Skip to content
Post Views: 3,219
உனக்குள் என் உயிரே
அத்தியாயம் 28
எட்டு மாதங்களுக்குப் பிறகு…
சென்னை விமான நிலையம். சிங்கப்பூரில் இருந்து வந்து தரை இறங்கிய விமானத்திலிருந்து அர்ஜுனும், சூர்யாவும் முகம் கொள்ளா புன்னகையுடன் வெளியே வந்தனர். அவர்கள் இருவர் முகத்திலும் நல்லபடியாகப் படிப்பை முடித்து, தாய் நாட்டிற்குத் திரும்பி வந்துவிட்டோம் என்ற சந்தோஷம் இருந்தது.
அர்ஜுன் ஓடி வந்து வித்யாவை தூக்கி சுற்றினான். “டேய்… கீழ விடுடா பயமா இருக்கு.” வித்யா சொன்னதும் தான் கீழே இறக்கி விட்டான். அடுத்து தன் தந்தையை அனைத்துக் கொண்டு நலம் விசாரித்தவனை, ஆதி வந்து இறுக அனைத்துக் கொண்டான்.
அர்ஜுன் ரஞ்சனாவை பார்த்து, “எப்படி இருக்கீங்க அண்ணி?” என்று கேட்டுக் கொண்டே…. அவளிடம் இருந்த ஐஷுவை வாங்கித் தூக்கி போட்டு பிடிக்க… அது தன் பொக்கை வாய் காட்டி அழகாகச் சிரித்தது. அதில் மயங்கிய அர்ஜுன் “செல்ல குட்டி, எப்படிடா இருக்கீங்க? பாப்பாவை பார்க்க எவ்வளவு நாள் ஆகிடுச்சு, பாப்பா வளர்ந்திட்டாங்க.” என்று கொஞ்சி கொண்டிருந்தான்.
அர்ஜுன் ஐஸ்வர்யாவை கொஞ்சுவதைப் பார்த்து அனைவரும் ரசிக்க… ஆருவிற்கு ஆத்திரமாக வந்தது. அர்ஜுன் வந்ததில் இருந்து தன்னைக் கண்டுகொள்ளவில்லை என்று அவளுக்குக் கோபம். ஆரு ஒரு கண்ணை அர்ஜுன் மீதும், ஒரு கண்ணைச் சூர்யா மீதும் வைத்திருந்தாள். அதே போல் சூர்யாவும் அவன் வீட்டு ஆட்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும், பார்வை அடிக்கடி ஆருவை வருடிவிட்டே சென்றது.
சிறிது நேரம் பொறுத்து பார்த்த ஆரு, அவளே அர்ஜுனின் அருகில் சென்று… அவன் தோளைத் தட்ட… அர்ஜுன் திரும்பி பார்த்தவன், அங்கே ஆரு கண் கலங்கி நிற்பதை பார்த்ததும், அவளைத் தோளோடு சேர்த்து அணைத்து ஐஷுவிடம் “நம்ம வீட்ல உனக்கு முன்னாடி ஒரு பேபி இருக்கு, அது யாருன்னு தெரியுமா? உன்னோட அத்தை தான் அது. இன்னும் உங்க அத்தை பேபி தான்.” என்று கிண்டல் செய்ய… ஆருவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
இந்த இரண்டு வருடத்தில் அர்ஜுனின் குடும்பத்திற்கும், சூர்யாவின் குடும்பத்திற்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டிருந்தது. அர்ஜுன், சூர்யாவின் வரவேற்பு படலம் முடிந்ததும், இரண்டு குடும்பமும் தங்கள் வீட்டிற்குக் கிளம்பினர். நீங்கள் எல்லோரும் ஆவலாக எதிர் பார்க்கும் மீரா இப்போது சென்னையில் இல்லை.
