Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

முன்பனி முத்தாட…

அத்தியாயம்?1

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை

எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.

?????



Advertisement

தமிழகத்தின் தென்கிழக்கு மாவட்டமொன்றுடன் சேரும் ஓர் சிற்றூரின் சிங்காரி அவள்.
அவ்வூரின் பெயரோ வேம்பூர்.

சிங்காரிக்கு வேறு அர்த்தம் ஏதுமிருந்தால் அதனை விடுத்து, இங்கு அவளது பெயர் என்று மட்டும் கொள்ளலாம்.

வேம்பூரில் நில புலன்கள் அதிகமிருக்கும் தனவான் ஒருவனது வீட்டின் கூடத்தில் நின்றிருந்தாள், அந்த சிங்காரி.

Advertisement

“என்ன சிங்காரி.. இப்பலாம் சொன்ன வேலைய முடிக்காம அடிக்கடி காசு வேணும் னு வந்து நிக்குற… என்னா கதை?”
மேலே குறிப்பிட்ட தனவானான கிரிதரன், தனது கட்டை குரலை உயர்த்தி கறாராக வினவினான்.

Advertisement

“என்னா இப்புடி கேட்டுடீங்க? எனக்கு என்ன கதை இருக்க போவுது? எல்லாம் கைச்செலவு கதை தான்” என்ற சிங்காரி, அவளுக்கே உரிய அந்த அகோர சிணுங்கலை சிணுங்கி வைத்தாள்.

அச்சிணுங்கல், அதன் வழக்கப்படி வேலை செய்திருந்தது என்று தான் கூற வேண்டும்.
அவள் கேட்ட பணத்தை கையில் எடுத்து எண்ணத் தொடங்கிய கிரிதரன்,

“வேற எப்டி கேக்க சொல்ற? சொன்னது என்னாச்சு? அவன் ஒத்துக்கிட்டானா?”

Advertisement

பணமென்றால் பிணமே ஆவென பிளக்குமாம். இவள் பிளக்கமாட்டாளா என்ன? அவ்வாறு வாய் பிளந்து மகிழ்ச்சியுடன் அவனை ஏறிட்டவள்,

“பொசுக்குன்னு இப்டி சொல்லிட்டா எப்புடி… நீங்க சொன்னிங்க ன்னு இதுக்கு முன்ன நான் ஒன்னுமே செய்யலையாக்கும்?” தான் செய்ததை எப்படி மறக்கலாம் என அவனிடம் குறைப்பட்டுக் கொண்டவள், தொடர்ந்து,

“இன்னிக்கு ராத்திரி எப்டியும் அந்தாள வழிக்கு கொண்டாந்திருவேன்” என்றளித்த உறுதியில், அவளது கொடை வள்ளலை சமாதானம் செய்ய முயன்றாள்.

அம்முயற்சிக்கு பயன் இல்லாது போனால் தான் அதிசயம்.
அப்படியான அதிசயம் ஏதும் நிகழாது போகவே, அவளை இழுத்து தன்னருகே அமர்த்திக்கொண்டவன்,

“அதான… நீதான் ராத்திரியின் ராணியாச்சே … எப்டியோ ராத்திரியோட ராத்திரியா பேசி என் ராத்திரிக்கு ஒரு வழி பண்ணு” என்றவன், அவள் வேண்டும் பணத்தை எண்ணி அவளிடம் நீட்டியிருந்தான்.

அவனிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தை காற்றும் தீண்ட அனுமதிக்காது, உடனடியாக சுருட்டி ரவிக்கை துணியில் திணித்துக்கொண்டே,

“நாளைக்கு காலைல நல்ல சேதியோட வரேன்ய்யா.. விசேஷத்துக்கு நாள் குறிக்க தயாரா இரு” என சத்தியம் செய்து கூறியவள்,
நாளை யாருக்கு என்ன காத்திருக்கும் என யவராலும் கூற முடியாது என்பதை உணராது விடைபெற்று சென்றாள்.

இக்காட்சிகள் வேம்பூரில் அரங்கேறி இருந்த நேரம், பக்கத்து ஊரான வில்லியனூரில், “கை கொடுக்கும் கை” என்ற அறக்கட்டளையின் மூலமாக உதவி வழங்கும் விழா ஒன்றிற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது.

