Skip to content
Post Views: 5,750
மீரா வீட்டுக்குச் செல்லும் போது மணி எழு. இப்போதும் அவளுக்கு வீட்டுக்கு செல்ல இஷ்டம் இல்லை. ஆனால் இதற்கு மேல் அவளால் வெளியே இருக்க முடியாது.அதனால் வேறு வழி இல்லாமல் தான் சென்றாள் ஏன்?
அர்ஜுன் வீட்டிற்குப் பரிசு கோப்பையுடன் வந்ததும், அவனது அம்மா வித்யா அவனுக்குத் திருஷ்டி கழித்தே உள்ளே செல்ல விட்டார்.
“அம்மா, உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலை. உங்க பையன் காலேஜ்ல விளையாடி கப் வாங்கினதுக்கு, எதோ IPL ல விளையாடி ஜெயிச்ச மாதிரி பில்ட்அப் குடுக்றீங்க. இது ரொம்ப த்ரீ மச். “அர்ஜுனின் தங்கை ஆராதனா பொய்யாகக் கோபிக்க….
“நீ சும்மா இரு. உனக்கு ஒன்னும் தெரியாது. இன்னைக்கு எல்லார் கண்ணும், அவன் மேல தான் இருந்திருக்கும், அதனால தான் த்ருஷ்டி கழிச்சேன்.” என்றார் வித்யா.
“அம்மா, இவளுக்குப் பொறாமை மா…. அதுதான் இப்படிச் சொல்றா.” என்ற அர்ஜுன் தொடர்ந்து,
“நீ இதுவரை விளையாடி ஜெயிச்சு ஒரு டீ கப்பாவது வாங்கி இருக்கியா ஆரு, நீ எல்லாம் இதைப் பத்தி பேச கூடாது.” அவன் தங்கையை வம்பு இழுக்க.
“நான் எதுக்குப் பிரதர் வாங்கணும். அதுதான் எனக்கும் நம்ம அண்ணனுக்கும் சேர்த்து நீங்க கப்பா வாங்கி வீடு முழுக்கக் குமிச்சி வச்சுருக்கீங்களே பத்தாதா? நாங்க வேற வாங்கனுமா….”
“இன்னைக்கு உங்க காலேஜ் பொண்ணுங்க எல்லாம் உங்களை ரொம்ப உற்சாகபடுத்தி இருப்பாங்களே, ஒரே மஜாவா?” ஆராதனா கண் சிமிட்டி கேட்க….
அர்ஜுனுக்கு மீரா சொன்ன “அர்ஜுன் அவுட்” என்றது நியாபகம் வர… அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“ஒரு அண்ணன்காரன்கிட்ட பேசுற மாதிரியா பேசுற? ரொம்ப வாய் உனக்கு. அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது.” என்று வித்யா தன் மகளுடன் சண்டைக்குச் செல்ல…
“பாருங்க ஒரு நாள் லவ் பண்றேன்னு வந்து நிற்க போறான். அப்ப தெரியும் உங்களுக்கு.” என்றாள் ஆராதனா.
வித்யாவுக்கு மேலும் கோபம் வர “பாருடா அர்ஜுன் எப்படிச் சொல்றான்னு.” என்றார்.
இதற்கு முன்பு ஆராதனா இப்படிச் சொல்லும் போது எல்லாம் “நான் எங்க அம்மா சொல்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேன்.” என்று சொல்லும் அர்ஜுன், இன்று “அவ சும்மா விளையாட்டுக்கு சொல்றா மா விடுங்க.” என்றவன், அவன் அறைக்குள் செல்ல… அவனை வித்யாவும், ஆராதனாவும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
“அம்மா, வாழ்த்துக்கள். உங்களுக்குச் சீக்கிரமா சின்ன மருமகள் வந்திடுவா போலிருக்கு.” ஆராதனா வித்யாவை சீண்ட.
“என் பையன் அப்படி எல்லாம் செய்ய மாட்டன்.” என்றார் வித்யா அழுத்தமாக.
“எல்லா அம்மாவும் இப்படித் தான் அவங்க பையனுங்களைப் பற்றி நினைப்பாங்க. ஆனா பையனுங்க கடைசியில கல்தா குடுக்கும் போது தான் தெரியும்.”
“எனக்கு அர்ஜுன் பற்றித் தெரியும். அவன் நான் பார்க்கும் பொண்ண தான் கல்யாணம் பண்ணுவான்.” என்றார் வித்யா நம்பிக்கையாக.
“அவனுக்கு வர போற மனைவியை அவன் தேர்ந்து எடுக்கிறது தப்பா ஏன்மா? இன்னும் பழைய காலமாவே இருக்கீங்க.” விடாமல் ஆராதனா வழக்கடிக்க…
“எனக்கு அதெல்லாம் தெரியாது ஆரு…. எனக்கு என் பையனுக்கு வர்ற பொண்டாட்டிய நான் தான் தேர்ந்து எடுக்கணும்.” என்றவர்,
“எல்லாம் உங்க அப்பா உங்களுக்குக் கொடுக்கிற இடம். அது தான் நீ இப்படிப் பேசுற. அவர்தான எப்பவும் என் பசங்க விரும்பினா, நான் கல்யாணம் செஞ்சு வைப்பேன்னு சொல்றாரு. அதுதான் உங்களுக்குத் தைரியம்.” என்றார் வித்யா கடுமையான குரலில்.
