருந்தது. இவையெல்லாம் ஈஸ்வரனின் கண்ணில் தவறாமல் பட்டது.

“என்னாச்சு இவளுக்கு..? வீட்ல எதுவும் பிரச்சனையா..?” என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க, அவளோ சுற்றுப் புறம் உறைக்காமல் சென்று கொண்டிருந்தாள்.

“இப்படியே போறது நல்லதுக்கு இல்லையே. பணம் வேற அதிகமா எடுத்துட்டு போற மாதிரி இருக்கு..” என்று யோசித்தவன், அவள் பின்னாலேயே செல்ல, அவன் நினைத்தது சரி தான் என்பதைப் போல், அவள் ஸ்கூட்டியையும் தாண்டி சென்று கொண்டிருந்தாள்.

“ஏய்..! ஏய் மகா..!” என்று அவன் அழைத்தது கூட அவள் காதில் விழவில்லை.

வேகமாய் சென்று தன்னுடைய பைக்கை எடுத்தவன், அதை அவள் அருகில் கொண்டு நிறுத்தினான். அவன் அடித்த ஹாரன் சத்தத்தில் திடுக்கிட்டவள்,

“என்ன..?” என்றாள் புரியாமல்.

“வண்டில ஏறு. உங்க வீட்டுல விடுறேன்..” என்றான்.

“ஒன்னும் தேவையில்லை..! நானே போய்க்குவேன்..” என்றாள்.

“எப்படி..? ஸ்கூட்டியை அங்க நிறுத்திட்டா..?” என்றான் இடக்காய்.

‘ஆமால்ல, வரும் போது ஸ்கூட்டில தான வந்தோம்..” என்று யோசித்தவள்,

“நான் என்னோட வண்டியவே எடுத்துட்டு போறேன்..” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். உங்க அப்பாவை அனுப்பி எடுத்துக்கோ. இப்ப வண்டியில ஏறு..” என்றான் கொஞ்சம் வார்த்தைகளை கடித்துத் துப்பி.

மற்ற நேரத்தில் வழக்காடுபவள்,  அதிகம் பேசாமல் அவன் பின்னால் ஏறிக் கொண்டாள்.

அவனும் எதுவும் பேசவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. அவன் முகம் இறுகிப் போயிருந்தது என்றால், இவள் முகம் குழப்பத்தில் இருந்தது.

அவள் வீட்டின் முன்பு அவன் வண்டியை நிறுத்த, வண்டி சத்தம் கேட்டு வெளியே வந்தார் பாண்டியன்.

மகா, ஈஸ்வரனுடன் வந்து இறங்கியதைப் பார்த்தவருக்கு மீண்டும் படபடவென்று வந்து விட்டது.

“என்னாச்சு மகா..? உன்னோட வண்டி எங்க..? ஈஸ்வரன் கூட வந்திருக்க..?” என்று அவர் வரிசையாய் கேட்க, ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவள், அவரின் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றாள்.

“மாமா, அவ வண்டி பேங்க் முன்னாடி நிக்குது. அப்பறம் போய் எடுத்துட்டு வந்துடுங்க. பணம் கொஞ்சம் அதிகமா எடுத்த மாதிரி இருந்தது. அதான் நானே கூட்டிட்டு வந்தேன். வேற ஒண்ணுமில்லை..” என்றவன் கிளம்பப் போக,

“உள்ள வா ஈஸ்வரா..” என்றார் பாண்டியன்.

‘என் வீட்டுக்குள்ள வர்றதுக்கு உனக்கென்ன தகுதியிருக்கு..?’ என்ற பாண்டியனின் வார்த்தைகள் அவனை சுழற்றியடிக்க,

“இருக்கட்டும் மாமா..! நான் வரேன்..” என்றவன், அடுத்த நிமிடம் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

“என்ன பணம் மகா..? எதுக்கு எடுத்து..? ஏது அந்த பணம்..?” என்றார் பாண்டியன்.

“அப்பா, என்னோட சேவிங்ஸ் அமௌண்ட் தான்ப்பா..!” என்றவள், மேற்கொண்டு பேசாமல் உள்ளே செல்ல,

“இதை எதுக்கும்மா இப்ப எடுத்துட்டு வந்திருக்க..? கல்யாண செலவுக்கு ஆகும்ன்னு தான் இதைப் பத்தி கேட்காம இருந்தேன்.” என்றார்.