அந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் இடமானது, மேடை, மைக், தோரணங்கள் என அலட்டலின் சாயல் சிறிதுமில்லாது, வெறுமனே முகாம் போல் தான் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

“கேசவன்… இங்க வாங்க… இங்க என்ன பிளாஸ்டிக் சேர் போட்ருக்கீங்க?
வீட்லருந்த மர நாற்காலிகளை தான போட சொன்னேன்?”
குரலில் இருக்கும் இலகுத்தன்மை நிச்சயம் அவள் வார்த்தைகளில் இல்லாது, அழுத்தத்துடன் கேட்ட சத்யபாமாவை பாவமாக ஏறிட்ட கேசவன்,

“தம்பி தான்ம்மா போட சொன்னாரு” என்க,

“அவரா?
ம்ச்.. நான் அவர்கிட்ட சொல்லிக்கிறேன். நீங்க வேற நாற்காலிகள் கொண்டு வந்து போடுங்க” எனக் கூறிக்கொண்டிருக்கையில்,

“அதெல்லாம் வேணாம் சத்யா. இதுவே இருக்கட்டும்” என்று வந்த அதிகாரக் குரலில் அவனை திரும்பி பார்த்தாள், சத்யா.

‘எல்லாமே உன்னோட இஷ்டப்படி தான் நடக்கணுமா?’ என்ற பார்வை சத்யாவிடம்.
அவளை சளைக்காது தானும் பார்வையிட்ட இளவேனிலிடம்,
‘ஆமா அப்படித்தான் னு வச்சுக்கோயேன்’ என்ற அழுத்தமே நிறைந்திருந்தது.

“இப்டியே இருக்கட்டும் கேசவன். நீங்க போய் வேற வேலைய பாருங்க” எனக் கேசவனிடம் உரைத்த சத்யா இளாவிடம் திரும்ப, அவனோ,

“நீயும் இப்படியே நின்னு என்னையவே பாத்துட்டு இருக்காம வேற வேல இருந்தா போய் பாரு” அலட்சியத்துடன் உரைத்தவன், அவளது முறைப்பை பொருட்படுத்தாது விலகிச் சென்றான்.

‘தன்னை சுற்றி இருக்கும் அனைவருக்கும் தன் மீது உண்டாகும் மதிப்பு, மரியாதை, இவனுக்கு மட்டும் இல்லாமல் போவதா’ என்ற ஆதங்கம் எப்போதும் போல் இப்போதும் சத்யாவிற்குள் எழ, அவனை வாய்க்குள் திட்டிக்கொண்டே, அடுத்தடுத்த ஏற்பாடுகளை கவனிக்க சென்றாள்.

சத்யபாமாவின் தந்தை குமரேசன் “கை கொடுக்கும் கை” என்ற அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக இதன் மூலமாக மக்களுக்கு உதவிகள் பல செய்து வெற்றிகரமாகவே டிரஸ்ட்டினை நடத்தி வருகிறார்.

இளாவிற்கு தனது சிறுவயதில், இது போன்ற அறக்கட்டளையின் மீதெல்லாம் நம்பிக்கை என்பது இருந்ததில்லை.

அதே எண்ணத்துடன் ஒரு முறை சத்யாவின் வீட்டிற்கு சென்றிருந்தபோது, பதினைந்து வயதான இளவேனில், குமரேசனிடம் துடுக்காக பேசி விட, அவரோ அதன் பின்னர் இளாவை விடவே இல்லை.

“நாங்க ஒண்ணுமே செய்ய மாட்டோம். இதெல்லாம் ஊரை ஏமாத்துற வேலை சொல்ற தான…
அப்டினா நீயே கூட இருந்து எல்லாத்தையும் எடுத்து செய்” என்றபோது அவசரப்பட்டு வாய்விட்டு விட்டோமோ என விழித்து நிற்காது,

“கண்டிப்பா செய்றேன். ஆனா நான் படிச்சி முடிச்சிட்டு வந்து தான் செய்ய முடியும். அதுவரைக்கும் உங்க ட்ரஸ்ட்டும் நீங்களும் இப்டியே இருக்கீங்களா பாப்போம்”
அந்த நேரத்திலும் தன் வாதத்தில் பிடிவாதமாக நின்றவனை காண குமேரசனுக்கு சிரிப்பாக தான் இருந்தது.

இருப்பினும் ‘சொன்னால் செய்வேன்’ என்ற இளாவின் இயல்பை அறிந்திருந்தவர், அவனை விட்டு பிடிக்கவே நினைத்தார்.