அர்ஜுன் வீட்டிற்கு வந்ததும் குளித்தவன் பின் எல்லோரோடும் சேர்ந்து பேசி அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிட்டான். சாப்பிட்டதும், “கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன் மா.” என்று கிளம்பி வெளியே சென்றான். அர்ஜுன் சென்றது பெசன்ட் நகர் பீச்க்கு. இங்க மீராவோட எத்தனை தடவை வந்திருக்கோம் என்று நினைத்து பார்த்தவனின் மனம் மீராவிற்காக ஏங்கியது.
மீராவுக்குக் கல்லூரி கேம்பஸில், பெங்களூரில் இருக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்க…. மீரா அங்கே சென்று விட்டாள். அவள் சித்தியிடம் படித்து முடிக்கும் வரை மட்டும் தான் இந்த வீட்டில் இருப்பேன், பின் வேலை கிடைத்ததும் சென்று விடுவேன் என்று சொன்னதற்கு ஏற்ப… வெளியூரில் வேலை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாள்.
மீனாக்ஷி முன்பு மாதிரி அவளிடம் வெறுப்பைக் காட்டவில்லை என்றாலும், மீராவிற்குத் தான் அந்த வீட்டில் வேண்டாத விருந்தாளி என்ற எண்ணம் போகவில்லை. அவளது தந்தை தடுத்ததைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை.
“உனக்கு இந்த வீட்ல இருக்க விருப்பம் இல்லைன்னு எனக்குத் தெரியும் மீரா. உனக்கு மாப்பிள்ளை பார்ப்போமா, ஒரு நல்ல டாக்டர் வரன் வந்திருக்கு.” ராம்நாத் ஆர்வமாகக் கேட்க….
“வேண்டாம், இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும், பார்க்கலாம்.” என்றாள் மீரா எங்கோ பார்த்துக் கொண்டு.
“மீரா உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா தைரியமா சொல்லு.” ராம்நாத் சொல்ல….
மீராவும் இதைவிட்டால் வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று நினைத்தவள், “எனக்கு அர்ஜுனை பிடிச்சிருக்கு, நான் அர்ஜுனை விரும்புறேன்.” என்றாள்.
“அர்ஜுனா….. நல்ல பையன் தான், குடும்பமும் நல்ல குடும்பம். ஆனா… நம்மவங்க இல்லை.” ராம்நாத் இழுக்க….மீரா அவரைப் பார்த்து முறைத்தாள். அவளின் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த ராம்நாத், “நான் காதலுக்கு எதிரி இல்லை மீரா. நான் என்னோட அம்மாவுக்குச் சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன், உனக்குப் பிடிச்ச வாழ்கையை ஏற்படுத்தித் தர்றதா… அதோட எனக்கும் அர்ஜுனை பிடிச்சிருக்கு. நான் அவங்க வீட்ல பேசட்டுமா.” என்றார்.
“இப்ப வேண்டாம் அர்ஜுனோட தங்கைக்குக் கல்யாணம் பண்ணனும். அர்ஜுனோட அப்பாவுக்கு ஓகே தான், ஆனா… அவங்க அம்மாவுக்குத் தெரிஞ்சா என்ன சொல்வாங்களோ?” மீரா கவலையாகச் சொல்ல…
“அவங்க அப்பாக்கு ஓகேனா அப்புறம் என்ன, உன்னை மாதிரி ஒரு மருமகள் கிடைக்க அவங்க குடுத்து வச்சிருக்கணும் மீரா.” என்றார் ராம்நாத் பெருமையாக. மீரா முகத்தில் சந்தோசம் இல்லை, அவள் மெளனமாக இருந்தாள்.
மீராவின் முகத்தைப் பார்த்த ராம்நாத், “கவலைபடதே மீரா… அவங்க உன்னைக் கண்டிப்பா வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க. அவங்க அம்மா வேண்டாம்னு சொன்னாலும், நான் உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.” என்றார்.
“அதுக்கு அர்ஜுன் ஒத்துக்கமாட்டாங்க, ஏன்… நானுமே ஒத்துக்க மாட்டேன். வித்யா ஆன்டி முழு மனசா என்னை ஏத்துக்காம, நான் அவங்க வீட்டுக்கு மருமகளா போறது… எப்பவும் நடக்காது.” என்றாள் மீரா உறுதியாக.
