Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிழலை திருடும் இருள் – 6(2)

“டேய்.. எனக்கு என் அமைதி முக்கியம்.. அவ்வளவு தான்.. எங்க ம்மா மட்டும் பிரச்சனை பண்ணி இருந்தாங்க ஊருக்கே காட்டு தீயா பரவி இருக்கும்.. எல்லாருக்கும் கேலி கூத்தாக எனக்கு விருப்பம் இல்ல..”
என தீனா சொன்னதும் சரியாக தான் இருந்தது.

“உனக்கு கோபம் இல்லையா தீனா..”

“நிறையவே இருக்கு தாத்தா.. இந்த கடை எனக்கு கிடைக்க விடாம செய்ய நினைத்ததில் இருந்து எல்லாமே எனக்கும் தெரியும்.. எப்படியும் என் காதுக்கும் விஷயம் வந்திடும்.. பதிலுக்கு பதில் செய்ய எனக்கும் தெரியாம எல்லாம் இல்ல.. ஆனால் உங்க மேல உள்ள மரியாதை தான் என்னை தடுக்குது..

எங்க அப்பாவிற்கு நீங்க நிறைய செஞ்சு இருக்கீங்க.. நீங்க மட்டும் இல்லைனா நானும் தலையெடுக்காத அந்த காலத்தில் எங்க குடும்பத்தை அவரோட கூட பொறந்தவங்க எல்லாம் சேர்ந்து நடு தெருவில் தான் நிறுத்தி இருப்பாங்க.. அந்த நன்றி எப்பவும் எனக்கு இருக்கு..”
எனறு தீவிரமாய் பேசி வந்தவன்,



Advertisement

“அத்தோட சொல்ல போனா.. உங்க மகன் நினைச்ச எல்லாமே அவர் எதிரே பார்க்காத விதமா எனக்கு நல்லதா தான் முடிஞ்சு இருக்கு.. அதை வைச்சு பார்க்கும் போது அவர் தலையிடால ரொம்ப நாளா இழுத்துகிட்டு இருக்க என் கல்யாண பிரச்சனையும் ஒரு முடிவை எட்டிடும்னு தான் நினைக்கிறேன்..”
என்று சாதாரணமாய் கூற அதில் வந்த சிரிப்பை மறைத்து ஆதவனும்,

“அப்போ சித்தப்பாவை நாரதர்ன்னு சொல்றீயா நீ..”

என கோபம் போல் கேட்க பதிலுக்கு தோளை மேலும் கீழும் அசைத்த தினகரன் முகத்திலும் முதன்முதலாய்  புன்னகை பூத்தது.

Advertisement

சிவசுப்ரமணியமோ எதுவும் பேசவில்லை. தினகரனை தான் பார்த்து இருந்தார். இதுவரையில் பார்த்தால் மரியாதை நிமித்தம் ஓரிரு வார்த்தைகள் பேசுவான். அவ்வளவு தான். எனவே அதிகம் அவனை தெரியாது. ஆனால் இன்று இவனின் பேச்சும் ஒவ்வொரு வார்த்தையில் தொனித்த ஆளுமையும் உறுதியும் அவருக்கு கமலினியை தான் நினைவு படுத்தியது. ஏனோ தன் போக்கில் அவரின் மனம் தினகரன் அருகில் கமலினியை நிறுத்தி பொருத்தம் பார்த்து இருக்க,

Advertisement

“தாத்தா..” என இருவரும் ஒரே நேரத்தில் அழைக்கவும் தான் கலைந்தார். தன் சிந்தனை செல்லும் பாதை அவருக்கே அதிர்ச்சி தான். ஆனாலும் நடந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

அப்படியே கிளம்ப முனைந்த  தாத்தாவை ஆதவனுடன் பிடிவாதமாய் தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

ஏற்கெனவே இவர்கள் வரவை தினகரன் தெரிவித்து இருந்ததால் எதிர்பார்த்தே காத்திருந்த லிங்கேஷ்வரன் – லலிதா தம்பதியர் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

Advertisement

முதுமையின் காரணமாய் அதிகம் அவர் வெளியே செல்வதை தவிர்த்தே இருப்பதால் இவர்கள் வீட்டிற்கு வருவது எல்லாம் அரிது தான். எனவே அவரை சாப்பிடாமல் செல்ல கூடாது என பிடித்து வைத்துக் கொண்டனர்.

அவர் நினைத்து கிளம்பிய சூழலிற்கு முற்றிலும் தலைகீழாக தான் எல்லாம் நடந்தது. அதுவும் அங்கே இங்கே சுற்றி  தினகரனின் திருமணம் குறித்த பேச்சில் தான் வந்து நிறுத்தினார் லிங்கா.