அப்படியாக ஐந்தாண்டுகளுக்கு முன், இளா, தனது பி. காம் படிப்பை முடித்த கையோடு அவரது அறக்கட்டளையில் தன்னை இணைத்துக்கொள்ள, அவர், அவனை பிடித்து விட்டார். அவனுக்கும் அவரை பிடித்து விட்டது.

இளவேனில் கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்துக்கொண்டான். ஒன்பதே முக்கால் ஆகியிருந்தது.

முன்பு அறிவித்திருந்தபடி காலை பத்து மணிக்கெல்லாம் பயனாளர்களும், பிறரும் கூடி விட்டனர்.

அந்த வட்டத்தில் உள்ள சிற்றூர்கள் மொத்தத்திலும் மாற்று திறனாளிகள் எண்ணிக்கையை கணக்கெடுத்து, அவர்களுக்கு மூன்று சக்கர வண்டியும்…

அவர்களே குடும்ப தலைவராக இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பத்திற்கு கறவை மாடும், அப்படி இல்லாத பட்சத்தில் உதவி தொகையும் வழங்கும் விழா இனிதே தொடங்கியது.

மக்கள் கூட்டம் அவர்கள் நினைத்ததற்கும் கூடுதலாக இருக்க, ஆங்காங்கே சிலர் வெயிலோடு உறவாடும் படி நேர்ந்தது கண்ட இளவேனில், சத்யாவை தான் முறைத்தான்.

அவன் முறைப்பை கண்டவள், அவனை நெருங்கி, “இப்ப என்னாச்சு?” என்றாள்.

“நீ ஏன் இப்படி விளம்பர பிசாசா இருக்க?
நான் அப்பவே சொன்னேன், எப்பவும் போல ஒரு ஒரு ஊரா குடுக்கலாம் ன்னு… கேட்டியா? ” மற்றவர்களுக்கு கேட்காத குரலில் அவளை கடிந்துக் கொண்டான்.

அவன் கடுமை காட்டினால் அவள் விடுவாளா? அவளும் முகத்தை காட்டினாள். அதிலிருக்கும் அலட்சியத்தையும் சேர்த்தே காட்டினாள்.

“இத்தன வருஷம் நீ சொன்னதை தான அப்பா கேட்டாரு… இந்த தடவ நான் சொன்ன மாதிரி செய்ஞ்சுட்டாரு…”

அவள் முகம் மாறாது புன்னகைத்த வண்ணம் பேசி அவனை கடுப்பேற்ற, அவன் முகம் மாறாமல் காக்க போராட வேண்டி இருந்தது. அருகிலிருக்கும் அவன் அன்னை கனகாம்பாளை பார்த்துக் கொண்டான்.

அந்த நொடி அவரது ஆராய்ச்சி பார்வையும் தங்கள் மீது இருப்பது உணர்ந்த இளவேனில், சத்யாவிடம் வழக்காடுவதை நிறுத்தி விட்டான்.

அவனது இந்த திடீர் அமைதியின் காரணம் அறிந்தவள், “எத்தனை நாளைக்கு இப்டி நடிச்சு உங்கம்மாவை ஏமாத்த முடியும்?” எனக் கேட்க,

“நான் ஏன் ஏமாத்த போறேன்? இப்ப அவங்க என்ன உண்மை னு நம்புறாங்களோ, அதையே உண்மையாக்கி காட்டுவேன்” என்றவனை கண்டு அவளுக்கு ஆயாசமாக இருந்தது.

“அப்ப என்னை உனக்கு பிடிக்கும்ங்கிற உங்கம்மா நெனப்ப உண்மை ஆக்க போற… அப்படிதான?” அவள் கேள்வியாக பார்க்க, அதற்கு பதில் கூறாது,

“இப்பவும் சொல்றேன் இதெல்லாம் தேவை இல்லாத ஆணி சத்யா.
நாம செய்றதே உதவி. அதுவும் முடியாதவங்களுக்கு செய்றோம்.
அப்டி இருக்கப்போ அவங்கள இப்டி அலைக்கழிக்கிறது தப்பு.
இத்தன வருஷம் டிரஸ்ட் நடத்துற உங்க நைனாக்கு இத கூட யோசிக்க தெரியலையே…
மக என்ன சொன்னாலும் தலையாட்டிட வேண்டியது”
என்றவன், கனகாம்பாளின் கவனம் தங்களிடம் இல்லாதிருப்பது கண்ட பிறகே அவளிடம் வம்பிழுப்பதை தொடர்ந்திருப்பான் போலும்.

