Skip to content
Post Views: 5,573
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 2
ஒரு வாரம் வரை அர்ஜுன் மீராவை சந்திக்கவில்லை. ஆனால் மீரா தூரத்தில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். அவன் கண்களில் மாட்டக் கூடாது என்று கவனமாக இருந்தாள்.
அர்ஜுன் வெள்ளிக்கிழமை அன்று கல்லூரியில் இருந்து வந்ததும், அவனது அம்மா “இன்னைக்குப் பிரதோஷம் கோவிலுக்குப் போகணும், கூட வரியா?” என்று கேட்க, அர்ஜுனும் சரி என்று அவன் அம்மாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றான்.
கோவிலை சுற்றிவிட்டு குளத்தின் படிக்கட்டில் சென்று அமர்ந்தனர். அப்போது அர்ஜுன் எதிர்புறம் பார்க்க, அங்கே மீரா… குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து மீனுக்கு எப்போதும் போல் பொறியை போட்டுக் கொண்டு இருந்தாள்.
அர்ஜுன் அவளைப் பார்த்ததும், அவளிடம் ஓட துடித்த கால்களை… பக்கத்தில் அவன் அம்மா இருந்ததால் அடக்கி கொண்டு, அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
மீரா எழுந்து கோவில் உள்ளே சென்று ஒரு நிமிடம் மட்டும் கண்ணை மூடி நின்றவள், அடுத்த நிமிடம் வெளியே சென்றுவிட, அர்ஜுன் அச்சோ… இப்படிப் பார்த்தும் விட்டுட்டோமே என்று நொந்தான்.
ஞாயிறு கிழமை மீராவும் கீர்த்தனாவும் புரசைவாக்கத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் சுற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது மீரா மூன்றாம் தளத்தில் இருந்து கீழே பார்க்க, அங்கே சூர்யாவோடு நின்று கொண்டிருந்த அர்ஜுன் அவளைப் பார்த்து விட்டான்.
சூர்யாவிடம் மீராவை காட்டி “இவ தான் டா அன்னைக்கு என்னைப் பார்த்து அவுட்னு கத்தினா…” என்று சொல்லிகொண்டிருக்கும் போதே, அர்ஜுனை பார்த்துவிட்ட மீரா… இவனிடம் மாட்டினோம் செத்தோம் என்று நினைத்தவள்,
“கீத்து, அர்ஜுன் இங்க இருக்கான். நான் போய் மறைஞ்சுக்கிறேன்.” என்று ஓட… அவள் ஓடுவதைப் பார்த்த அர்ஜுன், ” இருடா வரேன்.” என்று சூர்யாவிடம் சொல்லிவிட்டு, அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.
மீரா அங்கிருந்த புட் கோர்ட் உள்ளே சென்றவள், வேறு வழியாக வெளியே வர… அவளைத் தேடி கொண்டு வந்த அர்ஜுன், எதிர்புறம் நின்று கொண்டிருந்தான். மீரா அவனைப் பார்த்ததும் வேகமாகத் திரும்பி ஒட…
அவளைப் பார்த்த அர்ஜுன் “ஹே நில்லு…” என்று கத்த, மீரா நிற்காமல் இரண்டாம் தளத்திற்கு எஸ்கலேட்டரில் இறங்கினாள்.
அர்ஜுனை திரும்பி பார்த்துக் கொண்டே கால் வைத்தவள், தடுமாறி விழ பார்க்க…. ஒரு நிமிடம் அர்ஜுன் அரண்டு விட்டான். “ஹே… விழுந்துடாத பார்த்து போ.” என்று கத்தியவன் அங்கயே நின்று விட்டான்.
மேலும் அவளைத் துரத்தினால் எங்கையாவது விழுந்து வைக்கப் போகிறாள் என்று நினைத்து அங்கயே நின்றான்.
கீழே இறங்கிய மீரா வேகமாகக் கார் பார்கிங் சென்று, அவளது காரில் ஏறி அமர்ந்து மூச்சு வாங்கியவள், கீத்துவை அழைத்துக் கார் பார்கிங் வர சொல்லிவிட்டுப் போன்னை வைத்தாள்.
