Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kuzhalisai Azhagae

குழலிசை அழகே – 7

அத்தியாயம் – 7

தன்னை சுற்றி நடக்கும் எதையுமே நம்ப முடியாமல் திகில் பிடித்து அமர்ந்திருந்தாள் சக்தி. ஹோம குண்டலத்தின் முன் கழுத்தில் பூமாலையும் மணபெண்ணிம் சர்வ அலங்காரத்தோடு அவளும் அருகே மணமகனாய் ஆரியனும் அமர்ந்திருக்க இன்னும் சில நிமிடங்களில் நடக்கவிருக்கும் தங்கள் திருமணத்தை பூரிப்போடு எதிர்நோக்க வேண்டியவளோ அவஸ்தையாய் அமர்ந்திருந்தாள்.

சுற்றி இருக்கும் யார் முகத்திலும் முழு மகிழ்ச்சி இல்லை. எல்லோரும் ஒருவித இறுக்கத்தோடே வலம்வர அதுவே அவளையும் துவண்டு போக செய்தது.



Advertisement

அந்த வலி வருத்தம் எல்லாம் அவளிடம் மட்டுமே தான். அவளின் கணவனாக போகிறவனோ அவளுக்கு மாறாய் வாடா புன்னகையோடு அனைத்து சடங்கையும் மும்முரமாய் செய்து கொண்டிருக்க,

‘எல்லாத்தையும் செஞ்சுட்டு எப்படி இவனால மட்டும் ஒண்ணுமே நடக்காத மாதிரி சந்தோஷமா இருக்க முடியுது.. ‘

என்ற எண்ணமே பிரதானமாய் இருந்தது.

Advertisement

லேசாய் அவள் புறம் சரிந்த ஆரியன்,

Advertisement

“உன்னை கடத்திட்டு வந்து திருட்டு கல்யாணம் பன்றேனா என்ன..”

என்று முணுமுணுக்க புரியாமல் விழித்த சக்தி,

“ஏன் உளறுர..”
என்றாள் அவளும் மெதுவாய்..

Advertisement

“பின்ன.. நீ இப்படி திரு திருன்னு முழிச்சா அப்படி தான் தோணும்.. கொஞ்சம் சிரிக்கலாம் தானே..”

அதில் காண்டானவள்,

“இப்ப அது ஒன்னு தான் குறைச்சல்.. உங்க அம்மாவ பார் முகத்திலே அவ்வளவு கோபம் தெரியுது… உன் தங்கச்சி.. என் பக்கமே திரும்பல.. என்னோட அம்மா யாருக்கு வைச்ச விருந்தோன்னு ஓரமா நிக்கிறாங்க.. அடிக்கடி என்னை வேற என்னவோ மாதிரி பார்க்கிறாங்க.. எங்கயாவது பாசிட்டிவ் வைப்ஸ் இருக்குதா… எல்லாரையும் எப்படி சமாளிச்சு நம்ம வாழ்க்கை எதை நோக்கி போகுதுனு நானே பயந்துட்டு இருக்கேன்.. நீ வேற கடுப்பு ஏத்தாத..”

என அவன் காதில் வார்த்தைகளை கடித்து துப்ப,

“ம்ச்.. எனக்கு மட்டும் அந்த கவலை எல்லாம் இல்லைன்னு நினைக்கிறியா..?? நம்ம கல்யாணம் பத்தி ஆயிரம் கனவு வைச்சு இருந்தேன்.. அதில் ஒன்னு கூட இப்ப நடக்கலைன்னு ஏமாற்றம் தான்.. என் மேல கோபமே படாத அப்பாவும் அம்மாவும் இப்ப கொலை காண்டுல இருக்காங்க.. எப்படி சமாதான செய்யிறதுனு எனக்கும் தான் மனசுல ஓட்டிட்டே இருக்கு.. அதுக்கு உர்ருன்னு இருந்தால் எல்லாம் சரியாச்சா..?? நாளைக்கு கூட இதை நினைச்சு கவலை படலாம்.. ஆனால் இன்னைக்கு நாள் திரும்ப கிடைக்குமா..? இத்தனை வருஷ லவ்… ஃபைனலீ.. களவியலில் இருந்து கற்பியலுக்கு காலெடுத்து வைசக்க போறோம்.. இந்த மொமெண்ட் நமக்கு எவ்வளவு ப்ரிஸியஸ்.. அதை அனுபவி சக்தி..”