“அப்பாவ… எதுக்கு மா திட்றீங்க?” ஆராதனா கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, உள்ளே வந்த கணேசன் “உங்க அம்மா என்ன இன்னைக்குத் தான் என்னைப் புதுசா திட்றாளா? அது கல்யாணம் ஆன நாள்ல இருந்து தான் திட்றா.” என்றவர், ஆராதனா அருகில் சென்று அமர்ந்தார்.
“இன்னைக்கு என் தலை உருளும் காரணத்தை நான் தெரிஞ்சிக்கலாமா.” என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அர்ஜுனும் அவர் அருகில் வந்து அமர்ந்தான்.
“இல்லபா…. என் பசங்க யாரையாவது விரும்பினா… நான் கல்யாணம் பண்ணி வைப்பேன்னு நீங்க சொன்னீங்கள்ள, அதுக்குத் தான் அம்மா திட்றாங்க.” ஆராதனா சொன்னதைக் கேட்ட கணேசன்,
“ஏன் அதுல என்ன தப்பு? என் பசங்களுக்கு நான் நல்லது கெட்டது சொல்லி தந்து வளர்த்திருக்கேன். அவங்க எதையும் யோசிச்சு தான் செய்வாங்க. அவங்களுக்கு அறியாத பருவத்தில் வரும் பப்பி லவ்வ அவங்க கடந்திட்டாங்க. அவங்களுக்கு இப்ப விவரம் தெரியும். கல்யாணம்கிறது ஒரு வழி பாதைன்னு அவங்களுக்குத் தெரியும். இனி அவங்க யாரையாவது விரும்பினா…. அவங்க நல்லா யோசிச்சு தான் முடிவு எடுப்பாங்க. எனக்கு என் பிள்ளைங்க மேல நம்பிக்கை இருக்கு.” என்றார்.
“இப்படிப் பேசி பேசியே பசங்களைக் கெடுங்க.” வித்யா சலித்துக் கொள்ள…
“ஏன் நம்ம முதல் பையன் ஆதிகிட்டையும் நான் இதே தான் சொன்னேன், அதுக்காக அவன் லவ் பண்ணிட்டானா? அவனுக்கு உன்னைத் தான பெண் பார்க்க சொல்லி இருக்கான்.”
“நாம நம்ம விருப்பத்தை அவங்க மேல திணிக்காமல், அவங்களுக்குத் தேவையான சுதந்திரம் கொடுத்தா… அவங்களும் நிதானமா யோசிச்சு தான் முடிவு எடுப்பாங்க.” என்றார் கணேசன் விளக்கமாக.
“எனக்கு இதெல்லாம் சரி வரும்னு தோணலை பசங்களுக்கு என்ன தெரியும் ? அவங்க தேர்ந்தேடுக்கிறவங்க குடும்பத்துக்கு ஒத்து வருவாங்களா? நல்லவங்கலான்னு அவங்களுக்குப் பார்க்க தெரியுமா?” வித்யா தன் குமுறலை கொட்ட…
“அவங்களுக்குத் தங்களோட வாழ்க்கை துணையை சரியா தேர்ந்து எடுக்கத் தெரியலைனா, அது அவங்க தப்பு இல்லை, நம்ம தப்பு தான்.”
பெத்தவங்க தான் பிள்ளைங்களுக்கு வழி காட்டனும். பாசம் வச்சு, சாப்பாடு போட்டு அவங்க கேட்கிறதை வாங்கிக் கொடுக்கிறது மட்டும் பெத்தவங்க கடமை இல்லை. பிள்ளைங்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லி கொடுத்து வளர்கிறதும் பெத்தவங்க கடமை தான்.”
“அவங்களுக்கு யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்கன்னு கூடக் கண்டு பிடிக்கத் தெரியலைனா… நாம அந்த லட்சணத்தில அவங்களை வளர்திருக்கோம்னு அர்த்தம்.” என்று கணேசன் சூடாகப் பதில் கொடுக்க. பதிலுக்கு வித்யாவும் பேச ஆரம்பிக்க,
அர்ஜுன் இருவருக்கும் குறுக்கே வந்து, “நம்ம வீட்ல நாங்க யாரும் இன்னும் லவ் பண்ணலை. அப்புறம் ஏன் நீங்க ரெண்டு பேரும் சண்டை போடறீங்க? அதை அப்ப பார்க்கலாம்.” என்றதும், வித்யா எழுந்து உள்ளே சென்றார். கணேசனும் எழுந்து அவர் அறைக்குச் செல்ல… அர்ஜுனும், ஆராதனாவும் படிக்க உட்கார்ந்தனர்.
இரவு உணவிற்குப் பிறகு வித்யா டிவி சீரியல் பார்க்க உட்கார்ந்து விட… மற்ற நான்கு பேரும் வெளியே தோட்டத்துக்குச் சென்று பேச ஆரம்பித்தனர்.