அர்ஜுனின் தோளை தொட்ட சூர்யா “என்ன ஆச்சு அர்ஜுன்?” என்று கேட்க,
“ச்ச… இன்னைக்குப் பார்த்தும் அவளை விட்டுட்டேன். இனிமே எப்ப பார்ப்பானோ?” என்றான்.
“ஏன் நாளைக்கு நம்ம காலேஜ்ல பார்க்கலாம்.” சூர்யா கூலாகச் சொல்ல….
“டேய்… உளறாத அவ நம்ம காலேஜ் இல்லைடா.” என்றான் அர்ஜுன் எரிச்சலாக.
“யாரு நான் உளறேன்னா? அவ பேர் மீரா. நம்ம காலேஜ்ல தான் B.E., செகண்ட் இயர் படிக்கிறா.” என்றான்.
அர்ஜுன் நம்ப முடியாமல் சூர்யாவை பார்க்க…
“என்ன இன்னும் நம்பிக்கை வரலையா… மேட்ச் வின் பண்ண அன்னைக்கு, நீ வெளிய ஆடிட்டு இருந்த இல்ல… அப்ப இவ உள்ள ஆடிட்டு இருந்தா.”
“அப்புறம் இன்னொன்னு யோசி, வேற காலேஜ் பொண்ணா இருந்தா, அவ எதுக்கு உன்னைப் பார்த்து பயப்படறா.” சூர்யா கேட்க…
யோசித்த அர்ஜுன் “ஆமா கரெக்ட். ஆனா உனக்கு எப்படி டா அவளைத் தெரியும்?” அவன் ஆச்சர்யபட…
“அவ ஒன்னும் சாதாரண ஆள் இல்லை. தி பேமஸ் ஷைன் பினான்ஸ் கம்பெனி ஓனர் ராம்நாத்தோட பொண்ணு. எங்க வீட்ல இருந்து கொஞ்சம் தள்ளி தான் இவங்க வீடு இருக்கு.”
“வீடு இல்ல பெரிய பங்களா. வெளிய இருந்து பார்க்கவே சூப்பரா இருக்கும்.”
சூர்யா சொன்னதைக் கேட்ட அர்ஜுன், “அது தான் அவ்வளவு திமிரா… இருக்கட்டும், நாளைக்குக் காலேஜ் வருவா இல்ல… அங்க வச்சு பார்த்துகிறேன்.” என்று மனதில் நினைத்தான்.
இரவு படுக்கையில் படுத்திருந்த மீரா… அன்று மாலில் நடந்ததை நினைத்து பார்த்தாள். அவள் தடுமாறி விழ பார்த்த போது, அர்ஜுன் அவளுக்காகப் பதறியது அவள் மனதுக்கு இதமாக இருந்தது. போதும் அவனுடன் விளையாடிய கண்ணாம்மூச்சி. நாளை அவனிடம் நேரில் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கினாள்.
மறுநாள் கல்லூரியில் அர்ஜுனை பார்க்க போவதால், மீரா அவளுக்கு மிகவும் பிடித்த லாவெண்டர் கலர் சுடிதாரை அணிந்து, கண்ணாடியில் பத்து முறைக்கு மேல் சரி பார்த்துவிட்டே சென்றாள்.
மீரா சாதாரணமாகவே ஆள் ரதியை போல அழகாக இருப்பாள். அதுவும் இன்று பார்த்துப்… பார்த்து செய்த அலங்காரம் அவளை இன்னும் மெருகேற்ற… பார்க்க பௌர்ணமி நிலவை போல் இருந்தாள்.
அர்ஜுனை பார்க்க மீரா நேராக அவனது வகுப்பறைக்குச் சென்றவள், வெளியே நின்றே உள்ளே எட்டி பார்க்க… அர்ஜுன் இன்னும் வந்திருக்கவில்லை. அதனால் அவனுக்காக வெளியே காத்திருந்தாள். அப்போது அங்கே வந்த சூர்யா, இந்தப் பொண்ணு ஏன் இங்க நிக்குது? ஒருவேளை அர்ஜுனை பார்க்க வந்திருப்பாளோ…. என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றான்.