மயக்கும் புன்னகையோடு அவன் சொல்லியது அவளுக்கும் ஒரு சிலிர்ப்பை கொடுக்க,

“யூ ஆர் அன்பிளிவபுல் ஆர்யா..”
என்றாள் குறுநகையோடு..!!

அவர்கள் பேச்சை இடையிட்டு,

“எக்ஸ்கியூஸ் மீ.. ஒரு ஃபைவ் மினிட்ஸ் உங்களால பேசாம இருக்க முடியுமா..??”

என பின்னால் நின்றிருந்த சந்தியா குனிந்து நக்கலாய் சொல்லவே அசட்டு சிரிப்போடு விலகி அமர்ந்தனர். சில நொடிகளிலே கெட்டிமேளம் கொட்டப்பட அந்த ஈஸ்வரன் சந்நிதியில் ஆரியன் – சக்திஸ்ரீ இருவரும் மற்றவரை தங்கள் சரிபாதியாய் ஏற்றுக் கொண்டனர்.

தன் கழுத்தில் புதிதாய் குடிப்புகுந்திருந்த பொன்மஞ்சள் தாலியை காணும் போது மனம் பல உணர்ச்சிகளில் தத்தளித்தது. இன்னமும் இது சரியா தவறா என்ற தடுமாற்றம் மறையவில்லை.

ஒரு வாரம்… வெறும் ஒரு வாரம் தான்.. அதற்குள் என்னென்ன செய்து விட்டான். சக்தியை உடனே திருமண செய்யவேண்டும் என்று முடிவெடுத்தது மட்டும் அல்லாது இருப்பக்கமும் அடாவடியாய் பேசி சரிக்கட்டி இதோ கோவிலில் எளிமையாய் அவர்கள் திருமணம் முடிந்தே விட்டது.

அவனின் சில நெருங்கிய சொந்தங்களும் நண்பர்களும் வந்திருக்க அவள் சார்பில் விஷாகன் – யாமினியுடன் ஆர். ஒ. எல் நண்பர்கள் அவ்வளவே..!! மேக்னா நிச்சயத்தில் இருந்த மக்கள் கூட இப்பொழுது அழைக்கப்படவில்லை.

மணமகள் ஆரியன் காதலித்த பெண் என்று சொல்லி இருந்தாலும் இந்த அவசர திருமணத்திற்கு காரணம் சக்தியின் ஜாதகத்தின் தோஷம் என்று மட்டுமே அனைவரிடமும் சொல்லப்பட்டது.

சிலர் நம்ப மாட்டாமல் கேள்வியால் ஜாடை பேச்சால் குடைந்ததும் பலர் அழைப்பு விடுக்காததால் குறைப்பட்டு கொண்டதும் என தங்கள் சுற்றத்தின் இடையே சலசலப்பு நிலவியது.

இடையில் மேக்னாவின் புகுந்த வீட்டினரை முறையாய் காரணம் கூறி திருமணத்திற்கு அழைத்து இருக்க அவர்களால் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் அவர்களை எதிர்க்கொள்ள சங்கடமாகவே இருக்க இப்படி இக்கட்டில் மாட்டிவிட்ட மகனின் மீது ஆத்திரமாய் வந்தது.

அதுவும் ஒன்றும் நடக்காதது போல் இருக்கும் மகனை பார்க்க பார்க்க இன்னும் அதிகம் ஆக திரு – ரம்யா இருவர் முகமும் விடியவே இல்லை.

இவர்கள் இப்படி என்றால் விஷாகன் – யாமினி நிலையோ வேறு மாதிரி இருந்தது. சக்திஸ்ரீ தங்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் தன் தோழி வீட்டிற்கு சென்றதும் அந்த தகவலையும் நேராக சொல்லாமல் கெளதம் வழி சொல்லியது எல்லாம் பலமாய் தாக்கியது. அமைதியாகவே அடைந்து கிடந்த்தும் இப்போதோ இப்படி சட்டென்று கிளம்பி சென்றுவிட்டதும் அவளின் இயல்பே இல்லை. ஆகாவே தங்கள் பிரச்சனையில் சக்தியின் நிலைமை தான் சீர் குலைந்து போகிறது என்ற உண்மை அப்பட்டமாய் விளங்க அவளை எப்படி கையாள வேண்டும் என புரியாமல் கவலை கொண்டனர்.