“அப்பா பத்தி பேசுறது கூடாது இளா” என்றபோது, அவள் அது நேரம் வரை பொய்யாக ஒட்டி வைத்திருந்த சிரிப்பு மறைந்து போனது.

அதில் மனம் நிறைந்தவன், மேலும்,

“வண்டில நிக்க வச்சிருக்க மாட்ட பாத்துட்டு விலங்குகள் நல வாரியம், வேற வாரியம் னு எவனாவது போட்டு கொடுத்தா… உங்க நைனாவும் நீயும் தான் கேஸ், கோர்ட் ன்னு அலையணும்.

அப்படி யாராவது போட்டு கொடுக்க கேட்டான்னா… நானே அந்த அமைப்புகளோட நம்பரும் தேடி கொடுத்து, மாடெல்லாம் வெயில்ல படற பாடு னு போட்டோவும் எடுத்து கொடுப்பேன்”
இளவேனில் முழு மூச்சாக அவளை சீண்டும் வேலையில் இறங்க, அவளுக்கு மூக்கு விடைத்தது.

இளவேனிலை பொருத்தமட்டில் அவனுக்கு அது கண்கொள்ளா காட்சி.
அது அவளுக்கும் தெரிய,

“ஒரு நாள் கொஞ்ச நேரம் வெயில்ல காயுறதுல ஒண்ணும் ஆயிடாது.

பணமும், பொருளும் ஓசில கிடைக்குதுன்னா சும்மாவா…

அவங்களே அங்க கம்முனு நிக்குறாங்க. உனக்கென்ன?
ரொம்ப பண்ணாம முகத்தை சாதாரணமா வச்சிட்டு நில்லு ” என்று அவனிடம் கூறியவளின் முகம் தான் உண்மையில் கடுகடுவென இருந்தது.
இளாவிற்கு எதையோ சாதித்த நிறைவு.

அதன் பின்னர், அவள், அவன் புறம் திரும்பவே இல்லை.

அவனும் தான்!

இளவேனிலுக்கும் சத்யா பேசியதில் உண்டான கோபம் மட்டுப்பட கால அவகாசம் வேண்டியிருக்க, அவளை தவிர்த்தவன், குமேரசனுடன் சென்று நின்றுக் கொண்டான்.
அவருக்கு மறுபுறம் சத்யாவும் வந்து நின்றுக் கொண்டாள்.

முதலில் சிலருக்கு கனகாம்பாள் உதவி தொகை வழங்க வேண்டும்.

அடுத்து குமரேசன் சக்கர நாற்காலி வழங்க, அவரை தொடர்ந்து கதிர்வேல் மற்றும் பாண்டியன் என ஊர் முக்கியஸ்தர்கள் கறவை மாடுகள் வழங்குவதாக இருந்தது.

அதன்படியே கனகாம்பாள் முதலில் உதவித் தொகையை வழங்கிக் கொண்டிருக்க, பயனாளர்கள் வரிசையில் சலசலப்பு ஏற்பட்டது.

அங்கிருந்தவர்களின் கவனம் அந்த பக்கம் கடை விரிக்கும் முன்பு, குமரேசனிடம்,
“நீங்க இங்க பாருங்க. நான் போய் பாக்குறேன்” என்ற இளா உள்ளே புகுந்து விசாரிக்கலானான்.

“இந்தா தம்பியே வந்துடுச்சு. நீயே நல்லா கேளுப்பா… அந்த சைக்கிள் என் பொண்ணுக்கு இல்லைங்கிறான் இந்த நாரப்பய…

இவ்ளோ நேரம் கால் கடுக்க, நிக்க முடியாம நின்னுட்டிருந்த என் பொண்ணுக்கு வண்டி கொடுக்காம பதுக்கப் பாக்குறான் இந்த நாதாரி” என்றபடி சண்டைக்கு தயாராக நின்ற செல்வத்திடம்,

“சரி நான் கேக்கறன்… நீங்க சத்தம் போடாம இருங்க” என்ற இளா, அருகே நின்றிருந்த சபரியிடம்,

“என்னடா சொல்றாரு… இவர் பொண்ணுக்கு ஏன் இல்ல?” என விசாரிக்க,

“நீயே சொல்லு இளா… இந்த கணக்கெடுப்பு ஆறு மாசத்துக்கு முன்னாடி எடுத்தது தான… அப்போ இந்த பொண்ணு நல்லா தான் இருந்திருக்கு.