அர்ஜுன் வகுப்பு தொடங்க போகும் நேரம் வரை வரவில்லை. மீரா வேறு வழி இல்லாமல்… அவள் வகுப்பிற்குச் சென்றாள். அவள் அந்தப் பக்கம் செல்ல… அர்ஜுன் இந்தப் பக்கம் வந்தான்.
அர்ஜுன் சரியாக வகுப்பு தொடங்கும் நேரத்திற்குத் தான் வந்தான். வகுப்பு தொடங்கிய சிறிது நேரத்தில், கடைசிப் பெஞ்சில் அமர்ந்திருந்த மாணவன் “டேய்… நம்ம பிரபு நம்மைக் கீழ வர சொல்லி மெசேஜ் பண்ணி இருக்கான். எதோ பிரச்சனை போல… வாங்கடா என்னன்னு பார்க்கலாம்.” என்று அவன் நண்பர்களை அழைத்துக்கொண்டு செல்ல… மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
Advertisement
சிறிது நேரத்தில் வெளியே இருந்து வாக்குவாதம் நடைபெரும் சத்தம் வர… மற்றவர்களும் எழுந்து வெளியே சென்றனர். அவர்களோடு அர்ஜுனும் சூர்யாவும் சென்றார்கள்.
கீழ் தளத்தில் வாக்குவாதம் நடந்து கொண்டு இருந்தது. அங்கே சுற்றி சிறு கூட்டம். அர்ஜுனும், சூர்யாவும் என்ன சண்டை என்று எட்டி பார்க்க… அங்கே அவர்கள் வகுப்பு மாணவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தது மீரா.
“நான் எத்தனை தடவை சொல்றது. அவன் வேணும்னே என் மேல மோதினான், நான் அடிச்சேன். சும்மா இருக்கிறவனை அடிகிறதுக்கு, நான் என்ன லூசா?” மீரா சத்தமாகக் கேட்க….
“தெரியாம மோதினதுக்கு வேணும்னு மோதின மாதிரி அடிச்சிட்டு பேசுறத பாரு… மரியாதையா சாரி கேளு. அப்ப தான் நீ இங்க இருந்து போக முடியும்.” என்று அடிவாங்கியவனின் நண்பர்கள் மிரட்ட…
மீரா முடியாது என்று அழுத்தமாக மறுத்தாள். அதைப் பார்த்த அர்ஜுனுக்குக் கோபம் வந்தது. பாரு எவ்வளவு திமிரு…. ஆம்பிளைய கை நீட்டி அடிச்சிட்டு, சாரி கேட்க மாட்டாளாம் என்று மனதிற்குள் கொதித்துக் கொண்டு இருந்தான். அவனுக்குப் பிரபு தெரியாமல் தான் மோதி இருப்பான், மீரா தான் தேவை இல்லாமல் பெரிது படுத்துகிறாள் என்று நினைத்தான்.
அப்போது அங்கே வந்த HOD, என்ன நடந்தது என்று விசாரிக்க…
“சார், நான் படிக்கட்டுல இறங்கிட்டு இருந்தேன், அப்போ இவன் வேணுமுன்னே… என் மேல வந்து மோதினான். அதனால நான் அவனை அடிச்சிட்டேன். ஆனா அதுக்குச் சாரி சொன்னா தான் போக விடுவேன்னு சொல்றான் சார். அவன் தப்பு செஞ்சான், நான் அடிச்சேன். நான் எதுக்கு சார் சாரி சொல்லணும்?” மீரா கேட்க….
“சார், நான் வேணும்னே மோதலை. தெரியாம கால் தடுக்கி தான் விழுந்தேன். இந்தப் பொண்ணு தான் வேணுமுன்னே அடிச்சிடுச்சு,” என்றான் அடி வாங்கிய மாணவன் பிரபு.
“பொய் சொல்லாத…. அவ்வளவு பெரிய படிக்கட்டுல, நீ என் மேல தெரியாம விழுந்தியா?” மீரா ஆவேசமாகக் கேட்க… பதிலுக்கு அந்த மாணவனும் பேச… அங்கே திரும்பத் தகராறு துவங்கியது.