சிறந்த அப்பா – அம்மா இல்லை என்றாலும் அடிப்படையில் மகள் மீது பாசமும் அக்கறையும் இல்லாமல் இல்லை. இதுவரை எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கும் சக்திக்கே பழக்கப்பட்டு இருந்த பெற்றோருக்கு அவளின் இந்த எதிர்ப்பையும் மௌனமாய் அவள் காட்டும் கோபத்தையும் எதிர்கொள்ள தெரியவில்லை.

“ஏனோ தானோன்னு இருந்தாலும் நாங்க பாட்டுக்கு நிம்மதியா தான் இருந்தோம்.. உங்களால தான்.. நீங்க புதுசா ஆரம்பிச்ச பிரச்சனையால தான் எல்லாமே..”

என அதற்கும் யாமினி சண்டையிட எதிர்வாதம் செய்யவோ விஷாகனிடம் தெம்பில்லாமல் நொந்திருந்தார்.

சக்தியின் சிந்தனையிலே அன்றைய பொழுது ஓட ‘அவள் மீண்டும் வந்ததும் அவளுக்கு என்ன வேண்டும்.. என்ன நினைக்கிறாள் என்று நிச்சயம் பேசி தெரிந்துக் கொள்ள வேண்டும்.. இனியொரு முறை அவள் இவ்வாறு சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பும் சூழலை தரக்கூடாது…’ என பல முடிவுகளோடு அவர்கள் காத்திருக்க அவள் வந்ததோ அவர்கள் சற்றும் நினைத்தே பார்க்காத முடிவோடு..!!!

இதோ இன்று தங்கள் மகள் திருமணத்திலே மூன்றாம் மனிதர்கள் போல் வேடிக்கை பார்த்து நிற்கின்றனர்.

அதற்கென ஒரேடியாய் ஒதுங்கி விடாமல் விஷாகன் திருவிடமும் மற்ற சொந்தங்களிடமும் தானாகவே சென்று அறிமுகமாகி பேசி அவர்கள் ஊர், குடும்பம் பற்றி எல்லாம் தெரிந்துக்கொண்டார். இனி தன் மகளின் சொந்தம் இது தான் என்பதால் அவர்களோடு தனக்கும் ஒரு சுமூக உறவு இருக்க வேண்டும் என எண்ணினார்.

‘எங்களுக்கு இந்த செய்முறை, சம்பிராதாயம் பற்றி எல்லாம் அதிகம் தெரியாது… நாங்க என்ன செய்யணும்னு நீங்க சொன்னீங்க அது படி செய்வோம்..’
என வெளிப்படையாக்கவே திருவிடம் கேட்டு தெரிந்துக்கொண்டார்.

விஷாகன் போல் யாமினியால் சட்டென்று பழக முடியவில்லை. அவ்வளவு ஏன் இந்த கல்யாணம் நடப்பதே பிடிக்கவில்லை. தடுக்க முடியாத தன்னிலையை வெறுத்து ஒதுங்கியே நின்றார்.

அவர்களே வந்து பேசினாலும் ஓரிரு வார்த்தையில் பதில் சொல்லி முடித்து விடுவார். சக்தி கொடுத்த அதிர்ச்சியே இன்னும் அவருக்கு போகவில்லை.

‘அவள் இப்படி அவசரமாய் திருமண செய்து கொள்ளும் அளவுக்கு என்ன கொடுமை செய்து விட்டோம்.. தான் காதலித்த விஷயத்தை கூட தானே சொல்லாமல் அந்த பையன் வீட்டினர் வந்து பேசும்படி தங்களை தள்ளி நிறுத்தி விட்டாளே.. ஒரு இடத்தில் கூடவா எங்களிடம் அன்பை உணர்ந்தது இல்லை..’

என்று நினைக்கவே மனம் ஆறவில்லை. தங்கள் வாழ்க்கை என விவாகரத்து பற்றி அவளிடம் தகவலாய் சொன்னபோது தெரியாதது பதிலுக்கு தன் திருமணத்தை சக்தியும் தகவலாய் சொன்னபோது சுருக்கென்று இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!