‘இதனை விடவே மாட்டார்களா..’
தினகரனிற்கு ஆயசமாய் வந்தது.

லலிதாவின் சகோதரி உறவில் பெண் பார்த்ததும் தன் சகோதரனால் நின்று போனது என முன்பே பேசி பிரளயமான விஷயத்தை புதிதாய் கூற எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் கேட்க தாத்தாவிற்கு சங்கடமாய் இருந்தது.

அவரின் நிலை உணர்ந்து தினகரனும்,

“ப்பா.. இப்ப ஏன் இதெல்லாம் மறுபடியும் கிளர்றீங்க..”
என கண்டனமாய் கூற அவனுக்கு மீண்டும் பேசுவதில் கஷ்டமாக இருக்கிறதோ என்று எண்ணிய லிங்கா அமைதியாகிவிட்டார். ஆனால் கணவன் தொடங்கிய விஷயத்தை லலிதா விடுவதாய் இல்லை.

“ஆமா டா.. என்ன பேசினாலும் வாயை அடைச்சிடு..” என்றவர்,

“நீங்களாவது மூத்தவங்களுக்கு கண்டிச்சு சொல்லுங்க பெரியப்பா.. நாங்க பேசினால் தான் இல்லாத பொல்லாத மாதிரி திரிச்சு விட்டுடுறாங்க.. அதனால தான் இப்ப எல்லாம் அவங்க வம்பிற்கே போறது இல்லை…”

என்று ஆதங்கத்தோடு கோரிக்கை வைக்க,

“சரி ம்மா.. நீ கவலை படாத.. நான் பேசுறேன்..” என்று அவர் ஆறுதலாய் சொல்ல கவலை எங்கே விட்டது என மேலே அவர் தொடர்ந்தார்.

“இந்த களேபரத்தில் இவன் இந்த பேச்சே எடுக்க கூடாது சொல்லிட்டான்.. ஜோசியர் இவனுக்கு கல்யாணம் பண்ண இது தான் உகந்த காலம்ன்னு சொல்றார்.. எங்களுக்கு என்ன செய்யிறதுன்னே புரியல பெரியப்பா.. அவசரத்திற்கு ஏதோ ஒரு பொண்ணுன்னு கட்டி வைக்க முடியுமா..?? நல்ல குடும்பம்.. நல்ல பொண்ணா எங்க எப்படி தேடுறது.. அப்படி தேடி கொண்டு வந்தாலும் இப்படி கெடுத்து விடுறதுக்குனே கண் கொத்தி பாம்பா காத்துட்டு இருக்காங்க..”

என அவர் விடாமல் புலம்பிக் கொட்ட அவனிற்கு அப்படியே எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.

“கல்யாணம்.. கல்யாணம்.. கல்யாணம்.. யப்பா டேய்.. எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை அது தான்னு எங்கம்மா என்னை சொல்ல வைச்சுடும் போல..”

என்று சன்னமாய் அருகில்  ஆதவனிடம் சொல்ல அவனுக்கு பாவமாகவும் இருந்தது. அதே சமயம் சிரிப்பும் வந்தது.

“ஆனா ஒன்னு டா.. அத்தையோட ‘லூப் மோட்’ பேச்சிற்கு அசராமல் இத்தனை வருஷம் மாமா அமைதியா கேட்டு வந்து இருக்கார் பார்.. அதுக்காகவே இந்த திருச்சி மாநகரத்தில் அவருக்கு ஒரு சிலை வைக்கலாம்…”

என்று கூறிவிட்டு சிரிக்க மெதுவாய் பேசிக் கொண்டிருந்த இருவரும் தாத்தா கேட்ட கேள்வியில் மற்ற எல்லாம் மறந்து சடாரென்று அவரிடம் திரும்பினர். லிங்கா லலிதா முகத்திலும் இவர்கள் திகைப்பிற்கு குறைவில்லை.

பின்னே,

“ஊரெல்லாம் தேடி அலைச்சேன்னு சொல்றீங்க.. ஆனா.. என் பேத்தி கமலினியை கேட்கணும்னு தோணவே இல்லையா..??”
என்று கேட்டால் திகைக்காமல் என்ன செய்வது..?? ஆனால் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு காரணங்கள் இருந்தது.

“தாத்தா யோசிச்சு தான் பேசுறாரா..?? அவ்வளவு நேரம் இவர் மகனோடு எனக்கு இருக்கும் பிரச்சனை எல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்படி ஒரு கேள்வி இவருக்கு..” என எண்ணியே தினகரனின் மண்டை காய்ந்தது.