“நான் தான் கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்றேனே..” என்றாள்.

“அது எல்லாரும் சொல்றது தான் மகா. அதுக்காக நாங்க எங்க கடமையை செய்யாம இருக்க முடியுமா..?” என்ற பாண்டியனின் குரலில் என்ன இருந்தது? என்று தெரியவில்லை.

“இருக்குற வீட்டை அடமானம் வச்சு பேங்க்ல பணம் வாங்குற அளவுக்கு அப்படி என்னப்பா கஷ்ட்டம் நமக்கு..?” என்றாள் மகா. அவளைப் பொறுத்தவரை இது அதிர்ச்சியான விஷயம் தான். ஏனென்றால் அவளுடைய வீடு அந்த அளவிற்கு ஏழ்மை நிலையிலெல்லாம் இல்லை. சொல்லப் போனால், ஈஸ்வரனின் வீட்டை விட  செழிப்பான நிலைமையில் இருந்தவர்கள் தான்.

“நீ சின்ன பொண்ணும்மா..! உனக்கு புரியாது” என்றார் பாண்டியன்.

“இன்னும் எத்தனை காலத்துக்கு நான் சின்னப் பொண்ணுப்பா. நம்ம வீட்ல எனக்குத் தெரியாம எதோ ஒரு விஷயம் நடந்திருக்கு. அது என்னன்னு தெரியலை. அக்கா வாழ்க்கையும் இப்படி ஆகிடுச்சு. அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கான்னு கூட எனக்குத் தெரியலை. ஆனா ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது, உங்க மனசுக்குள்ள என்னவோ இருக்கு..? “ என்றாள் மகா.

“அதெல்லாம் ஒன்னுமில்லையே மகா..” என்று பாண்டியன் சமாளிக்க,

“இல்லைப்பா… நிவேதா இறந்து ஒரு மாசம் தான் ஆகியிருக்கு. அதுக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணனும்ன்னு சொல்றிங்க. அதுவும் யாருக்கு? உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காத ஈஸ்வரனோட..? இதெல்லாம் எனக்கு சந்தோஷத்துக்கு பதிலா, சந்தேகத்தை தான் குடுக்குதுப்பா..” என்றாள் மகா.

“சில விஷயங்களை இப்போ நான் சொல்ற நிலைமையில் இல்லை மகா. அது மட்டும் தான் இப்போதைக்கு சொல்ல முடியும். நீ, ஈஸ்வரனை கல்யாணம் பண்ணிகிட்டா மட்டும் தான் எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்..” என்றார்.

“இப்படியெல்லாம் செய்ய சொல்லி, அந்த ஈஸ்வரன் உங்களை மிரட்டுனானாப்பா..?” என்றாள் மகா கோபமாக.

‘ஏம்மா, உங்க குடும்ப பிரச்னைக்கு அவன் தான் ஊறுகாயா..?’ என்ற மனசாட்சியின் கேள்வியை தள்ளி வைத்தவள், பாண்டியனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க,

“என்ன மகா இதெல்லாம்..? அவன்,இவன்னு சர்வ சாதரணமா பேசிட்டு இருக்க..? ஊருக்குள்ள அவனுக்கு எவ்வளவு மதிப்பு,மரியாதை இருக்கு தெரியுமா..? மரியாதையா பேசிப் பழகு..” என்றார்.

“சரிப்பா..” என்ற மகா, அவளின் கேள்விக்கு பதிலை எதிர்நோக்கி காத்திருக்க, பாண்டியனின் வாயில் இருந்து அவளால் ஒரு வார்த்தையையும் கறக்க முடியவில்லை.

“இந்த அப்பாவுக்காக எதையாவது செய்யனும்ன்னு நினைச்சா, ஈஸ்வரனை கல்யாணம் பண்ணிக்கோ மகா..” என்பது மட்டும் தான் அவரின் வார்த்தையாக இருந்தது.