“எதுக்கு மீரா இந்தப் பிடிவாதம், வீட்ல இருக்கிற எல்லோரும் லவ் மேரேஜ்க்கு ஒதுக்கனும்னா நடக்கிற காரியமா?”
“வித்யா ஆன்டிக்கு விருப்பம் இல்லாம, நாங்க கல்யாணம் செஞ்சிக்கிட்டா… கடைசி வரை நாங்க ஒரே குடும்பா சேர்ந்திருக்க முடியாமலே போய்டும். எனக்குப் பிறந்த வீட்ல அமையாத குடும்ப வாழ்க்கை, புகுந்த வீட்லையாவது அமையனும். அதனால் அவங்க முழு மனசோட சம்மதிக்க, நான் எத்தனை வருஷம் வேணாலும் காத்திருப்பேன்.”
பிறந்த வீட்ல அமையாத குடும்ப வாழ்க்கை என்ற மீராவின் வார்த்தை, ராம்நாத்தை கூர் வால் போல் ஆழமாகத் தாக்கியது. சிறிது நேரம் அங்கே கனத்த அமைதி நிலவியது.
“சரி, உன்னோட இஷ்டபடியே நடக்கட்டும். நீ சொல்லும் போது நான் அவங்க வீட்ல பேசுறேன்.” என்று சொல்லிவிட்டு ராம்நாத் மீராவின் அறையில் இருந்து வெளியே சென்றார்.
வருண் தடுத்தும் மீரா கேட்கவில்லை. மாதம் இருமுறை வந்து சென்னையில் தங்குகிறேன் என்று சொன்னதும் தான் வருண் அவளைப் போக விட்டான். மீராவின் அப்பா அவளை வெளியே தங்க அனுமதிக்கவில்லை. அவள் அலுவலகத்திற்கு அருகில் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவளுக்கு என்று இரு படுக்கை அறைகளைக் கொண்ட ப்ளாட் வாங்கிக் கொடுத்துவிட்டார். அதில் மீராவுடன் கீர்த்தனாவும் தங்கி கொண்டாள். அவளுக்கும் பெங்களூரில் தான் வேலை. அதனால் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தனர்.
“இத்தனை நாள் எதோ எனக்கு உரிமை இல்லாத இடத்தில இருக்கிற மாதிரி இருந்தேன் அர்ஜுன். இனியும் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல… இனிமேலாவது சுயமரியாதையோட வாழ ஆசைபடுறேன். ப்ளீஸ்… என்னைப் புரிஞ்சிக்கோங்க.” மீரா சொல்ல… அர்ஜுனும் அவளின் மனதை அறிந்ததால்… அவள் பெங்களூர் செல்ல சரி என்றான்.
மீரா இப்போது தான் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பதால்…. விடுமுறை எடுக்க முடியாது. அதனால் சனி, ஞாயிறு விடுமுறைக்குச் சென்னைக்கு வருவதாகச் சொல்லி இருந்தாள். சென்னைக்கு வந்த பின்னும் மீராவை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் அர்ஜுனுக்கு இருந்தது. இன்னும் நாலு நாள் இருக்கு அவளைப் பார்க்க… என்று நினைத்துக் கொண்டே எழுந்து வீட்டிற்குச் சென்றான்.
சூர்யா ஆருவை தனியாகச் சந்திக்க ஆசைபட்டான். ஆனால் ஆரு அவனுடன் தனியாக வெளியே செல்ல பயந்தாள். “போன்னில் மட்டும் நல்லா வாய் பேசுற, நேர்ல வர்றதுக்கு இவ்வளவு தயங்குற.”
“வரேன் சூர்யா… அப்புறம் வரேன்.” என்று சொல்லி ஆறு அவனை ஏமாற்றிக் கொண்டிருந்தாள்.
