Skip to content
Post Views: 11,050
புது வெள்ளை மழை
அத்தியாயம் – 1
வருடம் 1992, இடம் சென்னை.
Advertisement
“புது வெள்ளை மழை இங்குப் பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்குச் சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது.”
பாடல் வரிகளுக்கு ஏற்ப கற்பனையில் முகம் தெரியாத பெண்ணுடன் டுயட் பாடிக்கொண்டிருந்த நந்தாவின் கனவு தற்காலிகமாகத் தடைபட…. கதவு திறக்கும் சத்தம் கேட்டு யார் என்று பார்த்தான்.
“அண்ணா, லைட் கூடப் போடாம என்ன பண்ற?” என்றபடி பவதாரணி அறைக்குள் வர….
Advertisement
அவள் குரல் கேட்டு எழுந்த நந்தா, தன் தலைப்பக்கம் இருந்த ஸ்விட்ச்சை தட்ட… அறைக்குள் வெளிச்சம் பரவியது.
Advertisement
“கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா பாட்டுக் கேட்க விட மாட்டியே…” நந்தா சலிக்க…. பவதாரணியின் முகம் வாடியது.
“அம்மாதான் உன்னைச் சாப்பிட கூடிட்டு வர சொன்னாங்க.”
“கோபமா…. நல்ல பாட்டு நடுவுல தடைபட்டதுனால அப்படிப் பேசிட்டேன்.”
Advertisement
“ஆமாம் நல்ல பாட்டு. புது இசையமைப்பாளர் ரஹ்மான்னு ஒருத்தர் மியூசிக் போட்டிருக்கார்…. அவரு யூத், அதுதான் பாட்டு கூடச் செம்மையா இருக்கு… நீ படம் பார்த்துட்டியா அண்ணா?”
“இல்லை…”
“நாம ரெண்டு பேரும் நாளைக்குப் போகலாமா அண்ணா…”
“உன்னோட பார்க்கிற படமா இது… நீ உன் ஆளு கூடப் போ…” நந்தா சொல்ல…. தாரணியின் முகத்தில் வெட்கம் படர… அதை அவன் ரசித்தான்.
“ரெண்டு போரையும் சாப்பிட வர சொன்னா… இன்னும் மேல என்ன பண்றீங்க?” அவர்கள் அம்மா குழலியின் குரல் கேட்க…. இருவரும் கீழே இறங்கி சென்றனர்.
“நேரத்துக்குச் சாப்பிட கூட வராம அப்படி என்ன பண்ற நந்தா?” என மகனை பார்த்து கேட்டவர், உணவை இருவருக்கும் பரிமாற ஆரம்பித்தார்.
“இங்க இருக்கிற வரைக்குமாவது நேரத்துக்குச் சாப்பிட கூடாதா? வேலைக்குன்னு போயிட்டா உன்னால சாப்பாட்டைப் பத்தி நினைக்க முடியுமா?”
“சாப்பாடு மட்டும் இல்லை… வேற எதைப் பத்தியும் நினைக்க முடியாது. ஏன்னா இந்தத் தடவை போஸ்டிங் போட்டிருக்கிறது அப்படிபட்ட இடம்.”
“என்னடா இத்தனை நாள் வடநாட்டில இருந்த…. இப்பத்தான் நாம் ஊர் பக்கம் வந்திருக்கேன்னு சந்தோஷப்பட்டேன், அதுவும் இல்லையா…”
“ராமநாதபுரம் மாவட்டம்னா சும்மாவா… பாசக்கார பயபுள்ளைங்க… அதோட ரொம்ப ரோஷமான பயலுங்களும் கூட….” என்றான்.
“அந்தப் பக்கம் ஜாதி சண்டை எல்லாம் அடிக்கடி நடக்கும்னு சொல்வாங்களே… எப்படி அண்ணா சமாளிப்ப?”
தாரணி கவலையாகக் கேட்க… அதைக் கேட்டபடி உள்ளே நுழைந்த வருண், “உங்க அண்ணன் உன்கிட்ட இருக்கிற மாதிரியே, எல்லார்கிட்டயும் இருப்பான்னு நினைச்சியா?”
“எப்படா இவன் ஊரைவிட்டு காலி பண்ணி போவான்னு…நிறைய பேரை நொந்து போக வச்சிருக்கான். நார்த்ல இருந்த வரை…. அங்கிருந்த பெரிய ஆளுங்க கண்ணுலையே விரலை விட்டு ஆட்டினவன், இவனுக்கு மாற்றல் வந்ததும், அதை எத்தனை பேர் அங்க கொண்டாடினாங்க தெரியுமா?”
“பயபுள்ள பார்க்கத்தான் பச்சபுள்ள மாதிரி இருக்கு….. டெரர் பீஸ்.”