அது அவர்கள் வீட்டில் வழக்கமாக நடப்பது தான். தங்கள் அப்பாவிடம் அன்று நடந்ததைச் சொல்லவில்லை என்றால் மூன்று பேருக்குமே தலை வெடித்துவிடும். கணேசனும் பிள்ளைகளிடம் நண்பனை போல் பழகுவார்.
“அப்பா, நான் இந்தத் தடவை அல்ஜிப்ரா பேப்பர்ல அரியர் தான். அந்த ப்ரொபஸர் சொல்லி தர்றது ஒண்ணுமே புரியலை. இதுல பாதிக் கணக்கை மட்டும் அவர் போட்டு, மீதிய எங்களைப் போட சொல்லிட்டு என் பின்னாடி வேற வந்து நிற்கிறார்.”
“நான் தினமும் புது, புதுப் பக்கமா திருப்பி…. என்னோட நோட்டல நான் ஒரு பக்கம் மட்டும் தான் எழுதி இருக்கேன். இன்னொரு பக்கம் காலியாவே இருக்கு. என்னால முடியலை…” ஆராதனா அபிநயத்தோடு சொல்ல… ஆதியும் அர்ஜுனனும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
கணேசனும் சிரித்துக் கொண்டே‘”உனக்கு ரெண்டு அண்ணன்களை வச்சிக்கிட்டு கவலைபடலாமா ஆரு.” என்றவர், தன் மகன்களிடம் அவளுக்குச் சொல்லி தர சொல்ல….
“அப்பா, நான் படிச்சதெல்லாம் மறந்திட்டேன். அர்ஜுனை சொல்லி தர சொல்லுங்க.” என்றான் ஆதி. அதற்கு அர்ஜுன் “சரி, ஆனா… பீஸ் ஒழுங்கா குடுத்திடனும். அப்ப தான் சொல்லி தருவேன்.” என்றான் கேலியாக.
அடுத்து ஆதி தங்கள் ஷோ ரூமில் இன்று வாடிக்கையாளர் ஒருவர் செய்த கலாட்டாவை சொன்னான்.
“ஆதி, கஸ்டமர் அப்படித் தான் பேசுவாங்க, பொறுமைய மட்டும் எப்பவும் விட்டுடாத. அவங்களிடம் அவங்களுக்கு எத்த மாதிரி பேசி, துணியை வாங்க வைக்கிறதுல தான் நம்ப வியாபார திறமை இருக்கு. அதை மட்டும் மறந்திடாத.” கணேசன் மகனுக்குப் பாடம் சொல்ல, அதை ஆதியும் அக்கறையாகக் கேட்டுக் கொண்டான்.
அர்ஜுன் எதோ யோசனையாக இருக்க, அவனைப் பார்த்து ஆதி “என்னடா யோசிக்கிற?” என்றதும், இன்று மீரா… அவனைப் பார்த்து அவுட் என்று கத்தியதை சொன்னான். உடனே ஆதியும், ஆருவும் கதை சூப்பரா இருக்கே மேல சொல்லு என்றனர்.
“அவ எங்க காலேஜ் இல்லை. அவளை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததும் இல்லை. இனி பார்க்க போறதும் இல்லை. அதனால தேவை இல்லாம நீங்க ரெண்டு பேரும் ரொம்ப யோசிக்காதீங்க.” என்றான் அர்ஜுன் பட்டென்று.
“அதை நீ இப்பவே முடிவு பண்ணாத அர்ஜுன். அவளை நீ பார்க்கனும்னு விதி இருந்தா கண்டிப்பா பார்ப்ப.” என்றார் கணேசன்.
“ஆளு பார்க்க எப்படி இருந்தா? அதைச் சொல்லுங்க பிரதர்.” ஆரு ஆர்வமாக.
“தூரத்தில இருந்து தான் பார்த்தேன். சரியா தெரியலை. ஆனா நல்லா தான் இருந்தா.” என்றான்.
அர்ஜுன் சொன்ன பதிலை கேட்டு எல்லோரும் சிரிக்க…. ஆதியும், ஆருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்சிமிட்டி கொண்டனர்.
மறுநாள் கல்லூரியில் வந்து வண்டியை நிறுத்திய அர்ஜுனுக்கு, மீராவின் நினைவு வந்தது. அவள் ஒரு வேலை இந்தக் கல்லூரியாக இருப்பாளோ என்று சந்தேகம் தோன்ற…. அங்கே நின்ற கார்களில் நேற்று பார்த்த பச்சை கலர் செவ்ரோலட் எங்கையாவது தென்படுகிறதா என்று பார்த்தான்.
அங்கே அந்தக் கார் இல்லை. சரி பிறகு பார்த்துக்கலாம் என்று அங்கிருந்து சென்றான். அர்ஜுனுக்குத் தெரியாது. மீராவுக்கென்றே அவள் வீட்டில் மூன்று கார்கள் இருப்பதும், அதனால் அவள் இன்று கருப்பு நிற ஸ்விப்டில் வந்ததும்.
error: Content is protected !!