இப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் இப்டி ஆகிடுச்சாம்.
பேர் இல்லாம நாம எப்டி கொடுக்க முடியும். வேற யாருக்கும் குறையாதா?”

சபரி அளித்த விளக்கத்தில் இளாவின் பார்வை செல்வத்தை தாண்டி அவன் பின்னே நின்றிருந்தவளிடம் பாய, அடுத்த நொடி அதிர்ச்சியில் இளாவின் கண்கள் ஒரு நொடியேனும் அகன்று அளவானது.

‘இவளா? இவளுக்கு எப்டி?நல்லா தான இருந்தா? எப்டி எனக்கு தெரியாம?’
அடுத்தடுத்து எழுந்த கேள்விகள் அவனுள் எழும்பியிருந்த அதிர்வலைகளை மேற்கொண்டு ஆரவாரப் படுத்த,
‘இவள பாத்தத்துக்கு இப்படியான ஆரவாரமா தேவையா’ என்று மூண்ட எரிச்சலில், அக்கேள்விகளை மூட்டை கட்டி முடக்கி வைத்தவன், அவளை சில நொடிகள் வெறித்துப் பார்த்தான்.

அவள் பதில் பார்வை பார்ப்பது போல் தெரியவில்லை. வந்த கோபத்தை அடக்க வழியற்று சற்று கடுமையான குரலில்,

“அடுத்த முறை கொடுக்கறப்போ உங்க பொண்ணு பேர் சேர்த்துக்கிறோம். இப்ப கொடுக்க முடியாது. சிரமத்துக்கு மன்னிச்சிடுங்க. அங்க சர்பத் கொடுப்பாங்க. குடிச்சிட்டு கிளம்புங்க” என்றதும், செல்வத்தின் முகத்தில் அப்பட்டமான ஏமாற்றம் வந்தேறியது.

அந்த நொடியும் எதிரே நின்றிருந்தவள், தன் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ள வில்லை.

“இன்னும் ஏன் நிக்குற… கிளம்பு” என்று அதிகாரமாக கூறிய செல்வத்தை தொடர்ந்து அவளும் திரும்பி சென்றாள்.
அவள் பெயரோ வானதி!

செல்வம் அதீத கோபத்துடன் மகள் பின்னே வருகிறாளா என்பதை கூட கண்டுகொள்ளாது முன்னே செல்ல, மகளோ, தன் இயல்பு போல் நிதானமாகவே சென்றாள்.

அவர்கள் அங்கிருந்து கிளம்பவும், குமேரசன்,
“இளா” எனக் குரல் கொடுக்க,
வரேன் என்ற தலையசைப்புடன் அவரிடம் சென்றாலும், யாரும் அறியாதவாறு அவன் பார்வை அவள் செல்லும் திசையில் பதிந்து மீண்டது.

உதவி பெற்றவர்கள் ஒவ்வொருவரும் அவர்களை வாழ்த்தி செல்ல, சிலரோ,
“புள்ளைங்களுக்கு எப்போ கல்யாணம் வச்சிருக்கீங்க?” என விசாரித்தனர்.

குமரேசன், ஒன்று போல் அனைவரிடமும், “ஆறு, ஏழு மாசத்துல வச்சிடுவோம்” என்ற பதிலை கூறிக் கொண்டிருந்தார்.

அதில் சத்யாவின் கவனம் கேள்வியாய் இளா மீது படிய, இளாவிடம் எந்த மாற்றமும் இல்லை.

அதனை யார் கவனித்தாரோ, இல்லையோ கனகாம்பாள் கவனித்தே இருந்தார்.

எல்லாம் முடிய சத்யாவிடம் வந்த கனகாம்பாள், “போய்ட்டு வரேன்ம்மா” என சொல்லிக்கொண்டு, மற்றவர்களிடம் சிறு தலையசைப்புடன் விடை பெறவே,

இளாவை அழைத்த குமரேசன்,
“அம்மாவ கூட்டிட்டு கிளம்பு இளா… இங்க எல்லாம் முடிச்சிட்டு நாங்க போய்கிறோம்” என்று கூற, இளாவிற்கும் வீட்டிற்கு சென்றால் தேவலாம் போல் தான் இருந்தது.