பெண்களின் எதிர்ப்பு, பல குடும்பங்களில் எதிர்பார்ப்பாய் மட்டுமே போய் விடுகிறது. மெத்தப் படித்த மேதாவியாய் இருந்தாலும், அவள் பெண்ணாய் இருந்து விட்டால், சில முடிவுகளை, நமக்கு நலம் என்ற பெயரில் சில நம் நலன் விரும்பிகள் எடுத்து விடுகிறார்கள்.

அங்கே ராக்கு, ஈஸ்வரனின் மனதை கரைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார். வசுந்தராவும் அதற்கு தகுந்த மாதிரி பேசிக் கொண்டிருக்க,

“இப்ப நான் என்ன தான் பண்ணனும்ன்னு சொல்றிங்க..?” என்றான் கோபமாக.

“நல்லதுக்கு தான் சொல்றேன் ஈஸ்வரா. அந்த பிள்ளையவே கட்டிக்க..” என்றார் வசுந்தரா.

“உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யிங்க. ஏற்கனவே என்னை பேசுறது பத்தாதுன்னு, இப்போ இந்த கல்யாண விஷயமும் சேர்ந்துகட்டும். இதுல ஏதோ ஒரு வில்லங்கம் இருக்குன்னு மட்டும் தெளிவா தெரியுது…” என்றவன் அதற்கு பிறகு ஒன்றும் சொல்லவில்லை. அதையே அவன் சம்மதமாக அவர்கள் எடுத்துக் கொள்ள, பரபரப்பே இல்லாமல் ஏற்பாடானது பிரகதீஸ்வரன்-மகா பத்ரா திருமண ஏற்பாடு.

ஏற்கனவே எரிச்சலில் இருந்தவனின் கோபத்தில் எண்ணெயை ஊற்றுவது போல இருந்தது, மகாவின் அழைப்பு.

“ஹலோ..!” என்றான் ஈஸ்வரன்.

“நான் மகா..” என்றாள் மிடுக்காய்.

“இருந்துட்டு போ..! அதுக்கென்ன..?” என்றான் எரிச்சலுடன்.

“எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகனும்..?” என்றாள்.

“என்ன விஷயம்..?” என்றான்.

“நீ எங்கப்பாவை என்ன சொல்லி மிரட்டுன? நீ அவரை என்னமோ பண்ணி வச்சிருக்க. அதான் அவரு இப்படி மாறிட்டாரு..” என்று கோபமாக பேச,

“என்ன சொன்ன..? உங்கப்பாவை நான் மிரட்டினேனா..?” என்றான் கோபமும், அதிர்ச்சியும் கலந்த குரலில்.

“ஆமா, உன்னைக் கண்டாலே ஆகாத எங்கப்பா, இன்னைக்கு என்னையவே உனக்கு கல்யாணம் பண்ணித் தர்ற அளவுக்கு வந்திருக்காருன்னா, அதுக்கு யாரு காரணம்..?” என்றாள்.

“ஆமா, இந்தம்மா பெரிய மைசூர் பேலஸ் மகாராணி. இவங்களை கல்யாணம் பண்ண, இவங்க அப்பாவை நாங்க மிரட்டி வச்சிருக்கோம். உன் வாய் தாங்க முடியாம உங்கப்பா சீக்கிரம் தள்ளி விடனும்ன்னு, என் தலையில கட்டி விடுறாரோ என்னவோ..?” என்றான் ஈஸ்வரனும் இடக்காக.

“நீ ரொம்ப பேசுற..?” என்றாள் மகா, கோபமாக.

“உனக்கு பேசவே தெரியாது பாரு. இப்ப எதுக்கு போன் பண்ண? அதை மட்டும் சொல்லிட்டு வை..” என்றான்.

“இங்க பார்..! ஒரு பட்டிக்காட்டானை கல்யாணம் பண்ணனும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. எங்கப்பா சொன்னாருன்ற ஒரு வார்த்தைக்காகத் தான் பேசாம இருக்கேன். கல்யாணத்துக்கு அப்பறம், உன் இஷ்ட்டப்படி என்னை ஆட்டி வைக்கலாம்ன்னு நினைக்காத. கல்யாணத்துக்கு அப்பறமும், நான் வேலைக்கு போவேன். நீ தடுக்கக் கூடாது..இதை சொல்லத் தான் கூப்பிட்டேன்..” என்றாள்.