“மீரா, நீ ஒரு சாரி கேட்டுட்டா பிரச்சனை முடிஞ்சிடும் கேட்டுடேன்மா…” பிரச்சனை முடிந்தால் சரி என்ற எண்ணத்தில் HOD சொல்ல…
“நான் எதுக்கு சார் சாரி சொல்லணும்? நான் தப்பு பண்ணலை.” என்றாள் மீரா கோபமாக,
“அது எப்படிக் கேட்பாங்க? அவங்க தான் பெரிய பணக்காரங்க ஆச்சே… மன்னிப்புக் கேட்டா கவுரவம் குறைஞ்சிடுமே.” அர்ஜுன் சொல்ல… அவன் சொன்னதைக் கேட்ட மீரா அதிர்ச்சி அடைந்தாள்.
HOD அடி வாங்கிய மாணவனிடம் “தெரியாம அடிச்சிடுச்சு…. நீ தான் விடேன் பா.” என்றார்.
“காலேஜ் படிக்கிற பையனை போய் எதோ பொறுக்கி மாதிரி சொல்றாங்க… அவங்க சொல்றதை போய் நம்புறீங்களே சார்.”
“யாரவது காலேஜ்ல வச்சு அப்படிப் பண்ணுவாங்களா? பிரபு தெரியாம தான் இடிச்சிருப்பான். இவங்க வீட்ல இருக்கிற மாதிரியே வெளி இடத்திலேயும் சொகுசா இருக்க முடியாது. இது மாதிரி தவறு நடக்கிறது சகஜம்தான். சரியா தெரிஞ்சிக்காம கைய நீட்டினது தப்பு. அவங்களை ஒழுங்கா சாரி கேட்க சொல்லுங்க.” அர்ஜுன் HOD-யிடம் சொல்ல…
“நீ என்னை நம்ப மாட்டியா?” என்று அவனைப் மீரா பார்க்க, அர்ஜுன் என்ன லுக்கு என்பது போல் அவளைப் பார்த்தவன் “சீக்கிரம் சாரி சொன்னா… அவங்கவங்க வேலைய பார்க்க போகலாம்.” என்றான். மீரா அமைதியாக நின்றாள்.
“ஆமா இவங்களுக்கு நம்ம டிபார்ட்மென்ட்ல என்ன வேலை?” என்றான் அர்ஜுன் அடுத்து…
உன்னைத் தான் பார்க்க வந்தேன் என்று சொல்ல வந்தவள், அதைச் சொன்னால் நம்ப மாட்டான் என்று மீண்டும் அமைதியாகி விட… அர்ஜுன் மீராவை முறைத்துக் கொண்டே நின்றான்.
“மீரா, பிரின்சிக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகும் பரவாயில்லையா?” HOD கேட்க….
பிரின்சிக்கு தெரிந்தால்… விஷயம் தன் அப்பாவின் காது வரை போகும் என்பதை உணர்ந்த மீராவிற்கு, அதில் விருப்பம் இல்லை என்பதால், திரும்பி அர்ஜுனை பார்த்துக் கொண்டே சாரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடுவிடுவென்று சென்று விட்டாள்.
“அதுதான் பிரச்சனை முடிஞ்சிடுச்சுல… எல்லோரும் கிளாஸ்க்கு போங்க. இதைப் பத்தி யாரும் இனி பேச கூடாது.” HOD சொல்ல… எல்லோரும் வகுப்பிற்குள் சென்றனர்.
வகுப்பிற்குள் வந்ததும் சூர்யா, “அர்ஜுன்… அவ உன்னைப் பார்க்கதான் இங்க வந்தான்னு நினைக்கிறேன். நம்ம கிளாஸ் முன்னாடி ரொம்ப நேரம் நின்னுட்டு இருந்தா.” என்றான்.
“என்ன சொல்ற சூர்யா… அவ நம்ம கிளாஸ் முன்னாடி நின்னுட்டு இருந்தாளா. என்னைப் பார்த்து நேத்து ஓடினா, இன்னைக்கு எதுக்கு வந்தா?” அர்ஜுன் சொல்லி கொண்டிருக்கும் போதே ப்ரொபசர் வந்துவிட, அதற்கு மேல் அப்போது எதுவும் பேச முடியவில்லை.