ஆதவனோ முழு அதிர்ச்சியில் இருந்தான். அவனுக்கு கிளம்பும் முன் கமலினியிடம் தான் பேசியது தான் நியாபகம் வந்தது.

‘ஒருவேளை நான் சொன்னதை கேட்டு தான் இப்படி கேட்கிறாரோ..?? இதை மட்டும் தாத்தா சீரியஸா எடுத்து நடத்த நினைச்சார்னா பெரிய பெரிய பூகம்பம் வெடிக்குமே..!! நான் தான் தாத்தாவை தூண்டி விட்டேன்னு கமலினி என்னை கொன்றுவாளே.. ”
நினைக்கவே பீதியாக கலவரமாய் பார்த்து இருந்தான்..

லிங்கேஷ்வரன் லலிதா இருவரும் மற்றவரை தான் பார்த்துக் கொண்டனர். உண்மையிலே அவர்கள் இதனை யோசிக்க கூடவில்லை. லிங்காவின் தங்கைகள் எடுத்ததுமே அப்படி கூறிய பின்பு சொந்ததில் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது இல்லை.

இப்போது சிவசுப்ரமணியம் கேட்டதும் லலிதா,

‘கமலினியா..??  தீனா மாதிரியே நல்ல பொறுப்பான பிள்ளை..’ என யோசித்து அவருக்கும் ஆசையாக தான் இருந்தது.

‘ஆனா… தீனா கொஞ்சம் ஒல்லியா இருக்கிறதுக்கு கமலினி அவன் பக்கத்தில் நின்றால் ரொம்ப சதையா தான் தெரிவா இல்ல..

உயரம்..??? ஆதி உயரத்துக்கு இருப்பாளே.. அப்போ தீனாவுக்கு.. ம்ம்.. கிட்டதட்ட ஒரே அளவு தான்.. அப்போ ஜோடி பொருத்தம் எப்படி இருக்கும்..

ம்ச்.. எல்லாம் அழகா தான் இருப்பாங்க.. கமலினி தங்கமான பொண்ணு.. அவளை மாதிரி யார் கிடைப்பா..?? “

என்று அதற்குள் மனக் கண்ணில் தானே கேள்வி தானே பதில் என கற்பனை குதிரையை ஓடவிட்டார்.

லிங்கேஷ்வரன் தான் முதலில் தெளிந்து,

“உங்களுக்கும் தெரியும் தானே ரேவதியும் சீதாவும் சொன்னது.. அதுக்கு அப்புறம் சொந்தத்தில் யோசிக்கவே இல்ல மாமா.. அதனால் தான்.. ”
என்று அவர் கேள்விக்கு விடையளித்தார்.

“ம்ம்ம்..” என புரிதலாய் தலையசைத்தவர்,

“சரி.. நான் தான் கேட்டேனே.. இப்ப என்ன நினைக்கிற லிங்கா..”
என்று நேரடியாகவே கேட்க,

“நான் யோசிக்க என்ன மாமா இருக்கு.. உங்களை என் அப்பா ஸ்தானத்தில் தான் வைச்சு பார்க்கிறேன்.. உங்க செல்ல பேத்தியை என் பையனுக்கு கட்டுறதுன்னா அதைவிட சந்தோஷம் வேற என்ன சொல்லுங்க..” என்றவர்,

“ஆனால் அதே சமயம் சுந்தரமூர்த்தியையும் தெரியும் மாமா.. அவனுக்கு அவன் மகள் கல்யாணம் குறித்து வேற மாதிரி ஆசை இருக்கும்..”

அவருக்கு விருப்பம் இருக்காது என்பதையே சுற்றி வளைத்து கூறினார்.

‘தங்களுக்கு பிரச்சனையே இல்லை.. அவருக்கு தான் பிடிக்காது..’ என்பது போல் தந்தை கூறியதில் சுந்தரமூர்த்தியைவிட தன்னை தாழ்த்தியது போல் தான் அவனுக்கு இருந்தது.

இவர் பேசியதும் தாயின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தையும் கண்டு தினகரனிற்கு கோபம் சுறுசுறுவென ஏற தான் எதுவும் கூறினால் அது தாத்தாவிற்கு அவமதிப்பாய் போய்விடும் என்பதால் வாயை இறுக்க மூடி முறைப்போடு அமர்ந்து இருந்தான்.