வருண் சொன்னதைக் கேட்டு அப்படியா என்பது போல் தாரணி நந்தாவை பார்க்க… அவன் இல்லை என்று தலையசைத்தவன், குனிந்து சாப்பிடுவது போல் வந்த சிரிப்பை அடக்கினான்.
“அச்சோ… தாரணி என்ன அப்படிப் பார்க்கிற…… மாமாவை நம்பமாட்டியா நீ….” வருண் கேட்க… தாரணி அவனை முறைத்தாள்.
“நலத்துக்கே காலம் இல்லை…. நீங்க சாப்பாடு போடுங்க அத்தை.” என்ற வருண், நகரத்தில் பிரபல வக்கீல். நந்தாவின் நண்பன்… வருங்கலத்தில் அவன் தங்கையைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறவன்.
“எப்படா கிளம்புற?”
“நாளைக்குக் கிளம்பனும்.”
“அடுத்து எப்ப எங்க கல்யாணத்துக்கு வருவியா?”
“ஆமாம், ஒரு மூன்னு நாளாவது லீவ் போட முடியுமான்னு தெரியலை… எதுக்கும் என்னை நம்பி இருக்க வேண்டாம். நீங்க எல்லாம் கல்யாண வேலையைப் பார்த்துக்கோங்க.” என்றான் நந்தா.
“நான் உங்க சித்தப்பா சித்தியை கூடிட்டுப் போய்ப் பத்திரிகை வச்சிட்டு வரேன்.” என்றார் குழலி… அவருடைய கணவர் இப்போது உயிரோடு இல்லை….
“அண்ணா கடைசி நிமிஷத்துல வரமுடியலைன்னு சொன்ன, நான் கல்யாணத்தையே நிறுத்திடுவேன்.”
தாரணி நந்தாவை மிட்ட ஆனால் மிரண்டதென்னவோ வருண்தான்.
“ஏன் மா… என்னை டென்ஷன் பண்ற? அதெல்லாம் அவன் வந்திடுவான், வந்திடுவ இல்லைடா….” என அவன் தன் நண்பனை பார்த்து கேட்க…
“வந்திடுவேன்னு தான் நினைக்கிறேன்.” என நந்தா தன் தங்கையைப் பார்த்தபடி இழுக்க… அவள் முகம் வாடியது.
அதைக் காண பொறுக்காதவன், “எப்படியும் வந்திடுவேன் டா….” என்றான் உறுதியாக.
நந்தா என்கிற நந்தகுமார் IPS ஆபீசர். ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ASP. நாம் என்ன செய்கிறோமோ அதுதான் கண்ணாடியில் தெரியும். அதுபோல நந்தா நல்லவர்களுக்கு நல்லவன், கெட்டவர்களுக்குக் கெட்டவன்.
ஆள் பார்க்க அமைதியாகத் தெரிந்தாலும், மிகவும் அழுத்தமானவன். பார்த்தா இள வயதா இருக்காரே… என்ன செய்துவிடுவார் என்று நினைப்பதற்குள் முடித்து இருப்பான்.
அவனுக்குச் சட்ட ஒழுங்கு ரொம்பவும் முக்கியம். அதைப் பாதிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும், அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கவலையே படமாட்டான். ஒரு காட்டுக் காட்டிவிடுவான்.
விரைவில் அவன் தங்கையின் திருமணம் நடக்க இருப்பதால்… அதைப் பற்றி வருணிடம் கலந்து பேசிக்கொண்டு இருந்தான்.
அதே நேரம் ராமநாதபுர மாவட்டத்தின் கீழ் வரும் ஊர் ஒன்றில் பரபரப்பாக ஆட்கள் சுற்றிக்கொண்டு இருந்தனர்.
“டேய் கிடைச்சாங்களா….”
“இன்னும் இல்லைப்பா…”
“இன்னைக்கு ராத்திரிக்குள்ள கண்டுபிடிக்கணும். ஒருநாள் அவ அவன் கூடத் தங்கிட்டாலும், அவளையும் சேர்த்து வெட்டு…. இல்லைனா அந்தப் பையனை மட்டும் வெட்டிட்டு, அவளை இங்க கொண்டு வாங்க.” என்று போன்னில் கர்ஜித்தவர், தொலைபேசியை நங்கென்று வைக்க…
அந்தப் பக்கம் கேட்டவனின் ரத்தமோ இன்னும் கொதித்தது. பொதுத் தொலைபேசியில் இருந்து வெளியே வந்தவன், எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் இருபக்கமும் பார்த்து வைக்க…
“அண்ணே அவங்க இருக்க இடம் தெரிஞ்சிடுச்சு…. வாங்க.” என ஒருவன் சத்தமாக அழைக்க…. அந்தப் பக்கம் ஓடினான்.