மதிய உணவு இடைவேளையில் அர்ஜுனின் கிளாஸில் படிக்கும் சுபத்ரா “அர்ஜுன், உனக்கு அந்தப் பிரபுவ பத்தி தெரியாது. அவன் சுத்த பொறுக்கி. என்கிட்டையே ஒரு தடவை அப்படி நடந்திருக்கான். ஆனா பார்க்க ஆள் அப்பாவியா இருப்பான். நீ அவனைப் பத்தி தெரியாம அவனுக்குச் சப்போர்ட் பண்ணிட்ட… பாவம் அந்தப் பொண்ணு.” எனச் சொல்ல…
அதைக் கேட்ட அர்ஜுனுக்கு ரத்தம் கொதிக்க, சூர்யாவிடம் “அவன் இப்ப எங்க இருப்பான் ?” என்று கேட்டுக் கொண்டே எழுந்தான்.
“கான்டீன்ல தான் இருப்பான்” என்றதும், அர்ஜுன் வேகமாக வெளியே செல்ல… சூர்யாவும் அவனுடன் சென்றான்.
அர்ஜுன் வேகமாகப் படிக்கட்டில் இறங்கி கொண்டிருக்கும் போது, மேலே ஏறிக்கொண்டிருந்த பிரபு, எதிரே வந்த பெண் மீது வேண்டுமென்றே மோத… அந்தப் பெண் திட்டி கொண்டே செல்ல… பிரபு சிரித்துக் கொண்டே மேலே ஏறினான்.
பிரபு வருவதைப் பார்த்து நின்ற அர்ஜுன், நேரிலேயே பிரபுவை பற்றித் தெரிந்து கொண்டவன் “நீ காலேஜ்க்குப் பொறுக்கிதனம் பண்ண தான் வரியா. இன்னைக்கு ஒருத்திகிட்ட அடி வாங்கியும் உனக்குப் புத்தி வரலை பாரு. உன்னை அவ கையால அடிச்சிருக்கக் கூடாது, செருப்பால அடிச்சிருக்கணும். அவ சொன்னதை நம்பாம உன்னைப் போய் நம்பினேன் பாரு என்னைச் சொல்லணும்.” அவன் கோபமாகச் சொல்ல… அப்போது தான் அர்ஜுனை பார்த்த பிரபு… அவன் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்தான்.
அவனுக்கு அர்ஜுன் பற்றி நன்றாகவே தெரியும். எல்லோரிடமும் நன்றாகப் பழகும் அர்ஜுன், தவறை மட்டும் பொறுக்கவே மாட்டான் என்று. இவனிடம் மாட்டினோம் செத்தோம் என்று நினைத்த பிரபு திரும்பி ஓட… அர்ஜுன் அவனைத் துரத்தினான்.
பிரபு காலேஜ் கிரௌண்டில் ஓட… அவனை அர்ஜுன் துரத்தி சென்று அடித்தான். மீரா சாப்பிட பிடிக்காமல் அவள் வகுப்பிலேயே தங்கி விட… கீர்த்தனா சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தவள், “மீரா… அர்ஜுன் கிரௌன்ட்ல ஒரு பையனை போட்டு அடிக்கிறான்.” என்றதும்… வேகமாக எழுந்த மீரா வெளியே ஓடினாள்.
மீரா கிரௌன்டிற்கு வந்த போது பிரபுவை அடித்துகொண்டிருந்த அர்ஜுனை, சூர்யாவும் மற்ற நண்பர்களும் சேர்ந்து தடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த சில ப்ரொபசர்கள் என்ன நடந்தது என்று கேட்க… அர்ஜுன், மீரா பெயரை இழுக்காமல், இவன் என்னைப் பத்தி தப்பா பேசினான், அதனால அடிச்சேன் என்றான். பிரபுவும் அவன் சொன்னதை ஆமோதிக்க… அதோடு இருவரையும் விலக்கி வகுப்புக்கு செல்ல சொல்லி விட்டு அவர்கள் சென்றனர்.