“அதுக்கு எதுக்கு கல்யாணம்..? சிம்பிளா நீ உங்க வீட்லயே இருந்துக்க. நானும் இப்பவே உங்கப்பாவுக்கு சொல்லிடுறேன்..” என்றான் இடக்காய்.

“என்ன கிண்டலா..?”

“நானெல்லாம் கிண்டல் பண்ற அளவுக்கு நீங்க சின்ன ஆளா என்ன..? மேடம் எவ்வளவு பெரிய ஆள்..? நாங்கள்லாம் படிப்பு வாசனையே அறியாதவங்க பாருங்க.. மேடம் மெத்த படிச்ச மேதாவி..” என்றான் ஈஸ்வரன்.

“நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்பறம் எதுவும் சொல்லலைன்னு சொல்லிடக் கூடாது..” என்றாள்.

“இப்படி ஒரு அக்ரிமென்ட் பொண்டாட்டி எனக்குத் தேவையே இல்லை. அப்படி கஷ்ட்டப்பட்டு நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டாம்.  என்னை வேண்டாம்ன்னு சொல்ற எல்லா உரிமையும் உனக்கு இருக்கு. ஆனா, அதை உங்கப்பாகிட்ட சொல்ற உரிமை தான் உனக்கு இருக்கு. என்கிட்டே இல்லை, புரியுதா. எனக்கு இப்படி வளவளன்னு பேசுறவங்களைக் கண்டாலே ஆகாது..” என்றான்.

“எங்க  அக்கா மாதிரி இருந்தா பிடிக்குமா..?” என்று வாய் போன போக்கில் அவள் வார்த்தையை விட,

“அதை நீ உங்க அக்கா புருஷன் கிட்ட தான் கேட்கணும். என்கிட்டே இல்ல. வை முதல்ல போனை..” என்று கட் பண்ணியவனின் முகம் அப்படியே ஜிவு ஜிவுவென்று சிவந்திருந்தது.

“என்ன ஈஸ்வரா..? யாருகிட்ட இப்படி கோபமா பேசுற..?” என்றார் வசுந்தரா.

“எல்லாம் நீங்க பார்த்த பொண்ணு தான்..” என்றான்.

“அதுக்கு ஏன் இப்படி கோபமா பேசுற ஈஸ்வரா..! அந்த புள்ளை பயந்துட போகுது..” என்ற வசுந்தராவைப் பார்த்தவனுக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

“அம்மா, அனிதா விஷயம் எதுவும் நீங்க சொல்லலையே..?” என்றான்.

“நான் எதுவும் சொல்லலை ஈஸ்வரா.  அவங்களும் கேட்கவுமில்லை..” என்றார்.

“மஞ்சரி அக்கா இன்னமும் சமாதானம் ஆகலையாம்மா..? வீட்டுப் பக்கம் ஆள் வர்றதேயில்லை..” என்றான் ஈஸ்வரன்.

“அவ கோபம் எத்தனை நாளைக்கு ஈஸ்வரா..? இங்க வராம எங்க போய்ட போறா..? அவளே வந்து நிற்ப்பா பாரு..” என்றார் வசுந்தரா.

அவர் சொல்வதைப் போல, மஞ்சரிக்கு அப்படியெல்லாம் ரொம்ப நாள் வீம்பாக இருக்க முடியாது. அதிலும் பிரகதீஸ்வரனின் விஷயத்தில்  சொல்லவே வேண்டாம்.

இரண்டு வீட்டிலும் துக்கம் நடந்து கொஞ்ச நாட்களே ஆன நிலையில், திருமணத்தை எளிமையாக கோவிலில் வைப்பது என்று முடிவு செய்யப் பட்டது.

திருமணத்திற்கு முதல் நாள், சில பத்திரங்களுடன் ஈஸ்வரனைப் பார்க்க வந்தார் பாண்டியன்.

அவர் கையில் இருந்த பத்திரங்களைப் பார்த்த ஈஸ்வரனுக்கு ஒன்றும் புரியாத நிலை.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!