“ச்சு… என்ன பண்ற உனக்குப் பயமாவே இல்லையா?” பெண் குரல் தயங்கி கேட்க….
“பயமாத்தான் இருக்கு… அதுக்காக நமக்குதான் கல்யாணம் ஆகிடுச்சு இல்லை….” என்றது ஆண் குரல்.
“எனக்கு எங்க வீட்டை நினைச்சா பயமா இருக்கு. நம்மை அவங்க வாழ விடமாட்டாங்க.”
“பயப்படாத… இந்த இடம் அவங்களுக்குத் தெரியாது. நாளைக்குக் காலையில வெள்ளனவே நாம சென்னைக்குப் போயிடலாம். அப்புறம் நம்மை யாரும் ஒன்னும் பண்ண முடியாது.”
அவன் சொல்லிக்கொண்டிருந்த போதே… கதவை யாரோ முரட்டுத் தனமாக இடிக்க… இருவரும் பயந்து போய் அறையின் மூலைக்குச் சென்றனர்.
“டேய் பாண்டி, ஓடிப்போயிடுங்க டா…. அவங்க ஆளுங்க வந்திட்டாங்க.” நண்பர்கள் குரல் வெளியே கேட்க… எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல், உள்ளே இருந்த இளஞ்சிட்டுக்கள் இரண்டும் தவிக்க….
அப்போது கதவை உடைத்து உள்ளே வந்தவனோ, ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை…. அந்த ஆணின் கழுத்தில் ஒரே போடாகப் போட…. ரத்தம் எல்லாப் பக்கமும் சிதறியது.
தன் மேல் சிதறிய ரத்தத்தைப் பார்த்துதான் என்ன நடந்தது என்று அந்தப் பெண்ணுக்கு தெரியும். தாலி கட்டிய அன்றே தன் கணவனை இழந்தவள், அந்த அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுந்தாள்.
வெட்டியவனோ அவளை அலட்சியமாகத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வெளியில் சென்றான்.
இரண்டு நாட்கள் சென்று, நந்தா ராமநாதபுரம் ASP யாகப் பொறுப்பு ஏற்க… அவனை வாழ்த்திய கமிஷனர், “நந்தா, உங்களைப் பற்றி நிறையக் கேள்விபட்டிருக்கேன். இங்கேயும் நல்ல மாற்றம் வரும்னு எதிர்பார்க்கிறேன்.” என்றார்.
“கண்டிப்பா சார், என்னால முடிஞ்சது செய்வேன். எனக்கு எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாம நீங்க பார்த்துக்கணும்.”
“அது ரொம்பக் கஷ்ட்டமாச்சே….” கமிஷனர் சிரிக்க…
“அவன் நான் சொன்னாலும் கேட்க மாட்டான்னு சொல்லிடுங்க போதும்.” என்றான் நந்தாவும் சிரித்தபடி…
“அப்ப எனக்கு நிறையச் சோதனை வைப்ப….” என்றபடி கமிஷனர் வெளியே செல்ல… நந்தா அந்த வாரத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அங்கிருந்த உதவி ஆய்வாளரை அழைத்தவன், “ரெண்டு நாள் முன்னாடி யாரையோ வெட்டி கொன்னு இருக்காங்களே யார் அது?” என விசாரித்தான்.
“சார், அது காதல் கதை சார். பொண்ணு மேல்சாதி பொண்ணு, பையன் கீழ்சாதி… அப்புறம் விடுவாங்களா சார்… அதுதான் போட்டுடாங்க.”
“இதெல்லாம் இங்க ரொம்பச் சாதாரணம் சார்.”
“யாரு வெட்டினதுன்னு எதுவும் தெரிஞ்சிதா?”
“அதெல்லாம் அவங்க ஆளே ஒருத்தன் வந்து, முன்விரோதம் காரணமா நான்தான் கொன்னேன்னு சரன் அடைஞ்சிட்டான். இதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது சார்….”
கேட்ட நந்தாவுக்கு இன்னும் எவ்வளவு நாள்தான் சாதி வெறி பிடிச்சு அலையப் போகிறார்களோ என ஆத்திரமாக வந்தது.
“சாதிகள் இல்லையடி பாப்பா…” என எப்போதோ பாடி வைத்தான் பாரதி. ஆனால் நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், இன்னமும் சாதியை ஒழிக்க முடியவில்லை…. அதை அரசியல்வாதிகள் ஒழிக்கவும் விடமாட்டார்கள். அப்போது தானே அதைச் சொல்லி ஒட்டு வாங்கலாம்.
என்று மாறுமோ நம் நாடு…..
error: Content is protected !!