அன்று வெள்ளிக்கிழமை மீரா காலையில் வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பும் போதே… இரவு அங்கிருந்தே ரயில் நிலையம் சென்றுவிடுவது என்று தயாராக வந்திருந்தாள். நேரம் ஆக ஆக அவளுக்கு ஒரே பரபரப்பாக இருந்தது. அர்ஜுன் சென்னை வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. தான் இன்னும் அவனைப் பார்க்கவில்லை என்று நினைத்த போது, அவளுக்கே அவள் மீது கோபம் வந்தது.
அவளுக்கு எப்போது அவனைப் பார்ப்போம் என்று இருந்தது. மதியம் வரை பொறுத்தவள் அதற்கு மேல் முடியாமல்… மாலை எதாவது விமானம் இருந்தால் அதில் சென்றுவிடுவோம் என்று நினைத்து, உடம்பு முடியவில்லை அதனால் தான் வீட்டிற்குக் கிளம்புவதாக மேனேஜருக்கு ஒரு மெயில் அனுப்பியவள், ட்ராவல் ஏஜென்சிக்கு போன் செய்து, டிக்கெட்டுக்கு சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.
அவள் அலுவலக வாயிலில் இருந்த படிக்கட்டில் இறங்கும் போது, அர்ஜுன் படியில் மேலேறிக் கொண்டிருந்தான். மீராவால் நம்பவே முடியவில்லை. இது அர்ஜுன் தானா…நாம் சரியாகத்தான் பார்கிறோமா என்று தன் கண்ணைக் கசக்கி பார்த்தவள், நிஜம் தான் என்று தெரிந்ததும் சிலையாக நின்றாள்.
அர்ஜுன் மேல் படியின் அருகே வந்ததும் தான் மீராவை பார்த்தான். அவன் முகம் புன்னகையில் விரிந்தது. அவளைத் தேடி வரும் போது, அவளே எதிரில் வந்து நின்றால் சொல்லவும் வேண்டுமா… சிறிது நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றனர்.
முதலில் சுயநினைவுக்கு வந்த அர்ஜுன், மீராவின் கை பிடித்து அழைத்துக் கொண்டு படியில் இறங்கினான். அவள் அலுவலகத்தை விட்டு தள்ளி வந்ததும், ஒரு இடத்தில் நிறுத்தி அவளை நன்றாகப் பார்த்தவன், “எப்படி இருக்க மீரா? பெங்களூர் வந்ததும் இளச்சிட்ட.” என்றான்.
மீரா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவள் அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“போதும் மீரா பார்த்தது. நமக்கு மூன்னு மணிக்கு ட்ரைன். இப்ப ஒரு மணி ஆகுது கிளம்பலாமா… உன்னோட வீட்டுக்குப் போய்த் திங்க்ஸ் எதுவும் எடுக்கணுமா? ஆபீஸ்ல சொல்லனுமா?” அர்ஜுன் வரிசையாகக் கேள்விகளாகக் கேட்க… “இல்லை, நாம போகலாம்.” என்றாள் மீரா.
அர்ஜுன் அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, ரயில்வே ஸ்டேஷன் வருமா என்று கேட்க… ஆட்டோ டிரைவர் வருவதாகச் சொல்ல… இருவரும் ஆட்டோவில் ஏறினர். ஆட்டோவில் ஏறியதும் தான் மீரா தெளிந்தாள்.
“அர்ஜுன் நீங்க எப்படி இங்க? நீங்க வரேன்னு சொல்லவே இல்லை. நானும் உங்களைப் பார்க்க தான் ஆபீஸ் லீவ் போட்டுட்டு வந்தேன்.”
“எனக்கு அங்க இருக்கவே முடியலை மீரா, அது தான் விடியற்காலை ட்ரைன் ஏறி வந்துட்டேன்.”
மீரா அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அர்ஜுன் அவள் தோளை சுற்றி கை போட்டு அனைத்துக் கொண்டான். இருவரும் ரொம்ப மாதங்கள் கழித்து ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்த மகிழ்ச்சியில், அப்படியே கண்மூடி அந்த நிமிடத்தை மனதிற்குள் ரசித்தனர்.
Advertisement
error: Content is protected !!