அர்ஜுன் பிரபுவை முறைத்துக் கொண்டே வகுப்பிற்குச் சென்றான். பிரபு அப்போது தான் அங்கிருந்த மீராவை பார்த்தான். அவளிடம் சென்றவன் “சாரி மீரா… நான் பண்ணது ரொம்பத் தப்பு. உனக்காகத் தான் அர்ஜுன் என்னை அடிச்சான். அவன் நான் தெரியாம இடிசிருப்பேன்னு நினைச்சி தான் காலையில எனக்குச் சப்போர்ட் பண்ணான். ச்ச… ஆனா நான். மீரா, நான் இனிமே அப்படிப் பண்ண மாட்டேன்.” என்று உன்மையாகவே தன் தவறை உணர்ந்து சொன்னவன், அவன் வகுப்பிற்குச் செல்ல…. மீராவிற்கு அர்ஜுன் தனக்காகத் தான் பிரபுவை அடித்தான் என்றது அவள் மனதிற்கு இதமாக இருக்க… மகிழ்ச்சியுடன் வகுப்பிற்குச் சென்றாள்.
மாலையில் கல்லூரி முடிந்ததும், அர்ஜுன் அவன் பைக்கை ஸ்டாண்டில் இருந்து எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது அர்ஜுன் என்று யாரோ கூப்பிட… அவன் யாரென்று நிமிர்ந்து பார்க்க… மீரா சற்றுத் தூரத்தில் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
லாவெண்டர் கலர் அனார்கலி மாடல் சிந்தடிக் சுடிதாரில்…. காற்றிற்குப் பறக்கும் தனது கூந்தலை ஒதுக்கி விட்டபடி, முகத்தில் புன்னகையுன் வேகமாக நடந்து வந்தவளை ரசித்தவன், அவள் அருகில் வந்து நின்றதும்…. தன் உணர்வை கட்டுக்குள் கொண்டு வந்து, “என்ன?” என்றான் இறுகிய குரலில்….
“அர்ஜுன், நான் காலையிலையே உங்களைப் பார்க்க உங்க கிளாஸ்க்கு வந்தேன். ஆனா நீங்க அங்க இல்லை. திரும்பி போகும் போது தான்.” என்று சொல்லி கொண்டே சென்றவளை, தனது கையைக் காட்டி தடுத்தவன் “இப்ப எனக்குக் கதை கேட்க எல்லாம் நேரம் இல்லை. நேரா விஷயத்துக்கு வாங்க.” என்றான் சிடிசிடுப்பாக…
அவன் சொன்னதைக் கேட்டு திகைத்த மீரா, “சாரி… அன்னைக்கு நான் சும்மா விளையாட்டுக்கு தான் அவுட்னு கத்தினேன்.” என்றாள்.
“ரொம்பச் சீக்கிரம் சாரி கேட்டுடீங்க, பரவாயில்லை… சரி அப்ப நான் கிளம்புறேன்.” அர்ஜுன் கிளம்புவதிலேயே குறியாக இருந்தான்.
“அப்புறம் இன்னைக்கு எனக்காக நீங்க பிரபுவா அடிச்சதுக்குத் தேங்க்ஸ்.”
“உங்களுக்காக அடிச்சேன்னா…” என்று ஆச்சர்யபட்டவன். “நான் உங்களுக்காக அவனை அடிக்களை… அவன் வேற ஒரு பொண்ணு மேல வேணுமுன்னே மோதினதை பார்த்தேன். அது தான் அடிச்சேன். உங்களுக்காக அடிச்சதா கற்பனை பண்ணிக்க வேண்டாம்.” என்றான் முகத்தில் அடித்தது போல்….
மீராவின் முகம் வாட… கண்கள் லேசாகக் கலங்க ஆரம்பித்தது. அவளுக்குப் புரிந்தது, அவன் தன்னுடன் பேச விரும்பவில்லை. தலையை மட்டும் சரி என்பதாக அசைத்தவள், திரும்பி நடந்தாள். துள்ளி குதித்து வந்தவள், சோர்ந்த நடையுடன் திரும்பி செல்ல… அர்ஜுன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
Advertisement
Advertisement
Advertisement
error: Content is protected !!