ஆகவே மறுப்பேதும் கூறாது சரியென கிளம்பியவன், தனது மோட்டார் சைக்கிளில் அன்னை ஏறிக்கொண்டதும் சத்யாவை பார்ப்பதை மட்டும் தவிர்த்தபடி கிளம்பி விட்டான்.

அவர்கள் வீட்டிற்கு அங்கிருந்து மொத்தமே பத்து நிமிட பயணம் தான்.

அதில் அமைதியாக வந்த மகனிடம்,
“உன்ன மீறி உனக்கு பிடிக்காம எதுவும் நடந்திடாது மகனே!
அது உனக்கும் தெரியும். தெரிஞ்சும் எதுக்கிந்த அமைதி? ” கனகாம்பாள் மெதுவே பேச்சினை தொடங்க,

“அப்பாக்கு நாம இங்க வரது அவ்வளவா பிடிக்காது. அவர் வேணாம் னு சொன்னா, நீயோ நானோ இந்த பக்கம் வர போறதில்ல.
ஆனாலும் அவர் ஏன் நம்மள தடுக்காம அமைதியா இருக்காரு”

“ஏலே மகனே… உன் அம்மாவுக்கும் கூட இதெல்லாம் அவ்வளவா பிடிக்காது. இருந்தாலும் எம் புள்ளைக்காக வரேன். அதனால உங்க அப்பா லிஸ்ட் ல தான் நீ என்னையும் சேக்கணும்” என்ற கனகை எண்ணி சிரித்துக் கொண்டவன்,

“ஒரு பேச்சுக்கு கூட அப்பார விட்டுட்டு உன்ன தனியா சொல்லிட கூடாதுல… எல்லாத்துக்கும் ஜோடியா ஆஜர் ஆகணுமில்ல ” குறும்புடன் கேட்டவன், பின் தெளிந்த குரலில்,

“எப்பவும் நமக்காக நம்ம விருப்பம் னு வாழ நீங்க ரெண்டு பேருமே என்னை பழக்கலம்மா… அதோட வெளிப்பாடு தான் என்னோட இந்த அமைதி” என இளவேனில் முடித்த போது, அவனது வண்டி அவர்களது வீட்டின் முன்பு வந்து நின்றிருந்தது.

வீட்டின் முன்பிருந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ராசமுத்து இருவரின் வருகையை கவனித்து, இருவருக்கும் பழச்சாறு தயாரிக்க சென்றார்.

அதற்குள் வீட்டினுள் வந்தவர்கள் ஒவ்வொரு இருக்கையில் அடைக்கலமாகியிருக்க, அவர்கள் முன்பு குவளையை நீட்டினார்.

“நல்லவேளப்பா வெறும் தண்ணியோட முடிச்சிடுவீங்களோ னு பயந்துட்டேன்” என்று சிரித்த இளா தாயை நோக்க, அவரோ குடித்து முடித்துதான் எதுவும் பேசுவேன் என்று பிடிவாதத்துடன் இருந்தார்.

இளாவின் தாகம் இங்கு அவனது தந்தையால் தீர, அங்கே வானதியின் தந்தையான செல்வத்தின் கடுப்போ செல்லும் வழி அறியாது மகளிடமே திரும்பியது.

காவியங்களில் வானதி சுபாவம் எப்படியோ, அதற்கு முப்பது சதவிகிதம் மட்டுமே இவளது குண இயல்புடன் ஒத்துப் போகும்.

இருந்தும் பிறக்கும் போதே குணமறியாதல்லவா? எனவே, அறியாது இப்பெயரை வைத்து விட்டனர்.

“அப்டியே கல்லு கணக்கா அழுத்தமா நிக்குற… கொஞ்சமாச்சும் அழுது, புலம்பி
பரிதாபம் வர போல ஆக்ட் வுட்ருந்தா, அந்த புள்ளையும் மனசறங்கி ஏதாவது பாத்து பண்ணிருப்பான்.

அழுத்த திமிரா இருந்தா என்னாத்த கொடுப்பான்?
இப்டியே திமிரோட திரிஞ்சதுக்கு தான் அவ போய் சேர்ந்துட்டா ” என்றது தான் தாமதம்,
செல்வத்தின் காலை ஒட்டி கட்டை ஒன்று வந்து விழுந்தது.

அந்த கட்டையை தான், வானதி, தன்னை ஊனம் போல காட்டிக்கொள்ள பயன்படுத்தியிருந்தாள்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!