அவனின் பாவனையும் கவனித்து இருந்த சிவசுப்ரமணியம் சிரிப்போடு,

“யாரும் எப்படியும் ஆசை படலாம் லிங்கா… ஆனால் கடவுள் நாட்டம் ஒன்னு இருக்கே.. அது நம்மை எப்படி வேண்டும் என்றாலும் இழுத்து செல்லலாம் இல்லையா..!!”

என்று பூடகமாய் கூறியவர் மேலே அதனை பற்றி எதுவும் பேசவில்லை. அப்படியே விடைபெற்று கிளம்பிவிட்டார்.

போகும் போது ஆதவனிடம்,

“டேய் ஆதவா… இங்க நான் பேசிய எதையும் யார்கிட்டவும் சொல்ல கூடாது புரியுதா..”

என்று சொல்ல கண்ணாடி வழியே அவரை முறைத்து,

“அதை நான் சொல்லணும் தாத்தா.. நீங்க இப்ப பேசினதை மறுபடியும் எங்கவும் பேசி வைக்காதீங்க… யாருக்குமே இதில் விருப்பம் இருக்காது.. தினகரனையும் சேர்த்து தான்..”
என அவன் கூற,

“எனக்கு என்ன செய்யணும் தெரியும்.. நீ பேசாம வண்டியை ஓட்டுடா..”
என்றார் அதட்டலாய்..

சிவசுப்ரமணியம் சென்றதும் லலிதா,

“ஏங்க.. பெரியப்பா.. சும்மா பேச்சுக்கு கேட்டாரா..?? இல்ல நிஜமாவே சொன்னாரா..??? எப்படி எடுத்துகிறதுன்னு புரியலையே..”
என்று தன் கணவனிடம் கேட்க,

“எனக்கும் அதே சந்தேகம் தான் லலிம்மா..”
என்றார் லிங்காவும்..!!

“பெரியப்பா அப்படி காரணமே இல்லாம எல்லாம் பேசுறவர் இல்லையே.. ஒரு வேளை வீட்டில் கலந்துகிட்டு பின்னாடி உறுதியா பேசலாம்னு நினைச்சு இருப்பார் இல்ல..”

என்று தானே ஒன்றை யூகித்து சொல்ல மனைவியின் ஆர்வம் புரிந்து லிங்கேஷ்வரன்,

“இருக்கலாம்.. நல்லதாவே யோசிப்போம்.. நல்லதே நடக்கும்..”
என்று நிறைவாய் கூற இவர்களை
பார்த்து டென்ஷன் தலைகேற நின்றிருந்த தினகரன்,

“நிறுத்துறீங்களா.. ரெண்டு பேரும் என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறீங்க..”
என்று கத்தினான்.

“என்ன தீனா..”

“படிச்சு படிச்சு அவ்வளவு சொல்லியும் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறீங்க.. நீங்களா கற்பனை பண்ணிக்கிறது.. அப்புறம் நடக்கலைன்னு இருக்கிறவங்க உயிர எல்லாம் வாங்கிறது.. உங்களை என்ன சொல்றதுன்னு தெரியல ம்மா..

அப்புறம் அப்பா.. என்ன சொன்னீங்க.. அவருக்கு வேற ஆசை இருக்குமா..?  இங்க எனக்கும் அவரோட பொண்ணை போய் கட்டிக்கணும்ன்னு தலையெழுத்து இல்ல.. நீங்க நினைக்கிற இதுவும் நடக்காது.. இத்தோட நிறுத்திகோங்க.. ”
என மூச்சை பிடித்து ஆத்திரமாய் பேசிவிட்டு அப்படியே கடைக்கு கிளம்பிவிட்டான்.

“என்ன லலிதா.. தீனா இப்படி பேசிட்டு போறான்..”
என்று கவலையாய் லிங்கா கேட்க  லலிதாவிடம் எந்த மாறுதலும் இல்லை.

“இவன் இப்படி பேசலைனா தான் ஆச்சரியம்..!! விடுங்க.. நம்மை தானே ஒன்னும் செய்ய கூடாதுன்னு சொல்றான்.. கொஞ்ச நாள் எந்த வரனும் பார்க்காம நாம அமைதியாவே இருப்போம்.. எதுவா இருந்தாலும் பெரியப்பா கிட்ட இருந்து முதலில் வரட்டும்..”

என்று வழக்கத்திற்கு மாறாய் அலட்டிக் கொள்ளாமல் சாதாரணமாகவே கூறினார். ஏதோ ஒரு வகையில் சிவசுப்ரமணியத்தின் வார்த்தைகள் அவருக்கு நம்பிக்கை கொடுத்து இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!